படித்தவள்
கதையாசிரியர்: ரா.சீனிவாசன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 4,098
(1993ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1
திண்ணைத் தூங்கி என்று சொல்வார்கள். அந்தப் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா? எங்கள் வீட்டில் திண்ணை வைத்துக் கட்டவில்லை. அதன் அவசியத்தை இந்த நூற்றாண்டு இழந்துவிட்டது; அதுதான் காரணம்; பிளாட்டு வாங்கி ஃபிளாட் கட்டும் காலம் இது.
திண்ணை வேதாந்தம் பேசிப் பழக்கம். அதற்கு ஒரு பண்ணையார் எனக்குக் கிடைத்து வந்தார். அவருக்கு வேதாந்தம் பேசுவது ரொம்ப பிரியம். பிராணாயாமம் என்பது பற்றிப் பேசி என் உயிரை வாங்கி விடுவார். அதனால் ‘காயசித்தி’ ஏற்படும் என்று கூறுவார்
சின்ன வயது; ஆறு இருக்கும்; அச்சரப்பாக்கம் கூட்டு ரோடு; அங்கே என் கிழிந்த புத்தகங்களைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பேன். ‘டீ’ கடையில் சூடான ‘டீ’ அதைக் குடிக்க முடியாமல் ஆறட்டும் என்று கையில்வைத்துக் கொண்டு ஒரு சிலர் பொழுது போக்குவதை ஒரு கலையாக அனுப விப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அன்று.
இந்த வயதில் ‘டீ’யை ஆறவிட்டு அதைக் குடிக்காமல் மனத்தைச் சிதறவிடும் மனோபாவம் என்னிடம் இருப்பதை நான் உணர முடிகிறது. எனக்கு வயது ஆகிவிட்டது. வேலை வெட்டிக்குஉதவாதவன் என்று நான் ஒதுக்கப்பட்டேன், இதுவும் உண்மைதானே; எத்தனை நாளைக்கு நான் இடம் அடைத்துக் கொண்டு இருப்பது.
என்னை அறியாமல் ‘காயசித்தி’ பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. திருக்குறள் படித்துப் பழக்கம். நானாக அதை எடுத்துப் படிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அந்த நல்ல பழக்கம் என்னிடம் என்றைக்குமே இருந்தது இல்லை. படிக்கிற காலத்தில் அதைப் பாடநூலாக வைத்திருந்தார்கள். எந்த வகுப்பிலும் கடன் கொடுத்தவன் விடாமல் தொடர்வதைப் போலத் திருக்குறள் நம்மைத் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதிலிருந்து யாரும் விடுபட முடியாது. அதன் அருமை அப்பொழுது தெரிவதில்லை; இப்பொழுது தெரிகிறது. ஏதாவது குறள் நினைவுக்கு வரும்; அதை நினைத்துக் கொண்டே அசைபோடுவேன்.
சூது என்ற அதிகாரம்; அது தீது என்பதைப் பத்துக் குறளில் கூறுகிறார்.
பொருளை இழக்கும்தோறும் சூதின்மீது விருப்பு அதிகமாகும் என்பது அந்தக் குறளின் கருத்து. அதற்கு அவர் உவமை கூறி இருக்கிறார். உயிர் இழக்கும்தோறும் அதன்மீது காதல் ஏற்படுமாம். அதனை நான் இப்பொழுது உணர் முடிகிறது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து விடுவது என்ற ஆசையை அடக்கவே முடியவில்லை.
‘முதியவர்கள் ஆசை’ என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இதுதான் என்பதை உணர முடிந்தது.
ஆசை இருந்து என்ன பயன்? வாழ்வது அவ்வளவு எளிதாகவும் படவில்லை, கவலைகள் நிறைய இருப்பது சில சிமயம் தேவைப்படுகிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
குண்டுபையன்; ஆனால் மண்டு என்று அவனைக் கூற முடியாது. அவன் பேசும் கொச்சை மொழி என்னை அவன்பால் இச்சை கொள்ளச் செய்தது. சின்னக் குழந்தையாக இருந்தால் அதனை மழலை என்று கூறலாம். அந்த இன்பத்துக்கு இவன் பேச்சு ஈடாகாது. மழலை அதில் பொருளே இருக்காது. சொற்கள் மட்டும் பற்களினின்று வெளிப்படும். அதில் எந்தக் கருத்தும் இருக்காது.
வரிகள் சில; ஓசை நயம்; அவ்வளவுதான். ‘சில்லாவல்லி ராமக்கா சீப்பு போட்டு வாரக்கா’ என்று சிரித்துக்கொண்டே அடுத்த வீட்டுச் சின்ன குழந்தை ஒன்று பேசும். அது அதன் பக்கத்து வீட்டுத் தெலுங்குப் பெண்ணின் தாக்கம்; அதனால் ஏற்பட்டது இந்த ஆக்கம். அந்தப் பெண்ணிடம் பாதி கற்றுக் கொண்டது என்று நினைக்கிறேன். ‘சில்லாவல்லி’ என்ற சொல் தமிழில் கேட்டதே இல்லை; இந்த ஓசை வரிகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த குண்டு அப்படி அல்ல; கருத்து உடைய சொற்களைப் பேசுவான். அந்த வீட்டுக்கு அவன் ஒரே பிள்ளை; அதனால் அவன் குண்டாகி விட்டான் என்று தெரிகிறது. எதற்காக இவ்வளவும் சொல்கிறேன்; சில விஷயங்களில் ‘சீரியஸ்னெஸ்’ இருக்கக்கூடாது. அதுதான் இன்பம்; பொழுதுபோக்கு; ‘Le’ சூடாக இருக்கிறது. ஆறட்டுமே அதற்கு என்ன அவசரம்.
வியாபார வனிதை அவள் கொண்டு வந்தபண்டத்தை விலை கூறி விற்கக்கூடாதா? “வாங்கிக் கொள்ளுங்கள்” என்று மன்றாடுகிறாள். அவள்விற்பனைப் பொருளில் தரம் இல்லை; அவள் வாங்கி வந்த வரத்தைப் பற்றி முன்னுரை கூறி என் மனக் கட்டிடத்தை நெகிழ வைக்கிறாள் அதாவது இந்த வியாபாரம் அவளுக்குச் செய்யும் உதவி என்பது போல் இருந்தது.
அந்தக் குண்டு பையன் ஏதாவது கடித்துக் கொண்டே இருப்பான். ‘சாக்லேட்’ அவன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு சின்னத் துண்டு கடித்துக் கொடுப்பான்.
‘போடா எச்சில்’ என்று மற்றவர்கள் அவனை அழைப்பது பேசுவது சிரிப்பாக இருக்கும்.
கடித்துத் தராதே தடித்த பையல் நீ’ என்று ஒல்லிக் குச்சுப் பையன் சொல்லிவிட்டு ஓடி விட்டான்.
எனக்கும் சாக்லேட்டு கடிக்கக் கொடு என்று கேட்க ஆசைதான் . கேட்க முடியுமா? வயது ஆகிவிட்டது. எந்த ஆசையும் கூடாது; கேட்டால் அவன் என் சின்னத்தனத்தைக் கண்டு துரைத்தனம் பேசுவான்.
அந்தப் பண்ட விற்பனை வனிதை வாய்திறந்து ஏதாவது தன்னைப்பற்றிச் சொல்வாள் என்று எதிர் பார்த்தேன். பண்டத்தைவிட அந்த அம்மையின் வாய்ச் சுவையை விரும்பினேன். கதை கேட்கும் ஆர்வம் மானிடர்க்கு ஏற்பட்டுள்ள மனநோய். அதற்கு நான்விதி விலக்கு ஆகவில்லை. புத்தகத்தைப் புரட்டுவதை விடப் புது முகங்களை உருட்டுவதில் மகிழ்வு ஏற்படுகிறது. இந்த அம்மை என் வெறுமைக்குப் புதுமுகம்தான். அவள் தன் வியாபாரத்துக்காகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவள் நரி முகத்தில் விழித்தாள். நான் அவள் விரும்பும் அளவுக்குப் பண்டங்களை வாங்கியதால்.
அவள் கூறும் செய்திகள் கதை கேட்பது போல் இருந்தன.
“எல்லாவற்றையும் மெல்ல மெல்லத் தோற்று விட்டு இந்தக் கதிக்கு வந்துவிட்டோம்” என்றாள்.
“இழப்புக்குக் காரணம்?”
“அவர் சரியாக இல்லை”
அதைக்கேட்டு அறிய வேண்டும் என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
“எப்படி அழித்தார்?” என்றேன்.
அவள் நகை இழந்த முகத்தில் என்னால் நகை உண்டாக்க முடிந்தது.
“அதனால் உங்களுக்குப் பயன் இல்லை. அதைத் தெரிந்து கொண்டு நீங்கள் பயன் அடைய முடியாதே” என்று கூறினாள்.
என் இயலாமையை அவள் சுட்டிக் காட்டியது எனக்கு ஒரு பாடம்தான்.
சட்டசபையில் சில கேள்விகள் தான் அனுமதிக்கப் படுகின்றன; இஷ்டப்படி எதையும் கேட்டுவிட முடியாது.
அவன் அழித்தான் என்பது செய்தி; எப்படி என்பது அவள் கணவனின் விமரிசனம்; பண்பட்ட அவள் உள்ளம் அதைக் கூறாதது அவள் பெண்மையின் உயர்வை எடுத்துக் காட்டியது; படித்தவள் அவள்: வாழ்க்கையில் நெறிகளைப் படித்தவள் என்பதை அறிந்து பெருமைப்பட்டேன்.
காசு கொடுத்து வாங்கியது; அதன் சுவை மறந்து விட்டது. ஆனால் சொற்சுவை சோர்வு நீக்கியது. நினைத்துப் நாம் பாராட்டும் கவிதையாக இருந்தது.
அத்தியாயம் – 2
என் கதாநாயகி இப்பொழுதுதான் அறிமுகம் ஆகிறாள். அவள் ‘துருதுருப்பாக’ இயங்கிக் கொண்டிருக் கிறாள்.. “என்னம்மா எப்பெழுதும் சுருசுருப்பாக இருக்கி றாயே” என்று கேட்கிறேன்.
“காசு நாலு சம்பாதிக்க வேண்டும்” என்று கூறுகிறாள். அதாவது படித்துவிட்டு வெளியேறி உலகத்தின் படிகளில் மிதிக்கிறாள். சிட்டுப் பறவை போலக் கட்டு நீங்கிப் பறந்து கொண்டிருந்தாள். ‘பிறை’ வீட்டுச்சிறையில் கிடப்பதைப் போன்ற உணர்வு பெறுகிறாள். அவள் பெயர் ‘பிறைமதி’. அதைச்சுருக்கிப் பிறை என்று கூறுகிறார்கள். முழுப் பெயரில் அவளை வகுப்பு வகுப்பு ஆசிரியர்கள் அழைத்துக் கேட்பாள். யாரால் இவ்வளவு பெரிய பெயரைக் கூறமுடியும். அழகான தமிழ்ப் பெயர் அவளுக்குக் கிடைத்தது. ‘பிறை’ என்றுதான் அவளை அழைத்து வருகிறார்கள். அது அவள் முழுப் பெயரின் கடைக் குறை. அவள் மற்றவர்களுக்குப் பிறையாகத் தெரிந்தாள். எனக்கு அவள் மதியாகவே தென்பட்டாள். ‘அறிவு மதி’ என்று ஒரு கவிஞர் கேள்விப்பட்டு இருக்கிறேன். அறிவு என்றாலும் ஒன்றுதான்; மதி என்றாலும் ஒன்றுதான். அங்கே அறிவு ஆகிய அறிவு என்பதுபொருள். இங்கே மதி என்பது சந்திரனைக் குறிக்கிறது. பிறைமதி என்றால் பிறைச்சந்திரன் என்பது பொருள். அவள் நெற்றியின் அழகு அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்தும் எனக் காட்டியது.
என் கெட்ட பழக்கம் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது.என்ன செய்வது சிகரெட்டுப் பிடிப்பதை விட இது மேல் என்று கருதுகிறேன்.
“ஏன்’மா நீ சம்பாதித்துதான் ஆக வேண்டுமா?” என்று கேட்கிறேன்.
“படித்தவள் சும்மா இருக்க இருக்க முடியுமா?” என்று என்னைத் திருப்பி மடக்குகிறாள்.
“படித்தவள்” அதுதான் பிரச்சனை என்று தெரிந்தது.
“எந்த வேலைக்குப் போக விரும்புகிறாய்?”
“ஏதாவது; என்னால் சும்மா இருக்க முடியாது. படிப்பு எப்பொழுது முடியும் என்று காத்திருந்தேன். அது ஏன் முடிந்தது என்று வருத்தப்படுகிறேன்” என்கிறாள்.
“பாக்கி வைப்பது தானே: ஏதாவது எழுதிக் கொண்டிருக்கலாமே” என்றேன்.
“எப்படி எழுதினாலும் அவர்கள் மார்க்குப் போட்டு விடுகிறார்கள்”.
“காரணம்?”
“என் கைழுயெழுத்து அழகாக இருக்கும்”
“நல்லது தான்”
“என் தலையெழுத்துச் சரியாக இல்லையே” என்று பதில் கூறுகிறாள்.
“அன்று எழுதி வைத்தவன் அப்படி; அதை அழிப்பது நம்மால் முடிவது எப்படி? எதுவும் நடக்கும் அதன்படி”.
“என்ன சார் வேதாந்தம் பேசுகிறீர்கள்?” என்றாள்.
“என் சித்தாந்தம் எடுபடாது என்பதை உணர்கிறேன்”
“அது பழைய காலம். வாய்ப்பு தான் தேவை; அதற்குப் பிறகு எல்லாம் சரியாகப் போய்விடும்” என்றாள்.
வெளியே போகிறவரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது தெரிகிறது; கேட்காமலும் இருக்க முடியவில்லை. நிச்சயமாகப் பிறை போர்க்களத்துக்குப் போகவில்லை; பெரிய காரியம் எதுவும் இருக்காது.
அவள் கையில் பை ஒன்று வைத்திருந்தாள்;
“கடைக்கா?” என்று கேட்கிறேன்.
“இல்லை; ஷாப்பிங்கிக்கு” என்று சொல்லிச் சிரித்தாள்.
“பலமா இருக்குமா?”
“அரை கிலோ கத்தரிக்காய்: கால்கிலோ சுண்டைக் காய்; ஒரு கிலோ வெண்டைக்காய்” என்று அடுக்கிக் கொண்டே சென்றாள்.
“இதுதானா ஷாப்பிங்க்?”
அவள் சிரித்தாள்.
“‘கடைக்கு’ என்றால் அது அகௌரவம். அதற்காக இந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். அந்தஸ்து இதனால் உயர்கிறது” என்றாள்.
படித்தவள் சாமர்த்தியமாகப் பேசுகிறாள்.
“அதற்கு ஸ்கூட்டர் எதற்கு?”
“வாங்கியாகி விட்டது; பயன்படுத்த வேண்டாமா?” என்றாள்.
“உனக்கு எதுக்கு ஸ்கூட்டர்?”
“வசதி இருக்கிறது; அதை விளம்பரப்படுத்துவதற்கு” என்றாள்.”
“தேவைக்கு மேல் எதுவும் வைத்திருக்கக் கூடாது” என்றேன்.
“இரண்டு பிள்ளைகளுக்குமேல் ஒருவருக்கு இருந்தால்”? என்றாள்.
“ஒன்றே போதும்; மற்றொன்று தேவைக்கு மீறியது” என்றேன்.
பிறை ‘ஷாப்பிங்க்’ கொண்டு சென்ற பையை நிரப்பிக் கொண்டு வந்தாள். அதோடு மற்றொரு கையில் ஓர் ‘உறை’ வைத்திருந்தாள்.
“இது என்ன காய்?” என்றேன்; ஏனெனில் அவள் காய்தானே வாங்கிவரச் சென்றாள்.
‘அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காய்வாய் நீ
அத்திக்காய் காயாயோ’
என்று பாடினாள்.
“உனக்குப் புத்தி இருக்கிறதா” என்று கேட்டு விட்டேன். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பாட்டுப் பாடியதால்.
“அதிகம் இருக்கிறது; தேவைக்குமேல் இருக்கிறது; உங்களுக்குத் தேவைப்படுகிறதா” என்று கேட்டு விட்டாள்.
அவள் சுவைபடப் பேசிச் சுமையைக் குறைத்தாள். அதைத் தெரிந்து கொள்ளாமல் விளையாட்டுக்குச் சொன்னதை விபரீதப்படுத்தி விட்டேன்.
“இது விண்ணப்பப் படிவம்; கடையில் காய்க்கிறது” என்றாள்.
காய்கறிக் கடைக்கு அது வந்து காசுக்கு விற்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
“அரசு விண்ணப்பங்கள் அங்காடிக்கு வந்து விடுகின்றன. அஞ்சல் செலவு மிச்சம்” என்றாள்.
“தினந்தோறும் ஒன்று வரும்; தவறாமல் வாங்கி வருவேன்” என்றாள்.
“ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் காசு; அதற்கு நகல் படிவங்கள்; வங்கிக் கேட்பு வரைவோலை; இதற்கே சரியாகப் போய்விடுகிறது. என் படிப்பு அதற்கு ஈடு செய்யமுடியாது. எனக்குத் தெரியாத பொருள்களில் அவர்கள் வினா அமைந்து விடுகிறது; எழுதுகிறேன்; எழுதிக் கொண்டே இருக்கிறேன்” என்று திரைப்படப் பாணியில் இரைச்சல் கலந்து கூறுகிறாள்.
அவள் காலகட்டம் எனக்குப் புரிகிறது. எப்படியாவது ஒரு வேலை வாங்கி விடுவது என்பது அவள் தொடர்ந்த முயற்சிகள் தெரிவிக்கின்றன.
அவளைப் பார்க்கும்போது பரிவு ஏற்படுகிறது.
பேசாமல் யாரையாவது கட்டிக் கொண்டு தொலையக் கூடாதா என்ற எண்ணம் எழுந்தது.
“ஏன்மா அம்மாகிட்டே சொல்லி உனக்கு”?
“கருமாதி” என்றாள். திருமணத்தில் அவள் ஆர்வம் இச்சொற்களினின்று அடக்கு முறையைக் காண்கிறது என்று தெரிகிறது.
“இதுக்கா இதுவரை படித்தது” என்று இடித்துக் கேட்கிறாள்.
திருமண அழைப்பிதழில் அழகாகப் பட்டங்களைப் போட்டுக் கொள்வது நினைவுக்கு வந்தது.
“கலியாணப் பத்திரிகையில் உன் பேருக்குப் பின்னால் இரண்டு ஆங்கில எழுத்துக்களை மற்றவர்கள் உச்சரிக்கச் செய்ய” என்று விளக்கினேன்.
“அந்த அளவுக்குப் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; அது எங்களுக்கு ஆறுதல் பரிசு” என்கிறாள்.
அவள் உறுதியாக ஒரு வேலைக்குப் போவது என்பதில் அவள் பேச்சு சுழன்றது.
“உழைப்பாளி படம் பார்த்தீர்களா?” என்று கேட்டாள்.
“வீடியோவில் வரவில்லை” என்றேன்.
“அரங்குக்குப் போய்ப் பார்க்கலாமே” என்றாள்.
“முதல் நாள் டிக்கட்டுக் கிடைக்கவில்லை; இனி அதற்குப் போவது இல்லை என்று விட்டு விட்டேன்.”
“அப்புறம் போவது?”
“அதில் சுவை இல்லை; அதை விட மண்ணெண்ணெய் போட்டுக் கொளுத்திக் கொள்ளலாம்” என்றேன்.
அந்தப்படம் வெளியிட்ட போது ரசிகன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான் முதற்படம் பார்க்க முடியாமல் என்ற செய்தியைத் தெரிவித்தேன்.
“எதற்குச் சாவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது இந்த நாட்டில். இவனுக்கு என்ன தியாகத் தொகையா கிடைக்கப் போகிறது?” என்றாள்.
“இளைஞர்கள் துடிப்பு உடையவர்கள்” என்றேன்.
“படிப்புக் குறைவு” என்று அவள் சுட்டிக் காட்டினாள்.
அத்தியாயம் – 3
பண்ணையார் என் பேச்சு நண்பர். ஓய்வு பெற்ற இந்த வயதில் சாய்வு பெறுவதற்கும் பேச ஆள் தேவைப்படுகிறது. அவர் திண்ணை சற்று விசாலமாகவே இருந்தது. நிலம் சரியாகப் பயிரிடுவார் இன்மையால் மெல்ல மெல்ல நிலங்களை எல்லாம் ஒன்றும் பாதியுமாக விற்றுவிட்டுச் சென்னை வந்து சேர்ந்துவிட்டார். ஊரிலே பெரிய திண்ணை. அதே மாதிரி இங்கே கட்ட வேண்டும் என்று திண்ணை வைத்து வீடு கட்டி இருக்கிறார்.
பொதுவாகக் கோயில்களின் முன்னால் இந்த மாதிரி திண்ணை போட்ட வீடுகள் இருந்தால் திருவிழாக் காலங்களில் பக்த கோடிகள் ஒதுங்குவதற்கு உதவுகின்றன. சோறு போடுவது புண்ணியம் என்று சொல்லுவார்கள். அதைவிட யாராவது தங்குவதற்கு இடம் தந்தால் பெரிய தர்மம் என்று அவருக்குப் பட்டது.
இரவிலே இந்த இடத்தில் யார் யாரோ வந்து ஒதுங்குகிறார்கள். அதனால் இதற்குக் கிராதி போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த வியாதி இவரையும் பிடித்துக் கொண்டது. அந்தக் கிராமத்து வீட்டைச் சிரமம் இல்லாமல் நகரத்து வீடாக மாற்றி விட்டார். திண்ணை இருந்த இடம் ஆபீசு அறையாக மாறி விட்டது. தொலைபேசி இடையிடையே அவரை எண்ணிட்டுக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தது.
அவர் ஜோசியம் சொல்வதை ஒரு பொழுது போக்காக ஆரம்பித்தார். அது மிகவும் தேவைப்படும் கலையாகி விட்டது. எதையும் தைரியமாக நம்பும் சூழ்நிலை குறைந்து வருகிறது. துணிந்து நாளை என்ன நடக்கும் என்று கூறமுடியாது. அதை முன் கூட்டிச் சொல்வது என்றால் உண்மையில் அது அற்புதக் கலைதான்; தேவையும் கூட.
நான் அவரிடம் போகும்போது சட்டம் படித்து நல்லபடி சம்பாதித்துக் கொண்டு வரும் நாற்பதைக் கடந்த நடுத்தர வயது உடையவர். அவர் தம் சாதகம் என்று ஏதோ குறிப்புகளைக் கொடுத்து ‘குரு’ எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டு பிடிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். காணாமற் போனவர்களைத் தேடுவது போல என் நண்பர் துருவித் தேடிக் கண்டு பிடித்தார்.
“உனக்குக் குரு நல்ல இடத்தில் வந்து தங்கி ருக்கிறான்; நீ வேண்டாம் என்றாலும் அவன் உன்னை விட்டுப் போக மாட்டான்” என்று தெளிவு படுத்தினார். “நீ தொடும் வழக்குகள் எல்லாம் தோல்வியே அடையாது. குருபதி உன்னிடம் இருப்பதால் நீ அதிபதியாக இருப்பாய்; நீதிபதி ஒன்றும் உன்னை அசைக்க முடியாது. நீ சொல்வது அவர் கேட்டுத்தான் ஆகவேண்டும். வேறுவழி இல்லை” என்று உற்சாகப் படுத்தினார்.
அவர் துணிந்து கூறும் மொழிகள் ஆறுதல் உடையனவாக இருந்தன. தன்னம்பிக்கையும் வாத நம்பிக்கையும் இல்லாத இந்த மடசாம்பிராணிகளுக்குச் சில உறுதிகள் தேவைப்படுகின்றன. என் நண்பர் அவற்றைத் துணிந்து கூறுகிறார்.
அவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. ஜோசியம் சொல்வார்; ஆனால் காசுகள் வாங்க மாட்டார்.
“ஏன் சார் இதை ஒரு தொழிலாக வைத்து நடத்தலாமே” என்றேன்.
“நம்மிடம் வருபவரிடம் காசு பெற்றால் நாம் சொல்வதை நம்பமாட்டார்கள். நம்மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். நாம் எதைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்; இதற்கு நான் காசு வாங்குவது இல்லை” என்றார்.
‘பாப்பா’ என்று கூப்பிட்டார்; அங்கே ஒரு கிழவி வந்தாள்; வியப்பாக இருந்தது.
“இது அவளுக்குச் சின்னவயதில் வைத்த பெயர்; அதை மாற்ற முடியவில்லை” என்றார். அவளை அந்த அறையைப் பெருக்கச் சொன்னார்.
“அன்று எழுதி வைத்ததை யாரும் மாற்றமுடியாது” என்று கிண்டலாகச் சொன்னேன்.
கல்வி கற்றவர்; நீதி பேசுகிறார். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்; திட்டங்களை அலசுபவர். அவருக்குத் தன் தொழில்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியப்பு அடைந்தேன்.
தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தலையோங்கியது. நீதி வெல்ல வேண்டும் என்ற நியாயம் அவருக்குத் தோன்றவில்லை. தன் வழக்குத் தவறானதாக இருந்தால் இடறிவிழவேண்டியதுதான். அதற்கு அவர் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்.
“உங்களை வந்து அவர்கள் சரண் அடைவது நன்றாக இல்லை” என்றேன்.
“அரண் வேறு இல்லை. அவர்கள் நம்பிக்கைகளுக்கு உரம் இடுகிறேன்; அவ்வளவுதான் அவர்கள் உற்சாகமாகத் தம் தொழிலில் ஈடுபடுவார்கள்; திறமை இருக்கலாம்; ஆற்றல் இருக்கலாம்; அறிவு இருக்கலாம்; அது உன்னிடம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தால்தான் அவை முழுவதும் வெளிப்படும்” என்றார்.
“உங்களால் அவர்களுக்கு நன்மை உண்டு என்கிறீர்களா?”
“மக்கள் அதிர்ச்சிகளைத் தாங்க மாட்டார்கள்; நாங்கள் அவர்கள் நஷ்டப்படும்போது அதைத் தாங்கும் மனநிலையைத் தருகிறோம்; கஷ்டப்படும்போது கருத்து அழிய வேண்டாம் என்று அருத்தமுள்ள செய்திகளைச் சொல்வோம். எதையும் துணிந்து செயல்படத் தயங்குவார்கள். அப்பொழுது ‘குருவைத்’ துணைக்கு அழைத்து அவர்கள் அஷ்டமத்துச் சனியனுக்கு விடுதலை தருவோம். அவர்கள் வெற்றி காண்பார்கள். அந்த முடிவுக்கு நாங்கள் தான் விடிவு கூறுகிறோம்” என்று விளக்கினார்.
“மேல் நாட்டில் கூட இப்பொழுது ஜோசியத்தை நம்புகிறார்கள்” என்றேன்.
“நாம் விஞ்ஞானத்தை அவர்களுக்குத் தர முடியாது; இந்த அஞ்ஞானத்தையாவது பரப்ப முடிகிறது. அதற்குப் பெருமைப்படுவோம்” என்றார்.
அவர் உண்மையை ஒப்புக்கொள்வது அவரை நேசிக்கச் செய்தது.
“காயசித்தி என்ன ஆயிற்று” என்று என் பேச்சைத் தொடர்ந்தேன். அவருக்கு உற்சாகம் கிளம்பி விட்டது. கையில் ‘திருமூலர்’ வைத்திருந்தார்.
“இவர் யார்?” என்று கேட்டேன்.
“இவரைத் தெரியாதா?”
ஏதோ சனாதிபதியை அறிமுகப்படுத்துவது போல என்னைக் கேட்டார்.
“பத்திரிகையில் வரவில்லையே” என்றேன். “அவர்கள் நல்லது எல்லாம் இருட்டடிப்புச் செய்து விடுவார்கள் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். திரை நடிகையைப் போட்டால்தான் விற்பனை ஏற்படும் என்று நினைக்கிறார்கள்” என்றார்.
“இவரைப் போட்டால் கதவு அடைப்புத்தான் செய்ய வேண்டும்” என்றேன்.
“சித்தர் திருமூலர் இவர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்” என்றார்.
“கின்னசில் இடம் பெற வேண்டியவர்” என்றேன்.
“உங்களுக்குக் கிண்டலாக இருக்கும்; மனிதன் நீடித்து வாழமுடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு அற்றுவிட்டது. மனிதன் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான்; வாழ முடியும்; ஆதி மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். விவிலியம் அப்படித்தான் சொல்கிறது” என்றார்.
“அவனுக்கு ஒரு துணைவி இருந்தாளாமே! ‘ஈவ்’ என்பது அவள் பெயராமே; Evil என்ற ஆங்கிலச் சொல்லே அவள் பெயரிலிருந்து தான் அமைந்ததாமே! அப்படி ஒருத்தி இருந்தது உண்மை தானே” என்று கேட்டேன்.
“நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று ஒரு நூல் தமிழில் இருக்கிறதே தெரியுமா” என்று கேட்டேன்.
“மூவாயிரம் ஆண்டுகள் நிச்சயமாக வாழ்ந்திருக்க முடியாது” என்றேன்.
“விவிலியத்தைக் கூட உங்களால் நம்ப முடியாதா?” என்று கேட்டார்.
“தெய்வத்தை எதிர்க்க முடியும்; சமய நூலை எதிர்க்க முடியாது” என்று ஒப்புக் கொண்டேன்.
“ஆதிமனிதன் ‘அரை’ உடையில் இருந்தானா? ‘கால்’ உடையில் இருந்தானா?” என்று கேட்டு வைத்தேன்.
“அவன் ஆதிமனிதனாக இருக்க முடியாது” என்கிறார்.
“அவன் அரை மனிதனாகத் தான் இருந்திருப்பான் என்றேன்” அவருக்கு விளங்கவில்லை.
“ஆடை இல்லாதவன் அரை மனிதன் தானே” என்றேன்; அவர் சிரித்தார்.
திடீர் என்று அடுத்த பிறவிக்குப் பாய்ந்தோம்.
சென்ற ‘பிறவியில்’ அவரிடம் டிரைவராக இருந்தவன் இந்தப் பிறவியில் வேறு ஓர் இடத்தில் வேலை செய்கிறான் என்று சொன்னார்.
“எங்கேப்பா! இந்தப் பக்கம்வர்ரதே இல்லை”
“உங்களை விட்டுப் போனதும் வேறு இடத்திற்குப் போய் விட்டேன். இப்பொழுது தண்ணீர் அடிக்கிறேன்” என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவன் நிதானம் இழக்கவில்லை.
“இந்தப் பழக்கம் எத்தனை நாளிலிருந்து” என்று கேட்டார்.
“நெய்வேலிக்கும் பண்ருட்டிக்கும் போய் வருகிறேன். லாரியில் தண்ணீர் கொண்டு வருகிறேன். சத்தம் ஆயிரம் கிடைக்கிறது. அதில் நித்தம் எனக்கு இருநூறு தருகிறார்கள்” என்றான்.
“அடபாவி இதை அப்பவே சொல்லித் தொலையக் கூடாதா” என்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அவர் ஏன் இவரிடமிருந்து வேலையை விட்டான் என்பது தெரிந்தது, ‘தண்ணீர் தண்ணீர்’ இந்தப் படம் அவனுக்கு அதிக வருவாய் தந்தது. மக்கள் கண்ணீர் பெருகும் காலத்தில் எல்லாம் வியாபாரிக்களுக்குக் கொண்டாட்டம் தான்.
“இப்பொழுது உங்களுக்கு டிரைவர் இல்லையா” என்று கேட்டேன்.
“Self driving தான்” என்றார்.
“அது ரொம்பவும் உத்தமம்” என்று தெரிந்தது போல் பதில் சொன்னேன்.
“சம்பளம் ஒன்பது நூறு கொடுத்தேன். ‘பேட்டா’ தினம் பத்து கேட்டு வாங்கிக் கொண்டான்; இப்பொழுது விலகி விட்டான்” என்றார்.
“இப்பொழுது போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது; ஓட்டுவது எளிதல்ல; முடியவில்லை. அதை விட பிரமுகர்கள் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள் அவர்கள் வருகிறார் என்றால் சாலைகள் தம்பித்துப் போகின்றன.”
“இவர்கள் இனிமேல் ஹெலிகாப்டரில் போனால்தான் மற்றவர்கள் நிம்மதியாகப் போகமுடியும்” என்றார்.
“இன்னும் பத்து வருஷம் போனால் எப்படி இருக்குமோ?”
“அது வரையும் சென்னை தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்றார்.
“அதனால்தான் நான் கார் வாங்கவில்லை” என்று பெருமையாகப் பேசிவைத்தேன்.
“அது இருந்தாலும் சிரமம்; இல்லாவிட்டாலும் சிரமம்” என்றார்.
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று அதற்கு நிகராக ஒரு பழமொழியைச் சொல்லிவைத்தேன்.
“உங்களுக்கு வசதி இருக்கிறது; அது அவசியம் தேவைப்படுகிறது” என்றேன்.
“தேவை இருக்கிறது; அதனால் அதை வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது” என்று திருத்தம் கூறினார்.
நாங்கள் பேச்சை எங்கே தொடங்கினோம் என்பது மறந்தே விட்டோம்.
“சென்ற பிறவியில் விட்டோம்; இப்பொழுது புதுப் பிறவிக்கு வந்திருக்கிறோம்” என்றேன்.
“டேய்! இரண்டு கப் காப்பி வாங்கி வா” என்றார்.
“சர்க்கரை போட்டதா போடாததா” என்று கேட்டான்.
நான் புதியவன்; என் இரத்தம் எந்தச் சுவை என்பது அவருக்குத் தெரியாது.
அவருக்கு உப்பு இருக்கிறது; சர்க்கரை இல்லை; எனக்கு எதுவுமே இல்லை.
“அவருக்குச் சர்க்கரை இல்லை; சீனி போட்டே வாங்கி வா” என்றார்.
“இந்தச் சர்க்கரை நோய் பொல்லாதது” என்றேன்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்; உங்களுக்கு இல்லையே” என்றார்.
“வந்து போய்விட்டது பத்து வருஷம் இன்சுலினில் தான் இருந்தேன். நானே போட்டுக்கொள்வேன். இப்பொழுது இல்லை” என்றேன்.
“அது எப்படி முடியும்; ஒரு முறை வந்தால் அது சாகும் வரை தொடரும் என்று கூறுகிறார்களே”
“நான் விதி விலக்கு” என்றேன்; அவர் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
“அது எப்படி முடிந்தது?”
“பென்ஷன் வாங்கினேன்; டென்ஷன் போய்விட்டது” என்றேன்.
“டென்ஷனால்தான் நோய் வருகிறது என்று சொல்கிறீர்களா”.
“அதிலே என்ன சந்தேகம்.”
“டென்ஷன் இல்லாமல் வாழ முடியுமா?”
“வாழறதிலே அர்த்தமே இருக்காது. அதுவும் தேவைதான்”.
அவனிடம் மீதி சில்லரை கேட்கவே இல்லை; அவனும் கொடுக்கவே இல்லை. பழக்கம் அது என்று தெரிந்தது.
“என் மகனுக்கு நல்ல இடத்திலே ஒரு பெண் பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.
“எந்த இடத்திலும் பார்க்க முடியும். உங்களுக்குப் பெண் எப்படி இருக்க வேண்டும். சொந்தம் பந்தம் சொத்து பத்து”.
“படித்தவளாக இருக்க வேண்டும்” என்றார்.
என் அனுபவம் ஒன்றை அவருக்கு எடுத்துக் கூறினேன்.
“ஒரு இன்ஜினியர் இருக்கிறார். அவருக்கு இப்பொழுது வழுக்கைத் தலை ஏற்பட்டு விட்டது; அப்பொழுது இல்லை. சுருசுருப்பான மனிதர், இப்பொழுது இரண்டு கோடிக்குச் சொத்துக்காரர்.
அப்படிக் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.
அவர் சொன்னார்: “பெண்ணுக்குப் படிப்பு இருக்கக் கூடாது. அதைவிட அழகு அதைத் தேடக் கூடாது. குடும்பத்துக்கு இவை தேவை இல்லை. அப்படித்தான் தேடினேன்; கிடைத்தது” என்றார்.
“நீங்கள் அதிஷ்டசாலி; படிக்காத பெண் கிடைப்பது அதிருஷ்டம்” என்று சொல்லி வைத்தேன்.
“எப்படி சார் சொல்றீங்க.” அவர் கேட்ட கேள்வி.
“இன்றைக்குக் காலம் அப்படி ஆகிவிட்டது; தேடித் தேடிப் பார்த்தா கூட எங்கேயும் கிடைக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தேன்.
“தேடினால் கிடைக்கும் சார்; குடும்பத்துக்குப் படித்த பெண்ணே கூடாது” என்று வற்புறுத்திக் கூறினார்.
அவர் மனைவி அப்படியே வாய்த்தாள் என்றார். “அதை இந்த நண்பரிடம் அறிவித்தேன்.”
“இதை ஏன் சொல்றீங்க?” என்று என் நண்பர் கேட்டார்.
“இதிலே என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்டார்.
“அவர் பின்னாலே பார்த்த போது ஒட்டு வீடு ஒன்று தேடிக் கொண்டார்; அதை அவரே ஒப்புக் கொண்டார்.
“அழகும் தேவைப்படுகிறது; அதை விலைக்கு வாங்கிக் கொண்டேன்” என்கிறார்.
“உங்களுக்கு என்ன `சார் கோடீசுவரன் ஒன்று என்ன இன்னும் இரண்டு மூன்று கூட.”
“நேரம் இல்லை என்ன செய்யறது; ஒன்றோடு நிறுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.” என்றேன்.
இதைக் கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தது அவருக்கு.
“சார் எனக்கு ஒரு சந்தேகம்; பெண் கள்ளா? காவியமா?” என்று கேட்டார்.
“ஆரம்பத்தில் கள்; வெறி கொள்ளச் செய்கிறாள். பிறகு காவியம் நமக்கு நெறிகளைச் சொல்லிக் கொண்டே இருப்பதால்” என்றேன்.
“ஏன் சார் பெண் லட்சணமா இருக்கிறாள் என்று சொல்கிறார்களே. எதை வைத்துச் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
“லட்சுமிகரமாக இருக்க வேண்டும்; அதற்கு அவள் லட்சாதிபதிமகளாக இருக்க வேண்டும். அவள் தாமரையில் குடியிருப்பாள்; தரையில் இறங்கமாட்டாள். அவள் நிறம் சிவப்பு; சரசுவதி வெள்ளை நிறம்; உமை கறுப்பு; இப்படித் தெய்வங்களையும் நிறம் கூறித் தரம் பிரித்து இருக்கிறார்கள்.
பிரமன் பார்ப்பனன்; வேதம் ஒதுபவன்; அவன் கலைமகளைத் தேடிக்கொண்டான்; பெருமாள் அவன் பெரும் ஆள்; பணத்தைத் தேடிக் கொண்டான்; சிவன்
எதுவுமே கிடைக்கவில்லை; கிடைத்தது கருப்பு; சிவமே என்று எடுத்துக்கொண்டான்” என்றேன்.
“இதில் யார் புத்திசாலி?” என்று கேட்டார்.
“இந்தக் கதைகளைப் படைத்தவர்கள் தான் புத்திசாலி” என்றேன்.
பிறைமதியை அவர் மகனுக்கு சிபாரிசு செய்யலாம் என்று நினைத்தேன்; அவளுக்குப் படிப்பு இருக்கிறது; தெய்வங்களிடம் யாரும் பண்பு இருக்கிறது என்று பேசுவது இல்லை; அது இவளிடத்தில் இருக்கிறது. திருமகள் என்று கூற முடியாது; ஆனால் வீட்டுக்கு அவள் நல்ல மருமகளாக இருப்பாள். அவளை சிபாரிசு செய்வது என்று முடிவு செய்தேன் ஆனால் அவசரப்படவில்லை.
– தொடரும்…
– படித்தவள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1993, அணியகம் பதிப்பகம், சென்னை.
![]() |
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர்…மேலும் படிக்க... |
