நரகத்திலிருந்து…
(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்நாவலில் சஞ்சரிக்கின்ற கதாபாத்திரங்கள் நாம் பூணாதவர்கள், குறிப்பிட்ட ஒரு களமும் இல்லாவர்கள். இவர்களை நீங்கள் உலகம் என்ற களத்தில் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தரிசிக்கலாம். இந்த மனிதாற்றுமாக்களை எவ்வகையில் நீங்கள் பார்க்க அணுக அனுபவிக்க விரும்புகிறீர்களோ அவ்வகைக்கேற்ற நாமங்களைச் சூட்டியுங்கொள்ளலாம். என்றைக்கோ, எப்போதோ, எங்கேயோ தொடக்கம் இந்தத் தேசத்தின் மூலை முடுக்குகளிலிருந்து இன்றும் உழலும் மனிதர்கள் உலகளாவக்கிளர்ந்து குமுறும் அபயக் குரல்களைச் சற்றுச் செவிமடுப்பீர்களாயின், இங்கு ஒரு மானிட தர்மத்தைக் காண்பீர்கள். மதியூகம் இதற்குத் தேவையில்லை. மனித நேசம் உள்ளவர்கள் முகம் சுழித்தோ, அசூசைப்பட்டோ விலகிச் செல்லாமல், நரகத்தில் பரதவிக்கின்ற இந்த மனிதர்களைத் தரிசிப்பீர்களாக. – எஸ்.ஏ.
1
மலைப் பிரதேசங்களில் பனி மூடம் கவிந்துகொள்ள நரம்புகள் குல்லிடுகிறசாடை மேனிகளில் குளிர் அப்பிக் கொண்டது.
நெடுநேரமாக உடல் கொடுகி விறைக்கும் வரை வெளியே நின்று ஆவலோடு பார்த்துவிட்டு அவளும் சலிப்போடு குடிசைக்குத் திரும்பினாள்.
சின்னஞ்சிறுவர்கள் குழந்தைகள் போடும் கூச்சல் காற்றினோசையோடு சங்கமித்துக்கொண்டது.
மலையடிவாரங்களுக்குள் பொழுது உறைந்து பூமியில் இருள் மண்டிவிட்டது.
அவள் மனசு இன்று பிரளயப்படுகிறது.
நேற்றுத்தான் புதுசாக வேறு ஒரு வெள்ளை ஜடமேனியன் பெரும் பகட்டாக வந்து போனான். இவனும் பரவாயில்லை. இன்றும் வருவதாகச் சொன்னான். குளித்துவிட்டு வேறு இருக்கச் சொன்னான்.
சுத்தமாக இருக்கிறாள்.
அவன் சொன்னபடி வரவில்லை, வருவதான சுவடும் இல்லை.
மாய்ச்சல்தான். வழி மேல் விழி வைத்து வைத்த விழியும் இவளுக்கு நோகிறது. என்றபோதும், ஏக்கமாக எட்டி எட்டிப் பார்க்கிறாள்.
இன்னும் வரக் காணோம்.
ஏமாற்றுவானோ?
பசியில் கதறிக் கூச்சலிடுகின்ற குழந்தைக் கணங்களுக்கு இப்போ இவளால் வகை சொல்ல வக்கில்லை. நாதியில்லை. வருவாயில்லை. வருவேன் என்றவனும் வரவில்லை.
வெட்கங்கெட்ட உறவு என அவள் மனசுள் புழுங்கி அழுந்தினும், அந்த உறவு அப்படி ஒரு தொடர்பு கொள்ளாவிடின், அவளின் வயிற்றுக்கொதி ஆற மார்க்கமில்லை.
வெள்ளை ஜட நாயகர்களின் தயவுக்குள்ளான நிலையை ஒரு விதியாக ஏற்று உழல்கின்ற ஆற்றுமாக்களில் இந்த இவளும் ஒருத்தியாக, இவள் சார்ந்த பிறவிகளும் ஒவ்வொருவராக அப்படி அமைந்துவிட்ட தங்கள் வாழ்க்கை எந்த முகாமின் நுகத்தடியில் மாட்டப்பட்டிருக்கிறது என்பதைப் புரியாதவர்களாக புரிந்தாலும் அதனை நிராகரிக்க தகர்க்கத் திராணியோ வழிவகைகளோ தெரியாதவர்களாக….
இன்றும் இப்பவும் அப்படி…….
அந்தச் சிறு குறுங்குடிசைகளில் அவர்கள் போடும் கூச்சல்கள் மாயும் மாய்ச்சல்கள்….
அவர்களுள் இவளும் ஒருத்தியாக உழல்கிறாள்.
மரத்துப் போன வாழ்க்கை செல்லரித்துப்போன சீவியம்.
வருவதாகச் சொல்லிவிட்டுப் போனானே, ஒரு வேளை அவனும் வேறு இட மேய்ச்சல்காரனோ? அல்லது இவளைக் காட்டிலும் வனப்பான அழகு சௌந்தர்ய ரூபவதி இளசாகக் கிடைத்தர்ளோ?
அப்படியும் இருக்காது. இந்தப் பிரதேசம் காளைகள் மிதித்து மேய்ந்து சதுப்பாகிவிட்ட நிலம். இது தவிர வேறு இல்லை. அதிலும் ஒரு சம நிலையான அழகு காம்பீரியம் லாவண்யம். இப்படி அவள் அவளை மாறி மற்றும் அவள். ஒருவளுக்கு ஒருவள் தெரியாமல் சொல்லிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டு தங்கள் அந்தரங்க நினைவுகளை மனசில் தேக்கிக்கொள்வதில் சுயதிருப்தி காணினும், ஈற்றில் எழும் வெப்பிசாரத்தில் கண்ணீர் வெதும்பிக்கொள்ளும் முகம் உப்பிப்போகிற வரை கண்ணீர் படிந்து அயறு படர்ந்து கொள்ளும்.
அந்த ஜனநாயக வெள்ளை ஜட ஜாம்பவான்களில் வந்தவன் வருகிறவன் எவனுமே சேற்றில் விழுந்து குளத்தில் கழுவுகிறவனாகிறானே தவிர, கொஞ்சம் தரித்திருந்து அனுபவிக்கிறவனாக அவளுக்கோ அவளையொத்த மற்றவள்களுக்கோ எப்பனும் புலனாகவில்லை.
இந்த ஜீவாற்றுமாக்களின் இதயங்களை அந்தச் சுதந்திர ஜீவிகளின் மேனாண்மைத் தனம் அடிமைப்படுத்திக் கூத்தாடுகின்ற பாங்காகவே அவளுக்களுக்குப் படுகிறது.
சிந்திக்கிறபோது அவளின் மனத்திரை நீக்கப்படுகிறது.
அந்த வெள்ளை ஜட நாயகர்கள் போடும் கூச்சல்கள் விசிலடிப்புகள் மலையடிவாரங்களை ஊடறுத்துக் கொண்டு வந்து காதுகளை நெருடுகின்றன.
பட்டிகளிலிருந்து கட்டவிழ்த்த செம்மறிப் புருவைகள் போல் அந்த ஜாம்பவான்கள் முகாம்களின் விடுதிகளிலிருந்து காலை மாலை நேரங்களில் வெளியேறுவார்கள்.
கரடுமுரடான அந்தப் பிரதேச வீதிகளில் குதிரை லாடன் கொண்ட அவர்களின் பூட்ஸ் கால்கள் லயம் தவறாது ஒலித்துக்கொள்ளும்.
‘லெவ்ற், றைற்’ என்ற மொமாண்டிங்’ சத்தம் அவர்கள் நடைபவனியோடு கேட்ட மாத்திரத்தில் இவர்களும் இவர்களின் சின்னஞ்சிறு வட்டன்களும் கூட்டமாக ஒளித்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
ஓய்வு நேரப்பொழுது களியாட்டங்களுக்காகவென்று ஆகிவிட்டது.
அன்றும் வழக்கம்போல் அவர்கள் தங்கள் ஓய்வுப் பொழுதிலே கிளம்பிவிட்டார்கள்.
வெளியே நடைபாவும் ‘பூட்ஸ்’ பாதங்கள் லயம் பிசகாத அடி வைப்புகளாக விழுகின்றபோது, அவற்றின் சப்த ஒலிகள் இந்த இவள் காதில் நச்சரித்துக் கேட்கும்.
இன்றும் கேட்கிறது.
ஆனால், அவனைக் காணவில்லை.
இவன் வேறு ஆசாமியாக இருக்கலாம்.
2
மலையடிவாரங்களில் குச்சுவீதிகளில் அவர்கள் லாடன் பூட்ஸ் பாதங்கள் போடும் எதிரொலிகள் நிலமதிர்ந்து, பரதேசிகளாக ஜீவிக்கின்ற மனிதர்களுக்கு நைந்துபோன ஊனிப்பான மனிதர்களுக்கு நன்றாகக் கேட்கின்றன.
குளிர் சூழ்ந்து பனி மூடமான அந்தப் பனிப் பிரதேசங்கள், கம்பளிகளுக்குள் குடங்கித் தூங்கும் இந்த வெள்ளை ஜட நாயகர்களுக்கு என்னமோ குஷியாகவே இருக்கின்றன.
அவர்கள் இந்த மலைப் பிரதேசங்களில் இருந்து விடுகாலிகளாக அன்றாடம் சஞ்சரிப்பதுபோலவே இன்றும் அவர்கள் தாங்கள் அடைபட்டுக் கிடக்கின்ற முகாம்களை விட்டு விடுதிகளைவிட்டு அசுமாற்றம் தெரியாமல் வெளியேறி, அந்த மலையகத்துப் பிரதேசங்கள் மீது மீளாக் கண்கள் வைத்தபடி, ஓயாமல் அலைந்து கொண்டும் குதறிப்பாய்ந்து கொண்டும் திரிகின்றார்கள்.
ஜனநாயக சுதந்திர ஜீவிகளான அவர்களின் ஏகாந்த மேய்ச்சல் நாள் தோறும் இதே வித வழக்கமாகிவிட்டது.
தேசப் பாதுகாவலர்களின் நடமாட்டம் ஆரம்பித்து விட்டது…. அரவம் கேட்ட நாய்கள் குக்கிராமத்து லயங்கள் தோறும் அம்மாறு போட்டுக் குரைக்கின்றன, ஊழையிடுகின்றன, ஈற்றில் சிணுங்கி அனுங்குகின்றன.
தங்கள் ஜீவிதத்தை எங்கோ ஒப்படைத்தவர்களாக லயங்களில் அடைந்து குறாவிக் கிடக்கின்ற அந்த மனிதர்கள். ஆண், பெண், குழந்தை குட்டி குருமன்கள் அருண்டு விழித்துக் காது கொடுத்துக் கவனிக்கின்றார்கள்.
சற்று வேளையால் அவர்கள் நூதனக் காட்சி பார்ப்பவர்கள் போல் தத்தம் லயக் காம்பறாக்களிலிருந்து புற்றீசல்களாக கிளம்புகின்றார்கள்.
மனிதர்கள் என்ற விறுத்தத்திலே கிடந்து கூனிக் குறாவிப் போன அந்த அவர்களின் சடலங்கள் இந்த இவர்களுக்கும் நூதனப் பொருட்காட்சிபோல் தோன்றின. அவர்களின் எலும்புக் கூடுகளைக் கொண்டு ஒரு பெரிய கோபுரம் கட்டலாமாயினும், அந்த விசனம் இந்த ஜாம்பவான்களுக்கு இல்லை.
ஒவ்வொருவனும் எதையெதையோ என்னவோவெல்லாம் புரியாத பாஷையில் பேசுகிறான். கெக்கலித்துச் சிரிக்கிறார்கள்.
மனசிற்கினிய அழகு லாவண்ய சௌந்தர்ய மேனியுள்ள ஒரு பெண் ஜென்ம ஜீவனும் அவர்கள் கண்களில் தென்படுவதாயில்லை. எல்லாம் விறகுக் கட்டைகளாக…. பரட்டைத் தலைகளாக…
ஏமாற்றத்தினால் ஒருவரை ஒருவர் கமறுகின்றார்கள். ஒருவனுக்கொருவன். முஷ்டிகளால் உராய்கின்றான். ஒருத்தியென்றாலும் பதம் உள்ளவனாகத் தெரியவில்லையே,
கோரமாகப் பரவிய வறுமையின் விளைவாக அவர்களின் சடலங்கள் உண்மையில் சூம்பித்தான் போய்விட்டன. என்றாலும், அந்தச் சடலங்கள் மீதே அவர்களுக்குக் கண்.
குறிப்பாக வாலைக் குமர்ப்பெண் சடலங்கள் மீதே தாபம், தாகம், ஆசை, ஆவல், அகோரித்து எழுகின்றன.
தேச ஒற்றுமையின் பாதுகாவலர்களாகக் கடமையாற்ற வந்த இவர்களுக்கான நற்சாட்சிப் பத்திரங்கள் கண்ணியவான்கள் என்று ஏலவே தயாரிக்கப்பட்ட மாமூல் பிரகாரம், மேன்மைதங்கிய ஆதிபத்தியத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஒருபோதும் அவர்களின் கட்டுப்பாடு தவறுவதில்லை.
இவர்கள் கண்களில் காமாலை, அந்தப் பிரதேசத்தின் இயற்கை வனப்புகள் மனித ஜடம் பொருள் பண்டங்கள். விலங்குகள் பறவைகள் யாவும் பெண்கள் மயமாகவே தெரிகின்றன.
இந்த வேளைகளில் விவேகமுள்ள ஒவ்வொருவனும் அந்த மேய்ச்சலுக்காகவே தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்கிறான்.
அவனவன் அடுத்தவனுக்குப் புலனாகாதபடி தன் தன் மணிபேர்ஷை எடுத்து விரித்துப் பண நோட்டுகளைத் திணிக்கிறான். வைத்த நோட்டுகளை மீள எடுத்துக் கணக்குப் பார்த்துக்கொள்கிறான்.
பதிவிரதைகளான பத்தினிகள், கடைசி பத்துப் பேருடன் சல்லாபம் புரிகின்ற கலாசாரப்பண்பாட்டினைக் கொண்ட தமது ஜென்ம பூமிக்கும், கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன் கணவனே கண்கண்ட தெய்வம். என்கின்ற இந்த நாட்டுப் பிரதேசப் பெண்ணடிமைப் பண்பாட்டிற்கும் உள்ள பேதத்தை, ஒரு சுலோகமாகவே தெரிந்து வைத்திருக்கிறான்களேயன்றி, இந்த இவர்கள் வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர்கள் அல்லர். எனவே ஜாதி. மத குல், வர்ண பேதங்களை முற்றாகவே இழந்தவனாக ஒவ்வொருவனும் காந்தர்வ சம்சாரியாகும் விஷயத்தில் சமதர்மவாதியாக நடிக்கிறான். தன்னிச்சை தீர்ப்பதற்கே ஒவ்வொருவனுக்கும் அந்தச் சமதர்மம் தேவைப்படுகிறது. ஆனால், தேசத்தின் உலகத்தின் சமதர்ம அமைப்பு இவன்களுக்குக் கசப்பான வேப்பங்காய்.
யுத்த மேகங்களோ கவிக்கின்றன. விமானங்கள் வானமடங்க மின்னி மின்னி வெடிக்கின்றன. கவச வாகனங்கள் திடுமுடு என்று கமறி ஓடுகின்றன. இறந்து போன நாய்கள், செம்மறிகள், பசுக்கள் இவர்கள் கண்களுக்குப் பயங்கரப் பிறவிகளாகத் தெரிகின்றன.
மனிதர்களின் அபயக் குரல்கள் பூமியில் வியாபித்துக் கொண்டிருக்கின்றன.
தேசப் பாதுகாவலர்களான இவர்கள் அடிக்கடி ஓயாமல் ஜெபித்துக்கொள்கிறார்கள்.
‘சமாதானம் நிலவ அதைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்கேளாம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடுங்கள்
இந்த வீரர்கள் மனித சடலங்களின் தசைகளில் ஊறுகின்ற ஊனத்தை உறிஞ்சி விழுங்கி, அதனையே மாபெரும் சாதனையென வெற்றிக்கொடி நாட்ட, இதே ஊனமுள்ள ஜடப்பொருளான பணப் பசாசையும் மஞ்சட் பூதத்தையும் மகாவலிமைகொண்டவை என்று நம்பி ஒவ்வொருவனும் கணிக்கிறபோது, அவனில் எழும் அந்த அவா அவனை மீறி ஆகாயத்தை மேவுகின்றது.
மண், பொன், விண் ஆசைகளை வென்ற பெண்ணாசை சித்தங்கலங்க வைக்கும் பித்து என்பதை ஒவ்வொருவனும் அறிவான்..
அவனவன் நரம்புகள் நாளங்கள் அவனவனில் துன்னி எழுகின்றன. ஆனபோதும் அவனவன் பாதங்களில் லாடச் சரடுகள் நிலமதிர ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.
செக்கலாகிவிட்டது. மைமல் பொழுது மலைச் சாரல்களில் உறைந்துகொண்டிருக்கிறது.
அவர்களின் வீரியங்கள் புடைத்துக்கொள்கின்றன. ஏகாந்த வெளியில் வீசிய காற்றின் அலை ஒசை அமைதி கொண்டுவிட்டது. பூமியை இருள் கவ்வுகிறது.
பார்த்த கண்ணுக்கு மின்மினிப் பூச்சிகளாகச் சிறு குடிசைகள் தெட்டந்தெறியனாகத் தெரிகின்றன.
ஒவ்வொருவனும் கண்ணூனிப் பார்க்கிறான்.
லயன்களில் மலையடிவாரங்களில் தோப்புகளில் திடல்களில் வெள்ளித் துக்கள்கள் போல் குப்பி விளக்குகள் சிமினி லாம்புகள் மின்னுகின்றன. ஆயினும், சலித்துப்போன அந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் கழிக்கும் தொழுவங்களிலிருந்து போடுகின்ற கூச்சல் சத்தம் குரல்கள் இந்த இவர்களுக்கு இந்த ஜாம்பவான்கள் செவிகளில் மிக இதமாகவே கேட்கின்றன. மரண ஓலத்தையும் திருமண இசை பொழிய வைக்கும் வல்லமையுள்ள மேதைகளாதலால் இப்படி.
இருந்தும், இந்த வெள்ளைநாயர்களின் மனசு பூரணமாவதாயில்லை. அவர்கள் தவண்டைகள் அபிலாசைகள் பூர்த்தியாகவேணுமாயின், இந்த தொழுவத்து மனிதர்களுடன் உறவுகொண்டு தாம்பத்தியமாகச் சீவிக்கும் ஆண் ஜென்மங்கள் தங்கள் காலடிகளில் கிடந்து தங்கள் தஞ்சத்திலேயே சீவியத்தை அர்ப்பணிக்க வேண்டும்.
மனிதனை மனிதன் பிரிக்க முடியாத அடிமைச் சங்கிலியை அவர்கள் கழுத்தில் இறுகப் பிணைத்துவிட்ட பின், அவர்களின் ‘சுதந்திர வாழ்க்கையை ஜனநாயகபூர்வமாகப் பறைசாற்றும் பண்பிற்கு இலக்கணமாக்கப்பட்ட இந்த இவர்கள், தேசத்தின் தொண்டர்களாக சுதந்திர ஜீவிகளாக காடேறிகாளாக ஏகாந்தமாகத் திரியலாம். எதேச்சையாக எதனையும் அனுபவிக்கலாம்.
இந்தக் குயுக்தியில் ஒவ்வோர் ஆதிக்க வெள்ளையனும் ஆட்பட்டிருப்பதால் அவனவன் பாட்டுக்கு அவனவன் மனசு சுதந்திரமாக எங்கெல்லாமோ ஆலவட்டமிடுகின்றது.
காலகெதியில் நாளாக ஆக அந்தத் தொழுவங்களில் ஆடவர்கள் வாடையே அரிதாய் போய்க்கொண்டிருக்கிறது என்ற நிலை புலனாகாதபடி வறுமை அவர்களை ஆக்கிற்று என்பதும் பூஜ்ஜியமானதே.
3
குறைந்த கூலி, நிறைந்த வேலை.
இந்த ராஜானுபவர்களின் முகாம்களில் முகாம்களைச் சுற்றி வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்த மனிதர்கள் ஆடவர்கள் அவர்கள் கிழடுதட்டிப் போனவர்களாயினும் நாளொரு மேனியாகப் பொழுது உறையில் போகுமட்டும் இவர்களின் வசிப்பிடங்களை விடுதி முகாம்களைச் சுத்தம் செய்கின்ற கூலிகளாக மலஜல கூடங்களைச் சுத்திகரிக்கின்ற யந்திரங்களாக தோட்டிகளாக எடுபிடியாட்களாக்கப்பட்டுவிட்டார்கள்.
இந்த விசித்திரங்கூட எவருக்கும் சரியாகத் தெரியாது.
அந்த மனிதர்கள் இவர்களின் ஜனநாயக மந்திரத்தில் கட்டுண்டு நிரந்தரக் கூலிகளாக
அகதிகளாக அடிமைகளாக்கப்பட்டபின் தான் ஓடி முழிசினார்கள்.
இதயங்கள் பூகம்பித்தன. ஆனால், இறுகப் பூட்டிய சங்கிலிகள் அவர்கள் கரங்களில் செப்பமாக மாட்டப்பட்டு விட்டன. அசைத்தால் கரங்களே துண்டிக்கப்படும்.
அவர்களைப் பொறுத்தவரை வீடு வாசல், புருஷன் பெண்சாதி, அந்த பிள்ளை குட்டி, ஓய்வு ஒழிச்சல் யாவும் அந்த மண்டப அடைப்புக்குள்தான்.
எச்சில் உணவு, பிச்சைக் கூலி.
‘சுதந்திரப் பிறவிகளான இந்த ஜனநாயகப்பிச்சைத் தீனிக் கூலிகளுடன் அந்த அவர்கள் ஓய்வு நேரங்களில் தனியாகவும் இதமாகவும் குசுகுசுத்து எதையோ எல்லாம் ரகஸ்யமாகப் பேசிக்கொள்வார்கள்.
ஏதோ பேரம் பேசுகிறவன்பாணியிலும் சம்பாஷிப்பார்கள். பிரதேசங்களில் இரவின் இருள் மண்டியதும் அவர்கள் வீதிகளில் இறங்கிவிடுகிறார்கள் ஏகாந்தமாய்ச் சுற்றித் திரிகின்றார்கள்.
‘அவர்கள் இரவு நேரங்களில் அணிகின்ற கன்வெஸ் சப்பாத்துக்கள் அந்த அமைதியான வேளைகளில் ஓசைப்படாமல் சக்சக் என்று மெதுவாகக் கேட்கும்.
நாளாக இந்த ஒலிகள் அன்றாடம் கேட்கின்ற நித்திய ஓசைகளாகிவிட்டன.
செத்தைப் படலைகள் விடியும்வரை மூடிக் கிடக்கும். விடிந்தபின் அம்மணக் குழந்தைக் கணங்களும் செம்மறிப் புருவைகள்போல் சாரல்களில் உலாவும்.
இந்த எடுபிடிகள் மத்தியில் சகல விவகாரங்களுக்கும் மாறாக முரண்பட்டுப் போன வினோதமான ஒருவன் இவன் புத்தி பேதலித்தவனாக இருக்க வேண்டும் அந்த ஒருவன், தன் ஏனைய சகபாடிகளுக்கு ஒரு நாசகாரியாகத் தோன்றினான்.
இவன் கழுத்தில் குருசு இருக்கவில்லை. சுமத்தப் பட்ட சிலுவைகளை இறக்கிறவனாக இருக்கலாம்.
இந்த இவனால் இவன் சகபாடிகளின் கால்கள் சிலவேளை லயம் பிசகி. அவலமாக முரண்டு விழுகின்ற கோலங்களை இவன் கவனித்துக்கொள்வான்.
இன்றும் அவர்களின் நடமாட்டம் இந்த இவனுக்குப் பிடிபடுவதாக இல்லை. அவர்களின் லாடன் பூட்ஸ்கள் லயம் பிசகிக் கரடுமுரடாகத்தான் காதில் கேட்கின்றன.
இவர்களில் வித்தியாசப்பட்ட இந்த இவன் சடாரென்று படுக்கைவிட்டு உன்னி எழுந்தான்.
விழித்த கண்ணில் அறை கும்மிருட்டாக . அம்மியிருக்கின்றது. கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல எழுந்தான்.
வீதியின் நடுச்சந்திக் கம்ப மின் வெளிச்சத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
முகாம் விடுதியில் இவனும் இவனையொத்த சிலரையும் தவிர எந்த எவனையும் காணவில்லை.
நெஞ்சு டக் டக் கென்று துடித்துக்கொள்கின்றது.
ஓசைப்படாமல் மெதுவாக நகர்ந்து சுவிச்சைத்தட்டி விட்டான்.
மின்னலாய் அடித்துப் பரவியது பிரகாசம். சரியாக முக்கால்வாசிப் படுக்கைகள் காலியாகத் கிடக்கின்றன.
கனவுகளும் நினைவுகளும் கண்ட கேட்ட கற்பித்த உருவத்தின் மறு வார்ப்புகள் என்று அவன் அறிவான். ஆனால், கனவுகள் நினைவுகளை போலவே காட்சிகளாகவும் அமைந்துவிடுகின்றன என்பதை அவன் இன்றுதான் கண்டான்.
‘சீ, தூ… தேசவிசுவாசமற்ற, சகோதர பாசம் செத்த பெண்வேட்டைக் காமுகர்கள்… இவர்கள் மேனிகளே வெள்ளை. இதயங்களோ கண்டங்க… கழிசடைப் பாஷாணங்கள்…’
‘லையிற்’றை ஒப் பண்ணிவிட்டு மீண்டும் கம்பளியால் இறுகப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.
கண்களில் தூக்க மயக்கம் கவிந்த போதும் உறக்கம் வர மறுத்தது. அவன் மனசு அடித்துக்கொண்டது.
தனது சகாக்கள் சகவாசம் அகலிப்பாதல் தன்னை ஒர் உளவாளி என்று நினைத்துக்கொள்வார்கள் எனவும் ஒருகணம் யோசித்தான். தன் கழுத்தில் மாட்டியிருந்த சங்குப் பதக்கத்தைத் திறந்தான். திறக்கவே மின்னித்துலங்கும் ஒளியில் அழகாகத் தெரிகிறது அந்தப் படம்.
அரிவாள் சம்மட்டி பொறித்த செங்கொடிக்கு மேன்மைதகு வணக்கம் செலுத்துகிற ஒரு தோழன் உலகளாவிய மகோன்னத இயக்க வழிகாட்டியான அந்தத் தோழன் தோற்றம் புத்துணர்ச்சியை ஊட்டியும் விடுதலைக் கோஷங்களைச்சுட்டி நிற்கிற விதமுமாக உணர்வுற்றுருவகச் சித்திரங்களைப் பதிப்பித்தன. முதல் எடுப்பே காந்தியது. தன்னாரவாரம் சிலிர்த்துக் கொண்டான்.
‘ஓ. சகோதரனே, சகல விடுதலையடையப் போராடுவாயாக’
‘விடுதலை’
அடிமைத்தனத்திலிருந்தும் மனிதர்கள்
அவன் இதயம் பூரித்துப் பொங்கியது
அடக்குகிறவனிடமிருந்து விடுதலை
ஒடுக்குகிறவனிடமிருந்து…
கொடுமைக்காரனிடமிருந்து….
சுரண்டுகிறவனிடமிருந்து…
ஆதிக்கக்காரனிடமிருந்து…
இனவாத வெறியனிடமிருந்து….
குலவாத ஆணவனிடமிருந்து….
ஜாதித் திமிரனிடமிருந்து….
மதவாதத் திடும்பனிடமிருந்து….
விடுதலை… விடுதலை… விடுதலை…
ஓ சகோதரனே, இதோ பத்துக் கற்பனைகள். விசுவாசத்துடன் ஏற்று நேர்மையாகச் செயல்படுவாயின் இந்தத் தேசம் உன் தாயாவாள். நீ இந்த மாதாவின் மைந்தனாவாய்.
மனனமாகிய வாக்கியங்களை அவன் மீட்கின்றான். அந்தப் படத்தை அந்தத் தேசத் தலைவனை முத்தித்து விட்டுப் பதக்கத்தை மூடிக்கொண்டான்.
விடிகாலை ஆகிறது.
சகபாடிகள் வந்து சேர்ந்ததாகக் காணோம்.
இவன் மனசில் ஒரு அந்தரிப்பு.
இவன்களின் இந்தப் பெண்பிடி நாடகம் எத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது?
இவன் தனிமையான பிறகும் பழைய பிடிவாதங்கள். புதிய இலட்சியங்கள், நிதான போக்குகள் இவன் நெஞ்சில் வஜ்ஜிரம் போல் அழுந்திக் கிடக்கின்றன. ஆனால், நரம்புகளைப் புடைக்கவைக்கும் இந்தத் குளிர்ப் பிரதேசமும், பனிக் கூதலும் இடைக்கிடை இவன் வரித்துக்கொண்ட இலட்சியங்களைக் கடுஞ் சோதனைகளுக்குள்ளாக்கியதுண்டு. என்றாலும், இவன் அத்தனை உபத்திரவங்களுக்கும் முகங்கொடுத்து, வாலிப மிடுக்கின் அந்தரப் பேதலிப்புகளைச் சாடிநின்று வெற்றிவாகை சூடியிருக்கிறான்.
அவன் தன்னை ஒரு தூய்மையானனாக ஒழுக்கவாதியாக மனுக்குல மேம்பாட்டிற்காக அர்ப்பணித்துவிட்ட இலட்சியவாதியாக்கிக் கொண்டவன்.
வானவில்லின் வர்ணஜாலங்களில் மயங்கி அதுவே வானமாக நினைத்து அவன் வரித்த இலட்சிய வேட்கையின்பால் போதம் பெற்ற தத்துவங்களை வெறும் சுலோகங்களாக அர்த்தப்படுத்திக் கொண்டவனல்லன். வாழ்க்கையின் அடித்தள நுணுக்கங்களையும், அதன் அன்றன்றாடான காலங்களில் அதலபாதாள மேடுபள்ளங்களையும் நீவி நீவி துருவித் துருவி ஆராய்ந்த ஒரு சரித்திர விஞ்ஞானப் பிரகிருதி என்றுகூட இவனைச் சொல்லலாம்.
அப்படித்தான் செயற்பட்டும் வருகிறான். அந்தச் செயலிலும் இவர்களுடன் இணைந்து சிப்பாயானது, இவர்கள் யார் எவர் என்பதைக்கண்டு தெளியவே அன்றி, இவன் தனக்கு வாசியாக எதையும் அபகரிப்பதற்காகவல்ல என்பதில் திடசித்தமானவன்.
எதிலும் தன்னை மாத்திரம் பிரத்தியட்சப்படுத்தாமல் அடுத்தவன் பற்றிச் சிந்தித்து ஊன்றி நடப்பவன் பாதங்கள் எப்படியெல்லாம் சேறு, சகதி, மேடு, பள்ளம் கல்லடி, சொல்லடி, பொல்லடி படுமோ அத்தனை வாதைகளும் பட்டுத் தேய்ந்து தேர்ந்துவிட்ட ஒர் அனுபவசாலி என்றே இவனைச் சொல்ல வேண்டும்.
இத்தனைக்கும் இவனை இளம் வாலிபப் பருவம் தாண்டிய தவஞானத் தாடிவாலாக்கள் வரிசையிலே, அவிழ்த்துவிட்ட காளைகளின் மிடுக்கான துடிப்புள்ளவன் வர்க்கத்திலோ சேர்த்தியாக்கவும் முடியாது.
இவன் திடகாத்திரமான ஓர் வாலிபன். வாலிபத்திலே பலவித தேர்ச்சிபெற்று முதிர்ந்த உள்ளமுடைத்தான ஒரு ஜீவி.
தன் சுய விருப்பு வெறுப்பு, ஆத்திரம், பகை, பழி ஆகியவற்றைத் தீர்த்துக்கொள்ளுமுகமாக ஏகாந்தமாகப் பரந்து கிடக்கும் பிரதேசங்களைத் துண்டு துகள்களாக்கி அந்தத் துண்டு துணுக்குகளில் தனியாதிக்கம் புரிந்துகொண்டு, தானே மூலதரக்காரனாகவும், தான் பிறந்த சொந்த மண்ணின் மைந்தர்களை அநாதைகளாக்கிவிட்ட சாணக்கியத்தை அதன் கோர விறுத்தத்தை எதிர்த்துச் சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவன் பலதரப்பட்ட போராட்டங்களில் குதித்து அந்தப் போராட்டத்தின் கண் மக்கள் விழிப்படையவும், எழுச்சிகொள்ளவும் கிளர்ச்சியடையவும் செய்திருக்கிறான்.
எங்கெங்கெல்லாமோ கிடந்து வந்த அந்த வெள்ளத் தோலுணிகளான பணநாயகர்களை உலுப்பிய இந்த இவனின் போராட்டச் சுவடுகள் இன்றும் இவன் நெஞ்சில் அழியாச் சித்திரங்களாகக் கிடக்கின்றன. உறுதிவாய்ந்த இந்த நெஞ்சு அதே அந்நியர்களின் ஜனநாயகப் போர்வையில் ஆக்கிரமித்த இந்தப் பிரதேசங்களிலும் அடங்கி ஒடுங்கிக் கிடப்பதை நினைக்க அவன் மனசு புழுங்கிற்று.
பெண்களுள் தாய்மையையும், ஆண்களுள் திடகாத்திரத்தையும், மனிதர்களுள் சகோதரத்துவத்தையும் அவன் பார்பை பாவி, அந்த இலட்சியங்களுக்காகவே தன்னை முற்றாக அர்பணித்துவிட்ட இவனுக்கு, கிணற்றுத் தவளை போல் உள்ளே கட்டுண்டு அடைப்பட்டுக் கிடக்கின்ற இந்த அதிகார சேவகம் தனது உலகளாவிய இயக்க இலட்சிய நோக்கிற்கு இட்ட விலங்காகவே அவனுக்குப் பட்டது.
இந்த இவர்களால் கவியும் யுத்த, மேகங்களை இவனால் இந்த முகாமிற்குள் கிடந்து தடுக்க முடியுமா?
அவன் இந்தக் கவச சேவைக்கு விண்ணப்பித்த போதே அவன் தோழன் ஒருவன் கூறியிருந்த வாக்கியங்கள் எத்தகைய சத்திய வெளிப்பாடானவை. அவை இவன் மன்சுகள் அலை எழுப்பின.
‘என் தோழனே, நீ மாறுவேஷம் அணிந்துகொள். அதனை நான் தடுக்கவில்லை. ஆனால், உனது உள்ளம் உடைப்பெடுத்த பெருவெள்ளம் என்பதை அறிவேன். அது சமுத்திரத்தில் சங்கமித்ததுபோல் பழக்கப்பட்டது. மனுக்குலத்தோடு ஒன்றித்த உலக நோக்கில் உன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்ட நீ இந்த ஆதிபத்தியவான்களுடன் சென்றால் ஜனவாடையே தெரியாமல் மனம் திணறித்துடிப்பாய். அந்தப் பிரதேசம் நம் நாட்டுத் தேசியப் புணருத்தாரண எழுச்சியால் அமைந்ததன்று. அது வெள்ளை ஆதிபத்திய பணநாயகர்களின் சாம்ராச்சியத்தைப் பலப்படுத்த ஏவப்பட்ட கூலிப்படைகளால் அமைத்த சிறைக்கேடயம்.
எச்சரிக்கை செய்த தோழனின் ஞானபோதம் இவனுக்கும் உண்டு. இவனும் இத்தாற்பரியங்களைப் புரிந்தவன் தான். எனவே, அவன் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டே கிளம்பியவன். அப்படியே இந்த சிறைக்கூடத்துள் வந்து சேர்ந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. தான் இப்படி இந்த ஆசாமிகளுடன் வந்திருக்கக் கூடாது என்று இப்போது சிந்திக்க ஆரம்பித்திருக்கிறான். தனது முட்டாள்தனத்தை நினைத்துத் துயரப்படுவதும் அழுந்துவதுமே அவனுக்கு பகுதிநேர வாடிக்கையாயிற்று.
தன் வாலிப இதயத்தில் கருக்கொண்ட இலட்சிய தாகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற விபரீத ஆசையில் அவன் பெற்றோர்கள் ஆக்ரோஷமாக எதிர்த்தார்கள். சித்திரவதை செய்து துன்புறுத்தி வருத்தினார்கள். ஆனால், அவன் கொண்ட தாகம் தணியவில்லை. பெற்றோர் அப்படி அவனை எதிர்க்காதிருப்பரேயாகில் அவனுக்கு ஆக்கினை புரியாதிருந்தால்… அவனுடைய சமதர்மலோக இலட்சியத்துக்குக் குறுக்கே தடை போடாதிருந்தால்… அவன் இப்படியெல்லாம் ஒரு தேசாந்திரியாக ஏக ஆதிபத்தியங்களின் ஏவற் கூலிகளில் ஒருவனாக ஆகியிருக்க மாட்டான்.
தன் பெற்றோர், உற்றோர், உறவினர், இனசனர் ஆகியோரால் தான் அடைந்த அவமானங்களையும் துன்பதுயரங்களையும், அவர்கள் அவனுக்குச் செய்த கொடிய நிஷ்டூரங்களையும் அந்த அகால வேளை நேரத்திலே படுக்கையில் சரிந்திருந்து அவன் மீட்டு நினைவுபடுத்திய போது அவன் கண்கள் கலங்கிக் குமிழ்த்தன.
அவனைக்காதலித்த காதலியும் அதற்காகவே கைவிட்டு போயினாள். அவள் அவனை அமைத்திருக்கலாம். ஆனால், அவன் அவள் பேரத்திற்கு மசியவில்லை. அவளும் வெறுத்தாள்.
நான் அன்று வீட்டை விட்டு வெளியேறாதிருந்திருந்தால்….?
தான் பட்ட துயரங்களை தனக்கெதிரான நிந்தனைகளை இனி நினைத்துப் பயன் என்ன என்றும் அவனுக்குப்பட்டது.
மனசில் ஓர் ஆயாசம் தட்டியது.
அந்த உத்தரிப்புகளை விஸ்தரித்து இரைமீட்டவனாக ஆகிய போது…உடலயர்ந்து உறங்கிவிட்டான்.
4
காலைச் சூரிய ஒளிக் கதிர்கள் மின் கம்பிகள்போல் நெற் துவாரங்கள் வழியாக அவன் படுக்கையில் குத்திட்டு விழுந்தன. தலைசாய்த்து விழித்துப் பார்த்த கண்ணில் பிரதேசமெங்கும் ஒரே பரபரப்பாக சந்தடியாக இருந்தது.
நள்ளிரவுக்குப் பிறகு விடுதிக்கு விரைந்து வந்து அரைதூக்கம் போடுகின்ற சகபாடிகள் பொழுது புலர்ந்து பனிமூடம் கலைவதற்கு முன்பே எழுந்து பாத்றூம் பக்கம் சென்றுவிட்டார்கள்.
இவனோ இன்னும் படுக்கை விட்டு எழுவதாய் இல்லை. இவனுக்கு இதெல்லாம் ஒரு வெறுப்பாக மனசு விவரிக்கமுடியாத ஒரு பாதிப்பாக இருந்தது. நெஞ்சில் குமிழ்த்த பிரளயம் மனசுகள் கமாரிட்டுத் தகித்துக்கொண்டிருந்தது.
சுகயீனக் கடிதமொன்றைப் படுக்கையிலிருந்தே எழுதி அடுத்த கட்டில்காரனிடம் கொடுத்தான்.
ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்….
சொற்ப நேரம் அப்படியே கட்டிலில் கிடந்தான். சகநண்பர்கள் கடமைக்குச் செல்லத் தயாராகிவிட்டார்கள்.
பாத ஒலிகள் லயம் பிசாகாமலே கேட்கின்றன.
இவன் சொற்ப நேரத்தால் சோம்பல் முறித்து எழுந்தான்.
ருத்ப்ரஸ் எடுத்து பற்களைத் தேய்த்துக்கொண்டு பாத்றூம் பக்கம் தாவும்போது புதிதாக ஏதோ ஒருவித சிணிநாற்றம் அந்தப் பாத்றூமில் இருந்து இவன் நாசியில் குமுக் கென்று அடித்தது.
முகம் சுழித்தது.
இந்த உலகத்தையே அளந்த இவனுக்கு இந்த நாற்றத்தின் அர்த்தத்தை அளக்க அதிக நேரம் எடுக்கவில்லை.
சீ.நாய்ப் பிறவிகள். தேசப் பிரேமிகளின் சேவை ரத்த வெடில்களாகவல்லவா அடிக்கிறது?
குடல் ஒருகணம் குமட்டிற்று. வயிறு குறாவ ஓங்காளித்து ஒருபாட்டம் காறித்துப்பினான். பாத்றூமிற்குள் போய் சவர்பாத் எடுத்துக்கொண்டு, நாக்கிளிப் புழுவாட்டம் நுளுந்திக்கொண்டு வெளியே வந்தான்.
படி ஏற, முனைந்து உட் பாடக் கதவுகளைத் திறந்து கால் தாவுகிறபோது, அவன் சற்றும் எதிர் பாராத ஓர் ஈனக் குரல் பல்லி சொன்ன மாதிரி இவன் காதில் விழுந்தது.
சலாம் சேர்
உள்ளே வைத்த கால் வைத்தபடி அவன் நின்றுகொண்டான்.
உடலைச் சற்று வளைத்து முகத்தைத் திருப்பிக் கூர்ந்து பார்த்தான்.
அது ஒரு படு கட்டை வயது போன கிழவன்.
கிழவனின் தாடைச்சதை தொங்கித் தொளதொளத்துப் போய்விட்டது. ஒரு கையில் இற்றுப்போன தும்பு கழன்ற ஒரு துடைப்பக் கட்டை. மறு கரத்தில் விளிம்பு உடைந்த வாளியும் ஒரு ரிபன்கரியர் போல் மூன்று நான்கு இறாத்தல் சோறு கொள்ளத்தக்க கறள் கட்டி உக்கி நெளிந்த ஒரு தகரப்பேணியும்….
இந்த விதமான உபகரணங்கள் சகிதம் பழைய கோட் ஒன்றும் கிழவன் அணிந்திருந்தான்.
ஆசாரமாக வந்த அரிசிக் கூப்பனுக்குப் பின் அகோரித்து எழுந்த உணவுப்பஞ்சச் சாத்தானின் கடும் சோதனைக்குப் பாத்திரமானதாலோ என்னவோ கிழவனுக்கு நூறு வயசுக்கு மேல் என்று எந்தத் தேகசாஸ்திரியும் துணிந்து கூறுவான். ஆனால், வெற்றிலைக்காவி கறள்கட்டிய இறுக்கமான பற்கள் ஒன்றுகூட விழாமல் வரிசையாக கிடக்கிற விறுத்தத்தைப் பார்த்தால் கிழவன் அறுபதைத் தாண்டவில்லை என்றே கணிக்கலாம்.
வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறசாடை. கிழவன் இவனைப் பார்த்த கண்களை வெட்டாமலே அப்படியே நின்று கொண்டான்.
இவன் உள்ளே வைத்த காலைப் பின்னுக்கு இழுத்தபடி வேண்டுமென்றே ஒருவித அதிகார தோரணையில் கேட்டான்.
“ஒ மனுஷா, ஏன் உப்பிடிப் பாக்கிறே. என்ன வெசயம்… என்ன வேணும்…. சொல்லு?”
கிழவன் தன்னிடம் பிச்சை என்று வாய்விடாமல், சந்தோஷம் ஏதும் வாங்கவே தயங்கி நிற்கிறான் என்று யூகித்த இவன் அதிகார தோரணையில் கிழவனைக் கடிவது போல் பாசாங்கு செய்த போதும் இவனையறியாமல் இவனுள் கசிந்த இரக்க நெஞ்சமும் விழிகளும் கிழவனுக்கு வியப்பாக இருந்தன.
இவரு மற்ற ஆளுங்களப்போல கரடுமுரடான தொரையில்லே என்று இவனைப் பற்றி கணிப்பிற்குக் கிழவன் வந்தான். எனவே, கிழவன் சற்றுத் துணிச்சலுடன், தான் இவனிடம் தயவு வேண்டி நிற்கும் பாவனையை மீண்டும் காட்டி அவன் எதிரே நின்றான்.
கிழவன் தன்னை எதிர்கொண்டதானது தான் வெளியே வைக்கிற திட்டத்திற்கு ஒரு தடையாக இருந்த போது அவன் மனம் சற்றுச் சலித்துக்கொண்டது. ஆனால், கிழவன் ஒரு சின்னஞ்சிரு குழந்தைபோல் வெறும் அப்பாவித் தனமாகத் தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிற கோலத்தைக் கவனித்த அவன் சற்று வேளை தன்னுள்ளே மனங்கனிந்து நின்றான்.
“என்ன தாத்தா யோசிக்கிறீங்க, தாத்தவுக்கு என்ன வேணும்?”
பாஷைகள் ஒருவருக்கொருவர் புரியாதபோதும் பாசத்தோடும் பேசும் பாவனையில் கிரகித்துக்கொள்ளும் முறையில் பழகிப்போன கிழவனுக்கோ இவனுக்கோ இந்தப் பாஷைகள் குறுக்கே தடையாக இருக்கவில்லையாதலால் எந்தக் கிருத்தியங்களும் நிகழ முடியும் போல் இருவருக்கும் தோன்றியது.
இவன் போலவே கிழவனும் புரிந்துகொண்டான்.
கிழவன் இரண்டடி பின்னே வைத்து கான் ஓரமாகப் பதுங்கி நின்று ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தான். பம்மித்த வெற்றிலைவாயைக் குதப்பிப் பக்கவாட்டில் துப்பிவிட்டு, மேவாய்க்கட்டையைப் புறங்கையால் துடைத்தான். “சேர், இந்த ஊருங்களுக்குப் புதுசு போல…. அண்டாலத்தான் இங்கிட்டு வந்ததோ?”
கிண்டலாக அல்ல, சிரித்துக் கொண்டு ஹாஸ்யமாகத் தான் கேட்டான் என்பதைப் புரிந்துகொண்ட இவனும் சிரித்துக் கொண்டான்.
“நான் ஊருக்குப் புதுசு இல்லே. பழசுதான். ஆனா, நான் எனக்குப் புறம்பான தேவையில்லாத தனிப்பட்ட கருமங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. அது என்னால் சாத்தியமாவதுமில்லை”
‘ஓ.. தொரையக் கண்டபோதே நானும் அப்புடித்தான் நெனைச்சேன். இங்கே நாள் முழுதும் அலைஞ்சு கழுவித் துடைச்சிக்கிட்டுத்தான் போறேன். ஆனா, தொரமாதிரி… ஒங்கமாதிரி இப்படி ஆளு இருக்கிறதா இம்புட்டு நாளாத் தெரிஞ்சுக்கலே…”
மனங்குளிர்ந்த சிரிப்பு இவன் முகத்தில் சிலிர்த்தது.
“அப்படி ஒண்ணும் விசேசமில்லே. ஒங்களப்போல ஆளுங்க இந்த மாதிரி ஆளுங்ககூட ஒண்ணாயிருந்து பழகவும் வேல வெட்டி டூட்டி செஞ்சுக்கவும் எப்படி முடியுது? அது தான் புதுமையா இருக்கு?”
“ஏன், இதிலே அப்படி என்ன புதுமை இருக்கு?”
கைகொட்டிக்சிரித்தான் கிழவன். மனம் அந்தரித்தது.
இந்த தொர ஒலகம் தெரியாத சரியான ஒரு அப்பாவி.
தனக்குள் கிழவன் இப்படிக் கணித்தபோதே அவன்மேல் கிழவனுக்கு ஒருவித பரிதாபம் மேலிட்டது.
“தொரே, உண்மையிலே தெரியாமத்தான் இப்பிடிக்கேக்கிறீங்களா…?”
“ஆம்…”
“அட கழுதப்பிள்ளையாண்டானே”
மனசுள் சலித்துக்கொண்டான். இருந்தும், இந்தக் கழுதைப் பிள்ளையில் இனம் புரியாத பாசம் தலையெடுத்தது.
அந்தப் பாசமே அடுத்த கணம் கிழவன் நம்பிக்கையைத் தளர்த்திற்று. முகம் சுண்டிக் கோணிற்று.
இந்தத் தொரைகிட்ட அந்த வெப்பேரம் பேசிக்க ஏலாது. இந்நாளு அதிலே நாட்டங் கொண்டவராத் தெரியலே… இவரால நமக்கு ஒரு சல்லிப் பிரயோசனமும் கெடையாது.
கிழவன் இப்படியெல்லாம் கற்பனைபண்ணி விசனப்பட்டுக்கொண்டான். கிழவனின் கற்பனை யூகம் சரிதான்.
இந்த இவனுடன் பேரம் பேசவோ, இவன் ஆசாபாசங்களை விலைபேசி எடுத்துத் தனது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ளவோ எதற்குமே லாயக்கற்ற இந்தத் துரையோடு நெடு நேரம் மினைக்கடுவதே வீண் பிரயத்தனம் என்று கிழவன் முடிவு கட்டினான்.
சலிப்புத் தட்டிற்று.
“சரி தொரே, நான் வரப்போறேன்… கையில் ஏதும் வசதியிருந்தா ஒரு சந்தோஷம் குடுங்களேன்”
கொஞ்சமும் வெட்க உணர்வோ கூச்சமோ குறுகலோ கொள்ளாமல் கிழவன் அப்பட்டமாகவே கேட்டான்.
எதுவித தயக்கமோ பதகளிப்போ நாமமோ இன்றிக் கை நீட்டிப் பிச்சை என்று கேட்கின்ற லட்சக் கணக்கான இந்நாட்டு மன்னர்கள் நகர வீதிகளில் நகரத்து மூலைமுடுக்குகளில் உற்பத்திசாதனங்களாகி, பிச்சாபாத்திரம் ஏந்தித் திரிகின்ற கோலம் இந்த இவனுக்கும் தெரியும். அந்த மோஸ்தரில் இந்தக் கிழவன் இல்லை. இந்த மனுஷன் சந்தோஷம் என்ற அழகான பதப் பிரயோகத்தினுள் பதுங்கிய ஒரு கொரவமான பிச்சைக்காரன் என்பதையும் இவன் கண்டுகொண்டான்.
பிரபல பெரிய மனிதர்கள் எப்படிப் பெரிய மனிதர்கள் ஆனார்கள். என்ற சரித்திரப் புரட்டல் வேறு சங்கதி. தாம் செய்த கறுமங்களைத் தீர்க்கக் கடவுள் தயை நாடி கோயில் குளம் சத்திரம் சாவடிகளில் நிரந்தர பிச்சைக்காரர்களை வரிசைப்படுத்தி ஆளுக்கொரு நாணயதானம் பண்ணிவிட்டு வலு சுளுவில் பெரும் புண்ணியவான் களாகிறார்களே, அந்தப் பிச்சைக்காரர் ரகத்தை இந்தக் கிழவன் சார்ந்தவனல்ல என்றும் இந்த வீரன் தெரிந்துகொண்டான்.
விடுதியில் ஒரு தோட்டியாகவிருப்பதால் கிழவன் ஏதோ உரிமையோடு ஒருவித பாசத்தோடு அப்படிச் சம்பாஷிப்பதும் இவனுக்குப் புரிகிறது. ஆனால், சும்மா என்றால் அது என்னவானாலும் பிச்சை பிச்சைதான்.
பிச்சை கொடுக்கிறவன் மூன்று பெரும் குற்றங்களைப் புரிகிறான். என்று வேறு இவன் சொல்லிக்கொள்பவன். பிச்சைக்காரனாக்கப்பட்ட காரணத்தைப் பிச்சைக்காரன் தெரியவிடாமல் மறைத்தல் பிச்சை எடுக்க வைத்தவர்கள் யார் என்று தெரியவிடாமல் அவன் சிந்தனையை மழுங்கடித்தல் பிச்சைக்காரர்களையே தோற்றுவித்தவர்களை எதிர்க்கும் சக்தியை இழ்ந்து அதே மனிதர்களின் தயவை நாடும் நிலைக்குள்ளாக்குதல் இப்படியாக அந்தக் குற்றங்கள் சூழ்கின்றன என்பது அவன் தீர்க்கம். புதிய ஒரு சமத்துவ சமுதாயத்துக்கான இந்தத் தத்துவங்களை இவன் தெரிந்தபோதும், சந்தோஷம் கேட்டு நிற்கிற இந்தக் கிழவனுக்கு இப்போது அதைப் பற்றி விரிவுரை செய்வதில் பிரயோசனமோ அர்த்தமோ இல்லையென்றே நினைத்தான்.
கிழவனோ இத்தனைக்கும் இவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
“தொரே, என்னமோ ஒரே யோசனையில் அமுங்குனாப் போல… போகலாம்நு பார்க்கிறேன். சந்தோஷம் ஏதாச்சும் குடுங்களேன்”
‘துரை கட்டாயம் ஏதாச்சம் தருவார் என்ற நம்பிக்கை கிழவனுக்குப் பிறந்தது. அதனால் இந்த அழுங்குப்பிடியில் நிற்கிறான்.
அவனோ சாடையாகச் சிரித்துக் கொண்டு, தனக்கு அந்த விஷயங்கள் கொஞ்சமும் தெரியாது என்கிற பாவனையில் ஒரு குழந்தை மாதிரியே பேதலித்தபடி சம்பாஷித்தான்.
“நீங்க இங்கே வேல செய்யிறீங்க. அதுக்குச் சம்பளம் தருகிறார்கள்தானே, அது போதாதா? இதுக்கெல்லாம் சந்தோஷம் வேறு வேணுமா?”
கிழவன் கண்களைச் சுருக்கி நமட்டிச் சிரித்தான். முகத்தில் ஒரு பரிதாப கோலம் படர்ந்தது. “ஏன் கேட்டன்” என்ற ஒரு அழுந்தல் நெஞ்சிலுறைந்தது. எனினும், புன்முறுவலோடு வாயிலூறிய வெற்றிலைச் சாறைப் பொழிச்சிட்டுத் துப்பிவிட்டு, அந்த வீர இளைஞனைப் பரிவோடு பார்த்தான்.
“சேர், நீங்க சொல்றது நெசந்தான். நான் மறுக்கலே. ஆனா, அந்தச் சம்பளம் ஒரு ஆத்துமத்துக்கு அரை வயித்துக்கே போதாதுங்க. எனக்கே அப்புடீன்னா வூட்லே கெடக்கிற பெண்டாட்டி புள்ள குட்டியென்னு ஆறு ஏழு ஆத்துமங்களுக்கு என்னால தனியா நின்னு தாக்குப் பிடிக்க முடியுங்களா?”
இப்பிடி ஒரு கேள்விக்கணையோடு கிழவன் தன் அசுரபேச்சை நிறுத்தினான்.
“துரை”யின் நெஞ்சு சுரீரித்தது.
“ஆமா, தாத்தாவுக்கு இந்த வேலையைவிட வேறு ஏதும் வரும்படி இல்லையா?”
கிழவனுக்கு எடுத்தாற்போல் அரிச்சந்திர மயானகாண்டத்தையோ, “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற ஆறாம் கற்பனையையோ சும்மா வாசிக்க மனசு ஏவவில்லை. சற்று யோசனையில் ஆழ்ந்தவனாக மௌனமாக இருந்துவிட்டுச் சொன்னான்.
“வேற வரும்புடின்னா நாமளாத் தேடிக்கொள்ளத்தேவையில்லை. தானாகவே வந்துடும். நாமளாகவும் தேடிக்கலாம். அது சுளுவான காரியம்தான். ஆனா, அது சீரழிஞ்சவெசயம். ஒங்களப்போல ஆளுங்களுக்கு அது உவப்பாயிருக்கும்னு எனக்குத் தோணலே. வெறுப்புக் காட்டுவீங்க. அந்தந்த ஆக்களுக்குத்தான் அந்தந்த வெசயங்கள்ல விருப்பம் இருக்கும். ஒங்களுக்கெல்லாம் அது ஒத்துவராத வெசயம். அதுதான் யோசிக்கிறேன்.
துரைக்கு மூளை மயங்கிற்று.
“அதென்ன தாத்தா அது… எனக்கு ஒத்துவராத அந்த வெசயம் என்ன….?”
நுணலை தன் வாயால் கெட்ட நிலை. வீரன் அப்படி ஒரு அவசர கோலத்தில் கேட்டு வைத்தான்.
கிழவன் முகம் சாடையாக மலர்ந்தது.
தொர அந்தரப்படுறதப் பாத்தா வெசயம் வாய்க்கும்போலிருக்கே? என்று கிழவன் தனக்குள் யூகித்துக்கொண்டான்.
தனது கேள்விக்குக் கிழவன் பதில் கூறத் தயங்கியதையும் முகக் கோலம் மாறியதையும் மட்டுக்கட்டிக்கொண்டான் வீரன்.
கிழவன் மனசில் ஒரு வலை பின்னிற்று.
சொல்லவா விடவா? ஒத்துக்கொண்டா ஜோர். இல்லேன்னா மாட்டிக்கணும். பொறவு ஆபத்து.
ஐயம் தயக்கம். யோசனை சிரசு முட்டிற்று.
இதையெல்லாம் இந்தத் தொரைக்கிட்ட விரிவாச் சொன்னாலும் நம்மளுக்குப் பிரயோசனம் இருக்காது. ஆளும் அந்த மாதிரித் தொரையாத் தோணலே. இப்படி ஒரு சாதுவான இவருக்கிட்ட அதச் சொல்லி நம்ப மதிப்பைக் கெடுக்கிறது தான் மிச்சம். புறகு எந்தக் காலத்திலயும் ஒரு செம்புச் சல்லியும் தொரைக்கிட்ட வாங்கிக்க ஏலாது. ஆனபடியா அந்தச் சமாச்சாரத்தை நசூக்கா மறைச்சுப்பூடணும்.
கிழவன் மெல்ல நழுவ ஆயுத்தமான போது…
“என்ன தாத்தா, எதுவுமே பேசாமல் அப்பிடியே திகைச்சுப் போயிட்டீங்களே… நீங்க சொன்ன விசயம் சந்தோஷம் கொடுத்தாத்தான் சரி வருமா?
கிண்டலாகவே கேட்டார் துரை.
நெற்றியைச் சுருக்கி ஏதோ யோசித்த கிழவன் துரை முகத்தில் கண் பதித்துக்கொண்டிருக்க, கொஞ்சம் மிடுக்காகப் பார்த்து, “தாத்தா, ஏதோ எனக்கு ஒத்துவராது என்று சொன்னீங்களே, அது அப்படி என்ன அம்மட்டுப் பெரிய விசயமோ?” என்று வியப்பாக விடுத்துக் கேட்டான்.
கிழவனின் பதிலுக்காகக் காத்து நின்றவன்மாதிரி அவன் தன்னுணர்வின்றி தான் வெளியே செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் மறந்து தனது சோலியையும் மறந்து நின்றான்.
தொரே சரியா இந்த ஒலகத்தைப் படியாத ஒரு அப்பிராணி என்று கிழவன் முடிவு கட்டினான். அப்போது கிழவனையும் மீறி அடங்காச் சிரிப்பொன்று குபீரித்து வெடித்தது.
“என்ன தாத்தா உப்பிடிச் சிரிப்பு வருது?”
“பின்னே என்னா தொரே, இம்புட்டுப் பெரிய எளந்தாரியா வளந்திட்டு அதுவும் இந்த மாதிரி ஆளுங்களோட இருந்துக்கிட்டு ஒண்ணும் தெரியாத பச்சைப் புள்ளகணக்காப் பேசுறீங்களே. அப்படிக்கொத்த நீங்க இந்த ஆளுங்க கூட இருந்து டூட்டி பண்ணிக்க எப்பிடி முடியுது? அது ஒங்க மனசுக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கெங்கிறீங்களா?”
மல சல கூடங்கள் கழுவி அழுக்காய்ப்போன கான்கள் துடைக்கும் ஓர் அன்றாடம் காய்ச்சியான இந்தக் கூலிக்கு இந்தப் படுகிழவனுக்கு. தன்னை விடவும் தனது சகாக்களைக் காட்டிலும் தனது சகாக்களையும் அளந்து மதிப்பிடுகின்ற புத்தி சாதுர்யம் இருப்பதைக் கண்டு இந்த வீரன் உண்மையாகவே அதிர்ச்சி வியப்பு அடைந்தே போனான்.
கிழவன் வினவியதுபோல் அவனின் இலட்சியத்துக்கோ மனசுக்கோ கொஞ்சமும் ஒத்துவராத ஜென்மங்களுடன்தான் இவன் சதா நொய்து இணைந்துகொண்டிருக்கிறான் கிழவன் கணிப்புக் கொஞ்சம் கூடப் பிசகில்லை அதற்காக இந்த விடுதியைவிட்டு இவன் யாருக்கும் தெரியாமல் ஓடித்தப்புவதோ மறைந்துகொள்வதோ அதுவும் சாத்தியமாகப் போவதில்லை. இவனுக்கும் ஓர் வாழ்க்கை, வயிறு, பெற்றோர், உற்றோர், மற்றோர் என்று பல்வேறு சுமைகள் பயங்காட்டிக் கொண்டிருப்பதும் ஒரு காரணமா என்றும் யோசிக்கிறான். என்றாலும், இலட்சியப் பற்றோடு அதன் போராட்ட உணர்வோடு இந்த ஜாம்பவான்களுடன் இணைந்திருப்பதுகூட ஓர் அந்தர வாழ்க்கைதான்.
என்ன தொரே, நான் சரியா ஒரு வாக்குச் சொல்லலே. அதக் கேட்டுப்புட்டு அதிகமா யோசிக்கிறீங்களே… ஏன் தொரே நாம எவ்வளவோ படிச்சும் பழகியும் அவங்களைப்பற்றி நம்ப சகாக்களைப் பற்றிச் சரியாப் புரிஞ்சுகிடாத விஷயங்களை நீங்க சிம்பிளாத் தெரிஞ்சுகிட்டீங்க. அவங்கள் ஏதோ எங்கெல்லாமோ.
விடுகாலிகள் போல் போறாங்கள். புறகு உள்ளே வர்றாங்கள். அதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியலே தெரிய முனைந்ததுமில்லே உங்களுக்கு ஏதும் தெரியுமா?”
கிழவன் அவங்களப்போல நீங்களும் ஒங்க ஓய்வு நேரங்கள்ல காம்புக்குள்ள முடங்கிக்கிட்டு இருக்காம ஆறுதலாக வெளியே சுத்திப் பாத்தீங்கன்னா என்னைப் பாத்து உப்பிடிக் கேட்டிருக்க மாட்டீங்க. ஏன்னா, மத்தவங்க சொல்றத மாத்திரம் தெரிஞ்சுண்டு அப்புறம் தானே தன்னாட்டம் கண்டு விரும்புற காரியம்தான் மனசுக்கு நல்லாயிருக்கும் உவப்பாயிருக்கும். அப்பிடிப்பட்டதுதான் அப்புறம் நெலயாவும் உறுதியாவும் பிடித்தமானதாவும் இருக்கும். ஒருதருக்குப் படிக்கிற வெசயம் மற்றவங்களுக்கும் அதே மாதிரிப் பிடிக்காதென்னு அப்பவே சொன்னேனே தெரியுங்களா? அது இதுக்காகத் தான்…”
கிழவன் பீடிகையோடு பேசிய வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இவன் முகம் காட்டிற்று.
சற்றுத் தாமதமாக, தான் கிழவன் கூறியவற்றின் அர்த்தங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஆவலைக் காண்பிக்கக்கூடாதென்ற பிரயத்தனத்தில் துவாய்த் துண்டை எடுத்து ஒருவாட்டி முகத்தைத் துடைத்தான்.
“அது சரி தாத்தா, நீங்க இங்கே உள்ள சகாக்களைப் பற்றி இந்தத் துரைமார்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
சற்று வினையமாகவே கேட்டான் வீரன்.
கிழவன் முகம் சுருங்கிற்று. வாட்டசாட்டமாகத் தன்கூட நிற்கும் இவன் முகத்தை இப்போது ஓர் அர்த்த புஷ்டியுடன் பார்த்தான். கெண்டைக் கால்களை மெதுவாக மடக்கிப் பின்புறம் சாடையக நகர்ந்து சுற்றுமுற்றும் பார்த்த கிழவன், கொஞ்சம் தணிந்த குரலில் அனுங்கி ஒருவித நம்பிக்கையற்ற மனோபாவத்தோடு தயங்கித் திகைத்தான்.
“நாம மனந்துறந்து நமக்குத் தெரிஞ்ச வெசயங்கள வெட்டையாச் சொன்னால் தொரை மனசு பொறுக்குமோ என்னமோ….?
பீடிகையோடு அவன் முகத்தைப் பார்த்தான் கிழவன்.
“அப்பிடி ஒண்ணும் வராது. பயப்புடாமல் மனம் திறந்தே சொல்லுங்க” கிழவனுக்கிருந்த சந்தேகமும் பயமும் மறைந்தன. இவன் வாக்கில் கிழவனுக்கு நம்பிக்கை துளிர்த்தது.
“எனக்கென்னமோ தொரமாருங்க மனசிலே மனுசாளை நேசிக்கிற தன்மையாக் காங்கலே. தங்க தங்க கடமையவுட்டுட்டு எல்லாரும் பொம்புளப் பொறுக்கியளாட்டம் ஊர் சுத்துறவங்க மாதிரித்தான் தெரியுது…. அப்புடி இல்லேன்னு நீங்க நெனைச்சா என்ன மன்னிச்சிருங்க…”
வீரன் நாணிச் சிரித்தான்.
கிழவனின் கணிப்பு முற்றும் சரியாகவே அவனுக்குப்பட்டது. அப்படித் தெரிந்தபோது, தன்னை ஒரு ஒழுக்கசீலனாக மதித்துக்கொண்டிருக்கிற கிழவன் எதிரே தான் ஒரு நிபந்தனையற்ற ஒப்புதல்காரனாக மாறி விட்டதாக இவன் கருதினான். இதனால் தனது எதிர் காலத் திட்டத்தைக் கிழவனுக்கு விரித்துக் கூறுவதோ, அப்படி ஓர் அக்கினிப் பரீட்சைக்கான தனது பிரவேசிப்பை அப்படிக் கங்கணக் கட்டிக்கொண்டிருப்பதைக் கிழவன் தெரிந்து கொண்டிருப்பதோ எந்தவிதத்திலும் சங்கையான காரியம் அல்ல என்றும் அவன் எண்ணினான். இப்படி அவன் எண்ணியபோது மனம் கூசிற்று.
ஆயினும், தன் திட்டத்தின்படி அந்த அக்கினிப் பரீட்சையின் களத்திலே பிரவேசித்து அதன் அதலபாதாளத்தை அளந்துவிடவேணும் என்ற தனது தீர்மானம்கூட கிழவனால் மட்டுமே சாத்தியமாகும் போலவும் அவனுக்குப் புலப்பட்டது. அந்த விஷயம் சாத்தியமாகுமென்றாலும் அது சம்மந்தமான அசூசையான வார்த்தைகளை கிழவனால்தான் வெறுத்துக் கிழவனே சபித்துக்கொண்ட “பொம்புளப்பித்துப்பிடிச்சவன்” களைப் போல் அதே சமாச்சாரத்தை அதே பெண் விரும்புவதாகத் தான் எப்படித் துணிந்து வாய் விடுவது என்று அவன் மனசு உறவுகளை சொற்ப வேளை பூகம்பித்துப் பிரலாபித்தது.
எப்போதும் ஆடவர்கள் பெண் பித்தர்களாகச் சம்சாரிப்பவர்கள் என்னுமளவிற்கு இந்தப் பெண்ணாய்ப் பிறந்தவன்ளெல்லாம் அப்படி ஒன்றும் ஒரு சேரப் படலைதிறக்கிறவளாகவும் இல்லையென்பதும் அவனுக்குத் தெரியும். ஆண்களைப் பித்தர்களாக்குவதற்குப் பெண்களுக்கு இயல்பாகவே உள்ள அங்கரூபம், லாவண்யம், அலங்காரம், சௌந்தர்யம் ஆகிய சித்திரங்களைக்கூடச் சொல்ல முடியாது.
இந்த லட்சணங்களெல்லாம் வாலைப் பருவத்துக் கோலங்களே தவிர உருவ உணர்ச்சிப் பீறல்களுக்கு ஆளாகின்றவரை ஒரு மின்னல் வெடிபோல் தோன்றி மறைகிற கோலங்களேயன்றி நித்திய அலங்கார ரூபங்களல்ல என்பதையும் அவன் அறிவான்.
இந்த விதமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட இவன் அவ்வகையான அவஸ்தைகளை அனுபவித்து அவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறான்.
ஆனால், இப்போது எழுகின்ற இந்தப் பெண்பித்து இவனுக்குத் தானாக எழுந்த ஒன்றல்ல. ஏதோ ஒரு பிற உந்துதலில் உயிரைப்பிடித்து வைத்திருக்கிற ஒரு சுமைதாங்கி என்கிற இந்த உடம்புக்கு ஆறுதலளிக்கும் விவகாரமாகத்தான் அதன் அக்கினிப்பரீட்சை என்ற கோதாவில் எழுகிறது.
புரிந்துகொள்ளமுடியாத இந்தச் சூட்சுமத்தை முற்றாக அறிந்து தெளிய அவன் அன்றாடம் முயன்றதுண்டு. ஆயினும் தனக்குள் அதனை அடக்கி ஆண்டு வெற்றி கண்டபின் ஒரு நம்பிக்கையும் அவனுக்குத் துளிர்விட்டிருக்கிறது. இதன் பேறாக அவன் அடைந்த ஆத்ம பலம் ஆத்மசக்தி அவன் சகபாடிகளிடம் மருந்துக்கும் கிடையாது என்பதால், தானே அவர்களுக்குள் ஒரு மகாத்மா என்ற கர்வமும் அற்றவனாகவே இருந்தான். எனினும், அந்த நண்பர்களின் எதேச்சாரத்தனமான சுற்றுலாக்களுக்குப் பிறகு இவன்மட்டில் எழுந்த ஒரு சிந்தனை நினைவு, கனவு, ஆசை, கேள்வி யாவும் இவ்விதமாகவே இருந்தன.
இந்த இவர்களின் இவ்விதமான பெண்பிடி விஷயங்கள் அந்தச் சமாச்சாரங்கள் எங்கே, எப்படி, யாரால நிகழ்கின்றன?
இப்போதும் இதே கேள்விகளே அவன் மனசைக் குடைகின்றன.
இந்த முஸ்தீப்புக்கு அந்தப் பரீட்சைக்கான பிரயத்தனத்துக்குச் சவாலாக, ஒழுக்கமுள்ள ஆசாரசீலன் என்ற நற்சாட்சிப் பத்திரத்தை அவனுக்கு. வழங்கிய இந்தக் கிழவன் வேறு இவன் எதிரே நிற்கிறபோது கிழவனையும் மீறி அந்த விவகாரங்களில் இறங்குவதும் காரியசித்தியாக அவனுக்குத் தோன்றவில்லை.
இப்படியான தடைகளில் சிக்குண்டிருக்கும்போது அதே விஷயங்களைத் துருவி அறிந்துகொள்ளவும் அவற்றில் ஈடுபடவும் கிழவனே வழிகாட்டி வேதம் ஓதிவிட்டிருக்கும்போது அவன் மனசில் ஒருவித தத்தளிப்பு பரிதவிப்பு ஏன் பரவசம் என்றும் சொல்லலாம் அப்படி ஒரு ஆனந்தபரவசங்கூட உண்டாயிற்று.
சமுதாயத்திலே தொடர்ந்து கொடுமைகள், ஈனத்தனங்கள், நிஷ்டூரங்கள் புரிபவனைப் பற்றி மனிதர்கள் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. அத்தகையோர்பற்றி அவர்கள் அலட்டி அலட்டியே அலுத்துப்போய்விடுகின்றனர். பெரும் ஆசாரசீலன், இலட்சியவாதி என்று பெயரெடுத்தவன் சிறுதவறு இழைத்தாற்கூட சோதனையாக ஏதும் மேற்கொண்டாலும் அவனையே மட்டரகமாக மனிதர்கள் தூஷிக்கவும் சாடவும் செய்கிறார்கள்.
இப்படி அபத்தமான அனுபவங்களையும் இவன் ஏலவே பெற்றுக்கொண்டவனாதலால் தனது அபிலாஷைகளைக் கிழவனுக்குக் கூறத் தயங்கினான்.
சொற்ப வேளை ஒரு வார்த்தையும் பேசாமல் பூகம்பித்துக் கிடக்கின்ற நெஞ்சோடு தன்னுள் தீவிர போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். அப்போது நச்சிரம்போல் அவன் காதில் கிழவன் குரல் மீண்டும் விழுந்தது.
“தொரே, என்னாங்க கடுவலா யோசிச்சுக்கிட்டிருக்கீங்க… நேரமாப்போச்சு. நானு போயிற்று வரட்டுங்களா?”
ஸ்பிரிங், விசை குலைந்து வட்டமிட்ட சாடையான சுயஉணர்வு பெற்ற இவனுக்குக் கிழவன் என்ன சொன்னான் என்றே தெளிவாகவில்லை. அவன் சிந்தனை எல்லாம் எங்கோ சஞ்சரித்து அந்தப் பெண் விவகாரத்தில் ஆலவட்ட மிட்டுக்கொண்டிருந்தது.
“என்ன தாத்தா சொன்னீங்க?”
அவன் நைந்துகொண்டு விடுத்துக் கேட்டான்.
“தொரை இந்த லோகத்தில் இப்ப இல்லப்போல”
வாஸ்தவத்தில் அது உண்மைதான் என்பதுபோல் அவன் தலை. தானாக ஆடிற்று.
“அப்புடீங்களா வெசயம்… மிச்சம் சந்தோஷம். அது சரி தொரே, எந்த லோகம்பற்றி…?”
துரைக்கு இப்போ கிழவன் கிண்டல் செய்கிறவரைக்குப் போய்விட்டது. அந்தளவுக்கு அவனுடன் கிழவன் நெருக்கமாகிவிட்டானென்றால், பெண் விஷயம் லேசான காரியமா?
“நீங்க முதல்ல சொன்னீங்களே, அந்த லோகத்தைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்”
“ஓ.. அதுங்களா? என்ன தொரே. அது ஒங்களுக்கு மனசாரப் பிடித்தமாயிருக்கா, இல்லே சும்மா சாட்டுக்குச் சொல்றீங்களா?”
அவன் இதற்கு ஒன்றும் கூறாமல் ஒருவித நாணிப்போடு கிழவனைப் பார்த்து நமட்டிச் சிரித்தான்.
கிழவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
“ம்… மொதல்லே ஒருவாக்குச் சொல்லியிருந்தா இட்டு நேரமா இப்புடி இழுத்தடிச்சுப் பேசிக்கிட்டிருப்பேனா? ஒங்களப் பாத்தா அப்படிக்கொத்த ஆளா எனக்குத் தோணலே. அதான் அவுங்க அவுங்க மனசுக்கேத்த வழிக்கு ஒதவி ஒத்தாச செய்யோணும்கிறதுக்கா அப்புடியெல்லாம் பேசிக்கிட்டிருந்தேன். அது ஒங்களச் சொல்லிக் குத்தமில்லே. அந்தந்த வயசுகள்லே இந்த மாதிரியான எண்ணங்க வரத்தான் செய்யும் அது சகஜம் தானுங்க”
நீட்டி முழக்கி விஷயத்தை வேறு திசைக்குத் திருப்பி விட்டு அவன் முகத்தை ஏவிப் பார்த்தான்.
இருவரையும் மௌனம் விழுங்கிக்கொண்டிருந்தது.
கிழவனாகவே மறுபடியும், “தொரே அமரிக்கையா இருந்திச்சு. ஆனா, ஆளு சரியான ஆசாமிதான்” என்று செல்லமாகக் கேலிபண்ணி ஒருவித பயந்தெளிந்த தோரணையில் சற்று உரிமையோடு சமாளிப்பதுபோன்ற ஆசுவாசத்துடன் வீரனைப் பார்த்துச் சிரித்தான்.
பனி உறைகிற அதிகாலைப் பொழுதிலும் அப்போது அவன் முகம் நெய்யாக வெயர்த்தது.
மனிதஜென்மப் பிறவி வாழையடி வாழையாக இச்சாபூர்வ உணர்ச்சிகளுக்கு இரையாகியே வருகிறது. என்று கிழவனும்….
“தாத்தா என்னை நன்றாக எடைபோட்டிருக்கிறார். நான் செய்யப்போவது ஓர் அக்கினிப் பரீட்சை என்பது அவருக்குத் தெரியாது. எனது நோக்கத்தைச் சொன்னால் இடையூறாக வரும். கிழவன் என்னதான் நினைத்தாலும் இந்த விஷப் பரீட்சையில் பிரவேசிப்பதுதான் என்று அவனும்….”
தத்தமக்குள் நினைத்துக்கொண்டார்கள்.
சற்றுவேளை ஒருவர் மனோபாவம் மற்றவருக்குத் தெரியாமலே ஓர் அந்தரங்கமான பயங்கர மௌனத்தில் இருவரும் அமிழ்ந்திப்போயிருந்தனர்.
“தொரே, அப்போ நான் வரட்டுங்களா?”
“ஆ… சரி, ஆனா ஒரு வெசயம்?”
துரையின் பீடிகை கிழவனுக்குத் துப்பரவாக விளங்கிவிட்டது. கிழவனே உசுப்பிவிட்டான்.
“தொரே, அப்போ என்ன சொல்றீங்க? தொரைக்கு மனசிலே அப்புடி ஒரு நோக்கம் இருக்கும்னா, வாயத்தொறந்து ஒரு வாக்கு நறுவிசாச் சொல்லுங்க… நாலுபேருக்குந் தெரியாம கருமத்த அப்புடியே நைசாக ஒழுங்குபண்ணித் தந்துடறேன். அதுக்கு இப்ப என்ன சொல்றீங்க…?”
கிழவன் தனது மனோ நிலையை உரிஞ்சாணமாகத் தெரிந்துகொண்டான் என்று இவனுக்குப் புரிந்தபோது இவனிடம் இருந்த கொஞ்சநஞ்சக் கூச்சமும் பறந்துவிட்டது.
அடைப்புத் திறக்கும் வரைதான் வெள்ளம் மடைகட்டி நிற்கும். அது எடுபட்டால் ஓட்டந்தான். ஓட்டமேதான்.
அவனிடமிருந்த கூச்சம், நாணம், தயக்கம், கௌரவம் என்கின்ற கவசங்களை, பிரபஞ்ச லோகாயதம் என்ற மூலவிக்கிரகம் ஒரு நொடியில் அடித்துத் துரத்திவிட்டது. கேட்பானேன், துரை எதற்கும் ஆயத்தமாகத் துணிந்தே விட்டார்.
“நாலு பேருக்கும் தெரியாமல் கருமத்தை ஒழுங்குபண்ணித் தந்துடறேன் என்ற கிழவன் கவசம் வேறு அவனுக்குக் கிடைத்துவிட்டது.
எனவே, துரை எதற்கும் துணியாலானார். மேனியில் அப்பவே ஒருவித சுரீரிப்பு.
“சரி தாத்தா, நீங்க போங்க… நான் மைம்மல்படவர்றேன்”
“ஆமா, எடம் வலம் தெரியுங்களாா?”
“ஓ… அதைக்கேக்க மறந்துவிட்டேன்… எப்படி வர்றது?”
“கட்டாயம். வருவீங்களா?”
“ஏன் அப்பிடிச் சந்தேகப்பட்டுக் கேக்கிறீங்க?”
“அவனவன் சொல்லிக்கிறமாதிரி நடந்திக்கிறலே. களவுன்னாச்சும் நறுவிசா நடந்துக்கிடணுமில்லையா? அப்புறம் ஏமாத்தியிடக் கூடாது”
“இல்ல தாத்தா நான் அப்படியில்லே. சொன்னா சொன்னபடி கட்டாயம் வருவேன்”
“அப்புடீன்னா, சரியா பொழுது மலைக்குள்ள போவுற நேரமாப் பாத்து அந்த மலையடிவாரப்பக்கமா நேரே வாற மூணாவது மலை உச்சியில வந்து அங்கிட்டு நிக்கிற வாகை மரத்தோட நில்லுங்க. நான் அப்புறம் அங்க வந்து அந்த எடங்களுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன். எங்க தங்கிக்கணுமோ அங்க தங்கிக்கலாம். சரிதானுங்களே?”
“ஓல் றையிற்”
“ஆமா, ரேட் என்ன தெரியுங்களா?”
“அதென்ன ரேட்… அப்படியென்றால்”
“மனசுதான் சம்மதிச்சுட்டுதே. “ரேட்” கூடத் தெரியாதா?” என்று நமட்டிக் கேட்ட கிழவன் சிரித்தபடி இருக்கன்னங்களையும் ஒரு தடவை பரக்க விழித்துப் பார்த்தபின், “ரேட் எல்லாம்.. அது பாருங்க சைஸ் ஸைப்பொறுத்தது” என்றான்.
வெகு சாதாரணமாக மாமூல்பிரகாரம் பேரம்பேசுவது போல் சொன்னான் கிழவன்.
“சரி, எவ்வளவு வரும்?”
“அது வந்து சைஸ்ஸப்பொறுத்துன்னு முன்னமே சொன்னேன் இல்லையா?”
“அதென்னப்பா சைஸ்?”
“இது தெரியாதுங்களா..?” கொஞ்சம் எளங்குட்டியென்னா பத்துப் பன்ரண்டு… அதுக்கு மேலைன்னா ஒரு அஞ்சு ஆறுக்குள்ள முடிச்சுடலாம்”
“அப்படியா…?”
துணிந்தவனுக்குத் துக்கமில்லை. சறுக்கி விழுந்தாயிற்று. சேற்றைக் கழுவினாலும் குளிர் குளிர்தான். இனி என்ன, கொர்வமாகக் குளத்தில் மூழ்கவேண்டியதுதான். அற நனைந்தவனுக்குக் கூதல் என்ன கொடுகடியென்ன?
துரை இனி எதற்கும் றெடி ஆள் மிக அந்தரகாறரானார்.
“சரி, வாறன்”
“அப்ப, மொதல்ல கைச்செலவுக்கு ஏதும் பாத்துக் குடுங்களேன்”
“எவ்வளவு கேக்கிறீங்க?”
“இது அதுக்கில்லே, எனக்கு”
“சரி. எவ்வளவு?”
“ஒரு அஞ்சுரூவா”
சொக்கை கும்மச் சிரித்தகிழவன், இவன் கொடுத்த காசைப் பவ்வியமாக இருகரம் நீட்டி வாங்கி இடுப்புவார்ச் செப்புக்குள் செருகிக்கொண்டான்.
கிழவன் மறையும்வரை துரை அந்த இடம் நகராமல் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்களில் இரக்கவூனம் கக்கிற்று.
5
பூமியில் மலைச்சாரல்களில் வெட்டைகளில் பனிமூடம் பரவும் மாலை வேலை.
மலையடிவாரங்களில் பொழுது உறைந்து கொண்டு செங்குத்தாகப் போகிறது.
கிழவன் குறிப்பிட்டுச் சொன்ன மூன்றாம் மலைச் சாரலின் குன்றில் ஏறி நின்று அந்தப் வாகை மரத்தடியில் அவன் வெகுநேரம் வரை சுற்றும்முற்றும் பார்த்தான்.
முற்றாக மைம்மல்பட்டுவிட்டது.
கிழவன் வருவதற்கான ஒரு அறிகுறியையோ அசுமாற்றத்தையோ காணவில்லை.
இந்த வீரன் நெஞ்சில் லேசாகப் பயம் தட்டிற்று. தன்னந் தனிமையிலே இது போன்ற பழக்க தோஷமில்லாதபடியால் ஏகாந்தமான மலைப்பிரதேசத்தில் வயல்வெளியான இந்த வெட்டையில் கொஞ்சங்கூட அவனால் திடனாக நிற்கமுடியவில்லை.
கிழவன் ஆசைமூட்டி அலைக்கழித்துவிட்டானோ?
புதிய பிரச்சனை ஒன்று அப்போது மனசில் உருவெடுத்தது.
விடுதியில் உள்ள நமது காடேறிப் பயல்கள் யாராவது இந்தவேளையாகப் பார்த்து இதேபக்கம் வந்தால்…?
இந்தச் சிந்தனை துளிர்விட்டபோதே நெஞ்சு கமாரிட்டுக் கொண்டது. நன்னி அடிக்கிறமாதிரி மேனி அடங்கச் சாடையாக நடுக்கம் எடுத்தது. இந்த நடுக்கம் பனி அம்முகிற குளிரால் அடிக்கிறதா, பிரமித்துப்போய் நிற்கிற திடுக்காட்டத்தால் எடுக்கிறதா என்று சொல்கிறமாதிரியும் இல்லை.
இந்த இழவு சனியனின் கூத்துக்குள் கோமாளியாக, சற்றுத் தொலைத்தூரத்து லயங்களிலிருந்து காதுகள் கிண்ணிட நாய்கள் வேறு ஊளையிட்டுக் கேட்கின்றன.
இந்த வீரன் உடம்பு காக்கிச் சட்டைக்குள் உப்பிவிட்டது. மனசில் இருந்த உற்சாகமும் கிட்டத்தட்டச் செத்துவிட்டது.
தேகம் நடுங்க மலை உச்சிக்குத்தாவி ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தான்.
பசுமையாகத்தான் தெரிகிறது. ஆயினும், இருள் கவிந்த அந்த லயங்களில் உள்ள சனங்களின் ஈனக்குரல்களே அவலமாகக் கேட்கின்றன.
பாம்பின் வாய்த் தேரைபோல் அப்போது பூமியை அந்தப் பிரதேசத்தை இருள் மண்டி விழுங்குகின்றது.
பரவலாக ஏகாந்தமாக எழுந்து கிளரும் ஊதற்காற்று ஊமைக்குழல்மாதிரி இவன் செவிகளில் ஹோவென்று இரைகின்றது.
கூதல் அப்புகிறசாடை அப்போது ஓர் அரவம் மேனியில் விழுந்து நழுவி நெளிந்து நுளுந்திற்று.
ஆ வென்று பயபீதியில் துள்ளிப் பாய்ந்த வீச்சில் பற்றைக் கட்டைகள் அவன் கால்களைச் சிராய்த்துவிட்டன.
எழுந்து பார்த்தால், அது காற்றோடு அள்ளுப்பட்டுவந்த ஒரு தருப்பைபுல் தண்டு. உண்மையில் வீரன் பயந்தேபோனான்.
“ஐயோடா” என்று வாய் குழறியது.
கிழவன் அஞ்சு ரூபா வாங்குவதற்காக என்னை நைசாக ஏமாற்றிவிட்டான். அவன் ஆடிய நாடகமெல்லாம் அதைப் பறிக்கும் வரைதான். எப்படியும் நாளைக்கு அந்தக் கிழவன் காம்புக்கு வந்தாகவேண்டும்தானே?
அவன் நம்பிக்கை தளர்ந்து மனம் முறிந்துவிட்டது. தேகம் சோர்ந்துவிட்டது. என்றாலும் சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒருசுய திருப்தியுடன் மெல்லத் திரும்பினான்.
ஏக நடை…..
என்ன அதிசயம். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, கிழவனே வந்து கொண்டிருந்தான்.
கிழவனைக் கண்டதே அவன் புத்துணர்வுபெற்று, அவன் ஆவேகித்து நிற்கும் அந்தப் புதிய அனுபவத்தைப் பற்றிய சிந்தனை சிக்கலடித்தது.
“ஆ… தொரே வந்துட்டீங்களா?”
“எப்பவோ வந்துட்டேனே”
எங்கே போவது? என்றும் இவன் கேட்கவில்லை. கிழவன் முன்னே நடந்து இந்த மலை உச்சியைக் கிழித்துச் செல்கின்ற செங்குத்தான ஒற்றையடிப் பாதையால் இறங்கிக் கைகளால் திசை காட்டிக் காட்டிக் கூட்டிக்கொண்டு நடந்தான்.
துரையோ கிழவன் பின்னே தொடர்ந்துகொண்டிருந்தார்.
தெட்டந்தெறியானாக, சின்னஞ்சிறு குடில்களில் அடைந்திருந்த குஞ்சு குருமன்கள் துரையைக் கண்டதே தாங்களும் நூதனம் பார்க்க, குய்யோ முறையோவென்று கூச்சல்போட்டுக் கூட்டங்கூட்டமாக ஓடி வந்து இந்த இவன் முன்னே துரைக்கு முன்னே தூங்கணங்குருவிகளைப்போல் நிற்கிற கோலத்தை அவன் அப்போது கவனிக்கவில்லை. இருளில் தெரியவுமில்லை.
ஏதோ சகிக்க முடியாத ஒருவித புதிய . நாற்றம் மூக்கைத் துருவிச் சிணியடித்தது.
அந்தச் சிணி நாற்ற வாடை எங்கிருந்து புகைகிறது என்பதைக் காற்றுமுகத்தில் முகந்திருப்பி மூஞ்சூறுபோல் மூச்சிழுத்தான்.
சந்தேகமில்லை. அதே குழந்தைக் கணங்களின் மேனிகளிலிருந்து அடிக்கிற வெடுக்கான துர்நாற்றம்தான்.
கைலேஞ்சியை எடுத்து மூக்கில் அழுத்தி வைத்துக்கொண்டான். பூமியில் பரவுகிற சூரிய ஒளியை உள்ளங்கையால் மறைத்துவிடலாம் என்ற மேதாவித்தனம் போலும், தற்காலிகப் பாதுகாப்புக்காக ஒரு கவசமாக அந்தக் கிருத்தியத்தில் ஈடுபட்டபோதும், நாற்றம் செழுநீர் போல் பரந்துகொண்டிருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. சேறும் செழுநீர் வழுப்பும் செறிந்தெழுந்த வெடில் ஒன்று நாசித்துவாரத்தை நைத்தது.
முன்பின் பழக்கமில்லாத இந்தக் குழந்தைகுட்டிகளுடன் எப்படிச் சமாளிப்பது என்றும் அவனுக்குப் புலனாகவில்லை. தன்னுடன் ஒருபோதும் முகப் பழக்கம் இல்லாத இவர்களும் தன்னோடு இதமாகப் பேசமாட்டார்கள் என்றும் தனக்குள் வியாக்கியானம் செய்துகொண்டு இரண்டுங்கெட்டான் நிலையிலே, யாரோ கொலுசு ஒலி எழுப்பக் கலகலத்துக் கனைத்துச் சிரிப்பது அவன் காதில் கிளிக் கீச்சலாகக் கேட்டது.
நத்தைமாதிரிக் கழுத்தை நீட்டிப் பார்த்தான்.
செத்தையோரமாக ஒரு பெண்ணானவள் சரிவுப் பார்வைக்குக் கிழவிபோலவும், நெற்றிமுட்டுப் பார்வைக்கு எடுப்பான குமரிபோலவும் தெரிந்த அவள் நெளிந்து வளைந்துகொண்டு கண்களை அவன்மீது எறிந்து திமிறிக் குலுங்கிச் சிரித்தவாறு நிற்கையிலே….
அந்தக் கிழவன் இவனுக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு வந்த அதே கிழவன் அவள் அருகேயே மருவியபடி அவள் தாவி நின்ற செத்தைப்படலையை மெல்ல நீக்கி இவனுடன் எதுவுமே பேசாமல் வாசலால் குனிந்து வெளியேறி நின்று சற்று நிமிர்ந்தான்.
நிமிர்ந்து பின்புத் தாழ்வாரப்பக்கம் நோக்கி நெற்றிப் புருவங்களை மேலே சுருக்கிக்கொண்டு. அடி அம்மே, என்ன பாத்துக்கொண்டிருக்கிறே… தொர வெளிய நின்னுக்கிட்டிருக்காரே. உள்ளே அழைச்சுக்கிட்டுப் போயேன் என்று சொல்கின்ற தோரணையில் அந்தப் பெண்ணானவளைப் பார்த்து அவள் மனைவியா, மகளா, பேத்தியா? என்று இவன் மதிக்கத்தக்கதான அந்த அவளப் பார்த்து ஒரு கைக்சைகை காட்டியதைத் துரையும் வெகு நுட்பமாக அவதானித்தார்.
இந்த இவள் தனக்குள் எழுகின்ற இயல்பான நாண உணர்வுகளின் அஷ்டகோணங்களை எப்படியெல்லாம் நகர்த்தமுடியுமோ, அப்படியெல்லாம் லாவண்யமாக நர்த்தகித்து, வெட்கித்து நிற்கும் பாவனைபண்ணி, அதனை ஒருபாட்டம் அவனுக்குக் காண்பிக்கும் தோரணையில் மின்னி முழங்குவதற்குள்ளே தனது பதிவிரதத்தனங்களையெல்லாம் சிலாகித்து ஒப்புவித்துவிட்டபின். வழக்கமான சிரிப்பு, நகைப்பு, தழுக்கு, மினுக்கு, குழைவு என்றெல்லாம் உள்ள அலங்கார நடைப்பாவனை அபிநயங்களைப் பாக்கி இல்லாமல் காட்டி. ஒரு கியாதிபெற்ற சினிமா நட்ஷத்திரம் போல் கனிவாக அழைத்தாள்.
“சேர், வெளிய நின்னுக்காம உள்ளே வந்து ஒக்காருங்க”
இந்த வீரனான துரைக்கு என்னவோ போல் இருந்தது. அந்த என்னவோ இவன் மனசு விவரிக்கிறதாக இல்லை. நெஞ்சு படக் படக் என்று அவன் இன்ப நினைககளையும் மீறி அடிக்கின்றது. தேகம் ஊனி உப்புகிறதாக ஒரு சோக உணர்வு.
உள்ளே வாங்க என்ற அவளின் அந்தக் கனிவான மென்குரலில் எழுந்த காந்தம் அந்த மோகனமான அழைப்பு, அவளின் கம்பீரிய வனப்பைக் காட்டிலும் அவளிடம் ஏதோ ஒரு பச்சாதாபம், ஏக்கம். பரிதாபம், ஏழ்மைத்தனம் உறைந்து கிடப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
இந்த நினைவுகளோடு அவளைப் பார்க்க இவன் மனசுக்கு இவள் இதமாகவும் இதமற்றதாகவும் தெரிகிற ஓர் இடைநிலையிலேயே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குள்ள நிலையிலே…
அவள் உள்ளே விறுக்கென்று சென்று பக்கத்தேயுள்ள மரக் கப்புக்கு அருகே கிடந்த ஓடிச்சலான பக்கூஸ் பெட்டியைத் தூக்கி ஆசாரமாக வைத்தாள்.
அதன் பின் சட்டென்று திரும்பிப் பக்கவாட்டுக் கொடியிலே கிடக்கிற ஒரு துணியைத் தேடி அகப்பட்டதை உன்னி இழுத்தபோது, ஏலவே சிலும்பலாய்க் கிடந்த ஒரு பழந்துவாய் அவள் கை பட்டதும் அவன் நேர் மூதாவில் சதி புரியத் திட்டமிட்டமாதிரிக் கீலம் கீலமாக கிழிந்தது.
நர்த்தகிபோல் திமிறினாள். அவள் முகம் வெட்கத்தில் உப்பி மேனி அடங்கப் புல்லரித்தது. தேம்பி அழுகிற பாவனையில் முகம் கூம்பிற்று. தடுமாற்றத்தில் அவள் தேகம் சற்று வேளை அந்தரித்தது. என்றபோதும் இதை எல்லாம் காண்பிக்காமல் கொடியில் அடுத்த கரம் போட்டு ஒரு துணியை வலித்து இழுத்தாள்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற நமது பெரியவர்கள் கூற்றுக்கொப்ப, கந்தையாய்ப் போய்க் கசங்கிய ஒரு பூநிறப் பாவாடைத் துண்டு அவள் கையில் தட்ட, இது பராவாயில்லை என்ற சமாளிப்புடன் அதையே அந்தப் பக்கூஸ் பெட்டிமேல் அழகாக விரித்தாள்.
அப்பாடா…ஒரு கருமம் முடிந்தது.
விரித்த பிறகு நெஞ்சு துன்ன நிமிர்ந்து கப்புக்குச் சாய்வாக நின்று ஒரு புதுமணப் பிரவேச கன்னிபோல் துரையைப் பார்த்துக் கெக்கலித்துக் குலுங்கிக் குலுங்கித் திமிறித் திமிறிச் சிரித்தாள்.. கனைத்துக் கனைத்துச் சிரித்தாள்.
இப்படி அவள் சிரித்துக்கொண்டிருக்க இவன் கண்கள் அப்போது கிழவனைத் துழாவின. கிழவனின் சஞ்சாரத்தையே அங்கு காணவில்லை. எங்கே போனான், எந்தப் பக்கத்தால் போய்ப் பறிந்தான் என்றும் தெரியவில்லை.
மனசு கிலேசத்துள் மாண்டு அடித்துக்கொண்டது.
இந்த கிழவன் யாராக இருக்கும்.. ஒரு வேளை பக்கத்துக் குடிசை டாப்பர் மாமா வோ?
அவனுக்கு, என்ன இழவு சனியனுக்கு வந்தேன்? என்றாகிவிட்டது. பிச்சைவேண்டாம் நாயைப் பிடிச்சால் போதும் என்ற நிலை. அவன் கண்கள் தறுதறுத்து முழிசினன்.
இப்படியெல்லாம் அவன் முகம் பிரமை கொள்வதை அவதானித்த அவள், அவனின் சங்கடமான நிலையை வள்ளீசாகப் புரிந்துகொண்டாள்.
“என்ன தொரே, எங்க அப்பாவைத் தேடுறாப்பல பாக்கிறீங்க.. அவரு ஒங்க முன்னாடியே அந்தவாக்கில அப்புடியே போயிட்டா… ஏன், அப்பாவைக் கூப்பிடவேணுங்களா?”
இவன் மண்டைப்பூணாரம் கமாரிட்டது.
அவள் துரையின் எந்தவொரு பதிலுக்கும் காத்திராமல் சும்மா ஒரு ஒப்புதலுக்காகச் சத்தம் போட்டாள்.
“யே தங்கச்சி… தொரே வந்துட்டுப் போகட்டாமென்னு அப்பாவுக்கு ஒருவாட்டி குரல் வச்சிட்டு ஓடிய…”
தங்கச்சிக்காறிக்குக் கண்சிமிட்டி வெளியே சாமர்த்தியமாக அனுப்பியபின் அவள் இந்தத் துரையையே நேர்விழிகுத்திப் பச்சையாகப் பார்த்தாள்.
“ஆ… என்ன கொடுமை.. தான் பெற்ற பொண்ணுக்குத் தந்தையே டாப்பர் மாமாவா? ஐயோ…!”
மலை பெயர்ந்து விழுந்த பாறாங்கற்களின் இடியோசைகளாக அவன் நெஞ்சு இடிந்து அதிர்ந்தது.
ஒரு கணமேனும் கற்பனைபண்ணமுடியாத இந்தக் கோரத்தை அவன் கண்டபோது அவன் உடம்பு குறாவி ஊனித்தது. எனினும், இந்த மாமூல் பிரகாரத்துக்கு ஒரு தீர்வுகாண் அவன் இங்கே இந்தப் பரீட்சையில் குதிக்க வில்லை. அவன் எதற்காக இந்த டாப்பர்மாமாவால் அழைத்து வழிக்காட்டிவரப்பட்டானோ அந்த அக்கினிக் கோளத்தின் ஒரு களம் கிழவன் மகளாக இவனுக்கு ஒரு பெண்ணாக வந்து நின்று அவன் முன்னே கண்சிமீட்டித் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகித் துடித்துக் கொண்டிருக்கிற கோலத்தையும் அதற்காக அவள் செய்கின்ற பாசாங்குகளையும் பார்த்து வியந்தே போனான்.
“என்னதான் கோர வறுமை இருந்தாலும், தந்தையே உடன்படுகிற இந்த விஷயங்களெல்லாம் இப்போ உலகத்தில் நடக்கக் கூடிய காரியமா?”
தன்னுணர்வு இழந்து ஒரு மயக்க வெறிகொண்ட நிலையில் அமுங்கி எழுந்த கேள்விக் கணையில் அவன் மனசு கொளுவிக்கொண்டது.
இந்தப் புதினம் நிகழமுடியாத இந்தப் புதுமைகூட இந்த உலகத்தில்தான் நிகழ்கின்றது. அவன் கண்ணுக்கு எதிரே நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.
சகிக்கமுடியாத இந்தக் கொடுமைக்குக் காரணமான ஆதிபத்தியம் அனைத்தையும் துவம்சம் செய்து நிறுதுளியாக அழித்துவிட வேண்டும் என்று அவன் மனசு ஆவேகித்துத் துடித்தது.
“அது நாசமாய்ப் போக…”
அந்தக் கிழவனில் அவனுக்கு அருவருப்பான வெறுப்பு உண்டாயிற்று. அவன் மனக் கண்ணில் கிழவன் மன்னிக்க முடியாத வெறுக்கத்தக்க ஒரு குற்றவாளிபோல் தெரிந்தான்.
மனசு நெருடிற்று. நெஞ்சு உப்பி உடம்பு கூசிற்று.
“அடி பெண்ணே. அந்தத் தாத்தாவை நீ பாசாங்காக அழைக்க வேண்டாம். அவர் எனக்கு தேவையும் இல்லை” என்று சொல்ல அவன் மனம் துடித்தது. அடக்கிக்கொண்டான்.
இருந்தவாக்கில் அவள் ஏதோ சாட்டாக அழைத்து அவன் எதிரே நிறுத்திய அவளது பெரியதங்கச்சி அக்காள்காறியை சும்மா பார்த்தபடி, “நானு அப்பாவைக் கூட்டியாறேனே” என்று முனகிக்கொண்டு நின்ற ஒப்புதலைக் கேட்ட போதுதான் அவன் ஆகவும் வியந்தான்.
“இந்தத் தொழில் வாழையடி வாழையாகத்தான் நடக்கிறது…?”
“விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கற்பனையை உருப்போட்டு ஜெபிக்கும் பக்தர்களே இந்தப் பேதைகளை விபசாரிகளாக்கிவிட்டுப் புனிதர்களாக வேஷமிடுகின்ற விறுத்தம் இவன் கண்களில் சித்திரமாக விரிந்தது. வேதம் ஓதும் இவர்களே வேசையாட ஆக்குவதும் தெரிந்தது. சாத்தான்கள் வேதம் ஓதும் கோலத்தை இவன் இங்கே இப்போ நேரில் தரசித்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு தட்டிற்று.
அவன் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்செழுந்தது.
வந்த தங்கச்சி வெளியே செல்லவில்லை, இந்த அக்காள் அவளை அப்புறம் உசுப்பிவிடவுமில்லை.
“சேர், வேணுமின்னா சொல்லுங்க. அப்பாவை அழைச்சுக்கிறேன்… இப்பவே இவ தங்கச்சிய அனுப்பட்டுங்களா…?”
“வேண்டாம்”
ஒருவாக்கில் இரண்டு கருத்தை அவள் கையாண்டாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு அப்படிப் புரிந்துவிட்டது என்பதை இவளும் தெரிந்து கொண்டபோது மனசில் ஒரு சபலம் தட்டிற்று.
“சரி, பரவாயில்லை” என்றான் சாட்டுக்கு.
அவள் கமண்டலம் கவிழ. களுக்கென்று குலுங்கிச் சிரித்தாள்.
இத்தனை நேரமாகக் கிழவனைத் துளாவிய துரையின் கண்கள், பிறகு அந்தத் தங்கச்சியை உற்றுப் பார்க்கத் தலைப்படுகிறதில் ஒரு ஆவேசத் துடிப்பைக் கவனித்த இந்த அக்காள் அவன் சிந்தனைக்கு ஒரு முய்த்தாப்பு வைத்தாள்.
“சேர், ஏன் வெளியே ஒக்காந்துகிட்டு உள்ளே பாக்கிறீங்க….? உள்ளே வந்து படுக்கையில இருந்து ஆசைதீரப் பாருங்களேன்”
ஒருவித தயக்கமுமின்றி அவள் பச்சையாகவே சொன்னாள். சொல்லிவிட்டுத் தாழ்ந்த குரலில் ஒரு புதுக்கதையை மிகக் கௌரவமாக எடுத்துச் சொன்னாள்.
“சேர், வெளியே இருக்கேக்க ஆரும் பாத்துட்டாங்கன்னா ஒங்களையும் என்னையும் பத்தி ஏதும் வெத்தியாசமா நெனைப்பாங்க… ஆனபடியா எழும்பி உள்ளே வாங்க.”
அவன் மனசுகள் கேலியாகச் சிரித்துக்கொண்டான்.
“நல்ல கைதேர்ந்த சாகசக்காரி. இதை இவள் எங்கே இவ்வளவு நுணுக்கமாகக் கற்றுக்கொண்டாள். யாரும் வித்தியாசமாக நினைக்கிறதில் இவளுக்கு பயமோ கூச்சமோ உண்டா.?”
அவளைப் பார்க்க அவனுக்கு ஐயோ பாவம் என்றிருந்தது.
தனது வார்த்தையின் அர்த்தமும் அதன் தொனிக்குள் ஒளித்துள்ள விஷயமும் அவ்னை உத்வேகப்படுத்தும் என்று அவள் நினைத்தாள். அந்த நினைவோடு சற்றுநேரம் கப்புடன் சாய்ந்து நின்றாள்.
ஒன்றும் பலிதமாகவில்லை. அவள் கிருத்தியங்களால் அவன் பற்களை நன்னிக் கடித்துச் சிரித்தான்.
“அம்பலத்தில் ஆடியாச்சு. முற்றத்தில் ஆடுவதற்குதான் இவளுக்குப் புதிசா ஒரு வெட்கம் வந்திருக்கு…?”
அவனுக்கு சிரிப்பாக வந்தது.
“யாரும் பாத்தா ஏதும் வெத்தியாசமா நினைப்பாங்க என்று என்ன அலங்காரமாகச் சொல்கிறாள். தர்மபத்தினிகளின் வார்த்தைகளை இங்கே அசல் பரத்தைகள் கடன் வாங்கிக்கொண்டார்கள்.”
அவன் தனக்குள் சொல்லி மீண்டும் சிரித்துக்கொண்டே அவளை ஒரக்கண்களால் பார்த்தான்.
“அவளின் சாங்கோபங்கமான கூச்சத்தின் வெளிப்பாடு. அவளுள் திமிறி அடங்கும் ஆசைச் சாயல் என்பன ஒரு கண்ணியமுள்ள மங்கைக்கு இயற்கையாவிருப்பதுபோல் இந்த இவளிடமிருந்து எப்படி வெளிப்படுகின்றன..? நெருப்புக் கோளத்தில் உழல்பவளுக்கு அதன் ஜ வாலையும் காங்கையும் வீசாமல் இருக்குமா?”
மன இழை அறுபடுகிற சாடை அவள் குரல் மறுபடியும் கனிவோடு கேட்டது.
“சேர், எழுந்திரிச்சு உள்ளே வாங்களேன்”
சற்றுமுன் உமிந்துபோயிருந்த துரையின் தேகம் காற்றாடிபோல் லேசாக சர்ரென்று அசைந்தாடி உள்ளே சென்று, அவள் ஆசனம் என்று எடுத்து வைத்த பக்கூஸ் பெட்டியில் வலு பக்குவமாகக் குந்திக்கொண்டது.
ஐயோ பாவம், ஒலகம் அறியாத பச்சக் கொழந்தமாதிரி
உலகம் விழுங்கியான இவள் தனக்குள் அனுமானித்துக் கொண்டே பக்கத்துச் செத்தைப் பாடத்திலிருநது “அவுக் ” கென்று ஒரு கவடு பாய்ந்து முற்றத்துக்குக் குடு குடுவென்று ஓடினாள்.
துரைக்கு நெஞ்சு படபடவென்று அடித்தது.
சொற்ப நேரம் மௌனவிரதம்.
மறுபடியும் புதிய வெடில் நாறல் நாற்றம் துரையின் நாசித் துவாரங்களில் மொய்த்த போது அவர்பாடு பெருஞ்சங்கடமாய்ப் போயிற்று. வயிறு குமட்டுவதுபோல் ஒரு கொந்தளிப்பு.
இந்த நரக வேதனை எதற்கு? எழுந்து போவதா விடுவதா?
மனசு கணை தொடுத்து அடித்துக்கொண்டது
அந்த வேளையாகப் பார்த்துத் திடீரென்று அருண்டு எழுந்த குழந்தை ஒன்று குடிசை அதிருமாப்போல் அம்மே என்று அலறி வீரிட்டுக் கத்தவே, துரைக்கு ஆகவும் நடுக்கம் எடுத்தது. தேகம் அடங்க ஓரே திடுக்காட்டம்.
நிலைவரம் சரியில்லை.
என்றாலும் இவன் கங்கணங்கட்டியபடி இந்த அக்கினிப் பரீட்சை அதிலே தான் அடையும் வெற்றிவாகை இவற்றையெல்லாம் யோசித்தபடியால் தாக்கற இருந்துகொண்டான்.
அச்சமயம் சொல்லிவைத்தமாதிரி எங்கிருந்தோ ஆணும் பெண்ணுமாகப்படையெடுத்து வந்த மூன்று சின்னஞ்சிறுசுகள், தங்களுக்கு ஒருபோதும் பழக்கமோ பாத்தியதையோ இல்லாத இந்த அந்நிய மனிதனான வீரன் முன்னே இந்தத் துரைக்கு எதிரே தங்கள் பிறந்த மேனிகளான கோலங்களைப் பற்றிய அசூசை கூச்சம் அச்சம் கொஞ்சங்கூடவின்றி வெகு சாதாரணமாக நின்று விடுப்புப் பார்த்தனர்.
மூத்த பெண் கலகலத்துச் சிரிக்க, அருகில் நின்ற இரண்டு பையன்களும் சிணுங்கிக்கொண்டு அந்நியரான இந்தத் துரைக்குத் தங்களைக் காண்பித்தபடி, ஏதோ ஒரு விந்தையான காட்சியைக் காண்கின்ற பாவனையில் முகங்களிலே ஆவல் தேங்க, இந்த வெள்ளைத் துரையையே கண்ணூனிப் பார்த்தார்கள்.
சின்னப் பையன் மேலுதட்டில் வழிந்த மூக்குச்சளியை வலது தடவித் தனது தொடையில் அப்பித் பக்கத்தில் நின்ற சிறுமி அக்காக்காறிக்கு புறங்கையால் ஒருபாட்டம் துடைக்கவே, பையனின் அருவருப்பு உண்டாயிற்று.
உடனே அவள் துரையை ஒருவித குற்றமுகபாவ உணர்வோடு நொய்து தம்பிப் பயலை அதட்டி, டேமூதி, மூக்குச் சளியத் தொடையில பூசிக்கிட்டியே…? ஏன்டா, செத்தையில துடயேண்டா கழுதே என்று ஒரு பெரிய பாட்டியாட்டம் புத்தி சொல்லிவிட்டு அவளே அந்த வழு சளியை துடைத்துத் தன் காற் பாதத்தில் தேய்த்த பின் துரையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
மூலையில் குப்பிவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது.
அவர்கள் முகங்களில் அப்பிக்கிடந்த ஊற்றைப் படலம் திட்டுத்திட்டாக உறைந்துவிட்டதை அப்போது அவன் கவனம் ஈர்த்தது. சிலும்பலடித்துப் பறட்டையாய்ப்போன அவர்களின் தலைகளில் பிடித்த ஊற்றைப் பிசாண்களிலிருந்தே புதிதாக நெருடி நாறுகின்ற வெடில் அடிக்கிறதென்பதை அவன் அனுமானிக்கவே குடல் ஒருபாட்டம் புரண்டு வயிறு குமுக்கென்று குமட்டியது. ஓங்காளம் வருவதுபோல் தொண்டைக்குள் ஒரு வித அமுக்கம்.
கைலேஞ்சியை எடுத்து விரித்து முகத்தைத் தடவி மூக்கை அடைத்துப் பிடித்துக்கொண்டான்.
என்ன நினைப்போ தெரியவில்லை. சர்வ நிர்வாணமாகத் துரைக்கு முன்னே நின்ற அந்தப் பெண் குட்டி சடாரென்று பக்கத்தே தாவிப் போய் தாயானவள் ஏலவே வெளியே இழுத்துப் போட்ட கிழிசல் துவாயை எடுத்துத் தனது உரிஞ்சாண அரையை மறைத்துக் கட்டிக்கொண்டு ஒரு புதுமணப் பெண்மணிபோல் நாணிக் கோணிக்கொண்டு மறுபடியும் அவன் முன்னே வந்து நின்று சிரித்தாள்.
மூன்று குழந்தைகளையும் அருவருப்போடும் இரக்க சிந்தனையோடும் மனங்குழைந்து இவன் பார்த்தான். ஆகச் சின்னது மெல்லத் தவழ்ந்து போய் அவனின் துரையின் காற்சட்டையை அப்பிப் பிடித்து எழுந்து நின்று முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேவிச் சிரித்தது.
“சீ சனியன்” என்று- அந்த தவ்வலைப் பிறங்கையால் தள்ளிவிட அவன் மனம் ஆக்ரோஷமாக உந்தியபோதும், அவன் அந்தக் குழந்தையை கைகொடுத்துத் தூக்கவோ, பிடித்து தள்ளிவிடவோ, போ சனியனே என்று விரட்டிவிடவோ அல்லது அணைத்தெடுக்கவோ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
மிகச் சாதுரியமாக இதைக் கவனித்த மூத்த பெண்குட்டி அந்தக் குட்டித் தம்பியை பிடித்துச் சற்றுப் பின்னுக்கிழுத்து வைத்துக்கொண்டு அதன் பாஷையைப் புதிய பரிமாணத்தில் மொழிபெயர்த்தாள்.
“சேர், எங்க தம்பி ஒங்ககிட்ட என்னமோ கேக்குது?”
உண்மையாகவே இந்தச் சேர் என்னும் வீரத்துரையின் அடிவயிறு அப்போது பற்றி எரிந்தது.
வாயில் போட்டுச் சுவைக்கிற பண்டங்களில் ஒன்றுகூட தான் கையில் எடுத்து வரவில்லையே என்ற ஆதங்கம்.
ஓ… நான் இந்தக் குழந்தைக்காகவா இவர்களை இந்தக் கோலத்தில் பார்க்கவா வந்தேன்?
ஒரு கணம் தன் மனச் சுமையை இறக்கிச் சமாளித்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தான்.
குழந்தைகள் அனைவரும் ஏதோ ஒரு நம்பிக்கையோடு அணிலை ஏறவிட்ட நாய்க்குட்டிபோல் துரையின் முகத்தையே ஒருவித தவிப்போடு ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
என்னிடம் ஒன்றும் இல்லை, என்று கைவிரிக்க அவன் மனசு ஏவுதில்லை. மெதுவாக சேட் பொக்கற்றுக்குள் விரல்களால் கோதி எடுத்த ஒரு நோட்டை விரித்துப் பார்த்தான்.
ஐந்து ரூபாய்த் தாள்.
அதைக் கண்ட சிறுவர்கள் பெண்குட்டி உட்படத் தங்களது கண்களை அகலதிறந்து சூப்பிணிக் கரங்களைக் கோர்த்துக்கொண்டு சிமிட்டிச் சிமிட்டிச் சிரித்தார்கள்.
கண நேரத்துள் அந்தத் தவ்வல் குழந்தையின் கைக்குள்ளே நோட்டைச் சுருட்டித் திணித்துவிட்டு துரையானவர் முகம் மலரச் சிரித்தார். சிரித்துவிட்டு நிமிர்ந்தபோது அக்குழந்தையின் இந்த தாயானவள் இங்கிதமாக இந்த துரையை வரவேற்ற அந்தப் பெண்ணானவளின் குரல் மறுபடியும் கணீரித்துக் கேட்டது.
“சேர், தேத்தண்ணி குடியுங்கோ”
ஓ…..
அவன் கொஞ்சம் கூடத் தயக்கமோ கிலேசமோ அசூசையோ கொள்ளாமல், அவள் கொடுத்த தேநீர் கிளாசைக் கையில் ஏந்தி வைத்துக்கொண்டு, அவளை ஒரு புன்னகை ததும்ப ஞானிகளின் சம்பூர்ண விஸ்தாரப் பாணியில் கனன்று பார்த்தான்.
அவளும் அந்தர கோலத்தில் துரைக்கு எதிரே திகைத்துப்போய் திமிறிச் சிரித்தபடி நின்றாள்.
வெளியே மின்மினிப் பூச்சிகளின் ஒளிக் குமிழ்கள் தெட்டந் தெறியனாக மின்னின.
6
பெரும் எடுபிடியோடு சம்சாரிக்க அந்தரப்பட்டு வந்த இவன் இந்தத் துரை தனக்கு முன்பின் பழக்கமில்லாத ஓர் அந்நியப் பெண்ணான தன்னோடு நீண்டகால உறவு பூண்டவன் போல் சிரித்தபோது, அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு விஷமம் இருப்பதாகவே அவள் யூகித்தாள். ஆனால், தன்னை அது ஆகர்ஷிக்காத தோரணையில் நடித்து அவன் எதை எதிர்பார்த்து வந்தானோ அதற்காக அந்த விஷயத்தை நினைவுகூரும்படியாக அவனுக்கு ஓர் ஆவலைத் தூண்டும் பொருட்டுத் தன்னுள் ஒரு புதுக்கோலங்கொண்டு. அவன் எதிரே ஒரு கட்டிய புருஷனைப் பார்க்கிறசாடை கூச்சமற்ற கனிவோடு பூ விரித்த இதழாகச் சிரித்து நின்றாள்.
துரையோ அப்பவும் அதே திகைப்பில் இதயமும் மனமும் நைந்து கலங்கிப் போயிருப்பதைக் கவனித்த இவள், குழந்தைக்குத் தாயான ஒருத்தியைப் பூரணமாகச் சம்பவிக்க எந்தவோர் ஆடவன் மனசும் ஒரேவாக்கில் ஏவாது என்ற உடற்கூற்றின் அடியாகவும் உளவியல்ரீதியாகவும் இறங்கியபோது. திடீரென்ரு ஒரு சுளுவான யோசனை அவளுக்கு உதித்தது. அதை அவள் சம்பிரதாயத்துக்கேனும் ஓஞ்சிக்காமல் உரித்த மேனியாகவே சொன்னாள்.
“சேர், நீங்க சல்லியப்பத்தி யோசிக்கிறீர்களாக்கும். அதெல்லாம் அப்பிடியொண்ணும் பெரிய தொகையில்லே… அஞ்சு ஆறு ரூவாக் குடுத்தாப் போதும்”
பச்சை உண்மைகள் அசிங்கமாக வெளிவந்தாலும் அவற்றைத் தெளிவுப்படுத்தும் நெஞ்சு பரிசுத்தமானது என்பது அவன் வாகடம். ஆதலால் அவளின் அந்தப் பச்சையான வெளிப்பாட்டில் அவன் அசூசைப்பட்டதாகத் தெரியவில்லை. அவதிப்படுகிறவனாகவும் தென்படவில்லை.
அவள் கூறிய வார்த்தைக்கு அந்த விஷயத்தை எடுத்துக் கூறிய துணிச்சலான நேர்மைக்கு அவன் அப்படி அர்த்தம் கொண்டானேயன்றி, அவள் கேட்டதற்கு ஒப்பவோ மறுக்கவோ வெறுக்கவோ முடியாமல் மௌனமாகவே இருந்தான்.
துரையின் மெளனம் சற்றுவேளை அவளின் மனசைச் சிப்பிலியாட்டிற்று. அப்போது திடீரெனக் கீச்சிட்ட குழந்தையின் கேரும் குரல் அவளின் அந்தரித்த சூழலைக் குழப்பிவிட்டது. இருந்தும், அவள் அதனைக் காண்பியாமல் திரும்பிச் சென்று குழந்தையை வெளியே தூக்கிவரும்போது சொன்னாள்.
தொரே, சத்தைக்குப் பொறுங்கோ. இதோ குழந்தயத் தங்கச்சிக் கிட்டக் குடுத்துட்டு வந்துடறேன்”
தங்கிச்சியை அழுத்திச் சொன்ன விறுத்தம் துரைக்குக் கிலேசத்தை ஊட்டிற்று.
யோசனையில் ஆழ்ந்துபோன துரை அப்பவும் அசையாமல் ஊமையாகவே இருந்தார்.
நாழிகை ஆயிற்று.
குழந்தை வேறு கைக்கு மாறிப்போன திசையை இவன் கவனிக்கவே இல்லை. ஆனால், அது வீரிட்டுக் கத்திய குரல் மட்டும் கீச்சிட்டுக்கொண்டேயிருந்தது.
பரபரப்போடு திரும்பி வந்தாள். வந்தவள் துரைக்கு எதிரே நின்று கைகளால் நெஞ்சை அமர்த்தித் திமிறிச் சிரித்துக்கொண்டு ஒருவித நாணிப்போடு பார்த்தாள்.
“தொர இம்புட்டு நேரமா ஏன் ஒண்ணுமே பேசாம இருக்கிறீங்கன் னு இப்பதான் புரிஞ்சுகிட்டேன். வாஸ்தவந்தான்… புள்ளயளப் பெத்தவள்கிட்ட ஆம்படையான் அனுபவிக்கிறதைக் காட்டிலும் இளம்பொண்ணுகூட அனுபவிச்சுண்டாத்தான் சம்சாரிக்கிறது பூரணமாகும்… என்னயப் பிடியாட்டிச் சொல்லுங்க.. தங்கச்சியக் கூட்டியாந்துவுடறேன்… ஒங்களுக்கு இதமாப் பதமா இருப்பா. ஆனா, ஒண்ணு, இலங்குமருப் பொண்ணென்னா ஒரு பத்துப்பதினைஞ்சு ரூவா அதிகமாக் குடுக்கணும். சம்மதமான்னு சொல்லுங்க?” என்று கேட்டு எங்கோ சைகை காட்டிவிட்டு, அவன் முகங்குத்திப் பார்த்தபின் “துரைக்கு இளஞ் ஸைஸ தான் பொருத்தமாயிருக்கும்னு தோணிச்சு. அதனால அடுத்தவூடு போகாம என் தங்கச்சியயே ஒப்பேத்திடறேன்” என்று ஏதோ மாமூல் பிரகாரம் போல் சொல்லிக் கொண்டிருக்கவே, அந்தத் தங்கச்சிக்காறி இந்த அக்காளுக்குப் பின்னே வந்து மருவி நின்று களுக் கென்று சிரித்த ஒலி, அவன் காதில் இனிமையாகக் கேட்டது.
இந்த இருட்டினில் அந்தத் தங்கச்சியை விழி கண்குத்திப் பார்த்த இவன் அப்பவும் எதுவும் பேசாமல் இருந்தான்.
அவள் இவன் எதிரே குழைந்துகொண்டு நின்றாள்.
“அக்கா எல்லாம் சொல்லிச்சுது. பாவமாக் கெடக்கென்னு வந்தேன்… என்னா தொரே, சௌக்கியம் தானுங்களே?” என்று அந்த இளந்தங்கச்சி இந்த அக்காளைக் காட்டிலும் சரஸமாக, இதமாகப் பேசுவதை அவதானித்தபோது அவன் அசந்தே போனான்.
இந்தாள் என்ன மரக்கட்டையே…?
ஒரு நொடிக்குள் வந்த தங்கச்சி எங்கே மறைந்தாள் என்று தெரியவில்லை.
மறுபாட்டம் குனிந்து உள்ளே வந்த அக்காள்க்காறி செத்தைப் படலைத் தூக்கிச் சாத்திவிட்டு கொப்பளித்துப் போன கண்களால் துரையை ஊனித்துப் பார்த்தாள்.
மனசில் வெக்காளம் கெம்பிற்று.
நெஞ்சு விம்ம அவர் எதிரே நின்று கைகளிரண்டையும் உயர்த்தி ஒரு தடவை தன் தலையைக் கோதினாள். கோதிவிட்டு ஒரு ஓரமாக நின்று கால்களால் நிலத்தை உராய்ந்து பக்கவாட்டுகளை ஒருபாட்டம் துப்பரவாக்கிவிட்டு. ஆரணங்குபோல் மெல்ல நகர்ந்து அவன் பக்கத்தில் போய் நின்று சிரித்தாள்.
கண்களில் கலக்கம்.
“என்ன சேர், சரிதானுங்களே?”
இப்படிக்கேட்ட அதே வாயால் அந்தக் குப்பிவிளக்கைப் பூவென்று ஊதி அணைத்தாள்.
குடிசை பக்கென்று இருளில் மண்டியது
தடவினாள்.
தேகம் ஊனிற்று.
ஆள் அரவத்தையே காணவில்லை.
திகைத்துப் போனாள்.
நெஞ்சு இடியுண்டு குமுறிற்று. உற்றுப் பார்த்தாள்.
“துரை”யை – அவனைக் காணவில்லை.
அவள் நெஞ்சு துருத்தியது. அழுகை வரும்போல் கண்கள் பம்மித்தன.
“வெட்கங்கெட்ட தொழில், மானங்கெட்ட சீவியம்.”
யாரையோ கொல்லவேண்டும் போல் குமுறி அழவேண்டும்போல் ஓர் அந்தரிப்பு,ஆவேசம்…
கண்களுள் நீர் துளும்பிற்று.
அந்த இருளினுள்ளே இருளினுள்ளே அவள் தேடலுக்கும் அகப்படாமல் மின்னலாக அவன் எங்கே மறைந்தான்?
நினைக்கவே அவள் நெஞ்சில் பறை கொட்டியது.
துரித கதியில் குப்பி விளக்கைத் தேடி எடுத்துக் கொளுத்திவிட்டு. அங்கலாய்த்தவண்ணம் அவனைத் தேடலானாள்.
அவள் கண்களில் பிரமிப்பும் ஏக்கமுமே எஞ்சி நின்றன.
ஐயோ என்று மறுபடியும் வாய்விட்டு நெஞ்சு கமறக் குமுறவேண்டும்போல் மனம் துருத்திற்று.
எதிர்பாராமல் கொலைசெய்தவள் போல் தத்தளித்த அவள் குப்பிவிளக்கைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மூலைமுடுக்கெல்லாம் தேடியபடி. ஒரு சின்னஞ்சிறு குழந்தைபோல் சிணுங்கிச் சிணுங்கி நெஞ்சும் உடலும் பதகளித்துக்கொண்டிருக்க, ஓர் ஆடவனின் புதிய கம்பீரக் குரல் மணி இலையான்போல் கணீரிட்டது.
“அன்பான சகோதரி, இருட்டில் என்னைத் தேடவேண்டாம். நான் செல்லவில்லை. வெளியில்தான் இருக்கிறேன்.”
எடியெங்கம்மாடியோ!”
தொண்டை கேரக் கரகரத்தாள்.
பயந் தெளிந்த உசாரில் அவளுக்கு உடல் சிலிர்க்க, தானாக ஒரு சிரிப்பு வெடித்தது. மனசு என்னமோவெல்லாம் கற்பனைபண்ணிற்று. கருமங்கள் எதிர்பாராமலும் வியப்பாகவும் இருப்பதால் அவள் தடுமாற்றத்துடன் ஏந்திப்பிடித்த குப்பிவிளக்கை அணைக்காமல் துரையில் முகத்துக்கு எதிரே பிடித்தாள்.
“ஆ…. “
வெடித்துச்சிதறிய தக்காளிப் பழம்போல் “துரையின் கண்களில் நுவைந்த கண்ணீர் இரு கன்னங்களிலும் குதம்பிப் பளபளத்தது.
“அய்யோ சேர், நான் என்ன தப்புச் செஞ்சேன், இதென்னாங்க ஒங்க கோலம்?”
அவள் தலைவிரிகோலமாக நின்று பரதவித்துப் போட்ட கூச்சல் பூகம்பித்த அவன் நெஞ்சில் இடித்தபோது அவன் சிறுகுழந்தைபோல் மிரண்டான்.
“சகோதரி, உனது மனந்திறந்து இதயத்தால் உண்மை சொல்லு, நீ எப்போதாவது இப்படியெல்லாம் உன் மனசு விரும்பித்தான் நடக்கிறாயா?”
அவள் நினைவு தெரிய இற்றைவரை இப்படி ஓர் ஆடவன் மனசுகள் ஊடுருவிக் கேட்டது கிடையாது. யார் யாரோ வந்தபாட்டுக்கு இருந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். இந்த இவன் மட்டும்…?
ஒருவேளை இந்தத் துரை புத்திசுவாதீனக்காரரோ?
அப்படியாகவும் தெரியவில்லை
அன்பான சகோதரி என்று வேறு அழைத்திருக்கிறான்.
பகிரங்கமாகவே தாசியாட்டமாடிய தன்னை ஒரே அந்நிய மனிதன் இன்றுவரை இப்படிப் பாசத்தோடு அதுவும் சகோதரி என்று அழைத்ததில்லை. அப்படிப்பட்ட அவனுக்கு இந்தத் துரைக்கு எதையும் மறைக்க அவள் விரும்பாமல் ஆதங்கத்தோடு நின்று தவித்தாள்.
அப்படி நெற்றிக்கு நேரே நேரிடையாகக் கேட்ட அவன், அவள் முகத்தையே ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் துணிவுகொண்டபோதும் தயக்கமாகவே ஆம் என்று ஒப்புவிக்கும் பாவனையில் ஒரு குற்றவாளிபோல் தலையாட்டினாள்.
ஆனால், இந்த ஒப்புதல் தன் மனசாட்சிக்கு விரோதமாக இருப்பினும், தான் எடுத்தவாக்கில் அவமானப்படக்கூடாதென்பதால் சிறிது பாசாங்குபண்ணினாள். என்றபோதும், அந்தப் பாசாங்கில் அவளிடம் ஒரு பரத்தைத்தனமோ, அசூசையோ, ஆபாசமோகூட இருப்பதாக அவனுக்குப்படவுமில்லை.
“இப்பேர்ப்பட்ட பரிசுத்தமான அவள் இதயத்தில் இந்த ஒழுக்கக் கேடும் அசிங்கமான நடத்தையும் எப்படித் தலையெடுத்தன இவளை இந்த விபசார வாழ்க்கைக்கு ஆட்கொண்டதற்கான தீய சக்தி இவளையும் மீறி எங்கிருந்து உதித்தது” என்கிற விசாரத்தில் அவன் மூழ்கினான்.
வாழ்க்கையில் ஒடிந்துபோய் மரத்துப்போய்விட்ட இந்த ஏழைப்பெண்ணான இவள் தன்னுடன் பழகிய சொற்ப நேரத்தில் எந்த மறைப்போ ஒளிப்போ இல்லாமல் எப்படியெல்லாம் உண்மைகளை வெளிப்படுத்தினாள்? தன்னை எந்தக் கட்டத்திலாவது பத்தினியென்றோ ஒழுக்கசீலியென்றோ பாவனை காட்டாமலே, அப்படியெல்லாம் சத்தியநெறியாக உண்மைகளையே வெளிப்படுத்திய இந்த இவள், தன் மனம் கொஞ்சமும் வருந்தக்கூடாதென்ற மானிட உணர்வோடு அந்த ஒப்புதலைக் கூட எவ்வளவு நாசூக்காக வெளியிட்டாள்” என்பதை இவன் யோசிக்கையில் இவளில் அவனுக்குண்டான இரக்க பாசம் அப்போது மடைதிறந்தமாதிரிக் குமுறிற்று.
உண்மை எப்போதும் அழகானது. இனிமையானது என்பதற்கு இவள் இலக்கணமாகத் திகழ்வதை இவன் தரிசித்த போது இவள் ஒரு பரிசுத்தகன்னியாகவே அவனுக்குத் தோன்றினாள்.
உண்மை கசப்பல்ல. உண்மையை மறைப்பவனுக்குத் தான் உண்மை கசப்பாகிறது என்ற உண்மைக்காயாக விளங்கிய இவள், நொந்துபோன அதல்பாதாள் வாழ்க்கையை இந்த நரகத்து வாழ்க்கையை அன்றாடம் சலிக்காமல் அனுபவித்துக் கொண்டே அப்பட்டமாக உண்மை சொன்னாளே, இந்த இவளை இவன் விட்டகல மனமில்லாமல் இருந்தவாறே தன்னுள் புழுங்கினான்.
அப்படித் தெரிந்தும் பரீட்சார்த்தமாகக் கேட்கிறான்… “நீ உன் மனச் சாட்சிக்கு விரோதமாகவே இப்படியெல்லாம் மனசு ஒத்தே நடக்கிறேன் என்று படு பொய் சொல்கிறாய். நான் நம்பமாட்டேன்.”
அவளை இரக்கம் தோய உற்றுப் பார்த்தான்.
அவள் திகைத்துப்போய் நின்றாள்.
“நீ எதை ஒழுக்கக்கேடு வெட்கங்கெட்டது என்று கருதுகிறாயோ அதை வெளியே மனந்திறந்து சொல்லக்கூச்சப் படும்போது மறைக்கும்போதுதான் அந்த ஒழுக்கக்கேட்டுக்குக் காத்திரமும் அர்த்தமும் உண்டாகிறது. அதையே கூச்சப்படாமல் உள்ளதை உள்ளவாறு சொன்னால், அது எத்தகைய அசிங்கமாக இருந்தாலும் அதுவே ஓர் எச்சரிக்கையாக ஒரு நல்ல வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைகிறது. ஒழுக்கக்கேட்டை அதன் விளைவுகளை மறைப்பதுதான் மிகப் பெரிய ஒழுக்கக்கேடு. அது அந்த ஒழுக்கக்கேட்டுக்கே துணையாகி விடும். உண்மையில் ஒழுக்கங்கெட்டவள் குற்றவாளியல்ல. ஒழுக்கக்கேடாக்கினவன் எவனோ அவன்தான் குற்றவாளி. ஆனபடியால் உன் நெஞ்சு திறந்து மனங்கூசாமல் சொல்லு நீ எப்போதாவது உன் பூரண மன இசைவோடுதான் இப்படி நடந்துகொள்கிறாயா?”
இவன் எழுப்புகிற கேள்விக் கணையின் நெருடல் தாங்காமல் அதன் அர்த்தத்தைப் புரிந்து அதற்குப் பச்சையாகப் பதில் சொல்கிற துணிச்சலைக் காட்டிலும், இப்படிப்பட்ட ஒரு வினோதமான மனிதாத்துமாவிலே அவளுக்கு ஒரு பாச உணர்வு தட்டிற்று. தனது ஆத்மாவைக் கொலைசெய்த நரக வேதனைகளை உள்ளடக்கி அவன் எழுப்புகின்ற ஒவ்வொரு வாக்கியத்திலும் அவள் சொக்கியபோது, வீரனான இவன் இந்தத் துரை அவளின் அன்பான ஒரு தந்தையாக பாசமுள்ள தன் உடன்பிறப்பாய் ஒரு சகோதரன்போல் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதப் பண்பான ஒரு தோழனாக அவள் இதயத்தில் சூல்கொண்டு பரிணமித்தான்.
அவள் மேனி அப்போது பஞ்சு தடவியதுபோல் புல்லரித்துக் கூசிற்று. கொஞ்ச நேரத்துக்குமுன் அவனுக்காகத் தான் செய்த அலங்காரங்கள் அபிநயங்கள் வார்த்தைகள் யாவும் வெறும் பாசாங்கானவை என்று தெரிந்துகொள்ளக் கூடிய அந்தத் துரையை ஏனைய அவன் சக வீரர்களைப் போல் கணித்துக் கொண்டு, தான் புரிந்த சாதுரியங்களையும் சாகசங்களையும் நடத்திய சிருங்கார நாடகங்களையும் நினைத்த மாத்திரத்தில், வெட்க உணர்விலும் பார்க்க அவளுக்கு அழுகைதான் பீறிட்டது.
இவ்வாறாக மாய்ந்து குமுறிக்கொண்டிருந்த அவள், துரை என்ன கேட்டார் என்ற நினைவே அற்றவளாய், சற்று வேளை அக்கூற்றுக்களை நினைவுபடுத்தித் தன்னுள் தவண்டையடித்தாள்.
அவன் கூறிய வாக்கியங்களில் உள்ள அர்த்தங்களைக் காட்டிலும், கடைசியாக அவன் விடுத்துக் கேட்ட அந்த ஒரு கேள்விதான் அந்த ஒரேயொரு கணைதான் அவள் நெஞ்சை ஊடுருவி அறுத்துப் பூதாகரித்து.
நீ எப்போதாவது உன் பூரண மன இசைவோடுதான் இப்படி நடந்துகொள்கிறாயா?
இதற்கு மேல் அவளால் தாங்க முடியவில்லை.
“ஆ… பெண்ணைப் புரிந்த புனிதனே… சத்தியமாய் சொல்றேன்… நான் ஒருபோதும் அப்படியில்லை… என் விருப்பத்துக்கு மாறாகத்தான் நடக்கிறேன்”
அவள் மனம் அழுந்திச்சொன்ன ஒப்புதல் அவளை மீறி அழுகையாக நெஞ்சிலே பீறிட்டுக் குதறியபோது இவன் அவனை வெகு பரிதாபத்தோடு பார்த்தான்.
உண்மையைக் கூறிப் புனிதவதியான பின்னும் நீ ஏன் அழ வேண்டும்? என்று கேட்பதுபோல் இருந்தது அவன் பார்வை.
முழு இதயசுத்தியோடு அந்த அசிங்கமான விஷயத்தை அவள் அவனுக்களித்த ஒப்புதலால் தனது பாவ கிருத்தியங்கள் தன்னைவிட்டு நீங்கியதாக அவளுக்குத் தோன்றியதும் அவள் மனம் சற்று ஆறுதலடைந்தது. என்றாலும், இந்த நரக வாழ்க்கையை அதே நடத்தையில் இத்தனை காலமாக மாமூலாக்கிச் சீவித்த தன்னையும், இதுவரை அதற்காகவே தன்னை நாடி வந்து போன இன்பப் போகிகளையும் எதிர்த்துச் சமாளிப்பது அவளில் ஓர் ஆக்ரோஷமும் மன ஓர்மமும் நெஞ்சுறுதியும் வெறுப்பும் தலைவிரித்தன.
இதயத்தில் மனசில் சிந்தனையில் ஒரே திகைப்பு.
இனி இந்த அவல வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது?
இப்படி யோசிக்கவே மனசில் ஒரு அந்தகாரம் சூழந்தது.
இப்போது தான் ஒரு பரதேசிபோல் நாதியற்றுப்போனதாக ஓர் உணர்வு தட்டவே, அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலுபொலுத்துத் தெறித்தது.
அவன் விறைத்துப்போய் ஆதங்கத்தோடு உற்றுப் பார்த்தான்.
“சகோதரி, இனி ஏன் அழுகிறாய்? நீ அழவேண்டிய காலத்தில் சிரித்தாய், சிரிக்கவேண்டிய நேரத்தில் அழுகிறாய்…”.
இந்த வாக்கியம் அவள் மனசைச் சற்றுத் தேற்றிற்று. உற்சாகமடைந்தவளாகத் தெரிந்தபோது அவன் மேலும் சொல்கிறான்.
“இப்படித்தான் அனேக மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எதிரிகள், நண்பர்கள், விரோதிகள், துரோகிகள் யார் யாரென்று தெரியாமல் அதோ அந்தக் குப்பிவிளக்கானது தானே எரிந்து தானே பிரகாசித்துத் தானே அழிவது பொல், தங்கள் அழிவில் தாங்கள் பலவீனப்பட்டுத் தங்கள் எதிரிகளையே பலப்படுத்துவதோடு மக்களையும் அழிக்க ஏதுவாகிறார்கள். வாழ்க்கையின் அவலங்களுக்கெல்லாம் மூலகாரணம் இதுதான்.”
நைந்துபோன மனித ஆற்றுமாக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களே பாதை தவறிய செம்மறிப்புருவைகளாக அலைந்தும் அழிந்தும் தங்களைப் பலவீனப்படுத்தி எதிரிகளைப் பலப்படுத்திக்கொள்ளும் போது, வெளியுலகமே தெரியாத இந்தப் பேதைப்பெண் இவற்றையெல்லாம் புரிந்து தன்னை நிலைப்படுத்திக்கொள்வது இலகுவான விஷயமாக அவனுக்குத் தோன்றவில்லை. இருந்தும், இவளுள் ஏற்பட்ட மாற்றம் நல்ல ஒரு கருதுகோளுக்கு அவளை இட்டுச் செல்லும் என்று அவன் உறுதியாக நம்பினான்.
“நான் கூறிய விசயங்கள் உன் மனசுக்குச் சங்கடமாகத் தெரிகின்றனவா?”
இப்படிக் கேட்ட அவன் அவளை நேர் விழி குத்திப் பார்த்தான்.
அவள் முகம் குல்லிட்டது. அவன் சொன்னதன் அர்த்தங்கள் அவளுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவன் ஏலவே, ஒரு பெண்ணின் மனநிறைவு, அவள் நிபந்தனையின்றி விரும்புகிற ஓர் ஆடவனோடு இணைவதில்தான் உண்டு என்று சொன்னானே. அதன் அர்த்தத்தையே அவள் புரிந்தாள் விரும்பினாள். அதிலுள்ள புனிதம் அவளுக்கு உவப்பாய் இருந்தது.
இந்த நினைவில் அவள் சுகானுஷியாக இருந்தபோது அதைப் புரிந்துகொண்ட அவன் தொடர்ந்து சொன்னான்.
“வாழ்க்கையின் எதிரிகள் யார் என்றுகேட்டேன் அல்லவா? அந்த எதிரிகளை நீ தெரிந்து கொண்டால்தான் உன் மனஉறுதி வஜ்ஜிரமாகும். ஒருவன் தயவில் மற்றவன் வாழ்க்கை தங்கியிருக்கும் வரை அவன் சுதந்திர ஜீவியல்ல. பலவான் பலவீனர்களை அடிமையாக்கி அந்த அமைப்பில் அவன் சுகங்காணுவதையே வாழ்க்கை என்று பொய்யாகக் கற்பிக்கிறான். இந்த வாழ்க்கை அவனைப்பொறுத்தவரை சொர்க்கமாக இருக்கலாம். ஆனால், பொதுமக்களைப் பொறுத்தமட்டில் இது நரகமாகும். இந்த நரகத்திலிருந்து மனிதர்கள் ஏன் நீயும் நானும் கூட மீளவேணுமாகில் தனிமனித சுதந்திரம் பேசி மனிதகுல வாழ்க்கையைச் சீரழிக்கிற தன்னாதிக்க வர்க்கத்தை எதிர்க்க வேண்டும். அடக்கப்படுகிறவன். அடக்குகிறவனை எதிர்த்தும், ஒடுக்கப்படுகிறவன் ஒடுக்குகிறவனை எதிர்த்தும், சுரண்டப்படுகிறவன் சுரண்டுகிறவனை எதிர்த்தும் போராடும்போது அந்தப்
போராட்டநிலையே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையாகப்படும்…”
அவன் கூறியவற்றை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாளே தவிர, அவற்றின் அர்த்தங்கள் புலனாகிறதாக அவள் முகபாவத்தில் தெரியவில்லை.
“என்னமோ எல்லாம் சொல்றீங்க… நல்ல காரியத்தைத் தான் சொல்றீங்கபோலத்தெரியுது.
ஆனா, சரியாப் புரியமாட்டேங்குதே… புரிஞ்சுக்கிட்டாலும் என்னால என்ன செஞ்சுடமுடியும்..?”
“ஓ….”
தான் எங்கோ சொல்வதை இங்கே இந்த அபலையான இவளுக்கு அளந்துகொட்டியிருக்கிறான் என்பதை அவளின் குறுக்கீடும் கேள்வியும் அவனுக்கு நினைவூட்டின.
அவன் கூறியவை அவளுக்கு உவப்பாக இருந்தபோதும் அவளால் அவற்றை முற்றாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும், அவன் இந்த வாழ்க்கைபற்றிச் சொன்ன உண்மைகள் அவளுக்கு முற்றிலும் சரி என்றே பட்டன. அவன் கூறிய ஒவ்வொரு வாக்கியத்திலும் புதிய கருத்துக்கள் புதுமையான வியாக்கியானங்கள் செறிந்திருப்பதை அவள் அவதானித்தாள்… அவன் கூறினானே அத்தகைய சுய இச்சாபூர்வ அதிகாரவர்க்க ஆதிக்கத்தினருடன் அந்த முகாம் விடுதியில் தனித்திருக்கும் இந்த இவனுக்கு, இந்த வாழ்க்கையின் தாற்பரியங்கள் எப்படித் துலங்குகின்றன…?
இவளுக்கு மூளை மசங்கிற்று. வியப்போடு அவனைப் பார்த்தாள். அப்போது அவன் அவளுக்கு ஒரு கௌரவம் மிக்க துரையாகவோ அந்நியநாட்டு ஜாம்பவானாகவோ அல்லாமல் அவளின் ஓர் உடன்பிறப்பான பாசமுள்ள நல்ல சகோதரன் போலவே தெரிந்தான்.
அவள் மனசு க்ஷண வேளைக்குள் இரங்கி ஊனி, கண்களில் நீர் துளும்பிற்று. தன் சகோதரனாகவே வரித்துக் கொண்ட அந்தப் பிறவியை வாஞ்சையோடு நெருங்கி நின்று பார்த்த அவள், குரல் திக் கிட கேரும் தொனியில் சொன்னாள்.
“உண்மையா நீங்க சொன்னதுபோலத்தான் என் வாழ்க்கை போச்சுங்க. ஆனா, நான் மானங்கெட்டவ… மரியாத கெட்டவ. இப்படியாக்கொத்த நானு ஒங்ககூட பேசவே யோக்கியமில்லாதவ…. எனக்கு இந்த நரகச் சீவியம்…”
இதற்குமேல் அவள் குரல் எழ மறுத்தது. கண்டம் அடைப்பட்டுப் போயிற்று. அவள் தனது நெஞ்சின் சுமைகளை ஒரு நொடிக்குள் இறக்கமுடியாமல் தவித்ததை உணர்ந்த போது, அவன் மனம் தாளாமல் அவளை அணைத்துக் கொண்டு அவனே தேற்றினான்.
“சகோதரி, நீ இப்பதான் தூய்மையடைந்திருக்கிறாய். நீ நடந்து கொண்ட விதம் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. அது உன் வாழ்க்கையில் சுமத்தப்பட்டது. பாவகாரியங்களென்றும் அசிங்கமான சாக்கடைத்தனம் என்றும் நீ எதைக் கருதினாயோ அதற்கெல்லாம் நீ காரணமாகவுமிருக்கவில்லை. நீ எதைத் தவறென்று கருதினாயோ அதையெல்லாம் விசனத்துடன் ஒரு சத்திய நெஞ்சோடு அந்நியனான எனக்கு விஸ்வாசத்துடன் வெளிப்படுத்தினாயே அந்தத் துணிச்சல் எந்த வீரனிடத்திலும் பார்க்கமுடியாத ஒன்று. அசிங்கமானது என்று நீ கருதியதை எப்போது வெளிப்படுத்தினாயோ அப்போதே பரிசுத்தமான பெண்ணாகிவிட்டாய். தூய்மையான வெளிப்பாடு பாவங்களை மூழ்கடித்துவிடுகிறது. உண்மையைப்போல் அழகானது எதுவும் இல்லை என்று சொன்னேனே அது புரிகிறதா? இப்போது நீ மானங்கெட்டவளாக இல்லை. உண்மையின் அழகிலே புனிதமாயுள்ள உன் மானமும் பத்தினித்தனமும் உனக்குள் உறைந்திருப்பதை உண்மையாகவே காண்கின்றேன். நீ பாவம் என்று எதனைக் கருதினாயோ அதுகூட உன்னால் உண்டானதல்ல. மக்களை நேசித்த பரிசுத்தமான தூய உள்ளம் கொண்ட சகோதரியே, பாசத்தினால் உன்னையே தியாகம் செய்த உனக்கு ஈடாக இன்னொரு பெண்மணியைக் காண்பேனாகில் நான் பாக்கியசாலியாவே…”
இந்தக் கணத்தில் அவள் அவன் தோள்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுதாள். தேகங் குலுங்கக்குலுங்க அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.
“சகோதரி, பலவீனங்களைத் தெரிந்தபின் பலவீனங்களுக்காகப் பிரலாபிப்பது கூடாது. நான் சொன்னது சரியென்று பட்டால் அழுவதை நிறுத்திவிட்டு, உன்னைப்போல் ஆகிவிட்ட பெண்களின்இந்த மக்களின் எதிரிகளை நான் முதலில் கூறினேனே. அந்த எதிரிகளை எதிர்க்கத் துணிவு கொள்… நீ இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. அடைவதற்கு இந்த உலகத்தில் எத்தனையோ உண்டு. நானும் உன் கூடவே…”
“சேர்…..ஆ… எங்க அண்ணாச்சி…”
அவள் பெருமிதம்பொங்க நீங்கிய துயரத்தின் வேதனையோடு ஓ வென்று கதறி அவன்மேல் சாய்ந்தாள்.
அவன் நெஞ்சு விம்மிக் குமுறியது.
கைலேஞ்சியை எடுத்து அவள் முகத்தைப்பரிவோடு துடைத்தான்.
தன்னுடன் பிறவாத அந்தப் பெண் பிறவியை இந்தச் சாக்கடைச் சகோதரியை அவன் ஆரத் தழுவி முத்தித்தபோது அவளுக்குப் புதிய வீறு உண்டாயிற்று.
குடிசைக்குள்ளே குப்பி விளக்கு மீண்டும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. புதிய சுடராகசெஞ்சுடராக….
விடிகாலைக்காக வானம் வெளுத்துக் கொண்டிருந்தது…
– நரகத்திலிருந்து… (மூன்று குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.