நிஸ நிஸ…





நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல் வளம், நன்றாக ஸ்வரம் பாடும் திறமை எல்லாம் இருந்தும் அவர் பிரபலமாகாததற்குக் காரணம் தஞ்சாவூரை விட்டு அவர் வர மறுத்தது மட்டுமல்ல சங்கீதத்தைக் காசுக்கு விற்கக்கூடாது என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததும் தான்.
மகளுக்கு நிஸா என்று ஆசை ஆசையாப் பெயர் வைத்திருந்தார் பாகவதர். ஐந்து வயதில் முகத்தைச் சுளித்துக் கொண்டு எனக்கு ஏன்ப்பா நிஸான்னு பேர் வெச்சே? எல்லாரும் கேலி பண்றா” என்றதும், நிஸா! இது சங்கீதப் பேரும்மா. நிஷாதமும் ஷட்ஜமும் சேர்ந்த பேரு. நிஷாதம் சரஸ்வதி சோரூபம். நீ நன்னாப் படிக்கணும்னுதான் உனக்கு அந்தப் பேரை வெச்சேன்” என்பார் பாகவதர்.
நீலகண்ட பாகவதரின் கொள்கையால் பணம் வருவது குறைந்தது. கமலா வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஒரு தையல் ஃபேக்டரியில் வேலை. ஏதோ குடும்பம் ஓடியது. நிஸா பெயருக்கேற்ற மாதிரி நன்கு படித்து வங்கிக் கடன் உதவியால் பொறியியல் படிப்பை முடித்தாள். வேலைக்கு மனு போட்டுக் கொண்டிருந்த நேரம் அவளை எங்கோ கோயிலில் பார்த்த ஸ்ரீதர் கல்யாணம் செய்து கொண்டால் இந்தப் பெண்ணைத்தான் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். பெண் படித்தவள், அதோடு ஒரே ஜாதி என்பதால் பிள்ளை வீட்டார் உடனே ஒப்புக் கொண்டனர்.
பாகவதருக்குத்தான் மகளை அமெரிக்கா அனுப்ப கொஞ்சம் கூட இஷ்டமில்லையே தவிர கல்யாணத்தில் பெரிய எதிர்ப்புக் காட்டவில்லை. கல்யாணம் மிகச் சிறப்பாக நடந்தது. மறு மாதமே நிஸா கணவனோடு அமெரிக்கா போனாள். போகும்போது அப்பாவின் குரலைப் பதிவுசெய்து கொண்டு போயிருந்தாள் நிஸா. அதைக் கேட்ட ஸ்ரீதரின் அமெரிக்க நண்பன் சொக்கி விட்டான். அவன் தனது கேர்ள் ஃபிரெண்டிடம் அதைக் கொடுக்க அவள் இசைக்குழு வைத்திருக்கும் தன் தந்தையிடம் கொடுக்க, விளைவு தஞ்சாவூர் நீலகண்ட பாகவதரின் பாட்டையும், ஜாஸ் இசையையும் ஒருங்கிணைத்து ஃப்யூஷன் செய்து ஒரு ஆல்பம் வெளியிடத் திட்டமிட்டது அந்த இசைக் குழு.
அந்த ஆல்பத்தில் பாட பாகவதருக்கு நிறைய பணம் தருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பத்தை நினைத்துப் பார்க்காத நிஸா, உடனே அம்மாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னாள். பாகவதர் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்பதால் நிஸாவும், மாப்பிள்ளையுமே நேரில் வருவதாக ஏற்பாடு செய்து இன்று வருகிறார்கள்.
மதியம் 12 மணி அளவில் பெரிய பாடகர்கள், டிரம்ஸ் வாசிப்பவர் என கூட்டமே வந்திறங்கியது. இன்னும் மூன்று நாட்களில் அமெரிக்கா கிளம்ப வேண்டும் என்றும் அடுத்த வாரமே ஆல்பத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிவிடும் என்றும் பேசிக் கொண்டனர். பாகவதரின் சம்மதத்தை யாரும் கேட்கவேயில்லை. கனவுகளில் மிதந்தனர் நிஸாவும் அவள் அம்மாவும். அனைவரும் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி பாட ஆரம்பித்தார் பாகவதர்.
தம்புராவை சுருதி கூட்டினார். நிஷாதம் இடறியது. நெஞ்சில் சுருக்கென்றது. பொருட்படுத்தாமல் நி ஸ என சுருதி சேர்த்து பாட ஆரம்பித்தார். அவருக்குப் பிடித்த மாயாமாளவகௌளை ராகம். நிஸா நீஸா… பாடிக் கொண்டிருக்கும்போது கங்கையின் பிரவாகம் காதில் கேட்பது போல மனம் சிலிர்த்தது. அவர். மனம் ஒன்றி பாடிக்கொண்டே இருந்தார். நிஷாதத் தோடு கரைந்து காணாமல் போய் விட மாட்டோமா என்ற தாபம் மேலோங்கியது. கங்கைக் கரையில் அவரையும் நிஷாத தேவதையையும் தவிர யாருமில்லை. அம்மா அம்மா என மனம் அரற்றியது.
பத நிஸ என இழுக்க வேண்டும். பத நியில் சட்டென சங்கீதம் நின்றது. ஆனால் அவரது வா நி ஸா நி ஸா என முணுமுணுத்துக் கொண்டே இருக்க, கண்கள் நிலைகுத்தி நின்றது. நிஸா தேம்பி தேம்பி அழுதாள்.
– டிசம்பர் 2014