பந்தபாசம்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 170
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“செல்லம் திறப்பைத் தாமோனன.”
தன்னுடைய உடன் பிறந்த சகோதரி யிடம் கேட்கின்றான் முத்தையன்.
“என்ன திறப்பு?.” அலட்சிய பாவமாய்த்தன் தமையனைக் கேட்கின்றாள் செல்லம்மா.
“எங்கடை வீட்டுத் திறப்புத்தான்.” முத்தையன்.
“ஆற்ரை வீட்டுத்திறப்பு?.”
வெட்டிக் கேட்கின்றாள்
முத்தையனின் உடன் பிறப்பு.
“ஏன் எங்கடை வீடுதானே?.”
உரிமை பாவமாய் அண்ணன் முத்தையா.
“என்ன உங்கடை வீடோ?.”
வியப்பாய் செல்லம்மா.
“மோனை ஆற்ரை வீடு? எங்கடை வீடு தானே?”.
அண்ணன் முத்தையன்.
“என்ன உங்கடை வீடா? இந்த வீட்டிலை எப்பிடி உரிமை வந்தது? ஆர் உனக்கு அந்த உரிமையைத் தந்தது?”.
“ஐயோ தங்கச்சி நீ என்ரை உடன் பிறப்புத்தானே. நான் வேறை நீ வேறையா? நாங்கள் ஒருதாய் பிள்ளையள்தானே?.” முத்தையனுக்கு தன் தங்கைமேல் அளவு கடந்த பாசம். அவளும் அப்படித்தான்.
ஆடு தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கிறது. அவனும் தன் உடன்பிறந்த சகோதரிக்கு உணவு கொடுத்து நேச பாசத்துடன் வளர்க்கின்றான். அவள் தாய்தந்தையை இழந்த பாலகி. அவளை தாலாட்டி சீராட்டி வளர்த்தவன். அவள் பிறந்த ஒருசில நாட்களில் தாய் இறந்துவிட்டாள். தந்தையும் ஆறுமாதங்களிற்குள் பரலோகம் சென்றுவிட்டார். அவனுடைய மூன்று அண்ணன்மார் உழைப்பு உழைப்பு என்று ஆலாய்ப்ப பறக்கின்றனர். அவனுடைய அக்காவும் ஏற்கனவே கல்யாணம் செய்து அயலுார் சென்றுவிட்டாள். அவனுடைய பொறுப்பில்தான் குழந்தை செல்லம்மா. ஆயலவாகளின் உதவியுடன் அவன் அவளை வளர்க்கின்றான். அயல்வீட்டு பொன்னம்மாப் பாட்டி அவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும். இன்று செல்லம்மா பெரிய மனுஷி.
“அது சரி இந்த வீடு ஆற்ரை பேரிலை கிடக்கு?”.
“நீ தான் கடைக்குட்டி. அதுதான் அப்பர் இந்த வீட்டை உன்ரை பேரிலை எழுதி வைச்சவர்”
“அப்போ எப்பிடி நீ இந்த வீட்டிலை உரிமை கொண்டாட ஏலும்?.” செல்லம்மா அதட்டிக் கேட்கின்றாள்.
“நான் உரிமை கோரேல்லை. நீ என்ர சகோதரி எண்டதாலை சும்மா பேச்சுக்குச் சொன்னனான். நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாய்க் கேள்”.
“என்ன சொல்லப் போறாய்?”.
“எங்கடை அப்பர் சாகேக்கை உனக்கு ஏழுமாதங்கள். மூத்தண்ணர் அளவெட்டியிலை கலியாணம் கட்டிப் போயிட்டார். போனவர் போனவர்தான். ஒரேயடியாய்ப் போயிட்டார். ஒருநாளாவது அவர் எங்களை எட்டிக் கூடப் பாக்கேல்லை”.
“அதுக்கென்ன இப்ப?.”
செல்லம்மா.
“பொறுமோனே நான் சொல்லிறதைக் கேள்”.
“சரி, சொல்லித்துலை”.
எரிச்சலுடன் கூறுகின்றாள் அவள்.
“அக்கா பக்கத்து ஊரிலைதான் கலியாணம்கட்டிப் போனா. அவ போன நாளையிலயிருந்து ஒரு நாளாவது எங்களை எட்டிக்கூடப் பார்க்கேல்லை. இரண்டாவது அண்ணன் அயல்வீட்டுப் பெட்டையைக் கூட்டிக்கொண்டு வன்னிக்கு ஓடிட்டான். இண்டைவரைக்கும் அவன் இந்தப் பக்கம் தலை காட்டேல்லை. சின்னண்ணை கொழும்பிலை கடை வைச்சிருந்தான். எண்பத்திமூன்று கலவரத்திலை அவனுடைய கடையை எரிச்சுப் போட்டாங்கள். அவன் உயிர் பிழைச்சதே பெரிய காரியம்’.
“இதையெல்லாத்தையும் இப்ப ஏன் சொல்லித்துலையிறாய்?” மன எரிச்சலுடன் அவள் பொறுமை இழந்தவளாய் பொரிந்து தள்ளுகிறாள்.
“அப்ப நீ சின்னவள். இதெல்லாம் தெரிந்திருக்க முடியாது. இப்ப சொல்லிறன் கேள். நீ எப்பிடி கனடா போனனி?. இந்த வீட்டையும் தோட்டத்தையும் ஈடு வைச்சு அந்தக் காசிலைதான் உன்னைக் கனடாவுக்கு அனுப்பினனான். சின்னண்னை உழைச்சுக் காசு அனுப்பித்தான் இந்த வீட்டையும் தோட்டத்தையும் மீட்டனாங்கள். அவன் இராப்பகலாய் உழைச்சு நோயாளியாகி கடைசியிலை செத்துப்போனான். கடைசியில என்ரை தலையிலைதான் உன்ரை பொறுப்பு.
என்னைப்போலத்தான் எங்கட அப்பரும். நீ பிறந்த வீட்டுக்கை எங்கட அம்மா செத்ததாலை உன்னை வளர்க்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டார். உன்னைப் பராமரிக்கிறதோடை சமையல் வேலை, தோட்ட வேலை எல்லாம் அவர் தலை மேலைதான். கெட்டித்தனமாய் அவர் எல்லாவற்றையும் சமாளிச்சார்”.
“உதெல்லாம் பழைய கதை. உதைச் சொல்லிறதிலை எதுவித பிரயோசனமுமில்லை”
“செல்லம் அவசரப் படாதை. நான் சொல்லிறதைப் பொறுமையாய்க் கேள். உன்ரை அக்காளும் அண்ணன்மாரும் எங்கட பொருளிலை கண்ணாயிருந்தினை. அது தெரிஞ்சுதான் அப்பா இந்த வீட்டை உன்ர பேரிலை எழுதி வைச்சார்.
“செல்லம் நீ அஞ்சாம் வகுப்பு படிக்க உன்னை தெருப் பள்ளிக்கூடத்திலை சேத்தன். பள்ளிக்குடம் எங்கட வீட்டிலையிருந்து மூண்டு கட்டை. நான் காலையும் பின்னேரமும் உன்னை என்ர சயிக்கிளிலைதான் கொண்டுபோய் கொண்டந்தனான். உன்ரை அக்காவின்ர மனிசன் ஒருநாள் வந்தார்.”
“உவள் என்ன படிச்சுக் கிழிக்கப்போறாளே. நீயும் அவளும் ஆன சாப்பாடில்லாமல் கிடந்து காயிறியள். உவளை எங்களோடைவிடு பிள்ளை பிராக்காட்ட, நாங்கள் உவளுக்கு நல்ல சாப்பாடு துணிமணி எல்லாம் குடுக்கிறம்” எண்டு சொன்னார்.
“எங்கட பிள்ளையை எனக்கு வளர்க்கத்தெரியும். நீ எங்கடை விசயத்தில தலையிடாதை. மரியாதையாய் போயிடு” நான் அவரை ஏசித்துரத்திப் போட்டன்.
“நீ ஏ.எல் பாஸ் பண்ணி வீட்டோட இருக்கேக்க எங்கடை பகுதியிலுள்ள சின்னப்பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக் குடுத்தாய். இதாலை எங்களுக்கு கொஞ்சம் வருமானமும் வந்தது. இதை அறிஞ்ச அக்காவின்ரை புருஷன் எங்கடை வளவுக்கை கள்ளுச் சீவிற பொடியனோடை உனக்கு தொடுப்பு எண்டு அவர் கதை வைச்சுக் கட்டினார். அது எடுபடேல்லை.”
எங்கடை தோட்டப்பகுதியிலுள்ள வீடுகளெல்லாம் தூரம்தூரமாய் எட்டத்திலை கிடந்துதுகள். இரவிலை இந்தியன் ஆமிக்காரங்களாலை பெரிய ஆபத்து இருந்தது. சில பொம்பிளையளை மானபங்கப் படுத்திப் போட்டாங்கள். உன்ரை அக்காவின்ரை வீடு சனநெருக்கமாய் உள்ள வீடுகள் கிட்டக்கிட்ட இருந்ததுகள். உன்னை இரவிலை தங்கவிடும்படி உன்ரை அத்தானைக் கேட்டன். அவர் மறுத்துப்போட்டார்.
உன்னைப் படிப்பிச்ச பொன்னம்மா ரீச்சரின்ரை வீடு எங்கடை ஊரிலை நடுப்பகுதியில் நெருக்கமாயுள்ள வீடுகளிலை பாதுகாப்பாயிருந்தது.
ரீச்சருக்கு மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் இரண்டு ஆம்பிளைப் பிள்ளையளும். அவவின்ரை புருஷன் ஒரு வருஷத்துக்கு முந்தி ஷெல் விழுந்து செத்துப்போனார். இரவிலை அவவின்ர வீட்டிலை தங்குவதற்கு இடம் குடுக்கேலுமா எண்டு நான் அவவைக் கேட்டன். துாராளமாய்த் தங்கலாமெண்டு மனப்பூர்வமாய் சொன்னா.
சண்டையாலை இஞ்சை நிலமை மோசமடைந்தது. உன்னைக் கனடாவுக்கு எடுக்கும்படி மூண்டாவது அண்ணனுக்கு நான் நெருக்குதல் குடுத்தன். அவன் சரியாய் கஷ்டப்பட்டு உன்னை எடுத்தான். எனக்கு மனநிம்மதி. எனக்கு கந்தரோடையில ஒரு நெருங்கிய சினேகிதன் இருக்கிறான். அவனுடைய மகன் கனடாவிலை இருக்கிறான். ஏன்ரை சினேகிதனோடை கதைத்து உன்னை அவன்ர மகனுக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்தன். உனக்கு இப்ப மூண்டு பிள்ளையள். எட்டு வரியங்களுக்குப் பிறகு நீ இங்கை வந்தாய். இரண்டு கிழைமைக்கு முந்தி வந்து என்ரை வீட்டுக்கு வராமல் உன்ர அக்காவின்ரை வீட்டிலை தங்கியிருக்கின்றாய். ஒரு நாளாவது நீ எங்கட வீட்டை எட்டிக் கூடப் பாக்கேல்லை.
நீ இங்கை வந்து அடுத்த நாளே வீட்டுக்கு வெள்ளையடிக்க வேணுமெண்டு எங்களை வீட்டிலையிருந்து உன்ரை அக்காவின்ரை புரிசன் மூலம் வெளியேத்திப்போட்டாய்.
என்ரை வீட்டுச் சாமாங்களின்ரை அரைவாசி என்ரை மூத்த மகளின்ரை வீட்டிலை கிடக்கு. என்ர மனுசியும் நாலு பிள்ளையளும் மூத்த மகளோடை இருக்கினை. அங்கை சரியான இடநெருக்கடி. மிச்ச வீட்டுச் சாமான்கள் இஞ்சை தலைவாசலுக்கை போட்டிருக்கிறன். நானும் இந்தக் கொட்டிலுக்கை ஒரு பக்கத்திலை கிடக்கிறன். இஞ்சை சரியான காத்தும் குளிரும். ஏத்தனை நாளைக்கெண்டு நாங்கள் அவலப்படுகிறது?.
“இப்ப வீட்டுக்கு வெள்ளை அடிச்சு முடிஞ்சுது. வீட்டுத்திறப்பைத் தாவன்”.
“நான் வீட்டுத் திறப்பைத் தரமாட்டன்”.
“ஏன்?”.
திடுக்கிட்டு அவன் தங்கையைக் கேட்கின்றான்.
“நான் என்ரை வீட்டை விக்கப்போறன்.”
செல்லம்மா கூறுகின்றாள்.
“அப்ப நானும் என்ர பெணசாதி பிள்ளையளும் நடுத்தெருவிலை நிற்கிறதா?”.
அதிர்ச்சியுற்றவனாய் சகோதரியைக் கேட்கின்றான்.
“அதைப்பற்றி நான் கவலைப்படப்போறதில்லை என்ர வீட்டை நான் விற்கிறது விற்கிறதுதான்”.
எதுவித சலனுமுமின்றி அவள் உறுதியாகக் கூறுகின்றாள்.
இவ்வளவு நேரமும் எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டு நின்ற கள்ளுச் சீவிற தில்லை குறுக்கிடுகின்றான்.
“தம்பி முத்தையா. நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை. நான் இருக்கிறன்”. தில்லையை வியப்புடன் பாரக்கின்றான் முத்தையன்.
“என்னானாலும் சகோதர பாசமே இல்லாத இந்த நன்றிகெட்ட சென்மத் திட்டை நீ யாசகம் செய்யாதை. உனக்கு நான் வீடு தாறன்.” ஆவேசமாய்க் கூறுகின்றான் தில்லை.
நீங்கள் என்ன நினைச்சாலும் நினையுங்கோ. உங்கடை அப்பர் எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். ஏழேழு சென்மங்கள் எடுத்தாலும் அதை என்னால் மறக்கேலாது.”
முத்தையன் தில்லையை திகைத்துப் போய்ப் பார்க்கின்றான்.
“தம்பி எங்களின்ர குடியிருப்புக்குப் பக்கத்திலை தம்பிமுத்தற்ரை வீடு கிடக்குது அது உனக்குத் தெரியும்தானே?”
“ஓமோம் தெரியும். அதுக்கிப்பென்ன?”
“செல்லடியிலை அவற்றை மனுசி செத்துப்போச்சுது. விரக்தியிலை அவர் தன்னுடயை இரண்டு பிள்ளையயோடை கனடாவுக்கப் போட்டார். அவற்ரை அந்த வீடு இப்ப என்ர பொறுப்பிலை கிடக்கு.
இப்பவே நீ என்னோடை வா.
அந்த வீட்டுத் திறப்பை நான் உனக்குத் தாறன்”.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அகம் + தை = அகந்தை
மா.வீ.தியாகராசன்
September 9, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
September 9, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 9, 2026