நிறம் மாறும் நிஜங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 387 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன, உப்பு ஏவாரமெல்லாம் எப்படியிருக்கு? நல்லாருக்கா?” 

“ஏதோ இருக்கு… மோசமில்லே…” 

“நீங்க உரக்கடை ஆரம்பிச்ச நேரம்… நல்ல மழை பேய்ஞ்சிருக்கு. விவசாய வேலை நல்லபடியா நடக்கும். உரம் நல்லா விக்குமய்யா…” 

“விக்கத்தான் செய்யும். ஆனா, சம்சாரி கையிலே ‘பசை’ இல்லியே! வெளைஞ்ச வத்தலுக்கு வெலையில்லே, வெலையிருக்குற பருத்தி வெளைச்சலில்லே. என்ன செய்றது, சம்சாரிக பொழப்பு… உப்பு விக்கப்போனா மழை பேயுது, மாவு விக்கப் போனா காத்தடிக்குதுங்கிற கதையாப் போச்சு.’ 

“நீ சொல்றது நெசந்தான் தம்பி. ஆனா… மழை பேஞ்ச பெறகு, ‘பசை’யில்லேங்குறதுக்காக வெள்ளாம செய்யாம இருக்க முடியுமா? தாலிக் கொடியை அத்து வித்தாச்சும்… வெதைச்சுப் போடணுமே…… ம்ம்…இதென்ன மூடைக தம்பி” 

”டி.ஏ.பி.மூடைக.” 

“இது என்ன அட்டியல்…? யூரியா மூடைகளா?”

“ஆமண்ணாச்சி.” 

“இந்த மூடைக என்னது தம்பி?” 

‘இது… எண்ணூத்திப் பத்து தூள் மூடைக.” 

“நெல்லுக்குப் பனிப்பதத்துலே வெதைக்கிற தூசி மருந்தா…? ம்ஹும்… கடை வைச்சு ஒரு மாசமாகுதே… ஏதாச்சும் லாபம் தெரியுதா?” 

“என்ன லாபம்! மூடைக்கு ஒரு ரூவா,மூக்கா ரூவாதான் மிச்சமிருக்கும். என்னத்தையோ சில்லறைக்கு ரெண்டு மூடையாச்சும் வித்தாத்தான்…ரெண்டு துட்டைப் பாக்க முடியும்.” 

“அது சரிதான் … காத்துக் கெடந்ததுக்குக் காசு பணம் இல்லாமலா போயிடும்?ஆமா தம்பி… நம்ம ஊர் ஏவாரத்துல கடன் ரொம்பப் போகுமே.” 

“கேக்கத்தான் செய்றாக… ஆனா, குடுக்கிற சக்தி ஏங்கிட்ட இல்லையே”. 

“கடன் குடுக்காம ஏவாரம் விக்குறது செரமமாச்சே.” 

“வித்த மட்டும் போதும் அண்ணாச்சி. ரொக்கத்துக்குத்தான் ஏவாரம். கொஞ்ச ரூவாயை வைச்சுதான் கடையை துவக்கியிருக்கு. அதுக்குள்ளேதான் வண்டியை ஒட்டணும். பெறகு எதை வைச்சு கடன் குடுக்குறது? கடன் குடுத்தா கடையை இழுத்து மூடிட்டிப் போக வேண்டியதுதான்.” 

“அதுவும் அப்படியிருக்கோ… உர மூடைக மொத்தமா எடுப்பீகளே,அங்க கொஞ்சம் கடன் தர மாட்டாகளோ?” 

“பைசா மாத்தி எண்ணி வைச்சுட்டுத்தான் மூடையிலே கை வைக்க மூடியும். அங்க அவ்வளவு கண்டிஷன்.” 

“இங்க எப்படியும்… முகம் பார்த்து, ஆள் பார்த்து ஒன்னு ரெண்டு புள்ளிகளுக்காச்சும்… ஒரு நா ரெண்டு நா தவணைக்காவது விட்டுப் பிடிக்க வேண்டியிருக்குமே.” 

“அது ஆளைப் பொறுத்து.. ஒரு நா ரெண்டு நாள்னா சமாளிச்சுக்கலாம்”. 

“அதானே பார்த்தேன்… கடன் குடுத்து வாங்காம கிராமத்துலே முடியாதே…” 

“ம்ச்சூம்… அதைப் பாத்துக்கலாம்.” 

“ஆனா… நம்ம ஊருக்கு உங்க உரக்கடை ரொம்ப அவசியம் தம்பி. உழவை, நடுவையை வைச்சிட்டு வந்து ‘அவக்’குன்னு மூடையைத் தூக்கிக்கிட்டுப் புஞ்சைக்குப் போயிடலாம். இங்க கடையில்லேன்னா… ஆத்திரம் அவசரத்துக்கு திருவேங்கடம்தானே ஓடணும்? பணத்தை எண்ணிக் குடுத்தாலும், மூடையைத் தூக்கி, அதுக்கொரு ஆளைப் பாத்து, வீடு காண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ளே, ‘ஆத்தாடி, அம்மாடி’ன்னு ஆயிப்போகுமே.. நீங்க கடை வைச்சது, நம்ம ஊரு சம்சாரிகளுக்கும் ‘கைவாப்பு ‘லே மூடைக வந்த மாதிரி… உங்களுக்கும் ஒரு தொழில் நடந்த மாதிரி…” 

“ஆமண்ணாச்சி… உங்களுக்கு என்ன, உரம் வேணுமா?” 

“நெல்லுக்கு இருபது கிலோ யூரியா உப்பு வேணும். மொளகாய்க்கு உழவுலே போட ஒரு மூடை டி.ஏ.பி. வேணும்”. 

“வாங்கிட்டுப் போறீங்களா? பெறகு வந்து வாங்கிக் கிடுதீகளா?” 

“இப்பவே வாங்கிக்கிறேன். ஆனா, ரூவா… பால் ரூவாயிலே தான் கெடைக்கும் தம்பி.” 

“கடனா? தாங்காது அண்ணாச்சி, நம்மாலே.” 

“பால் ரூவாயிலே நமக்கு முன்னூத்தைம்பதுக்கு மேலே வரும். குடுங்க. ஒத்த வரியிலே குடுத்துடுதேன் தம்பி…” 

“இல்லே…நீங்க குடுத்துருவீக. அதுவரைக்கும் தாங்குற நெலமை நம்மகிட்டே இல்லே.” 

“பால் ரூபா வர்றவரைக்கும் தாக்குபிடிக்காது. பயிர் நாசமாயிரும். கடன் குடுங்க.” 

“இல்லே…சரிப்படாது… வருத்தப்படாதீக அண்ணாச்சி.”

“ம்ம்… ஹம்…….” 

“…..” 

“நாளைக் கழிச்சு காலையிலே தந்தாப் போதுமா, தம்பி?” 

“போதும். ஆனா, சொன்னா சொன்னபடி இருக்கணும். இழுத்தடிச்சு, ஏவாரத்தைப் பாழாக்கிடக்கூடாது. 

“சரி தம்பி…உரம் குடுங்க. ஆட்டு ஏவாரிகிட்டே ரூவா கேட்டுருக்கேன். அவர்கிட்டே வாங்கி… உங்களுக்குக் குடுத்துருதேன்.” 

“சரிண்ணாச்சி. ஆனா… சொன்ன சொல்லு சுத்தமா யிருக்கணும். அப்புறம் ‘அது, இது’ன்னு சொல்லக்கூடாது.” 

“அப்படியெல்லாம் செய்வேனா? சொல்லுலே என்ன தம்பி இருக்கு? மனசுலே சுத்தமும், நேர்மையும் இருக்கணும். கரெக்டாதாரேன்.” 


“என்னண்ணாச்சி, உங்களைத்தானே தேடிக்கிட்டு வாரேன்.” 

“என்ன தம்பி?” 

“முந்தா நாள் காலையிலே ரூவா தாரேன்னு உரம் தூக்கிட்டுப் போனீக, இன்னும் பணம் தரல்லியே…” 

“ஆட்டு ஏவாரி தர்ரேன்னு சொல்லியிருந்தாரு. கோவில்பட்டிச் சந்தைக்குப் போன அவரு, இன்னும் வந்து சேரலே. அவரு வீட்டுக்கு, நானும் நூறுதரம் நடந்துட்டேன். இன்னு வரலே.’ 

“அதுக்கு நா என்ன செய்ய? எனக்குப் பணம் வந்து சேரணும். நா சரக்கு வாங்கப் போகணும்லே?” 

”பால் சொஸைட்டி செக்ரட்டரி ஆசைத்தம்பிகிட்டே முன் கூட்டி எரநூறு ரூவா கேட்டுருக்கேன். இன்னிக்கு பேங்க்குக்குப் போய்ட்டு வந்து தாரதாக சொல்லியிருக்கான். வந்தவுடனே சாயங்காலம் தாரேன். ஆட்டு ஏவாரி வந்துட்டாலும், அதுக்குள்ளே வாங்கித் தந்துடுறேன். என்ன தம்பி?” 

“ம்ச்ச்சூம்… வேறன்ன செய்ய…? எப்படியும் சீக்கிரமா குடுங்க.” 


“உங்களைத் தேடி மூணுநாளா அலையுதேன். ஆளையே பாக்க முடியலியே. 

“நடுவை நடக்குது தம்பி. ஆளுக கெடைக்கல. ஆள் பாக்கணும். நாத்தைப் பிடுங்கி நட்டிவைச்சுட்டோம்னா… கவலை ஒழிஞ்சது பாருங்க.” 

“நேத்து ராத்திரி அடிச்ச முரட்டு மழை… நடுவைக்குப் பொருத்தமாயிருக்குமே.” 

“ஆமா தம்பி, நீங்க உரமூடை குடுத்தீக. நெல்லுக்கும் வெள்ளைப் பயிரு விழாம உரம் போட்டாச்சு. டி.ஏ.பி. யை போட்டு உழவடிச்சு வச்சதாலே, மழை பேயவும், இந்தா நடுவை முடிச்சாச்சு.” 

“நீங்க காரியமா முடிச்சுக்கிட்டீக. சாயங்காலம் தாரேன்னு சொல்லி மூணு நாளாச்சு. என்னை ஏமாத்துதீகளே…” 

“ஏமாத்து ஒன்னும் இல்லே தம்பி. ஆட்டு ஏவாரிகிட்டேயிருந்து வரவேண்டியது, இன்னும் வந்து சோலை. மொளகா நாத்து முன்னூறு ரூவாய்க்கு வித்துருக்கு. அந்தப் பணமும் கைக்கு வந்து சேரலை. பால் சொஸைட்டி செக்ரட்டரி பேங்குக்குப் போனவன், சொஸைட்டியிலேயிருந்து செக்கு வராம, ‘பணம் கிடையாது’ன்னு கை விரிச்சுட்டான். வரவேண்டிய பணம் வந்து சேந்துட்டா..ஒரு நிமிஷம்கூட நிறுத்தமாட்டேன் தம்பி. கடன் குடுத்தானும், வழி நடந்தாகணும். நாளைக்கு உங்க முகத்தை எப்படி ஏறெடுத்துப் பாக்குறது?” 

“சரி…இன்னிக்குச் சாயங்காலமாச்சும் தாரீகளா, இல்லே இன்னும் இழுத்தடிக்கப் போறீகளா?” 

”சாயங்காலம் எதுக்கு? இந்தாங்க தம்பி, இப்பவே வாங்கிக்கங்க. எம்புட்டு ரூவா? நூத்து எம்பத்தி ஒன்னுதானே? இந்தாங்க எரநூறு” 

“மிச்ச சில்லறை இல்லியே…” 

“ஓடியா போகுது? நாளைக்குக் குடுங்களேன். நீங்க நல்ல கட்டத்துலே குடுத்து உதவுனீகளே, அதுதானே தம்பி முக்கியம்!” 

”நாளைக் கழிச்சுத் தாரேன்னு சொல்லி வாங்கிக்கிட்டு, ஏழெட்டு நாளைக்கு இழுத்தடிச்சுட்டீகளே அண்ணாச்சி. யார் வார்த்தையையும் நம்புறதுக்கு இது காலமில்லே!” 

“அது உங்க கணக்கு. பால் ரூவாயிலே தாரேன்னு உண்மையை நேர்மையா சொன்னேன். ஒத்துக்க மாட்டேனுட்டீக. என்ன செய்றது, ஏழை சம்சாரிக பாடு இப்படியிருக்கு, இந்தப்பாடு பட வேண்டியிருக்கு… நீங்களும் சரக்குக்குப் போறேன்னு அவசரமா சொன்னீக. போகலே. நேத்துத்தான் போனீக.” 

“எல்லாரும் மாய்மாலம்தான் செய்ய வேண்டியதிருக்கு.” 

“என்ன செய்றது தம்பி… உண்மையைச் சொல்லி நேர்மையா வாழணும்ங்கிற நெனைப்பைக்கூட வாழவிடாத ஒலகம் தம்பி! அதுசரி. பூச்சி கொல்லி மருந்து கொண்டு வரப்போறீகளா, தம்பி?” 

“நாளைக்கு சரக்குக்குப் போறேன். வாங்கிட்டு வாரேன் அண்ணாச்சி.” 

“கொண்டு வாங்க தம்பி, களை வெட்டிட்டு மருந்தடிக்கணுமில்லே?” 

– செம்மலர், 1988.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *