பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?




குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’!
குரு«க்ஷத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பினான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘‘உத்தவா! உனக்கு வேண்டிய தைக் கேள்’’ என்றான்.
உத்தவனோ, நீண்ட நாட்களாகவே தனக்கிருந்த சந்தேகங்கள் சிலவற்றை கண்ணனிடம் கேட்டான்: ‘‘பரந்தாமா! ராஜசூய யாகத்துக்கு தருமனை வர வழைத்த துரியோதனன் விருந்துக்குப் பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின்போது முக்காலமும் உணர்ந்த நீ, தருமனை வெற்றியடையச் செய்திருக்கக் கூடாதா? சரி, போகட்டும். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களை தருமன் பணயம் வைத்து ஆடும்போதாவது காப்பாற்றி இருக்கலாமே? விடு… அபலைப் பெண்ணான உன் சகோதரி திரௌபதி என்ன பாவம் செய்தாள்? ‘திரௌபதி அதிர்ஷ்டக்காரி. அவளைப் பணயம் வைத்து ஆடு. நீ உறுதியாக வெற்றி பெறுவாய்!’ என்று துரியோதனன் செருக்கோடு சபையில் கூறிய போதாவது, பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டுமாறு செய்திருக்கக் கூடாதா? ஆனால், திரௌபதியை கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து துச்சாதனன் துகில் உரித்தபோது காப்பாற்றினாயே! ஏன் அப்படி?’’ என்றான் உத்தவன்.
அதற்குப் பரந்தாமன், ‘‘அப்படிக் கேள் உத்தவா! குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கு கீதையைக் கூறினேன். இப்போது உனது கேள்விக்கு விடையாக ‘உத்தவ கீதை’யைக் கூறுகிறேன், கேள். தருமனை துரியோதனன் சூதுக்கு அழைத்தபோது, ‘தருமா! என்னுடன் சூதாட வா. நான் பணயம் வைக்கிறேன். எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி பகடைக் காய்களை உருட்டுவான்’ என்றான். துரியோதனனுக்கு பகடைக் காய்களை உருட்டத் தெரியாது. அப்போது தருமன், ‘நான் பணயம் வைக்கிறேன். எனக்குப் பதிலாக என் மைத்துனன் கண்ணன் பகடைக் காய்களை உருட்டுவான்’ என்று கூறி இருக்கலாம். அவ்வாறு தருமன் கூறவில்லை. ‘துரியோதனனுடன் சூதாட்டத்துக்குச் சம்மதித்து விட்டோம். இது என் மைத்துனன் கண்ணபிரானுக்குத் தெரியக் கூடாது கடவுளே’ என வேண்டிக் கொண்டான். இதனால் தருமன் எனக்கு மனத்தால் தடை போட்டு விட்டான். இருந்தும், அரண்மனைக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருந்தேன்.
பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களைப் பணயம் வைத்து ஆடும்போதாவது என்னைக் கூப்பிடுவார்கள் என்று எண்ணினேன். அப்போதும் என்னை நினைக்கவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்து ஆடும்போதும் என்னை எவரும் நினைக்கவில்லை.
திரௌபதியின் கூந்தலைப் பிடித்து துச்சாதனன் இழுக்கும்போது தன் உடல் பலத்தால் தடுக்க முயன்றாளே தவிர, என்னை நினைக்கவில்லை. திரௌபதியின் துகிலை துச்சாதனன் உரியும்போது தான், ‘ஹரி… ஹரி… கண்ணா… பரந்தாமா!’ என்று கூப்பிட்டாள். எனவே, அப்போது சென்று காப்பாற்றினேன்’’ என்றான் பரந்தாமன்.
அதற்கு உத்தவன், ‘‘அழைத்தால்தான் நீ போவாயா? நீயாகச் செல்ல மாட்டாயா?’’ என்று கேட்டான்.
‘‘ஆம்! அழைத்தால்தான் போவேன். மனிதர்கள் செய்யக் கூடிய செயல்களையெல்லாம் அவரவர் போக்கிலேயே விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் குறுக்கிட்டு எதுவும் செய்ய மாட்டேன்!’’
‘‘மனிதன் தவறு செய்தால் திருத்த மாட்டாயா? வேடிக்கைதான் பார்ப்பாயா?’’_ உத்தவன்.
‘‘நான் மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும்போது என் எதிரில் மனிதன் தவறு செய்ய மாட்டான்’’ என்றான் பரந்தாமன் பளிச்சென்று.
‘யார் யார் கண்ணபிரானை நினைக்கிறார்களோ, அவர்களின் உள்ளத்தில் எல்லாம் கண்ணபிரான் இருக்கிறான். அப்படி இருக்கும்போது தவறு செய்ய மனிதன் அஞ்சுவான்!’ _ இதுவே, உத்தவ கீதை!
– ராணி மணாளன், கிருஷ்ணகிரி – செப்டம்பர் 2006