நிஜங்களின் வலி
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆற்றின் மேற்பரப்பில் சிற்றலைகள் நெளிந்தன. மேகங்களைக் கருவுற்ற வானம், ஒளிவெள்ளத்தில் மிதந்தது. மேற்கு உதயம் சிந்திய சிதறல்களால் நதி, குழைந்து வண்ணங்களைப் பிரசவித்தது. கிராமத்து நதிச் சூழல், மனதை வெகுவாக ஈர்த்திழுக்கும். ஆற்று நீரில் குளிப்பதென்றால், எல்லையில்லா பேரானந்தம். ஒவ்வொரு விடியலிலும் நீரில் மூழ்கி குளித்தபின்தான் தொழிலுக்குப் புறப்பட்டுச் செல்வேன்.
ஒரு தெருவைத் தாண்டி, இங்கு வந்து புனலாடிச் செல்வது எனக்கு அலுப்பைத் தரவில்லை. காட்சிகளில் ஒன்றி பெரிதும் மனம் லயிப்பேன். கரும் நிறத்திலான, சிறிய பறவைகள், வேகமாக வந்து, நீரின் மேல் விளிம்பில் மூழ்கிக் குளியல் நடத்தி, பின் மேல் நோக்கியெழுந்து விருட்டெனப் பறந்து சிறகடித்துச் செல்லும்.
குளிக்கவென வந்திறங்கும் பெண்கள் மார்புக்கட்டோடு படித்துறையில் நின்று, வாய் ஓயாது ஊர் வம்பளப்பது இங்கு நித்திய காட்சித் தரிசனங்கள். கரைகள் தோறும் நாணல் புதர்கள், செழித்து வளர்ந்து, மண்டிக் கிடக்கும். எதிர்திசையில் காட்டு மரங்களும், கூனற் தென்னைகளும், காற்றில் கலந்து தலையசைக்கும்.
மூலை மணற்பரப்பில் உமர் வாத்தியார் சோகச் சுமையுடன், குந்தியிருந்தது எனக்குப் பெரும் வியப்பை அளித்தது. அவரது முகத்திலின்று துயரத்தின் வடு, விசாலமாய் இறுகிக் கனத்திருந்தது.
எப்போதும் கலகலப்பாய் இருக்கும் மனிதர் இன்றேன் உற்சாகமாய் இல்லை? என்பது என்னுள் கேள்விக்குறியாயிற்று.
“என்ன வாத்தியார் இன்னும் குளிக்கல்லியா?”
“குளிக்கணும்…..!”
ஒற்றை வரியில் சன்னமாய் வந்து விழுந்தது, வார்த்தை . அவரின் உதட்டோரத்து இளநகை எங்கோ தொலைந்திருந்தது. எதையோ இழந்துவிட்ட தவிப்பில் அசையும் நீர்ச்சலனங்களை இருண்மையாக வெறித்தார்.
அவருக்கும், எனக்குமான ஆரம்ப பரீட்சயமே இந்த ஆற்றங்கரைதான். பழகுவதற்கு மிகவும் அந்நியோன்யமானவர் அவரது நல்இயல்புகள் பற்றி நான் நிறையவே அறிந்திருந்தேன். பிறர் மீது நேயங்காட்டுவது, உதவிகள் புரிந்து சகமனிதனின் நெருக்கடி தீர்ப்பது போன்ற குணாதிசயங்கள் அவரிடம் மேலோங்கி இருந்தன. இயந்திரத்தனம் மலிந்துவிட்ட இன்றைய மனித இருப்பில் இப்படியான நேயம் மிக்கவர்களை மிக அபூர்வமாகத் தான் பார்க்க முடியும்.
அடிக்கடி என்னை, இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்து நட்பு பூண்டிருக்கிறார். உமர் வாத்தியாரின் மளிகைக்கடை வாடிக்கையாளரினால், எப்போதும் களை கட்டும். இந்தக் கச்சோடத் தளமும், வருவாயும் பொருளாதார ரீதியில் அவருக்கு நிறைவை தந்திருக்கும் என்பது என் கணிப்பு.
நல்ல வருவாய், அழகான மனைவி, சிக்கலில்லாத சிறிய குடும்பம். அன்றாட வாழ்விற்கு இனிமை சேர்ப்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்?
அவர் மனைவி ஜெஸீமா, அவரை விட ஒரு ஐந்து வயது இளையவள். வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். என்றாலும் அவளுக்கு அவர் எந்தக் குறையையும் வைக்க வில்லை . தம்பதியர் இருவரின் அன்பும், நெருக்கமும் பிறரைப் பொறாமைப்பட வைக்கும். அவர் அவள் மீது உயிரையே வைத்திருந்தார். மணமாகி இரண்டு வருடம் கழிந்தும், இன்னும் மசக்கைக்கான ஒரு சமிக்ஞை இன்னும் அவளிடமிருந்து வரவில்லை . உமர் வாத்தியாரின் பாரம்பரிய குடும்ப வேர், கேரள மண்ணில் படர்ந்திருந்தது. இளவயதிலேயே அங்கிருந்து வந்தவர். மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பவே இல்லை. அவரது உரையாடல் தொனியில், மலையாள நெடி கலந்திருக்கும்.
நாற்பது வயதான அவருக்கு உருண்டு திரண்ட கட்டுமஸ்தான சிவந்தமேனி, கருங்காலிக் கட்டை போல், உரமேறிய திண்மையில், எப்போதும் தேகம் பளபளக்கும். இன்னமும் தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வார்.
சீனடி, சிலம்புவீச்சு, மல்யுத்தம் போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுக்களை நுட்பமாகவே கற்றிருந்தார். மனிதனது அந்தரங்க நரம்புகளைத் தட்டி வீழ்த்தும் மர்மஅடி சூட்சுமங்களை தான் கற்றிருப்பதாகக் கூறுவார். ஆனால், இது வரை அந்த அசகாய மர்ம அடியை யார் மீதும் பிரயோகிக்காததிற்கு காரணம் தன் உயிருக்கு ஆபத்து வரும் வேளையில் மட்டுமே, அதைப் பயன் படுத்துவதாக தன் குருவிற்கு , வாக்கு கொடுத்துள்ளாராம். அந்தக் கலைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சில இளைஞர்களுக்கு இரவில் பிரத்தியேக பயிற்சிகள் அளித்து வந்தார். அவர்களில் நௌசாத் என்ற வாலிபன் எல்லா வித்தைகளையும் திறம்படவே கற்றுவருவது குறித்து அகமகிழ்ந்தார். அவனிடத்தில் அதீத அக்கறை காட்டி வந்தார். நௌசாத் கடையிலும், வீட்டிலும் அவரது வேலைப்பளு குறைய உதவிகள் செய்தான். இதனால் அவரது குடும்பத்தில் ஒருவனாக ஐக்கியப்பட்டிருந்தான். –
“ஏன் இப்படி கவலையாக இருக்கிறீங்க?” என்று உமர் வாத்தியாரிடம் கனிவோடு கேட்டேன்.
அவர் என்னில் உற்சாகமற்ற ஒரு பார்வையை பதித்து விட்டு, மலையாளம் கலந்த தமிழில் விடை கூறினார்.
“நாளை நிங்கள் எண்டே வீட்டுலு வரணும்! நமக்கு கொரச்சி சம்சாரிக்கான் உண்டு.” அவரது வேண்டுகோளின் உள்மடிப்பு எனக்குப் புரிபடவில்லை . சொந்த விடயங்கள் குறித்து ஏதும் பரிமாறிக்கொள்ளவாக இருக்கும் என நினைத்தேன். அன்று முழுவதும் கடை அடைத்திருந்தது. வீடும் வெறிச்சோடிப் போயிருந்தது.
இருவரும் வழக்கமாக அமரும் முற்றத்து மாமர நிழலில் உட்கார்ந்தோம். நமக்குள் நிலவிய பூதாகர மௌனத்தைக் கலைத்தேன்.
“ஏன் வாத்தியார், ஒரு மாதிரிய இருக்கீங்க, வீட்டில் யாரும் இல்லையா?”
“இருந்தவள் நேற்று பாதி ராத்திரி ஆ நௌசாத் பட்டியோடு இவடேயிருந்து சாடிப் போயிட்டாள்.” என் தலையில் பாறாங்கல் ஒன்று விழுந்த அதிர்ச்சியில் தடுமாறினேன்.
உமர்வாத்தியார், மாமரத்து இராட்சதக் கிளைகளை ஊடறுத்து வெறித்தவாறு கூறத் தொடங்கினார்.
“அதிகாலத்து உறக்கம் விழிச்சி நோக்கும் பளு, ஜெஸீமாவைக் கண்டில்லா! எல்லா ஸ்தளங்களிலும் தெரக்கி, நோக்கிட்டும், அவளில்லா. முன் வராந்தாவிலு உறங்கிக் கிடந்த நௌஷாத்தும் இல்லா! பீரோவிலுமுண்டு, துணியொக்க சிதறிக் கிடந்து, ஆ நன்றி கெட்ட பட்டிகள் ரண்டும், இவடயிருந்து ஓடிப் போயிருக்கயா. ஆத்தியம் ஞான், இதை அறிஞ்சிருந்தேனெங்கில், ஆ, துரோகியிண்ட விலாவில தட்டிக் கிடத்தியிருப்பேன். அவள, ஞான், எங்கனயெல்லாம் விசுவசித்து நேசிச்சு. அவள் இங்கன என் ஹிருதயத்திலு தீ, அள்ளிக் கொட்டிட்டு சாடிப் போயிட்டல்லோ. இனி ஞான், எங்கன மனுஷிரிண்டே முகத்தை நோக்குந்தது? ஸ்திரீகள் இங்கன நன்றி கெட்ட ஜென்மங்களா?” அவர் துயரத்தின் அழுத்தத்தில் நின்று நெஞ்சுருகி விம்மினார்.
“வாத்தியார்! மனிதனது வாழ்க்கையில், நன்மை, தீமை, எல்லாம் தான் நடக்கும். மனதை தளர விடாதீங்க. தூர நோக்கில்லாமல் திடீரென முடிவெடுக்கிற பலவீனம் சில பெண்களிடத்தில் உண்டு. ஒரு வேளை, ஜெஸீமா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்ற ஆசையில சபல புத்திக்கு அடிமையாகி இருக்கலாம் அல்லவா?”
“அதெங்கன நடக்கும்? நிங்களுக்கு ஆவிஷயம் அறிஞ்சூடா, அல்லே? ஜெஸீமா கர்ப்பம் உண்டாகிக் கிடந்தா, மூணுமாசம், ஆ சந்தோஷத்தில் ஞான் களிச்சுப்போய் இருந்தப்பலானு ஈ இடி மறிஞ்சி விழுந்துது. இப்போல், எனிக்கொரு சம்சியம் உண்டு. அவளுடே வயிற்றிலே வளருந்த கருவுக்கு பந்தக்காரன் ஞானா? நௌஷாத்தா? என்பதானு.”
“மனதை சஞ்சலப்படுத்திக் கொள்ளாமல் பொறுமையாக இருங்கள் வாத்தியார். உங்களுடைய நல்ல மனதிற்கு ஒரு குறையும் வந்துவிடாது” என்று ஆறுதல்கள் கூறி அவரது மனதை சமநிலைக்கு கொண்டுவர முயன்றேன்.
துன்ப துயரங்களைத் திடீரென சுமந்து வந்து, ஈவிரக்கமின்றி மனிதர் மீது கொட்டிவிட்டுப் போகிறது காலம். அதே காலம்தான், எரியும் ரணங்களுக்கு பின்பு வந்து மருந்து தடவி ஆறவைக்கிறது. உமர் வாத்தியாரின் தீக்காயங்கள், ஆற சிறிது காலம் பிடிக்கலாம்.
இப்போது அவர் துன்பங்களை மறந்து முன்புபோல், கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். தன் நெஞ்சின் வடு ஆற பிறரிடம் மேலதிக வாஞ்சை செலுத்துகிறார். கடைக்கு வரும் சிறு பிள்ளைகளுக்கு இலவசமாக இனிப்புகள் வழங்கி அன்போடு தலையைத் தடவி ஆறுதல் பெறுகிறார்.
வறுமைப்பட்ட குடும்பப் பெண்கள் அவரிடம் வந்து, கடனுக்குச் சாமான் வாங்கி, வயிற்றுப் பசி தணிக்கிறார்கள். அவற்றில் சிலதே அபூர்வமாக மீளக் கிடைக்கும். திடீரென யாரும் நோய்வாய்ப்பட்டால், வைத்தியச் செலவிற்காக உமர் வாத்தியாரிடம் பணம் கேட்டுப் பெறுவார்கள். இவர் செய்யும் உதவிகளால், அப்பிரதேச மக்கள் இவரை ஒரு நேயமுள்ள மனிதர் என விதந்து பேசுவர்.
அண்மைக் காலங்களாக அவருக்கு ஒரு புதிய தோழனுடனான நட்பு ஏற்பட்டுவிட்டது. எங்கிருந்தோ அடிக்கடி வரும் ஒரு கறுப்பு நிற நாய், வாலை ஆட்டிக் குழைந்து முனகி இவர் மீது பிரியம் செலுத்தும். உமர் வாத்தியார் தயவில் நாய் ஜிம்மிக்கு, மூன்று வேளை ஆகாரம் தவறாமல் கிட்டும். பகல் பொழுதுகளில் ஊரைச் சுற்றி விட்டு வந்து, இரவுக் காலங்களில் அவரது வீட்டுத் தோட்டத்தை காவல் காக்கும்.
இப்போது ஒரு மிருகமாவது தன் மீது அன்பு செலுத்த எஞ்சியிருக்கிறதே என்று அவர் மகிழ்வடைந்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக ஜிம்மி தோட்டப்பக்கம் வராமற் போனது, அவருக்குப் பெரும் கவலையை அளித்தது. தான் நேசிக்கும் ஜீவன்கள் எல்லாம் தன்னை தனிமைப்படுத்தி விட்டுப் போவதான உள்ளுணர்வில் கலக்கமுற்றார்.
அது ஒரு பகல்பொழுது, ஜிம்மி ஆடியசைந்து சோர்வுடன் வருவது தெரிந்தது. அதன் விலா எலும்புகள் துருத்திக் கொண்டு மிதந்தன. கண்கள் வித்தியாசமாகக் காட்சியளிக்க வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. சுகக்கேட்டினாலோ, அல்லது பசியினாலோ, சோர்ந்து போய் வருகிறதென்று அதன் மீது பரிதாபப்பட்டு, வழக்கம் போல் “ஜிம்மி” என்று விளித்தார். அது முன்புபோல் உற்சாகமாக வாலை அசைக்கவில்லை. பார்வையில் அந்நியத்தனம் குடிகொண்டிருந்தது. உணவு கொண்டுவந்து தட்டில் வைத்து உபசரித்தார். அது முகர்ந்து பார்த்துவிட்டு அவரை விகற்பமாய் வெறித்தது. சில கணங்களே சென்றிருக்கும். வன்மம் கொண்டு அவர் மீது பாய்ந்து கீழே விழுத்தாட்டிக் கடித்துக் குதறியது.
தப்பிக்க வழிதெரியாது உமர்வாத்தியார் கூக்குரலிட்டார். அவரது மேனியெங்கும் குருதிக் காயங்கள். அயலவர்கள் விரைந்து வந்து, “பைத்திய நாய்! பைத்திய நாய்!” என்று கத்தியவாறு அதனை அடித்துத் துரத்தினர். அரை மயக்க த்திலிருந்த உமர் வாத்தியாரை, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். “விசர் நாய் கடுமையாகக் கடித்திருக்கிறது. தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும்” என்று வைத்தியர்கள் கூறினர்.
ஒரு மாத காலம் வைத்தியசாலையில் அவரைத் தங்க வைத்து சிகிச்சைகள் தொடர்ந்தன. மருத்துவமனை சென்று அவரைப் பார்த்து ஆறுதல் கூறிவந்தேன். சில நாட்களில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட அவர், மெலிந்து ஷீணித்து வீடு திரும்பியிருந்தார். மிகவும் தாழ்ந்த தொனியில் என்னோடு உரையாடினார்.
“இது ஒரு நன்றியில்லா லோகமப்பா! அன்புக்கு பகரமாய் தீமைதான், வந்து சேருகிறது. பெரும் ஞானிக்ள ஒக்க ஈ லோகத்தில் அனுபவிச்சது, இதானு! இவடே ஜீவிக்கிந்த மனுஷ்யரிடத்தே அற்பமும் நேயமில்லா! இனி ஞானும் ஒரு புதிய மனுஷனாயிட்டு ஜீவிக்கான் தீர்மானிச்சு” என்று ஒரு வேதாந்தியைப் போல் பிடிப்பற்ற தோரணையில் வேதனையோடு கூறினார்.
நாளடைவில் அவரது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிறரைப்பற்றி சிறிதும் கவலைப்படாத, இயந்திர மனிதனாக, மாறிப் போயிருந்தார். இப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகளோடு வாஞ்சை காட்டுவதை நிறுத்தியிருந்தார்.
கடன் யாருக்குமில்லை, ரொக்கத்திற்கு மட்டுமே வியாபாரம்! என்று கடையில் போர்டு மாட்டியிருந்தார். யாரும் வந்து அவசரத்திற்கு உதவி கேட்டால், உதட்டை பிதுக்கி, கையை விரித்து விடுவார். அவரது திடீர் மாற்றம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஏனிந்த திடீர் மாற்றம்? என அவரிடம் வினாத் தொடுத்தேன்.
“இப்போல் ஞான், இரக்கமில்லா இயந்திர மனுஷன்! எண்டே இப்பத்தய லோகம், வளரே, சுகமானது!” என்று வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, பற்றற்ற ஒரு துறவியைப் போல் மௌனம் சாதித்தார். அவரது இந்த மாற்றம் எனக்கு உடன்பாடற்று இருந்த போதும், அவரைப் பொறுத்தமட்டில், அந்த அனுபவ யதார்த்தத்தில் நியாயம் இருப்பதாக உணர்ந்தேன்.
– இலண்டன் பூபாள ராகங்கள், 2004ஆம் ஆண்டு நடத்திய உலகளாவிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் பணப்பரிசும், பாராட்டும் பெற்ற படைப்பு இது.
– “நிஜங்களின் வலி” என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளும், மல்லிகை, தினக்குரல் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
– நிஜங்களின் வலி (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 23.05.2005, மீரா பதிப்பகம், கொழும்பு.