நல்லதோர் வீணை செய்தே
அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர் ஒளிக் கிரீடம் தரித்த வானத்துத் தேவதை போல் என்றோ ஒரு யுகத்திற்கு முன்னால் வாழ்ந்து சிறந்து சந்தோஷக் களை கட்டி நின்றதெல்லாம் நம்பவே முடியாத வெறும் பகற் கனவு போலாகி விட்டிருந்தது.. சத்தியத்தையே உயிர் மூச்சாக நம்புகின்ற, வேத சாரமான வாழ்க்கையின் நெறி முறைகளுக்கெல்லாம் ஓர் ஆதர்ஸ நாயகன் போல் வாழ்ந்து காட்டிய, அப்பாவை நினைக்கும் போதெல்லாம் அவள் உடல் சிலிர்த்து மெய் மறந்து போகிற தருணமே இப்போது பற்றியெரிகிற பாவ வாழ்க்கையிலிருந்து அவளைக் காப்பாற்றும் ஒரு தேவ வரம் போலானது.
அவளைச் சுற்றிச் சூழ்ந்து வருத்துகின்ற இந்தப் பாவப்பட்ட வாழ்க்கையின் இன்பங்கள் முற்றாகவே பறி போன நிலைமையில் தன் நிழல் கூடக் கறை தின்று உயிர் விட்டுக் கிடப்பதாக அவள் உணர்வதுண்டு. அப்பாவின் சத்திய இருப்புகளே உயிராக வாழ்ந்த நிஜ தரிசனமான வாழ்க்கையின் ஒளிச் சுவடுகள் காணாத துருப்பிடித்துச் சோரம் போய் விட்ட, வெறும் நிழற் பொம்மை போல இப்போது அவள்.. இந்தச் சாருமதி.. சாரு என்று சுருக்கமாக அவளை அழைப்பார்கள்.
அவள் பிறந்து வாழ்ந்து ஒளிச் சுவடுகள் கண்ட பெருமிதக் களை மாறாமல் நின்று நிலைத்ததெல்லாம் அந்த ஏழாலை மண்ணோடுதான் . அங்கு அப்பாவினுடைய நிழலில் இருக்கும் வரை, அவளுக்கொரு குறையும் இருந்ததில்லை. . அப்பா ஒரு சாதாரண உபாத்தியாராக இருந்தாலும் வாழ்வின் நெருடல்களற்ற, தளும்பல்களற்ற, துன்பச் சுவடுகளேதுமறியாத , சுகப் பொழுதுகளையே கொண்டிருந்த அவளின் வாழ்க்கைப் பயணம் கல்யாணக் காட்சி கண்ட பின் இப்படிச் சிறகொடிந்து திசை மாறிப் போகுமென்று கண்டாளா, என்ன?
காலச் சிற்பி செதுக்கிய நல்லதோர் வீணை மாதிரி அவள். அபஸ்வரம் தட்டாத அவளின் உயிர் நாதம், , அதை மீட்டி மீட்டிச் சுருதி சேர்த்து நல்லபடியாகத் தன்னை வாழ வைத்து வளம் சேர்க்க ஒரு யோக புருஷனே வானிலிருந்து இறங்கி வருவானென்று அவள்
காத்திருந்ததற்கு மாறாக, அவளின் சிறகுகளைப் பிடுங்கித் தீயிலிட்டு அவளை உயிருடன் கொன்று சமாதி வைக்கவே இப்படியொரு
கல்யாணக் காட்சி நாடகம் அவளுக்கு. அந்த நாடகத்தின் சூத்திரதாரியான நரேந்திரன் ,, தனி மனித சமூக விழுமியங்களோடு ஒட்டாத ஒரு புறம் போக்குத் தனிமனிதன் அவன் அப்பழுக்கற்ற மனித நேயத்துடன் , பிற உயிர்களை நேசிக்க முன் வராத, அன்பு விழுக்காடு கண்ட ஒரு மிகப் பெரிய சுயநலவாதி, என்பதைச் சாரு கழுத்தில் தாலி ஏறிய சில நாட்களிலேயே ஒரு கசப்பான உண்மையாகப், புரிந்து கொள்ள நேர்ந்தது
அவளுக்கு அவனோடு நேர்ந்த அந்தக் கல்யாண உறவு அவனது குறுகிய குடும்ப வட்டத்தினுள் திரிந்து போன வெறும் நிழற் சங்கதியாகவே , அவளைக் காவு கொண்டு அலைக்கழித்தது.. அவன் அவளை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக என்றைக்குமே மதித்ததில்லை ,தனது மிருக வெறி கொண்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் ,தன் காலடிக்கு வந்து சேர்ந்த, ஒரு மனிதப் புழுவாகவே அவளை அவன் கருதினான். அவ்வளவு வெறுப்பு அவனுக்கு அவள் மீது . அவளின் நிலைமை வேறு அவனுக்கு மிகவும் மாறுபட்ட உத்தம குணாம்சங்களோடு, தனது நெருடல்களற்ற பழைய வாழ்க்கையையே துச்சமென உதறித் தள்ளி விட்டு அவன் காலடியையே உலகமென நம்பி வந்த அவளை முற்றாகவே கருவறுத்து, உயிருடன் கொன்று புதைக்கவே அவளுக்கு இப்படியொரு பலி பீடம்/.. எனினும் திருமண பந்தமென்ற புனித உறவின் நிமித்தம் அவனால் நிராகரிக்கப்பட்டுத் துன்புற்ற போதிலும், அவள் நீண்ட காலமாகப் பொறுமை காத்து வந்தது ஒரு சகாப்த காவியமாக ஒளி கொண்டு மிளிர்வதை, அவன் கண்டு கொள்ளாதது மட்டுமல்ல அவனைச் சார்ந்த உறவு மனிதார்களுக்கும் அவள் ஒரு வேண்டாத விருந்தாளிதான். அவர்களுடய உலகம் வேறு . வந்தேறு குடிகளான அவர்களுக்குப் பூர்வீகம் வேலணை என்று அவள் அறிந்த போதிலும் அவனுடைய தகப்பன் வேலாயுதம் பற்றி அவள் எதையுமே அறியாமல் போனதுதான் மிகப் பெரிய ஒரு பாவச் சறுக்கல். ஒட்டுமொத்த பாவங்களின் முழு வெளிப்பாடுமாய் அவரின் இருப்புகள், குரூர சங்கதிகளிலேயே நிழல் வெறித்துக் கிடப்பதாய் அவளுக்குப் படும்.. அது
நிழலல்ல. இருள். அவளை முழுமையாகவே பலி கொள்ள வந்த அவளுடைய அந்தப் பின் சரிவான வாழ்க்கையுகத்தின் இருள்.
அவனுக்கு அப்போது வேலை யாழ்ப்பாணம் கச்சேரியில். கல்யாணத்திற்கு முன்பு கொழும்பிலே இருந்தவன், அவளை மணமுடித்த கையோடு தன் குடும்பத்தில் ஒருவனாக அவனுடைய அந்தப் பிரவேசம் பெரிய மனதுடன் அவளை ஒளிப்பீடத்தில் ஏற்றி வாழ வைக்கவல்ல.. .தன் உறவு சார்ந்த மனிதர்களின் தவறான வழி நடத்தலின் பலனாய் அவளை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக இனம் கண்டு கொள்ளத் தவறிய அறிவு தெளிவற்ற அவனின் அவளைப் பழி வாங்கத் துடிக்கும் நடத்தைக் கோளாறுகளின் விபரீத விளைவுகளுக்குள் சிக்கி அவள் தனது அந்தப் பாவப்பட்ட கல்யாண வழ்க்கையையே ஒரு பெரும் சவாலாக எதிர் கொண்டு உடைந்து நொறுங்கிப் போன மனசுடன் நிர்க்கதியாக நின்றிருந்த சமயம்., அம்மா ஒரு நாள், அவளைக் குசலம் விசாரித்துச் சுகம் அறிந்து போக அந்த வீட்டின் படியேறி உள்ளே நுழைந்த போது அவளை முகம் மலர்ந்து வரவேற்கக்கூட முடியாமல் சாரு சமைந்து போய் நிலை குலைந்து நின்று கொண்டிருந்தாள். அவ் வீட்டில் ஒருவர் கூட அம்மாவைக் கண்டு கொள்ளாதது அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.. ஒரு சூனியக்காரியையே நேரில் கண்டு விட்டது போல் முகம் சுழித்துக் கொண்டு திரை மறைவில் போய் நின்றபடி அவர்களெல்லாம் சேர்ந்து அம்மா மீது வசை பாடும் அந்த இரகசியக் குரல் அவளுக்கு ஒரு புதிய செய்தியல்ல. நரேந்திரன் கூட அப்போது வீட்டில் தான் இருந்தான் நல்லவர்களை அப்படிக் குறி வைத்துத் தாக்குவதையே தனது வம்சப் பெருமையாய் கருதி ஒளி விட்டுச் சிரிக்கிற பாவனையில் வீட்டின் பின் கோடித் திரை மறைவில் அவன் முகம் களையிழந்து, நிழலாக வெறித்துக் கிடந்தது.
அவளுக்குத் தெரியும் . அன்று ஞாயிறு விடுமுறை நாளாதலால் அவனின் மந்தமான அர்த்தமிழந்த பொழுதுகள் இவ்வாறான நிழற் சங்கதிகளிலேயே துருப் பிடித்துக் கரைந்து போகும்… அவளை மட்டுமல்ல, அவளைப் பெற்றெடுத்த குற்றத்திற்காக அம்மாவையும் சேர்த்து அவனோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர்கள் தண்டிக்க முற்படுகிறதைக் கூட ஜீரணித்துப் போக நேர்ந்த தன் பாழாய்ப் போன பாவப்பட்ட தலை விதியை எண்ணி ஆறாத மனத் துயரத்துடன் அவள்
கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த போது அவளை ஆசுவாசப்படுத்தி, அன்பாக அரவணைத்து அம்மா சொன்னாள்.
“அழாதை சாரு . இப்ப வயிற்றிலை பிள்ளை வேறு. . நீ சந்தோஷமாய் இருக்க வேணும் நான் போய் ஆச்சியோடை கதைச்சுப் பாக்கிறன் .
அவ சொன்னால் உனக்கு விடிவு கிடைக்கும் . நீ பிள்ளை பிறக்கிற நேரத்திலை எங்களோடு இருக்கலாம் தானே”
அவள் விரக்தியாகச் சிரித்து விட்டுக் கேட்டாள்.
“ஆர் இந்த ஆச்சி? சிங்கப்பூரிலிருந்து இறக்கை கட்டிப் பறந்து வந்த தேவதையா அவ? மாமாவுக்கும் அவவுக்கும் என்ன உறவு ? சீ மாமா என்று சொல்லவே நாக்கூசுது. போய் வாயைக் கழுவி விட்டு வாறன் இது எனக்கு இரண்டாவது வயிற்றுச் சுமை . முதல் ஒரு பெடியன் அதோ இது நரகம் என்று பிடிபடாமல் முற்றத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறானே , இந்தப் புகையிலை நாத்தத்துக்குள்ளையிருந்து , அவனும் சாக வேணுமே? இதெல்லம் ஆருக்காக? சொல்லுங்கோ”
“அதை நீதான் சொல்ல வேணும்”
“அம்மா என்ன சொல்லுறியள்? இது நான் தேடிக் கொண்ட வாழ்க்கயல்லவே, எல்லாம் நீங்கள் போட்ட கணக்குத் தானே”
“ இது இப்படிப் பிழைச்சுப் போகுமென்று ஆர் கண்டது?
“சரி விடுங்கோவம்மா. நடக்கிறதை யோசிப்பம் . நீங்கள் போய் ஆச்சியோடை கதைச்சுப் பாருங்கோ, அவவைப் பார்க்க நீராவியடிக்கல்லே போக வேணும்.. ஏலுமேயம்மா?
அம்மா தலயாட்டினாள் பேரன் சுதன் இன்னும் முற்றத்திலேயே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தன்னைச் சுற்றி ஒரு கறுப்பு உலகம் இருப்பதையே அறியாதவனாய் , என்னவொரு சந்தோஷ ஒளி வட்டம் .அவனைச் சுற்றி… .சாருவும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தாள்.
இனி அது இந்த ஜென்மத்திற்குத் திரும்பாது என்று தோன்றியது அதற்காக அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் ஆவேசம் வந்தது. எனினும் அவள் அழவில்லை. அவளை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறவன் அதோ நிற்கிறான்.. . அவள் அழுதால் தான் அவன் முகம் களை கொள்ளும்… அவன் அப்படி வெற்றி விழாக் கொண்டாடத் தான்
அழுது தீர்க்க வேண்டிய அவசியம் மனதை உறைய வைக்கும் ஒரு சோகச் செய்தியாய் அவளுக்குப் புரிந்தது.
அம்மா போய் வெகு நேரமாகி விட்டது நேராக ஆச்சி வீட்டிற்கே போயிருப்பாள். வெள்ளைச் சேலை கட்டுகிற ஆச்சி… வேலாயுதம் சைக்கிளை எடுத்துக் கொண்டு அடிக்கடி அவ வீட்டிற்குப் போய் வருவார்
அவவோடு அப்படியொரு நெருக்கம் சுருட்டுத் தொழில் செய்கிற கஷ்ட ஜீவனம் அவருக்கு.. ஒன்பது பிள்ளைகள். இதிலே தலை மகன் நரேந்திரன் அவன் தோளில் பெரும் சுமைகள். உடன் பிறப்புகளே அவனுடைய ஒர் ஆதர்ஸ இலக்கு… அவர்களுக்காக அவன் எப்படியும் தீக்குளிக்கத் தயாராகி விட்ட நிலையிலும் மனவியின் பொருட்டோ பிள்ளைகளின் பொருட்டோ, அவன் எவ்வித தியாக இழப்புகளுக்கும் முகம் கொடுக்க விரும்பாமல் அன்புக் கடல் அடியோடு வற்றி உலர்ந்துவிட்ட, ஒரு மந்தமான போக்கிலேயே சாருவுடன் அவனுடைய அந்த இல்லற வேள்வி துருப்பிடித்துக் கிடந்தது.
அவனுடன் உறவு கொண்டு இறுகிப் போன தன்னுடைய அந்தக் கால் விலங்கை எப்படியும் உடைத்தே தீர வேண்டுமென்ற தனது பெண்ணியம் சார்பான தார்மீக சினம் என்றைக்குமே அவளுள் கிளர்ந்தெழுந்ததில்லை. அவள் அப்படி இருக்கக் கூடியவளுமல்ல
அம்மா வந்து போன அன்று மாலையே அவள் வாழ்க்கையில் திடுமென ஒரு மாற்றம் நேர்ந்தது.. அந்தச் சின்னஞ் சிறு வீட்டில் குப்பென முகத்தில் அடிக்கும் புகையிலை நாற்றத்தை உள் வாங்கி மூச்சுத் திணறியபடி அவளும் சுதன் என்ற அந்தச் சின்னப் பையனும் எவ்வளவு நாளைக்கென்றுதான் இந்தத் துன்பமயமான நரகச் சிறையிலிருந்து , வருந்தி அழுது கொண்டிருக்க முடியும்? அவளுக்கு அது சிறை என்று பட்டாலும் சுதனென்ற அந்தப் பச்சிளம் பாலகனைப் பொறுத்தவரை அது சாத்தான்கள் குடியிருக்கும் நரக வீடு என்பதை
அறிவு பூர்வமாய்க் கிரகித்து அறிந்து கொள்ளுமளவுக்கு அவன் இன்னும் வளரவில்லை.. காலம் அதை அவனுக்கு உணர்த்தும் .
அன்று மாலை வேலாயுதம் ஆச்சி வீட்டிற்குப் போய் வந்த பிறகு நரேந்திரன் அவளிடம் வந்து கூறினான்.
“ஓட்டோ பிடிச்சுக் கொண்டு வாறன். வெளிக்கிட்டு நில்லும்”
“எங்கை போறதுக்கு?”
“கொம்மா வீட்டுக்குத் தான்”
அவளுக்கு அது ஒரு நம்பவே முடியாத வெறும் கனவு போல் பட்டது வேலாயுதம் இவ்வளவு சீக்கிரத்தில் மனம் மாறுவாரென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளின் பிறந்த வீட்டுத் தொடர்பையே அடியோடு வேரறுந்து போக வைத்து , நரேந்தினை அவளுக்கெதிராகத் தூண்டிச் சதி செய்து வந்த அவரா, இன்று இப்படி அவளைப் பிறந்த வீட்டிற்கு வழி அனுப்பி வைக்க முன் வந்திருக்கிறார். ஆச்சி என்ன சொன்னாலும் அது அவருக்கு வேதம் தான் என்பது ஒரு புதிய செய்தியாய் அவள் நெஞ்சைக் குளிர வைத்தது.. எப்படியாவது போகட்டும் இதிலே சுதன் தான் கூடச் சந்தோஷப்படப் போகின்றான் இனி நாற்றமடிக்கும் புகையிலை வாசமில்லை. அம்மா வீட்டில் அவனுக்காக ஒரு புதிய உலகம் காத்திருக்கிறது.. நல்லோர் சகவாசத்தினால் அவனும் புடம் போடப்பட்டு ஒரு நற் பிரஜையாக வரவும் வாய்ப்பிருக்கிறது .. அது தான் எல்லாச் சிறப்புகளையும் விட முக்கியம். அவளுக்குப் பெரிய சந்தோஷ வானமே கைக்குள் வந்து விட்ட மாதிரி, வெகுவாகப் பூரித்துப் போயிருந்தாள்.
நரேந்திரன் அவர்களை ஓட்டோவில் அழைத்துக் கொண்டுபோய் , அவள் பிறந்த வீட்டில் இறக்கி விட்டு விட்டு, ஒரு நிமிடம் கூட அங்கு கால் தரித்து நிற்காது வந்த வேகத்திலேயே திரும்பிப் போனது அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவளுடன் மனம் ஒன்றுபட்டு வாழ முடியாமல் போன அவனுடைய அந்த உயிர் விட்டுப் போன புறம் போக்கு நிலைமையின் பொருட்டுத் தானே கழுவாய் சுமந்து வருந்தி நிற்பதாக அவளுக்கு உறைத்தது இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக
சுதனை ஒரு நற் பிரஜையாக வளர்த்தெடுக்க வேண்டிய தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக அவள் முழு மனதோடு நம்பினாள்.
சுதனுக்கு அந்த வீட்டுத் தெய்வீகச் சூழல் ஒரு மெய் மறந்த சுகானுபவமாக இருந்தது .அவன் ஓடியாடி விளையாட வீட்டைச் சுற்றிப்
பென்னம் பெரிய வளவு.. விசாலமான முற்றம்.. அது மட்டுமல்ல வாய்க்கு ருசியான சாப்பாடு, தின்பண்டங்கள்…. அம்மம்மா சமைத்துத் தரும் இடியப்பம் சொதி. . சுதனுக்கு இந்த மாற்றங்களினால் தலை கால் புரியாத மகிழ்ச்சி. வெள்ளம். சிரிப்பும் களிப்புமாகப் பரவசம் கொண்டு அவன் தன்னை மறந்து துள்ளித் திரிந்த வேளை.
மறுநாள் அதிகாலை எதிர்பாராத விதமாக அவனைத் தோள் கொண்டு தூக்கி அபகரித்துச் செல்லச் சாத்தானே நேரில் அவதாரம் கொண்டு புறப்பட்டு வந்தது போல நரேந்திரன் அவசரமாகப் படலை திறந்து உள்ளே வந்து சேர்ந்த அந்த ஒரு கணம், சாருவை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது.
அவள் அப்போது அறைக் கதவின் நிலை வாசலருகே அமர்ந்திருந்தாள். உள்ளே வந்து சேர்ந்த நரேந்திரன் அவளிடம் கேட்ட முதற் கேள்வி
“ சுதன் எங்கை ?”
“ ஏன் கேட்கிறியள்?”
“அவனை இஞ்சை விட நான் விரும்பேலை“
“அது தான் ஏன் என்று கேக்கிறன்?”
“அப்படி விட்டால் பிள்ளை பழுதாய்ப் போடுமாம்”
“ஆர் சொன்னது?”
“ஆரும் சொல்லேலை நான் எடுத்த முடிவுதான்” எங்கை அவன்?”
“நித்திரையாலை இன்னும் எழும்பேலை”
“அதனாலென்ன கெதியிலை எழுப்பி வெளிக்கிடுத்திக் கூட்டிக் கொண்டு வா. நான் போக வேணும்”
அவள் எதுவும் பேச வராமல் வாயடைத்துப் போய் மெளனமாக இருந்தாள் அவன் மூர்க்கம் கொண்டு அவளின் உணர்ச்சிகளோடு மோதுவது இதுதான் முதல் தடவையல்ல கல்யாணமான நாளிலிருந்து அவளின் பங்கமுறாத உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறிய, அவனின் இந்த மன வக்கிரத்தினால் அவள் பட்ட காயங்கள் ஏராளம் அதை மேலும் ரண களமாக்கிக் கிளறி விடுகிற மாதிரியே இப்போதைய அவனுடைய செயலும் அவளைத் தீக்குளிக்க வைத்து அழ விட்டிருக்கிறது . அவன் ஒன்றும் பாசத்துக்காக ஏங்கிச் சுதனைத் தூக்கிப் போக இங்கு வரவில்லை.
மாறாக அவளை அழ வைக்கும் பொருட்டே அவனுடைய இந்தப் பிரவேசம். . காலம் முழுவதும் அவள் கண்ணீர்க்கடல் குளித்தெழ வேண்டுமென்பதே, அவனுடைய அந்தத் தீராத மனக் கோபம்..
அது மூண்டு பற்றியெரியும் ஒரு வெறிமாதிரி அவனை ஆட்டுவிக்கிறது. இப்படி வெறி கொண்டு மோதுகிறவனிடம் சரணாகதி அடைய நேர்ந்த தன்னுடைய பலவீனமான பெண்மை நிலை குறித்து வருந்தி அழுத வண்ணம் அவள் சுதனை எழுப்பித் தயார்படுத்தி அறையை விட்டு வெளியேறி வரும்போது வாசலில் அப்பாவுடன் கூட்டுச் சேர்ந்து அம்மா கண் கலங்கியவாறு அதை எதிர் கொண்டு நிற்பது, மங்கலான ஒரு காட்சி வெறுமை போல் சாருவின் கண்களை எரித்தது.
உணர்ச்சிகள் சாகடிக்கப்பட்ட வெறும் நடைப்பிணம் போல, சுதனை அவனிடம் ஒப்படைத்து விட்டு அவள் மெளனமாக இருள் வெறித்து அவர்களைக் கடந்து போக முற்படும்போது அவளை இடை நிறுத்தி அப்பா தாங்க முடயாத துயரத்துடன் குரலை உயர்த்திக் கேட்டார்
“ என்ன சாரு? பேசாமல் போறாய்.. நீயும் இதுக்கு உடன்பாடே?”
“அப்பா என்ரை மன வலி தெரியாமல் இதென்ன கேள்வி? சுதனைப் பற்றி நான் என்னவெல்லாம் கனவு கண்டன். . உங்கடை சகவாசம் அவனையும் ஒரு பெரிய மனிசனாக்கும் என்று நம்பி மோசம் போய் விட்டேனே. இனி அவன் கதி என்ன? எனக்கு நெஞ்சு கொதிக்குது”
“இதை ஏன் நீ அவனோடு கதைக்கேலை”
“இதைக் கேக்கிற நிலைமையா அவருக்கு… அவர் நினைப்பு வேறு.
. . எப்படியாவது நாங்கள் ஒழிஞ்சால் போதுமென்பதே அவர் நினைப்பு.”
“சீ இப்படியும் ஒரு மனிசனா? உன்னைக் கொண்டு போய் அவனிடம் சேர்த்த எங்கடை புத்திப் பிழைதான் இது. என்னவொரு மென்மையான மனம் உனக்கு.. ஆரையும் புண்படுத்தி அறியாத, உன்ரை வெள்ளை மனசுக்கு இப்படியொரு கதியா? இப்படியெல்லாம் உன்னை நோகடிக்க அவனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ?:”
“அப்பா! என்னைப் பொறுத்தவரை அவருக்கு மனம் ஒன்று இருப்பதாகவே எனக்கு நம்பிக்கை வரேலை.. இந்த நம்பிக்கையே அடியோடு வரண்டு போய் , ஒரு யுகம் போன மாதிரி இருக்கு”
“
“இப்படி மனம் ஒழிஞ்சு போனவனோடு காலம் முழுக்க நீ எப்படித் தான் வாழப்போறியோ> நல்லதோர் வீணை மாதிரியல்லோ நீ எவ்வளவு சிறப்பாக வாழ வேண்டிய உனக்கா இந்தக் கதி?”
“கறைபடாத சத்திய வாழ்க்கையின் புனிதப் பெருமைகளயே உயிரென நம்பி வாழ்ந்த தன்னை,, ஒரு வீணை போல் இருந்தவளை, இப்படிப் புழுதியிலே தூக்கி விட்டெறிந்த புண்ணிய கைங்கரியம் உங்களுடையது தான்” என்று சொல்ல ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை” தலைக்கு மேல் தீமைகளே சூழ்ந்த, பாவ நெருப்பு வந்து பற்றியெரிந்தாலும், அவள் நிலை இது தான். , அவள் வாய் திறந்து சொல்வது உயிர்களை வருந்தி அழ வைக்காத , அன்பு வேதம் மட்டும் தான்..”.
wonderful
அன்புள்ள முத்துக்குமார் அறிவது
வணக்கம் . நல்லதோர் வீணை என்ற என் கதை பற்றிப் பாராட்டி எழுதியதற்கு எனது இதயபூர்வமான நன்றிகள்
ஆனந்தி
அன்புள்ள இணைய தள ஆசிரியர் அறிவது,
வணக்கம் . எனது கதைகள் தொடர்ச்சியாகத் தங்களின் இணைய தளத்தில் பிரசுரமாவது கண்டு, பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் வாசகர்கள் மத்தியில் அதற்குக் கிடைத்து வரும் அமோக ஆதரவு என்னைப் பிரமிக்க வைக்கிறது இப்படியொரு வெற்றியைத் தந்து எனது படைப்புகளுக்குப் பெருமை சேர்த்த தங்களின் அன்பான ஆதரவுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து விடை பெறுகின்றேன்.