நினைவுகள்




(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புனிதவதி வெங்காயத்தை வெட்டிக்கொண்டே, “அம்மா நான் சொல்லப் போவதை தப்பா நினைக்க வேண்டாம். என் காதில் விழுந்ததை…” என்று இழுத் தாற்போல் நிறுத்தினாள்.

அவள் இப்படிச் சொல்லியது எனக்கு என்னவோ போல் இருந்தது. நான், “என்ன? சும்மா சொல்லு நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றேன்.
“நீங்க நினைக்கிறதைப்போல் இல்லேம்மா. அது உங் களுக்கு மன வருத்தத்தைத் தரக்கூடியது.”
“அப்படி என்ன ? பரவாயில்லை சும்மா சொல்லு” என்றேன்.
அவள் வெங்காயம் நறுக்குவதை நிறுத்திவிட்டு, கண்ணீரைத் தன் முன்றானையால் துடைத்தபடி, “ஐயாவைப்பத்தித்தாம்மா” என்றாள்.
நான், “அப்படி என்ன ஐயாவைப்பத்தி?” என்று ஆவலாகக் கேட்டேன்.
“ஐயா வேலை செய்யுற அலுவலகத்தில்…”
அவள் எதையோ மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “முழுதும் சொல்லு நான் உன்னை ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டேன்”
“அம்மா, ஐயாவும் தட்டச்சு அடிக்கிற பெண்ணும் நெருங்கிப் பழகிறாங்களாம். சாப்பாட்டு வேளையில்கூட இரண்டுபேரும் சேர்ந்தே சாப்பிடப் போறாங்களாம்” என்று சொல்லிவிட்டு என்னைக் கவனித்தாள்.
அவள் இப்படிக் கூறியது எனக்கு வியப்பாக இருந் தது. அதிர்ச்சியுற்ற நான், “புனிதவதி” என்றேன் அதட்டியபடி.
“சொல்லக்கூடாது என்றுதாம்மா நினைத்தேன். ஆனால், உங்கள் நன்மைக்காகத்தான் சொன்னேன்” என்றாள் அச்சங்கலந்த குரலில்.
“புனிதவதி உனக்கு சொன்னவர் யார்? ஐயா இப்படியெல்லாம் நடக்கக் கூடியவரா?”
“நானும் நம்பவில்லையம்மா. ஆனால்…”
“சும்மா சொல்”
“ஐயா வேலைசெய்யும் அலுவலகத்திலேயே வேலை செய்யும் என் கணவர்தாம்மா சொன்னார். இதை உங்களுக்கிட்ட சொல்லுறதும் நல்லதுனும் சொன்னாரம்மா” என்றாள் துணிவு தொணிக்க.
என் வீட்டில் நான்கைந்து ஆண்டுகளாக வேலை செய்யும் புனிதவதி இதுவரை இப்படிப்பட்ட செய்தி எதையும் சொல்லியதில்லை. ஆனால், இன்று… அதுவும் என் கணவரைப்பற்றி இப்படிச் சொல்லுகிறாளே என்று நினைக்கும் போது எனக்குத் தாங்க முடியாத சினம் ஏற்பட்டது.
“புனிதவதி நீ சொல்லுவது உண்மையா? உள்ளதைச் சொல்லிவிடு இல்லை…”
“நான் ஏம்மா உங்களுக்கிட்ட பொய் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனா ஐயா தன் காரிலியே அவளை வீட்டுக்கும் அழைத்துக்கிட்டுப் போறாங்களாம்” என்றாள்.
எனக்கோ தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. ஆவேசமடைந்த நான் புனிதவதி கன்னத்தில் அறைந்தேன். அவள் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது. வெட்டிவைத்திருந்த வெங்காயம் தரையில் கொட்டியது.
அவள் தன் கன்னத்தில் கையை வைத்தபடி கண்ணீர் சிந்த, “அம்மா, ஐயாவைப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதாகிலும் தப்புத்தண்டா சொல்லியிருக்கேனாம்மா… நீங்களே சொல்லுங்கம்மா உப்புத் தின்ன வீட்டுக்குக் கேடு நினைப்பேனாம்மா. கேடு நடக்கும் என்று தெரிந்தாலே என் மனம் கேட்காதம்மா. கலைமகள் போலிருக்கும் உங்களுக்குக் கடுகளவு தீமை வந்தாலும் என்னால் தாங்க முடியாதம்மா… ஐயோ அம்மா….” என்று உதடுகள் படபடக்க அழுதுகொண்டே சொன் னாள்.
அவள் கண்ணீர் சிந்த கவலையோடு சொல்லியது என் உள்ளத்தை மெழுகென உருக்கியது. ஆத்திரத்தில் அறிவிழந்து அடித்துவிட்டேனே. அதுவும் முடி நரைத்து உடல் பழுத்த கிழவியின் உலர்ந்த கொடிமுந்திரிப் பழத்தைப்போல் சுருக்கம் விழுந்த கன்னத்தில் என்று எண்ணி வருந்திய நான்!
“புனிதவதி ஏதோ ஆத்திரத்தில் அடித்துவிட்டேன். ஒன்றும் மனத்தில் வைத்துக்கொள்ளாதே” என்றேன் இரக்கத்தோடு! வீட்டுக்காரி எனும் பெருமை உள்ளத் தில் நிழலாட!
அவள் கண்ணீரைத் துடைத்தபடி, “எனக்கு நீங்க அடிச்சதைப்பற்றி கவலை இல்லேம்மா. ஐயாவை நினைக்கும்போதுதான்…”
“அது கிடக்கட்டும் நான் பேசிக்கொள்கிறேன். நீ வருத்தப்படாமே வேலையைப் பாரு” என்றேன்.
அவள், “சரி” என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த கத்தியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு கொட்டிக் கிடந்த வெங்காயத்தைத் தட்டில் அள்ளி வைத்தாள்.
நான் சமையலறையைவிட்டு படுக்கை அறைக்குச் சென்றேன்.
என் மனம் ஒன்றிலும் நிலைகொள்ளவில்லை. படுக் கையில் போய் ‘தொப்’ என்று மனச் சுமையோடு சாய்ந்தேன்.
“ட்ரீங் ட்ரீங்” சமையல் அறையிலுள்ள மணி ஒலித்தது என் காதில் விழுந்தது.
நான் எழுந்து சாரளவழியாக வெளியே பார்த்தேன். வேலைக்காரி புனிதவதி, “ஐயா வந்திட்டாங்கம்மா” என்று சொல்லியபடி முகப்பை நோக்கி விரைந்தாள்
‘கார்’ நிறுத்துமிடத்திற்கு வந்ததும் என் கணவர் வண்டியைவிட்டு இறங்கினார்.
அவர் இறங்கியதும் நேராக நான் நிற்கும் அறைக்குள் நுழைந்தார். வந்ததும் வழக்கம்போல் உடை மாற்றிக்கொண்டு குளிப்பதற்குத் தயார் ஆனார். நான் துவாலையை எடுத்துக் கொடுத்தேன். வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு குளிப்பதற்கு விரைந்தார்.
என்றுமில்லாமல் இன்று மட்டும் இப்படிப் போகிறாரே ஒருவேளை என்னை வெறுக்கிறாரோ; இல்லை அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமோ! இப்படி எண்ணியது என் மனம்.
எப்படியோ நடப்பது நடக்கட்டும் என்று வெறுமனே இருந்துவிட்டேன்.
மறுநாள் காலை. புனிதவதி வேலைக்கு வரவில்லை. அவளுக்குப் பதிலாக அவள் மகள் பூங்கோதை வந்திருந்தாள். நான் அவளிடம், “உன் அம்மா ஏன் வேலைக்கு வரவில்லை” என்று கேட்டேன். அதற்கு அவள், “அம்மா விற்கு உடம்புக்குச் சரியில்லையாம் துணிதுவைக்க முடியாதென்று என்னை வேலைக்குப் போகச் சொன்னாங்க” என்றாள்.
“உடம்புக்கு என்ன?”
“காய்ச்சல்”
“ஏதாகிலும் மருந்து கொடுத்தாயா?”
“ஆமம்மா சீனன் கடை மருந்து வாங்கிக் கொடுத் திட்டுத்தான் வருகிறேன்! சரியம்மா ஐயாவிற்குப் பசியாற ஏதாகிலும்…” என்றாள்.
நான் தோசை மாவு இருக்கும் இடத்தைக் காண்பித்துவிட்டு என் கணவரைப் படுக்கையிலிருந்து எழுப்பி விட்டேன்.
பூங்கோதை சேலைத் தலைப்பை இடுப்பில் செருகிக் கொண்டு கைவளையல்கள் இனிய ஒலியெழுப்ப தோசை மாவைச் சூடேறிய தோசைக்கல்லில் ஊற்றினாள். புன்னகை பூத்தபடி பூங்கோதை தோசை சுட்டு எடுப்பதை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டுநின் றேன்.
அப்பொழுது என் கணவர் துவாலையைத் தோளில் போட்டுக்கொண்டு குளியலறைக்கு எங்களைக் கடந்து சென்றார். அறைக்குள் சென்றவர் என்ன நினைத்தாரோ பல் துலக்கியபடி மீண்டும் சமையலறைக்குத் திரும்பி வந்தார்.
“உங்கம்மா வரவில்லையா பூங்கோதை?” என்று அவளை நோக்கிக் கேட்டார்.
அதற்கு அவள், “இல்லேங்க” என்று சொல்லியபடி தோசைக் கரண்டியைக் கீழே வைக்காமல் என் கணவரை நோக்கிப் படக்கென்று திரும்பினாள். அப்பொழுது அவள் சடை சுழற்றிய சாட்டைபோல் மேலெழுந்து என் முகத்தருகில் வந்துவிட்டு அவள் மார்பில் தட்டி விட்டுத் தொங்கியது. காதணிகள் ஊஞ்சலாட்டம் போட்டன.
என் கணவர் அவளை ஏற இறங்கப்பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ “சரி சரி தோசையைக் கருகவிடாதே” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார்.
நான் அவர் பார்த்துவிட்டுச் சென்ற பார்வையிலிருந்தே அவர் எண்ணத்தைப் புரிந்துகொண்டேன். அவர் பார்வை பசித்த பூனை பாலைப் பார்ப்பது போல் இருந்தது.
என் கணவர் குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு வந்ததும் நானும் அவரும் பசியாற எதிரெதிரே அமர்ந்தோம். பூங்கோதை எங்கள் இருவருக்கும் தோசை எடுத்து வைத்து சட்னி ஊற்றினாள். என் கணவர் கொஞ்சம் சர்க்கரை கட்டார். அதையும் கொண்டு வந்து வைத்தாள்.
என் கணவர் சட்னியும், சர்க்கரையும் கலந்து தோசையைச் சுவைத்துச் சாப்பிட்டார். “இன்று சட்னி நல்லா இருக்கிறது” என்று சொல்லியபடி பூங்கோதை யைப் பார்த்தார். அவள் அகம் மகிழ்ந்து புன்னகைத்த படி மீண்டும் சட்னி ஊற்றினாள். அவள் சட்னி ஊற்றும் பொழுது அவள் வளையலில் எப்படியோ ஒட்டியிருந்த தோசை மாவு என் கணவரின் மணிக்கட்டில் பட்டுவிட்டது அவர், “என்ன பூங்கோதை தோசை சுடாத என் கையில் மாவு…” என்று வாயில் தோசையை வைத்துக் கொண்டு சொல்லியபடியும், சிரித்தபடியும் அவள் கையிலேயே துடைத்தார்.
அவள், “மன்னிச்சிருங்க” என்று சொல்லியபடி சட்னிச் சட்டியை வைத்துவிட்டு அவர் மணிக்கட்டில் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்ததையும் துடைத்து விட்டாள்.
இக்காட்சியைப் பார்த்தும் பார்க்காதவளைப்போல் உளம் வெதும்பிக்கொண்டிருந்தேன்.
என் நிலையை அறியாத என் கணவர் பூங்கோதையை நோக்கி, “பூங்கோதை உனக்கு எப்பக் கல்யாணம்?” என்று கேட்டார்.
அவள் நாணத்தால் தலை குனிந்தபடி தோசையைத் திருப்பிப் போட்டாள்.
“என்ன பூங்கோதை பதிலைக் காணோம்”
அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அவளால் அதைச் சொல்ல முடியவில்லை.
நாங்கள் தோசை தின்றதும் இருவருக்கும் கோப்பி கொண்டுவந்து கொடுத்தாள்.
அவர் கோப்பி குடித்துவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தார்.
நான் என் கணவரின் கொம்புவிட்டுக் கொம்பு தாவும் குரங்குக் குணத்தை அன்றுதான் பார்த்தேன்; உணர்ந்தேன்.
பூங்கோதையை வேலைக்கு வரச் சொல்லலாமா வேண்டாமா என்று ஒருமுறை சிந்தித்துப் பார்த்தேன். அவள் ஆபாசமாக உடுத்தவில்லை. சிலரைப் போல் ஆபாசமாக உடுத்திக்கொண்டு “எது ஆபாசம்” என்று கேட்கவுமில்லை பகட்டில்லை; படாடோபம் இல்லை. ஆண்களை மயக்கும் ஆரணங்குகள் சிலரின் அயோக்கியத் தனமும் இல்லை. ஆனால், அவள் அழகு? அவள் அழகைப் பார்த்து. இளமை எழிலை நோக்கி என் கணவர் தாமே கற்பனை செய்துகொண்டு மனப்பால் குடிக்கிறார்! இதற்கு அவள் என்ன செய்வாள் பாவம்! ஏழை, ஏதோ பிழைப்பிற்கு வேலை செய்கிறாள்! எனும் முடிவில் அவளை ஒன்றும் சொல்லாமல் வெறுமனே இருந்துவிட்டேன். அவளும் தன் வேலையை ஒழுங்காகச் செய்தாள்.
அன்று வேலையெல்லாம் முடிந்ததும் இரவு ஏழு மணிக்கெல்லாம் பூங்கோதை தன் வீட்டிற்குப் போய் விட்டாள்.
நான் மட்டும் தனியாக என் கணவரின் வரவை எதிர்நோக்கியபடி இருந்தேன். எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வருபவர் அன்று பதினொரு மணியாகியும் வர வில்லை. நள்ளிரவும் கடந்துகொண்டிருந்தது. என் கணவர் வரவில்லை.
ஒரே அமைதி. பகலில் ஆடியவர்கள் ஆட்டம் அடங்கிய வேளை. கடிகாரம் இயங்கும் ஒலிகூட என் காதுகளில் விழுந்தது. நேரம் செல்லச்செல்ல எனக்குப் பயமும் ஏற்பட்டது. ‘துணைக்குப் பூங்கோதையைப் போய் அழைத்து வரலாமா’ என்றுகூட நினைத்தேன். “அரைமைல் தொலைவிற்கு இந்த நள்ளிரவில் செல்வதா? அதற்கு இங்கேயே இருந்து விடலாமே!” என்று எண்ணியபடி துணிவை வரவழைத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தேன்.
கார் வரும் ஒலி. நான் எழுந்து சாரளத்தைத் திறந்து வெளியில் பார்த்தேன். என் கணவர்தான். முகப்பு வாயிலருகில் கார் வந்து நின்றது. காரை விட்டு இறங்கி, கதவைத் திறந்துவிட்டு, காரை கார் நிறுத்து மிடத்திற்கு ஓட்டிவந்தார். நான் முன்வாயில் கதவைத் திறந்துவிட்டேன். அவர் வீட்டிற்குள் வந்ததும் உடை மாற்றிக்கொண்டு படபடப்போடும் சுண்டிய முகத்தோடும் அந்த நள்ளிரவில் குளிர் நடுக்கும் வேளையில் குளிக்கச் சென்றார்.
நான் பெண்தானே! எனக்கு எப்படி இருக்கும்? வீட்டிலொருத்தி, வேலையிடத்தில் இன்னொருத்தியா? என்னை இப்பொழுது மறக்கும் நிலைக்கே வந்துவிட்டாரே என்று எண்ணி மனம் வெதும்பினேன்.
“தனியாக இருப்பாய், அதுதான் வேலை விட்டு நேராக வீட்டிற்கு ஓடி வருகிறேன்” என்று சொல்லிய என் கணவர் இன்று அதை மறந்துவிட்டாரே. வந்ததும், ‘கண்ணே மணியே! பொன்னே! பூவே!’ என்று வர்ணித்த என் கணவர் இன்று… ஐயோ …
என் மனம் என்னைப் படாதபாடு படுத்தியது. என் கண்கள் கண்ணீரை வெந்நீராய்க் கொட்டின. துக்கம் தொண்டையை அடைத்தது.
“எத்தனையா இருந்தாலும் கணவர் அல்லவா” என்று எண்ணியபடி சமையலறைக்குச் சென்று நண்பகல் சமைத்துவைத்திருந்த சோறு கறியைச் சுடவைத்தேன். சூட்டடுப்பில் என் கண்ணீரும் சுடச்சுடச் “சுர்” என்று விழுந்தது. குழம்பு சூடேறுவதைப்போல் என் உள்ளமும் சூடேறியது.
அவர் குளித்துவிட்டு வந்ததும், “எனக்குச் சோறு வேண்டாம். நீ சாப்பிட்டுவிட்டுப் படு” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு படுக்கைக்குச் சென்றுவிட் டார். அவர் இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றதும் எனக்கு என்னவோ போல் இருந்தது. எதையோ இழந்து விட்டதைப்போல் தோன்றியது. கவலையும் என் மனத்தைக் கப்பிக்கொண்டது.
நான் இதை நினைத்து நினைத்து அன்று இரவு சாப் பிடவில்லை. அவரிடம் எதுவும் மனம்விட்டுக் கேட்க மனமும் வரவில்லை. நானும் படுத்துவிட்டேன்.
முதலிரவு அன்றுகூட நான் தூங்கியதுண்டு. ஆனால் இன்று நான் தூங்கவே இல்லை. பலப்பல எண்ணங்கள் என் மனத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. விம்மலும் விக்கலும் எடுக்க, நான் கேவிக்கேவி அழுததைக்கூட என் கணவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டார். என் கண்கள் கண்ணீரால் தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது.
எப்படியோ நேரம் நத்தைவேகத்தில் நகர்ந்தது. பொழுதும் புலர்ந்தது.
ஏழு மணிக்கெல்லாம் பூங்கோதை வேலைக்கு வந்து விட்டாள்.
நான் என் கணவரின் வேண்டாத ஆசையை – போக்கை – எண்ணிக்கொண்டிருந்தேன் இன்று எப்படியும் தட்டிக்கேட்டுவிட வேண்டும் எனும் எண்ணத்தில் புலியைத் துரத்திய மறக்குல மங்கை மங்கம்மாளைப் போல் பொங்கி எழுந்தேன். துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பதையும், கடல் முழங்கால் ஆழம் என்பதையும் அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
என் கணவர் குளித்ததும் உடைமாற்றிக்கொண்டு பசியாறச் சமையலறை நோக்கி நடந்து வந்தார்.
சாப்பாட்டு மேசைக்கருகில் வந்ததும் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரப்போகும் சமயம். நான், “அத்தான், இராத்திரி ஏன் நேரங்கழித்து வந்தீங்க? தட்டச்சு அடிக்கும் பெண்ணுடன் காரில் சுத்துறீங்களாமே. இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று கேட்டேன்.
அவர், என்னைப் பாயும் புலி பார்ப்பதைப் போல் பார்த்துவிட்டு, “உனக்குச் சொன்னவர் யார்?” என்று அரிமாக் குரலில் அதட்டிக் கேட்டார்.
“யாரா இருந்தால் உங்களுக்கென்ன? நீங்க சுத்துனீங்களா இல்லையா?” நானும் சற்று ஆத்திரத்துடன் கேட்டேன்.
“பசுப்போல் இருந்த நீ பாயும் புலிபோல் மாறிவிட்டாயா? ஏண்டி உனக்குச் சொன்னவர் யாரடி?”
“அதை ஏன் கேட்கிறீங்க?”
“ஏனா, ஏண்டி திமிர்ப்பிடித்தவளே! எதிர்த்தா பேசுகிறாய்!” என்று சொல்லியபடி கன்னத்தில் ஓங்கி அறைந்தார். சாண் ஆனாலும் ஆண் என்பார்களே! இரும்புக்கை என் கன்னத்தில் பட்டதும் கன்னம் விர் ரென்றிருந்தது. துரும்பைப்போல் பறந்து சுவரில் போய் சாய்ந்தேன். தலையில் அடிப்பட்டதையும் உணர்ந்தேன்.
என்னால் வலி தாங்கமுடியவில்லை குருதி கொப்பளித்து வடிவதைப் பார்த்த நான் வெறிபிடித்தவளைப் போல், “அத்தான், நான் உங்கள் மனைவி. என்னைத் திட்டுங்கள், அடியுங்கள், கழுத்தை நெரித்துக் கொல்லுங்கள். ஆனால் எனக்குத் துரோகம் மட்டும் செய்யாதீங்கள், அத்தான்! அத்தான், பெண்பாவம் பொல்லாதது என்று பெரியவங்க சொல்லுவாங்க அத்தான். அந்தப் பாவத்தை நீங்க ஏத்துக்கிறாதீங்க அத்தான்.” என்று கதறி அழுதாள்.
“போடியோ! பெண் பாவமாம் பெண் பாவம். பெண் பேயாக மாறும்போது பாவம் என்னடி பாவம். பேயை அடக்கத் தெரியாத பேடிப்பயல் என்று உலகம் சொல்லாதா? சொல்லடி கள்ளி” அவர் பல்லை நரநர என்று கடித்தபடி என் உச்சி முடியைப் பிடித்துச் சுண்டி இழுத்து அப்படியே தூக்கி தொப்பென்று கீழே தள்ளினார். அவர் தள்ளிய வேகமும் உதைத்த வேகமும் எனக்கே தெரியவில்லை. இவ்வளவு பலத்தை இவ்வளவு நாளாக எங்கு ஒளித்து வைத்திருந்தாரோ அதுவும் தெரியவில்லை. பிறகு காரி உமிழ்ந்துவிட்டு வெறிபிடித்தவரைப் போல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.
இத்தனையையும் கவனித்தபடி நடுநடுங்கிப்போய் நின்ற பூங்கோதை என்னைத் தூக்கி இருக்கையில் இருக்க வைத்துக் குருதியைச் சிறு துண்டால் துடைத்தெடுத்தாள். கண்ணீரையும் துடைத்துவிட்டபடி, “அழாதேங்கம்மா” என்று கம்மியகுரலில் அழுதபடியே சொன்னாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது.
எனக்காக வருந்தி, கண்ணீர் வடிக்கும் கன்னியைப் பார்த்து, “பார்த்தியா பூங்கோதை, ஆண்களின் அடாதுடியை, என்னைப்பார்த்து, ‘பட்டே! சிட்டே! பாவையே! கோவையே!’ என்று வர்ணித்தவர் இன்று ‘பேயே பிசாசே! கூகையே! கோட்டானே!’ என்று சொல்லித் துடி துடிக்க அடிப்பதை?” என்றேன்.
“இதுதாம்மா குடும்பம். இரவும் பகலும் மாறிமாறி வருவதுபோல் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவது தாம்மா வாழ்க்கை. வாழ்க்கை என்னும் சொல்லிலுள்ள ‘ழ்’ழையும், ‘க்’கையும் (வா ழ்க்]கை) நீக்கிவிட்டு ‘வாகை’ சூடுவதுதான் வாழ்க்கையென்று புலவர் பெருமக்கள் சொல்லவில்லையா? அதுதானம்மா வாழ்க்கை! பெண்களாகிய நாம் கொள்கையாகக் கொள்ள வேண்டியதும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் வாகையைச் சூடுவது தானம்மா” என்று தழுதழுத்த குரலில் உணர்ச்சியைக் கொட்டிச் சொன்னாள்.
அவள் கூறிய ஆறுதலில் அறிவுரையும் இருந்தது. ஆனால் என் மனம் அதைக் கேட்கவில்லை.
அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்த மருத்துவ முறையை எனக்குச் செய்தாள். வேலைக்காரி என்றாலும் உடன் பிறந்தவளைப்போல் என் துயரைத் தன் துயர மென நினைத்துப் பண்டுவம் பார்த்தாள்.
அவள் எனக்குப் பண்டுவம் பார்த்த முறையிலேயே பாதி வலி பஞ்சாய்ப் பறந்துவிட்டது.
பாதி வலியோடு அன்றையப் பொழுதையும் கழித்தேன்.
மறுநாள் காலை என் கணவரும் நானும் சமையல் அறையில் இருந்தோம். என் கணவர் நெற்றியில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்துவிட்டு, “சிறு காயந் தான்” என்று சொல்லியபடி நேற்றடித்த இரும்புக் கையால் இன்று அரும்புணர்வு ஏற்படும் வண்ணம் நெற்றியில் தடவிவிட்டார்.
அப்பொழுது அங்கு பூங்கோதை சோகமே உருவாக வந்தாள்.
நானும் என் கணவரும் நன்கு பேசியதைப் பார்த்ததும் அவள் வியப்புற்றாள். அவள், “நேற்று அடித்துக் கொண்டவர்கள், இன்று அன்பு பாராட்டிக்கொள்கின்றனரே” என்பதை நினைத்து வியப்புற்றதை முகம் பளிச்சென்று காட்டியது. அவள் ஒருநொடிப் பொழுது நின்று பார்த்துவிட்டுச் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
சிற்றுண்டி பசியாறச் செய்து என் கணவருக்குப் பசியாறுவதற்குக் கொடுக்கும் வரைக்கும் அவள் எதுவுமே பேசவில்லை. என் கணவரும் அவள் பேசாமல் இருப்பதைப் பார்த்து இடையிடையே பேச்சுக்கொடுத்தார். அதற்கும் அவள் அசையவில்லை.
ஒரு வழியாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு என் கணவர் வேலைக்கும் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும், “பூங்கோதை, இப்படி வா” என்று அவளை அன்போடும் ஆவலோடும் அழைத்து நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.
வாடிய முகத்தோடு வந்த பூங்கோதை, “பரவா இல்லை” என்றாள் தழுதழுத்த குரலில்.
“சும்மா உட்காரு” என்று கையைப்பிடித்து உட்கார வைத்துவிட்டு, “பூங்கோதை, நீ ஏன் கவலையாய் இருக்கிறாய்? காரணம்?” என்று கேட்டேன்.
அவள் சிறுபிள்ளையைப்போல் வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள்.
“அழாதே, நீ ஏன் அழுகிறாய் என்று எனக்குத் தெரியும்” என்றேன்.
அவள் மேலும் வியப்படைந்து ‘உங்களுக்குத் தெரியுமா!” என்றாள் உதடுகள் துடிதுடிக்க.
“ஆமாம் பூங்கோதை எனக்குத் தெரியும்”
“அம்மா!”
“அமைதியாகக் கேளு. நேற்று எட்டு மணிவரைக்கும் என் கணவர் வீட்டுக்கு வராததால் இன்றும் நேரங் கழித்துதான் வருவார் என எண்ணி உங்கள் வீட்டிற்கு வந்தேன்”
“அம்மா!” அவள் விழிகள் கூர்மையாக என்னை நோக்கின. மறுநொடியே “அம்மா” கதறி அழத் தொடங்கிவிட்டாள். அவள் நிலை எனக்குப் பரிதாபமாக இருந்தது.
நான் அவளைத் தேற்றிவிட்டு, “கதவு தாழிட்டுக் கிடந்தது. தட்டலாம் என்று நினைத்துக் கையெடுத்தேன். உன் தாய் உன்னிடம் இரைந்து பேசியதைச் செவிமடுத்ததும் தட்டாமல் நின்றுவிட்டேன்.”
பூங்கோதை தலை குனிந்தாள். அவள் தலைகுனிந்திருந்தாலும் நான் என் பேச்சை நிறுத்தவில்லை.
“என் கணவர் என்னை அடித்ததை நீ உன் தாயிடம் சொல்லியதையும் அதற்கு உன் தாய், “இப்படி நடக்கு மென்று எனக்குத் தெரியும். எல்லாம் நான் செய்த வேலைதான்” என்று உன்னிடம் சொல்லியதையும், செவி மடுத்தேன். நீ உன் தாயிடம் “ஏன்?” என்று கேட்க, அதற்கு உன் தாய், ‘பிள்ளையில்லாத எனக்கும் என் கணவருக்கும் சண்டை மூட்டிவிட்டு, நாங்கள் பிரிந்த பிறகு பணத்திற்காகவும், பதவிக்காகவும் உன்னை என் கணவருக்கு மறுமணம் செய்துவைக்கத் தீட்டிய திட்டந்தான்’ என்பதையும் உன் தாயின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்” என்றேன்.
இதைச் செவிமடுத்த பூங்கோதை வாய் பேசா மவுனியானாள். கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின.
“நீ ஏன் கலங்குகிறாய்! உன் தாய் குடிகெடுத்து, உன்னை வாழவைக்க நினைத்ததையும், அதை நீ வெறுத்து உன் தாய்க்கே அறிவுரை கூறியதையும் செவிமடுத்தேன். நேற்றுத்தான் உன் உயர்ந்த அறிவையும், உன்னதப் பண்பையும் உணர்ந்தேன். நீ நல்லவள். நான்கு குணங்களைக் கொண்ட நற்குலப் பெண்மகள். சேற்றில் முளைத்த செந்தாமரை. குடும்பத்திற்கேற்ற குலமகள்” என்று சொல்லியபடி அவள் கண்ணீரைத் துடைக்கக் கையெடுத்தேன்.
அதற்குள் அவள் தன் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி புன்னகைத்தாள்.
“பூங்கோதை, என் கணவர் வீட்டிற்கு வந்ததும் என் செயலுக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு உங்கள் வீட்டில் நடந்ததையும் சொன்னேன். அவர் அமைதியோடு செவிமடுத்துவிட்டு புல்லுருவிக்குணம் படைத்த உன் தாயை ஏசினார். கடுகளவுத் தீகாட்டையே அழித்து விடும் என்பதை அறியாமல் அறியாமையால் செய்யும் அற்பக்குணத்திற்கு வருந்தினார். வேலை காரணமாகதான் நேரங்கழித்து வந்ததையும், நான் அவசரப்புத்தியால் அவரிடம் சண்டைபோட்டதையும் சொல்லி இனிமேல் இப்படிப்பட்டவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு முடிவிற்கு வரவேண்டாம் என்றும் அறிவுரை கூறினார். உன் தாயாரை நீ கடிந்துரைத்ததைப் பாராட்டினார்.” என்றேன்.
“அப்படியா?” என்று வியப்போடும் அகமகிழ்வோடும் கேட்டாள்.
“அதுமட்டுமில்லை, பூங்கோதை இன்னொன்றும் இருக்கிறது”
“என்னம்மா?”
“நீ இனிமேல் என்னை அம்மா என்று அழைக்காதே! அக்கா என்று அழை” என்றேன்.
அவள், “அம்…” திணறினாள்.
“பூங்கோதை, நீ பிள்ளையில்லாத எனக்குத் தங்கையாகவும், என் கணவருக்கு மனைவியாகவும் ஆகவேண்டும்.”
”அம்மா… இது தகாதம்மா தகாது” அவள் உணர்ச்சி ததும்பச் சொன்னாள்.
“ஏன் பூங்கோதை அப்படிச் சொல்லுகிறாய்?”
“ஒருத்திக்கு ஒருவன்; ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நம் பண்பு இல்லையா அம்மா?”
“நீ சொல்வது சரிதான் பூங்கோதை ஆனால், பிள்ளை இல்லாத எங்களுக்கு – இனிப் பிள்ளையே பிறக்காது என்று மருத்துவர் கூறிய எங்களுக்கு – பிள்ளையில்லாத குறையைப் போக்க வேண்டாமா?”
“அக்குறையைப் போக்க வழியிருக்கம்மா. எனக்குப் பிறக்கும் பிள்ளை உங்களைப் பொறுத்தவரையில் இன்னொருத்தி பிள்ளைதானே.”
“நீ சொல்வது ஒருவழியில் சரிதான் அதுக்கென்ன?”
“அதற்கு ஒரு வழி இருக்கம்மா எத்தனையோ ஏழைப்பிள்ளைகள் நல்ல உணவு இல்லாமல், உடுத்த உடையில்லாமல், பள்ளியில் படிக்கப் பணமில்லாமல், படுக்கப் பாயில்லாமல் வாடுகிறார்களே! அவர்களுக்கு வாழ்வளித்து, அறியாமையை அகற்றி, வறுமை, திருட்டு, சூது போன்ற குறைகளை நீக்கலாம் அல்லவா?”
பூங்கோதை இமைகள் துடிக்க உணர்ச்சியைக் கொட்டிக் கூறினாள். அவள் இப்படிச் சொல்லியதும் எனக்கு ஒருவகை உணர்ச்சி – புத்துணர்வு பிறந்தது. அந்த உணர்வில் “நீ சொல்வது சரி” என்றேன். மறு நொடியே இளமையிலேயே இவ்வளவு அறிவும், அடக்கத் தன்மையும், முற்போக்கு எண்ணமும் பெற்ற பூங்கோதையை எப்படியும் என் கொழுந்தனுக்கு மணமுடித்து விடவேண்டும் என்று எண்ணினேன். இதற்குமா அவள் மறுப்பாள்!
நான் நினைத்ததை அறியாத அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பாலைச் சிரிப்பு என் கொழுந்தனிடம் சிரிக்கும் நாள் வராமலா போகும் என்று எண்ணியபடி பூங்கோதையைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.
– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.