நாய்க் குணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,981 
 
 

எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக் குடியிருப்பு அது.

அடுத்தடுத்து பலர் கிரகப்பிரவேசம் செய்துவிட்டு அதில் குடியேறினார்கள். சியாமளாவும் அவளது கணவர் ரவீந்திரன் மற்றும் பி.ஈ கடைசி வருடம் படிக்கும் ஒரே மகன் முரளி இரண்டாவது மாடியில் குடியேறினார்கள். ரவீந்திரன் குடிநீர் வடிகால் வாரியத்தில் எக்சிகியூட்டிவ் இஞ்சினியர்.

அவர்கள் ப்ளாட்டிற்கு எதிர் ப்ளாட்டில் எல்ஐஸியில் சியாமளாவுடன் பணிபுரியும் நேத்ராவதி, கல்லூரியில் படிக்கும் ஒரேமகள் சுமதி, நேத்ராவதியின் கணவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சுதாகர் ஆகியோர் குடியேறினார்கள். நேத்ராவதி ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவள்.

இரண்டு குடும்பங்களும் நல்ல புரிதலுடன், ஒற்றுமையாக இருந்தனர்.

முரளியும், சுமதியும் சீக்கிரமே நல்ல நண்பர்களானார்கள். இருவருமே பார்ப்பதற்கு நல்ல அழகுடனும், துடிப்புடனும் இருந்தார்கள். அடிக்கடி ரவீந்திரனுக்கு இவர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டால் பரவாயில்லை என்று தோன்றும்.

ஏனெனில் சுமதியின் அம்மா அழகான நேத்ராவதி சம்பந்தியாகி விடுவாளே… ரவீந்திரனுக்கு ஐம்பது வயதானாலும், நேத்ராவதியைப் பார்த்து ரகசியமாக ஏகத்துக்கும் ஜொள்ளு விடுவார். ஆனால் நேரில் பார்த்துப் பேசும்போது மட்டும் ‘மேடம். மேடம்’ என்று பாவ்லா காட்டுவார்.

நேத்ராவதிக்கு வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்ப்பதற்கு கட்டான உடலுடன் அழகாக இருப்பாள். மகள் சுமதியுடன் எங்காவது வெளியே சென்றால் பார்ப்பவர்கள் அவளை சுமதியின் அக்கா என்றுதான் நினைத்துக் கொள்வார்கள்.

அவ்வளவு அழகான நேத்ராவதி தன் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே குடியேறியது ரவீந்திரனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனிதர் ரகசியமாக ஏங்கித் தவிப்பார். பலமுறை சியாமளாவிடமே “உன்னோட கொலீக் ஒருத்தி இவ்வளவு அழகா?” என்று சொல்லிச் சொல்லி சிலாகிப்பார். சியாமளா அதைப் பெரிது படுத்தாமல் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வாள்.

ஆனால் நாளடைவில் அதுவே அவருக்கு ஒரு வியாதியாகிப் போனது.

அன்று இரவில் படுக்கை அறையில் சியாமளாவைக் கொஞ்சும் போது விவஸ்தை கெட்டத் தனமாக அவருடைய நினைப்பு நேத்ராவதியைச் சுற்றிச் சுற்றியே அலை பாய்ந்தது. அவளை மனதில் இருத்திக்கொண்டு மனைவியை அணுகினார். கடைசியில் க்ளைமாக்ஸை நெருங்கும்போது “நேத்ரா.. நேத்ரா” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே அவளைக் கொச்சையாக அசிங்க அசிங்கமாக வர்ணித்தார். பிறகு உச்சத்தில் உளறியபடியே கலவியை முடித்துக் கொண்டார்.

இது சியாமளாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. முதல் முறை அவரை வார்ன் செய்யும் விதமாக “நாற்பது வயதைத் தாண்டினா நாய்க்குணம் என்பது சரியாத்தான் இருக்கு… இது உங்களுக்கே அசிங்கமா இல்ல? இது எவ்வளவு பெரிய கேவலம்? மற்றவளை நினைத்துக்கொண்டு இனிமேல் என்னிடம் வராதீங்க…” என்றாள்.

“கேவலப்பட இதுல என்னடி இருக்கு? இது நமக்குள்ள நடக்கிற ரகசியம் தானே… நேத்ராவதி என்ன மற்றவளா, நாளைக்கு நமக்கு சம்பந்தியாக வரப் போரவதானே? ஒன் பையன்தான் அந்தச் சுமதியைச் சுத்தி சுத்தி வரானே… ஒனக்கு அது தெரியாதா?”

சியாமளாவுக்கு, நேத்ராவதியை மறுநாள் அலுவலகத்தில் பார்த்தபோது ‘இவரு ஏன் இப்படி இருக்காரு?’ என்று கணவரை நினைத்து ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.

ஆனால் ரவீந்திரன் இதைப்பற்றி சிறிதும் நேர்மையாக சிந்திக்கவில்லை. அவர் ஒவ்வொரு தடவையும் சியாமளாவை கலவிக்கு அணுகும்போது, “நேத்ரா நேத்ரா” என்று அவள் நாமாவளியைப் பைத்தியம் மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தார்.

சியாமளாவுக்கு தற்போது இரண்டு புதிய தலைவலிகள். ஒன்று தன்னுடைய கணவர் நேத்ராவதியை நினைத்துப் புலம்புவது; இரண்டு, மகன் முரளி சுமதியிடம் வயசுக் கோளாறால் ஏதாவது அத்துமீறி நடந்து கொள்வானோ என்று!

ரவீந்திரன் சொன்னதால் சியாமளாவுக்கு முதன் முறையாக முரளி சுமதியைக் காதலிக்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. அதற்கு ஏற்ற மாதிரி அவன் அடிக்கடி சுமதியை தன்னுடைய பைக்கில் கல்லூரி வரை கூட்டிச்சென்று விட்டுவிட்டு வந்தான். சியாமளாவுக்கு இது நல்லதாகப் படவில்லை. படிக்கிற வயசில் காதல் என்ன வேண்டிக் கிடக்கு? என்று பொருமினாள்.

நாளடைவில் முரளி சுமதியைக் காதலிக்கிறான் என்று திடமாக நம்ப ஆரம்பித்தாள். ஏனெனில் முரளி இரவு தூங்குவதற்கு முன்பும்; காலையில் கண் விழித்தவுடனும் அவளிடமிருந்து எஸ்எம்எஸ் வருகிறது. இவனும் உடனே பதில் அனுப்புகிறான். பல சமயங்களில் அவளுடன் வாட்ஸ் ஆப்பில் நிறைய நேரம் பேசுகிறான். ஒருமுறை இருவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது சியமளா அந்தக் கண்றாவியை பார்க்க நேரிட்டது.

அடிக்கடி கண்ணாடி முன் நின்று சிரிக்கிறான். காதல் சினிமாப் பாடல்களை மெல்லிய குரலில் ரசித்துப் பாடுகிறான். அவள் மிஸ்டு கால் கொடுப்பாள்; உடனே இவன் அவளைக் கூப்பிட்டுப் பேசுகிறான்.

சியாமளா இரவில் தூக்கம் வராது புரண்டாள். அப்பனும், மகனும் திருந்தப் போவதில்லை என்று நினைத்தாள். திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. மகனையே நாளைக்கு நேரில் கேட்டுவிட்டால் என்ன?

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

முரளி காலை எட்டரை மணிக்கு ரிலாக்ஸ்டாக சன் டிவியில் டாப் டென் பார்த்துக் கொண்டிருந்தான்.

“முரள், நான் உன்னிடம் சற்று மனம் விட்டுப் பேச வேண்டும்…”

உடனே டிவியை அணைத்துவிட்டு “சொல்லும்மா” என்றான். சோபாவுக்கு இடம் மாறி வசதியாக அமர்ந்துகொண்டான்.

“எனக்கு ஒரு சந்தேகம் முரள். நீ எதிர்வீட்டு சுமதியை லவ் பண்றியோன்னு.. நீ தினமும் அவளுடன் தொடர்பில் இருப்பதும், அவளை பைக்கில் காலேஜுக்கு தினமும் அழைத்துச் செல்வதும் எனக்குத் தெரியும். அம்மா உனக்காகத்தான் உயிரோட இருக்கேன் முரள். நீதான் என் வாழ்க்கையே… உனக்கு எது சந்தோஷம் தருமோ, அதை நான் கண்டிப்பா நிறைவேத்தி வைப்பேன். ஆனால் இப்ப நீ பைனல் இயர். காதல் காதல்னு படிப்பைக் கோட்டை விட்டுடாதே முரள் ப்ளீஸ்…”

“மம்மி ப்ளீஸ், நான் உன்னோட பையன். நான் யாரையும் இப்போதைக்கு காதலிக்கவில்லை. என்னுடைய கவனம் படிப்பில்தான். வாழ்க்கையில் பெரிதாக முன்னுக்கு வரவேண்டும் என்று எனக்கென்று சில முனைப்புகள் இருக்கின்றன மம்மி. அப்படியே ஒருத்தி மீது காதல் வந்தாலும் அதை நேர்மையாக உன்னிடமும், அப்பாவிடமும் சொல்கிற மனோ தைரியம் என்னிடம் உண்டு…

“………………”

“உண்மை என்னவென்றால் சுமதியை ஒருத்தன் பஸ்ஸ்டாண்டில் தினமும் கேலி செய்து வம்பு பண்ணுகிறான். அவள் அப்பாவிடம் சொன்னால், அவரோ போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அது அசிங்கமாகி பெரிசாகும். அதனால் நானே அவளைத் தினமும் கல்லூரியில் விட்டுவிட்டு வருகிறேன். நாங்கள் வாட்ஸ் ஆப்பில் தினமும் அரட்டையடிப்போம்… செய்திகளைப் பரிமாறிக் கொள்வோம்… ஜோக்ஸ் பகிர்ந்து கொள்வோம். எங்களிடையே அவ்வளவுதான் மம்மி. கண்டிப்பாக காதலோ கத்தரிக்காயோ இல்லை. தவிர, அவளும் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறாள்…”

சியாமளா மகனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் ‘ஸாரி, ஐயாம் மிஸ்டேக்கன்’ என்கிற தொனி இருந்தது.

தற்போது அவளுடைய ஒரு தலைவலி தீர்ந்தது. அடுத்த தலைவலி அவள் கணவன்.

அவனை சாமர்த்தியமாக அடக்க முடிவு எடுத்துக் காத்திருந்தாள்.

அடுத்த சில தினங்களில் ரவீந்திரன் அவளை இரவில் நெருங்கி வந்தான். எப்போதும் போல கலவிக்கு முன் கடைசி நேரத்தில் “நேத்ரா நேத்ரா” என்று உன்மத்தம் பிடித்து உளறினான்.

அப்போது சியாமளா கண்களை மூடியபடி “சுதா சுதா” என்று முனகினாள்.

கலவி முடிந்தவுடன் ரவீந்திரன் புரண்டு படுத்தான். “அது யாருடி சுதா?”

“அதாங்க எதிர் வீட்டு இன்ஸ்பெக்டர் சுதாகர். போலீஸ்ங்கறதுனால பாடிய என்னமா வச்சிருக்காரு? அவர மனசுல நினைச்சிக்கிட்டேன். இது நமக்குள்ள ரகசியமாத்தானே நடக்குது?”

ரவீந்திரன் மூஞ்சி போன போக்கைப் பார்க்கணுமே….

அன்றிலிருந்து சில வாரங்களுக்கு உம்மென்று முகத்தை வைத்தபடி சியாமளாவிடமிருந்து ஒதுங்கியே இருந்தான்.

அதுக்குப்பிறகு ஒருநாள் அவளை முயங்க முற்பட்டபோது, நேத்ராவதியின் பெயரையே அவன் சொல்லவில்லை.

தன்னுடைய ஷாக் ட்ரீட்மெண்ட் வேலை செய்வதை எண்ணி தன்னையே பாராட்டிக் கொண்டாள் சியாமளா.

அன்றிலிருந்து அவள் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *