நேஹால்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1

‘உங்களைப் பைத்யமென்றேதான் நினைத்தேன்.’
‘இப்பொழுது?’
‘அப்படியில்லையோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது. குடியானவனுக்கு அதிலும் குடியானப் பெண்ணுக்கு படிப்பெங்கே வரப்போகிறதென்று நினைத்தேன். நேஹால் சகலகலாவல்லி ஆகிவிட்டாள் – தங்கள் கருணையால். எரு வாருகிற பெண்ணுக்கு ராணி பதவி கிட்டுமா என்று திகைத்தேன். அந்த அதிசயம் நடந்துகூடவிடுமோ என்று இப்பொழுது தோன்றுகிறது.’
‘உனக்கு சம்மதமா?’
‘யானையை எனக்கு இனாமாகத் தருகிறேன் என்கிறீர்களே, என்னால் தாங்கமுடியுமா?’
‘ராஜா உன்னை சீர்கேட்டுவிடுவார் என்று நினைக்கிறாயா?’
“இல்லை, சூரியன் எட்டத்திலிருக்கும் வரையில் வயலுக்கு நல்லது தான். வயலிலேயே வந்து கூடாரம் அடிக்கிறேனென்று சொன்னால் எப்படியிருக்கும்?”
‘சம்மதம் இல்லை என்றாவது சொல்லி விடேன்.’
‘எனக்குச் சொல்லத் தெரியவில்லை, குழந்தை யையே கேட்டுவிடுகிறேன்.’
‘இரு. அவசரப்படாதே, கடைசியாகச் சொல்ல வேண்டியவளிடம் இப்பொழுதே சொல்லக்கூடாது, உன் அபிப்பிராயத்தைச் சொல்லு.’
‘நீங்களே சொல்லுங்களேன் – நான் சம்மதப் படலாமா?’
‘அடெ அசெடே! தெரியாமலா உன் குழந்தைக் குப் படிப்பு சொல்லிக்கொடுக்க வந்தேன் என்று நினைக்கிறாய்?. எட்டு வருஷத்திற்கு முன்பு ஒரு நாள் உங்கள் தெரு வழியாகச் சென்றேன். உன் வீட்டு வாசலில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. பின்னால் ஒரு ஒன்பது வயதுச் சிறுமி சாணி நிரம்பிய தட்டுக்கூடை ஒன்றை தலையில் வைத்துக் கொண் டிருந்தாள். இடுப்பிலே ஒரு கந்தல்; கருப்பு சுங்கடி. தோள்மீது ஒரு பச்சைப் புடவையின் துண்டை மேலாக்காகப் போட்டிருந்தாள். அச்சிறுமியைப் போன்ற அழகியை நான் அதுவரையில் எங் கு பார்த்ததில்லை. அப்படியே மரமாகிவிட்டேன். மறு நிமிஷம் எருமை சாணம்போடும் சமயம். தலையில் தட்டை வைத்தபடியே சிறுமி கைகளை ஏந்தினாள். என்னை அறியாமலே நான் கொஞ்சம் சிறுமியண்டை நகர்ந்துவிட்டேன். விரிந்த தாமரை போன்ற கை களிலே பளிச்சென்று என் கண்ணில் பட்டன சில ரேகைகள். என் ஆச்சர்யம் அளவு கடந்துவிட்டது. அழகின் ராணி என்று நான் கருதிய பெண் உண்மை யிலேயே ராணியாவாள் என்று ரேகை சொல்லிற்று. அந்த நிச்சயத்தில் தான் நானே உன் பெண்ணுக்குப் படிப்பு சொல்லித்தர முன்வந்தேன் – என்னைப் பைத்யமென்று சொன்னபோதிலும். ரேகை சாஸ் திரம் பொய்யல்லவென்று இப்பொழுது தெரிகிறதா? இவ்வளவும் எதற்காகச் சொல்ல வந்தேனென்றால் இதையெல்லாம் உன்னிடம் முன்பு சொன்னதில்லை. இரண்டாவதாக, என்னை அபிப்பிராயம் சொல்லச் சொல்லுகிறாய் அல்லவா, அதற்காகத்தான்.நீ சந் தோஷமாக சம்மதிக்கலாம். இந்த மாதிரி நடப்பதை எதிர்பார்த்துத்தானே நான் ராஜகுமாரிக்கு வேண் டிய பயிற்சியை உன்பெண்ணுக்கு அளித்து வந்திருக்கிறேன், இன்னுமொன்று. நாமெல்லாம் சம்மதிக்கா விட்டால் கூட நேஹாலே சம்மதிக்காவிட்டால் கூட – நேஹால் நிச்சயம் ராணியாவாள்.’
‘சுவாமி.சரி. உங்கள் ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்குத் தைரியம்தான்’.
பேசிக்கொண்டிருந்தவர்கள் முத்கல் நகரத்து குடியானவன் ஒருவனும், அதே நகரத்துக் கிழபிராமணர் ஒருவரும். பிராமணர் மேலே சொன்னார்.
‘இனி நான் தாராளமாக விஜயநகரம் சென்று அரசனைக் கண்டு வரலாம். போய்வரட்டுமா?’
‘நீங்கள் வர எவ்வளவு காலம் ஆகும்?’
‘இந்த வளர் பிறைக்குள் வருவேன். பெளர் ணிமையன்று பொன்னான செய்தியுடன் வருவேன். பூவை ராஜ வண்டுக்கு அளித்திடுவேன்.’
‘எனக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே. உங்களுக்கு நான் என்ன பதில் செய்யப்போகிறேன்?’
‘உன்னிடத்தில் உபகாரத்தை எதிர்பார்க்க வில்லை. எனக்கென்னவோ அன்றாட ஜீவனத்திற்குக் கஷ்டம் தான். என் குடும்பம் பெரிது. ஆனால், எனக் கொரு பித்து உண்டு – ரேகை சாஸ்திரம் தினம் இரண்டு கையைப் பார்த்தால் போதும். பணமோ உணவோ தேவை இல்லை. நான் நினைத்தபடி நடந்தால் அதுவே எனக்குப் பணமும், உணவும் சொர்க்கமுமாகும். அந்த பித்து தான் உங்கள் குடும் பத்தில் என்னைப் புகவிட்டிருக்கிறது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, காலம் வரும் பின்னே, கை ரேகை வரும் முன்னே. ஞாபகமிருக்கட்டும், பௌர்ணிமை யன்று திரும்புவேன்.
2
ரேகை சாஸ்திரி விஜய நகரை அடைந்து அரசனைக்காணவேண்டியதற்கு ஏற்பட்ட வெற்றிலை பாக்கு, தேங்காய், புஷ்பம், எலுமிச்சம் பழம் முதலியவைகளை வாங்கிக்கொண்டார். வழக்கத்தில் இல்லாத ஒரு பொருளையும் வாங்கினார் – அதாவது விரல் மஞ்சள்.
இவைகளை எல்லாம் முறைப்படி வைத்து எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு இடது புறமிருந்த திவான் கச்சேரிக்குச் சென்றார், கச்சேரி பெரிய நாற்பதுகால் மண்டபம். நடுவில் பெரிய பளிங்குமேடை. அதில் வெல்வெட் மெத்தை, திண்டு, திவாசுகள் போடப் பட்டிருந்தன. மையத்தில் திவான் உட்கார்ந்திருந்தார். கச்சேரி நேரம். ஜனங்கள் கும்பல் கும்பலாக தங்கள் வழக்குகளையும் மனுக்களையும் திவானிடம் சமர்ப்பிப் பதும், அவர் தீர்ப்புக் கூறுவதுமாக இருந்தது.
இந்த அமளி ஓயும் வரையில் சாஸ்திரி பொறுமையாக இருந்தார்.பிறகு திவானுக்கு முன் சென்று வணங்கிவிட்டு தனிமையில் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார். முன்பின் அறியாத ஒருவர் தனிமையில் பேச விரும்புவதற்கு இணங்கலாமா என்று திவான் ஒரு நொடி நேரம் யோசித்தார். சாஸ்திரியின் பக்கத்திலிருந்த சிறப்பு தென்பட்டது. ஒருவாறு சமாதானமடைந்து மண்ட பத்தில் இருப்பவர்களை வெளியேறும்படி திவான் உத்தரவிட்டார். மண்டபம் காலியாகிவிடவே, தான் வந்த காரியத்தையும் காரணங்களையும் விளக்கி விட்டு அரசனை பேட்டி காண விரும்பினார்.
வெறும் அரசியலாகவோ, குறைபாடாகவோ இருந்திருந்தால் சாஸ்திரியார் சொல்லி முடிப்பதற் குள் திவான் தீர்ப்பு சொல்லியிருப்பார்.ஆனால் இது அரசியல் விஷயமன்று. அரசனுடைய அந்தரங்க வாழ்க்கையைச் சார்ந்ததாக இருந்தது.இருந்தாலும் அரசர்கள் அந்தரங்க வாழ்க்கை அரசியல் விளைவு களை உண்டாக்கலாம். அரசனை யும் குடியானப் பெண்ணையும் கற்பனையில் கூட திவானால் சேர்த்துப் பார்க்கமுடியவில்லை. ஆனாலும் தன் எண்ணங்களைத் தனக்குள் அடக்கிக்கொண்டு அரசருக்குச் செய்தி அனுப்பிவிட்டு, சாஸ்திரியுடன் அரண்மனை சென்றார்.
விஜயநகர அரசர் முதலாவது தேவராயர் தன் ஏகாந்த அறையிலிருந்தார். அரைமுழுவதும் உயர்ந்த மணம் பரவியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் பொன்னால் செய்யப்பட்ட பாம்பின் படத்தில் சொறுகப்பட்டு எரிந்து கொண்டிருந்த அம்பர் ஊது பத்திக் கட்டுத்தான். பகல் பத்து நாழிகையாக இருந்த போதிலும் அரசனுக்குப் பின்னால் கஞ்சுகம் அணிந்த பெண்ணொருத்தி மயில் தோகை விசிறியை அசைத்துக்கொண்டிருந்தாள்.
திவானும் ரேகை சாஸ்திரியும் அறைக்குள் நுழைந்தனர். சாஸ்திரி அரசரை மாமூல்படி வணங்கிவிட்டு, சிறப்பை மரியாதையுடன் நீட்டினார். திண்டின்மேல் சோர்ந்து கிடந்த வலக்கையை எடுத்து நீட்டி தட்டை வாங்குவதற்கு அரசருக்கு இரண் டொரு வினாடி ஆயிற்று. தட்டிலிருந்த சாமான்கள் ஒவ்வொன்றும் தெளிவாய்க் கண்ணில் பட்டன ஆனால் ஒரு இடத்தில் காலியிருந்தது, மறுகணமே என்ன காணோம் என்பது சாஸ்திரிக்கு விளங்கி விட்டது. விரலிமஞ்சள் இருந்த இடம் காலி! சாஸ் திரிக்குப் பிராணனே போய்விட்டது! அதற்குள் அரசன் கையை நீட்டி எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துக் கொண்டு, தட்டை வாங்கி ஊதுவத்தி மேஜைமேல் வைத்துவிட்டார். அதற்குப் பிறகு சாஸ்திரி பத்து அடிபின்னால் நகர்ந்து நின்றார். மனம் விரலி மஞ்சள் காணாமற்போனதிலேயே லயித்திருந்தது.
அப்பொழுது திவான் அரசனிடம் நெருங்கி சாஸ்திரி வந்த விஷயத்தைச் சொன்னார்,
நந்தவனமென்றால் எல்லாவிதமான புஷ்பச்செடி களும் இருக்கவேண்டும் அல்லவா? தேவராயருடைய ஜனானா ஓரு நந்தவனத்தைப்போல. ஆகவே அவ ருடைய முகம் மலர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.
திவான்பாய், நானே இவருடன் பேசிக்கொள் கிறேன். நீங்கள் கச்சேரிக்குப் போகலாம். தேவை யானால் கூப்பிட்டனுப்புகிறேன்’ என்றார் அரசர்.
திவான் மறுமொழி கூறாது தயங்கி வணங்கி விட்டு அறையைவிட்டகன்றார்,
அரசருடைய பேச்சு சாஸ்திரியின் காதில் விழாமவில்லை.
திவான் வெளியில் சென்றதும், அரசர் முத்திரை மோதிரம் அணிந்த ஆள்காட்டி விரலை அசைத்தார்,
சாஸ்திரி குறிப்பை உணர்ந்து முன்னே நகர்ந்து அரசனுக்கு மறுபடியும் விநயத்துடன் வணக்கம் செலுத்தினார்.
‘பண்டிதரே! நீர் ரேகை சாஸ்திரியா?’
‘ஆமாம்.’
‘அதை நம்பித்தான் இங்கே வந்தீரா?”
மலரம்பு தழுவாத ஒரு ரதியை நம்பி வந்தேன். என் சாஸ்திரம் உதய வெள்ளியைப் போல.’
சில நஞ்சைகளில் தழைகொழுத்திருக்கும், அதி லிருந்தே கதிர் ராசி குறைவு என்று நிச்சயம் செய்யலாம்,’
‘சமூகத்தில், சாஸ்திரி சொல்லும் பேச்சில் கடு களவு மிகை இருந்தாலும் விதிக்கிற நிபந்தனைக்குட் படுகிறேன். ரதி என்றால் புகழ்ச்சி என்று கருதுகிறீர் கள் அவள் வாணியும் கூட,’
‘உங்கள் பேச்சு இனிப்பையும் மயக்கத்தையும் தருகிறது – கறுப்பஞ்சாறுபோல’
மயில் விசிறி அசைத்துக்கொண்டு நின்றிருந்த பெண் சற்று வேகமாய் விசிறினாள்.
‘பாட அனுமதி கொடுத்தால் நானே தெளிய வைத்து விடுகிறேன்.’
‘ஹும்.’
‘என் குரலைப்பற்றி உயர்வாய் சொல்லிக்கொள் வதற்கில்லை. ஆகையால் சாகித்யத்தையும் பாவத்தை யும் சமூகத்தில் கவனித்தால் போதுமானது,’
வழியோரம் வனமல்லிகை
தேன் கோப்பை திறந்துவைத்து
அழது பட்டுப் பூச்சி வரும்
அமுதளிப்போம் என்றிருக்க;
கார்முகிலாம் கருவண்டு
கள் வெறியில் குறிப்பின்றி
பாரிலெங்கும் பறந்துவந்து
கள் கிண்ணியைக் கண்ணுற்றது.
காதல் நயம் காணாமல்
பாய்ந்தந்த மலர்க்கிண்ணியில் !
காதலுக்த ஏங்கும் மலர்
சாய்ந்ததையோ வேதனையில்!
‘சபாஷ் சபாஷ் இது யாருடைய பாட்டு?
கேள்வி காதில் விழாதது போல பண்டிதர் பதிலளித்தார்.
‘இதை ரதி பாடிக் கேட்க வேண்டும்!’.
‘பெயரே ரதிதானா?.
‘நேஹால்.’
‘அழகிய பெயர். நான் கேட்டதுவேறொன்று. பாட்டு யாருடையது?’
‘அப்பெண்ணின் கற்பனை.’
‘பெண்ணுடையதா..? சிறிது தெளிவேற்படுகிறது’,
‘முற்றிலும் ஏற்பட்டு விடும். ரேகை சாஸ்திரம், ஜோதிஷம் இவைகளை எல்லாம் உலகத்தில் வயிற்று டன் பிணைத்திருக்கிறார்கள். ஆகையால் எங்கள் பேச்சுக்கு மதிப்பு இல்லை. ஆனால் சமூகத்தின் அந்தரங்கமான ஆளை முத்கல் நகரத்துக் குடியானத் தெருவில் ஒன்பதாவது வீட்டைப் போய்ப் பார்த்து வரச்சொல்லுங்கள். போனவர் திரும்பும் வரையில் இங்கேயே இருக்கிறேன். பிறகு சமூகத்தைப் பார்க்கிறேன்’.
‘பண்டிதரே! உங்கள் பேச்சே போதுமென்று தோன்றுகிறது. ஆகாய மண்டலத்தில் எத்தனையோ நக்ஷத்திரங்கள் மினுக்குகின்றன. இன்னும் ஒன்று கூடுவதற்கு இவ்வளவு வடிகட்டிப் பார்க்க வேண்டி யதில்லை. ஆனால் உண்மையில் பாட்டு வண்டைப் போல் தலையில் ரீங்காரம் இடுகிறது. வண்டைக் கொண்டு வாரும்.’
‘பூவைத் தேனீ கருதுவது போல் தாங்கள் கருத லாகரது.’
‘பண்டிதரே! ரஸமாகவும் பேசுகிறீர். ராணியே ஆக்கி விடுவோம். பாட்டொன்றே எனக் குத் தெளிவு தந்து விட்டது. அதிருக்கட்டும், குடியானத்தெரு என்ற பெண் இருப்பிடத்தை சுட் டிக் காட்டினீரே!”
“ஆம். பெண் குடியானப் பெண் தான். விஜய நகரத்துப் பிரதாப தேவரைத் தவிர வேறு யாருக் கும் நேஹால் தகுதியாக மாட்டாள் என்பது என் நம்பிக்கை. வர்ண தர்மம் தங்களை பாதிக்காது.”
‘புஷ்பங்களுக்குள் இரண்டே ஜாதிதான் – மணம் உள்ளது. அற்றது. நீர் இனிச் செய்ய வேண்டிய காரியம் இதுதான். அரண்மனையிலிருந்து சிறப்பெடுத்துச் சென்று பெற்றோர்களையும் நேஹா லையும் அழைத்து வாருங்கள். இங்கே மணம் முடித்து விடுவோம். அவற்றுடன் இதையும் எடுத் துப்போம். கோல் கொண்டா சுரங்கத்திலிருந்து சமீபத்தில் வந்த வைரம். நேற்றுதான் மோதிரம் கட்டி வந்தது. நேஹாலிடம் கொடுங்கள். உங்களையும் மறக்கமாட்டேன், தெரிந்ததா?’
பேச்சு முடிந்ததும்தேவராயர் திவானைக்கூப்பிட் டனுப்புவித்து தன் முடிவையும் உத்திரவையும் தெரிவித்தார். திவான் பதில் பேசவில்லை. ஆனால் முகத்தில் மலர்ச்சி இல்லை.
‘திவான் பாய், ஞாபகமிருக்கட்டும். பொற் தகடொன்றில் அரசி நேஹாலுக்கு என்று பொறித்து நமது முத்திரையுடன் அனுப்பிவிடும்.’
மறுநாள் அரண்மனைச் சேவகன் ஒருவன் பின் தொடர பண்டிதர் வி ஜயநகரத்தைவிட்டு முத்கலுக்கு கிளம்பினார்.
3
பௌர்ணிமை இரவு. நிலவு காய்ந்துகொண்டிருந்தது.
முத்கல் நகரத்தில், குடியானத் தெருவில் வீட்டு முற்றத்தில் தகப்பனும், தாயும் நேஹாலும் உட்கார்ந்திருந்தார்கள். தாயும் தகப்பனும் வெறும் குடியானவர்களல்லவா? சாப்பிட்டுவிட்டு தரையில் பக்கத்துக்கு ஒருவராகப் படுத்திருந்தார்கள். சகல கலா வல்லியான நேஹாலும் எவ்விதக் கலைச் செருக்கு மின்றி வெறும் கிராமத்துப் பெண்ணைப் போல விவசாய விஷயமாக அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
தகப்பனார் பேச்சில் கலந்தது போல தோன்றி னாலும் அவர் மனது பௌர்ணிமையையும் ரேகை சாஸ்திரியையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் ஆவதற்குள் ரேகை சாஸ்திரியும் அரண்மனைச் சேவகனும் உள்ளே நுழைந்தார்கள்.
‘இன்றுதானே பௌர்ணிமை’ என்று சொல்லி விட்டு ரேகை சாஸ்திரி சேவகனிடமிருந்த தட்டை வாங்கி தகப்பனண்டை வைத்தார்,
மணம் சொரியும் மலர் மாலைகள், ஒளி சொரி யும் ரத்ன ஆபரணங்கள், வேலைப்பாடுமிகுந்த பொன் அணிகள், கோல்கொண்டா வைர மோதிரம், ஒரு பொற் தகடு, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் மஞ்சள் அவ்வளவும் இருந்தன.
பெற்றோர்கள் இருவரும் இன்பத்தில் மெய் மறந்தார்கள்.
தட்டைவிட அதிலிருக்கும் பொற் தகட்டில் அதிக சிறப்பு இருக்கிறது,பார்’ என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்து தகப்பனார் கையில் கொடுத் தார். ‘ராணி நேஹாலுக்கு’ என்று பொறித்து அரச முத்திரை இடப்பட்டிருந்தது.
உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நேஹால் எழுந்திருந்தாள். கண்ணைக் கட்டிகொண்டு விளை யாடுகிறவர்களைப்போல் ஒரு வினாடி திசை தெரியா மல் கலவரமடைந்தாள். மறு நிமிஷம் விஷயங்களை ஊகித்துக் கொண்டுவிட்டாள். ஆனால் வாய்திறக்க வில்லை.
பெற்றோர்களும் வாய்திறக்கவில்லை.
பௌர்ணிமையில் நாளைக்கும் கொஞ்சம் இருக் கிறது. காலையில் எல்லோரும் புறப்படவேண்டியது தான். தட்டிலிருக்கும் ரத்ன மாலையை நிலவுப் பந்த லின் கீழ் நேஹால் கழுத்தில் அணியுங்கள்’ என்றார் சாஸ்திரி.
இனி நேஹாலுக்கு விஷயத்தைத்தெரிவிக்காமல் முடியாதல்லவா? தகப்பனாரும், தாயாரும், சாஸ்திரியும் மாறி மாறி நேஹாலுக்குக் கிட்டிய அதிருஷ்டத்தைப் பற்றி விவரமாய் தெரிவித்தார்கள்.
நேஹால் அப்பொழுதும் சும்மாவே இருந்தாள். கட்டிலிருந்த ரத்னமாலையைக் கையிலெடுத்து மக ளுக்கு அணியப் போனார்.
‘ஐயா, ஒரு வார்த்தை. இதை அணிந்துகொண் டால் என்ன பொருள்?’ என்று ஒன்றுமறியாதவ ளைப் போல கேட்டாள்.
‘இதை அணிந்துகொண்டால் நீ விஜயநகர ராணியாகிவிட்டாய் என்று பொருள். நாம் சம்ம தித்துவிட்டோம் என்று பொருள். இதற்குப் பிறகு நாம் பிரளமுடியாது.’
நேஹால் பதில் சொல்ல ஐந்து நிமிஷத்திற்கு மேலாயிற்று.பூர்ணிமையின் பல்லாக்கு வான வீதி யில் வந்துகொண்டிருந்தது. பல்லாக்குத் தூக்கும் போகிகளின் குரலைப்போல் காற்று விட்டு விட்டு ஒலித்தது. ரேகை சாஸ்திரிக்கு இந்தத் தாமதம் தைரியமூட்டவில்லை. தன் கண் பொய்யா, கை பொய்யா சாஸ்திரம் பொய்யா என்று கூட நினைக்கத் தொடங்கிவிட்டார். நேஹால் வாய் திறந்ததும் சாஸ்திரி பரபரப்படைந்தார்.
வாய் திறந்தாளே ஒழிய பேசவில்லை. பாடினாள்.
மீனுக்கு முடி சூட்டி
மோனமாய் அரியணையில்
வீற்றரசு செலுத் தென்றுல்,
“தண்ணீநம் தானும்
தவிர்க்க ஒண்ணாத் தோழர்கள்,
கூற்றுருவே அரசெ”ன்று
தம்பிட்டே சொல்லும்
பண்டிதர் உலுக்கி விழுந்தார். தகப்பனாருக்குப் பொருள் புரியாவிட்டாலும், அவள் மனப்போக்கு விசதமாகிவிட்டது. சம்மதிப்பவளானால் வாய் திற வாது, தலையை தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியதுதானே!
நேஹாலுக்கு இஷ்டமில்லையா? இந்தப் பெருமை முயன்றாலும் கிடைக்கக் கூடியதா? வலுவில் வந்திருக்கும்பொழுது சீதேவியை உதறி எறியலர்மர்?
“ஐயா, இவ்வளவு பெரிய பாக்யத்தை என்னால் தாங்க முடியாது. அந்தப்புரத்தில் ஐக்யமாகி விட்டால் அப்பா ஏது, அம்மா ஏது? முத்கல் நகரத்துக் குடிசை ஏது? அரண்மனைக்கு நீங்கள் வர முடியாது.நானும் அந்தப்புரத்திலிருந்து குடிசைக்கு வரமுடியா து. உங்களைப் பிறகு பார்ப்பதெப்படி? ராஜ போகத்திற்கு என்னை விற்க நீஙகள் துணிந் தாலும் உயிருடன் இருக்கையிலேயே உங்களைச் செத்தவர்கள் போல் கருதும் பாவி நெஞ்சம் எனக்கு இல்லை. நேஹால் கை விம்மித்தழையும் மார்பீன் மீதிருந்தது. கண்களினின்று நீர் தாரையாயவழிந்தது மறுவினாடி ‘அம்மா முடியாது, வேண்டாம்” என்று தேம்பிக்கொண்டு போய் கட்டிக்கொண்டாள்.
”அந்தப்புரத்து விதிகளைப் பற்றி பெண் சொல்வது சரிதானா” என்று தகப்பனார் பண்டிதரைக் கேட்டார்.
“அது சரிதான்.ஆனால் கொஞ்சம் நாள் கழிந்த பிறகு அதையெல்லாம் சாமர்த்தியமாக மாற்றிக் கொண்டு விடலாம்..”
‘சுவாமி அதெல்லாம் நடக்காது. ஆற்றில் சுழல் மிதப்பது அமுக்குவதற்காகத்தான்; மீளமுடியாது, உங்கள் எல்லோருக்கும் நான் சொல்வது வருத்த மாய் இருக்கும். வேண்டாம், மன்னித்து விடுங்கள்.
‘உன் கை பொய்யா, சாஸ்திரம் பொய்யா?’
”சுவாமி! எனக்கென்ன தெரியும்? வெறும் குடி யானப் பெண்ணை வித்தையின் சிகரத்தில் ஏற்றினீர்கள். கோமகளின் சிம்மாதனத்தையும் அளித்தீர் கள். எனக்குப் பொசிப்பு வேண்டாமா? மன்னிக்க வேண்டும்.”
பண்டிதர் பாதத்தில் நேஹால் விழுந்து வணங்கி னாள். இரண்டு சொட்டு சூடான கண்ணீர் அவர் பிரத்த்தில் விழுந்தது.
அதற்குப் பிறகு சிறிது நேரம் சென்றது. நிலை மையில் எவ்வித மாறுதலையும் காணோம். பண்டிதர் ஒன்றும் பேசாமல், சேவகன் சிறப்பைப் பின்னால் எடுத்து வர, குடிசையை விட்டு விஜயநகரம் கிளம் பினார். மெய்யா, பொய்யா என்று தனக்குத்தானே அவர் சொல்லிக் கொண்டு போனதின்பொருளை சேவகன் எப்படி அறிவான்?
இவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நேஹாலின் தகப்பனாருக்குப் பெரிய கிலி பிறந்து விட் டது. பெரிய இடத்து பகைமையல்லவா?
4
விஜயநகரம் வந்து, தேவராயரின் முன் பண்டி தரும். சேவகனும் நின்றார்கள்.
அவர்களுடைய முகமே எல்லாவற்றையும் ஒப்பு வித்துவிட்டது. அரசன் மனம் தீப்பிடித்தது. கடுமை யான குரலில் “போன காரியம்?” என்றார்.
பண்டிதர் உடல் வெதர, “அந்தப் பெண்ணுக்கு சம்மதமில்லை என்கிறாள்” என்றார்.
“அவள் சம்மதம் தெரிந்துகொள்ளாமலா இங்கே வந்தீர்.”
”அதில் எனக்குச் சந்தேகம் உண்டாகவில்லை.”‘
“அரண்மனையில் எது எட்டிப் பழமாம்?’
“அந்த அசட்டுப்பெண் அந்தப்புரத்தில் சேர்ந்து போனால் பிறகு தாய், தகப்பனையே பார்க்க முடியாதே என்ற ஒரே எண்ணத்தால்தான் சம்மதி மறுக்கிறாள்,’
“பண்டி தரே ! இனி அவள் சம்மதி தேவையில்லை அவள் என்ன காரணத்திற்காக மறுத்தாலும், அழகில்லாமலே இருந்துவிட்டாலும், அவளைக் கைப்பற்றி யே தீர்வேன்.”
தன் விருப்பத்தைப்பூர்த்தி செய்துகொள்ள ஏ ஏதோ திட்டமான யோசனை தேவராயர் செய்துவிட் டார் என்று தெளிவாயிற்று.ஐந்து நிமிஷம் சென் றது. தேவராயருடைய கண் சேவகன் பக்கம் சுழன்று வந்தபொழுது, அவன் வணங்கி ஒரு வார்த்தை சொல்ல அனுமதி கேட்டான்.
“சொல்லு,”
“அந்தப்பெண் குடியானவன் வீட்டில் பிறந்தே இருக்கக்கூடாது. குடியானவனுக்கு வாழ்க்கைப்படவும் முடியாது. ஹுஸுர் அந்தப்புறத்தைத் தவிர அந்த அழகுக்கு இருப்பிடம் இருக்கமுடியாது.”
“அவ்வளவுதானே, சரி, நீங்கள் போகலாம்.”
சேவகன் ஸ்தானத்திற்குப் போய்விட்டான். சாஸ்திரிக்கோ தன் சாஸ்திரம் பொய்யாகிவிட்ட நென்று கருதமுடியவில்லை; மெய்யாகிவிட்டதென்றும் கருத முடியவில்லை. அரண்மனையைவிட்டு வெளியே வந்த சாஸ்திரி அன்று விஜயநகரத்தின் எல்லையில் ஒரு சத்திரத்தில் பொழுதை ஓட்டினார்.
நள்ளிரவில் விஜயநகரத்தைவிட்டு காலாட்படை யும், குதிரைப் படையும் வெளியே சென்றன. இந்த ஓசையைக் கேட்டு எழுந்து பார்த்தார், படைகளுக்கு மத்தியில் மூடு பல்லாக்கொன்று சென்றது, அந்தப் பல்லாக்கையும் அதைச்சுற்றி எரிந்துகொண்டிருந்த தீவட்டிகளையும் கவனித்ததில் அதில்போவது அரசன் தான் என்று பண்டிதருக்குத் தெரிந்துவிட்டது.
அன்றைய தினம் பிற்பகலில் அரசர் திடீரென்று பிரயாண திட்டமொன்றை வகுத்து இரவே கிளம்பி விடவேண்டுமென உத்திரவிட்டிருந்தார். பெரிய படையுடன் அரசன் விஜயநகரைவிட்டுக் கிளம்பி அன்றிரவே துங்கபத்திரா நதிக்கரையைச் சேர்ந்தார்.
அரசன் பிரயாணங்களில் தன்னுடைய பஞ்ச கல்யாணிக் குதிரையைத்தான் கூடக் கொண்டுபோ வது வழக்கம். ஆனால், இப்பொழுது கூடக்கொண்டு வரும்படி உத்திரவிட்டிருந்த குதிரை வேறு; போர்க் குதிரை, நெற்றியில் வெள்ளைச்சுட்டி உள்ள இரும்பு வர்ணக் குதிரை; ரொம்ப பொல்லாதது. நள்ளிர வில் அந்தக் குதிரையின் மீது தேவராயர் ஏறிக் கொண்டு குதிரைப்படைத் தலைவன் பின்துடர, துங்க பத்திரா நதிக்கரையோரமாய்ப் பத்து மைல் நெருப் பைப் போன்ற கடுமையுடன் சவாரிசெய்தார். பிறகு கீழே இறங்கி குதிரைப்படைத் தலைவனிடம் தன் யோசனையைத் தெரிவித்தார்.
“நம்முடன் வந்திருக்கும் குதிரைப் படையில் கருங் குதிரைப்படை வீரர்கள் ஐந்தாயிரத்தைக் கூட்டிக்கொண்டு இரவு பகலாக முத்கல் நகரத்துக் குச் சென்று குடியானத் தெரு ஒன்பதாவது வீட்டி லிருக்கும் நேஹாலை அப்படியே தூக்கிக்கொண்டு வந்துவிடவேண்டும். பெண்ணை அடையாளம் காட்ட ஒரு சேவகனை அனுப்புகிறேன், நான் கிளம்பிய நோக்கம் இதுதான். ராஜ்யத்தைப் பார்த்துவர என்று சொல்லிக் கிளம்பினேனே அது ஒரு புரட்டு.”
“ஹுஸுர், ரொம்ப அபாயகரமான யோசனையாய் இருக்கிறதே.”
”ஏன்?”
“முத்கல் சுல்தான் பிரோஸ்ஷாவின் எல்லைக் குள் பட்டதென்று பாத்யம் கொண்டாடி வருகிறான் தவிர, அவனுக்கும் நமக்கும் எப்பொழுதும் புகைச் சல்; எது சாக்கென்று காத்துக்கொண்டிருக்கிறான் இதைப் பிடித்துக்கொண்டு விஜயநகரத்தின் மீது போர் தொடுத்துவிடுவான். இதற்கு நாம் தயாரா? சமாளிப்போமா?”
“சமாளிக்க முடியுமா என்ற கேள்வியே எழவில்லை. முஸ்லீம்களின் ஆதிக்கம் தக்காணத்திற்குத் தெற்கே பரவாமல் தடுப்பதற்காகவே விஜயநகர சாம் ராஜ்யம் தோன்றிற்று. இதுவரை அந்த நோக்கத் தில் வெற்றியே பெற்று வந்திருக்கிறோம். பிரோஸ் ஷாவின் சலசலப்புக்கு நாம் அஞ்சக்கூடாது. வருவது வரட்டும். கருங்குதிரைப் படையுடன் கிளம்பும் நேஹால் என்னும் அப் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வாரும். வலுவில் பாலும், பழமும் நீட்டி அன்புடன் அழைத்தோம், அது மறுத்ததாம். இப் பொழுது பிடித்துவந்து அந்தப்புறத்தில் அடைப்போம்.”
அரசருடைய உத்திரவில் உறுதி தொனித்தது.
“சரி” என்றார் குதிரைப்படை வீரர்.
துங்கபத்திரா நதிக்கரையிலிருந்த கூடாரத்தை நோக்கி அரசனும், குதிரைப்படை வீரனும் குதிரை களைத் திருப்பினர். அரசனுடைய குதிரை போன வேகம் சொல்லத்தரமன்று. குதிரையின் லகான் அரசன் கையிலிருந்ததாகவே தெரியவில்லை; காதலின் கையில் குதிரையின் லகான் இருந்தது. மலர் கணை யின் அம்பு குதிரையின் விலாவில் பாயும் முள்ளா யிற்று. பின் வேகத்திற்குக் கேட்பானேன்? குதிரை வீரன் அரசன் கூடாரம் சேர்ந்த பதினைந்து நிமிஷத் திற்குப் பிறகுதான் வந்தான்.
மறுநாள் காலை கருங் குதிரைப்படையில் ஐந்தாயிரம் முத்கல் நகரத்தை நோக்கிக் கிளம்பிற்று. அந்த இடத்திலிருந்து முத்கல் நாற்பதுமைல் வடக்கே இருந்தது. பகல் பதினொரு மணி சுமாருக்கு குதிரை படை முத்கல் நகரத்தை வளைத்துக்கொண்டது. படையில் ஐம்பது பேர் அடங்கிய ஒரு பகுதி குடியானத் தெருவுக்குள் நுழைந்தது. குறிப்பிட்ட வீட்டைப் போய் பார்த்தார்கள்.
வீடு திறந்திருந்தது. ஒருவரையும் காணோம். ஊருக்குள் இச்சிறு படை நுழையும்பொழுதே ஒரு சந்தேகம் முளைத்தது. ஊரில் ஜனநடமாட்டம் ரொம்ப குறைவாக இருந்தது. அங்கங்கே வீடுகள் திறந்து கிடத்தன. தெருக்களிலெல்லாம் சாமான்களை அப்புறப்படுத்திய அடையாளம் தெரிந்தது. இவர்கள் வருவதை அறிந்த ஜனங்களில் பலர் ஊரை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் மட்டும் இருந்தனர்.
குடியானத் தெருவில் வெய்யிலில் உணக்கை யாகப் படுத்துக்கொண்டிருந்தாள் ஒரு கிழவி. அவளைத் தவிர அந்தத் தெருவில் வேறு ஒருவரையும் காணோம். ஈட்டியின் அடிக்கட்டையால் ஒரு வீரன் கிழவியைக் குத்தி எழுப்பினான், அலரிப்புடைத்துக் கொண்டு எழுந்திருந்தாள்.
“எங்கே அந்த நடு வீட்டுப்பெண்?”
“யாரு?”
“அழகா.இந்தத்தெருவிலே ஒரு பெண் இருக்கிறாளே அவள்?”
“யாரு – நேஹாலா? அவங்களெல்லாம் எதோ பட்டாளம் வருதுன்னு செப்பலோடெ ஊரைவுட்டுப் போய்விட்டாங்களே. அவங்க மாத்திரமில்லே. ஊரிலே ரொம்பப்பேரு ஓடிப்போயிட்டாங்க….. நீங்க தான் பட்டாளமா?”
“எந்த ஊருக்குப் போனாங்க?’
“அது என்கிட்டே சொல்லல்லே எனக்குத் தெரியாது.”
குருவி தப்பிவிட்டது. குதிரைப்படை என்ன செய்யும்? ஏமாந்துபோன கோபத்தில் குதிரைப்படையினர் முத்கல் நகரத்தைச் சூரையாடிவிட்டு விஜய நகரத்தை நோக்கித் திரும்பினர்.
இதற்குள் இப்படையெடுப்பை அறிந்த பிரோஸ் ஷாவின் குதிரைப்படை ஒன்று கடுமையாய் அவர்களை தாக்கி இருநூறு வீரர்களை மாய்த்தனர்.
தேவராயருடைய பாக்கிக் குதிரைப்படை தப்பி விஜயநகரம் வந்துசேர்ந்தது. குதிரைப்படைத்தலை வன் அரசனிடம் சென்று குருவி பறந்து சென்றுவிட் டதல்லாமல், பிரோஸ்ஷாவினுடைய நகரத்தின் மீது இப் படையெடுப்பின் காரணமாக யுத்தம் தொடங் கக்கூடுமென்ற செய்தியையும் தெரிவித்தான்.
தேவராயரின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒரு வாரம் வரையில் ஒரே ஏக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஒருவாரத்திற்குப் பிறகுதான் ராஜ்யத்தின் நினைவு வந்தது. நேஹால் போய்விட்டாள்? அதற்காக விஜயநகரத்தையும் இழந்துவிடுவதா என்ற நினைப்பு வந்தவுடன் பெரிய முற்றுகை நேரிட்டால் சமாளிக் கக்கூடிய முன் ஏற்பாடுகளை எல்லாம் செய்யும்படி தன்னுடைய போக்குவரத்து இலாகா, உணவு இலாகா, ராணுவ இலாகா இவைகளுக்கு உத்திரவு அனுப்பிவிட்டு யுத்தத்தை எதிர்பார்த்திருந்தார்.
5
எதிர்பார்த்தது வீணாகவில்லை. 1406 வருஷம் மழைக்காலத்தில் சுல்தான் பிரோஸ்ஷா பெரிய சேனை யுடன் விஜயநகரத்தை முற்றுகையிட்டான். முற்று கையின் முதல் தாக்குதலில் சில தெருக்கள் சுல்தான் வசமாயின. ஆனால், ஒருநாள் தான் அவர் வசமிருந்தது. மறுதினம் தேவராயருடைய கர்னாட கப்படை கடுமையாகச் சுல்தானின் படைகளைத் தாக்கி, இழந்த தெருக்களை மீட்டுக்கொண்டன.
இவ்வெற்றியால் தைரியம் கொண்ட தேவராயர் அரண்மனையைவிட்டு மதிலோரம் கூடாரமடித்துக் கொண்டு பிரோஸ்ஷா கூடாரமடித்துக் கொண்டி ருந்த இடத்தில் தொந்திரவு செய்ய ஆரம்பித்தார். எதிர்பாராத வேளைகளில் அம்புகளை சுல்தானின் கூடாரம் நோக்கிச் சரமாரியாக விடுதல், காலாட் படை வீரரை அனுப்பிக் கலவரம் உண்டாக்குதல் இப்படித் தொந்திரவு செய்த பொழுது சுல்தான் படை பலத்தைச் சரியாக உபயோகிக்கக்கூட வில்லை.
விஜயநகரத்தைச்சுற்றி பூமியானது பாராங்கல்லாக வும். மேடுபள்ளமாகவும் இருந்ததால் சுல்தானின் குதிரைப்படை போர் செய்ய வசதியின்றி தவித்தது. இதனால் சுல்தான் தரப்பில் எல்லோரும் சோர் வடைந்தனர். போதாக்குறைக்கு எதிரியின் ஓர் அம்பு சுல்தான் கையில் பாய்ந்து விட்டது. அப்படி யும் சுல்தான் இடத்தைவிட்டுப் பெயரவில்லை. அப்பொழுது சுல்தான் கட்சியைச் சேர்ந்த அகமது கான், கான்கானான் என்பவர்களுடைய தலைமையின் கீழ் வந்த படைகள் தேவராயரின் படைகளைத்தாக்கி, சின்னாபின்னப் படுத்தவே தேவராயர் தன் நகரத் திற்குள் வாபீஸானார். அதற்குப் பிறகு சுல்தான் அவ்விடத்தை விட்டுப்பெயர்ந்து ஹாஸ்பெட் நகரத் திற்குத் தெற்கே உள்ள பரந்த சமவெளிக்கு திரும் பினார்.
இங்கே சுல்தான் கூடாரமடித்துக் கொண்டு தன் படைகளுடன் நான்கு மாதம் தங்கினார்.தேவ ராயரின் நகர எல்லையைவிட்டு சுல்தான் விலகிவிட்ட போதிலும் அவர் படையை முறியடித்துப் பணிய வைத்ததாக ஏற்படவில்லை. ஆகையினால் சுல்தான் சமவெளியிலிருக்கும் வரையில் தேவராயர் தன்நகரத் தில் கைதியானவரைப் போலவே வாழவேண்டியிருந் தது. ஏனெனில் அவ்வப்பொழுது சுல்தானின் குதிரைப்படை விஜயநகரத்தின் தெற்கு பாகத்தைத் தாக்கி பொருள் சேதமும், உயிர்ச்சேதமும், தொந்தி ரவும் உண்டாக்கிற்று. இக் குதிரைப்படை பங்காப் பூர் கோட்டையைக் கடுமையாகத்தாக்கி கோட்டை யையும், அறுபதினாயிரம் ஹிந்துக்களையும் கைப்பற் றியது. பிறகு சுல்தான் விஜயநகர முற்றுகையைத் தொடர்ந்து நடத்தும்படி தன் தலைவன் கான்கானானுக்கு உத்திரவிட்டுவிட்டு, எதிரியின் அடோனிக் கோட்டையைத் தான்கைப்பற்றுவதாகக் கிளம்பினார்.
கான்கானானுடைய விடாமுற்றுகையால் தேவ ராயர் ஆயாசமடைந்து, சுல்தானிடம் சமாதானம் கோரினார். சுல்தான் சமாதானத்திற்குப் போட்ட நிபந்தனைகள் ரொர்ப கடுமையாகவும், அவமானகர மாகவும் இருந்தன. தேவராயர் தன்னுடைய பெண்ணை சுல்தானுக்கு மணம் செய்து கொடுத்து விடவேண்டியது, ப்ங்காப்பூரை நிரந்தரமாக சுல்தா னுக்கு வீட்டுக்கொடுத்துவிடவேண்டியது இவை தான் முக்கிய நிபந்தனைகள்.
தேவராயர் வம்சத்து ஸ்திரீகள் பிற ஜாதி யினரை மணம் செய்துகொள்வது வழக்கமில்லை. ஆனால் இப்பொழுது அவ் வழக்கத்தை கௌரவிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. தான் தோல்வி அடைந்ததின் காரணமாக இந்த நிபந்தனையை தேவராயர் ஒப்புக்கொண்டு பெண்ணை சுல்தா னுக்கு மணம் செய்வித்தார். மணத்தின் காரண மாக வேனும் அரசியல் சிக்கல் தீரக்கூடும் என்பது அவருடைய கனவு. ஆனால், அது நடக்கவில்லை.
சுல்தான் தன் புது மனைவியுடன் விஜய நக ரத்தைவிட்டு பல்லாக்கில் சென்ற பொழுது தேவ ராயர் நான்கு மைல் தூரம்வரையில் பல்லாக்கில் வந்து வழி அனுப்பிவிட்டுத் திரும்பினார். தன்னுடைய கூடாரம் வரை தேவராயர் வராமல் நான்கு மைலிலேயே திரும்பிப் போனதைப் பெரிய மரியா தைக் குறைவாக சுல்தான் கருதி, தேவராயரைத் தாறுமாறாக வைதான். இதைக் கேள்வியுற்ற தேவ ராயர் சினங்கொண்டு சுல்தானைத் தாறுமாறாக வைதார். மணத்தின் மூலம் சுல்தானுக்கும் விஜய நகரத்திற்குமுள்ள அரசியல் உறவு உறுதிப்படும் என்று நினைத்ததற்கு மாறாக இருவருக்குள்ளும் வைரம் வளர்ந்தது.
6
அதற்குப்பிறகு சுல்தான் தன் தலை நகரத் திற்குத் திரும்பினார். அப்பொழு து ஒரு எண்ண முண்டாயிற்று; இவ்வளவு சண்டைக்கும் மூல காரணம் ஒரு பெண் அல்லவா? அவளைப்பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று. நேஹாலை அரண் மனைக்கு அழைத்து வரும்படி கட்டளை பிறப்பித்தார்.
தேவராயர் மீது சுல்தான் படை எடுத்துவிட்ட செய்தியைக்கேட்ட முத்கல் நகரத்து ஜனங்கள் எல்லோரும் தாங்கள் வெளியேறிச் சென்றிருந்த இடங்களை விட்டுவிட்டு முத்கல்லுக்கே திரும்பிவிட் டார்கள். நேஹால் குடும்பத்தினரும் எல்லோரையும் போல் திரும்பிவிட்டார்கள்.
ஒரு நாள் பகல் மூன்று மணிக்கு சுல்தானின் காரியதரிசி ஒருவன் முத்கல் நகரத்துக்கு வந்து நேஹாலை சுல்தான் பார்க்க விரும்புவதாக நேஹா லின் தகப்பனாரிடம் தெரிவித்தான். நேஹாலின் தகப்பனாரும், நேஹாலும் திடுக்கிட்டார்கள். நேஹாலை பார்க்க விரும்புகிறார் என்று சொன்னதின் குறிப்பை நேஹால் உணர்ந்தாள். ஹிந்து அரசனின் அந்தப்புரத்தை உதறித்தள்ளினோமே அதற்குத் தண்டனையாக முஸ்லீம் ஜனானா வென்னும் சிறை யல்லவா வரும் போல் இருக்கிறது என்று நினைந்து உருகினாள். ஆனால், சுல்தான் உத்திரவை மீறக்கூட தைரியம் ஏது? தலைசாய்த்துக்கொண்டு நேஹாலும், அவள் தகப்பனும் அரமணைக்குச் சென்றனர்.
நேஹாலைப் பார்த்த சுல்தான் அவள் அழகில் பிரமித்துவிட்டார். தேவராயரை தூண்டி எழுப் பிய அழகைக் கண்டுமோகித்தார். நேஹாலை இனி குடியானத் தெருவுக்கு அனுப்புவதில்லை என்று தீர் மானித்து பெண்ணின் தந்தையுடன் பேசினார்.
‘உம்முடைய பெண் இனி உம்வீடு திரும்ப மாட்டாள்.’
தகப்பனார் இப்பேச்சைக்கேட்டு நடுங்கிக் கொண்டே ‘சுல்தான் சாகிப் நான் ஏழை தங்கள் உத்திரவை எப்படி மீறுவேன்?’ என்றார்.
‘வேண்டுமானால் மீறிப் பார்க்கலாம்.’
‘தங்கள் சித்தபடி செய்ய காத்திருக்கிறேன். ஏழைக்கு சுதந்திரமோ, வலுவோ ஏது – மீற’.
நேஹாலை என் மகன் ஹஸன் கானுக்கு நீர் மணம் செய்துதரவேண்டும்.
‘பெண்ணின் சம்மதத்தைப்பெறவேண்டாமா?’
‘பெறுவோம் நேஹால்! என்ன சொல்கிறாய்? என் சாம்ராஜ்யத்தின் வார்சுக்குப் பட்டமகிஷியாவதில் உனக்கு விரும்பம் உண்டா, இல்லையா?’
தேவராயர் சொல்லி அனுப்பியபொழுது நேஹாலுக்கு இருந்த மனோநிலை இப்பொழுது இல்லை. ஹிந்து ராஜா தர்மத்திற்குப் பயந்தவன் என் ற உணர்ச்சியில் துணிவுடன் மறுத்துவிட்டாள். முஸ் லீம் அரசன் தர்மத்தை மதிக்கமாட்டான். அவள் மறுத்துவிட்டால் அதை முஸ்லீம் அரசன்’ கௌர விக்கப் போவதில்லை. சம்மதிக்காவிட்டால் கட்டாய மாகவேனும் மணம் செய்து கொண்டுவிடுவான், அவமானமடைந்தது தான் மிஞ்சும். இவற்றை யெல்லாம் நினைத்து வேம்பை விழுங்குவதுபோல் தனக்குச் சம்மதம் என்றாள்.
மறுநாள் ஹஸன் கானுக்கும், நேஹாலுக்கும் அரசாங்க ஆடம்பரத்துடன் மணம் நடந்தேறிற்று.
சுல்தான் குடும்பத்தினருக்குச் சந்தோஷம் கரை புரண்டோடியது நேஹால் குடும்பத்தினர் மனம் மட்டும் இடிந்திருந்தது நேஹாலைப் பற்றிக் கேட்பானேன்?
மறுநாள் போக மாறுநாள் ஏகாந்த அறையில் இருக்கும் பொழுது ஒரு ஏழைப் பிராமணன் அரசகுமாரனையும், நேஹாலையும் பார்க்கவிரும்பு வதாக சொல்லி அனுப்பினான்.
‘இப்பொழுது பார்க்க முடியாது. பிறகு வரட்டும்’ என்றார் ஹஸன்கான்.
‘பிரபு! அப்படி அன்று, வந்திருக்கும் ஆளின் பேரைத்தெரிந்து வரச்சொல்லுங்கள்.’
சேவகன் போய்த்திரும்பி வந்து ‘ரேகை சாஸ்திரி’ என்றான்.
‘வரச்சொல். நான் உங்களுக்கு வாய்த்தது அவருடைய வாக்கின் மகிமை. அவர் வரட்டும் என்றாள் நேஹால்.
ரேகை சாஸ்திரி இரண்டு எலுமிச்சம் பழத்தைக்கொண்டு வந்து இளவரசனுக்கொன்றும், நேஹாலுக்கு ஒன்றுமாகக் கொடுத்துவிட்டு ஒரு நிமிஷம் மௌனமாயிருந்தார். பிறகு நேஹாலைப் பார்த்துச்சொன்னார்,
நேஹால்! சூரியன் பொய்யானாலும் ரேகை பொய்யாகாது. காசுக்காக நான் ரேகை பார்ப்பதில்லை. உன் ரேகையைப் பார்த்தே, உன் அதிருஷ்டத்தை எதிர்பார்த்தே வலுவில் வந்து உனக்குக் கலைப்பயிற்சி அளித்தேன். நீ ராணி ஆகிவிட்டாய். என் ஏமாற்றமும். ஏக்கமும் தொலைந்தன. மனம் குளிர்ந்தது. உன்னைப்பார்க்க வந்தேன். போய்வருகிறேன் என்று சொல்லித் திரும்பினார்.
‘கொஞ்சம் இருங்கள்’ என்று நேஹால் கூறி விட்டு இளவரசனிடம் தன் வரலாறு முழுவதையும் சொன்னாள். இளவரசன் ஆச்சர்யமடைந்து, தன் கூடவே ரேகை சாஸ்திரியை அழைத்துப்போய் கோல்கொண்டா வைரமாலை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.
ரேகை சாஸ்திரி அரண்மனை வாயிலைக் கடந்து வெளியே செல்லும் சமயம் நேஹால் தன் அறையில் துயர் தேங்கும் குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.
வழியோரம் வனழல்லிகை
தேன்கோப்பை திறந்துவைத்து
அழது பட்டுப்பூச்சி வரும்
இனிதளிப்போம் என்றிருக்க;
கார் முகிலாம் கருவண்டொன்று
கள்வெறியில் குறிப்பில்லாமல்
பாரிலெங்கும் பறந்துவந்து,
கள்கிண்ணியைக் கண்ணுறவே?
காதல்நயம் கண்டிடாமல்
பாய்ந்ததுபார் மலர்க்கிண்ணியில்!
காதலுக்கு ஏங்கும் மலர்
சாய்ந்ததய்யோ வேதனையில்!
– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி.