தோற்றம் கண்டு இகழாதே…!





ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் புள்ளிமான்குட்டி மேரி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக அங்கே வரும்; அவ்வாறு வருவதற்கு அது மிகுந்த ஆவலாய் இருக்கும் அதற்குக் காரணம் உண்டு அந்த ஆலயத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனத்தில் விதவிதமாய் பூக்கள் பற்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மேரியைப் போன்றே மற்ற மிருகங்களின் குட்டிகளும் அங்கே வரும் பெரியவர்கள் பிரார்த்தனையில் இருக்க, குட்டிகள் சேர்ந்து கொண்டு நந்தவனத்தில் ஆட்டம் போடும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அந்த தேவாலயத்தைச் சுற்றி முளைக்கும் சிறுகடைகள் உண்டு; அங்கே கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் வேறு கிடைக்கும் சொல்ல வேண்டுமா? குட்டிகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடும்.
மேரிக்கு அந்த நந்தவனத்தில் பிடிக்காத விஷயம் ஒன்றும் இருந்தது. அது குரங்குக் குட்டிகள்; அவைகள் பார்ப்பதற்கு வரிக்குதிரைக் குட்டிகள் போன்றோ சிவிங்கிக் குட்டிகள் போன்றோ முயல்களைப் போன்றோ அழகாக இராது அறுவறுப்பாக இருக்கும் அதனால் இவைகள் அந்தக் குரங்குகளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாது அவைகள் மரத்தின் கிளைகளில் பரிதாபமாக அமர்ந்தபடி இவைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்தபடி இருக்கும். ஒருநாள் மேரியின் அம்மா இதனைக் கவனித்து விட்டார்.
“நீங்க ஏன் அந்தக் குரங்குக்குட்டிகளை விளையாட்டுல சேர்த்துக்க மாட்டேங்குறீங்க!” – கேட்டார் அவர்.
“அதுங்க என்ன அழகாவா இருக்கு? அதுங்களை எப்படி விளையாட்டுல சேர்த்துக்க முடியும்?” – மேரி கேட்டது.
“உருவத்தை வைச்சு ஒருத்தரை எடை போடக்கூடாது! அவங்க செயலை வைச்சுதான் மதிக்கக் கத்துக்கணும் ! நீங்க அதுகளையம் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க!” – என்றார் அவர். ஆனால் மேரி அம்மாவின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. என்ன காரணத்தாலோ மற்ற நண்பர்கள் யாரும் அன்றைக்குக் கோயிலுக்கு வரவில்லை. மேரிக்கு ரொம்பவே போரடித்தது. “மலைக்கோவிலுக்கு மெனக்கெட்டு வர்றதே சாமி கும்பிடத்தான்! நீ ஒழுங்கா பிரார்த்தனை பண்றதில்ல! சின்னப்பிள்ளைங்குறதுனால மன்னிச்சு விடுறேன்! நீ பெரியவளான பின்னாடி இப்படி இருக்கக்கூடாது! சரியா?” – என்றார் அம்மா. அவர் மேரியை விடாப்பிடியாகப் பிரசங்கம் கேட்க அழைத்துச் சென்றுவிட்டார். அங்கே ஒரு கரடியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
“தேர் இருக்கிறது! அதை நாம் வடம் பிடித்து இழுக்கிறோம்! வடத்தை இழுப்பதை விட்டுவிட்டால் தேர் நின்றுவிடாது! தேரை நிறுத்த அச்சாணி தேவைப்படுகிறது! தேர் எத்தனை பிரமாண்டம்! அச்சாணியின் உருவத்தை தேரின் உருவத்தோடு ஒப்பிட முடியுமா? ஆனால் அச்சாணி எத்தனை பெரிய வேலையைச் செய்கிறது! அது போன்றுதான் உயிரினங்களும்! நாம் யாரையும் அவர்களின் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது! குணத்தைப் பார்த்து மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இதைத்தான் மறைவேதாந்தமாம் வள்ளுவம் ‘உருவுகண் எள்ளாமை வேண்டும்’ என்று குறிப்பிடுகிறது!” – என்றார் அவர். மேரி வேறு வழியின்றி அந்தக்கரடியின் வார்த்தைகளைக் காதில் வாங்கிப் போட்டுக் கொண்டது. அப்போது அதற்கு அந்த குரங்குக் குட்டிகளின் அவலட்சணமான முகம் ஞாபகத்திற்கு வந்தது. அது தனக்குத்தானே ஒருமுறை அலட்சியமாகச் சிரித்துக் கொண்டது.
ஒருநாள் பக்கத்து காட்டிலிருந்து மேரியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருந்தார்கள். அதில் மற்றொரு குட்டிமான் இருந்தது. இரண்டு சிறியமான்களும் சேர்ந்து நன்கு உறவாடின ஒருவருக்கொருவர் தங்களின் வீரதீர பிரதாபங்களைச் சொல்லி மகிழ்ந்தன அப்போது மேரி தேவலாயத்தின் அழகிய நந்தவனத்தைப் பற்றி சொன்னது. “எனக்கு அந்த நந்தவனத்தைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு!” – விருந்தாளி மான் சொன்னது.
“ஞாயிற்றுக்கிழமை மட்டுந்தான் நாங்க அங்க போவோம்!” – சொன்னது மேரி.
“நாளைக்கு சாய்ங்காலம் நாங்க ஊருக்குப் போயிருவோமே? ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நிறைய நாள் கிடக்கே! நான் எப்படி பார்க்குறது?” – கேட்டது விருந்தாளி மான்;
“நீ ஒன்னும் கவலைப்படாத! நாளைக்கு நான் உன்னை அங்க கூட்டிட்டுப் போறேன்! யாருக்கும் தெரியாம நாம அங்க போயிட்டு வந்துருவோம்!” – சொன்னது மேரி.
பெரியவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் இரண்டும் கிளம்பிவிட்டன. சூரியன் கிழக்கே எழுந்து கொண்டிருந்தது. மலைப்பாதையின் இருபுறமும் இருந்த மரங்களில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அவைகள் தரையின் பனிப்பொழிவில் புரண்டு மஞ்சள் வெயிலில் இரத்தினக் கம்பளம் விரித்தது போன்று மினுமினுத்தன குட்டிகள் இரண்டும் உற்சாகமாக ஏற ஆரம்பித்தன. சிறிதுதூரம் சென்றிருக்கும் மரங்களில் இருந்த குரங்குக் குட்டிகள் கிளைகளை பலமாக ஆட்டிக் கூச்சலிட்டன.
“இதுங்க ஏன் இப்படி கத்துதுங்க?” – விருந்தாளி மான் கேட்டது.
“கண்டுக்காம வா! இதுங்களை நாங்க விளையாட்டுக்குச் சேர்த்துக்கிட மாட்டோம்! அதுனால நம்மகிட்ட வம்பு பண்ணப் பாக்குதுங்க!“ –சொன்னது மேரி. மான்கள் முன்னேறிச் சென்றன. இப்போது குரங்குகளின் கூச்சல் மேலும் அதிகமானது. “இதுங்க பண்றதைப் பார்த்தா எனக்கு வேற மாதிரித் தெரியுது! தரைல இருக்குற சின்ன மிருகங்களுக்கு பெரிய மிருகங்களால ஏதாவது ஆபத்துனா மரத்துல இருக்குற குரங்குகள் இப்படி படபடக்குமாம்! எங்க அம்மா சொல்லிருக்காங்க!” – என்றது விருந்தாளிமான்.
இரண்டும் கண்களைச் சுழலவிட்டன. அவைகளுக்கு முன்னால் சுமார் முப்பதடி தூரத்தில் சிறுத்தை ஒன்று பாதை ஓரம் பதுங்கி இருப்பதைப் பார்த்துவிட்டன.
இரண்டிற்கும் முதுகுத்தண்டு சில்லிட்டுவிட்டது.
“கர்த்தரே! இப்ப என்ன பண்றது?” – விருந்தாளி மான் கேட்டது.
“நாம அதை கவனிச்சிட்டது தெரிஞ்சா அது உஷாராயிடும்! எப்படியாவது தப்பிக்கணும்!” – மேரி சொன்னது. முன்னே செல்வது போன்று பாசாங்கு காட்டிவிட்டு சரேலென இரண்டும் பின்னோக்கிப் பாய்ந்தன. சிறுத்தை சுதாரிப்பதற்குள்ளாகக் கிடைத்த சிறிய அவகாசத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடி வந்துவிட்டன. சிறுத்தை விரட்டிப் பார்த்தது. முடியவில்லை. குட்டிகள் தப்பிவிட்டன. மூச்சிரைக்க ஓடிவந்த குட்டிகள் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறின. சொல்லாமல் கொள்ளாமல் போனதற்காக பெரியவர்கள் குட்டிகளைக் கடிந்து கொண்டார்கள். அவர்கள் ஆசுவாசப்படுத்திய பின்புதான் குட்டிகள் இயல்பிற்கு வந்தன.
இரவுப்பொழுது, காலையில் நடந்த சம்பவத்தை நினைத்து மேரி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தது அம்மா மான் அருகே வந்தமர்ந்து அதன் முதுகை மெல்ல வருடியது.
“அடுத்தவாரம் நான் கோவிலுக்குப் போகும்போது அந்தக் குரங்குகள்ல்லாம் ஏன் கூட பேசுமாமா?”
“ஏன்?” – இது அம்மா.
“அதுகளோட உருவத்தை வைச்சு அதுகளை மட்டமா நினைச்சேன்! அதுககிட்ட மோசமா நடந்துகிட்டேன்! அது எதையும் மனசுல வைச்சுக்காம அதுக பெருந்தன்மையா எங்களைக் காப்பாத்திருச்சுங்க! எனக்கு வெட்கமாக இருக்குமா!” – என்றது மேரி.
“தவறு செய்யுறது எல்லாருடைய இயல்புதான்! அதுக பேசாட்டியும் பரவாயில்ல! நீயே வலியப்போய் அதுககிட்ட பேசு! உன்னோட செயலுக்கு மன்னிப்புக் கேளு! அதுங்களையும் உங்க விளையாட்டுல சேர்த்துக்கோங்க! உருவத்தை வைச்சு ஒருத்தரை எடைபோடக் கூடாதுங்குறது இப்பவாவது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்! நடந்த சம்பவம் உனக்கு ஒரு பாடமா இருக்கட்டும்!” – என்றார் அம்மா. அம்மா சொன்னதை தலையாட்டி ஏற்றுக்கொண்ட குட்டிமான் மேரி நிம்மதியாகத் தூங்கச் சென்றது.