தேனருவி
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 5,088
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குற்றாலத்துக்கு வந்து மூன்று நாட்களாகி விட்டன. கைலாசத்துக்குத் தேனருவிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால், அவருக்குத் துணையாக வந்த அவர் பேரன் கண்ணனுக்கு இன்னும் மனம் வரவில்லை. குற்றாலத்துக்கு வந்த அன்றே தேனருவிக்குக் கிளம்பினார். ஆனால், மெதுவாகப் போகலாம் என்று அவரைக் கண்ணன் தடுத்து விட்டான். கண்ணனின் துணையில்லாமலே தேனருவிக்குப் போய் விடலாம். ஆனால் தேனருவிப் பாதை கொஞ்சம் ஆபத்தானது. கைலாசத்துக்கு வயது எழுபதாகி விட்டது. துணையில்லாமல் அவர் போவது கடினந்தான்.
கைவாசத்துக்கு மனத்தில் நிம்மதியில்லை. அவர் குற்றாலத்துக்கு வந்ததே தேனருவியைப் பார்க்கத் தான். ஐம்பது வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறார். பார்த்த இடத்தான். இருந்தாலும், இப்போது அவர் தேனருவியைப் பார்க்கத் துடிக்கிறார்.
ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் தேனருவிக்குப் போய் வந்த ஞாபகம் இன்னும் அவருடைய மனத்தில் பசுமையாகவே யிருந்தது! வயதடைந்து, தேகம் முதிர்ந்து விட்டால் ஞாபகங்கள் கூடவா முதிர்த்து விடும் ?
கைலாசம் நாற்காலியில் சாய்ந்தவாறு கண்களை மூடிக் கிடந்தார். உள்ளத்தில் கடந்த கால எண்ணங்கள் சூழ்ந்து கொண்டன.
இருபதாவது வயதில் ரங்கூனுக்குப் போனார். போகும்போது அவருக்குத் துணையாகச் சென்றது, அவருடைய தரித்திரமும் உடைந்த உள்ளமுத்தான், ஏழை என்பதனால் அவர் உள்ளம் உடைந்து விடவில்லை. அவருடைய இதயத்தில் குடிபுகுந்த குமுதா அவருக்குக் கிட்டாமல் போனதால்தான், அவர் மனம் உடைந்தார். அவர் ஏழையாதலால், குமுதாவின் பெற்றோர்கள் அவளை வேறு ஒரு பணக்கார இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அந்த விரக்தியில் தமிழ் மண்ணையே மிதிக்கக் கூடாது என்ற உறுதியில் ரங்கூனுக்குப் போனார்.
ஐம்பது வருடங்களையும் ரங்கூனில்தான் கழித்தார். இந்த இடைக்காலத்தில் கைலாசம், ஜம்பது வட்சங்களைச் சம்பாதித்தார்! ரங்கூனில் வாழ்ந்த ஒரு தமிழரின் பெண்ணை மணந்து கொண்டார். அவருடைய மகள் வயிற்றுப் பேரன் கண்ணன்கூட ரங்கூனில் தான் பிறந்தான்.
தற்போது இந்தியர்கள் ரங்கனிலிருப்பதை பர்மா அரசாங்கம் தடுப்பதால், கைலாசம் தமிழ்நாடு திரும்பினார். பல வருடங்களுக்குப்பிறகு, தமிழ்நாடு திரும்பும் கைலாசத்தை அடையாளம் கண்டுகொள்ள, குமுதாவைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு யாருமே இல்லை. அவருடைய குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால், கைலாசம் ஒரு முறைகூடத் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு மறுத்து விட்டார்.
தமிழ் நாட்டின்மீது வெறுப்பா? இல்லை, பழைய சம்பவங்கள் அவர் உள்ளத்தில் வைராக்கியத்தை உண்டு பண்ணி விட்டன. இப்போதுகூடத் தமிழ் நாட்டுக்கு வர அவருக்கு மனமில்லை நான். ஆனால், பர்மா அரசாங்கத்தின் கெடுபிடியினால் அவர் தமிழ் மண்ணை மிதித்தார்.
கண்ணனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு குற்றலத்துக்கு வந்தார்! ஏன்? பழைய ஆசை! குமுதாவைச் சந்தித்த இடங்களை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு விசித்திர ஆசை! அதுமட்டுமா? குமுதாவையே ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற அசட்டு ஆசை கூட அவர் உள்ளத்தில் எழுந்தது!
எத்தனை வருடங்கள்? ஒன்றா இரண்டா! அரை நூற்றாண்டுக்குப் பிறகுகூட இந்த இதயத்தில் விசித்திர ஆவல்கள் கிளம்புகின்றனவே! இப்போது கைலாசத்தின் ஆவலில் களங்கமே கிடையாது. குமுதாவின் மீது ஒரு தெய்விகப் பாசம். அந்தப் பாசத்தின் சக்தியால்தான் கைலாசம், தமிழ் மண்ணை மிதித்தார் என்றுகூடச் சொல்லலாம். இவ்வளவு நிர்மலமான பாசத்தோடு வந்தவருக்குக் குமுதாவைக் காண முடியாமல் போய் விடுமா?
ரங்கூனிலிருக்கும்போது, குமுதாவின் குடும்பத்தைப் பற்றி வருவோர் போவோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுவார். குமுதா இன்னும் உயிரோடு இருக்கிறாள் என்பது கைலாசத்துக்கு நன்றாகத் தெரியும்.
கண்ணன் துணைக்கு வருவான் என்று நம்பியிருந்தார். அவனோ தேனருவிக்குப் போகும் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே யிருக்கிறான். அவன் எதற்கு? துணையில்லாமலே ஏன் போகக்கூடாது? கைலாசத்துக்கு வயது எழுபதாகி விட்டாலும், உள்ளத்தில் ஊறிய அடங்காத ஆசையின் வேகத்தினால் அவர் உடலில் தெம்பு ஏற்பட்டது.
கைலாசம் தேனருவிக்குத் தனியாகவே புறப்பட்டு விட்டார்!
சிற்றருவியைத் தாண்டி மலைப்பாதையில் ஏறும் போது, இரண்டாவது திருப்பத்திலிருந்த பாறையைப் பார்த்தார், அவருடைய வயோதிகம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது! பாறையை நோக்கிக் குழந்தையைப் போல் வேகமாக ஓடினார். கூர்ந்து பார்த்தார். அதே பெயர்கள் – குமுதா, கைலாசம்!
அந்தக் காலத்தில், அவரும் குமுதாவும் தேவருவிக்குப் போன போது. அந்தப் பாறையில் செதுக்கிய பெயர்கள் அப்படியே மங்காமல் மறையாமல் இருந்தன. அவர்கள் உள்ளத்திலிருந்து பழைய நிகழ்ச்சிகள் எப்படி அழிய வில்லையோ, அதே போல் அந்தப் பெயர்களும் அழியவில்லை.
நடக்கும் போது சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடந்கார். செண்பகாதேவிக்குத் திரும்பும் பாதையிலிருக்கும் அந்த மாமரம்! அதே மரந்தான்; காலம் மாறினாலும் இடம் மாறவில்லையே, அந்த இடம் மட்டுமா? சூழ்நிலைகள் கூட அப்படியே இருக்கின்றன.
கைலாசத்துக்கு உள்ளத்தில் குறுகுறுப்பு. கைத்தடியால் பக்கத்தில் தொங்கிய மாங்காயைத் தட்டினார். அந்த மாங்காயை வலுவு இழந்திருந்த பற்களால் கடித்தார், அந்தப் புளிப்பு! அதே புளிப்புத்தான்! ஞாபகம் வருகிறதே-
குமுதா, இனிக்கிறது என்று சொல்லிப் புளிக்கும் அந்த மரத்துக் காயைக் கொடுத்தானே, அப்போது அந்தப் புளிப்பும் இனித்தது. இப்போது அந்த நினைவு இனிக்கிறது….
கைலாசம் தமக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். மாங்காயைப் பைக்குள் போட்டுக்கொண்டு தடியை ஊன்றியவாறு மலைப பாதையில் நடந்தார்.
அதோ செண்பகாதேவியின் அருவிப் பாதையில் இருக்கும் மரப்பாலம். அதற்குள் இவ்வளவு தூரம் வந்து விட்டோமா!
அந்தப் பாலத்தைக் கடக்கும்போது, அவருடைய இதயம் படபடத்தது. அந்த இடத்தில்தானே குமுதா விழப் பார்த்தாள்! அவளுக்கு எப்போதும் குறும்பு தான், ‘மெதுவாகப் போ’ என்று சொல்லியும் கேட்காமல் மாங்காயைக் கடித்துக் கொண்டே மரப் பாலத்தில் ஓடினாள், சறுக்கி விட்டது. கையில் இருந்த மாங்காய் தண்ணீரில் விழுந்து ஓடியது, ‘என்ன அசட்டுத் தனம், அதை எடுக்கத் தண்ணீரில் இறங்க முனைந்து விட்டாளே! நல்ல வேளை, நான் போய்ப் பிடித்துக் கொண்டேன். இல்லை யென்றால்? நினைக்கவே பயமா யிருக்கிறது. அந்த இடம் இதற்கு முன் எத்தனையோ கன்னிகளைப் பலி வாங்கி யிருக்கிறதாம். இப்போதுகூட அவளுக்கு அந்தக் குறும்பு இருக்கத்தான் செய்யும்….’
எண்ணத்தின் இன்பப் போதையிலேயே செண்பகாதேவி அருவிக்கு வந்து சேர்ந்தார் கைலாசம். அங்கிருந்த குகையில் ஒரு சாமியார் இருந்தாரே. அத்தச் சாமியாரிடந்தான் குமுதாவும், கைலாசமும் சென்று ஆசி பெற்றார்கள், அந்தச் சாமியார் காதலர்கள் இருவர் நெற்றியிலும் வெண்ணீறு பூசினார். ஆனால் ஒன்றுமே பேசவில்லை.
“சுவாமி எங்கள் காதல் நிறைவேற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்றார் கைலாசம். சாமியார் இருவரையும் கூர்ந்து பார்த்தார், அவருடைய உதட்டில் அலட்சியப் புன்னகை தோன்றி மறைந்தது, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
“எல்லாம் அவன் அருள்’” என்று மணலில் எழுதினார். பிறகு கையை உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்தார்.
சாமியாரின் முகத்தில் களை இல்லையே! அப்போதே எனக்கும் குமுதாவுக்கும் திருமணம் நடக்காது என்பதை உணர்ந்து கொண்டாரா? அந்தச் சாமியார் இப்போது இருப்பாரா?
குகையினுள் நுழைந்தார் கைவாசம். அதே சாமியார் உட்கார்ந்திருந்தார்! கைலாசத்தைக் கண்டதும் இலேசாகச் சிரித்தார். முன்னைவிட அதிகமாக மெலிந்திருந்தார். ஆனால் முகத்தில் அதே கம்பீரம்! கைலாசத்தைப் பக்கத்தில் அமரச் செய்தார்.
”சுவாமி! என்னை ஞாபகமிருக்கிறதா?” என்று பக்தியோடு கேட்டார் கைலாசம். உடனே சாமியார் மணலில் “குமுதா” என்று எழுதினார். கைலாசம் திகைத்து நின்று விட்டார்.
“உங்கள் ஆசி பலனளிக்க வில்லையே, சுவாமி!” என்றார் கைலாசம். சொல்லும் போது, அவர் கண்கள் கலங்கின. சாமியார் மணலில் எழுதினார்: “எல்லாம் அவன் செயல், இன்னுமா துயரம்?”
“துயரம் இல்லை, இருந்தாலும் பழைய எண்ணங்கள் தோன்றும்போது ஏதோ ஒரு உணர்ச்சி” என்றார் கைலாசம். பிறகு சாமியாரை வணங்கினார்.
தேனருவிப் பாதையில் நடந்தார் கைலாசம். கடந்த ஐம்பது வருடங்களாக இல்லாத ஒரு புத்துணர்ச்சி இப்போது அவருடைய இதயத்தில் நிரம்பியிருந்து. அதன் காரணம் அவருக்கே தெரியவில்லை.
தேனருவிப் பாதையில் உள்ள ஒட்டக வளைவில் வந்தபோது நிமிர்ந்து பார்த்தார். அவர் நினைத்தது போலவே அங்கே யிருந்த நாவல் மரத்தின் மீது ஒரு குரங்கு இருந்தது.
அந்தப் பழைய குரங்கா இது? இருக்காது. அது இறந்து போயிருக்கும். அது பெண் குரங்காச்சே. இது ஆண் குரங்கல்லவா?
குரங்கு அவரைப் பார்த்துப் பல்லை இளித்தது….
அன்றும் ஒரு குரங்கு இந்த மரத்திலிருந்து கொண்டு குமுதாவைப் பார்த்து இளித்ததே…
“குமுதா, உன்னைப் போலிருக்கிறதே அந்தக் குரங்கு. அதனால்தான் பார்த்துச் சிரிக்கிறது” என்றார் கைலாசம்.
“நான் என்ன குரங்கு மாதிரியா இருக்கிறேன்?” என்று கூறிக் கோபமாக மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். அதே சமயத்தில் அந்தக் குரங்கு ஒரு நாவல் பழத்தை அவள் மீது வீசி எறிந்தது. குமுதர சும்மா விடுவாளா? கிழே கிடந்த கல்லை எடுத்து அதன் மீது வீசினாள். மறு வினாடி குரங்கு குமுதாவின் தலைமீது தாவியது. பயத்தினால் அலறினாள். அவள் தலையிலிருந்த பூவைப் பறித்துக் கொண்டு குரங்கு ஓடிவிட்டது. குமுதா கால் தடுமாறிக் கீழே விழுந்து விட்டாள், புடவை யெல்லாம் அழுக்காகிவிட்டது. அவளுக்குக் கோபமும் அழுகையும் கலந்துவந்தன.
“பொல்லாத குரங்கு! உன்னைப் போவல் லவா குறும்பு செய்கிறது!” என்றார் கைலாசம்.
“என்னைக் குரங்கு என்ற கேலி செய்கிறாய்? பின் எதற்காக என்னோடு வருகிறாயாம்? நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று திரும்பினாள்.
“போயேன்” என்றார் கைலாசம். குமுதா வந்த வழியே திரும்பி நடந்தாள். போக மாட்டாள் என்று தான் அவர் நினைத்தார். ஆனால் அவள் போக ஆரம்பித்து விட்டாளே!
அட! அந்தத் திருப்பத்திலும் திரும்பி விட்டாளே. ஐயோ. வழி தெரியாமல் வேறு எங்கேயாவது போய் விட்டால்?…. கைலாசத்துக்குப் பயமாகி விட்டது.
“முரட்டு ஜென்மம்” என்று முணு முணுத்துக் கொண்டே குமுதாவைத் தடுக்கப் புறப்பட்டார். திருப்பத்தில் திரும்பியதும் குமுதாவைக் காணவில்லை. கைலாசத்துக்கு உடல் பதறியது. ‘ஐயோ! குமுதாவைக் காணவில்லையே?’ என்று துடித்தார்.
“குமுதா..குமுதா!” என்று கத்தினார். பலனில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது அவர் தலையில் நாவல் பழங்கள் உதிர்ந்தன. பக்கத்திலிருந்த நாவல் மரத்தின் ஒரு கிளையில் குமுதா உட்கார்ந்து கொண்டு மடியிலிருந்த நா பழங்களை அவர்மீது கொட்டிக் கொண்டிருந்தாள்.
“உன்னை எங்கேயெல்லாம் தேடினேன். தெரியுமா? காணாமல் பயந்தே போய் விட்டேன், வேண்டுமென்று தானே மரத்தின் மீது ஏறி ஒளித்து கொண்டாய்?” என்று கேட்டார் கைலாசம்.
“குரங்கு மரத்தின் மீதில்லாமல் வேறு எங்கே இருக்கும்?”
“சரி, கிழே இறங்கு.”
“முடியாது. என்னைக் குரங்கு என்று சொன்னதைத் தவறு என்று நீங்கள் ஒப்புக் கொண்டால்தான்….”
“தவறு, தவறு, தவறு, போதுமா?”
குமுதா கீழே இறங்கினாள்.
கைலாசத்தின் தளர்ந்த உடல் இந்த நினைவால் சிலிர்த்தது. அந்த இடங்களில் நடந்த சம்பவம் ஒன்றுகூட மறக்கவில்லை. அந்தந்த இடத்துக்கு வந்ததும் அங்கங்கு நடந்த சம்பவங்கள் அப்படியே நினைவில் வந்து குழுகின்றனவே! அப்பப்பா! என்ன இனிமை!
தேனருவியை நெருங்கியதும் அதன் சூழ்நிலையை ஒரு முறை சுற்றிப் பார்த்தார். ஆகா! எத்தனை வருடங்கள் கழிந்தால்தான் என்ன? இந்த அருவிக்கரை அப்படியேதாநீ இருக்கிறது?
கன்றுக்குட்டிப் பாறை ஒன்று உண்டே, அது மறந்து விடுமா? முக்கியமான பாறை யாச்சே. ஆ…அதோ அப்படியே இருக்கிறதே! பசுங்கன்றுக்குட்டி போல் தோற்றமளிக்கும் அந்தப் பாறையிலிருந்த கண்கள் போன்ற இரண்டு குழிகள் அப்படியே தத்ரூபமாக இருக்கின்றன.
கன்றுக் குட்டிப் பாறையை தோக்கி நடந்தார் கைலாசம். ஒரு பாறையின்மீது ஏறிப் பிறகு கன்றுக்குட்டிப் பாறையில் ஏறியபோது அந்தப் பாறையின் மறு பக்கத்தில்!…யார்?….யார் அது?
கைலாசத்துக்குத் தலை சுழன்றது. அங்கே ஒரு வயோதிக ஸ்திரீ உட்கார்த்திருந்தாள், ஆனால், கைலாசத்துக்கு அவள் கிழவியாகத் தோன்றவில்லை. எப்படித் தோன்றும்? குமுதாவை என்றும் அந்த உருவத்தில் அவர் பார்த்ததில்லை. அவளுடைய பதினெட்டாவது வயதில் எப்படி யிருந்தாளோ, அந்த உருவமல்லவா கைலாசத்தில் இதயத்தில் பதிந்திருந்தது?
என்ன விந்தை! இப்படியும் நிகழுமா? அந்தக் கிழவியும் இவரைக் கூர்ந்து பார்த்தாள். இருவர் உதடுகளும் அதிசயத்தால் விரிந்தன. கண்களில் ஆவல்! உள்ளத்தில் நிறைவு! உடலில் நடுக்கம்!
இதென்ன விசித்திர உணர்ச்சி! இந்தத் தள்ளாத உடலால் தாங்க முடியவில்லையே! ஐம்பது வருடங்களாக உள்ளத்தில் ஒளிந்து கிடந்த உணர்வெல்லாம் திடீரென்று தலை தூக்கி ஆர்ப்பரித்தன.
“குமுதா!” கைலாசத்தின் வாய் முணு முணுத்தது.
“அண்ணா!” என்றாள் குமுதா. அந்தச் சொல்லின் சக்தியிலே கைலாசம் தெகிழ்ந்தார். உள்ளத்தில் பாசம் சுடர்விட்டது.
வயது முதிர்ந்த இருவர் இதயத்திலும் உணர்ச்சிப் பின்னல்கள், அங்கங்கே வெடித்துக் கீறல் விழுந்த இதயம் ஒட்டி ஒன்று சேர்ந்துவிட்டது காலத்தின் போக்கிலே ஞாபகத்திலிருந்த மங்கியிருந்த உருவம் திரும்பவும் மனத்தில் பதிந்து கொண்டது.
அந்தச் சந்திப்பில்தான் என்ன உணர்ச்சி! அந்த இனிமையில், சூழ்நிலைகூட நிலைமறந்து சலனமற்றிருந்தது.
ஒருவரை ஒருவர் நன்முகப் பார்த்தார்கள். அடேயப்பார் எத்தனை மாற்றம்! உள்ளத்தில் கூட மாற்றங்கள் தானே! ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த அந்த இருவரின் உணர்ச்சிக்கும் இன்றைய உணர்ச்சிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது!
இன்றைய உணர்ச்சியில் வெறியில்லை. உள்ளத்தில் சலனமில்லை. பழைய போதை இல்லை. அறிவில் தெளிவு இருந்தது. பரபரப்பில்லை, நிதானம் இருந்தது. பழைய காதல்கூட இல்லை, பாசம் பரவியிருந்தது.
குமுதாவின் பக்கத்தில் உட்கார்ந்தார் கைலாசம். “நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று வியப்புடன் கேட்டார் கைலாசம்.
“என்னுடைய பேத்தி ராதாவுடன் வந்தேன். அவளும் அவளுடன் கல்லூரியில் படித்த ஒரு நண்பனும் அருவிப் பக்கம் போயிருக்கிறார்கள்” என்றாள் குமுதா.
என்னவெல்லாமோ பேசினார்கள், கடந்து போன ஐம்பது வருட வாழ்க்கையைக் கதை கதையாகப் பேசினார்கள்.
கைலாசம் தம் சட்டைப் பையிலிருந்து எடுத்து நீட்டினார். குமுதா மாங்காயை சிரித்துக் கொண்டே வாங்கினாள்.
“இந்த மாங்காய் புளிக்குமே?” என்றாள்.
“இல்லை. எப்போதுமே இனிக்கத்தான் செய்யும்” என்றார்.
“பாட்டி!” என்ற குரலைக் கேட்டுத் திரும்பினர் இருவரும். ராதாவுடன் கண்ணன் நின்று கொண்டிருந்தான்? கைலாசத்தைக் கண்டதும் அயர்ந்துவிட்டான்.
“தாத்தா நீங்களா?” அவன் வாய் குழறி விட்டது.
“டேய்! தேனருவிக்குத் துணைவராமல் அலைக்கழித்த தெல்லாம் இதற்குத்தானா?” என்றார் கைலாசம் சிரித்துக் கொண்டே.
“இவன் உங்கள் பேரனா? நாம் எல்லோருமே தேனருவிக்கு வத்து விட்டோமே!” என்றாள் குமுதாப் பாட்டி,
“அதுமட்டுமா? கன்றுக்குட்டிப் பாறையிலும் சந்தித்து விட்டோமே” என்றார் கைவாசம். ராதாவுக்கும் கண்ணனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
நால்வரும் தேனருவியை விட்டுக் கிழே இறங்கியபோது செண்பகாதேவியில் அந்தச் சாமியாரைச் சந்தித்தார்கள்.
“சுவாமி, கண்ணனையும், ராதாவையும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார் கைலாசம்.
சாமியார் ஆசீர்வதித்தார்.
“மனம்போல் வாழுங்கள்” என்று மணலில் எழுதினார்.
குமுதாவும், கைலாசமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்கள் காலத்தில் நிறைவேறாதது தங்கள் சந்ததிகளின் காலத்தில் நிறைவேறுவதைக் காண யாருக்குத் தான் மகிழ்ச்சியிராது?
– 1957-03-17