தெளிவு
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கடைக்குள் புகுந்தவுடனேயே, மூன்று பிரத்தியேகச் சேலைகள் வாடிக்கையாளர்களை வரவேற்கும். அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும் அந்தச் சேலைகள் புகழ்பெற்ற திரைப்பட நடிகைகளின் பெயர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரில் இருக்கும் சேலையின் விலை 100 வெள்ளி. இன்னொரு நடிகையின் பெயரில் இருக்கும் சேலையின் விலை 150 வென்ளி. மூன்றாம் நடிகையின் பெயரில் இருக்கும் சேலையின் விலை 200 வெள்ளி. இந்தச் சேலைகளைப் பார்த்த சரவணன் கடைக்காரிடம் கிண்டலாகக் கேட்டார்.
“இது என்ன எல்லாம் நடிகைகள் பெயராக இருக்கின்றன.. இவை அவர்கள் உடுத்திய சேலைகளா?”
“இல்லை”, கடைக்காரரின் பதில்.
“ஏதாவது திரைப்படங்களில் போட்டு நடித்திருக்கிறார்களா?” “இல்லை”
“அவர்கள் நெய்த சேலைகளா?”
“இல்லை”
“அவர்கள் பெயர் இந்தச் சேலைகளில் பின்னப்பட்டிருக்கிறதா?”
“அதெல்லாம் இல்லை சார்.. எந்த நடிகைகளுக்கு இப்போ ‘சீசன்’ இருக்கோ, அவங்க பெயருலே சேலையை விற்றால்தான் இந்த விழாக்காலத்துல எல்லாரும் வாங்குவாங்க…” என்றார் கடைக்காரர் புன்முறுவலோடு.
இது தெரிந்தும் தெரியாததுபோல் கேட்டு வைத்தார் சரவணன். “அப்போ விலையெல்லாம் எப்படி நிர்ணயிக்கிறீங்க?”
“அதெல்லாம் ஒரு குத்துமதிப்பாதான் சார்..ஓரளவுக்கு லாபம் கிடைச்சா போதும்”
விழாக் காலத்துக்கேற்ப தகுந்த யுக்தியைதான் பயன் படுத்துகிறார்கள் இவர்கள் என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டார், சரவணன்.
“அப்பா, நான் அந்தச் சேலையை வாங்கிக்கவா?..” என்று அவர் மகள் 200 வெள்ளிச் சேலையைச் சுட்டிக்காட்டினாள். சரவணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“யாரு.. சுவேதாவா கேட்கிறாள்! சேலையே கட்டமாட்டேன் என்று இருந்த இவளா இப்பொழுது சேலை வேண்டும் என்று கேட்கிறாள்! அதுவும் 200 வெள்ளிச் சேலை?”
தன் மனைவி மரகதத்தைப் பார்ததார்.
“விலையைப் பார்க்காதீங்க! அவள் மனசு மாறுதற்குள்ளே வாங்கிக்கொடுத்துடுங்க.. இப்பதான் சேலையின் அருமை தெரிஞ்சிருக்குது போல..” என்றாள் மரகதம்.
அதற்குன் கடைக்காரர், அந்தச் சேலையை எடுத்துச் சுவேதாவிடம் காட்டிக்கொண்டிருந்தார். மனைவிக்குச் சேலை வாங்க வந்த இடத்தில் சரவணனுக்கு இப்படி ஓர் இன்ப அதிர்ச்சி. “இதுதான் முந்தானை.. இது ‘பிளவுஸ் பீஸ்’.. பார்டருல லேசா ஜரிகை கொடுத்திருக்காங்க… இந்த வேலைப்பாடு எல்லாம் கையாலே செஞ்சது.. எவ்வளவு அழகா இருக்குது பாருங்க.. சேலையைத் தொட்டுப் பாருங்க! மிருதுவா இருக்குதுல்லே… உங்க நிறத்துக்கு ரொம்ப அழகா இருக்கும்.. அசல் அந்த நடிகை மாதிரியே இருப்பீங்க..!
அசட்டுச் சிரிப்போடு வியாபாரத்திறனை மும்முரமாகக் காட்டிக்கொண்டிருந்தார் கடைக்காரர். அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. தற்போதைய நடிகையும், முன்பு உலக அழகியுமான அந்தக் குறிப்பிட்ட நடிகை என்றால் சுவேதாவுக்குக் கொள்ளை ஆசை. அவளைப் பொறுத்தவரை அந்த நடிகைதான் உலகின் எட்டாவது அதிசயம். அவளைப்போல் தானும் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சிகை அலங்காரம் முதல் கண்ணுக்கு இளம் பச்சை நிறத்திலான கண் ஒட்டு வில்லையைப் பொருத்தும் அளவுக்கு அவள் தன்னை மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டு வருகிறாள். இந்தக் குறிப்பிட்ட சேலையைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதுதான் முக்கிய காரணம்.
தற்பொழுது இளம் உள்ளங்களைச் சுண்டியிழுக்கும் அந்தக் கனவுக் கன்னியைப்போல் தானும் இருப்பதாக யாரோ சொல்ல அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நிரூபித்துகொண்டிருக்கிறாள் அவள். கடந்த ஓராண்டாக இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சிவப்பழகும், சற்று மெல்லிய உடல் அமைப்பும், அதற்குத் தகுந்த உயரமும், வசீகரத் தோற்றமும் சுவேதாவின் இயற்கை அழகை பறைசாற்றிக் கொண்டிருந்தன. இருந்தாலும் கிட்டத்தட்ட தன்னைப் போல் ஒருவர் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும்போது, நாமும் அவரைப்போல் இருப்பதில் என்ன தவறு?
“மற்றவர்களே இந்த உருவ ஒற்றுமையை ஏற்றுக்கொள்ளும் போது நானும் அதற்கு ஈடுகொடுக்க வேண்டாமா?” என்று தன் போக்கை நியாயப்படுத்திக்கொண்டான் சுவேதா. ஓராண்டுக்கு முன் பல்கலைக்கழக முதலாம் ஆண்டுத் தோழி ஒருத்தி வேடிக்கையாக அவளை அந்த நடிகையோடு ஒப்பிட்டுச் சொன்னது அவள் மனக் குகையில் ஆழப்பதிந்தது. மற்றவர்களும் அதற்கு உரமூட்ட, அந்த எண்ணம் வேரூன்றத் தொடங்கியது.
“உன் நிறத்துக்கும் அழகுக்கும் இந்தப் புடவை ரொம்ப அழகாக இருக்கும்.. தீபாவளி அன்றைக்கு இதைக் கட்டிக்க, என்ன?” என்று மரகதம் கூறவே ஒருவாறாக தலையசைத்தாள் சுவேதா.
“ஆமாம்மா.. எப்போதும் வேறு உடையிலேயே உன்னைப் பார்த்துப் பார்த்துச் சலிச்சுபோச்சு.. ஒரு தடவை நீ புடவை கட்ட ஆரம்பிச்சுட்டால், பிறகு உனக்கே அது புடிச்சுப்போயிடும்.. உன் வயசுப் பிள்ளைங்க எல்லாம் இந்த மாதிரி பண்டிகைக்காலங்கள்ல புடவை கட்டிக்கிறது நம்ம பண்பாடும்மா..” என்றார் சரவணன்.
இத்தனை நாள்களாக தன் ஒரே மகளை மேற்கத்திய உடையிலேயே பார்த்து வந்த அவர்களுக்கு இப்பொழுது சிறு நம்பிக்கை துளிர்விடத்தொடங்கியிருக்கிறது. எங்கே தன் மகள் தமிழ்க் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் உதறிவிட்டுப் போய்விடுவாளோ என்று பயந்துகொண்டிருந்த அந்த உள்ளங்களுக்கு இது எல்லை இல்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதற்குக் காரணம் அந்த நடிகைதான் என்று அவர்களுக்குத் தெரியுமா? எது எப்படியோ தமிழ்த்திரைப்படங்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் பாரம்பரியத்தை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன போலும்.
சுவேதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று அவளே எதிர்ப்பார்க்கவில்லை. படிப்பில் மிகவும் திறமையான மாணவி. உயர்நிலை நான்கிலிருந்து, புகுமுக வகுப்புவரை எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இப்பொழுது பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் ஆண்டில் பயிலும் அவள், ஆரம்ப காலத்தில், தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கமாட்டாள். தமிழிலும் பேச மாட்டாள். ஆனால், தமிழ்ப் பாடத்தில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சிப்பெற்றவள். தற்போது இருக்கும் இளையர்களிடையே வளர்ந்து வரும் இந்தப் போக்குக்குச் சுவேதா விதிவிலக்கில்லை.
பல்கலைக்கழக இந்தியத் கலாசார மன்றம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் தற்செயலாகப் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது சுவேதாவுக்கு. தோழியின் வற்புறுத்தலைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. எந்த ஓர் இந்திய நிகழ்ச்சியிலும் பங்கெடுக்காத அவளுக்கு இது ஒரு புது அனுபவம். மேடையில் ஒரு சிறு நடன அசைவு, அவ்வளவுதான்! அதற்காக மிகச் சிரத்தையுடன் தன்னைத் தயார் செய்துகொண்டு, மிகவும் சிறப்பாக ஆடினாள் சுவேதா. அவள் நடனத்தைப் பார்த்து அவள் ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர். அன்றிலிருந்துதான், அவளுக்குத் தமிழின்பால் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. மெல்ல மெல்ல யாருக்கும் தெரியாமல், தன் மடிக்கணினியில் தமிழ்த்திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாள். குறிப்பாக நடிகைகளின் அழகையும் அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளையும் உற்றுப் பார்ப்பாள். ஆனால், அவள் புறத்தோற்றத்தில் தென்பட்ட மாற்றம் முழுக்க முழுக்க அகத்தின் பிரதிபலிப்புத்தான் என்று சொல்லி விட முடியாது. இன்னமும் மேற்கத்திய தாக்கம் அவளிடம் நீறு பூத்த நெருப்புப்போல்தான் இருக்கிறது.
அன்று, உணவுக்கூடத்தில், ஒரு சுவாரசியமான உரையாடல்.
“இந்தப் படத்தை நீங்க எல்லாரும் பார்த்தீங்களா?.. இதுல நம்ம ‘சுவேதா’ எவ்வளவு ‘சிலீமா’, ‘செக்ஸியா’ நீச்சல் உடையிலே வந்தாள் தெரியுமா?..’என்று தன் தோழி ஓர் ஒளிவட்டைக் காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் எல்லாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பிறகுதான், அது சுவேதாவுக்குப் பிடித்த நடிகை நடித்த படம் என்றும் அதில் அவள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வந்ததாகவும் புரிந்துகொண்டார்கள். படத்தைப் பார்த்த தோழியோ, அவள் கட்டழகை உச்சி முதல் பாதம் வரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டாள். அதுவரையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சுவேதா, பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தட்டைத் தள்ளி வைத்தாள். அதிகம் சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடுமாம்.
மறுநாள் பள்ளி முடிந்து, தன் உற்ற தோழியோடு கடைக்குச் சென்று ‘வைட்டமின்’ மாத்திரகளை வாங்கினாள்.
“சுவேதா, நீ இப்படிக் கண்ணை மூடிக்கிட்டு ‘வைட்டமின்’ மாத்திரைகளை வாங்கக்கூடாது தெரியுமா? முதல்லே உன் உயரத்துக்கு ஏற்ப உன் எடை இருக்குதான்னு பார்த்துக்கோ.. பிறகு உனக்கு என்ன சத்துப் பற்றாக்குறைங்கிறதை, டாக்டரைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோ.. அப்பறம் வந்து இந்த ‘வைட்டமின்’ மாத்திரைகளை வாங்கலாம்..” என்றாள் தோழி.
“எனக்கு எல்லாம் தெரியும்.. கவலைப்படாதே.. நிச்சயமா ‘வைட்டமின் சீ’, அப்புறம் ‘மல்டி வைட்டமின்’ எல்லாம் தேவைப் படும்.. இதெல்லாம் பாதுகாப்பானதுதானே எல்லாரும்தானே சாப்பிடுறாங்க.. நீயும்தான் சாப்பிடுறே!”
“ஆமாம், நான் டாக்டர் சொல்லிச் சாப்பிடுறேன் நீ உன் எடையைக் குறைக்கச் சாப்பிடுறே.. ஞாபகம் வச்சிக்கோ.. இது துணை உணவு பொருள்தான்.. உணவுக்குப் பதிலாக சாப்பிடக்கூடாது.. வேளாவேளைக்குச் சாப்பிடுறதை நீ சாப்பிட்டுத்தான் ஆகணும்.. சரி சரி, வா… அதோ அந்தக் கடைக்குப் போவோம்… அங்கேதான் நான் அடிக்கடி போய் வாங்குவேன்..”
சுவேதா மெல்ல மெல்லச் சாப்பாட்டையும் குறைத்தாள். ஆரம்பத்தில், காலை உணவுக்குப் பதிலாக ‘மைலோ’ மட்டும் குடித்துவிட்டு இரண்டு ‘வைட்டமின்’ மாத்திரைகளைப் போட்டுக் கொள்வாள். மதிய வேளையில், ‘மீ’ வகைகளைச் சாப்பிடுவாள். இரவு நேரத்தில், இரண்டு துண்டு ரொட்டி மட்டுந்தான். கேட்டால், ‘அதுதான், ‘வைட்டமின்’ மாத்திரைகளைச் சாப்பிடுகிறேனே’, என்று சொல்லி மழுப்பி விடுவாள். பிறகு, ஒருவேளைச் சாப்பாடாகக் குறைத்தாள்.. மதியச் சாப்பாடு மட்டுந்தான். அப்பொழுதுதானே அந்த நடிகையைப்போல் கட்டழகாக இருக்க முடியும்!
‘ஸிலீமாக’ கட்டழகோடு இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் அவ்வளவு வேறுபாடு இருக்காது என்பதை காலம் கடந்த பின்தான் கண்டுகொண்டாள். ஆம், வெறும் சத்துணவு பானத்தையும் ‘வைட்டமின்’ மாத்திரைகளையும் நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்து என்பதை ‘எனரொக்ஸியா’ என்னும் சத்துப் பற்றாக்குறை நோய் வந்து எலும்பும் தோலுமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே, அவள் அதை நன்கு உணர்ந்தாள்.
“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் ‘வைட்டமின்’ மாத்திரைகளை மட்டும் போட்டுக்கிட்டிருக்காதே சாப்பாடும் ஒழுங்காச் சாப்பிடனும்னு, கேட்டீயா?..” என அவள் தோழி செல்லமாகக் கடிந்துகொண்டாள். சுவேதாவுக்கும் இது தெரியும் இருந்தாலும் தனக்குப் பிடித்த நடிகையைப்போல் இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையால் அப்படி நடந்துகொண்டாள் இப்பொழுது உடலும் உள்ளமும் கெட்டுப் படிப்பையும் ஒழுங்காகத் தொடர முடியாமல் பரிதாபமாகக் காட்சியளிக்கிறாள்.
“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தி இப்படித்தான் ஒரு ஹாலிவுட் நடிகையைப்போல் மூக்கைச் சரிசெய்ய நினைத்து, அறுவைச் சிகிச்சைக்குப்போய்க் கடைசியில், முன்பு இருந்ததைவிட மூக்கு வீங்கி அசிங்கமாகவும் கருத்தும் போய்விட்டது.. அவள் ரொம்ப மனம் உடைஞ்சு போயிருக்காள்.. உன்னை மாதிரி அவளையும் பாரக்கப் பரிதாபமாயிருக்குது.. இந்தத் திரையுலக மாயை எல்லாம் நமக்கு வேண்டாம் சுவேதா.. அவங்க தொழிலுக்காக அப்படி உடலைக் கட்டாக வைத்திருக்கிறாங்க.. நாமே ஏன் அவங்கள மாதிரி இருக்கணும்?… அவங்க வாழ்க்கை வேறு; நம்ம வாழ்க்கை வேறு. எல்லாத்துக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு.. “, என்று அந்தத் தோழி சொல்லும்போதே தன் நிலைமையைச் சற்றுச் சீர்தூக்கிப்பார்த்தாள் சுவேதா.
இருளில் ஒரு மின்னல் கீற்று மின்னித் தெறித்து!
– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.