நான் , கீர்த்தனா மற்றும் சில மரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,213 
 
 

இயற்கையான வடிவங்களில் மனித முகங்களைத் தேடும் பழக்கம் ஆறாவதுப் படிக்கும்பொழுது இறந்து போன தாத்தா உருவம் அவருக்கு படைக்கப்பட்டிருந்த வாழை இழையில் சற்று சாய்வான கோணத்தில் தெரிவதாக சொன்னதில் இருந்து ஆரம்பித்தது. மேகங்கள் ஒன்று கூடும் போது முகங்கள் பலவித பாவங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஒன்றை ஒன்று முட்டுவது போலத் தோன்றும். பிள்ளையார் மரத்தில் தெரிந்தார், யேசு கட்டிட்டத்தில் தெரிந்தார் என வரும் செய்திகளை எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சுவாரசியத்துடன் வாசிப்பேன்.

அண்மையில் நான் ரசித்துக்கொண்டிருக்கும் உருவம் நான் கல்லூரிக்கு போகும் குறுக்கு வழியான ப்ரூன்ஸ்பார்க் காட்டில் இருக்கும் ஒரு மரம். இந்த மரத்தில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குவதற்கு பெரிய வேலைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. செதில்களை செதுக்கிவிட்டு கிளைகளைச் சற்றேச் சரிசெய்தால் பெண்ணாகிவிடும். சில நாட்களாக அந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கீர்த்தனாவின் நினைவுகள் அதிகம் வருகின்றன. முழுநிலவின் வெளிச்சத்தில் கீர்த்தனாவின் நினைவாக, அவளின் பெயரை எழுதிவிட்டு வடிந்த சிவப்பு நிற மரப்பிசினைத் துடைத்துவிட்டுப் போவதை, நடக்கும் பாதையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. இங்கு நள்ளிரவிலும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முன்பு இது போல சிரித்து அவர்கள் சிரிக்காமல் போக, நான் அசடுவழிவது வழக்கமான ஒன்று. சாதரண இவ்விரண்டு விசயங்களும் எனது பக்கத்துவீட்டு சுவிடீஷ் பையனின் அறிமுகம் கிடைக்கும் வரை பெரிய விசயமாகத் தெரியவில்லை.

கோத்திக் பிரிவைப் பின்பற்றும் என் பக்கத்து வீட்டுப் பையனின் தலையலங்காரம் அவன் நம்பிக்கைகள் எல்லாம் வித்தியாசமாகவும் சில சமயங்களில் அச்சமூட்டுபவையாகவும் இருக்கும். பேய், ரத்தக் காட்டேரி , பகலில் பெண்ணாகவும் இரவில் ஓநாயாகவும் மாறும் ஒநாய்ப்பெண் போன்ற விசயங்களை விவரிப்பது கிலியூட்டும். இருந்த போதிலும் எனதுக் குடியிருப்பில் என்னுடன் பேசும் ஒரே சுவிடீஷ் ஆள் என்பதால் இவைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. நான் வழக்கமாக கடந்து செல்லும் ப்ரூன்ஸ்பார்க் காட்டைப்பற்றி அவன் சொன்ன ஒரு விசயம் என்னைத் தூக்கி வாரிப்போட செய்தது.

“கார்த்தி உனக்கு ஒரு விசயம் தெரியுமா!! மரத்தால் ஆன ஒரு பெண் ப்ரூன்ஸ்பார்க்கில் இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு” என்றான் உடைந்த ஆங்கிலத்தில்.

என்னுடைய அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் “நீ பார்த்திருக்கியா ?” என்றேன் சுவிடீஷில்.

“பார்த்ததில்லை, ஆனால் ப்ரூன்ஸ்பார்க் கடக்கும்பொழுது எனக்கு சில மரங்களிடையேப் போகும்பொழுது அவைகள் ஏதோ சொல்ல வருகின்றன எனத் தோன்றும்”

இதைக் கேட்டதில் இருந்து அந்த வழியில் நான் செல்லுவதை நிறுத்திவிடலாமா என யோசித்தேன். மூன்று நிமிட திகிலுக்காக மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டுப் போக வேண்டுமா என தைரியத்துடன் மறுநாளும் அந்த வழியேச் செல்வதை தொடர்ந்தேன். பேயாவது பிசாசாவது, அப்படியே வந்தாலும் பெண் பேய் தானே!! பார்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்தேன். பின்னிரவு வேளைகளில் நிலவு வெளிச்சம் இருக்கும் நாட்களில் முன்பு பார்த்த பெண்ணைப் பார்ப்பேன். வழக்கம்போல சிரிப்பேன். அவள் சிரிக்க மாட்டாள். கடந்துப் போய் விடுவேன். சில வாரங்களுக்குப்பின் விடியற்காலை மூன்றரை மணி அளவில் கல்லூரி ஆய்வகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடுத் திரும்புகையில் அவளைப் பார்த்தேன். கோடைக் காலம் ஆகையால் மெல்ல சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கீர்த்தனாவின் காலை தொலைபேசி அழைப்பு இன்னும் வரவில்லையே, இந்தியாவில் மணி 7 ஆகி இருக்குமே என்ற நினைவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். வழக்கமாக சிரிக்காதப் பெண் இன்று அழகாகப் புன்னகைத்தாள். அட, இந்த சிரிப்புடன் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் அப்படியே கீர்த்தனாவைப்போல இருப்பாளே!! என்னையும் அறியாமல் அவளை நெருங்கினேன். அலைபேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்துப்பார்த்தேன் கீர்த்தனாவின் அறைத்தோழியிடம் இருந்து, அலைபேசியை எடுத்துப்பேசாமல்,

“வா ஹீத்தர் டு?” எனக் கேட்டவாறு என்னைப் பார்த்த சிரித்த பெண்ணிடம் மேலும் நெருங்கினேன்

“என் பெயர் கீர்த்தனா” என்று அழகான தமிழில் சொல்லிவிட்டு என்னை அணைத்துக்கொண்டாள்.சூரிய வெளிச்சம் மேலும் பிரகாசமாக, என் கைகளில் மரச்செதில்கள் தட்டுப்பட, எனது கை கால்களும் இறுக ஆரம்பித்தன.என் முதுகில் கார்த்தி என தனது கூரிய விரல்களால் கீர்த்தனா எழுத ஆரம்பித்தாள். சிவப்பு நிறத்தில் மரப்பிசின் வடிய ஆரம்பித்தது.

– ஜூலை 09, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *