பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,416 
 
 

பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர்.

ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

சகல உயிரினங்களும் கூட தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தன. ஊரே அமைதியாகக் காணப்படுகிறது.

ஆனால், செல்வந்தருக்கோ தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். சிறிது தொலைவில், திண்ணையில் ஒருவன் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த செல்வந்தர் நம்மால் அப்படி தூங்க முடியவில்லையே என எண்ணி ஏங்கினார்.

காவலாளியை அனுப்பி, திண்ணையில் தூங்கிக் கொண்டு இருப்பவனை எழுப்பி அழைத்து வரச் சொன்னார் செல்வந்தார்.

காவலாளி சென்று அவனை எழுப்பினான். “இந்த நேரத்தில் ஏன் என்னை எழுப்பித் தொல்லைப் படுத்துகிறாய்?” என்று கேட்டான்.

”அருகில் உள்ள மாளிகையின் முதலாளி, உன்னை அழைத்து வரச் சொன்னார்.” என்றான் காவலாளி.

“என் தூக்கம் கெட்டு விடும். காலையில் வருகிறேன்.” என்றான் அவன்.

”உன்னை கூட்டிக் கொண்டு போகவில்லையானால், என் வேலை போய்விடும்” என்று கெஞ்சி அவனை கூட்டிக் கொண்டு சென்றான் காவலாளி.

வந்தவனைப் பார்த்து, “வெறுமனே தரையில் ஆழ்ந்து தூங்குகிறாயே, அது எப்படி? நானோ பஞ்சணை, பட்டு மெத்தை, மின் விசிறி, இவற்றோடு படுத்தும் எனக்குத் தூக்கம் வரவில்லையே, அதைத் தெரிந்து கொள்ளவே உன்னைக் கூட்டி வரச் சொன்னேன்” என்றார் செல்வந்தார்.

“ஐயா, நீங்கள் பணக்கார வர்க்கம். மேலும், மேலும் பணத்தைச் சம்பாதிப்பது எப்படி என்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கிறீர்கள். தவிர வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம் மனநிறைவு என்பதே கிடையாது. நாங்களோ உழைப்பாளி வர்க்கம்.

நாங்கள் குறிப்பிட்ட நேரம் வரை உழைக்கிறோம். கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கிறோம், நாளைய வேலையை நாளை பார்ப்போம்’ என்று எண்ணி, இரவில் அமைதியாகத் தூங்குகிறோம். போதும் என்ற மன நிறைவோடு , மகிழ்ச்சியோடு தூங்கி எழுந்திருக்கிறோம். எதற்காகவும் கவலைப்படுவதில்லை” என்று கூறிவிட்டு, உடனே அவன் புறப்பட்டான்.

செல்வந்தர் அவன் கூறியதைக் கேட்டு பிரமித்துப் போனார்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறுவர்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *