பதவி உயர்வு





(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழத்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ உன் திறமையைக் காட்டி இப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது… சில சமயங்களில் திறமைசாலிகள் மதிக்கப் படாததோடு அவமானப் படுத்தவும் படுகிறார்கள். இதனை விளக்க கோவிந்தவர்மன் என்ற ஒற்றர் தலைவனின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக்கேள்” என்று கூறி கதையை ஆரம்பித்தது.

சூரபுர நாட்டின் மன்னன் சூரசேனன் மிகவும் கொடியவன் தன் நாட்டை விஸ்தரிக்க வேண்டும் என்று ஆசை கொண்டவன். அவனுக்குத் தன் அண்டை நாடான சொர்ணகிரியின் மீது ஒரு கண் இருந்தது. ஆனால் அந்த நாட்டைப் போரில் வெல்லும் அளவிற்கு அவனிடம் படைபலம் இல்லை. எனவே அதற்கு என்னவழி என்று யோசிக்கலானான்.
அப்போது சொர்ணகிரி மன்னனின் மகள் ஒரு காட்டில் தன் தோழிகளோடு உல்லாசமாகப் பொழுது போக்கப் போய் கொண்டிருக்கிறாள் என்பது சூரசேனனுக்குத் தெரிந்தது. அவன் தன் வீரர்களை அந்தக் காட்டிற்கு அனுப்பி அவளைச் சிறைப் பிடித்துத் தன் நாட்டிற்குக் கொண்டு வந்து விட்டான்.
அதன்பின் அவன் சொர்ணகிரி மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதித் தன் தூதன் வாயிலாக அனுப்பினான் அதில் “உன் மகளை நான் பிடித்து வைத்திருக்கிறேன். அவளை நீ மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் நீ பணயப்பணம் ஐந்து லட்சம் வராகன் கொடுக்க வேண்டும். நீ மட்டும் என் நாட்டின் மீது படை எடுத்து உன் மகளை மீட்க முயன்றால் நீ அவளை உயிருடன் காண முடியாது. அவளது பிணத்தைத்தான் எடுத்துப் போக வேண்டி வரும் உன் பதிலைச் சொல்லி அனுப்பு” என்று இருந்தது.
தூதனிடமிருந்து அக்கடிதத்தை வாங்கிக் படித்த கிழமந்திரி கிருஷ்ண சர்மா மன்னனிடம் அந்த விஷயத்தைக் கூறிவிட்டு தூதனிடம் “உன் அரசனிடம் இன்னும் ஒரு மாத காலத்தில் அவர்கேட்ட தொகையை அனுப்புவதாகச் சொல்” என்று கூறி அனுப்பினார். தூதன் போனதும் சொர்ணகிரி மன்னன் “என் மகளை விட்டு விடுவான் என்பது என்ன நிச்சயம்?” என்று கேட்டான்.
கிருஷ்ண சர்மாவும் “நாம் அவனுக்கு ஒரு செல்லாத காசு கூடக் கொடுக்கப் போவதில்லை. இந்த ஒரு மாதத்துள் நம் அரசகுமாரியை விடுவிக்க வேண்டும். அதற்காகத் தான் அப்படி பதில் சொல்ல அனுப்பினேன்” என்றார். பிறகு அவர் “நமக்கு விசுவாசமாகப் பணி புரியும் ஒற்றர்தலைவன் கோவிந்த வர்மனை அனுப்பி அரசகுமாரி எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

மன்னனும் கோவிந்தவர்மனிடம் அப்பணியை ஒப்படைக்கவே அவன் மீனவன் வேடத்தில் சூரபுர எல்லையை அடைந்தான். அங்கு சூரசேனனின் படைகள் நதிக்கரை யில் முகாம் இட்டிருந்தன. மீனவன் வேடத்தில் கோவிந்தவர்மன் அந்த வீரர்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து தலை நகரை அடைந்தான். சூரபுரி யில் நான்கு நாட்கள் அலைந்து திரிந்து சொர்ணகிரி அரசகுமாரி அங்கு இல்லை என்றும் அங்கிருந்து சற்று தூரத்திலுள்ள ஒரு பாழடைந்த கோட்டைக்குள் வைக்கப்பட்டிருக்கிறாள் என்றும் அவன் தெரிந்து கொண்டான்.
அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டு இரவுவேளையில் அந்தப் பாழடைந்த கோட்டையை அடைந்தான். அவன் அக்கோட்டைக்கு வெளியே ஒரு மறைவான இடத்தில் நின்று அக்கோட்டையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாரோ ஒருவன் பலமாக அவனது தலைமீது அடித்தான் கோவிந்தவர்மன் கோபத்தோடு வாளை உருவிக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே காவல் வீரன் ஒருவன் தீவட்டியுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சட்டெனத்தன் வாளால் அவனைக் குத்திக் கொன்றான்.
அந்த வீரன் ஓவெனக் கத்திக் கொண்டே விழுந்ததால் சற்று தூரத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த வீரர்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்தார்கள். அதைக்கண்ட கோவிந்தவர்மன் கீழே விழுந்து கிடந்த வீரனின் தீவட்டியை எடுத்து அங்கே உலர்ந்து கிடந்த சருகு, இலை. குச்சிகளில் நெருப்பை வைத்தான். காற்று வேகத்தில் நெருப்பு வேகமாகப் பரவவே வீரர்கள் கூச்சலிட்டுக் கொண்டு பயந்து ஓடினார்கள்.கோவிந்தவர்மன். அந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பி சொர்ணகிரியின் தலைநகரை அடைந்தான்.

காயமுற்ற அவன் சொர்ணகிரி மன்னனைக் கண்டு அரசகுமாரி சிறை வைக்கப்பட்டிருக்கும் கோட்டையைக் கூறி தான் அங்கிருந்து தப்பிவந்த விதத்தையும் விவரித்தான். மன்னனும் மந்திரியும் அதனைக் கேட்டுப் பேசாமல் இருந்தனர்.
மறுநாள் காந்தசேனன் என்ற ஒற்றன் மன்னனைக்கண்டு தான் போய் அரசகுமாரியை மீட்டு வருவதாகக் கூறினான். மன்னனோ “உன்னால் முடியுமா? எதற்கும் கோவிந்தவர்மனைக் கேட்டு அந்தக் கோட் டைக்குப் போ” என்றான்.
காந்தசேனனோ “அரசே! கோவிந்தவர்மனை நான் சந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவன் அளிக்கும் தகவல் சற்றும் பயன் படாது. ஏனெனில் சூரசேன மன்னன் இதற்குள் கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்த அரசகுமாரியை வேறு எங்காவது கொண்டு போய்ச் சிறை வைத்திருப்பான்” என்றான்.
அதைக் கேட்ட மன்னனும் கிழ மந்திரியும் அவனது புத்திசாலித் தனத்தை கண்டு வியந்தார்கள். மன்னனும் “சரி, நீ முயன்று பார்” என்று கூறி அனுப்பினான்.
நாலைந்து நாட்களுக்குப்பின் காந்தசேனன் திரும்பிவந்தான். அவன் மன்னனிடம் “அரசே! இந்த வேலையை என் ஒருவனால் மட்டும் செய்து விடமுடியாது. ஏனெனில் இப்போது சூரசேனன் அரசகுமாரியை ஒரு தீவில் சிறைவைத்திருக்கிறான். நான் மட்டும் தனியாக அத் தீவிற்குள் சென்றால் என்னை அங்கு காவல்புரியும் வீரர்கள் எளிதில் பிடித்துக் கொண்டுவிடுவார்கள். அதனால் பயனில்லையே. உங்களுக்கு இதனைத் தெரிவிப்பதே நல்லது” எனக்கூறி அத்தீவு இருக்கும் இடத்தைக் கூறினான்.
மன்னனும் “சரி போ. உன்னால் இந்த வேலையைச் செய்ய முடிய வில்லை” என்று கூறி அவனை அனுப்பி விட்டான். கிழமந்திரியோ உடனே சேனாதிபதியை வரவழைத்து அவனிடம் அத்தீவுபற்றிக் கூறி “அங்குதான் அரசகுமாரி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். அவளை விடுவிக்கத் திட்டம் வகுக்க வேண்டும்” என்றார்
சேனாதிபதியும் “சூர சேனனுக்குச் சந்தேகம் ஏற்படாதபடி நம் வீரர்கள் நூறு பேருக்கு மீனவர்கள் போலவேடம் போட்டு அத்தீவிற்கு அனுப்புவோம். அவர்கள் நீந்தி அத்தீவை அடைந்து அங்குள்ள வீரர்களுடன் எதிர்த்துப் போராடி அரசகுமாரியை மீட்டு வந்துவிடலாம்” என்றான்.

சொர்ணபுரி மன்னன் அவ்வாறே செய்யச் சொல்லிவீர்களை மீனவர் வேடத்தில் அனுப்பினான். அதே சமயம் சூரபுரியின் மீது படை எடுத்துச் சென்று சூரசேனனைச் சிறைபிடித்து சூரபுரியையும் தன் வசப்படுத்திக் கொண்டான். வெற்றிபெற்ற சொர்ணகிரி மன்னன் தன்கிழமந்திரியிடம் “இந்த சந்தர்ப்பத்தில் நாம் நம் ஒற்றர் தலைவன் கோவிந்தவர்மனை கெளரவித்தால் நன்றாக இருக்கும் அல்லவா?” என்று கேட்டான். அவரோ “அரசே! கௌரவிக்கப்பட வேண்டியவன் கோவிந்தவர்மன் அல்ல. காந்தசேனன்தான்” என்றான்.
மன்னனும் சற்று யோசித்து விட்டு “நீங்கள் கூறியது முற்றிலும் சரியே” எனக்கூறி காந்தசேனனை கௌரவித்ததோடு அவனை ஒற்றர் தலைவனாக நியமித்தான். கோவிந்தவர்மனைப்பதவி நீக்கம் செய்தான்.
வேதாளம் இந்தக் கதையைக் கூறி “மன்னனே! திறமைசாலியான ஓற்றர் தலைவன் கோவிந்தவர்மனைப் பாராட்ட வேண்டாம் எனக்கிழமந்திரி கூறியதை சொர்ணகிரி மன்னன் ஏன் ஏற்றான்? அது மட்டுமல்ல, அவனைப் பதவிநீக்கம் செய்தானே, அதுசரியா? காந்தசேனனைப் பாராட்டிப் பதவி அளித்தது எப்படி நியாயமாகும்? இந்தச் சந்தேகங்களுக்கு நீ தக்க விடைகளைத் தெரிந்திருந்தும் கூறா விட்டால் உன் தலைவெடித்து சுக்குநூறாகி விடும்” என்றது.
விக்கிரமனும் “கோவிந்தவர்மன் திறமைசாலியான போதிலும் கோபப்பட்டு விளைவுகளைப்பற்றி சற்றும் யோசிக்காமல் செயல்படுபவன். கோபம் அறிவை அழித்து விடும். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அரசகுமாரி கோட்டைக்குள் இருக்கிறாளே என்பதைக் கூட நினைத்துப் பாராமல் கோட்டையைச் சுற்றி தீமூட்டி விட்டு ஓடிவிட் டான். தீ கோட்டைக்குள் பரவி அரசகுமாரிக்கு ஆபத்தை விளைவித்திருக்குமேயாகில் பிரச்னைகள் பல உருவாகி இருக்கும். யாரோ வந்தான் என்று ஊகித்ததோடு சூரசேனன் அரசகுமாரியை அக்கோட்டையிலிருந்து தீவிற்கு மாற்றினான். இதை ஊகித்தவன் காந்தசேனன். அவன் அரசகுமாரி எங்கே இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு வந்தான். அதனால்தான் திட்டம் போட்டு அரசகுமாரியை மீட்கவும் சூரசேனனை சிறைப்பிடிக்கவும் முடிந்தது. கிழமந்திரி இதனை எல்லாம் நன்கு யோசித்தே கோவிந்தவர்மனை கௌரவிக்காமல் காந்தவர்மனை கெளரவிக்க வேண்டும் எனக்கூறியதைக் கேட்ட மன்னன் சற்று யோசித்து அதற்குத் தகுதி பெற்றவன் காந்தசேனனே என்பதை ஏற்றான். கிழ அமைச்சர் கூற மன்னன் அதனை ஏற்றதும் சரியே” என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பி மீண்டும் முருங்கமரத்தின்மீது ஏறிக் கொண்டது.
– ஜூன் 1991
Intresting site