நெடுஞ்செழியனும் இரும்பொறையும்




(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1.வளம் பெருக்கிய மன்னன்
பாண்டிநாடு, கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடலையே எல்லையாக உடையது. அக்’ கடலொலியினும் மிக்க ஆரவாரத்துடன் மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். ‘நம் மன்னனுக்கு இனிக் கவலை வேண்டியதில்லை. அவனுக்குப் பின் முத்தமிழ் செறிந்த இந்நாட்டினை ஆளுதற்குரிய மகன் பிறந்துவிட்டான்,’ என்று பாண்டி நாட்டினர் களிப்புக்கடலில் ஆழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி! எவர் முகத்திலும் மகிழ்ச்சியின் விளக்கம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தது.
பிறந்த காலத்திலேயே யாவருக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை உண்டாக்கியவன் செழியன். பிற்காலத்தில் நீண்ட உருவம்; அகன்ற மார்பு; விளங்கிய முகம் முதலியவற்றுடன் இவன் தோன்றினமையால், இவனை நெடுஞ்செழியன் என்று யாவரும் அழைத்தனர்.
செழியனாகிய குழந்தை நாடோறும் புதுப் பொலிவுடன் சிறந்து வளர்ந்தனன். தாய்ப்பால் அருந்தினன். தமிழ் முப்பால் குடித்தனன். தவழத் தொடங்கினன். தமிழேடுகளைத் தேடினன். குழைந்த அன்புடன் ‘அம்மா, அப்பா’ என்று பல சொற்களைச் சொன்னான். ஈட்டி, வில், வாள் முதலியன இவனுக்கு விளையாட்டுப் பொருள்களாக அமைந்தன.
“செழிய! என் செல்வமே! இங்கே வா!” என அவன் தந்தை அன்புடன் அழைக்குங் காலங்களில், செழியன் திரும்பித் தந்தையைக் காண்பான். விளையாட்டுப்பொருள்களை விட்டு விடுவான். தளர்ந்த நடையுடன் தந்தையை அடைவான். அவன் இரண்டு கால்களிலும் கிண்கிணி கட்டப்பட்டிருக்கும். அவை, அவன் நடந்து வரும்பொழுது, ‘கண கண’ என்றொலிக்கும். விரிந்த தலைமயிர் அவன் முகமெங்கும் நிறைந்து கண்களையும் மூடி நிற்கும் ஆதலின், அதனைக் கையால் விலக்கிக் கொண்டே வருவான். கைகளில், சிறிய வளை கள் ‘கல கல’ என்றொலிக்கும். கண்கள், ஆண்மையுடன் பிறழும்.
இளமையிலேயே செழியன் தந்தை இவ் வுலக வாழ்வினை நீத்தான். சிலகாலம் தலைமை அமைச்சனின் சார்பில் அரசியல் நடந்து வந்தது. குழந்தை – செழியன் பதினாறாண்டு நிரம்பிய குமரனானான். பின்பு, ஆட்சியைத் தான் ஏற்று அரசியலைத் திறமையாக நடத்தி வந்தான். இவனோ, அரசியல் துறை கைபோய் பேரரசர் வழி வந்தவன். ஆதலின், இவன் ஆட்சி மாட்சிமையுடன் சிறந்து விளங்கியது.
இவன் அவையில் அறிவிற் சிறந்த புலவர் பலர் எழுந்தருளியிருந்தனர். அவர்கள் தமிழ் மொழிப்பயிற்சி சிறந்த சீரியோர். அவர் அறியாதன இல்லை. காலமறிந்து, இடமறிந்து, ‘செய்யவேண்டுவன இவை; ஒழிய வேண்டுவன இவை,’ என அவர் அரசற்குக் கூறுவது வழக்கம். அமைச்சரினும், இவரை மிகவும் மதித்தனனாதலின், அரசன் அவர் கூறுகின்றவற்றைக் கேட்டு அவற்றின் நலத்தை அறிந்து, அவர் கூறுமாறே செய்ய முற்படுவான்.
குடபுலவியனார் என்பவர் ஒரு புலவர்; தமிழறிவு சாலப் பெற்றவர். தாம் பிறந்த நாட்டின் நன்மையில் சிறந்த கருத்துடையவர். ‘நாம் வாழ்ந்தால் போதுமானது. நம்மை மட்டும் நாம் கவனித்துக்கொள்வோம்,’ என்ற தன்னலப்பான்மை அவரிடம் இல்லை. நாட்டு மக்கள் நன்மை பெற்றால் மன்னனும் நலமடைவான். ஆதலின், அரசனை அணுகிப், பின் வருமாறு அவர் நன்மொழிகள் கூறினார்.
“பாண்டியமன்னனே! நின் மரபில் தோன்றினோர் புகழினை நாட்டினர். பின், விண்ணுல கடைந்தனர்.”
மாணவர்களே! புலவர் பேசுகின்ற முறையைக் கவனியுங்கள். ‘புகழ் நிறைந்தவர் நின் மரபினர்’ என்கின்றார். ஆதலின், இவனும் புகழைப் பரப்பவேண்டும் என் தைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். ‘நாம் புகழ் பெறுவது எப்படி?’ என்று அரசன் எண்ணுவானல்லவா?
மேலும் கூறுகின்றார்-“நின் வாழ்நாள் நீண்டு வளர்வதாக. நீ வாழும் ஊர் மிகப் பழைய தொன்று. அஃது, ஆழ்ந்த கிடங்கினை உடையது. அக்கிடங்கின்கண் பலவகை மீன்கள் உயிர்வாழ்கின்றன. ஊரைச் சுற்றியுள்ள மதில் விண்வரையில் உயர்ந்திருக்கின்றது. நீ விரும்புவது யாது? விண்ணுலக இன்பமா ? அல்லது இவ்வுலகம் முழுவதற்கும் தனித்தலைவ னாகும் தகுதியா? அல்லது அழியாப் புகழை நிலை நிறுத்தவேண்டுமா? இம்மூன்றும் சிறந் தனவே. இவற்றை நீ அடைய விழைகின்றனையா? ஆயின், யான் கூறுவதைக் கேட்பாயாக.”
அடுத்துப் புலவர் கூறும் இன்சொற்களை யும் பார்ப்போம். ‘பல்லாண்டு வாழ்க,’ என்று வாழ்த்தி ஊரைப் புகழ்கின்றார். இச்சொற்கள் அரசன் அறிவிற்குத் தெளிவு தருகின்றன. புலவர் கூறுகின்றவற்றை அவன் கருத்தாகக் கேட்டுவருகின்றான். என்ன கூறுவாரோ என்றும் எதிர்பார்க்கின்றனன். புலவர் கூறுகின்றார்: “பெரியோய்! தண்ணீர் இன்றி யமையாதது. இதன் பயனைப் பெறுவது உடல். உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத் தோர் உயிர் கொடுத்தோராவர். உணவில்லை யேல் உடல் மாயும். உணவு என்பது யாது? எனின், நிலத்தொடு கூடிய நீர்; ஆதலின் நிலத்தையும் நீரையும் ஒன்றுகூட்டியோர், உடம்பையும் உயிரையும் ஒன்று சேர்த்தோராவர். நிலத்தில் நெல்லை விதைத்தாலும் அது நீரின்றி முளைக்காது. ஆதலின் நீரே சிறந்தது. நீர், குடிக்கும் பொருள் என்னும் நிலையில் உணவும் ஆகின்றது. உணவுப் பொருள்களை ஆக்குதற்குத் தண்ணீர் இன்றி யமையாதது. உணவுப் பொருள்களை உண வாகச் சமைத்தற்கும் நீர் வேண்டியிருக்கிறது. எல்லாவகையாலும் சிறந்த நீர் நிலையைப் பெருக்க வேண்டும். ஆதலின், நீர் நிலையைப் பெருக்குவோர் இம்மையிலும் அம்மையிலும் ஆவன பெறுவர். நம் நாட்டுக் குடிமக்கள் நீர்க்குறைவால் வருந்துகின்றனர். நீவிர் உடனே நீர் நிலையைப் பெருக்குதற்கு முற்பட வேண்டும்,” என்று கூறி முடித்தார்.
புலவர் கூறியவை முற்றிலும் உண்மை என அரசன் அறிந்தான். ‘நீரின்றி அமை யாது உலகம்’ என்ற முதுமொழிச் சிறப்பை உணர்ந்தான். அன்று தொட்டு நாட்டில் நீரின்மை எனும் பெயரை ஒழித்து, ‘வளம் பெருக்கிய மன்னன்’ எனப் பெயர் பெற்றான்.
நிலவளம் நீர்வளம் நாட்டில் சிறந்தன. புலவர் பலர் ‘நந்நாடு’ எனப்போற்றி அங்குத் தங்கினர். குடிமக்கள் மடிமக்கள், மிடிமக்கள் எனும் தீப்பெயரில்லாதவ ராயினர். ‘மன்னுயி ரெல்லாம் மன்னன் தன்னுயிர்’ எனும் கொள்கையை மன்னன் நெடுஞ்செழியன் உடையவன் என்று பலராலும் புகழப்பட்டான். இப்புகழ்ப்பெயர் பாண்டி நாட்டில் நிலைத்தது. மேலும் மேலும் வளர்ந்த புகழ், பாண்டி நாட்டில் இடமின்மையால், சேர நாட்டிலும் பின் சோழ நாட்டிலும் பரவலாயிற்று.
2.சேரன் பொறாமை
நெடுஞ்செழியன் பாண்டி நாட்டை ஆண்டுகொண்டிருந்தபொழுது, மலை நாடாகிய சேரநாட்டை, இரும்பொறை என்பவன் ஆண்டுவந்தான். இவன் முழுப் பெயர், யானைக்கண்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை. அளந்தறிய முடியாத புகழினையுடையவன். குடிமக்கள்பால் அன்பும் கண்ணோட்டமும் உடையவன். இவன் நாட்டிலுள்ள மக்கள், சோற்றைச் சமைக்கும் நெருப்பை அறிவர்; ஞாயிற்றின் வெம்மையை அறிவர்; ஆனால், என்றும் பகைவரால் உண்டாகும் துன்பத்தை அறிந்திருக்கமாட்டார்கள். உழுகின்ற கலப்பை என்னும் படையை அறிந்திருப்பர்; பகைவர் படைக்கலத்தை அறியார். இந்திரவில்லை யன்றிப் பகைவர் கொலைவில்லைக் கண்டாரில்லை. இத்தகைய உயர்வுகளால் இவன் ஆண்ட நாடு புத்தேள் உலகத்திலும் பொலிவுற்றிருந்தது.
‘ஆனைக்கும் அடிசறுக்கும்’ இச்சேர மானும் ஒரு பெருங்குற்றம் செய்தனன். அது என்ன குற்றம்? பாண்டியன் நெடுஞ்செழியன் புகழ் யாண்டும் பரவிற்று என்று முன் கூறினோம் அல்லவா? அப்புகழ், மலை நாட்டிலும் இடமில்லை எனும்படி பரந்தது. மன்னன் இரும்பொறையின் இருசெவியினூடும் அந்நல்லுரை அடைந்தது. இதுவரை அவனிடத்தில் இல்லாதிருந்த ஒரு கொடுங்குணம் அப்போது தோன்றலாயிற்று.
“அழுக்கா(று) என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்”
என்பது நம் முதுமறை.
எல்லாத் தீய குணங்கட்கும் தாயகமாய் விளங்குவது, பொறாமை. இஃது ஒருவனைச் சார்ந்தால் அவன் நற்குணங்கள் ஒன்றினையும் இருக்க வொட்டாது அழித்துவிடும். வேறு செல்வச் சிறப்பு இருப்பின், அதனையும் ஒழிக்கும்; அவ்வளவில், விடுத்தலைச் செய்யாது மீளாத் துன்பத்திலும் கொண்டு சேர்க்கும். இப்பொல்லாக் குணம் நல்ல அரசனாகிய இரும்பொறையைப் பற்றியது. பொறாமைத் தீ, அவனுள்ளத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிற்று. “இளஞ் சிறுவனாகிய செழியனோ சிறந்தவன்! இவனால் என்போன்ற பேரரசர் புகழ் அகழியிலன்றோ அழுந்திவிடும்! இளைதாக முள் மரம் கொல்க,’ என்றனர் அறவோர். முள் மரம் போன்றிருக்கும் இவனை இப்பொழுதே ஒழிக்க வழிதேடல் வேண்டும்;’ என்று மனம் எரிந்து சொன்னான். பாண்டியனின் உயர்ந்த புகழை அழிக்க அடிப்படையான ஏற்பாடு ஒன்றினைக் கைக்கொண்டான்.
மடங்காப் பனை ஓலை ஒன்றினை எடுத்து முடங்கல் ஒன்றை எழுத்தாணியால் தீட்டினன். யாருக்கு? அக்காலத்துச் சோழ நாட்டினை ஆட்சி புரிந்தவன் இவனுக்குத் தோழன்; ஆதலால் அவனுக்கு ஓலை எழுதினான். “பாண்டியனை எதிர்ப்பது என் எண்ணம். சின்னாளில் நம்புகழ் நம்மைவிட்டு நீங்காதிருக்க, இவனை எதிர்த்து அழித்தல் வேண்டும். எனக்குதவியாக நீவிர் அமைதல் போதும்,” என்பதே அவன் விடுத்த வேண்டுகோள். ‘போர்’ என்றாலே பொலிந்து மகிழும் சோழன், “நன்று, என் அளவில் எக்குறைவு மின்றி நினக்குப் படைத்துணை யாவேன்,” என உடனே எழுதி அனுப்பினன்.
தமிழ் நாடு முழுவதும் ஆங்காங்கே சிற்றரசர் பலர் வாழ்ந்திருந்தனர். அவருள் புகழ்படைத்தவர் சிலராவர். அவர், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்போர்.
திதியன் போரிலடங்காச் சினத்தான். பகைவரைப் புறங்கண்டன்றி வெகுளி தணி யாதவன்.
எழினி என்போன் சிறந்த வள்ளல். குதிரைமலை எனும் இடத்தைத் தன் ஆட்சிக் களமாகக் கொண்டவன். சிறந்த யானைப் படையை உடையவன். கந்தழிக்கடவுள்பால் நீங்காத அன்பினை உடையவன். கூவிள – மலரைத் தலைமாலையாகப் புனைந்திருந்தவன்.
எருமையூரனும் சிறந்த வீரனே.
இருங்கோ வேண்மான், சிறந்த கெர்டைக்குண முடையவன். இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாத உள்ளம் வாய்ந்த வள்ளல்; வேளிர் தலைவனாய்ச் சிறந்தவன். ஒருகால், இவன் காட்டுப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அருந்தவ முனிவர் ஒருவர் பெருந் தவம் செய்துகொண்டிருந்தார். அவரைக் கொல்ல ஒரு புலி முற்பட்டது. முனிவர் அப்போழ்து, மன்னனாம் இவனைக் கண்டு புலியைக் கொல்லுமாறு ஏவினார்.
அவர் எண்ணத்தின் வழி நின்று உடனே புலியைக் கொன்றான். அதனால், ‘புலிகடி மால்’ எனும் காரணப் பெயரையும் பெற்றான்.
பொருநன் தேர்ப்படை உடையவன். திதியன், எழினி முதலிய இவ்வேளிர் குலத் தலைவர்களாகிய சிற்றரசர்களைப் பற்றிய நினைவு, அடுத்து இரும்பொறைக்கு வந்தது. யானைப்படை, தேர்ப்படை என்பவற்றில் வன்மையமைந்த எழினி, பொருநன் ஆகியோ ருடன் மற்றவரையும் தன் பக்கல் இருத்திக் கொண்டால், வெற்றி வேற்றிடம் புகாது; தன்னகம் புகும் எனச் ‘சேரன் எண்ணினான். ஆதலின், இந்த வேளிர்குலத்தலைவர் ஐவர்க்கும், தன் மனதில் உள்ள எண்ணத்தை எழுதி அனுப்பினான். பேரரசனாகிய இவனுடன், நாம் மாறுகொள்ளின் நம் நாட்டுக்கும் இறுதி நேரும் என்று எண்ணி, இரும்பொறையின் ஏற்பாட்டிற்கு அவர்களும் இணங்கினர்.
“சோழமன்னனது படை, வேளிர் ஐவரின் வெற்றிப்படை, நமது படை, ஆகிய இம் மூன்றுடன் நான் தாக்குவேனானால் பாண்டி யன் என்ன ஆவான்? வீழ்வான்! ஒழி வான்! அவன் மாட்சிமை நீங்கும். பாண்டி யனைச் சேரன் வென்றான். பாண்டியனினும் சேரனே சிறந்தவன். சேரன் புகழே புகழ்! சேரன் நீடூழி வாழ்வானாக!’ என என்னைப் புலவர் பாடுவர். என் புகழ் எங்கும் பரவும்,” என்று இரும்பொறை மணல் கோட்டை கட்டி னான். இத்தகைய எண்ணங்கள் பலவாறாகப் பல்கின. ஆதலின், மனத்திலும் அடங்காமல் வெளிவரத் தொடங்கின.
அவையில் சேரன் அமர்ந்திருக்கிறான். அமைச்சர் பலர் அருகில் இருக்கின்றனர். படைத்தலைவர் பலரும் இடமின்றி எங்கும் நிறைந்துள்ளனர். வேளிர் ஐவரும் சோழ மன்னனும் சிறக்க வீற்றிருக்கின்றனர். ” அன்பினீர்! என் விருப்பத்திற் கிணங்கி ஒன்றுசேர்ந்தீர். உங்கட்கு என்றும் என் நன்றி உரியது. ஆண்டிலும் அறிவிலும் மிக இளைஞனாகிய அந் நெடுஞ்செழியன் நமக்கு நெடுந் தொலைவில் இருக்கின்றான். ஆனால், நம் சிறையினுள் இருப்பவனே! இவன் நாட்டினையும் இனிப் புலவர் புகழ் வாரோ? புகழின் அவர் அறிவை என்னென்போம்! அவரைக் கண்டு சிரிப்போம்! நிற்க, நன்னாளில் நம் படை புறப்படும்,” என்று கூறினன். கேட்டோர் யாவரும் வீரம் கிளர்ந்து விளங்கினர்.
3.பாண்டியன் வஞ்சினம்
ஒற்றர் அரசருடைய ஏவலாளருள் ஒரு சாரார். இவர் தூ தரினும் சிறந்தோர். தூதர் நேரில் அறியமுடியாதவற்றை ஒற்றர் மறைந்திருந்து அறியும் அறிவுறப் பெற்றவர். இவ்வொற்றர் பலரைப் பாண்டியன் நெடுஞ்செழியன் பெற்றிருந்தான். இவர்கள் பாண்டிய நாட்டிலும், மற்ற நாட்டிலும் மறைந்திருந்து ஆங்காங்கு நடப்பவற்றை அவ்வப்போதே அரசனுக்கு அறிவித்து வரும் வழக்கமுடையார். இவர்களால், தன் நாட்டு மக்களின் மனக்குறைவையும் நிறை வையும் அறியும் வாய்ப்பும் அரசனுக்குக் கிட்டிற்று. குறைவுகளை அறிந்தவுடனே, அவற்றைப் போக்கி, மக்கட்கு வேண்டும் நலங்களைச் செய்வான். பிறநாட்டில் மறைந்தறியும் ஒற்றர், பிறநாட்டரசர், தம் நாட்டு மன்னனுக்கு இடையூறு விளைக்க எவற்றைக் கைக் கொள்ளுகிறார்கள் என்பதை அறிவர். உடனே அம்மன்னருக்கு அறிவிப்பர். இதனால், அரசனும், தன் பகைவரை எதிர்ப்பதற்குப் படைவலியுடன் இருப்பான்.

ஆண்டிலும் அறிவிலும் இளைய செழி யனை அடக்கல் மிக எளிது என்று கூறினான் சேர நாட்டு மன்னன் என்று முன் சொன் னோம். செழியனின் ஒற்றர், இச்சொற் களைத் தம் அரசனுக்கு அறிவித்தனர். அறிவும் ஆற்றலும் அமைந்த அரசன், எவ் வாறு இவ்விழிசொற்களைப் பொறுத்துக்கொண்டு இருப்பான்! “தன்னை அடக்க வேண்டும் எனச் சேரன் எண்ணுவானேன்? அவ்வரசனுக்கு யான் ஏதும் இடையூறு இழைக்கவில்லையே! என் நாட்டு மக்கள் நலமுடையவராகத் திகழ வேண்டும் என்று அவர்களுக்கு ஆவன செய்தலை யான் மேற்கொண்டால், இவனுக்கு என்ன? இவன் ஏன் இவ்வாறு இழிசொல் கூற வேண்டும்? நன்று! இந்நாட்டினைப் புகழ்ந்து கூறும் சொற்கள் இவன் செவிக்குக் காய்ச்சிய செப்புக் குழம்பாயிற்றோ? மிக நன்று! பல படை மிக உடையோம் எனத் தருக்கினன் போலும்! சிறுசொல் சொன்ன இவ்வேந்த நெடுஞ்செழியன்னின் படையை முறியடிப்பேன். முரசத்துடன் இவனைச் சிறை செய்வேன். இங்ஙனம் யான் செய்யவில்லையேல், ‘எம் வேந்தன் கொடியன்,’ என்று அழுத கண்ணீருடன் குடிமக்கள் பழி தூறுற்ம் கொடுங்கோலை யான் உடையவனாகுக! என் நில எல்லை புலவரால் பாடப்படாது நீங்குக!” என வஞ்சினம் புகன்றான்.
மாணவர்களே! செழியன் கூறும் வஞ்சினச் சொற்களைக் கருதுங்கள். ‘என்னை இழி சொல் கூறியோரை வெல்வேன். இன்றேல் கொடுங்கோலனாகுக!’ என்கின்றனன். அரசர்கள் குடிகளின் நன்மையில் எத்தகைய கருத்துக்களைச் செலுத்தினர் என்பது அவன் வார்த்தைகளால் நன்றாகப் புலப்படுகின்றது.
பாண்டியனின் படைத்தலைவன், மன்னன் வெகுளியை உணர்ந்தான். அரசன் கூறிய சூளுரையின் சிறப்பினை அறிந்தான். வாய் புதைத்து எழுந்து நின்றான். “நம் பகைஞர் காற்றில் பறக்கும் பஞ்சினும் நொய்யர். அவரை அழித்தல் நமக்குப் பெரியதொரு செயலன்று,” என்று இயம்பினான். செய்தி கூறிய ஒற்றன், “பகைவர் கூட்டத்தை அழிப்பவனே! பண்பு சிறந்த பாண்டியனே! யான், மேலும் கூற வேண்டியவை சில வுள்,” என்றனன். ‘சொல்லுக’ எனச் சொல்லுவான்போல், மன்னன் நோக்கினான்.
“நுண்ணிய மென்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற”
என்பது தமிழ்மறை. ஆதலின், அரசன் குறிப்பினை ஒற்றனும் அறிந்துகொண்டான்.
ஒற்றன், “தலைவரீர்! சேரன் தனித்துப் போர்செய்ய முற்படவில்லை. சோழனையும், வேளிர் தலைவர்களையும் தனக்குப் படைத்துணை யாகக்கொண்டுள்ளான். ஆதலின், அக் கூட் டுப் படையால் எவ்வாறேனும் வெற்றி அடையலாம் என்று அவன் எண்ணுகின்றான்,” என நிலைமையினை நன்றாக எடுத்துக்காட்டினான்.
நெடுஞ்செழியனின் சினம் ஓங்கி வளர்ந்தது. ஒழுக்கம் விழுப்பம் தருவது. ஒழுக்கம் இழக்கலாகாது. ஒழுக்கத்திற்குக் கேடுவரின், ஒழுக்கம் மிக்கோர் அதனை ஆற்றார். பாண்டியன் ஒழுக்கம் நிறைந்தவன். சேரன் முதலியோர் ஒழுங்கற்ற முறையில் போரிட முற்படுகின்றனர். ஆதலால், நேர்மையான வஞ்சினத்தில், பாண்டியன் அழுந்தினன். கண் அனலைக் கக்கப், படைத்தலைவனைப் பார்த்தான். “படைத்தலைவரீர்! நம் சேனை சேரநாட்டை நோக்கிச் செல்லட்டும். அவரும் புறப்பட்டு நம்மை நோக்கி வருகின்றனர்; காலம் தாழ்த்தல் வீண். ஏற்பாடு செய்தற்குக் காலம் இல்லையாயினும் உள்ள வீரருடன் புறப்படுக. ஆள்வலி பையே கருதிக் கொண்டிருக்க வேண்டா; அறத்தின் வலிவு நமக்குண்டு. அறக்கடவுள் நம்முடன் இருக்கும். நாம் வாகை சூடுவோம். வெற்றி நமதே. அச்சமில்லை,” என்று உணர்ச்சியுடன் உரைத்தான்.
4.அறத்தின் வெற்றி
தலையாலங்காடு என்று இப்போது வழங் கும் இடம், முற்காலத்துத் தலையாலங்கானம் எனப் பெயர்பெற் றிருந்தது. இவ்விடத்தை இருசாரார் படைகளும் அடைந்தன.
நெடுஞ்செழியன் கால்களில் வீரக்கழல்கள் ஒலிக்கின்றன. அவன் குலத்து அடை யாள மாலையாகிய வேப்பமாலை அவன் மார்பில் விளங்குகின்றது. கையில், வில் ஒளி விடுகின்றது. தேரின்கண், தேர்க்கொடுஞ்சியைப் பிடித்துக்கொண்டு வீரம் பொலிய நிற்கின்றான். தம் மன்னன் நிற்கும் நிலையினைக் கண்ட வீரர், தம் மனம் உருக, உயிரினைத் துரும்பென மதித்து, அஞ்சா நெஞ்சினராய் அம்புகளையும் பிற ஆயுதங்களையும் பகைவர்மேல் எறிந்து போர் செய்கின்றனர்.
வீரர்தம் நன்முயற்சியைக் கண்ட மன் – னன் மனம் குளிர்ந்தான் ; தானும் போரில் கலந்துகொள்ள விழைந்தான். ‘வில் வேண்டா’ என வெறுத்தொதுக்கினான். வேற்படையும் வேண்டியதில்லை என்றனன். கைகளைத் தட்டி மற்போர் புரியும் எண்ணத் தினனாய்ப் போர்முகப்பை அடைந்தான். அரசனும் போரில் கலந்துகொண்டான் என்பதை மள்ளர் அறிந்தனர். அப்போது அவர்கள் உணர்ச்சி எவ்வாறிருக்கும்? சொல்லும் தரத்ததோ? ஒவ்வொருவனும், தானே மன்ன னுக்கு வெற்றிதரத் தக்கவன் என்று எண்ணிக் கொண்டனன். பகைவர் உலைந்து நிலைகுலைந்து அழப் போரிட்டனர்.
பாண்டியன் மல்லனாய் நின்றான். சிங்கக் குருளைபோல் திரிந்தான். வலிமிக்க தன் இரு கைகளாலும் பல வீரரை அகப்படப் பிடித்து மண்ணிடை மோதி விண்ணுலகிற்கு விருந் தென அனுப்பினான். தன்னால் மன்னர் கொல் லப்படுகின்றனர் என மகிழ்ந்தானா? இல்லை. அன்றி, இவ்வளவு வீரரைக் கொன்றோம் எனத் தன்னை வியந்தானா? இல்லை. பின் எவ்வாறு தான் மன்னன் மனம் இருந்தது? இவ்விரு வகையிலும் படாது வெற்றி என்னும் குறிக் கோள் ஒன்றில் மட்டும் அமைந்து நின்றது. முழு வெற்றியில் கருத்தூன்றுவோர் இடை இடையே தோன்றும் சில நிகழ்ச்சிகளில் தம் மனத்தை நிறுத்தமாட்டார்.
வேளிர் சேனை, சின்னாபின்னமாயிற்று. சோழநாட்டு வீரர் சோர்வுற்றனர். சேரல் நிலை யினை எவ்வாறியம்புவது! சோழருக்கும் வேளி ருக்கும் நேர்ந்த கதியே சேரருக்கும் விதியா யிற்று. ‘இனி நம்மால் பாண்டியருடன் போரிட முடியாது’ என்று எண்ணிய பாண்டியனின் பகைவர், பின் வாங்கினர். பாண்டியன் சேனை அவர்களைத் துரத்தி, உருக்குலைத்துத் துன்புறுத்திற்று. வேளிர் சாய்ந்தனர். சோழன் யாண்டுச் சென்றனன் என அறியமுடியாது போயிற்று. மாந்தரஞ்சேரல்மட்டும் வீரர் சிலருடன் போர்புரிந்து கொண்டிருந்தான். இப்போருக்கு முதற்காரணம் அவனே.
பாண்டியன், யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையையும் அவனைச் சூழ்ந்து நின்ற வீரர்களையும் கண்டனன்; தனது படையுடன் அங்குச் சென்றான். சில நாழிகையில், மெய்க்காவலர்வரை யாவரும் அழியச், சேரல் தனித்தவனானான். ஆற்றல் அழிந்து நின்ற அம்மன்னனைச் செழியன் விழைந்திருப்பின் அக்களத்திலேயே கொன்றிருப்பான். ஆனால் அவனைக் கொல்லும் விருப்பம் செழியனுக்கு
உண்டாகவில்லை. ஏன்? அவனும் தமிழ் நாட்டு மன்னன். கண்ணைக் குத்திற்றென்று விரலை வெட்டுவாருண்டோ சேரன் அழுக் காற்றினால் போரிட வந்தான். கொல்ல வந்த ஒன்றைக் கொல்லுதல் முறையேயாயினும், நம் பாண்டியனுக்குக் கொலை எண்ணம் வரவில்லை. அவன், மாந்தரஞ்சேரலை உயிருடன் கட்டித் தன்னுடன் கொண்டு சென்றனன்.
புலவரால் பாராட்டப்பட்ட சிறப்புடைய மன்னன் கதியாதாயிற்று? இச்சேரல் தாழ்ந்த நிலைமையிலிருந்தவனும் அல்லன்; கருணை நிறைந்தவன். ‘விளங்கில்’ எனும் ஊரில் வாழ்ந்தோர்க்கு வேற்றுப்பகைவரால் துன்பம் நேர்ந்தபோது, இவன் அப்பகைவரை ஒழித்து நலம் விளைத்தான். கபிலர் என்ற சிறப்புடைய புலவரின் நண்பன். புறநானூறு முதலிய சங்க நூல்களுள் ஒன்றாகிய ‘ஐங்குறு நூறு’ என்னும் அரிய நூலினைத் தொகுத்த அருஞ்செயலாளனும் இவ்வரசனே. கூடலூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர்கள் இவனை வாழ்த்தியுள்ளனர். இங்ஙனம் பலவகையாலும் உயர்ந்த மன்னன் மற்றொரு நாட்டு மன்னனால் கட்டப்பட்டான்! சிறை செய்யப்பட்டான்.
சேரலுக்கு இத்துன்பம் ஏன் வந்தது? பிறர் துன்புறுத்தவில்லை. தானே அதனை உண்டாக்கிக்கொண்டனன். அழுக்காறு என்னும் இழிகுணம் எங்கு இருக்கின்றதோ, அங்குள்ள பெருமை முதலிய நற்குணங்கள் நீங்கிவிடும் என்பதற்கு, இதனினும் வேறு சான்று வேண்டுமோ? படைவன்மையால் செழியன் வென்றான் என்பதினும், அழுக்காறு என்ற தீக்குணம் சேரலைத் தோல்வியுறச் செய்தது என்பது பொருந்தும்.
“அழுக்கா றுடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது”
என்பது நம் அருந்தமிழின் மாயா வாய்மொழி.
– சங்கநூற் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.