நிச்சயங்கள்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 4,419
(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வாம்மா மோனா வா. என்ன விஷயமா இங்கே வந்தே? கூட வந்திருக்கின்ற இந்த பையன் யாரு?” என்று கேட்டுக் கொண்டே வரவேற்றாள் தேவகி.
“இல்லே…” மோனா தயங்கினாள்.
“சும்மா அத்தை என்றே கூப்பிடு. கொஞ்ச நாளிலே என் பையன் துபாயிலிருந்து வந்ததும் அவனைத் தானே கல்யாணம் பண்ணிக்கப் போறே”
“என்ன விஷயம் பேசனுமோ அதை பேசத்தான்….!”
“ஆமாம்..”
“அப்புறம் என்னம்மா, உங்க அப்பா கூட உங்க வீட்டு அழைப்பிதழ்கள் எல்லாம் கொண்டு தந்து விட்டுப் போனார். கார்டு ரொம்ப அழகாக அச்சிடப்பட்டிருந்தது, உனக்குக் கல்யாண சேலை, கையிலே போட வேண்டிய மாமியார் காப்பு எல்லாம் என் மகளும் கணவரும் வாங்கப் போயிருக்கிறார்கள். அது சரி. இந்தத் தம்பி யாரென்று சொல்லவேயில்லை நீ?”
மோனா பேச ஆரம்பிக்கும் முன் முந்திக் கொண்டு “என் பேர் திவாகர். மோனா தோழியுடைய அண்ணன். நான் இந்தப் பக்கமாக வந்த போது, உங்கள் வீட்டைக் காண்பிப்பதற்காக கூட்டி வந்தாள். நாங்கள் கிளம்புகிறோம்” என்றான்.
மோனா உள்ளுக்குள்ளே கொஞ்சம் குழம்பிப் போய் “என்ன திவாகர் சொல்கிறாய் நீ!” என்றாள்.
“உண்மையைத் தானே சொன்னேன். நாங்கள் கிளம்புகிறோம்” என்றான் திவாகர்.
“இருந்து ஒரு கப் காபி குடிச் சிட்டுப் போங்க. உள்ளே வந்து உட்காருங்கள், தம்பி நீங்களும் வாங்க” என்றாள் தேவகி.
மோனாவும் திவாகரும் வீட்டினுள் வந்து உட்கார்ந்து கொள்ள, தேவகி அடுப்புக்கு காபி போடப் போனாள்.
“என்னாச்சி திவாகர். நாம் இங்கே எதற்காக வந்தோம்: நீ ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறாய்”
“நான் ஒன்றும் உளறவில்லை. மோனா இவ்வளவு கனவுகளோடு தன் ஒரே பையனின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்ற இந்த அம்மாவிடம் ‘நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதால் நீங்கள் உங்கள் மகனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வையுங்கள்’ என்று சொன்னால் மனமுடைந்து போவார்கள்.
உங்கள் வீட்டிலே திருமணப் பேச்சை எடுத்தவுடன் நம் காதலை நீ எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அழைப்பிதழ் அச்சிட்டு, திருமண உடைகள் எடுத்து, கல்யாண் மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்கிற வேளையில் நீயும் நானும் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தனை ஏற்படுகளையும் பாழ்படுத்துவதா?
இது தவறு மோனா? நீ மிகவும் பிந்தி விட்டாய். நீ இந்த மாப்பிள்ளையை மணந்து கொள்வது தான் சரி. வருகிறேன்” என்றவாறு எழுந்து சென்றான் திவாகர்.
காபி கொண்டு வந்த தேவகி “அந்தப் தம்பி எங்கே யம்மா?” என்று கேட்டாள்.
“தெரியாது மாமி” என்றாள் மோனா.
– பிப்ரவரி 2002.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
