படித்தவள்
கதையாசிரியர்: ரா.சீனிவாசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,065
(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7
பிறையை அடிக்கடி பார்க்க முடிவது இல்லை; எப்பொழுதாவது தோன்றும்; மறையும். அவள் கையில் ஒரு கடிதம் வைத்திருந்தாள், முத்து முத்தாக எழுதி இருந்தது. கீழே ‘முத்து’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. அதைத் தவறிக் கீழே கத்தும் குயிலோசை பிறை கீழே போட்டுவிட்டாள்; அவள் குரல் கேட்பதற்கு இனிமையானது.
அதை எடுத்தேன்; கொடுத்தேன். “எடுக்கவோ உன் கையில் சேர்க்கவோ” என்றேன்.
அவள் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்.
“பாரதக் கதை நினைவுக்கு வருகிறது. பானுமதியுடன் கர்ணன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தான். திடீர் என்று தன் கணவன் குருடன் மகன் துரியோதனன் வருவதைப் பார்த்து ‘வெருட்டு’ என்று எழுந்தாள். அவள் ஆட்டத்துக்கு அஞ்சி எழுந்தாள் என்று தேரோட்டி மகன் கர்ணன் அவள் முந்தானை முடிச்சை அவிழ்த்தான். அப்பொழுது அவள் மேகலை பொத்தென்று விழுந்தது.
துரியோதனன் கொஞ்சம் கூடச் சந்தேகப்படவில்லை. சேலையைத் தொட்டதும் வேலை எறிய வேண்டிய காளை அவன். என்ன சொன்னான் தெரியுமா? கர்ணா! எடுக்கவோ கோக்கவோ என்றான். அந்தச் சொற்களை நீங்கள் சொல்வது எனக்குச் சிரிப்பை உண்டாக்கியது” என்றாள்.
“இலக்கியத் தாக்கம்” என்றேன்.
“இது என் பிரிய நண்பர் முத்துவின் கடிதம். என் சோர்வு நண்பர்” என்றாள்.
எனக்கு விளங்கவில்லை இது புதுநட்பு; படிக்கும் இளைஞர்கள் அடக்கம் மீறி அடிக்கடி சந்தித்து அரட்டை அடித்து அதனால் ‘பாவியத் தோழமை’ பெறுவது உண்டு; துள்ளி எழும் இளமை; அதன் உரிமை அது.
சோர்வு நண்பர்’ என்ற புதிய சொல் எனக்குப் புதிரைத் தோற்றுவித்தது.
“தொழில் தேடுபடலத்தில் எழில் பெற அமைவது இந்தப் புதிய நட்பு” என்றாள்.
“உமக்குத் தெரியாது ஒவ்வொரு இன்டர்வியூவிலும் உள்ளே எங்கள் முதலாளிகளைச் சந்திக்கிறோமோ இல்லையோ எம் தோழர்களைச் சந்திக்காமல், இருக்க மாட்டோம்.எங்கள் அவலங்களைப் பரிமாறிக் கொள்வோம்.
“எங்கெங்கே போட்டீர்கள்? எங்கெங்கே இருந்து அழைப்பு இதழ்கள் வந்தன?” என்று விசாரிக்காமல் இருக்க மாட்டோம்.
“சில கவி அரங்குகளில் பட்டி மன்றங்களில் வருகிற வர்களே வந்து அறுப்பதைப் பார்த்திருப்பீர்கள்; அதைப் போன்று வந்தவர்களையே பார்த்து அலுத்துவிடுவோம். சில முகங்கள் மறைமுகங்கள் ஆகிவிடுவதும் உண்டு; பெண்கள் தொடர்ந்து வரமாட்டார்கள். அவர்கள் கதை முடிந்து சுதையாகி விடுவது உண்டு. அவர்கள் விலை போய் இருப்பார்கள் என்று முடிவு செய்து கொள்வோம்.
அவர்களும் மறக்காமல் மண இதழை அனுப்புவார்கள்; அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிக் கொண்டிருப்போம். ஜனத்தொகை குறைந்தது என்று மகிழ்ச்சி அடைகிறோம்; புரியவில்லையா? இன்டெர் வியூவுக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை குறைந்தது என்று ஆறுதல் அடைவோம்.”
“முத்து உனக்குத் தெரியுமா?”
“அவர் எழுதின கடிதம் தான் இது.”
“உங்களுக்குள் அஞ்சல் வழிக் கல்வி உண்டா?” என்று கேட்டேன்.
“சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் அவசியம் குறித்து அடிக்கடி எழுதுவார். இளைஞர்களுக்கு இது தவிர வேறு வழி இல்லை” என்று அடிக்கடி கூறுவார்.
“பெண் இன்று ஆண்களைப் போல அவதிப்பட வேண்டி இருக்கிறது. முன் நாங்கள் வீட்டில் இருந்தோம்; அவர்கள் பொருள் ஈட்டி எங்களைப் போற்றி வந்தார்கள். ‘மனைமாட்சி’ என்று கூறி எங்களை இல்லத்து அரசி என்று புகழ்ந்தார்கள்; இன்று வினைமாட்சி தேடி இன்மைக்கு அரசி என்று அலைய வைக்கிறார்கள்.
சுதந்திரம் என்று பேசுவது எங்களுக்கு அல்ல; ஆண்களுக்கு நாங்கள் தருவது தான் சுதந்திரம். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக அவர்களை வற்புறுத்துவது இல்லை. “நீ தான் தெய்வம்” என்று பூசித்து அவர்கள் தரும் வரங்களுக்காகக் காத்துக் கிடந்தோம். அது பழைய காலம். “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள்” பெண் என்று கூறி எங்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். அந்த அடிமை நீங்கி விட்டது. எங்கள் தொழுகையில் அவர்களைச் சிக்க வைத்தோம்; அவர்கள் எங்கள் அழுகையில் அடிமைப் பட்டிருந்தனர்.
இன்று அவர்கள் ஏமாறுவது இல்லை; பொருள் ஈட்டுவதில் இருவர்க்கும் சம பங்கு உண்டு என்று வற்புறுத்தப் படுகிறது. எங்களையும் உழைக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். ‘படித்த பெண் வேண்டும்’ என்று புதிய கோஷம் எழுந்து விட்டது. எதற்காக? அவள் சம்பாதிப்பாள்; வீண் சுமையாக வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்க மாட்டாள்.
‘காதல் ஒருவனைக் கைப்பிடித்துக்
காரியம் யாவும் செய்து முடிப்போம்’
என்று பாடிய கவிஞர் அவர் கண்ட கனவு வேறு; நடைமுறை வேறு.
‘கல்விக்கு உரியவனைக் கட்டி வைப்போம்
காரியம் யாவும் சாதித்து முடிப்போம்’
என்று இளைஞர்கள் இன்று சிந்து பைரவி பாடத் தொடங்கி விட்டனர்.
நாங்கள் ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு படிக்கவில்லை; எங்களுக்குள்தான் படிப்புப் போட்டி.
எங்களை மணம் செய்து கொள்வதால் நன்மை உண்டு. அவனோடு ஒட்டுவோம்; உறவு முறிந்தால் வெட்டிவிடும் இயல்பு எங்களில் பலருக்கு ஏற்படுகிறது.
படித்தவள் முதலில் கூட்டுக் குடும்பத்தை உடைக்கிறாள் என்ற கெட்ட பெயர் எங்களுக்குப் படிந்து விட்டது. முன்பு எல்லாம் சிலைகளை அலங்கரிப்பது போல் எங்களை அலங்கரித்துக் கலையழகு கண்டனர்; இப்பொழுது நாங்கள் அழகு அங்காடிகளுக்குச் சென்று நிலை குலைந்து அலங்கோலமாக நின்று அவர்களுக்குப் புதுமை தர வேண்டி இருக்கிறது.
எங்கே நாங்கள் மணமுறிவு ஏற்படுத்தி விடுகிறோமோ என்று மன முறிவுள் அரிப்புக் காண்கின்றனர். நித்திய கண்டம் பூரண ஆயுள் எங்கள் ஒப்பந்தங்கள்.
எந்தக் கணவனாவது எங்களைத் துணிந்து எங்கள் மேல் கை வைக்கமுடியுமா! அடிப்பது இருக்கட்டும் ‘அடி’ என்று கூறவும் ஒரு அடி எடுத்து முன் வரமாட்டான். ‘அம்மா’ என்று அழைக்கும் புதுமை வந்து விட்டது. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் இருந்தது; பேதமற்ற சமுதாயம் உருவாகிவிட்டது.
கணவன் அவனுக்கு நாங்கள் உடைமையாக இருந்தோம்; ‘என் மனைவி’ என்று சொல்லி அவன் தன்னோடு இணைத்துக் கொண்டிருந்தான்; இன்று ‘எனக்கு மனைவி’ என்று தான் சொல்ல முடிகிறது.
இன்று பாசத்தை விட மதிப்பும் மரியாதையும் மலிந்து விட்டன. இது தேய்வா வளர்ச்சியா என்று கூற வில்லை” என்று தொடர்ந்து பேசினாள்.
“எனக்கு ஒரு சின்ன ஆசை உண்டு. என் கணவன் நன்றாகக் குடித்து விட்டு வரவேண்டும். அந்த மயக்கத்தோடு என்னைத் தேடி நயக்க வேண்டும். கோபம் வந்து என்னை அடித்துப் புரட்டவேண்டும். இந்த ஆசை படித்தவள் எனக்கு நிறைவேறுமா?”
“உன்னைத் தொடலாமா?” என்று அனுமதி கேட்கும் மதிநிறைந்த நன்னாள் ஆகிவிட்டது. இழுத்துப் போட்டு அடித்து நொறுக்கும் அழகினைப் படித்த பெண் இழந்து விட்டாள்.
‘உடைமை’ என்று கொள்ளும் அதில் உள்ள இறுக்கம் உரிமையில் இருப்பது இல்லை. எங்கள் உடைமைப் பார்வையிலும் அவர்கள் அவதிப்படமாட்டார்கள் என்பதை மறுக்கவில்லை. ‘சந்தேகம்’ என்பது எங்கள் மேல் வைத்த பாசத்தால் தான் ஏற்படுகிறது. அவர்கள் புனிதத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பிறன் மனை நோக்காத பேராண்மை தன் கணவனுக்கு இருக்கிறது என்றால் பெண் பூரித்துப் போகிறாள்.
இன்று அவர்கள் பழகும் பழக்கம் வேலிகள் இடப்படும் கேலிக் கூத்துகள் ஆகிவிட்டன. ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்று வேறுபட்டு இயங்குகின்றனர். என் குருதியில் பழைய உறுதிகள் நிலைத்து விட்டன. அவை சிதைந்து விடுமோ என்ற பதைப்பில் நான் அஞ்சுகின்றேன். புதுமை வேகத்தில் ஒரு பதுமையாக இருந்து என்னை அழித்துக் கொள்ள மாட்டேன். எதையும் ஆற அமரச் ற சிந்தித்தே என் வாழ்வை அமைத்துக் கொள்வேன்” என்று கூறினாள்.
“பண்ணை வீட்டாருக்கு உன்மேல் அபிப்பிராயம் உண்டாக்க முடியும்” என்று அறிவித்தேன்.
“அவசரப்பட வேண்டாம்” என்று என்னைத் தடுத்து நிறுத்தினாள்.
அத்தியாயம் – 8
அவள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள். அவள் விழிப்பு என் உறக்கத்தைக் கலைத்தது; படித்தவள் என்றால் அவளைப் பற்றித் தவறாகக் கருதியது உண்டு. ஆங்கிலம் பேசுவது நாகரிகம் என்று தமிழை மறக்கும் தாய்மையைக் கண்டது உண்டு.
நடிகை நங்கையர் நடிப்பது தமிழில் அவர்கள் தனிப் பட்ட உரையாடல்கள் ஆங்கிலம். எல்லாம் கான்வென்ட்டு படிப்புகள். இந்த மின்னல்களைக் காணும் எனக்கு இந்த மண்ணில் பூக்கும் மல்லிகைகளைக் காணும்போது மகிழ்வு ஏற்படுகிறது. மண்வாசனை மாறவில்லை.
அவசரப்படவேண்டாம் என்று கூறியது அவள் எனக்கு இட்ட அறிவுரையாகப்பட்டது, நான் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை உணர்கிறேன். வயது ஆகிவிட்டால் பிறர் விவகாரங்களில் அக்கரை காட்ட வேண்டியுள்ளது. அதை மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் வயது முதிர்வைத் தருகிறது. அதிர்வுகளை விலக்கி அணைப்பு களை ஏற்படுத்த முடிகிறது. மூத்தோர் சொல்வார்த்தை அமிழ்தம் என்று அறம் கற்றோர் சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு. எனினும் எதையும் சிந்தித்துக் கூறுவது தேவை என்று பட்டது. ‘எண்ணித் துணிக கருமம்’ என்று இந்த அவ்வைப் பாட்டி எனக்குத் திருக்குறள் போதித்தார்.
அத்தியாயம் – 9
மிகவும் கனமான விஷயமாகப் பிறை மதி எனக்குப் பட்டாள். லேசாக என் மனத்தை ஆற்றிக் கொள்ள விரும்பினேன்.
டி.வி. சானல்கள் மாற்றிப் புதிய நிகழ்ச்சிக்குத் தாவுவதைப் போன்றிருந்தது கதை தொடரும் வனிதையின் வருகை.
நூல்களைப் படிப்பதை விட மாந்தர் உரைகளைக் கேட்பதில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது.
அவள் கொண்டு வருவது அதே பண்டப் பொருள் தான்; சொல்லவருவது மண்டிய புதிய செய்திகள்.
பிள்ளைகளைப் பற்றிக் கேட்டேன். அதில் அவளைக் கிள்ளுவதற்கு எதுவும் இல்லை என்பதால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. தன் கணவனைப் பற்றிப் பேசுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. கடல் கடந்து காசு ஈட்டச் சென்ற கணவனின் நிலை பற்றிப் பேசினாள். அரபு நாட்டுக்குச் சென்ற வரலாற்றில் பணம் கொடுக்கும் மரபு அடங்கி இருந்ததைச் சுட்டிக் காட்டினாள்.
“பணத்துக்கு இனி குறைவு இருக்காது” என்று தட்டிக் கொடுத்தேன்.
“அதற்கு வாங்கிய கடனே ஐம்பதினாயிரம். அதை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம்” என்று பதில் தந்தாள்.
எனக்கு இந்த அனுபவம் இல்லை; புதுமையாக இருந்தது.
“அவரை அனுப்ப ஏஜெண்டுக்கு ஐம்பதினாயிரம் தர வேண்டி இருந்தது” என்று விளக்கினாள்.
இடைத் தரகர்கள் அடிக்கும் கொள்ளை நெஞ்சை உலுக்கிவிட்டது.
“அங்கே அதிக சம்பளத்துக்கு என்று போகிறார்கள். அதில் பாதி இவர்களுக்குக் கொட்டி அழ வேண்டி இருக்கிறது; அதற்கு வாங்குகிற கடன் அது போடுகிற வட்டி அது குட்டி போட்டுக்கொண்டே போகிறது. அதற்கப்புறம் அவர் திரும்பி வந்து விடுவார். கடைசியில் ஒன்றும் இருக்காது” என்று விளக்கினாள்.
“பின் ஏன் இங்கு இருந்து அவரை அனுப்ப வேண்டும்!” என்று கேட்டேன்.
“அவரை வைத்துச் சமாளிக்க முடியவில்லை. செலவுக்கு நான் சம்பாதிப்பதையும் பங்கிட்டுக் கொள்கிறார்.”
“இரண்டு பிள்ளைகள்; பெண் மூத்தவள். நன்றாகப் படிக்கிறாள். மற்றவன் பையன்; நன்றாக விளையாடுகிறான்” என்றாள்.
“அவனைப் படிக்கச் சொன்னால் டி.வி. வாங்கிக் கொடுத்தால்தான் படிப்பேன்” என்று அடம் பிடிக்கிறான். டி.வி. வாங்கிக் கொடுத்தால் எங்கே படிக்கப் போகிறான். அதைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பான்” என்றாள்.
“வீட்டிலாவது இருப்பான். இப்பொழுது அடுத்த வீடு: எதிர் வீடு என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறான். அதுவாவது நிற்கும்” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
“வண்ணமா சுண்ணமா?”
“கருப்பு வெள்ளைதான். வண்ணத்துக்கு எங்கே போவது? அவர் வரும்போது ஒன்று வாங்கி வரச் சொல்லலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் கடன் அடையட்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றாள்.
“பெண்?”
“அவள் ஒழுங்காகப் படிக்கிறாள்; அடுத்த வருஷம் ‘பிளஸ்டூ’ டியூசன் வைத்தால் நன்றாக இருக்கும். பர்த்தியாருக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. இந்த விஷயத்தில் வைத்தியரும் வாத்தியாரும் ஒன்றாகி விட்டாகள்.
“நம்ம வீட்டில் வந்து சொன்னால் நானூறு; அவர்கள் வீட்டில் படித்தால் வெறும் நூறு” என்று அவள் பேசியது புதிய புறநானூறாகப் பட்டது.
“எல்லாம் நூறாகவே இருக்கிறதே!” என்று சிரித்தோம்.
“எதற்காக அவர்களுக்கு இவ்வளவு தொகை?”
“அவர்கள் படித்துத்தானே சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தக் கஷ்டத்துக்காகத்தான்” என்றான். படித்தது சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். இப்பொழுது அவர்கள் படித்தால்தான் சொல்லித்தர முடிகிறது என்பது தெரிந்தது. பாடதிட்டங்கள் அப்படி என்று தெரிந்து கொண்டேன்.
“டி.யூஷன் வைக்காமல் படிக்க முடியாது” என்றாள்.
“அவர் ஒவ்வொரு முறையும் தவறாமல் எழுதுகிறார். பிள்ளைகளைப் படிக்கவை; எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நான் அனுப்புகிறேன் என்று எழுதிக் கொண்டே இருக்கிறார்” என்றாள்.
அதற்குள் என் மனைவி என் பேச்சில் வந்து கலந்து கொண்டாள்.
“காதில் மூக்கில் என்ன ஒன்றுமே காணோமே” என்று அவள் பார்வை செல்லும் இடம் அதைப் பற்றி விசாரித்தாள். சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“அவற்றை அடகு வைத்து விட்டேன். வட்டி முழுகிப் போகும்போது எப்படியாவது மீட்பேன்; மறுபடியும் அவற்றை அனுப்பிப் பள்ளிக் கூடம் படிக்க வைப்பேன். இப்பொழுது பாடம் படித்துக் கொண்டிருக்கிறது” என்று விளக்கம் தந்தாள். கவிதைபோல் கழிவிரக்கம் காட்டியது.
அவள் சொல்லியது சோகம் பாடும் சோஷலிசக் கவிஞர்களின் கவிதையை ஒத்திருந்தது.
அவள் எதுவரை படித்திருக்கிறாள் என்று கேட்க விரும்பினேன்.
“முடிந்த வரை படித்தேன்” என்றாள்.
“அது எதுவரை?”
“தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டே வந்தேன். எத்தனை முறை எழுதினாலும் அவர்கள் கருணை காட்டமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒன்று தேறினால் மற்றொன்ரு கால் வாங்கிக் கொள்கிறது. அந்தக் கொடுப்பனை நமக்கு இல்லை என்று இந்த விற்பனைக்கு வந்து சேர்ந்தேன்” என்றாள்.
– தொடரும்…
– படித்தவள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1993, அணியகம் பதிப்பகம், சென்னை.
![]() |
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர்…மேலும் படிக்க... |
