பசி




அகில உலகத்திலிருந்து வந்திருந்த விஞ்ஞானிகளின் கூட்டம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் ஒரு அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டிருந்த விஞ்ஞானி ராமபத்ரன் படபடப்புடன் காத்துக் கொண்டிருந்தார். அடுத்தது அவரது ஆராய்ச்சியின் விளைவுகளை பற்றி கட்டுரை வாசிக்கப்போகிறார். அந்த கட்டுரை கட்டிப்பாய் அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கபோகும் ஒரு அற்புத படைப்பு.

“Our great scientist Mr.Ramapatharan will come on the stage” அனைவரது கைதட்டல்களுடன் ஆரவாரங்களுடன் ராமபத்ரன் மேடையேறினார்.
இன்றைய உலகத்தில் மனிதர்களுக்கு இடையே இருக்கும் தலையாய பிரச்சினை பசி. இதுதான் அவனை எல்லாவித குற்ற செய்லகளையும் செய்ய தூண்டுகிறது. இது இயற்கையின் ஒரு செய்லதான் என்றாலும் இந்த பசியின் காரணமாக ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும், பசியினால் ஏற்படும் இறப்பு, வன்முறைகள், இவைகள் நம்முடைய உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த இயற்கை அளிக்கும் ஒரு கொடுமையான செயலான “பசியை நான் வென்றிருக்கிறேன்”இந்த வார்த்தையை சொன்னவுடன் அனைவரும் கையை தட்டி ஆரவாரம் செய்தார்கள். எப்படி? எப்படி? ஆரவாரக்குரல். நான் கண்டு பிடித்திருக்கும் பொருள் இதுதான் சொல்லிவிட்டு “ஒரு திரவ வடிவிலான” பொருளை காட்டுகிறார். இதை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செலுத்தி விட்டால் அது பசியை தூண்டும் ஈஸ்ட்ரொஜனை கட்டுப்படுத்தி பசி என்னும் உணர்வையே வராமல் செய்து விடும். இதனால் மனிதன் இத்தகைய உணர்வுகளுக்கு அடிமைப்பட மாட்டான். அவனது காரியங்கள் இந்த பசியினால் கெட்டு போகாது. இதை எப்படி உருவாக்கியுள்ளேன் என்பதை விளக்குகிறேன். அவருக்கு பின் காட்டப்படும் திரையில் அதை உருவாக்குவதையும், அதை எல்லாவித விலங்குகளுக்கு போட்டு அவைகள் பசியென்று ஒன்று ஏற்படாமல் வாழ்வதையும் காட்டியது. நரியும் ஆடும் ஒன்றாய் சுற்றுவதும், சிங்கம், மான் இவைகள் நட்புடன் திரிவதையும் காட்டியது.
நான் அடுத்து இதை மனித வர்க்கத்திற்கு ஊசி மூலம் செலுத்தி இதை சோதித்து பார்க்க விரும்புகிறேன். இந்த மனறம் அதற்கான அனுமதியை எனக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.. அனைவரும் கைதட்டி பாராட்ட மிடுக்குடன் கீழிறங்கி வருகிறார்.
நிருபர்கள் அவரை சுற்றி கேள்வி மேல் கேட்க, அவர் பொறுமையாக பதில் சொல்கிறார். மனிதர்களிடம் எப்பொழுது சோதனை செய்து பார்க்க போகிறீர்கள்? ஒரு நிருபர்களின் கேள்விக்கு நீங்கள் ரெடி என்று சொல்லுங்கள், நான் இப்பொழுதே தயார் இவர் பதில் சொல்லவும், அந்த நிருபர் அப்படியே பின் வாங்கி சென்றார்.
“நல்லது கூடிய விரைவில் எனது தாயகத்தில் மனிதர்களிடம் சோதித்து உலகத்திற்கு இந்த விளைவை விரைவில் அறிவிக்கிறேன்” விடை பெற்றார்.
“அம்மா தாயே பசிக்குது” “பசிக்குது தாயே” “ஐயா பசிக்குது”. அவனுக்கு நாற்பது பக்கம் இருக்கலாம், சென்னை அண்ணா நகர் பாதையில் போவோர் வருவோரிடம் எல்லாம் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். “போய்யா ஆளை பார்த்தா அடிச்சு போடற மாதிரி இருக்கறே, எங்கயாவது வேலை செஞ்சு பிழைக்கிறதுதானே’ ஒரு சிலரின் வசவுகளை வாங்கினாலும் அலட்சியப்படுத்தி “இந்தா உன்னால போட முடிஞ்சுதுன்னா போடு, இல்லை உன் வேலையை பார்த்துட்டு போ” முகத்திலடித்தாற் போல் பதில் சொன்னான்.
அவனை அந்த பாதையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரிலிருந்து விஞ்ஞானி ராமபத்ரன் கவனித்துக்கொண்டிருந்தார். சற்று பரபரப்பு குறைந்து போவோர் வருவோர் நடமாட்டம் குறைய காரை அவன் பக்கத்தில் கொண்டு சென்று நிறுத்தினார்.
அவன் காரை பார்த்த்தும் பல்லை இளித்துக்கொண்டு அருகில் வந்தான். “இந்தா நூறு ரூபாயை கையில் எடுத்து காட்டினார்.” அவனது முகத்தில் வியப்பு “நான் காண்பது கனவா” அப்ப்டியே நின்றவ்னை இங்க பார் இது மாதிரி நிறைய பணம் தர்றேன், என் கூட வந்தா தருவேன்.
சற்று தயங்கினான், ஐயே வேணாம், நான் எதுக்கு உன் கூட வரணும், பின் வாங்கினான். இங்க பார் அங்க உனக்கு எந்த வேலையும் இல்லை, என் கூட இருக்கணும் அவ்வளவுதான், இன்னும் எவ்வளவு வேணும்னாலும் தருவேன், நான் சொல்றதை மட்டும் செஞ்சா போதும். அவரின் வார்த்தை அவனை தயங்க செய்த்து. அரை மணிநேரம் அவனிடம் பேசியிருப்பார். அந்த கார் கதவை திறக்க சட்டென உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்த காரின் குளுமை, அதன் ஸ்பரிசம் இதனை நம்பாமல் அப்படியே சிலையாய் உட்கார்ந்திருந்தான்.
இரண்டு நாட்கள் அவன் என்னென்ன நினைக்கிறானோ அனைத்தும் அவனுக்கு செய்து தரபட்டன. அவன் விரும்பிய அனைத்து உணவு வகைகளையும் அவனுக்கு உண்ணுவதற்கு அளிக்கப்பட்ட்து.. மூன்றாவது நாள் ராமபத்ரன் அவனை எதிரில் உட்கார வைத்து பேச ஆரம்பித்தார். “பசியை பற்றி” அவன் ஆர்வமாய் கேட்டான். கடைசியாக அவனை சோதித்து பார்க்க விரும்புவதாக சொன்னார். தயங்கினான். “கவலைப்படாதே”இது ஒரு சோதனைதான். உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் வராது, உனக்கு பசியே இல்லை என்றால் உன்னால் இந்த உலகத்தில் என்னேன்னவெல்லாமோ செய்ய முடியும், அத்தனைக்கும் நான் உதவுகிறேன். நீயும் இந்த உலகத்தில் பெரும் புகழை அடைவாய்.”உலகின் முதல் பசியில்லா மனிதன்” இந்த பட்டம் உனக்கு வந்து சேரும். அதுக்கு பின்னால் உலகம் முழுக்க சுற்றலாம், பெரிய பெரிய மாளிகை கட்டி வசிக்கலாம். என்ன சொல்லுகிறாய். அவன் கண்களில் ஏற்பட்ட யோசனையை பார்த்தவர், அவசரப்படாதே, இரண்டு நாட்கள் எடுத்துக்கொள், வேண்டியதை சாப்பிடு, அனுபவி, அதற்கு பிறகு உன்னுடைய முடிவை சொல். அவனை யோசிக்க விட்டு விட்டு கிளம்பினார்.
இரண்டு நாட்கள் அவனை கண்கானிக்க சொன்னார். முதல் இரண்டு நாட்கள் அவன் ஆர்வமாய் அனுபவித்த எதையும் இந்த இரண்டு நாட்கள் தொடவேயில்லை. யோசனையாகவே இருந்தான். இரண்டு நாட்கள் முடிந்து மூன்றாம் நாள் அவர் எதிரில் சென்று நின்றான்.
எனக்கு இதில் விருப்பமில்லை சார், பட்டவர்த்தனமாய் சொன்னவனை கூர்ந்து பார்த்தவர், நன்றாக யோசித்து பார்த்து சொல்கிறாயா? உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்க, வேற என்ன என்ன வேணும்னாலும் கேளு, நீ என்ன எதிர்பார்க்கிறே? அவரின் கேள்வி அவனை வாயை திறக்க வைத்தது.
ஐயா என்னை மன்னிச்சுடுங்க, எனக்கு இது ஒத்து வராதுன்னு தோணுதுங்க,
ஏன் அப்படி சொல்றே? மீண்டும் அவரின் விடாப்பிடியான கேள்வி.
நீங்க எதுக்கு சார் பசியாகாத மனுசனை வேணும்ங்கறீங்க?
அப்பத்தான் இந்த நாட்டுல நடக்குற சில கொடுமைகளை தடுக்க முடியும்,
அதுனால உங்களுக்கு என்ன சார் நன்மை.
என்ன இப்படி சொல்றே? இந்த உலகமே என்னை பார்த்து சந்தோஷப்படுமே,
அவங்க சந்தோஷத்துல உங்களுக்கு என்ன சார் லாபம்?
இந்த கேள்விக்கு பதில் சொல்ல சற்று திணறினார். என்னைய உலகம் முழுக்க தெரிஞ்சுக்குவாங்க இல்லை..அப்புறம் நிறைய புகழ், பணம், கிடைக்குமே.
அதை வச்சு என்னசார் பண்ணுவீங்க? அனுபவிப்பேன்,
எப்படிங்க சார்? சாப்பிடறது, குடிக்கிறது, பொண்ணுங்க்களோட சுத்தறது, இதுதான சார் அனுபவிக்கறதுக்கு அர்த்தம்.
இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தார்.
சார் இதையத்தான் நானும் செய்யறேன், பசியை ஒழிக்கறேன்னு சொல்லி கேக்கலை, பசிக்கு ஏதாவது கொடுங்க அப்படீன்னு கேக்கறேன், இந்த பசிக்கு என்ன சார் தேவை ஒரு வாய் சோறு, இல்லை வேற எதுனாச்சும் ஒண்ணு, அதுவும் கிடைக்கிலையின்னா கார்ப்பரேசன்ல வர்ற தண்ணி, உங்களுக்கு எப்படி புகழ்,பணம் கிடைக்கணும்னு பசியை ஒழிக்க கிளம்பீட்டீங்களோ அதுமாதிரி எனக்கு பசிக்கு ஏதாவது கிடைச்சா போதும்னு நான் கிளம்பிட்டேன் அவ்வளவுதான் சார், என்னை அனுப்பிச்சிடு சார். எனக்கு பசிக்கனும், காதல் வரணும், துக்கம் வந்தா அழுவனும், கோபம் வரணும், நான் மனுசன் சார்… என்னைய விட்டுடு சார்..
அவன் அப்படியே கிளம்ப இவர் பிரமையடித்து நின்றார்.