பக்குவப் பட்ட மனிதர்!




மாலை மயங்கும் வேளை, முருகேசாரின் நினைவுகள் கடந்த காலத்தை எண்ணி அசைப்போட்டுக் கொண்டிருந்தன. முருகேசார் ஊர் பாடசாலையில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிவயர்.

அவர் ஒரு நல்ல குடும்பஸ்தர், நல்ல தலைமை ஆசிரியர், நல்ல கணவர், கடமை மிகுந்த தந்தையார். ஊரில் பெரியோர், சிறியோர் அனைவரிலும் பண்பு கலந்த நட்பை வளர்த்து வைத்திருப்பவர்.
இப்படி 100 க்கு 99 வீதம் நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்து வைத்திருக்கும் ஊர் பெரியவர்.
நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தவர். இப்போதெல்லாம் உடல் நிலை அவ்வளவாக அவர் நினைத்த படி ஒத்துழைக்க மறுக்கிறது.
முன்பைப் போல் தானாக வேலைகளைச் செய்து கொள்ள முடியவில்லை. இருந்தும் தன் தைரியத்தைக் கைவிடாது, வயது முதிர்ச்சியை எல்லாம் மனதுக்குள் எடுத்துக் கொள்ளாதவாறு மனதை இளமையாக வைத்திருக்க முயற்சிகின்றார். முடியும் வரை சந்தோசமாய் இருந்திடலாம் என நினைத்து ஒவ்வொரு நிமிடமும் கடவுள் சிந்தனையோடு, பக்தியோடு நல்ல பாடல்களை இரசித்தல், தரமான யாத்திரை நூல்களைப் படித்தல், நல்ல சிந்தனைகளை வளர்த்தல், தியானத்தின் மூலம் மனயிறுக்கங்களைப் போக்கிக் கொள்ளுதல், போன்ற நிலையில் தன்னை கட்டாயப்படுத்திக் கொள்கின்றார்.
சுய துப்பரவோடு தினம் தினம் நீள் கை வைத்த வெள்ளை மேட்சட்டை, வெள்ளை வேஷ்டி, நெற்றியில் விபூதி,சந்தனம் எனப் பார்ப்போருக்கு இந்த வயோதிபரைக் கண்டால், நின்றுப் பேசி விட்டுப் போகுமளவிற்கு அவரை 80,வயதிலும் 10,வயதைக் குறைத்துக் காட்டுமளவிற்கு உடம்பை பராமரித்துக் கொண்டுள்ளார். உண்மையில் அவரால் அவரது பிள்ளைகள் மட்டும் வளரவில்லை. ஊரில் ஏராளமானோர் அவரின் ஆலோசனைகளை செவிமடுத்து வாழ்ந்து பயனடைந்தனர் என்றால் அது பொய்யாகாது.
முருகேசார் ஓய்வு கால வயதை எட்டிய போது அவரின் கடமைகளை ஓரளவு செவ்வனே செய்து முடித்திருந்தார்.
அவருக்கு வனஜா, கதிரவன் என ஒரு மகளும், மகனும் வாழ்க்கையின் தத்துவமாய் இருக்கிறார்கள். மனைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்.
பாசம் என்று நினைக்கும் போது வனஜாவும், கதிரவனும் தன் கண் முன்னே வந்து போவார்கள்.
இவ்வாறு அவரின் சிந்தனைகள் நீண்டு கொண்டே போகின்ற வேளையில், தேணீர் கோப்பையுடன் உள்ளே வந்த வேலுவைக் கண்டதும் கட்டிலில் சாய்ந்திருந்தவர் தானாக எழுந்து உட்கார முயற்சித்துத் தோற்றுப் போனார்.
உடனே கையிலிருந்த கோப்பையை மேசையில் வைத்து விட்டு முருகேசாருக்கு கொஞ்சம் கை கொடுத்து உட்கார வைத்தார் வேலு.
இன்றும் டாக்டர் வருவாரா||? என கேட்டவர் பதிலுக்கு முகத்தைப் பார்த்துக் கொண்டே தேணீரைப் பருக ஆரம்பித்தார்.
வேலு என்கின்ற கடமைத் தவறாத, ஊரார் நம்பிக்கைக் கொண்ட நடுத்தர வயதுடைய மனிதரை வனஜாவும் கதிரவனும் சேர்ந்து பேசி தன் தந்தையாருக்கு எல்லா தேவைகளையும், செய்து கவணித்துக் கொள்ளும் படி கூறியிருக்கிறார்கள்.
மாதாந்தம் அவருக்கு சேரவேண்டிய ஊதியத்தை தவறாமல் வங்கி மூலம் செலுத்தி விடுவார்கள். முருகேசார் குடும்பத்திற்கு நம்பிக்கையான உண்ணதமான மனிதர்.
வேலுவும் தன் கடமை மறந்தாலும் முருகேசாரின் அன்றாட கடமைகளில் இருந்து தவற மாட்டார்.
தந்தை பாசம் பிள்ளைகளுக்கும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தும் படிப்பு, வேலை, திருமண வாழ்க்கை என அமைந்த போது இருவருமே கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்து சேர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டார்கள்.
தந்தையை எல்லா வசதிகளோடும் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு யாருடைய தடையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் என்ன ஒரு குறை, முருகேசாரை பிள்ளைகள் வீட்டுக்குக் கூப்பிட்டால் அவர் சொல்லுகின்ற ஒரே பதில்; வாழ்ந்துக் கழித்த எனக்கு அம்மாவின் நினைவுகளோடு எனது வீட்டிலேயே காலத்தைக் கழித்து விடுகின்றேன். என்பது மட்டும் தான்.
ஒரு நாள் கதிரவன்; ~அப்பா நீங்கள் எம்மோடு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறீஙக, மத்தவங்க அப்பாவை தனியே விட்டு விட்டோம் என்று எம்மைக் குறையாகப் பிழையாகக் கதைக்குகிறார்கள்!|. என கவலையோடு கூறினான்.
இல்லையடா.!நீ ஏன் மத்தவங்க கதைக்கிறதைப் பற்றிக் கவலைப் படுகின்றாய், இது என்னோட விருப்பம், ஊரும் உறவும் அப்படித் தான் பழக்கப் பட்டிருக்கின்றன. நான் எப்படி சுகமான வாழ்க்கை வாழ்ந்து பிள்ளைகளைப் படிக்க வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து சந்தோசப் படுகின்றேனோ, அதைப் போன்று என் பிள்ளைகளும் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது நிறைவாய் இருப்பதை உணர வேண்டும். அதற்கு நான் தடையாகயிருக்கக் கூடாது.
பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு எல்லா வற்றையும் சரியாகத் தான் செய்கிறார்கள். பெற்றோர் அதை எந்த வகையில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது, அவர்களின் மன நிலைப் பாட்டைப் பொறுத்தது.
குறை என்றுப் பார்க்கும் போது எல்லாமே குறை தான்.
பெற்றோம் படிக்க வைத்தோம், நல்ல தொழில், கார், பங்களா என வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். பெற்றோர்களைத் திரும்பிப் பார்க்கத் தான் அவர்களுக்கு நேரம் கிடைப்பதுமில்லை, மனசு வருவதும் இல்லை.,எனக் குறை கூறியே பழகிப் போய் வயோதிப காலத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்காமல், கவலைப் படுகின்றார்கள.;
இது பெற்றோரின் மனதைப் பொறுத்த குறைப்பாடேத் தவிர, பிள்ளைகளின் செயற்பாடு அது அல்ல.
பிள்ளைகள் எம்மைக் கூப்பிட்டால் நாம் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த, அக்கம் பக்கம் உறவுகள் இப்படி எல்லா வற்றையும் விட்டு விட்டு வர மாட்டோம் என எமது நிலைப்பாட்டில் நாம் கட்டாயமாயிருக்கும் போது அவர்களால் என்ன செய்ய முடியும். அவர்களும் உணர்வு பூர்வமிக்க மனித உள்ளங்கள் தானே!.
சரி உங்கள் போக்கில் நீங்கள் இருங்கள். எமது கடமை உங்களைப் பக்குவமாக பாதுகாத்து, எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து, உங்கள் விருப்பப் படி சந்தோசமாய் வைத்து, நாமும் மன நிம்மதியோடு செல்வாக்காய் வாழ்வது தான் சரியென முடிவு செய்து வாழ்ந்து கொண்டு, எம்மைப் பார்க்க வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் வந்து பார்த்து விட்டு எல்லாத் தேவைகளையும் செய்த மன நிறைவோடு போகின்றார்கள்.
இங்கே பெற்றோரும் பிழையில்லை, பிள்ளைகளும் பிழையில்லை.
எல்லாம் காலத்தின் கோலம். மனிதம் வாழ்கின்றது., வாழ வேண்டும் என புரிந்து கொண்டு அனைத்திலும் மனம் திருப்தி கண்டு இருக்கின்ற சுகங்களை அனுபவிக்க மனதைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
முருகேசார் போன்று எல்லோருமே எல்லா வற்றிலும் திருப்திக் காண பழகிக் கொள்ளும் போது முதுமையும் இளமையும் போட்டிப் போட்டுக் கொண்டு சிரித்துக் குளுங்கிக் காலத்தை அலங்கரித்திடலாம் என முருகேசார் கூறி முடித்தார். இதைக் கேட்கும் போது கதிரவனுக்கும் தந்தை கூறுவது சரி என்றேப் பட்டது.