பதினெட்டாம் பெருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 3,614 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இக்கரையில் படிக்கட்டுகளே தெரியவில்லை. அக் கரையில் நாணல்களின் வளைந்த நுனிகளெல்லாம் ஆற்று நீரில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருந்தன. கரை புரண்டு போகும் பெருக்கில் நொங்கும் நுரையும், சீமைப் பிலா இலைகளும், காய்ந்த மலர்மாலைகளும் மிதந்து சென்றன. காவிரியின் பதினெட்டாம்பெருக்கு. 

தமிழ் மக்கள் கவியுள்ளம் படைத்தவர்கள் என்ப தில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் காவிரியை சூல் கொண்ட பெண்ணென்று யாருக்குச் சொல்லத் தெரி யும் ? காவிரிப் பெருக்கு மோட்டிலும் முடைசலிலும், படுகையிலும் பண்ணையிலும் பாய்ந்து மண்ணைக் கனக் மாக்கி மகிழ்ச்சி விளைவிக்கவில்லையா? ஆற்றுப்பெருக் கின் அசைவு சூல்கொண்ட பெண்ணைப்போல் இல்லையா ? 

தெருக் கோடிவீட்டு மாடியிலிருந்து வடக்கே பார்த் தால் இந்த ஆனந்தமயமான காட்சி தென்படும். கிழக்கே பார்த்தால் ஆற்றங்கரைக்கு வந்துசேரும் ரஸ்தா, பாம்பின் நாக்கைப்போல நீண்டு தென்புறத் தில் மறைவது தெரியும். ஆற்றுப்பெருக்கைப்போலவே இத்தெரு எப்பொழுதும் நிறைந்திருக்கும். விசேஷ நாளென்றால் சாயும் கூட்டத்தைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. 

அன்று பதினெட்டாம்பெருக்கு. தெருவில் ஒரே கூட்டம். காதோலை கருகமணி விற்பவர்களும், போவோர் வருவோர் முகத்தில் பூ வேண்டுமா என்று இடிக்கும் பெண்களும், கரிகாய்க் கடைக்குப் போவோ ரும் வருவோரும் தெருவில் நிறைந்திருந்தனர். 

தனிமை என்பதை எல்லோரும் பிரமாதப்படுத்து கிறார்கள். ஆனால் தனிமையை ரசிக்க எல்லோராலும் முடியாது. தனிமையில் வசிக்க ஒரு சிலரால்கூட முடி யாது. சொல்லப்போனால், சாதாரண மனிதனுக்கு தனிமை அபாயகரமானது – உடல், உள்ளம் எல்லாவற் றிற்கும். கடிவாளமும் வண்டியோட்டியும் இல்லாத குதிரை ‘டாக்கார்டை’ இழுத்துப்போவதென்றால் எப் படி இருக்கும் ? நாலுபேர் நடுவிலிருந்தால்தான் சாதா ரண மனிதன் நேரும் கூருமாய் இருப்பான். தனிமை யில் மனது சலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா ? ஒரு நொடி பச்சைக்குதிரை தாண்டி அண்ட சராசரங்களுக்கு அப்பால் போய் நிற்கும். மறு நொடியில், பாய்ச்சிய நங்கூரம்போல் மனக்கடலின் அடிமட்டத்தில் போய் நிலைகொள்ளும். ஒருதரம் தன்னலமற்ற தூயவெளியில் நடைபோட்டுப் பழகும். மறுதரம், விலங்கினப் போக் கிலே, வாலை கொண்டைமீது போட்டு நாலுகால் பாய்ச் சலில் போகும் காளைபோல் கட்டற்று ஓடும். பிராண சக்தி நிலைகொள்ளாது பாதரசம்போல் சிதறித் தொல்லை கொடுக்கும். தனிமையைக் கையாளத் தெரிந்தவன் யோகி, ஞானி. 

அவன் யோகியுமல்ல ; ஞானியுமல்ல. ரொம்ப சாதாரண மனிதன். வேதாந்திகள் சொல்வதுபோல் அஞ்ஞான ஜந்து. ஆண்களுக்குள்ள அவ்வளவு குற்றம் குறைகளும் நிறைந்தவன். 

பதினெட்டாம்பெருக்கன்று அவனுக்கு விடுமுறை. வீட்டில் யாருமே இல்லை. அவன் மனைவி தாயார் வீட் டுக்குப்போய் இரண்டு மூன்று மாதமாகியிருந்தது. காலையில், கிளப்பில் காபி சாப்பிட்டுவிட்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். நேரம் வெண்ணாந் தையைப்போல் நகர்ந்தது. கடகடவென்று ஓரிரு பையன்கள் சப்பரத்தை இழுத்துச் செல்லும் ஓசை அவனுக்கு வேதனை தந்தது. அங்கிருந்து கிளம்பி வாசல் கதவைத் தாளிட்டுக்கொண்டு மாடிக்குப்போய் உலாவினான். 

ஒருபுறம் காவிரிப்பெருக்கு. பெருக்கோடு அவன் மனமும் சென்றது. 

கடைசியில் கடலில் போய்க் கலந்தாகவேண்டும். ஏனோ ? ஒன்று மற்றொன்றில் கலப்பதுதான் விதியா ? அல்லது அதுதான் இன்பத்தின் ரகசியமா? இருக்கலாம்… காவிரி கடலை மணக்கப்போகிறாள். அதனால் தான் அவ்வளவு ஒய்யாரமாய் நுரை மலர்களையும், கரையோர நாணல்களும் மரங்களும் தரும் வண்ண மலர்களையும் தாங்கிச் செல்கிறாள் . ஆனால் கடலில் கலக் கும் நாள் என்றோ? என்று நினைத்தான். 

மற்றொருபுறம் ஜனப்பெருக்கு. ஆறு கடலோடு கலக்க தன்னையுமறியாமல் விரைந்தோடுகிறது. ஜனப் பெருக்கு கண்கண்ட தேவியான காவிரியை வணங்கி வந் தனம் செலுத்த அறிந்தே ஓடுகிறது. ஆனால் அவனிடம் மட்டும் ஜனப்பெருக்கைப்பற்றி வேறு எதேதோ சிந்தனை கள் எழுந்துகொண்டிருந்தன. 

‘வேண்டுமானால் கூட்டத்தில் கலந்துகொண்டு நசுக் கப்படலாமேயொழிய கூட்டத்தை ரசிக்கமுடியுமா? ஒன்றையுமே கண்குளிரப் பார்க்கமுடிவதில்லை. சமுத் திரம் போன்ற கூட்டத்தில் தனி முகங்களே கவனத்தை வசீகரிப்பதில்லை. வெகு அழகிகள்கூட கூட்டத்தில் தனிச் சிறப்பை இழந்து சாம்பலில் கிடக்கும் நெருப்புப் போல் மங்கிவிடுகிறார்கள் ஆமாம், தனிமை செத்து அகண்டம் தோன்றுமிடமல்லவா ஒரு கூட்டம் ? மனைவி இருந்தால் இந்த மந்தையில் அவளும் ஒன்றாயிருப்பாள்.’ 

இப்படி காவிரிப் பெருக்கும் ஜனப்பெருக்குமாகச் சேர்ந்து அவனைத் தாக்கவே ஏக்கமும் தனிமையும் உள் ளத்தில் ஆடின. சோர்வு மிகுந்து, செயலற்று, சவுக் கத்தை விரித்துப் படுத்துக்கொண்டான். நீலநிற ஆகாயத்தில், வழி தவறிய கொக்கைப்போல் தனிமை யாய் ஒரு மேகம் சென்றுகொண்டிருந்தது. ‘அட, உனக்கும் இந்தக் கதிதானா?’ ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். கண்ணுக்கெதிரே சுவர். சுவரில் பல இடங்களில் சுண்ணாம்பு சரிவர அடிக்கப்படாத காரணத் தால் விசித்திரமான மிருகங்கள்போலும், மரங்கள் போலும், அலைபோலும் தென்பட்டது. 

சிறிது நேரம் இப்படியே அதில் நெஞ்சு ஈடுபடக் கழிந்தது. ஒரு அணில் திடுதிடுவென்று எங்கிருந்தோ ஓடிவந்து சுவரோரமாய்ப் பதுங்கி நின்றது. அதன் கண்களில் திருட்டுத்தனமும் இன்பவெறியும் கலந்திருந்தன. அதே சமயத்தில் ஓட்டின் மேலிருந்து ஒரு அணில் கத்திக்கொண்டிருந்தது ; அதனுடைய குரலில் எதையோ பறிகொடுத்த உணர்ச்சி தளும்பிற்று. எழுந் திருந்து கூரையைப் பார்த்தான். ஒரு அணில் வாலை உயர்த்தி திசைக்கொருமுறை திரும்பித் திரும்பி உட் கார்ந்து கத்திக்கொண்டிருந்தது. திடீரென்று கத்து வதை நிறுத்திவிட்டு மின்னல்போல் பாய்ந்து சுவரண்டை வந்தது. பதுங்கியிருந்த அணிலைக் கண்ட தும் விரட்டிற்று. பிறகு அது ஓட இது ஓட முடிவில் ஒன்றை மற்றொன்று முன்னங்கைகளால் பற்றிக்கொண் டது. காதலின் லீலை ! திருட்டுக் கண்கள் இன்பத்தில் மூடின-ஒரு இமைப்பொழுது! அதற்குள் சுவரின் அடிப்புறத்து சாரத்துளை வழியாக வேறு அணில் ஒன்று மெள்ள வந்து எட்டிப் பார்த்தது. காதல் நாடகம் கண் ணில் பட்டதுதான் தாமதம். ஒரே மின்வெட்டு! ஆண் அணில்மீது இது விழுந்து ஒரு நொடி இரண்டுமாய்க் கட் டிப் புரண்டன. பெண் அணில் ஒதுப்புறமாய் நின்று வெற்றி யாருக்கு என்று கேட்பதுபோல் முன் காலைத் தூக்கி நின்றது. அடுத்த நொடிக்குள் புதிதாய் வந்த அணில் ஓடிவிட்டது. ஆனால் அங்கிருந்த ஆண் அணி லின் உடலினின்று ஐந்து ஆறு சொட்டு ரத்தம்மட்டும் தரையில் விழுந்தது. இருந்தாலும் ஆண் அணில் இதை யெல்லாம் பொருட்படுத்தவில்லை. பெண் அணிலிடம் வெகு சொகுசாய் நகர்ந்துசென்றது. அவனுடைய விருத்திகள் எங்கோ சென்று திளைக்கத் தொடங்கின. 

‘அம்மா!.. அம்மா !’ என்று தெருக் கதவைத் தட் டும் சத்தம் வந்து மோதிற்று. 

மாடி கைப்பிடிச்சுவரண்டை வந்து நின்று ‘யார் அங்கே?’ என்றான். 

நான்தான். யௌவனத்தின் தேன் ததும்பும் குரல். 

‘நான்தானென்றால்?’ 

வாசலை விட்டிறங்கி மாடியைப் பார்த்துக்கொண்டு ஒருத்தி நின்றாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கீழே இறங்கிவந்து கதவைத் திறந்தான். 

ஓர் இளம் பெண். மாநிறம். அராபிக் குதிரை போன்ற மேனியும் மினுக்கும், வளர்ச்சியும். பார்வைக்கு ராணிபோன்ற அழகும், கம்பீரமும் பெற்றிருந்தும், அவளுடைய ஆடை ஏழ்மையைப் பறையடித்தது. 

அவளை ஊன்றிப் பார்த்தான். எப்பொழுதோ பார்த்த முகம் ; ஆனால் எங்கே என்றுமட்டும் விளங்க வில்லை. 

‘நீ யார் ?’ 

‘தெரியவில்லையா ?…போன ‘வருஷம் மார்கழி மாதம் இங்கே பறங்கிப்பூ போடவில்லை ? அம்மா எங்கே?’ 

அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. அப்பொழுது சிறியவளாய் இருந்தாள். இப்பொழுது நல்ல யௌவ னம் ; முற்றிலும் மாறிப்போய்விட்டாள். பின்னொரு தரம் அவளைப் பார்த்தான். ஆம்! அவளே யௌவ னத்தின் லாகிரிப் பெருக்கு அவன் உள்ளத்தின் வேரை அறுத்துச் சென்றது. 

‘அம்மா இல்லையா?’ 

என்ன குழப்பமிருந்தாலும் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டாமா? 

‘இல்லை, ஊருக்குப் போயிருக்கிறாள்.’ 

‘ஏன்?’ 

‘முழுகவில்லை…ஆமாம், நீ எங்கே வந்தாய்?’ 

‘சும்மாத்தான்.’ 

“சும்மா இருக்குமா ?’ 

‘இல்லை, பதினெட்டாம் பெருக்கு, அம்மாவிடம் அரிசி வாங்கலாம் என்று வந்தேன்…ஆனால் அம்மா இல்லையா?’ 

‘இல்லாதபோனால் என்ன மோசம்?’ 

அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் நெகிழ்ச்சி யடைந்துபோனாள். தலையெடுத்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவனும் பார்த்தான். ஒரு கண்ணிமைப் பொழுது திகைப்பற்ற மெளனம். பின்னர் அவன் வீட்டிற்குள் சென்று ஒரு படி அரிசியும் நான்கணா காசும் கொண்டுவந்து கொடுத்தான். அதை முந்தாணியில் வாங்கிக்கொண்டு ஒரு வினாடி பேச்சில்லாமல் தரையை நோக்கி நின்றாள். அவன் கூடத்துச் சுவரை பொருளில்லாமல் வெறித்துப் பார்த்தான். ஒரு பெரிய எட்டுக்கால் பூச்சி அசையாமல் நின்றுகொண்டிருந்தது. கொஞ்ச தூரத்திற்கப்பால் இதையே பார்த்துக்கொண்டு வேறொரு சின்ன எட்டுக்கால் பூச்சி நின்றுகொண்டிருந்தது. 

‘நான் வரட்டுமா?’ என்றாள். 

பேச்சு அவன் காதில் சரியாய்த்தான் விழ வில்லையோ, அல்லது பதில் அவனையுமறியாமல் வந்து விட்டதோ என்னவோ! ‘எப்பொழுது?’ என்றுவிட்டான். 

‘ஐந்து நாழிகைக்கு’ என்று சொல்லி வீட்டைவிட்டு வெளியே வந்து கூட்டத்தோடு கூட்டமாகிவிட்டாள். 

அவள் போன அடியோடு இவனுக்கொரு பயங்கரமான வியப்பு ஏற்பட்டது. 

இச்சையின் காட்டில் அலையும் வேங்கையைக் கண் டான். சேற்றில் புதைந்து இன்புறும் மீனைக் கண்டான். ‘தூ’ என்று இச்சம்பவத்தையே ஒதுக்கி நேராகிவிடுவே னென்று திடசங்கற்பம் செய்துகொண்டு திண்ணையில் உட்கார்ந்தான். 

பெண்கள் குளித்துவிட்டு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய ஈரத்துணிகள் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நடக்கும்பொழுது ஒருவித ஓசையை உண்டாக்கிற்று. மருதாணியிட்ட அவர்களு டைய கைகளும் கால்களும் பளிச்சென்று தென்பட்டன. பலர் முகத்தில் மஞ்சளும் கழுத்தில் சந்தனமும் பூசியிருந்தது. மைனாக் குருவிகள்போல் கலகலவென்று பயமற்ற குரலில் பேசிச் சிரித்துச்சென்றனர். 

இக்காட்சிகளையெல்லாம் அவன் அறிவு வெகு கவ னத்துடன் படம் பிடித்துக்கொண்டிருந்தது-அவளைப் பற்றிய எண்ணமே வரப்படாதென்ற கவலையில். ஆனால் அக்காட்சிகள் யாதொரு இன்பத்தையும் தரவில்லை ; பெரிய தோப்பினிடை தென்றல் போய் ஒடுங்குவதைப் போல் கிளர்ச்சியற்று மாய்ந்தன. புஷ்பத்தோட்டத்தை விட்டு பூக்கடைக்குப் போகும் ரோஜாவை மொய்த்துச் செல்லும் தேனீயைப்போல ஒருமுகப்பட்ட அவன் நெஞ்சு அவளையே பற்றி நின்றது. அவன் அறிவு எவ் வளவு ஏற்க மறுத்தபோதிலும்கூட அவளுடைய ஞாப கத்தில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்தது. 

நடுப்பகல்வரையில் இந்த இன்பக் கிளர்ச்சி ஓயவில்லை. துன்பத்தைவிட இதைப்போன்ற இன்ப வாதனைகளைத் தாங்கமுடியாது. அதிலும் அவன் அறிவு வேறு குறுக்கிட்டு ஆக்ஷேபித்து நிலைமையை மோசமாக் கிக்கொண்டே வந்தால் கேட்பானேன்? நல்லவேளையாக நடுப்பகலுக்கு அப்புறம் மனதிற்குக் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது-சீட்டுக்கச்சேரியின் புண்யத்தால். அவன் சீட்டாட்டத்தில் தலை தெரியாமல் ஈடுபட்டான். இருந் தாலும் அவன் ஆட்டம் சரியாகவே இல்லை. காணாத் துருப்பாட்டத்தில் ஐந்தாறு தடவைக்கு மேல்பட்டே முக்கியமான சமயங்களில் துருப்பைக் கேட்க மறந்து போகவே அவனுடைய ஆட்டம் நண்பர்களுக்கு வியப்பைத் தந்தது. 

மாலையாகிவிட்டது. குளத்தினின்று குளித்து எழும் அழகியைப்போன்ற ஓர் உருவம் அவன் உள்ளத்தில் எழுந்தது. சீட்டாட்டத்தில் நிலைகொள்ளவில்லை. அவள் வருவாளா என்ற கவலை குடைந்தது. 

சீட்டாட்டத்தைக் கலைத்துவிட்டு காவிரிக்குச் சென் றான். இரவு கூடியிருந்தது. துறையெங்கும் சாதமும் இலைகளும் இறைந்து கிடந்தன. இருளில் கத்தியின் மின்னல்போல் ஆற்றின் நீர் பாய்ந்துகொண்டிருந்தது. இரு புறத்து கரையோரத்திலும் மரங்களிடையில் மின் மினிகள் மூழ்கி எழுந்தன. நக்ஷத்திரங்கள் பதிந்த வானம் முஸ்லிம் ராணியின் ஜரிகை உடையைப்போல் மின்னிற்று. 

ஆமாம். காவிரிகூட காதலைத் தேடித்தான் இருளில் செல்லுகிறாள். கடலைப்போய் அடைவாளோ அல்லது வழியிலேயே சோர்ந்துபோவாளோ… 

இப்படியே ஓர் அடுக்கு எண்ணங்கள் தோன்றி இன் பக் கிளர்ச்சியை உண்டுபண்ணவே, இயற்கையின் தூண்டுதலுக்கு உட்படுவதில் பிசகில்லை என்ற தீர்மா னத்தின்மீது அங்கிருந்து கிளம்பி சாப்பாடு முதலியவை களை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வாசல் கதவைத் தாளிட்டுக்கொண்டு முற்றத்தின் ஓரத்தில் மெத்தையை விரித்துப் படுத்தான். இன்பக் கனவுகள் குவிந்தன. இரண்டொரு நிமிஷத்திற்குமேலாயிற்று. 

‘டக் கென்று வாசலில் சத்தம் கேட்டது. 

‘அவள்’ வந்துவிட்டாள் போலிருக்கிறதென்ற குதூ கலத்துடன் கதவைத் திறந்து பார்த்தான். யாரும் இல்லை. அவன் ஆவலே ஒலியுருவாகி அவனை ஏமாற்றி விட்டது. திரும்ப தாளிட்டுக்கொண்டு வந்து படுத்தான். மறுபடி தெளிவான சத்தம் எழுந்தது. ரேழிக்கு வந்தபொழுதே விஷயம் விளங்கிவிட்டது; கதவின் தாழ் சரியாகப் பதியாமலிருந்து இப்பால் பதிந்த பொழுது பிறந்த ஓசை அது. இருந்தாலும் கதவைத் திறந்து பார்க்காமலிருக்க முடியவில்லை. 

படுக்கையில் ரொம்ப சஞ்சலத்துடன் வந்து படுத்தான். 

‘ஒரு ஆசை எவ்வளவு பித்தாக்கிவிட்டது ! காட்டாற்று வெள்ளம்போல் எப்படி என்னைப் புரட்டி சேற்றி லும் முள்ளிலும் இழுத்துப்போய்விட்டது! நான் விலங்கா? இனி செய்வதென்ன ? அவள் அரை மணி யில் வந்துவிடக்கூடும் … தனியே அவளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டால், பிறகு என்னாகுமோ, யார் கண்டது என்று யோசித்துக்கொண்டே வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பினான். 

முதலடி எடுத்துவைத்த நிமிஷத்தில் ஒரு பெண் குரல் ‘ஐயா’ என்றது. அந்த வார்த்தையைக் கேட்டு நடுங்கிப்போனான். ‘நேர் நெறியைக் கடைப் பிடிப்பதென்றால் அதற்குக்கூட விதி இடம் தராதுபோலிருக் கிறது. வந்தது வரட்டும். இங்கேயே இருந்து இன் பத்தை நுகர்ந்தே தீர்த்துவிடுகிறேன் என்று எண்ண மிட்டுக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான். எங்கோ மூன்றாவது வீட்டில் அந்தக் குரல்! தன்னை அழைக்கவில்லை ! அடசை ! இவ்வளவா மனசு பயந்து கிடக்கிறது ?’ என்று முணுமுணுத்துக்கொண்டே ரயில் டியை நோக்கிப் புறப்பட்டான். ரஸ்தாவில் மரங்களின் நிழல் அசையும்பொழுதும் பத்துப் பன்னிரண்டு அடிக் கொருதரமும் அவள் பின்னால் திடீரென்று முளைத்துவிட் டதுபோன்ற பிரமை உண்டாகும். பிரமை என்று தெரிந்தாலும் திரும்பிப்பார்க்காமல் இருக்கமுடிவதில்லை. 

இப்படியே ஐயனார் கோவிலண்டை வந்தான். அங்கு ஐயனார் வாகனங்கள்-கல் யானையும், மண் குதிரை யும் – இரவில் ரோந்து சுற்றுவதற்குத் தயாராக எப் பொழுதுமே நின்றுகொண்டிருக்கின்றன. வழக்கமாக கோவிலுக்கும் இந்தக் கல் யானை முதலியவைகளுக்கும் இடையேதான் இவன் செல்வது வழக்கம். அன்று யானை, குதிரையின் பின்பக்கமாகச் சென்றான். ஏனென் றால் பின்புறமாக யானை, குதிரைகளின் நிழல் நீண்டு தெருவை ஓரளவு இருட்டாக்கியிருந்தது. இருளில் செல் வதிலும் தெரிந்தவர்களைப் பார்க்காததுபோல் செல்வதி லும் அவனுக்கு ஏனோ நாட்டம் சென்றது. அதன் பய னாக அவனுக்குக் கொஞ்சம் வேதனை குறையத்தான் செய்தது. அந்த இருளின் பகுதியில் போய்க்கொண் டிருந்தபொழுது ‘சாமி’ என்றது ஒரு தேன் குரல். 

அவள் குரல் ! அவன் கலங்கிப்போனான். உடலெல் லாம் ஒருதரம் சிலிர்த்தது. மார்கழி மாதத்து நிலவின் பகைப்புலத்தில், காற்றிலசையும் சவுக்கைத் தோப்பி னின்று எழும் ஓசை விவரிக்கமுடியாத கிளர்ச்சியை உண்டாக்குகிறதல்லவா? அவ்வளவு கிளர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. திடீரென்று ரயிலடிக்குப் போகும் யோசனையைக் கைவிட்டு வீடு திரும்பினான். 

வீட்டு வாசலண்டை வந்தபொழுது இன்னது செய்வ தென்று தெரியவில்லை. நாலுகால் பாய்ச்சலில் போகும் விருத்தியைத் தடுத்து பெறப்படும் வெற்றியின் தொல்லையைவிட தடுக்காமல் கிடைக்கும் இன்பமே மேலல்லவா என்ற தத்வப்போர் ஒன்று அவனுள்ளத்தில் ஒலித்து நின்றது. அவன் வீட்டுக்கதவைத் திறக்காமல் சிந்தனையிலாழ்ந்து வெறும் வெளியை நோக்கிக் கொண் டிருந்தான். 

அதற்குள் அவள் வந்து விட்டாள். ஆனால் காலை யில் தென்பட்ட அராபிக் குதிரைபோன்ற தோற்றத் தைக் காணோம். ஒடுங்கிப் பயந்து இருளுடன் இருளாக முயலும் ஒரு நிழல்போல் தென்பட்டாள். அவள் பதுங்கிய மாதிரி அவன் உள்ளத்தைப் பிளந்தது. பழய விருத்திகள் இருந்த இடம் தெரியவில்லை. 

மறுநொடிக்குள் வீட்டிற்குள் போய் வந்து ஒரு ரூபாயை அவள் கையில் கொடுத்து விட்டான். அவள் திகைப்பு சொல்லத் தரமல்ல. அவன் மட்டும் திரும்பிப் பாராமல் கதவைத் தாளிட்டுக்கொண்டு மேல்மாடிக்குப் போய் விட்டான்… 

அவள் மௌனமாய்த் திரும்பினாள். அவளுக்குப் பின்னால் நீண்டு விழுந்த அவளுடைய நிழல் தெருவில் அசைந்து கொண்டிருந்தது. கண்ணுக்கு மறையுமட்டும் அவள் உருவத்தையும் நிழலையும் மாடியிலிருந்து பார்த்து நின்றான். பிறகு குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தான்… 

காவிரி மட்டும் யாதொரு சிந்தனையுமின்றி நுரை மலர் குலுங்க, காதலைத்தேடி கடல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *