தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்





கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம்.
இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது. ‘ஜென்ம சாபல்யம்’ கிடைக்கிறது. ஒவ்வொரு புராணக் கதையிலும் செய்திகளும் குறிப்புகளும் சேர்ந்து கதாபாத்திரங்களாக நம்மோடு உரையாடுகின்றன; நிகழ்ச்சிகளாக நம்மைச் சுத்தப்படுத்துகின்றன.
இக்கதைகள் எல்லாம், சில நடந்த கதைகள். சில தர்ம உபதேசங்கள். போதனைக்காக குறிப்புகளாக, சங்கேதங்களாகக் கூறப்பட்டவை. நடந்து முடிந்த இதிகாசங்களையே, நடக்க வேண்டிய சாதனைகளுக்காக சமன்வயப்படுத்தி, கோர்வைப் படுத்தி, நாம் பயன் பெறும்படி உபதேசங்களாக அளித்துள்ளார்கள் மகரிஷிகள்.
இந்த வகையைச் சேர்ந்தவையே பாகவதக் கதைகள். புராண சம்பிரதாயத்தின்படி எழுதப்பட்ட பாகவதம், ‘மகா புராணமாக’ அனைவருக்கும் வழிபாட்டு நூலாக உள்ளது..
இதிலுள்ள துருவ சரித்திரத்தை ஆராய்ந்தால் அற்புதமான ஆன்மீக சாதனை விசேஷங்கள் தெரிய வருகின்றன.
‘ஸ்வாயம்புவ மனு’ என்பவரின் புதல்வன் ‘உத்தான பாதன்’. அவனுக்கு ஸுநீதி, சுருசி என்று இரு மனைவியர். சுருசியின் புதல்வன் உத்தமன். சுநீதி தனயன் துருவன்.
ஒரு நாள் உத்தமன் தந்தையின் மடியில் அமர்ந்து கொஞ்சப்படுவதை பார்த்து, தானும் தந்தையின் மறு தொடையின் மேல் அமர ஆசை கொண்டான் துருவன். ஆனால் சுருசி அவனைத் தடுத்துப் பின்னால் இழுத்தாள்.
“உனக்கு அருகதையில்லை. பூர்வ புண்ணியம் இல்லாததால் என் வயிற்றில் நீ பிறக்க வில்லை. இக்காரணத்தால் தந்தையின் மடியில் அமரும் யோக்கியதை உனக்கில்லை” என்று வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.
சுருசி மீது கொண்ட ருசியால் தந்தை வாய் திறக்கவில்லை.
அழுது கொண்டே பெற்ற தாயிடம் வந்த துருவனைச் சமாதானப்படுத்திய ஸுநீதி, விஷயத்தை அறிந்து கொண்டாள். கணவனிடம் தன் பேச்சுக்கும், இருப்புக்கும் பயனிருக்காது என்றுணர்ந்து, மகனிடம் கூறினாள், “உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமானால் இறைவனின் அருள் வேண்டும். நாராயணனின் கிருபையால் உன் கொள்ளுப் பாட்டனார் பிரம்ம தேவரும், உன் பாட்டனார் ஸ்வாயம்புவ மனுவும், உன் தந்தை உத்தான பாதனும் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். நீயும் உத்தம நிலையை அடைய வேண்டுமானால் அந்த வாசுதேவனையே சரணடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினாள்.
தாயின் தூண்டுதலால் தவமியற்ற எண்ணி புறப்பட்ட துருவனுக்கு பக்தி ஆச்சாரியரான நாரதர் எதிர்ப்பட்டார். வாசுதேவ மந்திரத்தை உபதேசித்து, தவமியற்றும் முறையை போதித்து, குருவாக மார்க்க தரிசனம் காட்டியருளினார். நாரதரின் உபதேசத்தை அனுசரித்து துருவன் தீவிர தவச் சாதனையில் மூழ்கினான். தவப் பலனாக விஷ்ணுவின் அனுகிரகத்தைச் சாதித்தான். அவரருளால், தந்தை , தாத்தாவை விட சாசுவதமான உயர்ந்த ‘துருவ பத’த்தை அடைந்தான்.
“இருக்கும் நிலையை விட உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் துருவ சரித்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டுமென்று” பாகவதம் பலச்ருதி கூறுகிறது.
இது துருவ சரித்திரம் வெளிப்படையாக, சுருக்கமாக!
ஆனால், சூட்சுமமாக, இதிலுள்ள பாத்திரங்களின் பெயர்களை சங்கேதக் குறிப்புகளாக ஏற்றால், அற்புதமான சாதனைக்குரிய ரகசியங்கள் வெளிப்பட்டு தரிசனமளிக்கும்.
‘உத்தான பாதன்’ என்ற பெயருக்கு ‘முயற்சியில் ஒழுக்கமுடைய ஜீவன்’ என்று பொருள். இந்த ஜீவனுடைய புத்திக்கு இரண்டு வேலைகள். அவையே மனைவிகள். ஒன்று:- அழகிய நீதி – ஸுநீதி. இரண்டாவது:- விஷய சுகங்களின் மேல் அதிக விருப்பம் -சுருசி. சு = அதிக. ருசி = விருப்பம். இந்த விருப்பத்தினால் உலக சுகங்கள் ‘உத்தமம்’ என்று தோன்றி உத்தமனைப் புதல்வனாகப் பெற்று, மடியில் வைத்துக் கொஞ்சுகிறான்.
பரமார்த்தத்தைச் சாதித்து அளிக்கும் தர்ம பத்தினியே ஸுநீதி. சு =அழகிய. இத்தகைய தர்ம நடத்தையால் கிடைப்பது நிச்சலமான (அசையாத), நிச்சயமான (த்ருவம்) பக்தி. அவனே துருவன்.
இந்த பக்தி பாவனையை சுருசியின் குணத்தால் பெற முடியாது. சுநீதியே பக்தியைப் பிறப்பிக்கக் கூடியது, பக்தியைத் தூண்டக் கூடியது, பலிக்கச் செய்யக் கூடியது.
நல்ல நடத்தையால் கிடைக்கும் (த்ருவமான) அசையாத பக்திக்கு இறைவனே தகுந்த குருவை அனுப்பி, மார்கத்தை உபதேசிப்பான். அவ்விதம் வந்த குருவே நாரதர். பகவானின் கருணையால் சத்குரு கிடைக்கிறார். சத்குருவின் கடாட்சத்தால் பகவானை அடைய முடிகிறது.
த்ருவமான (திடமான) பக்தி, த்ருவமான (நிலைத்த) உன்னத நிலையைப் பெறுகிறது. எனவே ‘த்ருவன்’ என்ற பெயர் பக்தனுக்கு மட்டுமின்றி பக்திக்கும் பொருந்தும்.
பாகவத தர்மத்தின் முக்கியமான சாதனை ரகசியங்கள் இக்கதையில் இவ்விதம் பொதிந்துள்ளன. அது மட்டுமல்ல. ஆகாயத்திலுள்ள வான் வெளி மண்டலத்தில் இருக்கும் ஜ்யோதிர் லிங்கங்களின் தெய்வீகத் தன்மை கூட இக்கதையில் மறைந்துள்ள குறிப்புப் பொருள்.
ரிஷிகள் எழுதிய நூல்களில் உள்ள கதைகளில் தர்மத்திற்கான குறிப்புகள், சாதனைக்கான குறிப்புகள், யோக ரகசியங்கள், ஜோதிர்மண்டல விசேஷங்கள் நிறைந்திருக்கும்.
பல்வேறு சாஸ்திரங்களின் துணையுடன் இவற்றை அறிகையில் எக்காலத்திலும், எல்லோருக்கும் பயன்படும் உபதேசங்கள் கிடைக்கும்.
– ‘இது நம் சனாதன தர்மம்’ – என்ற நூலிலிருந்து. தெலுங்கில் எழுதியவர்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம்:- ராஜி ரகுநாதன்.