பறக்கும் முதலை!





ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு மூன்று மகன்களும், மிக அழகான ஒரு மகளும் இருந்தனர். மூன்று சகோதரர்களும் வேட்டைக்குச் சென்றிருந்த போது, ஒரு பறக்கும் முதலை அந்த அழகான பெண்ணைத் தூக்கிச் சென்றுவிட்டது.
தங்கையைத் தேடி மூன்று சகோதரர்களும் புறப்பட்டனர். பறக்கும் முதலை, தன் உடலை வளையம் போல் வளைத்து மத்தியில் தங்கையை வைத்திருப்பதை அவர்கள் பார்த்தனர்.
மூத்த சகோதரன் முதலை மேல் ஒரு கல்லை வீசினான். முதலை தன் தலையைத் திரும்பிப் பார்த்த சமயத்தில் அவன் அதன் மேல் குதித்து தங்கையைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.
முதலை பறந்து வந்து அவர்களைப் பிடித்தது. மீண்டும் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு பறந்தது. இரண்டாவது சகோதரன் பறக்கும் முதலை மீது அம்புகளை எய்தான். காயமடைந்த முதலை அந்தப் பெண்ணை விட்டுவிட்டது. கீழே உள்ள பாறைகளின் மேல் விழாதபடிக்கு மூன்றாவது சகோதரன் தங்கையைத் தாங்கிப் பிடித்து அவள் உயிரைக காப்பாற்றினான். விரைவில் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுடைய அம்மா சிறந்த ஆடை ஒன்றை வைத்திருந்தாள். தன் தங்கையைக் காப்பாற்றியதில் முக்கிய பணியாற்றிய ஒரு சகோதரனுக்கு அந்த ஆடையை அளிக்க விரும்புவதாகக் கூறிய தாய், முக்கிய செயலை செய்தது யார்? என்று கூறும்படி கூறினாள்.
“”முதலையைக் கல்லால் அடித்து நான் பலவீனப்படுத்தினேன்,” என்றான் முதல் மகன்.
“”நான் முதலையை அம்பெய்து கொன்றேன்,” என்றான் இரண்டாமவன்.
“”நான் தங்கையைத் தாங்கிப் பிடித்து உயிரைக் காத்தேன்,” என்றான் இளையவன்.
அவர்கள் கூறியதைக் கேட்ட அம்மா, “”மூவரும் ஒற்றுமையாக செயல்பட்டதால்தான் தங்கையைக் காப்பாற்ற முடிந்தது. இன்னும் இரண்டு சிறந்த ஆடைகளை உருவாக்கி உங்கள் மூன்று பேருக்கும் தருவேன்,” என்றாள்.
மூன்று சகோதரர்களும் மனம் மகிழ்ந்தனர்.
– ஜூன் 04,2010