நாடகம்!





இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன் அப்பாவின் அறைக்கு வெளியே இருந்த வராண்டாவில் நான்கு நபர்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற இருந்தனர். அவர்களது பேச்சுக்களை ஒட்டுகேட்ட சிவா அதிர்ந்தான்.
“”சார்! நாங்கள் போலியான தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒலி நாடா, டிரான்சிஸ்டர், பீரோ, நாற்காலிகள் என்று நிறையத் தயாரித்து விட்டோம். உங்கள் கடையில் தான் நம் திட்டம் ஆரம்பிக்க வேண்டும்!”
“”நூறு ரூபாய் கட்டுபவர்களுக்கு உடனடிப் பரிசாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப்ரிக்கார்டரைக் கொடுக்க வேண்டும். உடனே குலுக்கல்! உடனடியாகப் பரிசு! ஒரு வாரத்தில் பணம் குவிந்துவிடும். விடாமல் விளம்பரம் செய்தால், இரண்டு மாதத்தில் லட்சக் கணக்கில் பணம் குவிந்துவிடும்!”
“”அப்புறம் என்ன? எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்து விட வேண்டியதுதான் சார்!”
“”இதில் சிரமத்திற்கு ஒன்றுமே இல்லை! சிறுகச் சிறுகப் பணக்காரர் ஆவதை விட, சீக்கிரமே பணக்காரர் ஆகி விடுவோம். இது ஒரு நாகரிகமான மக்களை ஏமாற்றும் திட்டம். சொல்லப் போனால், இது ஒரு நவீனக் களவு!”
இப்படி, வந்தவர் நால்வரும் பேசி முடித்தனர். சிறிது நேரம் சென்றது.
“”சரி! அடுத்த வாரத்திலேயே கடையை திறந்து விடுவோம். நீங்கள் பொருட்களைக் கொண்டு வந்து அடுக்கி விடுங்கள்!” என்று அனந்தன் ஒப்புக் கொண்டார்.
அனைவரும் கை குலுக்கி விட்டுச் சென்றனர்.
மறுநாள், தன் தாயிடம் தான் கேட்ட செய்தியை விளக்கினான் சிவா. தாய் மிகவும் வேதனைப்பட்டாள். என்றாலும், என்ன செய்வது என்றே புரியவில்லை!
சிவாவின் தாய், நல்ல செல்வந்தரின் மகள். அவளுடைய பணத்தை வைத்துத் தான், பெரிய கடை நடத்தினார் அனந்தன். அந்தக் கடையை மாற்றிப் பரிசு மயமாக்க, தீயவர்களுடன் சேர்ந்து தந்தை திட்டமிட்டதை எண்ணி சிவா மனம் கலங்கினான்.
அம்மாவின் காதில் கிசுகிசுத்தான் சிவா. அவளும் தலையாட்டினாள்.
மறுநாள் அனந்தன் வராண்டாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
“”அம்மா… அம்மா… இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா! பக்கத்து ஊரில் சீட்டு பிடித்துக் கொண்டிருந்தார்களே ஜெயா அம்மா… அவங்க ஊர ஏமாத்திட்டு ஓடிப்போயிட்டாங்களாம். சீட்டு கட்டி ஏமாந்தவங்க எல்லாம் போலீஸ்ல கம்ப்ளயின்ட் பண்றாங்களாம். எவ்வளவு பெரிய அவமானம்! ஏம்மா… இப்படி ஏமாத்தி பிழைப்பதும், ஒரு பிழைப்பா…” என்றான் சிவா.
“”நானா இருக்கணும்… அடுத்த நிமிஷமே தூக்கு மாட்டி தொங்கிடுவேன். அப்படி ஒரு வாழ்க்கை நமக்குத் தேவையா?” என்றாள் அம்மா.
“”நானும் தான் அம்மா… என்னோட அம்மா மட்டும் இந்த மாதிரி ஏமாத்தி பிழைக்கிற வேலையை செய்துட்டு இப்படி மாட்டினா, ஒரே வெட்டுதான்! உங்கள வெட்டிட்டு நானும் என்னை வெட்டிக்குவேன்!” என்றான்.
இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அனந்தன் திடுக்கிட்டார். ஒரு நிமிடம் அவரது கண்கள் கலங்கியது. பேப்பரை தூக்கி வீசிவிட்டு, வீட்டிற்குள் சென்று போனை எடுத்தார், அந்த நாசக்கார கும்பலிடம் தன்னுடைய முடிவை சொல்வதற்கு.
நிம்மதி பெருமூச்சு விட்டனர் சிவாவும், அவன் அம்மாவும்.
– ஜூன் 04,2010
Nice