நிஜமான மாறுதல்…




பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் .
‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘ – யோசனையுடன் எடுத்துப் பிரித்தாள்.
உள்ளே சின்ன அளவு புகைப்படத்தில் இளைஞன் ஒருவன் புன்னகைத்தான்.
‘இப்போது வந்துவிட்டு சென்றவனுக்கும் முதல் ஆள் !’ -இவளுக்குப் பளிச்சென்று புரிந்தது.
‘மறதியாக விட்டுப் போய்விட்டானா…? !’- பணம் இருக்கும் அறையைப் பிரித்தாள்.
உள்ளே ஐந்து இரண்டாயிரம் நோட்டுகள். மூன்று ஐநூறு தாட்கள். ஐந்து நூறு… சில பத்து ரூபாய்க்கள். அத்துடன் ஒரு நீல வண்ணத்தில் ஒரு உள்நாட்டுக் கடிதம்.
அது பிரிக்கப்பட்டிருந்ததின் அடையாளமாய் வாய் கிழிக்கப்பட்டிருந்தது.
பெறுநர் முகவரியைப் பார்த்தாள்.
இரா. புவனன். 12. கிழக்கு வீதி, காந்தி நகர், காரைக்கால். 609602. என்று விலாசம் தெளிவான கையெழுத்தில் துல்லியமாக இருந்தது.
விடுநர் முகவரி…அமுதா . சேலம் என்று மொட்டையாக இருந்தது.
பெண் எழுதி இருக்கிறாள். அடுத்தவர் கடிதத்தைப் படிப்பது தவறு…! சின்னக் கலக்கத்தில், தடுமாற்றத்தில் விரித்துப் படித்தாள்.
அன்பு அண்ணனுக்கு…
உன் தங்கை அமுதா எழுதிக் கொண்டது.
இங்கு நான் நலம். ஆனால்… பணக்கஷ்டம். என் கணவருக்குச் சிறுநீர்ப் பாதையில் சிறு அடைப்பு. சிறுநீர் கழிக்கவே சிரமப்படுகிறார். விட்டால் உயிருக்கு ஆபத்து. அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஐம்பதாயிரம் ஆகுமென்று டாக்டர்கள் கூறுகிறார்கள். நான் நகைகளை விற்று நாற்தாயிரம் வைத்திருக்கிறேன். நீ உடன் ஒரு பத்தாயிரம் அனுப்பினால் குணமாக்கலாம். தயவு செய்து தாமதம் செய்யாமல் அனுப்பவும். உன்னுடன் கைபேசியில் தொடர்பு கொள்வது சிரமமாய் இருக்கிறது. எனவே இக்கடிதம். தாமதம் செய்ய வேண்டாம்.
இப்படிக்கு….
அமுதா.
‘இதற்காகவா இந்தப் பணம்..?’ – படித்த வினோத்திற்கு மனம் கனம்.
‘இன்னும் ஏதாவது இருக்கிறதா…?’ஆராய்ந்தாள் .
அகப்பட்டது அடகு சீட்டு. எடுத்துப் பிரித்தாள். பத்தாயிரத் தொகைக்கான பதினாறு கிராம் தங்கச் செயின் . விபரம்.
‘சரி. ஆள் நகையை அடகு வைத்துவிட்டு இங்கே வந்து பர்ஸை மறந்து விட்டுச் சென்றிருக்கிறான்.! – புரிந்தது.
‘விட்டவன் திரும்ப வருவானா..? இல்லை… எங்கே தொலைத்தோம் என்று தெரியாமல் அலைந்து , திரிந்து கொண்டிருக்கிறானா..?
இங்கே விட்டுவிட்டு…. தன் இருப்பிடம் போய் தேட இல்லையென்றதும்…இங்கேதான் விட்டிருப்போம் என்று நினைவு வர…. பணத்திற்காக பலான தொழில் செய்பவள் எப்படிக் கொடுப்பாள்..? போய் திரும்புவது மனக்கஷ்டம் ! என்று இருந்து விட்டானா..?
ஆபத்திற்கு உதவக்கூடிய அத்தியாவசியப் பணம். எப்படித் திருப்ப..?
இவள் யாருடைய கைபேசி எண்களையும் வாங்கி வைத்துக் கொள்வதில்லை. தேவை உள்ளவர்கள்தான் இவளுடைய எண்களை வாங்கி வைத்துக் கொண்டு’வரவா..?’கேட்டு வந்து செல்வார்கள்.
இவன் தரகர் வழி வந்து சென்றவன். எப்படித் திருப்ப..? – திரும்பத் திரும்ப இவளுக்குள் இதே யோசனை.
நேரடியாக அவன் தங்கைக்கு நாம் அனுப்பினால் என்ன…? யோசனை வர…பணத்தை அனுப்ப இந்த முகவரி போதாது ! புரிந்தது.
அவசரத் தேவைக்கு வைத்தது. கண்டிப்பாக வருவான் ! – நினைத்து எல்லாவற்றையும் பழையபடி பர்சில் வைத்துவிட்டு வேலையைப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது.
‘தொலைத்தவன் !’ – நினைத்து திறந்தவள் முகத்தில் ஏமாற்றம்.
தரகர் !
“கிராக்கி ஒன்னு வந்திருக்கு..”
“இல்லே. வேணாம்..”
“ஏன்..?”
“மனசு சரி இல்லே.”
“வயசு இருக்கும்போதே சம்பாதிக்கனும்.. வினோதினி…”
“மனசு சரி இல்லாம, வெறும் இயந்திரம் இருந்து சம்பாத்திக்கிற காசு செரிக்காதுண்ணே !”
அவர் அதற்கு மேல் பேசாமல் திரும்பினார்.
“அண்ணே! ஒரு விசயம்…”
“என்னம்மா…?”
“பத்து மணிக்கு ஒரு ஆள் அழைச்சி வந்தீங்களே. அவர் கைபேசி எண் இருக்கா..?”
“இல்லேம்ம. இது வாடிக்கையான ஆள் இல்லே. புதுசு.”- சென்றார்.
‘ஆள் வரவில்லை. தெளிவான உள்ளூர் முகவரி. நாமே கொண்டு சென்று திருப்பினால்தான் அவசரத் தேவைக்கான இந்தப் பணம் சரியாய் உதவும் !’ – நினைத்த வினோதினி அடுத்ததாக செயலில் இறங்கினாள்.
சுடிதாருக்கு மாறி…. உடன் பேருந்து ஏறினாள்.
காந்திநகர் வந்து… வீட்டு எண்ணைக் கண்டுபிடித்து…அழைப்பு மணி அழுத்தினாள்.
புவனன்…. எங்கெங்கெல்லாமோ சுற்றி… இறுதியில் வினோதினி வீட்டிற்கும் சென்றவன் முகத்தில் கரி.
வாசலில் பூட்டு. !
வெறுத்து… அலுத்து, சலித்து, களைத்து… தொங்கிப் போன முகத்துடன் வீட்டில் நுழைந்தான்.
“தம்பி…!”
இவன் வரவை எதிர்பார்த்திருந்த அலமேலு அழைத்தாள்.
“என்னம்மா…?”- துவண்டு நாற்காலியில் சாய்ந்தான்..
“இந்தா…” பர்ஸை நீட்டினாள்.
“ஏதும்மா..?”
பரதிடுக்கிட்டு பரப்பாக வாங்கிப் பிரித்தான்.
“எல்லாம் சரியா இருக்குடா..”
“ஆம்மாம்மா. எங்கிருந்துது…?”
“ஒரு பொண்ணு கொண்டு வந்து கொடுத்தாள்…!”
“பொண்ணா…?”
“ஆமாடா. பேரு வினோதினி ! ” சொன்னாள் .
“அம்மா..” புவனனுக்குள் உதறல். கை நடுங்கியது.
“எப்படிம்மா உன் கைக்குக் கிடைச்சுது ? கேட்டேன். நீ அவ வீட்டுக்குப் போனியாம். விட்டுட்டு வந்ததா சொன்னாள்..”
” அ… அம்மாஆ ..!”
“பிரிச்சிப் பார்த்தாளாம். பணமிருந்துச்சாம். கூடவே உன் தங்கச்சிக் கடிதம், அடகு சீட்டு எல்லாம் இருந்ததாம். அத்தியாவசியம், அவசரமாச்சேன்னு நினைச்சி உடனே எடுத்துக்கிட்டு வந்தேன்னு சொன்னாள்.”
“வே… வேற ஏதாவது…?”
“ம்ம்… நான் நடத்தைக் கெட்டவள். அம்மா அப்பா இல்லாத அநாதை சொன்னாள்.”
“அம்மா..!” அதிர்ந்து பார்த்தான்.
“அவளைப் பார்த்தா நல்லவளா தெரியுது புவனன்….”
தாயின் குரலில் குழைவு. ! புரியாமல் பார்த்தான்.
“சேத்துல செந்தாமரை மாதிரி இப்படி ஒரு நல்ல மனசு இருக்கே…!”
”……………………………”
“அவள் எனக்கு மருமகளை வந்தாக்கூட நல்லா இருக்கும் தோணுது.”
இடி !!
“அம்மா ஆஆ…!”அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனான்.
“பதறாதே புவனன். அவ உண்மையைச் சொன்னாள். ஐயோ… இது அவசரத்துக்கு உதவுற பணமாச்சே. ஒரு நோய்க்கு உதவுற தொகையாச்சே. அதுவும் சொந்த தங்கை, மச்சானுக்கு உதவுற பணமாச்சேன்னு பதறி தூக்கி வந்திருக்கா. மத்தவங்க கஷ்டத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு உதவுற குணம்டா. சாக்கடையில் சந்தனாமாய்க் கிடக்காள். எடுத்துக்கிலாமோன்னு என் மனசுக்குப் படுது. நீ மனைவியை இழந்தவன். அப்படி இப்படி இருக்கலாம் தப்பில்லே. அதனால் இப்படி தப்பா நடக்குறீயேன்னு வெறுத்து உன் தலையில் ஒரு கெட்டவளைக் கட்டி வைக்கிறது என் எண்ணமில்லே. எந்தத் தாயும் தன் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டாள். அந்தப் பொண்ணு ரொம்ப நல்லவளாய் என் மனசுக்குப் படுறாள். இன்னும் ஏன் அங்கேயே அவள் கிடந்தது சீரழியனும்ன்னு மனசு துடிக்குது.”
‘அம்மாவிற்கு எவ்வளவு உயர்ந்த உள்ளம். என்ன மாதிரியான மனசு, மாறுதல், மாற்றம்.!’ – அவனுக்குள் வியப்பு , விசகசிப்பு.. எல்லாம் விஸ்வரூபம் எடுத்தது.
“அந்த பொண்ணுகிட்டேயே உன்னைப் பத்தின உண்மையெல்லாம் சொல்லி என் மவனைக் கட்டிக்கிறீயா..? கேட்டேன். அதுக்கு அவள் சட்டுன்னு பதில் சொல்லாம…நான் இந்த தொழிலை மனசார செய்யல. உங்க உங்க புள்ள ஏத்துக்கிட்டா எனக்கு சம்மதம் சொன்னாள். சரி. இருன்னு அறையில உட்கார வைச்சிருக்கேன். சம்மதம்ன்னா சொல்லு அழைக்கிறேன்.”சொன்னாள்.
“அதுக்குத் தேவையே இல்லே. நானே உங்க முன்னாடி வந்து முகத்தை காட்றேன். வர்றேன் !”
சொல்லி வினோதினி அறையை விட்டு வெளியே வந்தாள்.
புவனன் முகத்தில் பட்டென்று மலர்ச்சி, ஆயிரம் வோல்டைத் தாண்டிய மின்சார வெளிச்சம். பிரகாசம். !!