பக்கத்தில் ஒரு பெண்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 3,665 
 
 

‘ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும்’ எனும் யோசனையை உடன் பணி புரிந்த நண்பர் சொல்லக்கேட்ட இருபத்து மூன்று வயது வாலிபனான சந்தர், பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்ததால் சனிக்கிழமை வாங்கிய வார சம்பளத்தை ‘இந்த வாரம் சம்பளம் போடலை’ என அம்மாவிடம் பொய் சொல்லி விட்டு இரவு உறங்கச்சென்றான்.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே எழுந்து, ‘பிரண்டோட வீட்டுக்கு கோயம்புத்தூர் போயிட்டு சாயங்காலம் வந்திடறேன்’ என பொய்யாக வீட்டினரிடம் கூறி விட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் சென்று ஊட்டி செல்லும் பேருந்திற்காக காத்திருந்தான்.

பாக்கெட்டிலிருந்த சம்பளப்பணம் பத்தாயிரத்தையும் அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டான். ஊட்டி செல்லும் பேருந்து திருச்சியிலிருந்து வந்து நின்றது. வார விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ‘அவினாசி போனா உட்கார எடங்கெடைக்கும்’ என கூறிய நடத்துனர் பேச்சை நம்பி பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்துக்கொண்டான்.

அவிநாசி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போது கூட்டம் குறைந்தது. ஆனால் பெண் ஒருவர் அமர்ந்திருந்த சீட்டில் மட்டும் ஒரு சீட் காலியானது. அங்கே சென்றவன் உட்கார தயங்கினான். அப்பெண் “நீங்க ஊட்டிக்கு போறீங்கன்னா இங்கேயே உட்காருங்க. நானும் ஊட்டிக்குத்தான் போறேன்…” என்ற பின்பும் ‘அழகான வயசுப்பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தா, யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா, ‘இந்தப்பொண்ணக்கூட்டிகிட்டு ஊட்டிக்கு சுத்தப்போறான்’ என தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்வது?’ என நினைத்து உட்காரத்தயங்கினான். 

பக்கத்தில் நின்றிருந்த ரவுடியைப்போலிருந்த ஒருவர், “அட என்னப்பா வயசுப்பொண்ணே கூச்சப்படாம பக்கத்துல உக்காரச்சொல்லுது. உனக்கென்ன கூச்சம் ஆம்பளப்பையனுக்கு? நீ உக்காரு, இல்லீன்னா தள்ளி நில்லு, நாம்போயி உக்காந்துக்கிறேன்” என சொன்னவர் முகத்தைப்பார்த்த போது, ‘அவர் உட்காருவது அப்பெண்ணுக்கு நல்லதில்லை’ என மனதில் பட்டதும், டக்கென அமர்ந்த போது, அப்பெண்ணின் மீது கை பட்டதும் “ஸாரிங்க”என்றவனைப்பார்த்து, “பரவாயில்லைங்க” என அப்பெண் கூறிய போதும் சிறிது இடைவெளி விட்டே அமர்ந்து கொண்டான்.

பேருந்து அன்னூர் பேருந்து நிலையம் சென்ற போது பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்தது. மேட்டுப்பாளையம் சென்ற போது அங்கு பல பேருந்துகள் ஊட்டி செல்ல தயாராக இருந்ததால் நிற்பவர்கள் இறங்கிக்கொண்டனர். 

பிளேக்தண்டர், கல்லாறு தாண்டி நீலகிரி மலையின் சுற்றுப்பாதையில் பேருந்து சென்ற போது, அதிகமான வளைவுகளில் திரும்பும் போதெல்லாம் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தன் மீது சாய்வதும், தான் அப்பெண் மீது சாய்வதுமான நிலையில் அப்பெண் கண்டு கொள்ளாமல் இயற்கை காட்சிகளை  பார்த்து ரசித்துக்கொண்டே இருந்ததைப்பார்த்து தானும் அதையே செய்தான். அவ்வப்போது தான் சிரிப்பதைக்கண்டு அப்பெண்ணும் சிரித்ததால் மகிழ்ச்சியில் திளைத்தான். ‘கடவுளே இப்படியே டெல்லி வரைக்கும் இந்த பஸ் போகக்கூடாதா?’ என நினைத்தான்‌.

பர்லியாறு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது அப்பெண் கீழிறங்கி தனது தோள் பையிலிருந்த ஒரு பார்சலை அங்கிருந்த டீக்கடையில் கொடுத்து விட்டு பஜ்ஜியும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்து, இரண்டு பஜ்ஜிகளில் ஒன்றை எடுத்து சந்தருக்கு கொடுத்தபோது, ‘இன்று நமக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள்’ என நினைத்தவன் தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டான். 

பஜ்ஜி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் பாட்டிலைத்திறந்து கொடுத்தாள். வாங்கி குடிக்கும் போது பொறைப்போனதால் இருமினான். ” மெதுவா” எனக்கூறி அவனது தலையை அவளது பூப்போன்ற கையால் இரண்டு முறை மென்மையாகத்தட்டினாள்.

‘இப்படிப்பட்ட பெண் மனைவியாக வந்தால் அவளுக்காக பெரிய மலையை வேண்டுமானாலும் பெயர்த்து தந்து விடலாம்’ என சக்திக்கு மீறி கற்பனை செய்து கொண்டான்.

குன்னூர் சென்று பேருந்து நின்ற போது ஒரு வாலிபர் வந்து ஒரு பார்சலை அவளிடம் கொடுக்க, வாங்கி தனது தோள் பைக்குள் வைத்துக்கொண்டாள். 

இந்த அளவுக்கு பழகியவளிடம் பேரைக்கேட்கவோ, ஊரைக்கேட்கவோ, செல் நெம்பரைக்கேட்கவோ சந்தருக்குத்தோன்றினாலும், ‘கேட்டால் தவறாக நினைத்து விடுவாளோ?’ என நினைத்தவன் கேட்காமல் விட்டு விட்டான்.

பயணக்களைப்பில் அவள் தூங்க ஆரம்பித்திருந்தாள். தூக்கத்தில் சந்தரின் தோள் மீது தலை சாய்த்திருந்தாள். அவன் ‘சுகமான சுமை’ எனக்கருதியதால் விட்டு விட்டான். நீலகிரியின் இயற்கைக்காட்சிகளைப்பார்க்க அவனது கண்கள் விரும்பினாலும், அவளது ஸ்பரிசம் தன் மீது பட்டுக்கொண்டிருப்பதால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவனது மனம், அவளுடன் திருமணம் செய்து, குழந்தைகளைப்பெறும் நிலைக்கு கற்பனைக்குதிரையை மிக வேகமாக விரட்டிக்கொண்டிருந்ததால் புறக்கண்களில் காணும் காட்சிகளை துறந்து, மறந்து அகக்கண்களால் கற்பனை உருவாக்கிய காட்சிகளை பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்த போது உடல் தூக்க நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக்கூட உணராதவனாக இருந்தவனை பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தட்டி எழுப்பி, “ஊட்டி வந்தாச்சு…” என சந்தரிடம் சொன்னவள், திடீரென முகத்தில் பதட்டத்தை வெளிப்படுத்தியவளாக, வேகமாக அவனை ஒதுக்கி, பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓட்டமும், நடையுமாகச்சென்று விட்டாள்.

தானும் இறங்க முற்பட்ட போது அவளது தோள் பை தனது மடியில் வைக்கப்பட்டிருப்பதைக்கண்டவன் அதை எடுத்துக்கொண்டு “ஏங்க… ஏங்க….” என சத்தமிட்டபடி படியில் இறங்க முற்பட்ட போது காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தவே, ‘விடுங்க சார். எங்கூட வந்த பொண்ணப்பார்க்கனம், இதக்கொடுக்கனம்’ என திமிறியவனை தடுத்த காவலர், சந்தரிடமிருந்த தோள் பையை வாங்கி உள்ளே இருந்த பார்சலைக்கையிலெடுத்து மூக்கருகே வைத்து மோந்து பார்த்தவர், எரித்து விடுவது போல் உஷ்ணமாக சந்தரைப்பார்த்த போதே அவனுக்கு ஊட்டி குளிரிலும் வேர்த்துக்கொட்டியது.

“என்ன சார்…? என்ன சார்..‌.? இதுல என்ன இருக்கு? இது என்னோடது இல்லை. பக்கத்துல உட்கார்ந்திருந்த ஒரு பொண்ணோடது…” என பதறியவனைப்பார்த்து,” என்ன நொன்ன சார்? கஞ்சா கடத்திட்டு வந்துட்டு ஒன்னுந்தெரியாத அப்பாவி மாதர என்னன்னா கேக்கறே? நட ஸ்டேசனுக்கு, அங்க சொல்லறேன்” என்ற காவலர், அவனது கையை இறுக்கமாகப்பற்றி தர, தர என இழுத்துச்சென்று அருகிலிருந்த ஜீப்பில் ஏற்றிய போது தான் கூட பயணித்த பெண் மிகவும் தவறானவள் என்பது புரிந்தது. உடனே தனது பேண்ட் பாக்கெட்டைத்தொட்டுப்பார்த்தான். பத்தாயிரம் பணத்துடன் இருந்த பர்சும் காணாமல் போயிருந்ததைக்கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்து மயங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *