நாணயத்தின் மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 8,434 
 
 

நியூ யார்க் நகரத்தின் சென்டர் டவுன் என்ற இடத்தில், அவன் மட்டும் தான் ஒரு தனிப்பட்ட உதாரணமாக இருந்திருந்தால், அவனுடைய பெயரைச்சொல்வதில் சிறிதும் தயக்கம் இருந்திருக்காது. ஆனால், நிலைமை அப்படியில்லை… அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் ஐநூறு நகரங்களிலும் நூற்றுக்கணக்கான, இந்தியர், பாகிஸ்தானியர், பங்கலாதேஷி, நேபாலிகள், கொலம்போ காரர்கள் என ஆசிய கண்டத்தினர் பலர் தமது மனங்களின் மீது களங்க வடுக்களை சுமந்தபடி சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஆசைக்கு பாழாய்ப்போனவர்களில் ஒருவன் தான் அந்த இளைஞன், எனக்கு தெரிந்த நண்பனின் நெருங்கிய நண்பன் அரை மில்லியன் ருபாய், அதாவது ஐந்து லட்ச ருபாய் ஒரு ஏஜென்டுக்கு கொடுத்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவன்.

தன் சொந்த செழிப்புள்ள நாடான பஞ்சாப் மாகாணத்தை விட்டு புறப்படும் பொழுது அவன் பெயர் ‘சம்ஷேர்’ (Samsher) என இருந்தது. வழியில் அவனுடைய புகைப்படம், மற்ற யாரோ ஒருவனின் களவாடப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் ஒட்டிவிடப்பட்டு, அவன் ‘சமீர்’ (Sameer) ஆகிவிட்டான். அமெரிக்கா சென்றடைந்த பின், அங்குள்ள சூழ்நிலைகள் அவன் பெயரை ‘சேம்’ (Sam) என சுருக்கிவிட்டன. அவன் அமெரிக்கர்களால் அவ்வாறு அழைக்கப்படுகிறான். நண்பர்கள் அவனை சமீர் என அழைக்கின்றனர். ஆனால், அவனுக்கு வாரந்தோரும் பஞ்சாபிலிருந்து தொலைபேசி தொடர்பு கிட்டும் பொழுது அவன் சம்ஷேர் ஆகிவிடுகிறான்.
இப்பொழுது, என் நண்பனின் நண்பன் சம்ஷேர் – சமீர் – சேம் உடைய கதை அலறல்கள் அடங்கிய, கதறல்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆசிய நாடுகளின் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊரிலும், கிராமங்களின் சுவர்களிலும் இரத்த சிவப்பு நிறத்தில் வர்ணிக்கப்பட்டு, அவனுடைய தொடர்கதை அடங்கா விம்மல்களுடனும், முனகல், புலம்பல்களுடனும் இருப்பதாக சித்தரிக்கப்படவேண்டும்.

என் நண்பனின் அருமை நண்பன் சம்ஷேர் – சமீர் – சேம், பஞ்சாபை விட்டு கிளம்பும் பொழுது அழகான அவன் மனைவி மிகவும் இளமைப்பருவத்தில், கருத்த கூந்தலுடன் காணப்பட்டாள். அவள் சிரிப்பில் ஆற்று வெள்ளத்தைப்போல் இனிமையான தொடர் ஓசை ஒலித்தது, கடல் அலைகள் கரையை தொட்டு செல்லும் பொழுது உண்டாக்கும் இயற்கையான இசையை உணர முடிந்தது. வாசக்கதவருகில், அவனுடைய இரண்டு அருமை கண்மணிகள், ஒன்றும் புரியாத வெற்றுப்பார்வையுடன் அவனை பார்த்தபடியிருந்தனர் – சின்னவள் தன் கையில் ஒரு பருத்தி பொம்மையை பிடித்திருந்தாள், பெரியவள் தன் தோள்களில் பள்ளிச்சுமையை பலவந்தமாக சுமந்து, ஸ்கூல் பேக் ஸ்ட்ரேப் பட்டைகளை தன் இரு கைகளால், தாங்கி பிடித்திருந்தாள். அவனுக்கு இரண்டு மகன்களும் இருந்தனர் – மிகவும் சாது சுபாவம் கொண்ட மக்கள். அடக்கமான பிள்ளைகள் – பள்ளிக்கூட படிப்பில் படு சுட்டிகள்.

என் நண்பனின் நண்பன் ஒருவன் மட்டும் தான் அவன் குடும்பத்தில் உழைத்து சம்பாதிப்பவன். அவன் ஒரு கடையை நடத்தி வந்தான், அதை விற்றுத்தான் இம்மிகிரேஷன் ஏஜென்டுக்கு ஐந்து லட்சம் கொடுத்தான். தன் குடும்பத்துடன் விட்டு சென்ற முதுமை எய்திய பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை, ஆகவே, அவன் ஒருவனின் வருமானத்தால், விட்டை சமாளிக்க பிரச்சினையாக இருந்தது. கடையிலிருந்து வந்த வருமானம் குறைவாகத்தான் இருந்தது, ஆனால், குடும்பத்தின் பட்டியல் நீண்டிக்கொண்டே சென்றது. பெண் பிள்ளைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தனர், பையன்கள் இருவரும், தன் பதின்ம வயது பருவத்தை எட்டிக்கொண்டிருந்தனர். ஆகவே, சம்ஷேர் – சமீருக்கு, தன் மக்களின் நலனும் அவர்களின் பிரகாசமான எதிர்காலமும் அவனுடைய குறிக்கோளாக இருந்தது. வீட்டு வாசலை விட்டு இறங்கியதும், நமது தோழன் சம்ஷேர், சமீர் ஆகிவிட்டான். ஒரு எட்டு மாத நீண்ட காலத்தின் வேதனையுடன், கடுஞ்சொற்களல் தாக்கப்பட்டு, பல திசைகளில் மிகவும் அவமானப்பட்டு, எப்படியோ அமெரிக்க நாட்டிற்கு சென்றடைந்தான். அங்கே சென்றவுடன், ‘சமீர்’ என இருந்த பெயர் ‘சேம்’ என சேதம் அடைந்தது.

என் நண்பர் கூறுகிறார், “என் தோழன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறான். அவனும் அவனுடைய இறைவனும் தான் அவன் காணும் வாழ்க்கையின் கோலாகலங்களை அறிவர். அவன் டாய்லெட்களை துலக்கி துப்புரவு செய்தான், குப்பைகளை சேகரித்து சுமந்தான், காவலாளியாகவும், டோர் பாயாகவும் இருந்தான், நாய்களை குளிப்பாட்டினான், கூலி வேலை செய்தான், பைத்தியக்கார அடைக்கல ஸ்தலங்களான பித்தர் காப்புமனைகளில் அழுக்கான, அசுத்தமான துணிகளையும் போர்வைகளையும் சலவை செய்து சுத்தம் செய்தான், ரெஸ்டரான்டுகளில் பாத்திரங்களை கழுவினான், இன்னும் பல சொல்ல முடியாத விகாரமான வேலைகள் செய்து, கடைசியில், கஷ்டப்பட்டு நாலாண்டுகளாக ஒரு டாக்சி டிரைவர் ஆகிவிட்டான். இந்த நீண்ட பன்னிரண்டு ஆண்டு காலத்தில், எப்படியாகிலும், தன் பிறந்த பூமி பஞ்சாபுடன் தொலைபேசி தொடர்பு வைத்துக்கொண்டு, அவன் பணத்தை குடும்பத்திற்கு ஹுன்டி-ஹவாலா முறைப்படி அனுப்பிக்கொண்டும் இருந்தான். அவன் மிக கடுமையாக, இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்து வந்தான். தன் தேவைக்கு மிகக்குறைந்த பட்சமே பணத்தை வைத்துக்கொண்டு, சிறிதும் சட்டை செய்யாமல் அசௌகரியமான இடங்களில் தங்கி, பணத்தை சேமித்து, குடும்பத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தான். அவன் தன் டஜன் கணக்கான நண்பர்களுடன் தரையில் படுத்து உறங்கி, வருட கணக்கில் ஒரே ஜீன்ஸ் பேன்ட் அணிந்து காலத்தை கழித்தான். இது அவனுடைய அன்றாட நியூ யார்க் வாழ்க்கையாகவும் வாழ்க்கைத்தரமாகவும் இருந்தது,

சொர்க்க பூமி என கருதப்படும் நியூ யார்க் நகரில் நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தான் என் தோழன். ஆனால், அவனுக்கு பின்னால், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பஞ்சாப் மாகாண பாடின்டாவில் அவன் அனுப்பிக்கொண்டிருந்த பணம், வெள்ளம் போல் பெருக்கெடுத்து, கடலலைகளைப்போல் அவன் குடும்பத்தினர் கைகளில் புரண்டு கொண்டிருந்தது. அவன் வீடு ஒரு புது முகப்பு பெற்றது. அவன் செல்லப்பிள்ளைகள் இரு சக்கர வாகனங்களை வாங்கி அடிக்கடி அவைகளை மாற்றிக்கொண்டிருந்தனர், மனைவி தங்க நகைகளும் வைர வைடூரிய நகைகளையும் அணிந்தாள், பெற்றோர் புண்ணிய ஸ்தலங்களுக்கு பிரயாணம் மேற்கொண்டனர்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, நாணயத்தின் மறுபக்கத்தில், செல்வம் அதன் உண்மையான வர்ணத்தை தீட்டிக்கொண்டிருந்தது. இரு மகன்களும் படிப்பதை நிறுத்திவிட்டனர். பெரியவன் கெட்ட சேர்க்கையில் விழுந்து, சிகரெட் புகைக்க ஆரம்பித்து, குடி, குட்டி வழியாக ஹெராய்ன், கஞ்சா, என பலவித போதைப்பொருள்களை நுகர ஆரம்பித்து விட்டான். இளையவனோ அவனுடைய போக்கிரி நடவடிக்கைகளால் குண்டர்களுடன் இணைந்து, தன் விரோதிகளின் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில், அப்பன் சம்பாதித்த பணத்தில் திருட்டுத்தனமாக வாங்கிய துப்பாக்கியால் சுட்டு இருவரை கொன்றுவிட்டான். அவன் கைது செய்யப்பட்டான். நீதி மன்றம் அவன் செயலுக்கு நீதி வழங்கியது, கேபிடல் பனிஷ்மென்ட் – மரண தண்டனை அளித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் உயர் நீதி மன்றத்தில் முறையிட ஒரு வாய்ப்பும் அவகாசமும் அளித்தது.

பெரியமகள், வீட்டு வாகனத்தை ஒட்ட அமர்த்தப்பட்ட டிரைவருடன் ஓடி விட்டாள். தாய் என்பவள் அழுது, புலம்பி, ஏசி, பேசி அவர்களை சமாதானப்படுத்தி, மரியாதையுடன் முறைப்படி மணமுடித்து வைக்க சத்தியம் செய்து, அவர்களை அழைத்து வந்தாள். இளையவள், தான் ஆசைப்பட்டவனை மணக்க தற்கொலை முயற்சியால் தாயை மிரட்டி, தன் காரியத்தை சாதித்துக்கொண்டாள். மகனைக்காண ஏங்கி, அழுது, நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருந்த பெற்றோர், ஒன்றின்பின் ஒன்றாக மறுவுலகம் சென்றடைந்தனர். மேலும், ஆமாம், நான் நண்பனின் மனைவியைப்பற்றி சொல்லவில்லையே… வாய்க்கு கொஞ்சமும் கடிவாளமின்றி, நாக்குக்கு ருசியாக கண்டதையெல்லாம் நிறைய தின்று தின்று மாமிச மலையாக மாறிவிட்டாள் அவள். இளந்தென்றாலாக இருந்தவள், கோர சுனாமியாக காட்சியளித்தாள். மணாளனின் வருடக்கணக்கான பிரிவால் மங்கையின் புத்தி கதிகலங்கி விட்டது. அவள் மன நிலை பாதிக்கப்புக்கு ஆளானாள்.

என் நண்பன் லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களை இப்பன்னிரண்டு வருடங்களில் சம்பாதித்து விட்டான், தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் அவனுள் குடிகொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு செல்வதே ஒரு பக்கியமாம். ஆனால், அவனை பாக்கியசாலியாகவோ, அதிர்ஷ்டப்பெருமானாகவோ ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை. சற்று யோசித்து பாருங்கள்…. தன் வீட்டை விட்டு, நாட்டை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு, பிள்ளை குட்டிகளை விட்டு வெளியே எங்கேயோ பன்னிரண்டு வருட காலமாக வசிப்பவன் எப்படி பாக்கியசாலியாக முடியும்? தன்னை பெற்றெடுத்த தாயின் மரணப்படுக்கையின் அருகில் நிற்காதவன் எப்படி தன்னை அதிர்ஷ்டசாலியாக கருத முடியும்? தன்னை இவ்வுலகில் வளர்த்து ஆளாக்கிய தந்தையின் சவப்பெட்டியை சுமக்காதவன் எப்படி தன்னை பாக்கியசாலியாக பறைசாற்ற முடியும்? தன் பெண் பிள்ளைகள் அடக்கமின்றி, நாடோடி போல் சுற்றி திரிந்தால், ஒருவன் எப்படி தன்னை பாக்கியசாலியாக கருத முடியும்?

தான் பெற்ற பிள்ளைகளில் ஒருவன், போதைப்பொருள்களுக்கு அடிமையாகி, மயங்கி இழிவான சாக்கடை கால்வாய்களில் விழுந்து கிடக்கின்றான், மற்றவனோ தன் கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்பார்த்துக்கொண்டு தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான். இப்படியிருக்க, எப்படி ஒரு தந்தை தன்னை சலுகை பெற்றவனாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் கருத முடியும்? மனைவியை பிரிந்து 12 வருட காலமாக வனவாசத்தில் இருப்பது போல் கட்டிட காட்டுக்குள் இருக்கிறானே, அவன் ஒரு பாக்கியசாலியா?”

“நீ ஏன் பன்னிரண்டு வருட காலமாக நம் நாட்டிலிருந்து பிரிந்து வாழ்கிறாய்…?” என நான் கேட்டேன். லாங் ப்ஃப் (long puff) என்பார்களே, அது போல் அவன் நீண்ட நேரம் சிகரெட் புகையை உள்ளிழுத்து, “நான் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவன். அப்படியும் நான் ஒரு முறை இந்தியாவுக்கு வந்திருந்தால், மீண்டும் திரும்பி அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் போய் இருக்கும். என் குடியிருப்பு ஆவணங்கள் அமெரிக்காவில் சரி படுத்தப்பட்ட போது, என் மகனுடைய கேஸ் எதிரே வந்தது. அவன் அட்வொகேட் கட்டணங்களை செலுத்த நான் இங்கேயே தங்க வேண்டியதாயிற்று. இப்பொழுது என்னிடம் பணமும் உள்ளது, க்ரீன் கார்டும் உள்ளது. நான் இந்தியாவுக்கு திரும்பவும் ஆசைப்படுகிறேன். ஆனால், மீண்டும் நான் யோசிக்கிறேன்… நான் யாருக்காக அங்கே போக வேண்டும்? என் தந்தை உயிருடன் இல்லை, அம்மாவின் சமாதி இருக்கும் இடமே அடையாளமின்றி போய் விட்டது. ஆமாம், என் மகன்கள் உயிருடன் இருக்கின்றனர். ஆனால், இறந்தவர்களைவிட மோசமாக…. அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே எனக்கு அவமானமாக உள்ளது. என் மனைவி…. ஆமாம், அவள் இருக்கிறாள், புண்ணியவதி… அவளை எதிர்நோக்க எனக்கு சக்தி இல்லை, எனக்கு பயமாக உள்ளது. நான் என் சுய மரியாதையை தொலைத்து விட்டேன். ஆகவே, நான் சூதாட்டம், குடி ஆகியவற்றில் மூழ்கி, என் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்….” என சோகத்துடன் தன் முடிவை விவரித்தான்.

நான் ஆரம்பத்தில் எழுதியதைப்போல், என் நண்பனின் தோழன் ஒருவன் மட்டும் இதைப்போன்ற பிரச்சினைகளில் இருந்திருந்தால், அவன் உண்மைப்பெயரைச்சொல்ல தயக்கம் இருந்திருக்காது. ஆனால், அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஐநூறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ இதே நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களும், தத்தம் மனங்களின் மீது மாறுபட்ட களங்க வடுக்களை சுமந்தபடி காலம் கழிக்கின்றனர். அழகாக கட்டப்பட்ட தன் மாளிகைகளுக்காக, சொகுசு வாகனங்களுக்காக, ஜொலிக்கும் வைர முத்து மாலைகளுக்காக, மினுங்கும் வாழ்க்கைத்தரத்துக்காக, ஒரு மிகப்பெரிய விலையை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் நமது வாசகர்களில் ஆயிரக்கணக்கானோருக்கும் அமெரிக்க பிரவேச ஆசைகளும், அடங்கா கனவுகளும் இருக்கத்தான் செய்யும். அமெரிக்க ஜெபமே தன் மூச்சாக கொண்டு, வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு, தன் தகுதியை பரிசீலிக்காமல், கனவுகளின் நிழலிலேயே வாழ்பவரும் உண்டு. கள்ளத்தனமாக அமெரிக்க கண்டத்தில் பிரவேசிக்க ஆயிரக்கணக்கானோர் தினமும் பல திசைகளிலிருந்து கடல் வழியாக வரும் பொழுது, கடலிலேயே மூழ்கிவடும் சம்பவங்களும், கன்டெய்னர் மரணங்களும் நம் கண் முன்னே தினந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எனது அன்பான வேண்டுகோள் யாதெனில், சரி, நாங்களும் நிச்சயமாக அமெரிக்கா செல்லலாம், அதே நேரம், சம்ஷேர் – சமீர் – சேம் அளித்துக்கொண்டிருக்கும் விலயைப்போல் நாங்களும் அதன் விலையை செலுத்தி, விளைவுகளை பொறுத்துக்கொள்ள தயாராகிவிடவேண்டும். நம் பெற்றோர், நமது நாட்டில் எங்கேயாவது சம்ஷேர் உடைய பெற்றோரைப்போல் பரிதவித்து இறப்பர். அப்புறம், அவர்களுடைய விதிக்கும், மரணத்திற்கும் அழவேண்டி, அமெரிக்காவின் இழிவான கட்டிடங்களில் அவர்களுக்காக நாம் சமாதி எழுப்பவேண்டியதிருக்கும்.

வாழ்வாதாரத்திற்காக உலகத்துடன் சமரசம் செய்துகொள்ளும் மக்கள் இழிவுபடுத்தப்படுவர், என்பது நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *