நூற்றாண்டுகள் நீடித்த ஒரு சதுரங்க போட்டி





பூமியிலிருந்து ஐந்து ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தது நோவாரியா என்ற கிரகம். பூமியில் இருந்து சென்ற குடியேற்றவாசிகள் வாழும் அந்த கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே நடந்த சதுரங்க போட்டி 2184ம் ஆண்டில் தொடங்கி வரலாற்றின் மிக நீண்ட ஆட்டமாக பதிவாகியது. தாய் உலகிற்கும் அதன் புதிய குடியேற்றத்திற்கும் இடையிலான அந்தப் போட்டி ஆறு நூற்றாண்டுகள் நீடித்து மனித நாகரிகத்தின் இரு கிளைகளை இணைக்கும் நீண்ட பாரம்பரியமாக இருந்தது.

ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. காரணம், இரு கிரகங்களுக்கும் இடையே இருந்த பெரும் தூரம். ஒவ்வொரு நகர்வும் எதிராளி கிரகத்தை அடைய ஐந்து ஆண்டுகளும், பதில் நகர்வு திரும்பி வர மற்றொரு ஐந்து ஆண்டுகளும் பிடித்தது.
அறுநூறு ஆண்டுகள் நடந்த அந்த ஆட்டத்தின் போது இரு கிரகங்களிலும் பல தலைமுறைகள் மாறின. புதிய ஜனாதிபதிகளும் புதிய தலைவர்களும் தோன்றினர். பழைய ஜனாதிபதிகளும் பழைய தலைவர்களும் மறைந்தனர். குழந்தைகளாக ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தவர்கள் முதியவர்களாக மாறினர். பல தலைமுறை சதுரங்க வீரர்கள் தங்கள் முன்னோர்கள் விளையாடிய பலகையை ஆய்வு செய்தனர்.
முதல் நான்கு நூற்றாண்டுகளில் பூமி முண்ணணியில் இருந்தது. அதன் சதுரங்க அகாடமிகளின் ஒருங்கிணைந்த மூளைகள் மிகச் சிறந்த நகர்வுகளை உருவாக்கின. நோவாரியாவின் பதில்கள் உறுதியாக இருந்தாலும், பூமியின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
2784ம் ஆண்டில் அந்த நிலை அடியோடு மாறியது. பதினான்கு வயதான இளம் சதுரங்க மேதை அவிஷ் சரனை நோவாரியா அடுத்த நகர்வு செய்வதற்கு தேர்ந்தெடுத்தது. அது வரை நடந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் மனப்பாடம் செய்திருந்த அவிஷ், தன் முன்னோர்களிடமிருந்து வேறுபட்டு சிந்தித்தான். மற்றவர்கள் வாய்ப்புகளை ஆராய குவாண்டம் கணினிகளை பயன்படுத்தியபோது, அவன் முற்றிலும் தன் உள்ளுணர்வை பயன்படுத்தி அந்தப் புரிதலுடன் ஆட்டத்தை ஆய்வு செய்தான்.
காய்கள் சீராக பரவியிருந்த பலகை நிலையை ஆய்வு செய்தபோது, வேறு யாரும் கவனிக்காத ஒன்றை அவிஷ் கண்டு கொண்டான். பூமியின் நூற்றாண்டு பழைய உத்தியில் இருந்த ஒரு நுட்பமான பலவீனத்தை அவன் கண்டுபிடித்தான். அவனது அடுத்த நகர்வில் ஒரு குதிரையை தியாகம் செய்தான். 2789ல் அந்த நகர்வு பூமிக்கு வந்து சேர்ந்த போது பூமியின் சதுரங்க வீரர்கள் அதை ஒரு அனுபவமற்ற நகர்வு என்று கருதினார்கள். அந்த நகர்வின் ஆழத்தை அவர்கள் அப்போது உணரவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவிஷ் செய்த அடுத்த நகர்வு அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி நோவாரியாவை வலுவான நிலையில் கொண்டு வைத்தது. மிகவும் சக்தி வாய்ந்த கணினி இயந்திரங்களால் அது பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, அதன் முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது: பன்னிரண்டு நகர்வுகள் கழித்து கண்டிப்பாக நோவாரியா பூமியை வென்று விடும். வேறு வழியின்றி பூமி சரணடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டது.
சதுரங்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் அவிஷ் தனது பெயரை பதித்து விட்டான். அந்த நாளிலிருந்து நோவாரியாவின் மக்கள் எதிர்பாராத வெற்றியாளனான அவிஷைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
ஆனால் யார் இந்த அவிஷ்? அவன் எங்கிருந்து வந்தான்? பூமியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகச் சிறந்த சதுரங்க வீரரான விஸ்வநாதன் ஆனந்தின் நேரடி வாரிசு தான் அவிஷ் என்பது ஒரு சிலருக்கே தெரிந்திருந்தது.