நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,248
சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு! அவன் நினைத்தபடியே கூட்டம் இல்லை!. முடிவெட்டும் வேலை முடிந்து வெளியே வருகையில், ஏடிஎம்மில் கையோடு கைச் செலவுக்குப் பணமெடுத்துப் போனாலாமெனத் தோன்றவே எதிரிலிருந்த ஏடி எம்மில் நுழைந்தான் அங்கும் கூட்டமில்லை.
‘யார் கண்ணிலும் படாமல் பணமெடுக்க வேண்டும்! கண் கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!. இருபதாம் தேதிக்கு மேல் பணம் கத்தையாய் எடுத்தால் யாருக்குத்தான் கண்படாது?!’ நினைத்துக் கொண்டு உள்ளே போய் மெஷினியக்கி பணமெடுத்து பை ,கிய் எதுவும் கொண்டு போகாததால் முடிவெட்டப் போனவனாச்சே?! செல்லுக்குள் நீள வாக்கில் பணத்தை அடுக்கி கதவைத் திறந்து நிமிர ‘போச்சு! போச்சு..! கட்டட வேலைக்குக் குவிபவர்கள் கூட்டம் வெளியே வாசலில். அதில் வினோத் பார்வையால் கொன்றுவிடுவதுபோல் நின்றிருந்தான். அவனெல்லாம் தினக்கூலியல்லவா?!’
கற்றை நோட்டோடு இவன் வெளியே வர, அவனொரு சினேகப்புன்னகை சிந்தினான். பதிலுக்கு வறட்டுச்சிரிப்பு வரவழைத்துச் சிரித்துவிட்டு’வயிற்றெரிச்சல் புடிச்சவன் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதே ?! நானே முடிவெட்டி மொட்டைக் கட்டையாய் வெளிவருகிறேன். இவன் பார்வை எடுத்த நோட்டை என்ன பண்ணப் போகிறதோ?!’ வெறுப்பாய் சிந்தனை ஓடியது மனசுக்குள்.
அவனோ, தன் சக தொழிலாளியிடம் உரக்க மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தான். ‘சார் நல்ல ராசியானவர். இவர் மொகத்துல முழிச்சிட்டு இன்னைக்கு வேலைக்குப் போறோம் பாரு, நம்ம மேஸ்திரி நிறுத்தி வச்சிருக்கிற நிலுவைத் தொகையையும் இன்னைக்கு சனிக்கிழமை பாரு சேர்த்துக் குடுத்துடுவாருன்னு!’ சொல்ல, படக்குனு தலைகவிழ்ந்தான் முத்துச்சாமி..
கைநிறையக்காசிருந்தும் வாழ்க்கையில் வறுமையிலிருந்து கரையேறிவிட்ட தான், பிறரை கணிக்கையில் நெருப்பாய் இருப்பதாயும் அன்னாடம் கூலிக்கு வேலை செய்யும் தினக்கூலி வினோத் வறுமை நதியில் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும், அடுத்தவரைக் கணிப்பதில் ஜீவ நதியாய் பிரவாகிப்பதாகவும் பட வெட்கித் தலைகுனிந்தான்.