நான் கடவுளைக் கண்டேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார்.

‘என்ன டாக்டர் எதோ மளிகை சாமான் லிஸ்டுக்கு ஓகே சொல்றா மாதிரி எல்லா டெஸ்டும் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுக்கறீங்க?’ பதறிப்போகுதில்ல..?’ என்றார் டெஸ்ட்டுக்கு ஆகும் செலவை மனசுள் நினைத்துக் கொண்டு!

டாக்டர் சிரித்தபடியே சொன்னார். ‘வயசாச்சுல்ல பிரச்சனை இருக்கும். அது என்னன்னு தெரிஞ்சாத்தானே மருந்தெழுத முடியும்?’!

டாக்டரை விட்டு வெளியே வந்தார் முகம் தொங்கிப் போயிருந்தது.

‘சே!… ம்! இந்த மாசமும் பட்ஜெட்ல துண்டு விழும் போலிருக்கே?! கடனில்லாம ஒருமாசமும் கழிக்க முடியாதா’ கண்ணீர் சிந்தாத குறையா வீடு வந்தார்.

டாக்டரிம் டெஸ்ட்டுக்குக் கூட்டிப் போன பேரனுக்கு புரிந்தது தாத்தாவின் தவிப்பு!. பணம்னா பொணங்கூட வாயைத் திறக்குமாமே?! இன்னும் எத்தனை நாளில் இது பொணமா விழப்போகுதோ? தெரியலை! பர்ஸிலிருந்து காசை எடுக்கணும்னா கசக்குமே மனுஷனுக்கு?!’ நினைத்துக் கொண்டான் பேரன். இருவரும் வீடு வந்தார்கள்.

ஓவர்ஹெட் டேங்குக்கு தண்ணி ஏத்தணும் மோட்டர் போடு!’ என்றார் பரமசிவம் . சுவிட் போட்டதும் முதலில் குர்ர்ர்னு சப்தமிட்டுவிட்டு ‘உய்ய்ங்க்’ என்ற ஒரு சப்தத்தோடு சப்த நாடியும் அடங்க நின்று போனது மோட்டர்.

‘போச்சு! இதுக்கும் வேற தண்டம் அழணுமா? பிளம்பர் ரங்கநாதனைக் கூப்பிடு என்னன்னு பார்க்கட்டும் இனி அவனுக்கு வேற சர்வீஸ் சார்ஜ். ?’ புலம்பத் தொடங்க்கினார் பரமசிவம்.

பேரன் தொடர்ந்தான்….

‘தாத்தா மோட்டார் வாங்கி ரெண்டு வருஷமாச்சு! ஒரு வருஷம்தான் கியாரண்டினான். ரெண்டு வருஷம் வந்ததே பெருசு!காசுபோட்டு வாங்கி வந்த மோட்டருக்குக் கூட ஒருவருஷம் ரெண்டு வருஷம்தான் கியாரண்டி…! பத்து பைசா செல்வில்லாம வாங்கி வந்த இந்த மனுஷ ஜென்மத்துக்கு கியாரண்டியெல்லாம் இல்லை! இதுவரைக்கும் உழைச்சதே பெருசு! நீதான் எழுபதைத் தாண்டீட்டயே அப்புறம் என்ன? டெஸ்டுக்கு காசு கொடுக்க சுணங்குறேன்?!னு கடவுள் என்னைக்காவது கேட்டதுண்டா?

ரங்கநாதன் வந்தா இதைத் தான் சொல்வார்..’ கியாரண்டி பீரியடு முடிஞ்சுபோச்சு! செக்கப்ங்கறது சர்வீஸ் பண்றா மாதிரி.. ! சுணங்காம பண்ணினா இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஓடலாம் அப்புறம் உன் இஸ்டம்!’ என்றான்.

பேரக் குழந்தையின் வார்த்தையில் கடவுளைக் கண்டார் பரமசிவம்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *