கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2025
பார்வையிட்டோர்: 1,790 
 
 

நியூமூன் அபார்ட்மெண்ட் .மூன்றாவது தளம். பிளாட் எண்:120.

வகீதா பாட்டி யாருக்காகவும் காத்திருக்கமாட்டாள் என்பது பேரன் சித்தார்த்துக்கு நன்கு தெரியும்.. 

மேகங்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு விளையாடும் அன்றைய மாலை நேரம் இதமாக இருந்தது . 

“பாட்டி ! வாக்கிங் கெளம்பலியா ?” பேரன் கேட்டான் .. 

“இதோ புறப்பட்டுட்டே இருக்கேன் … நீ வரலியா ?” என்று கேட்டாள் ,க்ரே கலர் சால்வையை பிடரி வழியச் சாத்தியவாறே . 

“நோ.. பாட்டி.. அப்புறமா நானும் மம்மியும் வர்றோம்.. ப்ளே ஏரியாவுல கொஞ்சம் கூட்டம் கொறையட்டும்..” 

“சரி.. மம்மி எங்கே?” 

“அது … பக்கத்து பிளாட்டுலே ஆன்ட்டிகிட்டப் பேசிட்டிருக்காங்க ” 

“அப்படியா.. என்னவாம் ” 

“எதோ பிரச்சனையும் … அந்தப் பாட்டியினாலதான் பிரச்சனையின்னு நினைக்கறேன்” 

வகீதாவுக்கு பகீரென்றது . 

‘போறதே போறோம்..பேசாமல் அவளையும் இழுத்துக்கொண்டு போய்விட்டால்.. யாருக்கும் பிரச்சனை இருக்காது.. ச்சே.. என்ன மனசு.. எதுக்கு இப்படியெல்லாம் நெனைக்கனும்.. 

நமக்குன்னு கடவுள் கொடுத்தது ஒரே பிள்ளை.. அவனை சார்ந்துதானே இந்தப் பெரிய நகரத்திலே இருந்தாக வேண்டியிருக்கு.. இனியென்ன நமக்கான சூரியன் உதிக்கவா போகுது!

உன்னோட வேலையே நீதான் செய்தாகணும்… ங்கறமாதிரி அந்த மனுஷன் சொல்லிட்டுப் போய்ட்டாரு..’

“என்ன பாட்டி.. கண்டதையும் நினைச்சிட்டு இருக்கறீங்க.. போகலையா?” 

ஏழு வயதுப் பேரனை அப்படியே வாரியணைத்து, விழிகளில் நீர் துளிர்க்கக் கொஞ்சினாள். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடவெடக்கும் குளிரில் , ‘நீயும் நானும் வாழ்ந்தது போதும்’ என்பதுபோல், வகீதாவின் கணவன் ரஞ்சித் தணுப்புத் தாங்காமல் மூச்சிரைத்து மடிந்து போனான் .

அவன் செய்த புண்ணியம் , படுக்கையைச் சுற்றி அவன் மனைவி வகீதா, மகன் வசந்த், மருமகள் வனிதா, பேரன் சித்தார்த்.. அப்புறம் சில உறவுகள் என்று ஆலமர விழுதுகளின் அணைப்பில் கடைசி மூச்சை உதிர்த்ததுதான் . 

“அம்மா! உனக்கு பெங்களூர் ஆகாதுதான்.. ஆனால் வேறு வழியில்லை.. இந்த கிராமத்தில் என்ன இருக்கு .. உன்னைத் தனியா விடமாட்டேன் ” என்றான் வசந்த் .

“ஆமா பாட்டி.. இனி நீங்க எங்களோடுதான் !” என்றான் சித்தார்த். 

“பாட்டி இனி நம்மோடுதான்.. அத்தே ! புறப்படுங்க” என்றாள் வனிதா . 

அவளுக்கு ஆறுதலாய் இருந்தது . 

வசந்துக்கு ஸ்விஸ் ஐ .டி .கம்பெனியில் உயர் பதவி.லட்சக்கணக்கில் சம்பளம் . சம்பாத்தியத்திலிருந்த வனிதாவை வற்புறுத்தி வேலையை விட்டுவிடச் செய்தான் . அவளுக்கு இதில் உடன்பாடில்லை . 

அவ்வப்போது அத்தையிடம் கடிந்துகொள்வாள். வீட்டுக்கு வீடு வாசப்படி. 

வகீதாவுக்கு ஒரே ஆறுதல் பேரன்தான். அப்புறம்.. பக்கத்து வீட்டுப் பாட்டி ராசாமணி . இருவரும் பிளாட்டுக்கு முன்பு நீண்டுகிடந்த காரிடாரில் நடை பயிலுவார்கள். கதை பேசுவார்கள். 

வகீதா ஹெல்தியாக இருந்ததுபோல் ராசாமணி இல்லை. ஒருநாள் இந்த உலகை விட்டுக் கடந்து போனாள் .வேதனையில் குறுகிப்போனாள் வகீதா.

ஒரு மாதங்கழித்து, ஒரு நாள்-

‘அமலா அன்னை இல்ல’த்திலிருந்து இரண்டு பெண்கள் டொனேஷன் கேட்டு வந்தார்கள். அப்போது வீட்டில் யாரும் இல்லை . மருமகள் சூப்பர் மார்கெட்டுக்குப் போயிருந்தாள். 

ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு வகீதா வெள்ளந்தியாய்க்  கேட்டாள் : 

“நானும் உங்க ஹோமுக்கு வந்துவிடட்டுமா?” 

அவர்கள் திகைத்துப் போனார்கள் .

“அம்மா.. அப்படியெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி உடனே வர முடியாது.. இந்த வீட்லே இருக்கிறவங்களோட பெர்மிஷன் வேணும்.. நீங்க இருக்கிற இடத்திலே சந்தோஷமா இருக்கப் பாருங்க..ம்மா” 

இவள் தாழ்ச்சியுடன் அவர்களைப் பார்த்தாள் .

அன்று மாலை.

வழமைபோலவே வகீதா அபார்ட்மெண்டைச் சுற்றிலும்  அசைந்து அசைந்து மென்னடை போட்டாள்.

ஏனோ மனசு வலிக்கிற மாதிரியிருந்தது. ஆளற்ற காலி பெஞ்சில் சோர்வாய்ச் சாய்ந்தாள் . 

பாதி உறக்கம். பாதி கனவு போல. அந்தக்கரணத்தில் அவன் தோன்றினான். ரஞ்சித்! 

‘வகீதா! வீணா மனசைப்போட்டுக் குழப்பிக்காதே.. நடக்கிறதுதான் நடக்கும். நான் என் பெற்றோருக்கு நல்ல மகனா இருந்திருக்கிறேன்.. அதே போல்தான் நம் பிள்ளையும் .அவனும் சித்தார்த்தை நல்ல மகனாகத்தான் வளர்த்தெடுப்பான்! இருக்கிற வரைக்கும் இதிலே திளைச்சுப்போய், சந்தோஷமா இருக்கப்பாரு.. வயசான காலத்திலே இந்த அனுபவம்தான் தேவை.. இந்த உலகத்திலே எந்த நாட்டுக்குப் போனாலும் வயசானவங்களுக்கு மதிப்பே கிடையாதுங்கறதை முதல்லே புரிஞ்சுங்க.. இருக்கிற இடம்தான் சொர்க்கம்ன்னு நினைச்சிட்டு இரு!’ 

சற்று தொலைவில் பேரன் சித்தார்த் கூவிக்கொண்டே ஓடிவந்தான் .

“பாட்டி! எங்கெல்லாம் உங்களைத் தேடறது.. டாடி வந்துட்டாங்க..வாங்க” 

அவன் மெல்லிய கரம், அவள் கையைப் பற்றியிழுத்தது. அது தன்  மகன் வசந்த் கரம் போலவே இருப்பதை வகீதா உணர்ந்தாள் . 

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *