தோல் தட்டிப் போயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2025
பார்வையிட்டோர்: 348 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, அண்ணந் – தம்பி ரெண்டு வேரு. தாய் தகப்பன் இல்ல. மூணு மாடுதான் இவங்க சொத்து. இந்த மூணு மாட்டயும் வச்சு, வேல செஞ்சுக்கிட்டு இருக்கயில, ரெண்டு வேருங் கலியாணஞ் செஞ்சுகிட்டாங்க. 

வந்தவ சும்மாவா இருப்பா! குடும்பத்ல கசபுசலாகுது. இப்ப எங்க வீட்ல மாதிரி. 

அண்ணனுந் – தம்பியும் பங்கு பாகம் பிரிக்றாங்க. பிரிக்றதுக்கு அங்க என்னா இருக்கு? மூணு மாடுதான, இதுல அண்ணனக்கு ரெண்டு மாடு. தம்பிக்கு ஒரு மாடுமா பிரிச்சுக்கிட்டாங்க. 

அண்ணன் பொண்டாட்டி, தம்பியக் காங்கவிட மாட்டேங்குறா. கரிச்சுக் கொட்டுறா. தம்பி வச்சிருக்கிற, அந்த ஒரு மாட்டயும் கொல்லச் சொல்லி, புருசனத் தூண்டி விடுறா.

பொண்டாட்டி சொல்லக் கேட்டுக்கிட்டு, தம்பியோட, ஒரு மாட்டயும் கொண்டு போட்டுட்டர். தம்பிக்கு ரொம்ப வருத்தம். அண்ணன, என்னா செய்யுறதுண்ட்டு, அந்தத் தோல எடுத்துக்கிட்டு, சந்தக்கி விக்கப் போறர். 

வெள்ளணாவே எந்திருச்சுப் போறர். போற வழில, கழவாணிங்க, கழவாண்ட காசுகளப் போட்டு, ஆளுக்குக் கொஞ்சமா பகுந்துகிட்டிருக்காங்க. 

இவ, பயந்துகிட்டு, தோலத் தட்டிக்கிட்டே போறர். தோல் சத்தத்தக் கேட்ட கழவாணிங்க, தோல் தட்டிப் பேயி வருதுண்ட்டு, பணங்காசுகளப் போட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க. 

-அந்தப் பணங் காசுகள, தோலுக்குள்ள அள்ளிப் போட்டுக் கெட்டிக்கிட்டு, வீட்டுக்கு வந்திட்டா. வீட்ல வந்து கொட்றர். பொண்டாட்டிக்கிண்டா ஆச. இங்ஙிட்டோடுறா! அங்ஙிட்டோடுறா! கடசில, 

பணத்த அளக்க, அண்ணன் வீட்ல போயி நாழி (படி) வாங்கிட்டு வாடிண்டு பொண்டாட்டிய அனுப்பி வைக்கிறா. பொண்டாட்டி போயி, படி குடுக்காண்டு, மச்சான் பொண்டாட்டிக்கிட்டக் கேக்றா. அப்ப, அவ சொல்றா, ஒங்கிட்டத்தான் ஒண்ணுமில்லயே, படி எதுக்குடிண்டு கேக்குறா. 

கேக்கவும், எம் புருசன், தோலக் கொண்டு போயி, நெறயா பணங்காசு அள்ளிட்டு வந்திருக்கு. இ அத, அளந்து அடுக்குப் பானயில போட்டு வைக்கணும்ண்டு சொல்றா. 

இதக் கேக்கவும், அவளுக்குப் பொறாமயாப் போச்சு. ராத்திரியோட ராத்திரியா, ரெண்டு மாடுகளயும் அடுச்சு, தோல உருச்சு, எடுத்துக்கிட்டு, அண்ணன், தம்பி போன பாத வழியாப் போறா. 

போகயில, அதே மாதிரி கழவாணிங்க மரத்தடியில ஒக்காந்து பணங்காசுகளப் பகுறுறாங்க. கழவாணிகளப் பாத்திட்டு, அண்ணங்காரன் பலமா தோலத் தட்டுறா. தட்டவும் கழவாணிங்க சுதாரிச்சுட்டாங்க. நேத்து, நம்மள ஏமாத்திட்டு போனவண்டாண்ட்டு, அவனப் புடுச்சு அடுச்சு, சாக வச்சுப் பொதச்சுப்பிட்டாங்க. 

தம்பி நல்லா பொளைக்கயில, அண்ணன் பொண்டாட்டி அழுது செத்தாளாம். பொறாம புடுச்சவளுக்கு, புருசன் செத்தது, மாடு செத்ததுதான் மிச்சம். புருசனச் சாகக் குடுத்தவ மொகத்ல முளிச்சா ஆகுமா? ஆகாது. அதான் கைமுண்டச்சிய பாக்குறதில்ல. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *