கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 250 
 
 

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் – 19

சின்னப்பன் ஊரிலிருந்து வந்து விட்டான். ஆனால் தான் போய் வந்த விவரத்தையும் மைத்துனன் உடல் நிலையைப் பற்றியும் இரண்டே வார்த்தையில் சுருக்கமாகக் கூறினான். வேறு அதிகப்படியாக ஒன்றுமே சொல்லவில்லை. அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராமாயி எப்படியோ ஏதோவெனக் கலங்கினாள். ஆள் சோடையற்றிருபப்தையும், முகம் கருகி வழிந்து கண் உள்ளே போய் கவனமில்லாதிருப்பதையும் கண்ட அவள், ஏதாவது தன்னிடம் சொல்ல அஞ்சி மறைக்கிறானோ என்று கூட நினைத்தாள். ராத்திரி படுக்கைக்குப் போகும் முன்பு கணவனிடம், “எப்படி இருக்குது, தேவலாமா” என்றாள். இதே கேள்வியை இதற்கு முன் அவனிடம் எண்ணற்ற முறை கேட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் மனம் என்னவோ சஞ்சலித்துக் கொண்டே இருந்தது. 

“இல்லை அப்படியே தான் இருக்குது.” 

“அப்படினா இன்னம் நோக்காடு நீங்கலயா? எப்படித்தான் இருக்குது? நல்லாச் சொல்லுங்கோ, கட்டில உட்டு எழுந்தரிக்க முடியலயா? சோறு, தண்ணீ குடிக்கிறானா என்ன?” 

“அதெல்லாம் எப்போதும் போல் திங்கறான். ஆனா நரம்புதான் அடிக்கடி பளீர் பளீர்னு தொந்தரவு கொடுக்குது. படுத்தாலும் உக்காந்தாலும் பொறுக்க முடியலீங்கறான்” என்று சின்னப்பன் சொன்னான். 

ராமாயிக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. சகோதர வாஞ்சையில் அவள் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் நெளிந்து புரண்டு அவஸ்தை படுகிற அவள் தமையனுடைய சங்கடத்தைக் கற்பனை பண்ணி உபாதைப் பட்டாள். அவள் கண்களில் கண்ணீர் திரண்டது. 

விம்மலுடன், “இப்போது ஏதாச்சு பண்டிதம் பார்க்கறாங்களா? எப்படித்தான் இருக்குது?” என்று கேட்டாள். 

சின்னப்பனுக்கு இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஓயாது ‘எப்படி இருக்கிறான், எப்படி இருக்கிறான்’ என்றாள் எதைச் சொல்வது? “ஒண்ணும் செய்திடாது” என்று மட்டும் சொன்னான். அதே சமயம் ‘கடி கடீ’ரென்று தலைக்கு மேல் கூரையிலிருந்து பல்லி சொல்லிற்று. இருவர் மனத்திலும் சுருக்கென்றது. ஏனெனில் அந்த இடத்திலிருந்து சொல்லும் பல்லி மகா கெட்டது என்று சொல்வதுண்டு. 

“ஐயோ, இந்த நச்சுக் கெரகம் சொல்லுதே” என்றாள் ராமாயி. 

சின்னப்பன் “உச்சத்தில் சொன்னா அச்சமில்லெ, நல்லதுதான்” என்றான் சற்றுத் திடமாக. 

அவளுக்கு உடனே போய்த் தான் பார்த்துவிட்டு வந்து விடலாமே என்ற ஆவல். ஆனால் தலைக்கு மேல் காத்திருக்கும் வேலையெல்லாம் தான் அவளுக்குத் தெரியுமே. பருத்தி எடுத்து முடிப்பதற்குள் கம்மங்காடு விதைப்பு வந்துவிடும். இந்த ஒரு வாரமாக சின்னப்பன் இல்லாததினால் எவ்வளவோ காரியங்கள் தடைப்பட்டுப் போய்விட்டன. அடுத்தடுத்து இப்படி ஊர்ப்பயணம் போனால் குடும்பம் முன்னுக்கு வந்த மாதிரிதான். எந்தக் குடியானிச்சிதான் இதற்குச் சம்மதிப்பாள். இதையெல்லாம் யோசித்தே அவள் தன் கணவனிடம் வாய் திறக்கவில்லை. காலையில் சின்னப்பன் தோட்டத்திற்குப் போனான். எதிரில், குறுக்கே அங்கே, இங்கே காணுபவர்களெல்லாம், “அடெ எங்கே சின்னப்பா பத்து நாளாகக் காணோம். உம் மச்சினனுக்குத் தேவலையா, அது என்ன? நரம்பு சுளுக்குதானே, நம்ம சிக்கிரிச்சிபாளையம் வண்ணான் மந்திரிப்பதில் சூரனாச்சே, கூட்டி வந்து காட்டினீங்களா” என்று தங்கள் அனுதாபத்தையும், பரிகாரத்தையும் பலவிதமாகத் தெரிவித்தார்கள். சின்னப்பன் எல்லாவற்றிற்கும் அப்படியப்படியே பதில் சொல்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இவர்கள் எல்லோரையும் விட மாரமூப்பன் தான் வாட்டி வளவெடுத்து விட்டான். “நரம்பு சுளுக்காம், இதுக்குப் படுத்துக் கொள்வதாம். கொஞ்சம் விளக்கெண்ணெய் போட்டுத் தேய்த்தால் ஓடி விடுகிறது. இல்லாவிட்டால் வாய்க்காலில் திடுதிடுவென்று மடை தண்ணீர் விழுகையில் உட்கார்ந்து வலிக்கிற இடத்தைக் காட்டினால் பறந்து விடும். அப்படியும் தீரவில்லையானால் ஆத்தாள் பேரைச் சொல்லி பிடி சாம்பலைப் போட்டுட்டு ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் காணிக்கை முடிந்து வைத்துவிட்டு, மேலைக்கு ஒரு ஆ ஆடு வெட்டினால் போகுது. இதுதான் எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது என்பார்கள்” என்று தன் மேதாவிலாசம் முழுதும் காட்டி விட்டான். சின்னப்பனுக்கு “ஆமாம், ஆமாம்” என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று. ராமாயியிடமும் இப்படித்தான் சகலரும் விசாரித்த வண்ணமிருந்தனர். பருத்தி காட்டிற்குள், “என்ன ராமாயி, உன் அண்ணனுக்கு எப்படி இருக்குது?” என்பாள் ஒருத்தி. மற்றவள், “ஐயோ பாவம்! இந்த அக்காளுக்கு இப்படி மிசிற நேரம் இல்லாமே இருக்குதே, இல்லாமே போனா இங்கே நிப்பாளா? இப்பவும் உயிர் அங்கேயும், கட்டை இங்கேயும்மாத்தான் இருக்கிறாள்” என்பாள். 

வேறொரு பெண் குனிந்த தலை நிமிராமலே, “அதுவும் பொல்லாத நோக்காடுதானம்மா. எங்க ஐயனுக்கு அதுதானே எமனாக முடிந்தது” என்பாள். கொஞ்சம் இளகிய மனதுடையவள், “என்ன பண்ணிப்போடும்? நீ யாருக்கு சூதுவாது செய்ய நினைத்திருக்கிறாய்? மலை போல் வந்தாலும் பனிபோல் நீங்கிவிடும். ராமாயி, ஆரு என்ன சொன்னாலும் நீ காதில் போட்டுக்காதே” என்று ஆறுதல் கூறுவாள். 

இவ்வித ஆறுதலும், அனுதாபமும் கிடைத்தாலும் அவள் மனது சாந்தமடையவில்லை. என்று நல்ல சேதி வரும் என்ற ஏக்கத்திலிருந்தாள். 

ஒரு நாள் காலை ராமாயி, வீட்டு வேலைகளை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வாசலில் பாத்திரங்கள் எல்லாம் துலக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்த கூரை மேல் ஒரு காகம் வந்து உட்கார்ந்து கத்தியது. அந்தச் சத்தத்தைக் கேட்ட ராமாயியின் முகம் மலர்ந்தது. “இன்றைக்கு ஊரிலிருந்து யாராவது வருவார்கள்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். ஆனால் சற்று நேரத்தில் ஏழெட்டுக் காகங்கள் எங்கிருந்தோ வந்து கத்தவே, அவள் கையைப் பலமாகத் தட்டினாள். காகங்கள் போவதாகக் காணோம். பறப்பதும் உட்காருவதுமாகவே கத்திக் கொண்டிருந்தன. 

“இதென்னடா எழவாயிருக்குதே” என்று அங்கு வந்த சின்னப்பன் ஒரு கோலை எடுத்து வீசினான். காக்கைக் கூட்டம் கண்காணாது பறந்தது. 

ராமாயி காரணமற்ற பயத்துடன், “காக்கை கத்தினா ஒண்ணும் கெட்டதில்லையே?” என்றாள். 

சின்னப்பன் “வருவது வழியா தங்கப் போறது” என்றான். 

அத்தியாயம் – 20

துக்கமும், சுகமும் மாறி மாறி வருவதுதானே? துக்கம் வந்தால் சோர்வடைவதும், சுகம் வந்தால் களிப்படைவதும் ஆழ்ந்தோர் செய்கையாகுமா? இந்தத் தத்துவத்தை உணர்ந்தவள் போலத்தான் நாகம்மாள் சோகத்தில் கலந்து குடும்பத்தில் எவ்வித பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கைப்’ போல் தன் காரியத்தில் கண்ணாயிருந்தாள். அடைப்பட்ட சிங்கம் அறுத்துக் கொண்டு போக முயலும் வேகத்தில் அவர்களிடமிருந்து பிரிந்து செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். 

முன்பொரு நாள் அந்தி வேளையில் அவள் கெட்டியப்பனைச் சந்தித்த அதே குடிசையில் இன்று நாகம்மாளைக் காண்கிறோம். ஆனால், முன்னதிற்கும், இப்போதைக்கும் எவ்வளவோ வித்தியாசம். மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்றால் குடிசையுமல்லவா மாறிக் கொண்டிருக்கிறது. அச்சின்னஞ் சிறு குடிசை ஏனோ வேண்டா வெறுப்பாகத் தன் மீது போர்த்தியிருந்த தென்னங்கீற்றுகளைத் தூக்கி எறிந்து விட்டது. என்ன கோபமோ இரண்டொரு சட்டங்களும் பெயர்ந்து ‘போகட்டுமா? நிற்கட்டுமா?’ என்று கேட்பதைப் போல் ஓரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதோடு குடிசையைக் கபளீகரம் செய்யக் கிளம்புவதைப் போன்று சுற்றிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. முன்பு துளி வெளிச்சத்தையும் புக விடாது தடுத்த குடிசை இப்போது பால் நிலாவைக் கொட்டிக் கொள்கிறது. ஒரு வேளை சந்திர வெளிச்சத்தின் மேல் ஏற்பட்ட மோகமாயிருக்கலாம். 

கெட்டியப்பன் ஏதோ பிரமாதமாக யோசித்துக் கொண்டிருந்தான். என்ன இவன் கூடவா விஷயங்களை இங்ஙனம் ஆழ்ந்து சிந்திக்கிறான்? என்று ஆச்சரியம் எழலாம். ஆம், நல்லதோ கெட்டதோ எதற்கும் யோசனை வேண்டித்தானே இருக்கிறது? 

நாகம்மாள் அவனுக்கு எதிரில் சற்று தள்ளிக் குடிசை வாயிலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். வெகுதூரத்திற்கப்பால், வேலிக் கோடியும், அதற்குப் பின்னும் அவள் கண்களுக்குத் தெரிந்தன. எங்கும் வெண்காந்தி உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் வண்ணம் குளிர்ச்சியுடன் படர்ந்து கிடந்தது. 

“என்ன சும்மாவே இருக்கிறாயே, உனக்காக நான் எவ்வளவெல்லாம் செய்து தயாராக வச்சிருக்கிறேனே” என்றான் கெட்டியப்பன். 

நாகம்மாள் எங்கோ பார்த்துக் கொண்டே, “அப்படி என்ன பண்ணிவிட்டாய்? சின்னப்பன் என்னைக் கூப்பிட்டு ஒண்ணும் கேக்கலையே” என்றாள். 

“நீ இப்படி இருந்தா கேக்காதிருப்பது மட்டுமா? சொல்லாமலே போய்விட மாட்டானா?” என்றான் கெட்டியப்பன். 

“எங்கே?” 

“எங்கேயா?” 

“பின்னே சொன்னாலல்லவா தெரியும். எங்கே அந்த சனியன் பிடிச்ச ஊருக்கா?” என்று சற்று ஆத்திரத்துடன் கேட்டாள். 

“பின் வேறெ எங்கே?” 

நாகம்மாள் பெருமூச்சுடன், “சரிதான் நிச்சயமாயிட்டதா எல்லாம்? எனக்குத் தெரியாதே?” என்றாள். 

“உனக்கு எதுதான் தெரிஞ்சு இருக்குது? இனி கிணற்றிலே போட்ட கல்லு மாதிரி, சும்மா இருந்து சுகமில்லை. உடனே இரண்டில் ஒன்று சொல்லச் சொல்லு” என்றான் கெட்டியப்பன். 

நாகம்மாள் என்னவோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயலுகிறவள் மாதிரி தலையைக் குனிந்து கொண்டு ஆலோசித்தாள். 

கெட்டியப்பன் கை நெட்டை எடுத்துக் கொண்டே, “நீ என்னதான் பண்ண உத்தேசித்திருக்கிறாய்? கள்ளன் போன மூணாம் நாள் கதவை இழுத்துச் சாத்தி பிரயோசனமென்ன?” என்றான். 

“சரி, நாளைக்கு நான் கட்டாயம் கேக்கிறேன். ஆமாம், என்ன சொல்லுவாங்க? நான் சொல்றதைக் காதிலே போட்டுக்குவாங்களா, மாட்டாங்களா?” 

“இதென்ன இது? குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாலே பெண்ணா, ஆணா என்று கேட்பதைப் போலிருக்குதே! நீ கேளு, சரியாக ஒத்து வந்தாச் செய். இல்லாத போனா ஊர் கூடி நாயம் போடலாம். பத்துப் பேர் முன்னாலே வந்து சொல்லட்டும். இதை எல்லாம் மணியக்காரர் ஊட்டில் பேசியிருக்கிறோம். நீ ஒண்ணப்பத்தியும் அஞ்சாதே. என்ன வந்தாலும் மணியக்காரர் தாக்காட்டுவார். நீ சும்மாயிரு. சின்னப்பன் எப்படி இல்லீன்னு கையை விரிப்பானோ பார்ப்போம்.” 

“இதில் இன்னொரு பாவி வந்து குறுக்கே நிக்கறாளே? அந்த எமன் இல்லாத போனா பரவாயில்லெ. சாமி வரம் கொடுத்தாலும், பூசாரிக்கு மனம் வராதே” என்றாள் நாகம்மாள். 

கெட்டியப்பன் கொஞ்சம் எக்களிப்பாக, “அவ தான் தொலைஞ்சிட்டாளே! அவ மகனை எடுத்து நடு ஊட்டிலே போட்டிருக்கும் போது நிப்பாளா?” என்றான். 

நாகம்மாள் மனதில் இந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு, “சும்மா ஏன் சத்தம் போடறாய், யாராச்சு இந்தப் பக்கம் வரப் போறார்கள்” என்றாள். 

“இங்கே எவன் வருவான்? நீ ஏன் இப்படி பயந்து சாவரே?” 

நாகம்மாள் எழுந்தாள். அவள் எழுந்து விட்டாளென்றால், மின்னல் வேகத்தில் மறைந்து விடுவாள். “சரி நான் போகட்டுமா?” என்று அவள் கேட்கு முன்பு சடக்கென கெட்டியப்பன் கை உயர்ந்தது! ஆனால் யாது காரணத்தினாலோ, அப்படியே கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். 

நாகம்மாள், “அதோ வேலிக்கு மேலே நிலா வந்துவிட்டது. கிழக்காலக் காட்டை சுத்திப் பாத்து வர நேரமாச்சு என்று தான் சொல்லோனும்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள். கெட்டியப்பன், குடிசைக்கு முன்னால் அவள் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் ஒரே நிலக்காடு. அந்த மனோகரமான மயக்கத்தைத் தாங்க மாட்டாது தான் என்னவோ, கெட்டியப்பன் கீழே கிடந்த தென்னந்தடுக்கின் மேலே தலை சாய்த்தான். 

நாகம்மாள் வீட்டு வாசல்படியில் அடியெடுத்து வைத்தாளோ, இல்லையோ, “யாரது?” என்று கோபத்துடன் சின்னப்பன் கேட்டான். 

“ஏன்?” என்றபடியே மேலே நடந்தாள். சின்னப்பன் எழுந்து வந்து, “என் மானம் போகுதே” என்றான் சற்று கடினமாக. 

“மானமும் கீனமும் போறது ஏனோ? அப்படி ரோசக்காரராயிருந்தா, 

பிரிச்சு விடுங்களேன்” என்று நாகம்மாளும் அதே தொனியில் சொன்னாள். 

எதிர்பாராத இப்பதிலால் திகைப்படைந்தாலும் சட்டென, “உங்களை யார் கட்டிப் போட்டிருக்குறாங்க. நல்லா பிரிஞ்சு கொள்ளலாமே” என்றான் வேகமாக. 

“எனக்கு உண்டான பங்கை ஒதுக்கீட்டால் விலகிக் கொள்கிறேன். உங்களுக்கு வேணுமானால் ஒரு கும்பிடு கூடப் போட்டுட்டு போயிடறேன்” என்றாள். 

சின்னப்பனுக்கு கோபம் முன்னிலும் அதிகமாகப் பொங்கிக் கொண்டு வந்தது. இத்தனை நாளாக யார் யாரோ சொல்லியதைக் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் விட்டிருந்தான். இன்று தான் தெரிந்தது. “ஓஹோ பங்கு வேண்டுமா? சரி எந்தக் காமாட்டிப்பயல் கேட்கச் சொன்னானோ அவனை வரச்சொல்” என்று உக்கிரமாக மொழிந்தான். 

நாகம்மாள் ‘கப்சிப்’ என அடங்கிவிட்டாள். சின்னப்பனுக்குப் பங்கு கேட்பவள் பேரில் கூட அவ்வளவு கோபம் இல்லை. அவளைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கிறவர்கள் மேல் தான் அபாரக் கோபம் வந்தது. “பாக்கலாமே இவர்கள் சமத்தை! எப்படித்தான் வாங்கி விடுவார்களோ?” என்று இன்னும் கண்டபடி வைது கொண்டு அப்பால் சென்றுவிட்டான். 

அத்தியாயம் – 21

திருடன் புகுந்த வீடு மாதிரி சாமான்கள் கண்டபடி ஒழுங்கின்றி அலங்கோலமாக சிதறிக் கிடந்தன. படுக்கைப் பாய் சுருட்டி வைக்கப் படவில்லை. புகையிலைக் காம்புகளும், பாய் கோரைகளும், காய் தொல்லிகளும் இன்னம் பல தினுசான தூசி துப்புகளும் பெருக்காததால் எங்கும் நிறைந்திருந்தன. எதற்கோ இறக்கி வைத்த பானை ஒன்று அடுக்கேறாமல் கீழே தனித்திருந்தது. அடுப்பு நிறைய கிடந்த சாம்பல் வழித் தெரிய வரும் ஆசாமி எங்கே என்று காத்திருந்தது. ஏன் இப்படி? தினம் இவ்விதம் வீடு இருந்தது கிடையாதே? இன்று மட்டும் யாது காரணம் என்று கேட்டால், கடந்த இரவு சம்பவத்தின் விளைவுதான் இவ்வளவும் என்று சொல்ல வேண்டும். ராமாயி என்னவோ கனாக் கண்டவள் போல உட்கார்ந்திருந்தாள். விடிந்தது தெரியும். கோழி கூப்பிட்டது தெரியும். தன்னுடைய கணவன், “பாலை அடுப்பிலே வச்சிருக்கிறேன். ஏதாவது பூனை, கீனை உருட்டி விடப் போவுது” என்று சொன்னதும் தெரியும். ஆனாலும் என்ன? அவள் மனத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. முழுதும் விளங்காத விடுகதையைப் போல் நெரடாக இருந்தது. சரி, இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பாளோ பார்ப்போம். 

நாகம்மாள் கண்காது தெரியாமல் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குகிறாள். தூங்குகிறாளோ விழித்திருக்கிறாளோ? அடித்துப் போட்ட மாதிரி அசையாது இருக்கிறாள். முத்தாயா, ‘அம்மா, அம்மா’ என்று கூப்பிடுவதும், ராத்திரி தின்ன மறந்த கருப்பட்டியை ருசி பார்ப்பதுமாய் இருந்தாள். சின்னப்பன் வழக்கப்படி வெகு நேரத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து விட்டான். ஆனால் வெளியே செல்லவில்லை. காலையில் எழுந்ததும் எழாததுமாய் வெளியில் வரும் போது ‘பட்’ என்று நெலவு அடித்தது. ‘ஆ’ என்று அடிபட்ட இடத்தைத் தடவிக் கொண்டே வாயிற் படியில் இறங்கினான். ‘என்ன துர்ச்சகுனமோ விடிந்ததும் விடியாததுமாய்’ என்று கலவரத்துடன் பாலைக் கறந்து கொண்டு வந்தான். இன்று ஏனோ தோட்டம் போக அவனுக்கு மனம் இல்லை. ஆனால் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. ஒரு மாதமாகக் கட்டுத்தரைக்கு ஒரு முளை வேண்டியிருந்தது. இன்று செய்து முடிப்போமென்று ஒரு வேப்பங்கொம்பை எடுத்துச் செதுக்க ஆரம்பித்தான். சின்னப்பன் ‘லொட், லொட்’ என அரிவாளினால் வெட்டும் போது சிறு சிறு மரத்துண்டுகள் தெறிக்கும். முத்தாயி அவைகளை ஒன்றுவிடாது பொறுக்கி விளையாட விரகு சேர்த்துக் கொண்டிருந்தாள். “இது தான் சாதம் செய்ய, இதுதான் குழம்பு செய்ய…’ என்று முத்தாயா சொல்லும் போதெல்லாம், சின்னப்பன் மெதுவாகச் சிரிப்பான். சில சமயம் துண்டுகள் விழாத போது குழந்தை அருகில் வந்து, “ஏன் சின்னய்யா எனக்கு வெறகு கொடுக்க மாட்டாயா?” என்று கேட்பாள். அவனுக்கு அது ஒன்றும் காதில் விழாது. ஆயிரம் யோசனைகள் அவன் உள்ளத்திலே ஊசலாடிக் கொண்டிருக்கையில் குழந்தையின் கேள்வி எங்கே பதியப் போகிறது? “என்ன நாகம்மாளா பங்குப் பேச்சைக் கிளப்பியிருக்கிறாள்? இவளுக்கா இந்த யோசனை உதித்தது? இருக்காது. இவ்வளவு நாளாகத் தாய் போன்று ஒற்றுமையாக குடும்பத்தை நடத்தியவளா பிரிக்க முயல்கிறாள்? நல்லதனம் திடீரென்று மறைந்து விடுவதும் உண்டோ?” என்று எண்ணுவாள். 

‘நல்லதனமா? இப்பாதகி எப்போதும் தான் மனத்தில் இப்படி விஷத்தை வைத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ? ஆனால், அடுத்த கணமே, ‘இல்லை இந்த வெள்ளை மனதில் இப்போது தான் யாரோ கரியைத் தடவி விட்டார்கள். ஆனால் அவள் யாராயிருந்தாலும் சரி, பிரம்மாவாயிருந்தாலும் சரி பார்த்து விடுகிறேன்” என்று தனக்குத் தானே கோபப்படுவான். 

பொழுது வேலிக்கு மேல் வந்து விட்டது. வெயில் சுள்ளென்று அடித்தது. பந்தக்காலில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி, ‘ம்மா, ம்மா’ எனக் கத்தியது. அதைத் தொடர்ந்து எங்கோ ஒரு சேவல் ‘படபட’வென இறக்கையை அடித்துக் கொண்டது. “ஏண்டா யாரடா வேலியோரம் ஆட்டை உட்டது” என்று ஒரு பெண் குரலும் ஓங்கி எழுந்தது. சின்னப்பன் குடலறுந்தவன் போல காரணமின்றித் திடுக்கிட்டுப் பின்னும் தன் காரியத்தைத் தொடங்கினான். ராமாயி அவன் அருகில் வந்து நின்றாள். 

“ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பார்க்கிறது தானே? ஏன் இப்படி பனைமரம் மாதிரி நின்று கொண்டிருக்கிறாய்” என்றான். 

ராமாயி சுற்றிலும் பார்த்து விட்டு உள்ளே போனாள். 

மத்தியானம் வரையில் சின்னப்பன் முளை செதுக்குவதிலேயே இருந்தான். அதற்குள் ராமாயி வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்து விட்டு தன் கணவனைச் சாப்பிடக் கூப்பிட்டாள். சின்னப்பன் “நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன். குழந்தையைக் கூப்பிட்டு சாதம் போடு” என்று சொல்லிவிட்டான். 

ராமாயி மெதுவாக, “அக்கா இப்பொழுதுதான் எழுந்திருந்தாள் போலிருக்குது. சாப்பிடக் கூப்பிடட்டுமா?” என்றாள். 

“தினம் கூப்பிடுகிறதுதான் வழக்கமா?” 

“இல்லெ, இல்லெ…” என்று இழுத்தாள் ராமாயி. 

“என்ன இல்லெ?…” 

“கோவிச்சிட்டு பேசாதிருந்தாலும் இருப்பாள். ஒரு பேச்சு கூப்பிட்டதினால் என்ன குறைஞ்சு போயிடும்?’ 

சின்னப்பனும் மனுஷத்வம் உள்ளவன் தான். ஹிருதயமற்ற போக்கே அவனுக்குப் பிடிக்காது. என்னவோ தெரியாத்தனத்தில் கேட்டிருப்பாள் என்று நினைத்தான். 

“சரிதான் போய்க் கூப்பிடு” என்றான். 

ராமாயி உடனே குழந்தையைத் தேடுகிற மாதிரி, “முத்து இங்கேயா இருக்கிறாய்” என்று கேட்டுக் கொண்டே நாகம்மாள் படுத்திருக்கும் அறைக்குள் போனாள். 

“இங்கே அவள் இல்லை” என்று நாகம்மாளே பதில் சொன்னாள். ராமாயி கனிவுட்ன, “எங்காவது அந்தப்பக்கம் இருப்பாள் அக்கா, நீயாவது வா, சோறு தின்னு” என்றாள். 

“உடம்புக்கு நல்லாயிருந்தால் நீ சொல்ல வேண்டுமா ஆயா?” என்று எழுந்து உட்கார்ந்து, “கொஞ்சம் சுடுதண்ணி இருந்தா கொண்டு வா’ என்றாள். 

வாஸ்தவத்தில் வெந்நீருக்கு அவசியமே இல்லை. ஆனால் நிஜ வியாதிக்காரி என்று காட்ட வேண்டாமா? ராமாயி, ‘இதோ கொண்டாறேன், அக்கா” என்று வெளியில் வந்தாள். 

நாகம்மாள் தனக்குள், ‘அதிக விறைப்பாயிருப்பதும் ஆபத்தே. முள்ளுமேல் போட்ட வேட்டியை மெள்ள மெள்ளத்தான் எடுக்க வேணும். இவர்களுக்குச் சொல்கிறேன் புத்தி’ என்று நினைத்தாள். சின்னப்பன் தலையை அசைத்து, “என்ன சமாதானம் பண்ணினாயா” என்று ராமாயியைக் கேட்டான். 

அவள் சிரித்தாள். “ஓஹோ நீயும் தேவலாமே” என்று அவனும் சேர்ந்து சிரித்தான். 

அதே சமயம் முத்தாயி, “சின்னையா, யாரோ வந்திருக்காங்க” என்று சொல்லிக் கொண்டு வெளியிலிருந்து ஓடி வந்தாள். 

“யாரது” என்று விசாரித்தவாறே சின்னப்பன் வெளியே எட்டிப் பார்த்தான். வாசலில் சக்கிலியாள் நின்றிருந்தான். சின்னப்பனுக்கு அவனைக் கண்டதும் பாதி விஷயம் விளங்கி விட்டது. மைத்துனன் காரியம் தாட்டிவிட்டது, அவ்வளவு தான். என்னடா?” என்று சின்னப்பன் வாய் திறப்பதற்குள், “அதுதானுங்க, பேச்சு, மூச்சு அத்துப் போச்சு. உடனே கவுண்டிச்சியோடு புறப்பட வேண்டியதுதானுங்க” என்றான். தை அவன் சொல்லி முடிக்க முக்கால் நாழிகைக்கு மேல் பிடித்தது. 

ராமாயிக்கு இதைக் கேட்டதும் அளவு கடந்த துக்கம் ஏற்பட்டது. அவளுக்குத் தெரியும், இம்மாதிரி சக்கிலியாட்கள் இம்மாதிரிதான், சாவு நேர்ந்தாலும், சீக்கிரத்தில் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். இதுதான் அவர்கள் வழக்கம். வேறு யாராவது பாத்தியப்படாதவர்களிடமா யிருந்தால், ‘அங்கே ஒரு பெரிய காரியமாப் போச்சுங்க’ என்று பளிச்சென்று சொல்லி விடுவார்கள். “இந்தப் பத்து நாளா பல்லி சொன்னது சரியாப் போச்சு” என்று ராமாயி பிரலாபிக்கலானாள். சின்னப்பன் அதறாமல், “ஏண்டா அப்படியொன்றும் பயமில்லையே? போகிற வரை பேச்சு இருக்குமல்ல?” என்றான். 

சக்கிலி பேசவில்லை. அவன் விழியும் மௌனமும், ‘போய் வெகு நேரம் ஆகிவிட்டது’ என்பதைத் தெரிவித்தது. 

“ஏண்டாப்பா உசுரு இருந்தா சக்கிலியாள் விடுவாங்களா?” என்று கேட்டுக் கொண்டே சின்னப்பனின் பெரியப்பா வந்தார். 

“புறப்பட வேண்டியதுதான். இதோ சங்கதி தெரிவிக்கிறேன். காடு கரையிலிருப்பவர்கள் வந்து சேரக் கொஞ்சம் நேரமாகுமல்ல?” என்றார் பெரியவர். 

அவர் சொல்வதும் செய்வதும் சரியாக இருக்கும். அரை நொடியில் அங்கு, இங்கிருந்த யாவருக்கும் செய்தியைப் பரப்பி விட்டார். அதைக் காதில் கேட்டதும் சின்னப்பனின் நெருங்கிய பந்துக்கள் புறப்படத் தயாரானார்கள். 

முதலில் நாகம்மாளும் தங்களுடன் வருவது உசிதமென நினைத்தான். ஆனால் வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டாமா? 

ஆகையால் நாகம்மாளிடம், “நீங்க வீட்டைப் பாத்துக் கொள்ளுங்க. அவள் அங்கிருப்பதானாலும் நான் சீக்கிரமாக வந்து விடுகிறேன்” என்று முத்தாயாளை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு புறப்பட்டான். 

இந்த மாதிரி சமயங்களில் குரோதம் மறைவது சகஜந்தானே. 

“நீங்கள் வேணுமானாலும் இருந்து வாங்க, அதற்கென்ன?” என்றாள் நாகம்மாள். அவள் என்ன நினைத்துச் சொன்னாளோ நமக்குத் தெரியாது. ஆண்களும், பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேருக்குப் புறப்பட்டார்கள். ராமாயி ‘போய் வருகிறேன்’ என்று நாகம்மாளிடம் சொல்லவும் மறந்து விட்டாள். ஆனால் நாகம்மாள் அவைகள் ஒன்றையும் லட்சியம் செய்யவில்லை. ‘நல்ல சமயத்தில் இருவரும் போனார்கள். பொறுங்கள், உங்களைத் தொலைத்து விடுகிறேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

– தொடரும்…

– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *