நெற்றியில்…நெஞ்சில்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2025
பார்வையிட்டோர்: 239 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னடி அது, கூட்டுகிற சத்தத்தைக் காணோம்?”

“இதோ, பெருக்கிக்கிட்டுதானேம்மா இருக்கிறேன். பீரோ கண்ணாடியைத் துடைச்சேன்.” 

“கண்ணாடியைத் துடைச்சியா, கண்ணாடியை! கண் ணாடி எதிரே நின்று கொண்டு, அழகைப் பார்த்துக்கிட்டே போலிருக்கு. வரவர உனக்கு ‘ராங்கி’ அதிகமாகுதடி நண்டு” 

‘நண்டு’ என்று அழைக்கப்பட்ட வேலைக்காரியின் உண்மையான பெயர் மீனாட்சி. வேலைக்கு வந்த அன்று, என்னடி பெயர்?” என்று எஜமானி கேட்டபோது, ‘மீனா வுங்க’ என்று பணிவுடன் பதில் சொன்னாள் வேலைக்காரி. “மீனும், நண்டும்” என்று கூறிக் கொண்டே மின்னல்கொடி யாள் சிரித்தாள். மீனாவுக்குத் தெரியுமா, அந்தச் சிரிப்பு எவ்வளவு அழுத்தக்காரர்களின் பெட்டிகளை எல்லாம் திறந்திருக்கிறது என்று. அவள் மரம்போல நின்றாள். அன்று முதல் மின்னல் கொடியாள், மீனாவை ‘நண்டு’ ஆக்கினாள். 

அன்று மின்னல் கொடியாளுக்குப் பிரத்யேகமான சந்தோஷம். ஜெமீன் குடிகளின் பாதுகாப்புச் சங்கத் தலை வர் ஜெயச்சந்திரர், மின்னல் கொடியாளின் முதலியாரிடம் ஒரு பந்தயம் கட்டினார். அதாவது, முதலியாருக்கு ஆண் குழந்தை பிறக்குமென்று—இல்லை; பெண்தான் என்று முதலியார் கூறினார். 

“ஆண்” என்றார் ஜெயச்சந்திரர். 

“பந்தயம் என்ன?” என்று மின்னல் கொடியாள் கேட்டாள்.  

“ஒரு வைர திருகுபில்லை” என்றார் ஜெயச்சந்திரர். 

ஒரு வாரத்திற்கெல்லாம், முதலியாருக்கு பெண் குழந்தை’ பிறந்தது! (வீட்டில் முதலியாரின் மனைவிக்கு) ஜெயச்சந்திரர் தோற்றார். அதற்காக அவர் வருத்தப்பட வில்லை – கொஞ்சம் முந்திக் கொண்டதால், அவள் முதலி யாரின் பொருளாகிவிட்டாள். இல்லாவிட்டால் ஜெயச்சந் திரன் 

மின்னல் கொடியாளுக்காகப் போட்டியிட்டவர் பலர். ஏழாவது கீர்த்தனை முடிப்பதற்குள் பாட்டு வாத்தியாருக் கும் பக்க வாத்தியாருக்குமே பலமானபோட்டி.சங்கீத விஷய மாக அல்ல — மின்னல் கொடியாள் விஷயமாகத்தான்! 

ஒருமுறை மின்னல் தாளம் தவறிவிட்டாள் – பாட்டு வாத்தியாருக்கு, அது ஓர் அற்புதமான சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. 

‘தக்க தக்கிட்டா…தக்க தக்கிட்டா’ என்று உச்சரித்த படி சிட்டிகை போட்டுக் காண்பித்தார். பிறகு மின்னலின் தொடையிலே அவரே அந்தத் தாளத்தைப் போட்டுக் காட் டினார். பாட்டு வாத்தியாருடன் ஒவ்வொரு நாளும் தவ றாமல் வந்து மின்னலின் கீதப் பயிற்சியைக் கவனித்து வந்த பிடில் முத்தையாவுக்குப் பிரமாதமான கோபம். “எப்படி யய்யா… மின்னல் கொடியாளைத் தொட்டுத் தாளம் போட் டுக் காட்டலாம்? ஏன், சொன்னால் போதாதா?” என்று கேட்டார். 

“அட, அபசுரமே! நீயா என்னுடைய ஞானத்தைக் குறைகூற வந்துவிட்டாய்?” என்று பாட்டு வாத்தியார் கண்டித்தார். 

“ஏனய்யா! உங்க ரெண்டு பேருடைய வித்துவத்தைப் பற்றி விவாதித்துக் கொள்ள என் வீடுதானா இடம்? இதற்குத்தானா…மாதம் பதினைந்து?” என்று, மின்னலின் தாயார் முருகாயி கூறி பபிறகுதான், தாளச்சண்டை ஓய்ந் தது. இப்படிப் பலருக்குள் போட்டியை, சண்டையை மூட்டி விட்ட மோகனச் சிரிப்புக்காரி அந்த மின்னல்கொடியாள். 

ஜெயச்சந்திரர் பரிசாகக் கொடுத்த வைரத் திருகுபில் லையை வைத்துக்கொண்டு கூடத்திலே ஜவ்வாது பொட் டைச் சரிபார்த்துக் கொண்டிருந்த சமயம் அது. படுக்கை யறையைக் கூட்டப்போன மீனா, நிலக்கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள், இரண்டொரு நிமிஷம்! கூட்டும். சத்தம் கேட்காது போகவேதான், மின்னல் ‘நண்டு’வைக் கூப்பிட்டாள். கூப்பிட்டு, ‘அழகைப் பார்த்துக் கொள்கிறா யாடீ!’ என்று கேட்டாள். இல்லையென்று சொன்னாள் மீனா. அது, உண்மை -பொய் இரண்டும் கலந்த பேச்சு. மீனா கண்ணாடியைத் துடைக்கவில்லை–பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்-ஆனால் அவள் தன் அழகைப் பார்த்துக் கொள்ளவில்லை. நெற்றியிலே இருந்த வீக்கத்தைப் பார்த்துக் கொண்டாள். அவளுக்குக் கிடைத்த பரிசு அது. 

அவள் கணவன், “கோழிச் சண்டை விடுபவன்! எத்தனையோ விதமான தொழில் செய்து பார்த்து, கடை சியில், அவன் இந்தத் தொழிலைக் கண்டுபிடித்தான். நாளும் பள்ளிக்கூடத்துக்கு முன்புறம் கோழிச்சண்டை விடுவான் காசு திரட்டுவான். பந்தயம்கூடக் கட்டுவார்கள் சிலபேர். கோழியை, மில்டரி ஓட்டல் சின்னான் வாடகைக்குத் தந்து வந்தான். அதாவது, வாரத்துக்கு ஒரு ஜதை கோழி தரு வான். எப்படியோ பாடுபட்டு, அந்தக் கோழிகளுக்குச் சண்டை போடக் கற்றுக்கொடுத்து விடுவான், கொண்டான். ‘கொண்டைய நாயுடு’ என்று கையிலே- பெரிய எழுத்திலே ‘பச்சை’ குத்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால் ஊரார் அவனை, ‘கொண்டான்’ என்றுதான் அழைப்பார் கள். கோழிக்கும் சண்டை போடும் திறமை வரும். ஞாயிற் றுக்கிழமையும் வந்துவிடும்-அன்று ஸ்பெஷல் கோழிப்புலவு தயாராகிவிடும் – புதிய கோழிகள் கொடுப்பான் சின்னான், திங்கட்கிழமை. இப்படியே கோழிகள் மாறிக் கொண்டே இருக்கும், கோழிகளின் திறமைக்குத் தக்கபடி. கொண்டா னுடைய போதை ஒரு நாளைக்குக் கைலாயம் வரை அழைத் துச் செல்வதாக இருக்கும். ஒரு நாளைக்கு எறும்பு கடித்த மாதிரி மட்டுமே இருக்கும். இந்த போதையின் அளவிலே அவன் அக்கரை காட்டி வந்ததால் வாடகைக்குப் பெறுவதை விட, சொந்தத்திலே வாங்கி விடலாமே என்ற எண்ணம் பிறக்கவில்லை. பிறந்தாலும், ‘மாலையிலே அந்தச் சோலை யிலே உள்ள மயக்க மருந்து’ அந்த எண்ணத்தைக் கொன்று விடும். 

வாடகைப் பணத்தைச் சரியாகச் சிலசமயம் கொடுக்க மாட்டான் கொண்டான். கெஞ்சிப் பழக்கமில்லாதவன். எனவே, கோபமாகவே வீட்டுக்கு வருவான். மிகவும் கஷ்டப் டட்டு விஷயத்தைத் தெரிந்து கொள்வாள் மீனா.பிறகு அந்த மில்டரி ஓட்டல் அண்ணனைப் பார்த்து, நல்லதனமா கப் பேசி, கோழிகளைக் கொடுக்கும்படி சொல்வாள். அவ னும் கொடுப்பான். மீனாவின் நடை, நொடி, பாவனை, முகவெட்டு எல்லாம் சின்னானுக்குப் பிடித்திருந்தது.ஆனால் ‘அண்ணேன்’ என்று அவள் கூப்பிடும்போது மட்டும் அவனுக் குக் கண்ணில் சால்னா’த் துளி விழுந்த மாதிரி எரியும். ‘அண்ணே’ என்று மீனா சொன்ன உடனே, சின்னான், “ஏண்டியம்மா தங்கச்சி.” என்று கேலியாகப் பதிலளிப் பான். முன் வார்த்தை தூது; பின்னால் வரும் வார்த்தைகள் சும்மா ஒப்புக்குக் கூறுவது என்பது அவன் எண்ணம். மீனா வுக்கு அவனுடைய போக்கு புரியாமல் போகவில்லை. ஆனால் கொண்டானுக்குத் துரோகம் செய்ய அவள் மனம் ஒப்பு வதில்லை. கோழி வாங்கிப் போக வரும்போது, ஒரு ‘கப்’ சாயாவும் சின்னான் தருவான். “ஏண்ணே! அவருக்கு ஒரு ஜதை கோழியை விலைக்கேதான் வாங்கிக்கொடேன். நீதான் பகவான் புண்ணியத்தாலே நல்லா சம்பாதிக்கிறியே. இந்த உபகாரம் செய்யறதானே அண்ணே.” என்று மீனா கேட்பாள். சின்னான் பரம திருப்தி அடைவான். 

“ஆவட்டும் தங்கச்சி! செய்வோம்… எனக்கும் ரொம்ப நாளா… மனசிலே எண்ணம் உண்டு. எதுக்கும் வேளை வர வேணுமில்லே” என்று கூறுவான். மீனா அவன் எதற்கு வேளை தேடுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளாமலில்லை. அவளுடைய எண்ணமெல்லாம் எப்படியாவது தட்டிக் கொடுத்துக் கொண்டே சின்னான் உதவியைப் பெற்றுத் தன் புருஷனை ஒருவழிக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். சின்னானின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. இஷ்டமில்லை–அத்தகைய சுபாவக்காரியல்ல… ஆனாலும், அவனிடம் சண்டை போட்டுக் கொள்ளவும் இஷ்டமில்லை. என்னமோ ஒழிந்து போகிறான்- நம் வரையில் நாம் ஜாக் கிரதையாக இருப்போம் என்று அவள், பாவம், எண்ணிக் கொண்டிருந்தாள். 

மின்னல் கொடியாளுக்குப் பரிசு கிடைத்த அன்றுதான், வழக்கத்துக்கு மாறாகச் சின்னான், கோழி கேட்க வந்த மீனாவை, “தங்கச்சி! நல்ல சமயத்திலே வந்தே! வா, வா!” என்று அழைத்தான்-கபீரென்று இருந்தது மீனாவுக்கு; ஒருவிதமாகிவிட்டது.. இருந்தாலும் தைரியத்தை வரவழைத் துக் கொண்டு, என்னாண்ணே! அவ்வளவு அக்கரையாக என்னைத் தேடின காரணம்?” என்று கேட்டாள். 

“தா! இத பாரு மீனா…நான் எப்பவும் மனுஷாளை மறக்கற வழக்கம் கிடையாது!” என்று பொதுவான தத்து வம் பேசினான் சின்னான். 

இவ்வளவும் கடையின் தாழ்வாரத்தில் நடக்கிறது. 

கடை அமைப்பே அவளுக்கு அன்றுதான் கொஞ்சம் பயம் தந்தது. தாழ்வாரத்துக்கும், உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் கொஞ்ச தூரம்தான் இருந்தது. ஒருவருக்கொருவர் தெரிய முடியாது; குறுக்கே இருந்த சுவரை எடுக்கும் விஷயமாக, கட்டடக்காரருக்கும் சின்னா னுக்கும் தகராறு. 

“கொஞ்சம் மாவு இடிக்க வேணும் மீனா. ஆள் வர வில்லை” என்று சேதியை ஆரம்பித்தான் சின்னான். 

”அடேயப்பா! இதுக்கா… தேடினேன், தேடினேன்னு சொன்னே! அதுக்கென்ன, இடித்துத் தர்ரேன். எங்கே உரல் இருக்கு?’ என்று கேட்டாள், மீனா. 

“புழக்கடை நடையிலே இருக்கு. நீ போ. நான் ஆளை அனுப்புகிறேன்” என்றான். 

உண்மையாகவேதான் அரிசியை ஆள் கொண்டு வந்து கொடுத்தான் – மகிழ்ச்சியாகவே மீனா மாவு இடித்துக் கொண்டிருந்தாள். ஓட்டலில் கூட்டம் குறைந்தது. குறும்புக் காரராக இருந்த இரண்டோர் ஆட்களை, கடைவீதிக்கு வேறு வேலையாக அனுப்பிவிட்டான் சின்னான். முஸ்தீபு செய்து கொண்டு, ‘கல்லா’வில் வேறு ஆளை உட்காரவைத்து விட்டு, மாவிடிக்கும் இடம் சென்றான். அவன் வந்த பிறகு தான் அந்த இடமும் ஒரு குகைபோல இருப்பது தெரிந்தது, மீனாவுக்கு! கொஞ்சம் பயந்தாள். சின்னான் அவளருகே சென்று கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்தான். அவளும் அவனைக் கவனிக்காதவள்போலவே மாவிடித்துக் கொண்டி ருந்தாள். “வேலை நடக்கட்டும்!” என்று கூறிக் கொண்டே அவளை அவசரமாக ஒரு முத்தமிட்டான். அவன் பிடியிலி ருந்து விலகினாள் வேகமாக. அந்த வேகத்திலே, எதிரிலிருந்த சுவரிலே மோதிக் கொண்டாள். நெற்றியில் சிறிது காயம்; வீக்கம்! சின்னான் சரேலென அந்த இடத்தைவிட்டுப் போய் விட்டான். வழக்கமாக உட்காரும் இடத்தில் சென்று, சோக மாக உட்கார்ந்து கொண்டான். 

அவள் மாவு இடித்துவிட்டு, அதனை ஒழுங்காகத் தட்டிலே கொட்டி, ஓட்டல் ஆளிடம் கொடுத்துவிட்டு வீடு வந்தாள்.வரும்போது அவளும் சின்னானிடம் ஒன்றும் பேச வில்லை; சின்னானும் அவளைக் கவனிக்காதது போலிருந்து விட்டான். கோழிகளை மட்டும் ஓட்டல் ஆள் கொடுத்தான். 

அந்த நெற்றி வீக்கத்தைத்தான் மீனா, மின்னல்கொடி யாளின் படுக்கையறைக் கண்ணாடி முன்பு பார்த்துக் கொண்டிருந்தாள். 

நான்கு வருடங்களாகிவிட்டன. நானாவிதமான மாறு தல்கள்! கொண்டான் சிறை சென்றுவிட்டான். சின்னான் பெரிய ஓட்டல்காரனாகிவிட்டான், குடிவகையும் கொடுத்து வாடிக்கைக்காரரைப் பெருக்கிக் கொண்டு. முதலியாரை தேர்தல் சுரண்டிவிட்டது! ஜெயச்சந்திரருக்குத் தோல்வியும் தேய்பிறையும், சொத்தில்- செல்வாக்கில் சகலத்திலும் மின் னல் கொடியாளிடம்! 

இப்போது மீனா பணிப்பெண் அல்ல; பிரபல ஓட்டல் முதலாளி சின்னானின் வைப்பு. குதிரை வண்டியில் வந்து இறங்குகிறாள், மின்னல் வீட்டுக்கு. “வாடிம்மா மீனா!” என்று வரவேற்கிறாள் மின்னல்.“என்னக்கா, உடம்புக்கு?” என்று சுகம் விசாரிக்கிறாள் மீனா. பழைய பீரோவும். நிலக்கண்ணாடியும் இப்போது அங்கு இல்லை. மீனாவின் நெற்றியில் திலகம் கொஞ்சம் கலைந்தி ருக்கிறது. மின்னல், அதனைச் சரிசெய்து விடுகிறாள். அவள் கையில் அந்தத் தழும்பு தென்படவில்லை. நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! மேலும், மீனாவின் தழும்பு நெற்றியிலிருந்து மறைந்து இருதயத்தில் பதிந்துவிட்டது. 

அவள் விபச்சாரியாகிவிட்டாள். அக்காவுக்கு மற்றொரு தங்கை! ஆண்களின் காமப்பசிக்கு மற்றோர் இரை! சமுதாயத்துக்கு மற்றோர் சனியன்! வறுமையில் புழுத்த புழு! 

– இந்தக் கதை 1962-ல் ‘இனமுழக்கம்’ பொங்கல் மலரில் வெளிவந்தது.

– இரு பரம்பரைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *