நைன் ஹீரோயின்ஸ்!




ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரபல டைரக்டர் மோகன் ராஜ் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் சுறுசுறுப்பாக ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பிரபல எழுத்தாளர் ஜயராமன், பிரபல கேமரா மேன் சந்திரன் மற்றும் பல முதல் தர டெக்னிஷன்களும் அன்று சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள்!
ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தயாரிப்பாளரின் பி.ஏ. இரண்டு பேர் வந்திருந்தார்கள்!
பேசும் சம்பள முழுத் தொகைக்கும் அன்றே செக் வழங்குவதற்குத் தான் அங்கு தயாரிப்பாளரின் பி.ஏ. க்கள் வந்திருப்பதாக ஒரு செய்தி காதில் விழுந்து எல்லோருடைய பரபரப்பையும் மேலும் அதிகப் படுத்தியது!
டைரக்டர் பேசத் தொடங்கினார்.
“ இதுவரை நீங்கள் அதிகப் பட்சம் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் இந்தப் படத்திற்குத் தரப்படும்! இன்றே எக்கிரிமெண்டில் கையொப்பமிட்டு முழுத்தொகைக்கும் செக்கை வாங்கிக் கொள்ளலாம்!
கதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி மாதிரி! கதாநாயகனுக்கு அப்பாவின் திருமண ஏற்பாடு பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக அலைகிறான். அப்பொழுது ஒன்பது இளம் பெண்களை சந்திக்கிறான். அதன் பிறகு அவன் தந்தை அவனை வீட்டிற்கு அழைத்து வந்து அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைத்து விடுகிறார். இது தான் கதை!.”
“ சார்! …. .இந்தக் கதையில் எந்தப் புதுமையும் இல்லையே!.”. என்றார் கதாசிரியர்.
“எனக்கும் தெரியும் ஜெயராமன்!…….இந்தக் கதை தான் தயாரிப்பாளருக்குப் பிடிக்கறது! உங்கள் சம்பளம் ஒரு கோடி சொல்லியிருக்கிறேன்!…உங்களுக்கு ஒரு பத்து நாட்கள் வேலை…ஒரே செக்…இன்றைக்கே வாங்கிக் கொள்ளுங்க… மற்றபடி அடுத்த படத்தில் நம் திறமை எல்லாம் காட்டிக் கொள்ளலாம்! .. இந்தப் படத்தில் நம்ம அஸிஸ்டெண்ட் டைரக்டர்களுக்குத் தான் நிறைய வேலை இருக்கு!…”
“சார்!… சொல்லுங்க சார்!.. நாங்க .உயிரைக் கொடுத்தாவது எங்களுக்கு கொடுத்த வேலையை செய்து விடுகிறோம்!…”
“ இந்தப் படத்தில் ஒன்பது கதாநாயகிகள் வருகிறார்கள்! அவர்கள் ஒன்பது பேருமே இன்று முன்னணியில் இருக்கும் நடிகைகளாக இருக்க வேண்டும்! அவர்களிடம் உடனடியாக மூன்று நாள் கால்ஷீட் வாங்க வேண்டும்!.
அவர்கள் இரண்டு படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு உரிய செக் உடனே தரப்படும்…செக் ஹானர் ஆனவுடன் வந்து நடித்து கொடுத்தால் போதும்! …”
“….. மூணு நாள் ஷூட்டிங்கிற்கு இரண்டு பட சம்பளம் கைமேல் என்றால் யார் சார் மறுப்பாங்க!…இன்றே போய் வேலையை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்!…”
“ படத்தில் ஒன்பது கதாநாயகிகள் இருப்பதால் அவர்களின் கவர்ச்சியான படங்களை வித விதமாகப் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈஸியாக இந்த படத்தின் பக்கம் திரும்பி விடலாம்! நடிகைகளிடம் கால்ஷீட் வாங்கி விட்டால் உங்கள் சம்பளம் இரண்டு மடங்கு தான்!…”
உதவி டைரக்டர்கள் உற்சாக மூடிற்கு வந்து விட்டார்கள்!
“ நயன் தாரா, தமன்னா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், அனுஷ்கா, சாய் பல்லவி, அதிதி பாலன், திவ்யா ஆகிய ஒன்பது பேர்களையும் உடனே அணுகி கால் ஷீட் வாங்கி வருவது உங்க பொறுப்பு!…”
“ சார்!…ஹீரோ யாருனு இன்னும் சொல்லலையே!…” என்று ஆர்வத்தோடு குறுக்கிட்டார் புகழ் பெற்ற அந்தக் கேமராமேன்!
“ நீங்க கேட்கிறது ரொம்ப நியாயம்!…படத்தின் தயாரிப்பாளர் தான் படத்தின் ஹீரோ! ..அவரை ஒவ்வொரு ‘ஷாட்’டிலும் அழகாக காட்ட வேண்டியது உங்க பொறுப்பு!…அதற்கு உங்களை ‘ஸ்பெஷலாக’க் கவனித்து கொள்வதாக அவரே என்னிடம் தனிப் பட்ட முறையில் சொல்லியிருக்கிறார்!……” என்றார் டைரக்டர் சிரித்துக் கொண்டே!
“ சார்! அப்ப அவர் போட்டோ ஏதாவது இருக்கிறதா சார்!..”
டைரக்டர் தயாரிப்பாளரின் பி.ஏ.வைப் பார்த்து கையை நீட்டினார். அவர் தயாராக வைத்திருந்த ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.
அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்த கேமரா மேன் முகம் வாடி விட்டது!
“சார்!…இவருக்கு அறுபது வயசுக்கு மேலே இருக்கும் போலிருக்கே?…தலையில் ஒரு முடி கூட இல்லை!..”
“.. நம்ம தமிழ் சினிமாவிலே முக்கிய ஹீரோ என்று சொன்னாலே அறுபது வயசுக்கு மேலானவங்க என்று தானே அர்த்தம்! ….இது கூடத் தெரியாம நீங்க இத்தனை வருஷமா இந்தப் பீல்டில் இருக்கே?….. முடி இல்லைங்கறது எல்லாம் ஒரு பிரச்னையா?..மேக்கப் மேன்கள் எல்லாம் எதற்கு இருக்கிறாங்க?…அவர் யார் தெரியுமா? குஜராத் சூரத் நகரில் இருக்கும் பிரபல வைர வியாபாரி சரஸ்வதி மோகன் தாஸ்! உலகம் முழுவதும் அவருக்கு கிளைகள் உண்டு. அவருடைய வருஷ டர்ன் ஓவர் 6500 கோடி! சென்னையில் கிளை தொடங்க வந்தவர், நம் சினிமா நடிக நடிகைகளைப் பார்த்து ரசித்து அப்படியே நம் சினிமா உலகில் ஐக்கியமாகி விட்டார்! இப்ப அவர் நமக்கு கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்!..நமக்கு அவர் ஆசைப் பட்டபடி ஒரு படம் எடுக்க கசக்குதா?…” என்று டைரக்டர் கேட்டார்.
அதன் பின் எந்தக் கலைஞரும் பேசவில்லை! சந்தோஷமாக காசோலைகள் கை மாறின!
– மக்கள் குரல் 6-7-2018