நினைத்தேன் வந்தாய் … நூறுவயது..!





எங்கே போவதென்றாலும் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டுத் தான் போவான் சதாசிவம். அவனுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அவன் அம்மா, அவனை அப்படி வளர்த்திருக்கிறாள்!. அன்றும் கோயில் வாசலில் போய் நின்றான். அது ஒரு தெருகுத்துப் பிள்ளையார்.

பிள்ளையாரிலேயே பரிதாபமானவர் அவர்தான் என்பது அவன் எண்ணம். காரணம் எவனோ சைட் பிரிக்கையில் ரோடு குத்து வர்றா மாதிரி சைட் பிரிச்சு சதி செய்ய, அந்தப் பாவம் தீர்க்க காம்பவுண்டு மூலையில் ‘அம்போனு” இவர்இருக்கார்பாவம்!! .
ஒரு நைவேத்தியம் உண்டா…? நாளு கிழமை உண்டா.?. என்னவோ பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு, ஒரு புது வேஷ்டி துண்டு வெல்லம் தேங்காய் உடையும் அவருக்கே பகவான் கிருபையில!!!.
‘அப்பனே விநாயகா.. கூடவே வா! டூவீலர் வண்டி மொத மொதல்ல எடுத்து ஓட்டறேன். இனிதான் லைசென்ஸ் எல்லாம் எடுக்கணும்!. நீ, என் கூடவே வா…! வந்தா..?! தைரியமா இருக்கும்!’ விநாயகரை வேண்டிக் கொண்டு வண்டி கிளப்பினான்.
அந்தக் கம்பெனியில் இலவசமாய் அவனுக்கு வண்டி கொடுத்தார்கள்,’ ஊரான் ஊட்டு நெய்யுன்னா .. கசக்குதா என்ன?!
மேட்டுப் பாளையம் ரோட்டில் சிந்தாமணி தாண்டி புரூக்ஃபீல்டு ரோடு திரும்ப, டபக்குனு குறுக்கே பாய்ந்தார் குந்தாணி!
‘நிறுத்து! நிறுத்து! வண்டியை ஓரங்கட்டு!’ என்று நிறுத்தினார் போலீஸ்.
‘நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு?!’ லாரி பின்னாடியே மறைஞ்ச்சுதானே ஓட்டிட்டு வந்தேன்?!’
‘லைசென்ஸ் எடுத்துட்டு வாப்பா..!’மிரட்டலாய்ச் சொல்ல..
‘லைசென்ஸ் இல்லை!’ பம்மினான்.
‘ஒரு நூறு குடு!’ என்றார்.
நூறு பெரிசில்ல..! ஆனா.. எப்படிக் கரெக்டா தன்னிடம் லைசென்ஸ் இல்லைனு கண்டு பிடிச்சார்?! அதுதான் ஆச்சரியமாக இருந்தது.
கேட்க, அவர் சொன்னார்…ஊர்ல ஓடற நூத்துக்கு பாதி வண்டிக்கு லைசென்ஸ் இருக்காது!
கையில் நூறைத் திணிக்க, ‘அந்தப் பொட்டிக் கடைல போட்டுட்டுப் போ! என்றார். கைக்கூலி வாங்க ஒரு கடையா?!
‘ஓ! அப்படியா..?!’ சார், இன்னொரு சந்தேகம் ‘உங்க பேரு?’
நிமிர்ந்து பார்த்துவிட்டு இவன் வயதையும் வனப்பையும் பார்த்த தைரியத்துல ‘கணேசன்!’ என்றார்.
கூடவே வான்னு கூப்பிட்டதுக்கு இப்படியா விநாயகா?