நெத்தியடி..




அம்மா காமாட்சி இறந்த பின்பு எல்லாமே அக்காதான் விஷ்ணுவுக்கு. காயத்ரியும் பாசமழை பொழிவாள். இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். ஓடிப்போன அப்பா இன்றுவரை திரும்பவில்லை.
தான் கல்லயாணம் செய்து கொண்டு போய்விட்டால் தம்பி என்ன செய்வான் பாவம் என்று இன்றும் முதிர்கன்னியாக வாழ்ந்து வருகிறாள் ஆசாபாசங்களை ஒழித்து.
டியூஷன், தையல், Aariwork, Home made பொடி,வடாம் என்று சுய தொழில் செய்து கொண்டு ஓரளவுக்கு பிஸியாகவே சராசரி வாழ்க்கை ஓடுகிறது இவர்களுக்கு. விஷ்ணுவக்கும் டீசன்டான வேலை..

டும்..டும்..டும்.. காயத்ரி நாத்தனார் ஆகிறாள். அம்மா ஸ்தானத்தில் இருந்து விஷ்ணுவுக்கு கல்யாணம் செய்து வைத்தாள்..ஆரம்பத்தில் ப்ரீத்தி-காயத்ரி equation, smooth ஆகத்தான் போய்க் கொண்டிருந்தது. நாளாக ஆக ஈகோ.
ப்ரீத்தியும் வேலைக்கு செல்வதால் இவர்களின் செல்லக் குழந்தை ஆதவ் வையும் சேர்த்து எல்லா குடும்ப வேலைகளையும் மொத்தமாக இழுத்து போட்டுக்கொண்டு பார்த்து வருகிறாள் காயத்ரி.
மிகவும் ஊதாசீனப்படுத்தி கொச்சையாக பேசி இழிவு படுத்தி வந்தாள் ப்ரீத்தி. இத்தனைக்கும் அவளது குழந்தையை அளவுக்கு அதிகமாக பாசத்துடன் வளர்த்த போதிலும். ஆதவ் அப்படியே குட்டி விஷ்ணு தான் அச்சு அசல்.
ஆதவ்..அத்தையையும் அம்மா என்றே அழைப்பான். அப்பா, அம்மாவை விட காய்த்ரியிடமே ஒட்டிக்கொள்வான் தூங்கும்போது கூட. இளமைக்காலத்தில் அக்கா..அக்கா என்று எந்த அளவுக்கு பாசப்பிணைப்போடு இருந்தானோ, அது மொத்தமாக மிஸ்ஸிங் விஷ்ணுவிடம்.
அவனுக்கென்று ஒரு பெண் கிடைத்த பிறகு இப்படியாக மாறவது சகஜம் தானே என்று காயத்ரியும் ப்ரீத்தி செய்யும் தவறுகளை அவனிடம் தெரிவிப்பது இல்லை. அவர்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்ந்தால் போதும் என்று அமைதியாக இருந்து வரும் வேளையில்..
ஒரு நாள்..
இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி பெரிய தகறாக மாறியது. Body shame செய்தாள் காயத்ரியை. என்ன தொழில் செய்து உன் தம்பிய இவ்வளவு படிக்க வெச்சியோ.. யாருக்குத் தெரியும் என்று கேவலமாக திட்டினாள் கோவத்தில்.
ப்ரீத்தி..நிறுத்திக்கோ.. தேவை இல்லாத வார்த்தையை விடாத. விஷ்ணுவுக்கு தெரிஞ்சா விபரீதமா போயிடும். இப்பவரைக்கும் உன் அட்டகாசத்தை அவனிடம் சொல்லாம இருக்கேன் ஜாக்கிரதை.
ஓஹோ..தம்பியையே கைக்குள்ளே போட்டுக்கிட்டயா..நல்ல குடும்பம் என்று வரம்பு மீறி பேசியதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த விஷ்ணு.. பளார் பளார் என்று அறைந்தான் ப்ரீத்தியை. யாரைப் பார்த்து என்ன பேசற. நம்ம ரெண்டு பேரும் இவ்வளோ ஜாலியா வேலைக்குப் போறோமே.. இப்போ, இதோ வயித்துல இன்னொண்ணு சுமந்துகிட்டு இருக்கியே, இதுக்கெல்லாம் யார் காரணம். எங்கக்காடி நாயே..
அவ இல்லேன்னா இங்க ஒண்ணுமே நடக்காதா.. என்னையே அவ முன்னஈல கை நீட்டி அடிச்சிட்ட இல்ல. ஒண்ணு அவ இருக்கணும், இல்ல நான்.. நீயே முடிவு பண்ணிக்கோ. கத்தினாள் ப்ரீத்தி..
டேய் விஷ்ணு சும்மா இரு. அவ கோவத்துல என்னென்னமோ பேசறா. நீங்க ஒத்துமையா இருந்தா போதும்.
அன்றிரவு ஆதவ்வை தன்னுடனேயே படுக்க வைத்துக் கொண்டாள் ப்ரீத்தி. மிரட்டியும் வைத்தாள் அவனை.
மறுநாள் காலை.. காலிங் பெல் அடித்துக் கொண்டே இருக்க.. ப்ரீத்தி எழுந்து வந்தாள்.. காயத்ரியை காணவில்லை. சிறு புன்னகையுடன் வாசலில் வந்து நின்ற அயர்ன் கார்ரிடம் துணியை வாங்கினாள். எடுக்காமல் இருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்தாள். சமையலறைக்குள் நுழைந்தாள்..
விஷ்ணுவிடம்.. உன் அக்காவ காணோம். எங்க போய் தொலஞ்சாளோ போய்ப் பாரு பாசமலர் அக்காவ என்று கிண்டலடித்தாள்..
நாட்கள் ஓடின. விஷ்ணு அக்காவை தேடாத இடமில்லை. ப்ரீத்தியும் மாசமாகிப் போனதால், வீட்டு வேலை என்றால் என்ன என்பதை உணர்ந்தான். இடையில் ஆதவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அம்மா..அம்மா என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.
டாக்டர் கேட்டார், என்னம்மா அம்மா அம்மான்னு கூப்டுக்கிட்டே இருக்கான், நீங்கதான அம்மா.. குழந்தைய தூக்கி என்னன்னு கேளுங்க.
Sorry sir..அவன் என் அக்காவ தேடறான். என் அக்காதான் இவன பாத்துகிட்டாங்க இவ்வளோ நாளா என்றான் விஷ்ணு.
போய் அவங்கள தேடி கூட்டிட்டு வாங்க. அந்த ஏக்கம் தான் அவனுக்கு. இல்லேன்னா இன்னும் மோசமாயிடும் உங்க பையனோட நிலைமை. Quick.. எங்க இருக்காங்கன்னு போய் பாருங்க. எங்க treatment ஆல ஒரு பிரயோஜனமும் இல்ல. Please understand.
என்னங்க.. போய் கூட்டிட்டு வாங்க அக்காவை எங்க இருந்தாலும் please. எனக்கு ஆதவ் சீக்கிரம் குணமாகணும். இவனுக்காக உங்க அக்காவ ஏத்துக்கிறேன் என்றாள்.. அப்போதும் திமிராக.
நீயெல்லாம் திருந்தவே மாட்டடி. தீவிரமாக தேடுதல் வேட்டையில் இருந்தவன் ஒரு நாள் பக்கத்து ஊரில் ஒரு பேக்கரியில் கேக் வாங்கிக் கொண்டு வெளியில் வந்து tvs50 யை ஸ்டார்ட் செய்து வண்டியை எடுக்கும் அக்காவை பார்த்தான்.
அக்கா..அக்கா என்று கத்திக் கொண்டே வந்தான். ஹெல்மெட் போட்டுக் கொண்டு வேகமாக சென்றதால் அவளது காதில் விழவில்லை. தன் வண்டியில் பின் தொடர்ந்தான்.. ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நின்றது வண்டி..
தான் அழைப்பதை விட, ப்ரீத்தி வந்து கூப்பிடுவதே உசிதம், நியாயம் என்று கருதினான்..
அங்கு ஆஸ்பிடலில் ஆதவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானது. குழந்தைகள் காப்பகத்துக்கு ஓடி வந்தனர் இருவரும்.. அக்கா.. அக்கா.. உங்க ஆதவ் ரொம்ப மோசமான நிலையில் ஆஸ்பிடல்ல இருக்கான். டாக்டர் சொல்லிட்டாரு, நீங்க வந்தாதான் அவன காப்பாத்த முடியும்னு. ப்ளீஸ் அக்கா.. I am sorry. எதையும் மனசுல வெச்சிக்காதீங்க.. வாங்கக்கா.. என்னங்க கூப்பிடுங்க அக்காவ.
ஆதவ்..ஆதவ் கண்ணா.. அம்மா வந்திருக்கேன் பாரு. காயத்ரி குழந்தையை வாரி அணைத்தாள். அவளைப் பார்த்ததுமே ஆதவுக்கு ஒரு புத்துணர்ச்சி.. அம்மா.. அம்மா..என்று கட்டிக்கொண்டான் கெட்டியாக..
இன்னிக்கி டிஸ்சார்ஜ் நீங்க போகலாம் என்றார் டாக்டர்.. ஓக்கே டாக்டர் தேங்க்ஸ்.
என்னங்க போய் ஒரு டாக்சி எடுத்துட்டு வாங்க..எல்லாரும் நம்ம வீட்டுக்குப் போகலாம் என்றாள் ப்ரீத்தி..
நீங்க கூப்பிட்டதும் நான் ஓடி வந்தது உங்க வீட்டுக்கு வருவதுக்குன்னு தப்பா நெனச்சிட்டியாம்மா. ஆதவ் நான் தூக்கி வளத்த கொழந்த. அவனுக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னதும் ஆடிப் போயிட்டேன். அதனால தான் வந்தேன்.
நான் தூக்கி வளக்காத கொழந்தைங்க அங்க காப்பகத்துல நிறைய பேர் இருக்காங்க. அவங்களும் முக்கியம் எனக்கு. ஆதவ் வை அங்க கூட்டிட்டு வந்து விடு. பத்தோட பதினொண்ணா இவனையும் பாத்துக்கிறேன்.. சொல்லுடா உன் பொன்டாட்டிக்கு என்றாள் விஷ்ணுவிடம்..