பச்சை மோதிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 439 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்காதர ஐயருக்கும் அவர் சம்பந்தி சத்தியவானுக்கும் மனஸ்தாபம் என்பது ஊர் அறிந்த விஷயம் ஆகி விட்டது. அதுபற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். கங்காதர ஐயரும் அவர் வீட்டாருந்தான் சண்டைக்கு மூல காரணம் என்பது சிலர் அபிப்பிராயம் அல்ல, சத்தியவானும் அவர் மனைவி சாவித்திரியுந்தான் என்று சிலர் சந்தேகமறத் தீர்மானித்தார்கள். எப்படியாயினும் கங்காதர ஐயர் வெகு நல்ல மனிதர். சத்தியவானோ? அவரை அப்பாவி என்றுதான் சொல்ல வேண்டும். பதற்றமாகக் கூட ஒரு வார்த்தையும் பேசத் தெரியாது அப்படி இருக்கும்பொழுது அவர்களுக்குள் மனஸ்தாபம் எழுவானேன்? அவர்களின் ஸஹதர்மிணிகளே அதற்குக் காரணம் என்றுதான் நாம் ஒருவாறு ஊகிக்கவேண்டும். ஆனால் அவர்களையும் பொல்லாதவர்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. சிநேகிதர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகவும் வேண்டியவர்களே. ஆனால் இது சம்பந்தி மனப்பான்மை; இந்த விஷயத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்கிற வித்தியாசம் ஏது? 

கல்யாணத்திலிருந்து சத்தியவானின் மனைவி சாவித்திரி, தாங்கள் சீர்வகைகளில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிகமாகவே செய்ததாகவும், அவர்கள் பதிலுக்குச் செய்த மரியாதைகள் அதற்குக் கொஞ்சமும் தகுந்தவை அல்ல என்றும் எண்ணினாள். அதைப் பற்றி அவள் தான் வாய் திறக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டாலும் அது கங்காதர ஐயர் மனைவி கௌரியின் காதுக்கு எவ்விதமோ எட்டித்தான் இருந்தது. மனத்திலுள்ளதைத் துளியும் வெளிக் காட்டாமல் இருக்கும் சக்தி சாவித்திரிக்கு இருந்திருக்க முடியுமா? கௌரியோ, பிள்ளையைப் பெற்றவள்; அவளுக்கு மரியாதைகள் எவ்வளவு செய்யினும் அதிகமாக ஒரு பொழுதும் ஆகிவிடாது. மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்புப் பெண் வீட்டாருடையது என்கிற கொள்கைகள் உள்ளவள். இவ்விதம் நினைப்பவள் சாவித்திரியின் குறைகளைத் தீர்க்க முன்வருவாளா? அதற்கு முற்றும் மாறாக, சாவித்திரி இம்மாதிரி எவ்விதம் நினைக்கலாம்?’ என்றுதான் கோபம் கொண்டாள். 

சாவித்திரியோ, ‘இக்காலத்தில் பெண் வீட்டார் என்கிற தாழ்வு உண்டோ’ என்னும் எண்ணங் கொண்டவள். இருவரும் இம்மாதிரி மனப்பான்மை கொண்டிருக்கும் பொழுது கல்யாணம் சிறு சிறு சச்சரவுகள் கூட இல்லாமல் நடைபெறுவதை எதிர்பார்க்க இடம் ஏது? 

இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கும் ‘ஹானர்ஸ்’ படிப்பைப் பூர்த்தி செய்யப் பட்டணம் போகவேண்டிய வன் மாப்பிள்ளை. அவன் புறப்பட இன்னும் சில தினங் களே இருந்தன. ‘அதற்குள் ஆறாம் மாதம் செய்து விட் டால் பின்பு தீபாவளிக்கு ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டு வந்தாலும் போதும். இவ்விதம் சாவித்திரி கணவருடன் கலந்து ஆலோசித்து ஆறாம் மாதத்திற்கு ஏற்பாடுகள் செய்தாள். 

மாப்பிள்ளைக்குப் பச்சைக் கல் மோதிரம் செய்து போடவேண்டுமென்று சாவித்திரி சொன்ன பொழுது சத்தியவானுக்கு அவ்வளவாகச் சம்மதமில்லை. “பச்சைக் கல் விலையும் அதிகம்; அதற்கு மதிப்பும் இல்லை ” என்று அவர் ஆக்ஷேபித்தார். ஆனால் சாவித்திரி நினைத்தால் விடுவாளா? “மாப்பிள்ளையின் சிவந்த விரலுக்கு நன்றாயிருக்கும்; தவிரக் கல்யாணத்தின் போது வைர மோதிரம் கொடுத்திருக்கிறது” என்று அவள் வாதித்தாள். இப்படி அவள் பிடிவாதத்தின்பேரில் ரூபாய் ஐந்நூறு கொடுத்துப் பச்சைக் கல் வாங்கி மோதிரமும் செய்து போட்டாகி விட்டது. சாவித்திரி எண்ணினது மிகவும் பொருத்தமே. மாப்பிள்ளையின் வெண்டைப் பிஞ்சு போன்ற நீண்ட சிவந்த விரலில் அது வெகு சோபிதமாகத்தான் இருந்தது. 

*ஆறாம் மாதமென்பது கல்யாணம் கழித்த மறுநாள்கூட நடத்தலாம். அதற்குச் சீர்வகைகள் தாம் முக்கியமே தவிர ஆறு மாதம் ஆக வேண்டும் என்பதல்ல. 

மோதிரத்தைக் கண்டபோது கௌரிக்கு, ‘உபயோகமுள்ளது ஏதாவது செய்யமாட்டார்களா? பச்சைக் கல் மோதிரம் ஒரு நகையா? அதுவும் ஒருவன் எத்தனை மோதிரங்கள் போட்டுக்கொள்வான், செட்டிப் பிள்ளைகள் போல!’ என்று பட்டது. உடனே, “இதென்ன சீர் என்று செய்திருக்கிறீர்கள்?” என்று பதற்றமாய்க் கேட் டாள். இந்தக் கேள்வியைச் சாவித்திரி எதிர்பார்க்கவே இல்லை. ‘இப்படி ஒன்றும் அறியாதவள் ஒருத்தி இருப்பாளோ’ என்று நினைத்தாள். ‘நமது கௌரவத்தையும், நம் பெண்ணின் அருமையையும் அறிந்திருக்கிறாளா, பச்சையின் உயர்வும் அழகும் தெரிந்து கொள்வதற்கு?’ என்று கருதினாள். “மிகவும் உயர்ந்தது; ராஜக்கிருகத்தில் இருக்கக் கூடியது. ரூபாய் ஐந்நூறல்லவோ கொடுத்து வாங்கி இருக்கிறது?” என்று பெருமை தொனிக்க எடுத்துச் சொன்னாள். அவள் பெருமையைக் கேட்கக் கௌரிக்குச் சகிக்கவில்லை. அதுவும் தனக்கு ஒன்றும் தெரியா தென்று மட்டம் தட்டுவதாக உணர்ந்தாள். “இவ்வளவு பணத்தை வீண் செய்வார்களா? உபயோகத்திற்கு ஏற்றதாய் எவ்வளவோ செய்யலாமே! என்ன இருந்தாலும் பச்சைக்கல் இரவில் வெறும் இடமாகத்தான் தோன்றும். சொல்லி யென்ன? ராஜாவின் ராசி அது. மதுரை மீனாக்ஷிபோல் மரகதச் சாயையாகப் பெண்டாட்டிதான் கிடைத்தாளென்றால், பச்சை மோதிரமும் கிடைத்து விட்டது” என்று ஒரே வார்த்தையில் சாவித்திரியை அடக்க எண்ணிக் கூறிவிட்டாள் கௌரி. 

‘பெண்ணைக் கறுப்பென்றா சொல்லிக் காண்பிக்கிறாள்!’ சாவித்திரிக்குத் தாங்கவே இல்லை. கோபமும் ஆத்திரமும் அவளை மீறி வந்தன. என்ன பேசுகிறோம் என்பதை மறந்தே போனாள். “அவளத்தனை அழகாக எல்லாப் பெண்களும் இருந்தால் போதும். சிவப்பு இருந்தால் போதுமா! முகத்தில் பவிஷ – வேண்டாமா?” என்று சம்பந்தி அம்மாளையே சுட்டிக்காட்டுவது போலச் சொன்னாள். கௌரி இச்சொல்லைப் பொறுப்பது எப்படி? வேண்டுமென்றே விருந்திற்கு அழைத்து அவமதித்ததாக நினைத்தாள். சாப்பிடாமலே வீடு சென்றாள். கங்காதர ஐயருக்கோ, அவர் மகன் ராஜகோபாலனுக்கோ விஷயங்கள் விளங்கவே இல்லை. சமாசாரம் தெரிந்த பிறகும் செய்யும் வகை இன்னதென்று புலப்படவில்லை. பாவம், சத்தியவான் யாதும் அறியாமல் தவித்தார். சாவித்திரியோ அழுது கொண்டிருப்பது தவிர விஷயத்தை விளங்க வைக்க முன் வரவில்லை. வந்திருந்த பந்துக்களே கடைசியில் இங்கிரண்டு அங்கிரண்டு பேசி ஆறாம் மாதத்தை முடித்து வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். சச்சரவு என்றால் பேசி விருத்தி செய்து வேடிக்கை பார்ப்பதில் அவர்களுக்கு அளவற்ற சந்தோஷமே. இருந்தாலும் இன்று காரியம் முடிந்து சாப்பாடும் நடந்தாக வேண்டுமே! கௌரி ஊர்ச் சிரிப்புக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று அன்று கோபம் தணிந்தவள் போல் காண்பித்துக் கொண்டாலும், பிறகு சம்பந்தி வீட்டை மிதிப்பதில்லை என்கிற தீர்மானம் கொண்டவள் போல் பேசினாள். “அவரும் அவர் பிள்ளையும் போய் உறவு கொண்டாடிக் கொள்ளட்டும்” என்று வெறுப்பாய்க் கூறினாள். 

மாப்பிள்ளை நாளைக்குத் தான் பட்டணம் போகப் போகிறார் என்று சாவித்திரி நினைத்திருந்தாள். அப்படித் தான் அன்றே சொன்னார்கள். சந்தியாகாலம்; பூஜை அறையில் விளக்கேற்றிவைக்கச் சாவித்திரி சென்றாள். மாடி வராந்தாவில் தெருவில் போவோரையும் வருவோ ரையும் வேடிக்கை பார்த்து நின்றிருந்த அவள் பெண் லக்ஷ்மி வேகமாக ஓடிவந்து சாவித்திரியிடம் தன் கணவன் ஊருக்குப் போகிறாற்போல் இருக்கிறது என்பதைத் தெரிவித்தாள். பெண்ணின் துடிதுடிப்பையும் அவள் சொல்லும் பொழுது அவளிடம் ததும்பும் வெட்கத்தையும் கண்ட சாவித்திரி, ‘அதற்குள் என்ன பிரேமை? தொடர்ந்து கவலையுங் கூட’ என்று நினைத்துப் புன்சிரிப் புக் கொண்டாள். “மாப்பிள்ளையாக இராது; நாளைக்குத் தானே நல்ல நாள் பார்த்திருக்கிறார்கள்?” என்றாள் சிரித்துக்கொண்டே. 

அதெப்படி இல்லாமல் இருக்கும்? லக்ஷ்மிதான் நேரில் கண்ணால் பார்த்தாளே. முதலில் அவளும் கவனிக்க வில்லை தான். ஆனால் வண்டி வீட்டைத் தாண்டுகிற சமயம் அவள் தற்செயலாகப் பார்த்து விட்டாள். ஒரு நிமிஷம் அவளுக்கு வெட்கத்தால் ஒன்றும் தோன்றவில்லை; பிறகுதான் அவன் ஊருக்குப் போகிறானென்பது மனத்தில் பட்டுத் தாயிடம் ஓடி வந்தாள். “இல்லை, அம்மா; பெட்டி படுக்கைகள் இருப்பதைப் பார்த்தேன்” என்று வற்புறுத்திச் சொன்னாள். சாவித்திரிக்கு யோசனை வந்து விட்டது. ‘ஒருகால் இருக்குமோ? நமக்கு ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே. சொல்ல வேண்டுமென்பது என்ன? சம்பந்தி அம்மாள் கோபத்தைக் காண்பிக்கும் விதம் இதுவாயிருந்தால்!’ சாவித்திரிக்கு வயிறு பகீ சென்றது. “ஐயோ! கௌரி வெகு கொடியவள் போல் இருக்கிறதே.தெரியாமல் பெண்ணைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டேனே” என்று அங்கலாய்க்கத் தொடங்கினாள். பிறகு அவளுக்கு ஒரு காரியத்திலும் மனம் செல்லவே இல்லை. கணவர் வெளியிலிருந்து வந்ததும் முதற் காரியமாக விசாரித்துவரச் செய்தாள். அவரும் அவ்விதமே செய்து, ‘மாப்பிள்ளை பட்டணம் போனது வாஸ்தவந்தான்; திடீரென்று நிச்சயம் செய்து புறப்பட்டதால் வந்து சொல்லிக்கொள்ள முடியவில்லை’ என்று சம்பந்தி சொன்னதாகக் கூறினார். ஆனால் கௌரி வேண்டுமென்று செய்ததுதான் இது என்று சாவித்திரிக்குத் தெரியும். “கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுப்பது போல் செய்து விட்டீர்களே!” என்று கணவரிடம் சொல்லி அழுதாள். “பச்சைக்கல் மோதிரந்தான் இவ்வளவிற்கும் காரணம். அது வேண்டாமென்று அப்பொழுதே சொன்னேனே என்று அவர் சொல்லிக் காண்பிப்பாரா! பச்சைப் புண்ணில் கோல் இட்டது போலல்லவா இருக்கும்? ‘பிள்ளையின் மனத்தையும் கலைத்து விடுவாளோ என்னவோ? கௌரி இப்படிப்பட்ட ராக்ஷசியா? எனக்குத் தெரியாமற் போயிற்றே. தாய் தான் சொன்னாலும் இந்தக் காலத்தில் ஒரு பிள்ளை தட்டாமல் கேட்பானோ? எல்லாம் நம் அதிருஷ்டம்’ என்று சாவித்திரி ஏங்கியே போனாள். 

ராஜகோபாலன், ஆறாம் மாதத்தன்று தாய்க்கும் மாமியாருக்கும் நடந்த வாக்குவாதத்தில், கண்கலங்கி நின்றிருந்த மனைவியை அன்பு வார்த்தைகளால் தேற்றத் துடித்துக் கொண்டிருந்ததையும், எவ்வளவோ சாமர்த்தியமாக முயன்றும் முடியாமல் தான் அவ்விதம் மனைவியைப் பார்க்காமல் பட்டணம் சென்றான் என்பதையும் சாவித்திரி அறிந்திருந்தால் அவள் மனம் எவ்வளவோ சமாதானம் அடைந்திருக்கும். ஆனால் அதை அவள் அறிய வகை ஏது? 

சாவித்திரியும் சத்தியவானும் சம்பந்திகளைச் சமாதானம் செய்ய முயன்றதெல்லாம் நெருப்பை அணைக்கக் காற்று உதவுகிற ரீதியில்தான் பலன் அளித்தது. சத்தியவானுக்குச் சாமர்த்தியம் போதாது. சாவித்திரியோ பொறுமை சிறிதும் அற்றவள். அப்படி இருக்கப் புயற் காற்று வேகத்தில் மனஸ்தாபம் விருத்தி அடைவதில் ஆச்சரியம் ஏது? 

தொடர்ந்து வந்த பண்டிகைகள் ஒன்றுக்கும் நாட்டுப் பெண்ணைக் கௌரி வீட்டிற்கு அழைக்கவே இல்லை. கேட்கிறவர்களுக்கு ஏதேதோ காரணம் கூறிவந்தாள். வரலக்ஷ்மி விரதத்திற்குக்கூட நாட்டுப் பெண்ணைச் சுபமாய் அழைத்துப் பூஜை எடுக்காதது சாவித்திரிக்கு மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் கொடுத்தது. நம் ஹிந்து ஜாதியில் அது வெகு முக்கியமான பூஜையல்லவா? சாவித்திரி வலுவிலே தாழ்ந்து சென்று கேட்டதற்குக் கூட, “லக்ஷ்மி பெரியவளான பிறகு தானே எடுத்துக் கொள்ளட்டும்” என்று விட்டேற்றியாகப் பதில் சொன்னாள் கௌரி. கோபத்தில் அவ்விதம் பேசுகிறாளென்பது சாவித்திரிக்கு நன்கு தெரிந்தது. “உடனோ டொத்த குழந்தைகளுக்குக் கல்யாணங் கூடச் செய்யாமல் ஆனந்தமாகப் பள்ளிக்கூடம் போக விட்டிருக்கிறார்கள். நாம் கல்யாணத்தைச் செய்து குழந்தைக்குக் கவலையை வருவித்து வைத்திருக்கிறோமே. ‘மக்களுக்குச் சத்துரு மாதா பிதா’ என்னும் வசனம் நமக்குத்தான் பொருந்தும்” என்று சாவித்திரி வருந்தினாள். 

தீபாவளி வருகிறதே என்கிற விசாரம் அவளுக்கு ஒரு மாதம் முந்தியே வந்துவிட்டது. அதற்குக் கௌரி என்ன கூத்துக் கட்டி அடிப்பாளோ? பிள்ளையை வரவழைக்காமலே இருந்தாலும் இருப்பாள். அவர்கள் வரும்படி சொன்னால்தானே அவன் வர முடியும்? ஏற்கனவே ஊர் வம்பு தாங்கவில்லை. தீபாவளிக்கு மாப்பிள்ளை பட்டணத்தில் இருந்துகொண்டே வராவிட்டால் பெண் ணைத் தள்ளிவைத்து விட்டதாகக்கூடச் சொல்லத் தொடங்குவார்கள். மானம் அவமானம் என்பது அவர் களுக்கு இல்லையா என்றால் அவர்கள் எல்லாவற்றையும் துடைத்து விட்டிருக்கிறார்களே. சம்பந்திப் பிராமணரும் மனைவி மனம்போல் நடக்கிறாரே தவிரப் பெரிய மனுஷத் தனமே காணோம் என்று பல பல நினைத்துத் தவித் தாள் சாவித்திரி. “இப்படி நாம் பொறுத்துப் போவதில் என்ன பிரயோஜனம்? நீங்கள் தாம் சம்பந்திப் பிராமண ரிடம் சென்று எல்லாவற்றையும் எடுத்துக் கூறினால் என்ன ? அவளிடந்தான் வாய் திறக்க முடியவில்லை. தப்பாக எடுத்துக்கொள்கிறாள். அவரும் அப்படியே இருப்பாரா? நாம் வருந்துவதும் அவர்களுக்குக் கொஞ் சம் தெரியட்டுமே. அப்போதாவது மனத்தில் படுமோ என்னவோ?” என்று சாவித்திரி கணவரிடம் கூறினாள். சத்தியவானுக்கும் அது சரியென்றே பட்டது. தம் ஆசை களையும், வருத்தங்களையும் எடுத்து உரைப்பதில் தவறு ஏற்படக்கூடுமென்று அவருக்குச் சிறிதும் தோன்ற வில்லை. கங்காதர ஐயரிடம் சென்று தம் மனைவி மிகவும் வருத்தப்படுகிறாள் என்பதை எடுத்துச் சொன்னார். தீபா வளியாவது மனஸ்தாபம் இல்லாமல் சந்தோஷமாய் நடக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண் டார். தாம் வெகு உருக்கமாகவும் சாமர்த்தியமாகவும் பேசியதாகவே எண்ணிக்கொண்டு அவர் வீடு வந்து சேர்ந்தார். 

கங்காதர ஐயர் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பொழுது அவ்வளவு தப்பாக நினைக்கவில்லை. ஆனால் அதைக் கௌரி கேட்டாளோ இல்லையோ, அவளுக்குக் கோபம் தாங்கவே இல்லை. “நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்! ‘குதிரை தூக்கிப் போட்டதுமல்லாமல் குழியும் பறித்ததாம்’ என்பதற்கு ஏற்பச் சொன்னதும் சொல்லிவிட்டு என்பேரில் திரும்புகிறாளே. நல்ல கெட்டிக் காரப் பிராம்மணர். பெண்டாட்டிக்காகப் பரிந்து பேசியிருக்கிறார். நீங்களும் கேட்டு வந்தீர்கள். நம் மனைவியின் மேல் தூஷணை என்பதுகூட அறியாமல் இருந்திருக்கிறீர் களே ? புருஷனும் மனைவியும் லேசில்லை !” என்று கோப மாய் அடுக்கினாள். இதுவரையிலும் தீபாவளிக்குப் பிள்ளை வரவேண்டியதுதான் என்று நினைத்திருந்தவள், இப் பொழுது தீபாவளிக்கு ராஜா எதற்காக வருவது என்று நினைத்தாள். அப்படியே அவன் மாமனார் மாமியார் இரு வருடைய பொல்லாத்தனங்களையும் எடுத்துக் கூறித் தீபாவளிக்கு வருவது சரியல்ல என்று பிள்ளைக்குக் கடித மும் எழுதினாள். 

சாவித்திரிக்கும் இவ்விஷயம் எட்டிற்று. சாவித்திரி அறியாமல் இருக்கவேண்டுமென்பது கௌரியின் நோக் கம் அல்லவே! அவள் முன்னாடியே அறிந்து கஷ்டப்படா விட்டால் கௌரி கோபித்துக்கொள்வதில்தான் பிர யோஜனம் என்ன? சாவித்திரி புழுவாகத் துடித்தாள். ‘ சமரசம் செய்யப் போய், இவ்விதம் ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட’ சங்கதியாக முடிந்துவிட்டதே ! இனி என்னதான் செய்வது!’ ஐயோ ஈசுவரா! இக்குழந்தை தலையிலும் எங்கள் தலையிலும் நீ என்னதான் எழுதி இருக்கிறாயோ தெரியவில்லையே!’ என்று ஏங்கிப் புலம்பினாள். ‘இனித் தெய்வந்தான் கதி. மனிதர்களால் ஆகும் காரியமல்ல இது’ என்று அவளுக்குப் பட்டுவிட் டது. ஸதா பகவானை வேண்டத் தொடங்கினாள். ஜப தபங்களும் கோவிலுமாகவே இருந்தாள். கணவரிடம் சொல்லிப் புலம்பக்கூட அவளால் முடியவில்லை. அவர் சொல்லும் சமாதானங்கள் அவளுக்குத் தெம்பை ஊட்டவில்லை. மனக் கஷ்டப்பட்டுத் துன்புறுவது தவிர வேறு வழியே இல்லாமற் போய்விட்டது. இருதயம் ஓடிந்து கொண்டிருக்கும் பொழுது பேச்சு எங்கிருந்து வரும்? அவள் மௌனமான துக்கம் குழந்தை லக்ஷ்மி யையும் பாதிக்கத்தான் செய்தது. அவள் சிரிப்பற்று உலாவி வந்தாள். அதைக் காணச் சாவித்திரி இன்னும் துக்கத்தால் க்ஷணித்தே போனாள். தங்கள் கஷ்டத்தைக் காட்டிலும் மக்கள் கஷ்டம் தாங்க முடியாதல்லவா? 

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. கங்கா தர ஐயரிடமிருந்து ஆள் ஒருவன் சம்பந்திகளை உடனே வரும்படி சொன்னதாகச் சொல்லிச் சென்றான். என்ன விசேஷம்? சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் ஒன்றுமே தோன்றவில்லை. வந்த ஆளை விசாரித்ததற்கு அவன் ஏதோ பட்டணத்திலிருந்து கடிதம் வந்ததாக மட்டும் சொன்னான். சாவித்திரியும் சத்தியவானும் பறந்து ஓடி வந்தபொழுது கங்காதர ஐயர் சத்தியவானை வரவேற்றுக் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். சாவித்திரியும் கௌரி யின் வரவேற்பில் ஏதோ மாறுதல் இருப்பதை உணர்ந் தாள். சத்தியவான் படித்த கடிதம் பின்வருமாறு: 

“க்ஷேமம், 

கங்காதர ஐயர் அவர்களுக்கு அநேக கோடி நமஸ் காரம் செய்து ராஜாவின் சிநேகிதன் சந்திரன் எழுதிக் கொண்டதாவது; க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதப் பிரார்த் திக்கின்றேன். நேற்று உங்கள் மகனுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கள் ஏதோ ஜன்மாந்தரத்தில் செய்த தவத் னால்தான் விலகிற்று என்னலாம். நானும் அவனும் இரவு எட்டு மணிக்குக் கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண் டிருந்தோம். விளக்கணைப்புக் காலமாகை யால் ஜாக்கிரதையாகப் போய்க்கொண் டிருந்தும் எதிர்ச் சாரிக்கு மாறும் சமயம் கார் ஒன்று வந்த வேகத்தில் எங் களை யமனுலகுதான் அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் தெய்வா தீனமாக, உங்கள் மகன் விரலில் அணிந்திருந்த பச்சை மோதிரமே எங்களைக் காப்பாற்றியது என்பதைப் பிறகு காரின் டிரைவர் சொல்லத் தெரிந்து ஆச்சரியம் கொண்டோம். 

இருட்டில் அவனுக்கு ஆட்கள் தெரியாமல் இருக்கும் பொழுது காரின் மங்கல் வெளிச்சம் பட்டு ராஜாவின் விர லில் அணிந்திருந்த பச்சைக்கல் திடீரென ஒளி வீசினதைக் கண்டிருக்கிறான். உடனே ‘பிரேக்’ போட்டும் வேகமாய் வந்த காரணத்தினால் எங்களுக்கு வெகு சமீபம் வந்துதான் நின்றது.அந்த அதிர்ச்சியில் ராஜா விழுந்துவிட்டான். ஆனால் காயம் ஒன்றும் இல்லை. கவலைப்படவேண்டாம். காரின் சொந்தக்காரரே எங்களை ஹாஸ்டலில் கொண்டு. விட்டுச் சென்றார். அவர் ஒரு ரத்தின வியாபாரியாம். ரத்தினப் பரீக்ஷைகள் நன்கு தெரிந்தவராம். ராஜாவின் விரல் மோதிரத்தைக் கண்டு நல்ல அதிருஷ்டப்பச்சை என்று கொண்டாடினார். ‘அது உள்ள இடத்தில் அஷ்டை சுவரியமும் பொங்குமாம். இன்று அது உயிர் போவதி னின்று உங்களையும், உங்களைக் கொல்லும் மஹாபாபத்தி னின்று என்னையும் காப்பா ற்றிவிட்டது’ என்று புகழ்ந் தார். எதுவானாலும் ராஜா சொல்வதுபோல் எங்கள் உயிரை நேற்று அதுதான் காப்பாற்றி இருக்கிறது. என்னவோ எல்லாம் ஈசன் செயல். 

அவனுக்காகத்தான் இதை உங்களுக்கு எழுது கிறேன். அவனுக்கு இன்னும் சிறிது அதிர்ச்சி இருக்கத் தான் இருக்கிறது. எல்லாம் நாளைத் தினம் சரியாகிவிடு மென்று டாக்டரைக் கேட்டதில் சொன்னார். ஒன்றும் கவலை வேண்டாம். வேணும் அநேக கோடி நமஸ்காரம். 

இப்படிக்கு,
சந்திரன்.” 

இந்தக் கடிதம் எல்லாவற்றையும் மாற்றிவிட்ட தென்று நாம் சொல்லவும் வேண்டுமோ ? கௌரியின் கோபமெல்லாம் எங்கேயோ பறந்து போய்விட்டது. அச்சானியம்போல் என்ன காரியம் செய்ய இருந்தேன் !’ என்று தவித்தாள். “தலைத் தீபாவளி கூடாது என்று நினைப்பேனா? பாவி, எனக்குப் புத்தி எங்கோதான் சென் றிருக்கவேண்டும்.சாவித்திரிக்காகவா? என் பிள்ளைக்காக வன்றோ?” என்று மேலும் மேலும் நியாயங்கள் தோன் றத் தொடங்கின. ‘யார் செய்த புண்ணியமோ, குழந்தை பிழைத்தான் ; வீண் மனஸ்தாபங்கள் வேண்டாம். காரி யத்தை நன்றாய் நடத்தவேண்டும்’ என்று தீர்மானம் கொண்டாள். அன்றே கணவரைப் புறப்பட்டுச் சென்று நேரில் மகனைப் பார்த்து அழைத்துவரச் சொன்னாள். அவன் வரும் வரையிலும் அவனைப் பார்க்காமல் எப்படி இருப்போமென்று இருந்தது அவளுக்கு. 

சாவித்திரியோ எத்தனை தாழ்ந்து போகவும் இப் பொழுது தயார். குருடன் வேண்டுவது கண் தானே? இப்பொழுது அவள் வேண்டுவதும் மாப்பிள்ளையின் க்ஷமந்தானே? 

பிறகு தீபாவளி விமரிசையைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. சாவித்திரி செய்யும் எந்தச் சீரையும் கௌரி குறை கூறுவதாக இல்லை. அவள் எந்தப் பச்சைக் கல் மோதிரத்தைத் தூஷித்தாளோ அதையே பூஜையில் வைத்துப் பூஜிக்கத் தயாராக இருக்கும்பொழுது ஏன் குறை கூறுவாள் ? 

சாவித்திரியின் ஆனந்தத்திற்கு இணையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தான் வேண்டின தெய் வங்களே மாப்பிள்ளையை ஆபத்திலிருந்து காப்பாற்றித் தீபாவளிக்கும் கொண்டுவந்து சேர்த்து யாவும் சுபமாக முடியச் செய்திருக்கின்றன என்று சந்தோஷித்தாள். 

ராஜாவும் அவன் சிநேகிதன் சந்திரனுமே அத்தெய் வங்களாக இருக்கலாம் என்பதை யார் கண்டது ! தீபா வளிக்கு வரவேண்டாமென்று கௌரியிடமிருந்து கடிதம் வந்தது முதல், அந்தச் சாக்கில் மனைவியைப் பார்க்கத் தான் கொண்டிருந்த ஆவல் வீணாகிவிட்டதே என்று ராஜா வருந்தினதென்னவோ உண்மையே. அதைத் தீர்க்கும் உபாயத்தை அவனும் அவன் சிநேகிதன் சந்திரனுமாக மூளை குழம்ப யோசித்ததும் அதைவிட உண்மையே. அதன் விளைவுதான் இவ்வளவும் என்று தீர்மானமாகச் சொல்ல நாம் யார்? 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *