தெளிவு – ஒரு பக்க கதை





மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. .
துக்கமாக இருந்தது.
” என்ன செய்யலாம்….” தனித்து அமர்ந்திருந்த அவருக்குள் யோசனை.
விபத்தில் அப்படி செத்தவனுக்கு ஒரு லட்சம், இப்படி செத்தவனுக்கு ரெண்டு லட்சம் , பத்து லட்சம் ! – என்று தினசரிகளில் படித்தது ஞாபகம் வைத்தது.
உடனே….
‘ நாம் செத்து இவனுக்கு வாழ்க்கை கொடுத்தாலென்ன…? ‘- மனசுக்குள் பொரி பட்டது.
‘ அரசு அலுவலக்காரனான நாம் இறந்தால்… கருணை அடிப்படையில் வாரிசுக்கு நிச்சயம் வேலை. அது மட்டுமல்லாமல்….. மனைவி, மக்கள் என்று வேறு வாரிசுகள் ஏதும் இல்லாததால்…அலுவலக சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் தொகைகளும் கிடைக்கும். ஓரளவிற்கு கணிசமான தொகை தேறும். !’ – நினைக்க திருப்தியாக இருந்தது.
‘ எப்படி சாகலாம்…? ‘ மனம் சட்டென்று அந்த ஆராய்ச்சிக்குள் புகுந்தது.
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம்…. என்று சிந்தனை வரும்போதே…..இந்த சாவிலும் பணம் வருமாறு செய்தால் இன்னும் வசதி. மகனுக்குக் கூடுதல் தொகை. நினைக்க…
உள்ளுக்குள் ஒரு உற்சாகத் துள்ளல்.!
வழி…? – நினைத்து மனம் அங்கு செல்ல….
ரயில் முன் விழுந்தால் சல்லிக் காசு கிடையாது. தண்டவாளத்திலிருந்து பிணத்தை அப்புறப்படுத்தி……அனாதை பிணமாக்கிவிடுவார்கள். தேடிக் கண்டு பிடித்து….மகனுக்கு நஷ்டம். ! வீண் செலவு. . பேருந்து முன் விழுந்தால்… பணம் நிச்சயம்.
அரசு பேருந்து முன் பாய்ந்தால்…வழக்கு விசாரணை என்று இழுத்து சொற்ப தொகை கிடைப்பதற்குள் காலங்கள் கடந்து உயிர் போய்விடும்.
தனியார் பேருந்தின் முன் விழுந்தால்…. உடன் காசு. பேருந்து உரிமையாளர் உடனடியாக பதறி ஓடி வந்து….
” இந்தாங்க. அடக்க செலவுக்கு வைச்சுக்கோங்க….” பிணத்தை அப்புறப்படுத்தவே காசு கொடுப்பார்.
அடுத்து…..
‘ கேசு வேணாம். அலையனும் வம்பு. சமாதானமா போயிடலாம் ! ” வழக்கைச் சந்திக்காத துணிவில்லாமல் பேரம் பேசுவார்கள். உடன் கணிசமான தொகைக்கு அது வழி…! ‘ – சிந்தனை இப்படிச் செல்ல….
சாவிலும் காசு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதிலும் தனியார் பேருந்துதான் பொருத்தம் ! ‘ தெளிவாக….
மயில்சாமி அடுத்து ஏதும் யோசிக்காமல் விருட்டென்று வீட்டை விட்டு வெளியில் வந்தார்.
இறங்கி போக்குவரத்து சாலையில் நடந்தார்.
இவரையறியாமலேயே இவன் முன் ஒரு இனோவா கார்காரன் மோதிவிடாமல் சடக்கென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.
அவனுக்கு அவனை அறியாமல் ஆத்திரம்.
” யோவ் பெரிசு ! என் வண்டியில் விழுந்து பொழப்புல மண்ணை அள்ளிப் போடுறீயே நியாயமா..?? ” கத்தி நகர்த்தினான்.
‘நம் உயிர் போக இவன் வேலை இழப்பதா..? ஒருவன் தாழ்வு, முடிவில் இன்னொருவன் வாழ்வா…??!! – இவருக்குள் ஊதை விழுந்தது.
‘ இது சரி இல்லை. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. போராடி நடப்பது, வாழ்வதுதான் சரி. இதற்கு இதுதான் சரி< தீர்வென்று என்று தப்பிதமாக முடிவெடுத்து நடப்பது முட்டாள்தனம். எதற்கும் ஒரு தீர்வு உண்டு. வேலை கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது செய்யலாம். வேலை கிடைத்தால்தான் வாழ்க்கையா..? படிப்பிற்கு இதுதான் அடையாளமா..? !படிக்காதவர்களெல்லாம் வாழ்வில்லையா..? வேலை கிடைத்தவர்கள்தான் வாழ்கின்றார்களா..? கிடைக்காதவர்களெல்லாம் வாழ்வில்லையா..? வாழ எத்தனையோ வழிகள் இருக்குபோது சாவு முட்டாள்தனம். ! ‘ மனசு தெளிய…
மயில்சாமி… நிதானமாய் வீட்டிற்குத் திரும்பினார்.