தொலைவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 10, 2025
பார்வையிட்டோர்: 3,553 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏமாற்றி விட்டாள்! சே… பாதகி” என் மண்டை பிளந்துவிடும் போலிருந்தது. கடைசியில், எல்லாமே கதையாக வெறுங் கனவாய்ப் போகவேண்டியது தானா? 

“இனிப் போவதற்கு என்ன இருக்கிறது? எல்லாமே போய்விட்டதே.” 

என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. 

அம்மா அன்றைக்கே சொன்னாள் சாடைமாடையாக. 

‘தம்பி. விமலா என்னதான் நல்லவளாக இருந்தாலும், அவளுடைய குடும்பம், சூழல், சரியில்லை” என்று அம்மா சொன்னது அத்தனையும் மெய். 

அன்று அவளின் நினைவாற் பித்தனாகி வீட்டிலிருந்த நான் தான் அதையுணரது முட்டாளாகி விட்டேன். ஆத்திரத்தில் இதயம் நடுங்கியது எனக்கு. 

ஓரொரு சமயம் என்னால் நம்பக்கூட முடியவில்லை. “குழந்தை மனம் படைத்த அவளால், இது கூடச் செய்ய முடியுமா? ‘முடியும்” என்று தான் என் கையிலிருந்த கடிதம் சொல்லிக் கொண்டிருந்தது. 

ஏறக்குறைய மனப்பாடமாகிவிட்டிருந்த அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை படித்தேன். 

அன்பின் சகோதரா, 

தாங்கள் நினைப்பதுபோல, விமலா நல்லவள் அல்ல. அவளுக்கு வேறொரு ‘நண்ப’னிருக்கிறான். அவளை மறப்பதுதான் உங்கள் நல்வாழ்விற்குகந்த செயல். தங்கள் மீதுள்ள மதிப்பினாலும் அன்பினாலுமே இதனை எழுதினேன். 

தங்கள், ‘சாந்தி’ 

கடிதம் என்னவோ நாலே வரிதான், ஆனால், என்னுடைய நாலாண்டு நம்பிக்கையைத் தகர்க்கிற சக்தி அதற்கிருந்தது. 

‘இந்தக் கடிதம் ஏன் பொய்யாக இருக்கக்கூடாது?’ 

அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளான அந்நிலையில், சற்று உற்சாகமடைவதற்கு என்னை நானே இப்படிக் கேட்டுக்கொண்டேன். 

எவ்வளவு ஆறுதலாக யோசித்தாலும், ‘கடிதம் உண்மைதான்’ என்ற முடிவிற்கே என்னால் வரமுடிந்தது. இந்தச் சாந்தி, அவளுடைய உயிர்த்தோழி. என்னுடனும் நன்கு பழகியவள். இருவருக்குமிடையில் மனஸ்தாபம் எழுந்து அதன் மூலம் இந்தக் கடிதம் உருவாகியிருக்குமோ? என என் நினைவு ஓடியது. 

அப்படியானால், வாரந்தவறாது கடிதம் போடுகிற விமலாவிடமிருந்து ஏன் இரண்டு மாதங்களாகக் கடிதம் வரவில்லை?’ 

இந்தக் கேள்விக்கு என்னால் விடை காண முடியவில்லை. பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. பழைய நினைவுகளில், மனத் தாவியது. 

நாலாண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம், நீர்கொமும்பிலிருந்தது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டு விஜயரட்னாவின் மகள் இந்த விமலா. அவள் வீட்டில் எல்லோருக்குமே நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தது. 

தங்கைகளின் விளையாட்டுத் தோழியாய் எங்கள் வீட்டுக்கு வந்தவளை, மனத்தினுள்ளே வரவேற்றேன், தெரியாத பாடங்களைக் கேட்க என்னிடம் வருவாள். நாளடைவில், இணைப்பு இறுகியது. எப்படியோ அது காதலென்கிற வியாதி பற்றியுங் கொண்டது. 

அந்த விடலைப் பருவத்திலேயே ‘காதல்’ என்று திரிந்த பைத்தியக்காரத்தனத்தை – அந்த அதிகப் பிரசங்கித்தனத்தை இப்போது நினைத்தால் என்மீதே வெறுப்பாயும் சிரிப்பாயும் இருக்கிறது. 

மூன்றாண்டு காலம், சிரிப்பும் விளையாட்டுமாய்க் கழிந்தது. பெரியவர்களுக்கு எங்கள் பழக்கத்திற் சந்தேகம் ஏற்படாதபடி நடந்து கொண்டோம். போன வருஷம், நாங்கள் யாழ்ப்பாணந் திரும்பியபோது, அவள் அடைந்த வேதனை! அழுத அழுகை! 

இந்த ஒரு வகுடமாக, வாரா வாரம் ஒவ்வொரு கடிதம் எழுதி வந்தாள். அவற்றிற்தான் எத்தனை உணர்ச்சிகள்? வாக்குறுதிகள்? அடுத்த ஆண்டு பல்கலைக் கழகத்தினுள் இருவரும் நுழைந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனை? 

கடைசியில் எல்லாமே கானல் நீராகப் போய்விட இந்தக் கடிதம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 

சாந்தியின் கடிதம் வந்து, ஓராண்டுக் காலமாகி விட் டது. இந்த இடைக்காலத்தில் விமலாவையும், அந்தக் கடிதத்தையும் நான் ஓரளவு மறந்துவிட்டேன். பரீட்சை ஞாபகமும், படிப்பின் நினைவும், என்னை இந்தத் துயரிலிருந்து காப்பாற்றிக் கடுமையாகப் படிக்கச் செய்தன. அதன் பலனாக நான் பல்கலைக் கழகத்துள்ளும் புகுந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. விமலாவும் இங்கே வந்தாளா, இல் லையா என்பதை அறிய நான் ஆசைப்படவுமில்லை. ‘இவளை ஏன் நான் தேடவேண்டும்?’ என்கிற எண்ணமே மேலோங்கியிருந்தது. பேராதனையின் இன்பச் சூழலும், நண்பர்களின் சேர்க்கையும் படிப்பும் என்னை உற்சாகமாகவே வைத்திருந்தன.

அன்று ‘ரந்தோலி பெரஹரா’ முதல் நாள். கண்டிக்குப் போயிருந்தேன். மாலை ஐந்து மணியிருக்கும். வாவிக் கரையில், எனது நண்பர் பட்டாளத்தை எதிர்நோக்கி படியே, கும்பலை ரசித்துக் கொண்டிருந்தேன். 

நேரமாக ஆக, சனக்கூட்டம் அதிகரித்தது. நண்பர் களும் வந்தபாடில்லை. கும்பலுக்குள் என் கண்கள் வலை போட்டுக் கொண்டிருந்தன. 

நான் திடுக்கிட்டேன். அதோ ஜனக்கும்பலிலிருந்து விலகி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்த இரு பெண்களில் ஒருத்தி! 

‘ஆ…அது விமலாவேதான்…!’ சந்தேகமில்லை. 

வெள்ளைப் புடவையும், பச்சை ரவிக்கையுமாக, வன தேவதை போன்று என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளின் அழகைக் கண்ணுற்றதும், என்னுடைய மாபெரும் இழப்பிற்காகப் பெருமூச்செறிவது தவிர என்னால் வேறெதுவுஞ் செய்ய முடியவில்லை அப்படியே நின்று விட்டேன். மனம் என்னவென்று சொல்ல முடியாத ஒரு விதத்தில் கொந்தளித்தது. 

வாவியின் சுவரிற் சாய்ந்து கொண்டு நின்ற என்னெதிரே, நெருங்கி வந்து நின்றாள் விமலா. கண்களில் நீர் பொங்க, முகமே உணர்ச்சிகளாற் திரைப்பட்ட கோலத்தில் அவள் நின்றாள். அவளின் நெருக்கம், பழைய இனிய ஞாபகங்களை நினைவூட்டிற்று. அப்படியே நின்றேன்; பேச முடியவில்லை. 

‘மகேந்திரன்… ‘ அவள் என்னை அழைத்தாள். குரல் கம்மியிருந்தது. பதில் பேசாமல், ஏறிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து சொட்டிய இரு நீர்த்துளிகள் என் இதயத்தை இளக்கின. ஆனால், உடனேயே, அவளுக்கு வேறொரு நண்பனிருக்கிறான் என்ற வரிகள் நினைவிற்கு வந்தன. பேசாது நின்றேன். மனதில் ஆத்திரம் பொங்கியது. 

அப்பால் விலகவும் மனம் வரவில்லை. ‘குழந்தைகள் போன்ற முகம்’ என்று என்னால் வருணிக்கப்பட்ட முகம், சோகத்தில் மூழ்கியிருப்பதை என்னாற் பொறுக்க முடியவில்லை. 

“என்ன விமலா!” எப்படியோ முணுமுணுத்தேன். நிமிர்ந்து பார்த்தவள், சட்டென்று கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு, அருகேயிருந்த பூங்காவை நோக்கி நடந்தாள். திரும்பிப் பார்த்தேன். அவளுடன் வந்தவளைக் காணவில்லை. என் நண்பர்களையுங் காணோம். அவளை தொடர்ந்தேன். 

சில நிமிடங்கள் மௌனத்திற் கரைந்தன. இருந்தாற் போல அவள் உரத்துச் சொன்னாள். 

‘மகேன்…. அந்தக் கடிதமே பொய் பொய்…’ அவளுக்கு ஆவேசம் வந்தது போலிருந்தது. தான் உண்மையானவள் என்பதை நிரூபிக்க, அவள் வீறுகொண்டாளோ? இரண்டாவது தடவை. ‘பொய்’ என்று கூறும் பொழுதே அழுதுவிட்டாள். 

நான் திகைத்தேன். மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சிப் பெருக்கு. 

‘பொய்யா?’ இதற்கு மேல் என்னால் ஒன்றுங்கேட்சு முடியவில்லை. ஆனால், அவள் பரிசுத்தமானவள் என்று எப்படியோ ஒரு நம்பிக்கை உறுதி உள்ளத்தில் வேரூன்றி விட்டது. அவள் விம்மினாள். 

“பொய்… பொய்… பொய்யேதான்! ஏனென்றால், நான் தான் அதை எழுதுவித்தேன்.. சாந்தி எழுதியது, சொல்லித்தான். 

அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மனதில் புதுவகை ஆத்திரம் ஒன்று உருவெடுத்தது. 

“உனக்கென்ன பைத்யமா?.. ஏன் அப்படி எழுதுவித்தாய்?” 

நான் இரைந்தேன். அவளாற் பேசமுடியவில்லை. விக்கி விக்கி அழுதாள். 

‘தானாகவே அதைப் போடச் சொன்னாளா? ஏன்?’ எனக்குப் புரியவில்லை. எங்களை இருள் சூழ்ந்துவிட்டது. அருகே ஒருவருமில்லை. அவள் கைகளைப் பற்றினேன். அவள் சொன்னாள். 

“எழுதவேண்டி வந்துவிட்டதே” 

‘ஏன்?’ 

ஒரு நிமிடம் மௌனம். 

“உங்களுக்குத் தெரியுமா. உங்க அம்மா எனக்கு ஒரு கடிதம் போட்டா…?” 

அம்மா கடிதம் எழுதினாளா, விமலாவுக்கு? நான் பைத்தியக்காரனாகிவிட்டேன். 

‘அம்மாவா?’ 

அவள் தொடர்ந்தாள், ஆங்கிலத்தில் ‘அம்மாத் தான்… நீங்க தங்களுக்கு ஒரே மகனாம். அந்த மகன் ஒரு சிங்களப் பெண்ணைக் கல்யாணம் செய்ய விரும்புகிற ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டாமென்று மிகவும் கெஞ்சி எழுதினாங்க. அதை வாசித்த பிறகு, உங்களை அம்மா அப்பாவிடமிருந்து பிரிக்கிற பாவத்தைச் செய்யவேண்டா மென்று யோசித்து, அதை எழுதுவித்தேன்…அதெல்லாமே பொய்… எனக்கு வேறொரு நண்பனே யில்லை’ அவள் குரல் கரகரத்தது. 

எனக்கு ஒரே மகிழ்ச்சி. என் விமலா என்னுடையவள் தான். அவள் ஏமாற்றவே மாட்டாள்! 

அவள் கைகளை உலுக்கினேன். 

‘விமலா, என்ன பைத்தியக்காரத்தனமான காரியஞ் செய்தாய்? இனிமேல் இப்படி ஏதாவது செய்துவிடாதே. என்னாற் தாங்க முடியா… நான் பட்ட பாட்டை அவளிடஞ் சொன்னேன். 

‘இனிமேலா…?’ 

விமலா விரக்தியுடன் சிரித்தாள். 

‘மீண்டும் இதென்ன?’ நான் பயந்தேன். 

“மகேந்திரன், தயவுசெய்து நடந்து முடிந்த கதை. முடிந்து விட்டதாகவே இருக்கட்டும். இனி மீண்டும் தொடரவேண்டாம்…’தொடரமாட்டேன்’ என்று உங்கள் அம்மாவுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்… இனி வேண்டாம்” அவள் கேவினாள். 

எனக்கு யாரோ உச்சந்தலையில் அடித்தமாதிரி இருந்தது. “கடவுளே, குருடனுக்குக் கண்ணைக் கொடுத்து விட்டுப் பறிக்கிறாயா?” 

“விமலா என்ன இது?” நான் கத்தினேன். 

“விடுங்கள்..?” விமலா கையை விடுவித்துக்கொண்டு ஓடினாள். பிடித்து நிறுத்தினேன். மனம் குமுறியது. 

“இது முடியுமா? விமலா, இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு தரம் சந்திக்கும் போதும் என் மனம் அழுமே. இதற்கென்ன செய்யச் சொல்கிறாய்? உன்னுடைய உண்மையை இப்போது ஏன் சொன்னாய்? அதைச் சொல்லாமலே இருந்திருக்கக் கூடாதா?” 

அவள், “என்னை மன்னித்து விடுங்கள். இதை நான் சொல்லாமலே விட்டிருக்கலாந்தான். ஆனால் ‘நான் குற்றமற்றவள்’ என்பதை உங்களுக்கு உணர்த்தத் துடித்தேன். இன்றைக்கு நேரிலே கண்டதும் பொறுக்க முடியவில்லை” என்றவள். திருப்பி “நேரமாகிவிட்டது, போகலாமா?” என்றாள். 

தலை அசைத்தேன். 

இருவரும், அருகருகே நடந்து கொண்டிருந்தோம். ஆனால், இருவருக்குமிடையில் எட்டாத தொலைவு!

– கதம்பம், ஒகஸ்ட் 1967.

– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *