நான்




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இது கதையல்ல. இது என்னைப்பற்றி.
நான் அறிந்தவரை என்னால் முடிந்தவரை, என் வேஷங்களைக் களைந்து என் தோல்களை உரித்த என்னைப் பற்றி.

என்னிலும் எனக்கு வற்றாத, சுவாரஸ்யமான பொருள் இல்லை.
அவரவர்க்கும் அப்படியே. ஆகையால் எப்பவும் நான் தான்.
நான் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட முறையில் எழுத்தாளன் இல்லை, நான் எழுத்தாளனே இல்லை. பேரிகை கொட்டுபவன். சுயபேரிகை போகும் வழியெல்லாம் காட்டிக்கொண்டே போகிறேன். எனக்கேதான் கொட்டிக் கொள்கிறேன்
சில சமயங்களில், நான் எழுப்பும் சப்தம், பிறருக்கும் கேட்கிறது. அவர்களிலும் பொறுக்கானவர்களுக்கு, அபூர்வ மாய், அவர்களுக்கே கொட்டுவதாய் அவர்கள் அடையாளம் கண்டுகொள்கையில், என் இறுமாப்பு எனக்குப் பொங்கி வழிகிறது.
நாள் கிழமைகளில் என் தாயை நான் நமஸ்கரிக்கையில் அவளைக் கேட்டுக்கொள்வதுண்டு “அம்மா என் இறுமாப்பு வளரவேணும் என்று ஆசீர்வதி”
இப்படிக் கேட்கையில், எப்பவுமே நல்லெண்ணத்தில் கேட்கிறேன் என்று சொல்வதற்கில்லை.
நான் வெளிச்சமானவன் இல்லை.
‘ராமாமிர்தத்துக்கு மனசில் ஒன்றும் வைத்துக் கொள்ளத் தெரியாது” என்று என்னோடு பழகியவர்கள் சொல்லமாட்டார்கள். அந்த முறையில் நான் நல்லவன் இல்லை. நான் அறிந்தே, என் நெஞ்சில் எவ்வளவோ, பூட்டியும் புதைத்தும் வைத்திருக்கிறேன். நான் அறியாமல் இன்னும் எத்தனையோ.
இரு பொருள், ஏன், பல பொருள்பட ஒரு வார்த்தை – வெறும் சிலேடை அல்ல – நாலுபேருக்கு நடுவில் வெளிக்கு நமஸ்காரமாய் அமைந்து, ஆனால் குறிப்பிட்டவனுக்கு மாத்திரம், அவன் நெஞ்சில் தைத்து நடுங்கும் அஸ்திர வேலைப்பாடுகள் – எனக்கு எப்பவும் அலுத்ததில்லை.
எனக்கு ஒரு கனவு, ஒருநாள்,என்றேனும் ஒரு நாள் சொல்லாட்சியால், பொருளுக்கும் சொல்லுக்கும் இடைக் கோட்டை அழித்து சொல்லே பொருளாய், பொருளே சொல்லாய், ஆனால் ஒன்றுக்கொன்று குழம்பாது, ஒன்றுக் கொன்று பக்கபலமான நிலையை எய்தல் வேண்டும்.
அப்புறம் சொல்லேதான் செயல் செயலேதான் பொருள்.
நெருப்பு என்றால் வாய் வேகவேண்டும்.
இது முடியுமா? ஆயுசுக்குள் முடியுமா?அப்புடி முடிந்து தான் ஆகவேண்டுமா? முடிந்தாலும் அதனால் காணப் போவது என்ன? கேள்விகள் தாமே எழுகின்றன.
எதனால்தான் என்ன பிரயோசனம்? இது பயன் பயனில்லை என்று தீர்மானிக்க தான் யார்?
உலகில் உயிரற்றது எதுவுமில்லை.
கால, எண், வரைகளற்று ஜீவதாதுக்கள் சதாசர்வ காலம் நம்மைச் சுற்றி, நீந்திக்கொண்டேயிருக்கின்றன.
ஏதோ ஒரு வாக்கியத்திலோ, சொற்றொடரிலோ, குரலின் அசைவிலோ, பதங்களிலோ, அல்லது இரு பதங் களிடையில் தொக்கி, என்னுள்ளே நின்று, என் நினைவின் ஓட்டத்தைச் சட்டெனத் தடுக்கும் ஒரு அணுநேர மௌனத் திலோ, ஒரு கடைக்கண்ணோக்கிலோ, ஒரு பெருமூச்சிலோ, விழிகளில் நடுங்கும் கண்ணீரின் பளபளப்பிலோ, ஒரு புன்ன கையில் மோவாயின் குழிவிலோ, நீரின் சுழியிலோ, குச்சியி லிருந்து குத்துவிளக்கின் திரிக்கு ‘சுர்’ ரென்று தாவும் சுடரின் சீறலிலோ, புருவத்தின்மேல் வாடைக் காற்றின் முத்தத் திலோ, ஒரு பூவின் இதழ்களின் விரியலிலோ, அஜ்ஜீவதாதுக் கள் என்னை ஊடுருவுகையில், என்னை அடைத்த கோடு களை அழித்து என்னை, ஊடுருவிய அந்த வேகத்தின் நேரத்துக்கு, தம்முடன் நித்யத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அப்பொழுது நான் என்னைப் புதுமுறையில் காண்கிறேன்.
நான் அழிவற்றவன்.
எனக்கு அழிவிலாதபடி என்னையே லட்சக்கணக்காய்ப் பெருக்கிக்கெ ள்கிறேன். அதுவே அந்நிலையின் இயல்பு.
என்னைச் சுற்றி அகண்டமான அர்த்தங்கள். பல வர்ணங்களில் மீன்போல், வாலையும், செதிள்களையும் ஆட்டிக்கொண்டு சாவகாசமாயும், நட்சத்திரங்கள் போல் பொறி விட்டுக்கொண்டு, கண்ணுக்கும் நினைவுக்கும் எட்டாத வேகத்திலும் நீந்துகின்றன.
மௌனம் என்பது சும்மாயிருப்பதல்ல அது ஒரு ஸ்தாயி.
ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியில், கற்கள்கூட உடைந்து விடும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயின் கதவுகள் திறப்பதற்கென்ன?
ஆனால் இப்பரபரப்பில் எவ்வளவு நாழிகை இருக்க முடியும்? வேகம் ஓய ஆரம்பிக்கின்றது. திரும்பலில் நான் கீழே இறங்குகிறேன். அல்லது மேனோக்கி எழுகிறேன்.
என் மேலோ, கீழோ, மேலும் கீழுமோ திறந்த கதவுகள் தாமே, மெதுவாயும் வேகமாயும் மூடிக்கொள்கின்றன. வெள்ளம் பின்வாங்குகிறது. அதில் மிளிரும் மதிப்பற்ற பொக்கிஷங்களை பேராசையோடு இரு கைகளாலும் அகல வெள்ளத்தோடு வாரிக்கொண்டு கீழிறங்குகிறேன் அல்லது மேலெழுகிறேன். ஆனால் நான் இங்கு மீண்டதும் என்னிடம் ஏதும் இல்லை.
எல்லாம் ஊமை கண்டு, சொல்லத் தவிக்கும் கனவு.
இதுவே, எழுத்தாளன், படிப்பாளன், செயலாளன், சிந்தனையாளன், எல்லோருக்கும் பொதுவான அவஸ்தை.
இதனின்று விடுதலை ஒரு பெரும் சாதனை, ஆறுதல் படிதாண்டல் இல்லையா?
விடுதலை உண்டோ இல்லையோ,
கண்டது கண்டதுதான்.
அறிந்தது அறிந்ததுதான்.
சொல்ல முடியாவிட்டாலும்
இதை என்னிடமிருந்து பிடுங்கிக்கொள்ள மூடியாது
நக்கீரன் நக்கீரன்தான்.
வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க. முயல்கையில், அவை நழுவுகின்றன, ஊடலாடுகின்றன, பாஷையே பரிபாஷையாக மாறுகின்றதுக
சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன. சால் பொருளைத் தேடுகிறது. பொருள் எட்டியும் எட்டாது சொல்லை நழுவுகிறது. இரண்டினுக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லும் நானே. பொருளும் நானே.
நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு எழுத்து எனக்கு வழித் துணை.
ஒருவனுக்கு அவன் பக்தி.
ஒருவனுக்கு அவன் ஞானம்.
ஒருவனுக்கு அவன் குரு.
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை.
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி.
தூரதிருஷ்டி, பூதக்கண்ணாடி.
முகம் பார்க்கும் கண்ணாடி
கண்ணுக்குக் கண்ணாடி
கைப் புண்ணுக்கும் கண்ணாடி
முள் எடுக்கும் முள்
முள் எடுக்கையில், அல்லது
எடுத்தபின்
முள்ளோடு தானும் ஒடியும் முள்
இந்த ஓடிப்பிடித்தலில், சொல்லும் பொருளும் நேரிடை யாகச் சந்திக்காவிட்டாலும், சில சமயங்கள் தலைகால் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. அல்லது உராய்கின்றன, அல்லது ஒன்றன் காற்று ஒன்றன் மேல் படுகிறது. பறவையின் சிறகு முகத்தில் அடித்தாற் போன்ற அந்த அதிர்ச்சியில்கூட என் காலடியில் பூமி நடுங்குகிறது. அதிலேயே நான் அனுமார்மாதிரி வளர் கிறேன். அந்த சமயத்தில், ஏழு கடலையும் உளுந்து உருளும் அளவிற்கு ஆசமன தீர்த்தமாய் உள்ளங்கையில் ஏந்திய குறு முனியின் செயலாட்சி புரிகிறது.
புராணம், பழங்கதைகள். வைகள் நிஜமா, பொய்யா நம்பத்தகுந்தவையா இல்லையா இதெல்லாம் வேறு சர்ச்சை, நான் சர்ச்சைக்கும் சண்டைக்கும் ஆளல்
நான் பண்டிதன் அல்ல. நான் கண்டதை எல்லோரும் அவரவர் பிறப்புரிமையாய்க் கண்டதை, கண்டும் சொல்ல இயலாததை, ஏதோ எனக்குத் தெரிந்தவரை, முடிந்தவரை சொல்ல முயல்கிறேன்.
ஒன்று நிச்சயமாய்க் காண்கிறேன்.
புராணம், பழங்கதைகள் இவையெல்லாம் ஒரு பரிபாஷை.
தெய்வம்கூட பரிபாஷைதான்.
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாம் போல், திண்ணையில் நாலுபேருடன் நான் பேசிக்கொண் டிருக்கையில், என் மகனோ மனைவியோ வாசலுக்கு வந்து தன் மூக்கைச் சொரிந்துகொண்டால் “சமையல் ஆறுகிறது. இவர்களை அனுப்பித்துவிட்டு சாப்பிட வாருங்கள்.” என்கிற அர்த்தம் மாதிரி.
காதைத் திருகிக்கொண்டால், “கடன்காரன் போய் விட்டான், கதவு மூலையிலிருந்து வெளியே வரலாம்” என்கிற அர்த்தம் மாதிரி.
பொருள், ஓசை, சொல்,நயம், பொருள்.
பொருளில் ஆரம்பித்து பொருளில் முடியும் பொருள் நான்.
தேடுகிறேன்.
இத்தேடல் சாமானியமானதல்ல. தைரியம் வேண்டியிருக்கிறது.
பொருளையே பொருள் படுத்தாமையும் வேண்டியிருக்கிறது.
தேடலேதான் பொருள்.
என் பொருள்,என் ஓசை,என் சொல், என் நயம். என் தேடல்.
ஒரு பெரிய சுயகாரியந்தான். சுயகாரியப் புலித்தனம்கூட.
யார் சுயகாரியப்புலி இல்லை?
“அடே நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? முட்டாளே, இதோ பார், சக்கரம் அறுகிறது, கபாலம் ஏந்துகிறது. எல்லாம் நான்தாண்டா.”
“எல்லாம் என்னுடையது நான் கொடுத்தேன், நான் எடுத்துக்கொள்கிறேன், நீகூட நான்தான். நீ உன்னைத் தேடினால், என்னைத்தான் அடைவாய்.”
இதைவிட சுயம் எது?
மறுபடியும் இதெல்லாம் பரிபாஷைதான்.
“தட்டாமாலை தாமரைப்பூ. சுற்றிச் சுற்றிச் சுண் ணாம்பு. கிட்ட வந்தால் கிள்ளுவேன், எட்டப்போனால் துப்புவேன்.”
பரி பாஷை, பரிபாஷை, பரி பாஷை.
சர்வாகாரம் சதாகாரம்.
ஸ்வயாகாரத்தின் ஸர்வாதிகாரம்.
நித்யத்வம் என்மேல் படும்போது, அதைச் சொல்லில் பிடித்து, அந்த நிமிஷத்தை நித்யமாக்கிவிடலே என் தேடல் என் கனவு
நான் நித்யத்துவத்திற்கு ஆசைப்படுகிறேன்.
உலகத்தின் கோளத்தையே என் சுண்டு விரல் நுனியில், எனக்கு சொந்தமாய் ஏந்த ஆசைப்படுகிறேன்.
இதைச் சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை, பயமில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அக்கறையில்லை.
நான் தேடும் அழிவிலாத் தன்மையை அடைவது எப்படி?
படித்தோ, கேட்டோ நான் சொன்ன சொல்லில், அவன் கண் பொருளுக்காக ஒருவன் வயிறு குளிர்ந்து, விழியி லிருந்து வழியும் கண்ணீர் குளிர்ந்து, மனமார என்
என்னை வாழ்த்துகையில், நான் எனக்குத் தெரியாமலே, அவன் மலர்ச்சியில், அவன் ரத்தத்தின் உள்சத்துடன் கலந்து, அவன் சந்ததிமூலம் விருத்தியாகிறேன்.
என் சொல்லின் வித்துக்கள் அங்கங்கே சிதறி பொருளாய் விருத்தியாகையில் நான் நித்யத்துவத்தை அடைகிறேன். ஸ்வயாகாரத்தின் சதாகார ஸர்வாதிகாரத்தை அடைகிறேன்.
கோடுகள் அழிந்தபின் எல்லாம் நான்தான்.
நானேதான் என்னுடைய விளைவு
என்னுடைய துணை
என்னுடைய சத்துரு
என்னுடைய மறைவு
என்னுடைய குழப்பம்
என்னுடைய தெளிவு
என் னுடைய விடிவு
ஆனால் நிச்சயமாய் எனக்கு அழிவு இல்லை.
நானே என்னுடைய அழிவற்ற கனா.
நான் காணும் கனவில் இது நடக்கும் இது நடக்காதது என்பதில்லை சமுத்திரங்களில் ஜலம் உள்ளவரை, சூரியன் கிழக்கில் உதிக்கும்வரை எனும் பிரமாணங்கள் செல்லாது. என் உலகில் சூரியன் மேற்கில் உதிக்கும், கடல் வற்றும். ஊசிக் காதில் ஒட்டகம் புகுந்து வெளிப்படும்.
அதைப்பற்றி ஆச்சரியப்படுத்தல்கூட தவறு. ஏனெனில் அது நியாயபூர்வமாய், சொல்லாட்சியினின்று விளைந்த, விளையும், விளையப்போகும் செயலாட்சி.
இன்றையக் கனவு நாளைய நனவு.
ஏனெனில் இன்றைய நனவு நேற்றைய கனவு.
கனவுப்படியே நனவும் நேரும் என நான் சொல்ல வரவில்லை.
கிணறுவெட்ட பூதம் புறப்படும்.
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடியும்.
அதனாலென்ன? அதற்குப் பின்?
குரங்குதான் சமுத்திரம் தாண்டிற்று
குரங்குதான் கண்டது
கண்டதோடு இல்லை. “கண்டேன்” என்றது.
அதுதான் நம் மாந்தாதா.
பூதந்தான் புதையலைக் காக்கிறது.
எப்படியும் நனவின் ஆதாரம், அருவம், கனவு. பத்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு கனாக் கண்டேன். இன்றும் நினைவைவிட்டு மறையவில்லை.
வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்துகொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரிய வில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது. என் கண்ணுக்கெட்டிய வரையில் மேகங்களில் கற்கண்டு கட்டிகள்போல் நக்ஷத்திரங்கள் வாரியிறைந்திருந்தன.
அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண்குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். “கஜல். இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து, யத்து ஸாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன், ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக்கொண்டு பகீர் பகீர் என்று எழும்புகிறது. அந்தமாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெலாம் உருகிவிடும். போலிருக்கிறது.நான் அதைத் தேடிக்கொண்டே போகிறேன்.
நான் போகிற வழியெல்லாம், யார் யாரோ மேடுகளிலும் பள்ளங்களிலும், மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டம் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும். தனித் தனியாயும், அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள் நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும், இமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை.
பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. எதிரே கட்டிடமு மில்லை. ஒரே பரந்த வெளிதான்.ஆனால் குரலின் கண கணப்பும் தீர்க்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி என்மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு தாங்க முடியவில்லை. திகைப்பூண்டு மிதித்த மாதிரி கடைசியில் என்னையே நான் சுற்றி வருகிறேன். அப்பொழுது என்னி லிருந்தே அக்கீதம் வெளிப்படுவதாய்க் காண்கிறேன்.
கண்டதும் விழித்துக்கொண்டேன்.
இது தான் நான் கண்ட கனா.
இன்னும் என் கனவுகளில் பாடும் குரல் தூரத்திலிருந்து வருகிறது. எனக்கு எதையோ ஞாபகப்படுத்துவது போல் நிச்சயப்படுத்துவது போல்.
இந்த என்னைப் பற்றித்தான் இது
அதாவது,
உன்னைப் பற்றித்தான்.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.