நண்பன்




(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வவுனியா நகரிலே அது ஒரு பெரிய பாடசாலை. அதில் பணக்கார வீட்டு மாணவர்களே அதிகமாகக் கல்வி பயின்று வந்தனர்.

அந்தப் பாடசாலையின் ஆறாம் ஆண்டில் கல்வி பயின்று கொண்டிருந்தான் சங்கரன். அந்த ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரரின் மகன்தான் அவன். அவனுடைய அப்பா ஒரு டாக்டர். வீடு, தோட்டம் என்று சொத்துக்கள் நிறையவே இருந்தன.
வகுப்பில் அவனைச் சுற்றி எப்போதும் ஒரு மாணவர் கூட்டமே இருக்கும். அத்தனை பேரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளே! அவர்களுக்காக அவன் கண்டபடி காசை இறைத்துச் செலவளிப்பான்.
சங்கரன் படிப்பில் நல்ல கெட்டிக்காரன். வகுப்பில் கூட முதலாம்பிள்ளை அவன்தான். ஆனால், அவனுக்கு ஏழை மாணவர்களை அறவே பிடிக்காது. அவர்களைக் கண்டால் கீரி பாம்பைப் பார்ப்பது போல பார்ப்பான். அவர்களை ஒதுக்கி வைப்பான்.
அப்போது அந்த வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தான் சேகர். குளங்களிலே இருக்கும் தாமரைப் பூக்களைப் பறித்து விற்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
அவன் ஏழையாக இருந்தாலும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததனால் அவனுக்கு அந்தப் பாடசாலையில் இடம் கிடைத்தது. சேகரும் கூட படிப்பில் நல்ல கெட்டிக்காரன்.
தவணைப் பரீட்சை முடிவடைந்து பெறுபேறுகள் வெளியாகியிருந்தன. அதில் சேகர் முதலாம் பிள்ளையாக வந்தான்.
ஏழை என்றாலே கௌரவக் குறைவாக நினைக்கும் சங்கரனுக்கு சேகர் தன்னை முந்திக் கொண்டு முதலாம் பிள்ளையாக வந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. அவனை வகுப்பிலேயே ஒதுக்கி வைத்தான். மற்ற மாணவர்களை அவனுடன் சேரக் கூடாது எனக் கட்டளையிட்டான்.
சேகரும் அதனை நினைத்துக் கவலைப்படவில்லை. தனது வறுமையை எண்ணி அவனிலிருந்து ஒதுங்கிக் கொண்டான்.
ஒருநாள் சங்கரனும் நண்பர்களும் வவுனிக் குளத்திலே குளிக்கச் சென்றிருந்தார்கள். அங்கே அவர்களைத் தவிர வேறு ஒருத்தரும் இருக்கவில்லை . இதனால் அவர்கள் சந்தோசமாக நீந்தி நீந்திக் குளித்தார்கள்.
நண்பர்கள் நன்றாக நீந்தப் பழகியிருந்தனர். ஆனால் சங்கரனிற்கோ அவ்வளவு நீந்தத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் நீந்துவான்.
குளத்தின் நடுவிலே அழகிய ஒரு தாமரைப்பூவைக் கண்டான் சங்கரன். எப்படியாவது அதனைப் பறிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பூவைப் பறிப்பதற்காக மெல்ல மெல்ல நீந்திக் குளத்தின் நடுவே போய் பூவைப் பறித்தான். அதற்கு மேல் அவனால் நீந்த முடியவில்லை. களைத்துப் போனான்.
“என்னைக் காப்பாற்றுங்க……… என்னைக் காப்பாற்றுங்க…….” என்று பல முறை நண்பர்களைப் பார்த்துச் சத்தமிட்டான். நீரின் நடுவிலே நின்று தத்தளித்தான்.
இதனைக் கண்ட நண்பர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பயம் பற்றிக் கொண்டது. கரையில் இருந்த உடைகளை எடுத்துக் கொண்டு விட்டை நோக்கி ஓடி மறைந்தார்கள்.
அப்பொழுது பூப்பறிப்பதற்காக குளக்கரைக்கு வந்தான் சேகர். அங்கே “என்னைக் காப்பாற்றுங்க.. என்னைக் காப்பாற்றுங்க……..” என்ற அவலக்குரல் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல் போல் இருந்தது. குளத்தைப் பார்த்தான். குளத்தின் நடுவிலே யாரோ தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
உடனே குளத்தினுள் பாய்ந்து நீந்திச் சென்றான். அதற்கிடையில் நீரின் அடியினுள் போய்க் கொண்டிருந்தான் சங்கரன்.
பலம் கொண்ட மட்டும் இழுத்துக் கொண்டு வந்து கரைக்குச் சேர்ந்தான் சேகர்.
அப்பொழுதுதான் பார்த்தான். அவன் சங்கரன். அவன் மயங்கிப்போய்க் கிடந்தான்.
அவசரம் அவசரமாக முதலுதவி செய்தான். நீண்ட நேரத்தின் பின்பு மயக்கம் தெளிந்து கண்ணைத் திறந்தான் சங்கரன். அவனுடைய கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவனுக்கு முதலுதவி செய்துகொண்டிருந்தான் சேகர். அவனுடன் வந்த நண்பர்களைக் காணவில்லை.
“சேகர், ஏழை என்பதற்காகத்தானே நான் உன்னை ஒதுக்கி வைத்தேன், நீதான் ஆபத்துக்கு வந்து என்னைக் காப்பாற்றி விட்டாய். நீ இல்லாமல் விட்டால் இப்பொழுது நான் உயிருடன் இருக்க முடியாது. என்னை மன்னித்து விடு. இனி நீயும் நானும்தான் உயிர் நண்பர்கள்”
சங்கரனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.
– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு