தை பனிரெண்டு




சுதன் அப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுவான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“உன்னுடன் அவசரமாய்ப் பேசணும், குவைத் டவருக்கு மாலை ஐந்து மணிக்கு வந்துவிடு” என்று போனில் சொல்லியிருந்தான். மனதில் ஆசைகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு ஓடிவந்த எனக்கு சம்மட்டியால் அடி!
குவைத் டவர் என்பது கூம்பு வடிவில், அற்புதமான டவர். குவைத்தின் சின்னம். சுற்றிலும் புல்வெளிகள்! நீச்சல் குளம்! தூரத்தில் கடலில் இளைஞர்கள் படகு சவாரி விட்டுக கொண்டிருந்தனர்.
லிஃப்டில் மேலே போகும்வரை அவன் வாய் திறக்கவில்லை. மேலே சுழலும் ரெஸ்டாரென்ட்டிற்கப் போனதும் இப்படி உட்கார் என்று என்னை அமர வைத்து அவனும் எதிரே அமர்ந்துக் கொண்டான்.
அந்த ரெஸ்டாரெண்ட் மெல்ல ஊர்ந்துக் கொண்டிருந்தது.
அதன் கண்ணாடி பிரிவுகளில் சால்மியா, மெளிலா, அரேபியன் கடல், ஜாக்ரா, ஈராக் பார்டர் என்று எழுதி வைத்திருந்தனர். அந்தந்த கண்ணாடிகளுக்கு நேராய் அந்தந்த பகுதிகள் டெலஸ்கோப்பில் நன்கு தெரிந்தன.
நான் – நர்ஸ். இங்கு சிட்டி ஆஸ்பத்திரியில் கடந்த இரண்டு வருடமாய் வேலை. இருபத்தைந்து வயது. அழகுக்கும் வனப்புக்கும் பசங்கள் எனக்கு அறுபது மார்க் போட்டிருக்கிறார்கள். சுமார் ரகம்தான்!
ஊரில் நல்ல ஆஸ்பத்திரியில் தானிருந்தேன். ஆனால் பெற்றோர்களின் இயலாமையாலுல், வறுமையாலும், இங்கே அப்ளை பண்ணி தேர்வு எழுதி கனவுகளையும், கல்யாணத்தையும் தள்ளி வைத்து விட்டு வந்திருக்கிறேன்.
மனக்கட்டுப்பாடு.
இந்த வயதிற்கு ஏற்படக்கூடிய உணர்ச்சிகளை எல்லாம் என்னிடமும் எழாமல் இல்லை.
தங்கைகளை கரைசேர்க்கவும், பொறுப்புக்களை நிறைவேற்றவும் அவற்றைக் கட்டிப் போட்டு வைத்திருந்த போதுதான், இந்த சுதனின் அறிமுகம் கிடைத்தது.
சுதன் முப்பத்து ஐந்து வயது. காதோர நரையை டை அடித்து மறைத்திருந்தான். இங்கு ஏதோ ஒரு கான்ட்ராக்ட் கம்பெனியில் வேலை. ஏறக்குறைய ஒரு வருடமாய் சுதனுடன் பழக்கம்.
இங்கே சட்டதிட்டங்கள் கடுமை என்பார்கள். ஆண், பெண் பழக முடியாது. பேசமுடியாது என்று சொல்வதெல்லாம் ஓரளவிற்கு உண்மைதான்.
பலவந்தம், கற்பழிப்பு போன்றவற்றிற்குதான் தண்டனை. பழகுவதற்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் அதற்கு ஒரு உதாரணம். ஆஸ்பத்திரியில் எத்தனையோ ஆண்களுடன் பழகுகிறேன். வேறு எவரிடமும தோன்றாத ஒரு ஈடுபாடு சுதன்மேல்! எனக்கே புரியவில்லை. எப்படி இவரிடம் மயங்கினேன்?
ஒரு சமயம் – ஊரிலிருந்து அவசரமாய் பணம் வேண்டும் என்று கேட்டிருந்தனர். ங்கிருந்து தபாலில் அனுப்பினால் எப்படியும் போய்ச் சேர, ஒருவாரம் ஆகிவிடும்.
கடிதங்களெல்லாம் பெரும்பாலும் ஊருக்குப் போகிறவர்களிடம் அனுப்பி அங்கே போஸ்ட் பண்ணுவதுதான் வழக்கம்.
அப்படியாரும் போகிறார்களா என்று விசாரித்த போதுதான் சுதன் அகப்பட்டான். பணத்தை நேரிலேயே கொடுத்து விடுகிறேன் என்று வாங்கிப் போனான்.
திரும்பி வரும் போது எனக்காக வீட்டினர் கொடுத்தனுப்பின பொருட்களையெல்லாம் கொண்டு வந்தான்.
அதன்பிறகு போனில் மணிக்கணக்காகப் பேசுவோம். (இங்கே லோக்கல் போன் கால்களுக்கு சார்ஜ் கிடையாது என்பதை அறிக!)
ஹாஸ்டலில் எந்தக் கட்டுபாடும் இல்லை. பகலில் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். ராத்திரிக்குள் திரும்பிவிட வேண்டும். வாரத்தில் வியாழன் வெள்ளி விடுமுறை.
அந்த நாட்களில் சுதனுடன் சுற்றாத இடமில்லை.
எண்டர்டெயின்ட்மெண்ட் சிட்டியில் – சுற்றியிருக்கிறோம். பறக்கும் ரயில்! பம்பிங்க கார்! மெஸிலா பீச்சில் ஒன்றாய்க் குளியல்! சால்மியா பீச்சீல் போட்டிங்!
சுதனின் மௌனத்தை கலைத்து, “என்ன விஷயம் சொல்!” என்றேன்.
“நாளை மறுநாள் ஊருக்குப் போகிறேன்.”
“என்ன விஷயம்?”
“தை – பன்னிரண்டில் என் திருமணம்.“
“இந்தக் கிண்டல்தானே வேணான்றது! நானில்லாமல் உனக்கு திருமணமா…?”
“கிண்டலில்லை. நிஜம்.”
“சுதன்! என்ன சொல்கிறாய் நீ? ஏன் திடீருன்னு? இதுவரை நீ சொல்லவேயில்லையே!”
“எனக்கே தெரியாது. வீட்டினர் நிர்ப்பந்தம் – எனக்கு ஒரு முறைப் பெண் இருக்கிறாள். அவளை நிச்சயம் பண்ணிவிட்டார்களாம்!”
“நம் விஷயத்தை நீ சொல்லவேயில்லையா….?”
“இல்லை‘
“ஏன்?”
“சொல்லியிருநதால் குவைத்தே வேண்டாம் வந்துவிடு என்பர். சொல்வதிற்குத் தருணம் பார்த்திருந்தேன். அதற்குள் அவர்கள்…”
“அப்போ நான்? எனக்குக் கொடுத்த ப்ராமிஸ்? என்னுடன் பழகினதெல்லாம்?”
“ஸாரி சிநேகா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஒரே குழப்பமாயிருக்கு.”
“சுதன்! நீ என்னை விரும்புவது நிஜம்தானே!”
“ஆமாம்.”
“நான் உனக்கு நிச்சயம் நல்ல மனைவியாக இருப்பேன் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்கிறதில்லே?”
‘நிச்சயமாக.’
“அப்புறம் இன்னும் என்ன தயக்கம்? நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி இங்கேயே இந்திய தூரதரகத்தில் திருமணம்…”
‘அது நடக்கும்னு தோணலே… ”
“ஏன்?”
“உன்னைக் கட்டிக்கொண்டால் என் முறைப்பெண் தூக்கில் தொங்கவாள். என் பெற்றோர்களும் இடிந்துப் போவார்கள்!” சொல்லிவிட்டு சுதன் கண்களைக் கசக்கினான். நான் கைகளைப் பிசைந்தேன்.
ஹாஸ்டலுக்கு வந்த பின்பு கூட எனக்கு அந்தச் செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. சுதனில்லாமல் நான் எப்படி?
சும்மாகிடந்தவளைத் தூண்டிவிட்டான்.
அடங்கிக் கிடந்தவளை தட்டி எழுப்பி, ஆசைகளை கிளப்பிவிட்டு… ஏன்? ஏன் இப்படி?
சுதன் பொய் சொல்கிறானா? சும்மா என்னைச் சீண்டிப் பார்க்கிறானா?
ரூமிற்கு போன் பண்ணினபோது, சுதன் வெளியே போயிருப்பதாய்ச் சொன்னார்கள். அவனது திருமணம் பற்றிக் கேட்டபோது, “ஆமாம். நிஜம்” என்று ரூம் மேட் தெரிவித்தார்.
எனக்கு ராத்திரி முழுக்கத் தூக்கமில்லை.
சதா சுதன் சுதன் என்று கட்டின கோட்டையெல்லாம் ஓரே நாளில் தகர்ந்துவிட்டது. நான் இவனுக்காக பிறக்கவில்லை. இவனை நம்பி இங்கே வரவில்லை. கடல் தாண்டி வந்தது காதலிக்க இல்லை.
பணம். குடும்பப் பொறுப்புக்கள்!
சொற்த வாழ்க்கையை தியாகம் பண்ணத் தயாராகத் தான் வந்தேன். வந்த இடத்தில் மனபாய்ச்சல், வீழ்ந்து விட்டேன். பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றாலும் கூட எதற்காக இளமையை வீணடிக்க வேண்டும்? ஒரு சறுக்கல்.
ஏன் சொந்த வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டும்?
சுதன் நல்லவன், அவனுடன் வாழலாம். வீட்டினருக்கு பணம்தானே தேவை? அனுப்பினால் போயிற்று?
சுதனுடன் நெருங்கிப் பழகி, பகலில் அவனது ரூமில் என்னையும் மறந்து அவனுக்குச் சுதந்திரம் கொடுத்து… எல்லாம் ஏன்? அவன் என்னைக் கட்டிக் கொள்வான் என்றுதானே!
வெளிநாட்டினர் இங்கு திருமணம் செய்து கொள்வதற்கு சில தடைகள் உண்டு. சட்டதிட்டங்கள் உண்டு. இந்தியத் தூதரகத்தில் மனுச் செய்து. இருவரின் படங்களையும் கொடுத்து – இந்த திருமணத்தில் யாருக்காவது மறுப்பு உண்டா – என்று நோட்டீஸ் ஒட்டி… பிறகுதான் முடியும்.
அதற்குகூட தயாராகி விட்டேமே! கடைசி நேரத்தில் ஏன் இப்படி ஒரு குண்டு?
அன்று.
சுதன் ஊருக்குப் பயணப்படும் நாள்.
எனக்கு மனது கேட்கவில்லை. சுதனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவனது ரூமிற்குக் கிளம்பினேன்.
நான் போன போது அவன் குளித்துக் கொண்டிருநதான். பெல்லடித்ததும். டவல் சற்றிக் கொண்டு வந்து திறந்து விட்டு விட்டு “இரு வந்திர்றேன்!” என்று மறுபடியும் பாத்ரூம்.
பெட்டிகள் கட்டப்பட்டுத தயார் நிலையில் இருந்தன.
ஹாண்ட் பாக்! டேபிள் டிராயர். சும்மா அமர்ந்திருக்க முடியாமல் டிராயரைத் திறக்க, அதில் கட்டுகட்டாய்க் கடிதங்கள்! எல்லாம் பெண் கையெழுத்து. சுனிதா என்கிற பெண்! அவளது முறைப் பெண்ணாக இருக்க வேண்டும்.
எடுத்துப் படிக்கப் படிக்க எனது ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அதிர்ச்சி. ஆத்திரம்.
ஏறக்குறைய 100 கடிதங்கள்!
எல்லாவற்றிலும் அவள் தன் திருமணம் பற்றி எழுதியிருக்கிறாள். இவனும் பதில் போட்டிருக்க வேண்டும். தை பனிரண்டிற்காக காத்திருப்பதாக அவள் போன பிப்ரவரியிலிருந்தே எழுதியிருக்கிறாள்.
ஆசைகாட்டி… அனுபவித்து…
அப்படியென்றால்… அப்படியென்றால் இவன் என்னை ஏமாற்றியிருக்கிறான்! வஞ்சகன்! சும்மா இருந்தவளை உசுப்பிவிட்டு… வெளியூரில் வந்து கூட இப்படி ஒரு மோசடியா?
அனுபவிக்க ஒருத்தி, வாழ்க்கைக்கு வேறொருத்தியா?
இவன் இப்படிப்பட்ட மோசக்காரன் என்பது அவளுக்குத் தெரியுமா! இவன் இன்னும் எத்தனை பேர்களை இப்படி ஏமாற்றினானோ? இந்த மாதிரி மோசக்காரன் எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை – இவனையே நம்பி இருக்கிற அந்த சுனிதாவுக்கும் கூடாது.
இந்தத் திருமணம் நடக்கக்கூடாது. தடுத்தாக வேண்டும்.
எப்படி? எப்படித் தடுகப் போகிறேன்?
இவன் ஊருக்குப் போனால்தானே நடக்கும்?
சட்டென யோசனை வர, அவனது சூட்கேஸைத் திறந்து அதிலிருந்த பாஸ்போர்ட்டை எடுத்தேன். இரண்டாய், நான்காய் அதைக் கிழித்து, பிளவுஸில் செருகிக் கொண்டு எனது ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.