தெய்வமகன்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மண்ணுலகின் வேதனைக்குரல் விசும்பின் தாழ்வாரங்களில் ஒலித்தது. சர்வத்தையும் படைத்த பரமபிதா மோனவுறக்கத்திலிருந்து நெட்டுயிர்த்து விழிக்கின்றார்.
‘பாவங்களின் அகலாக் கறைகள்…’
மனித மந்தைகளான ஈனப் பிறவிகளின் தீனக்குரல்கள்…
யுத்தங்கள்…
அக்கிரமச் செயல்கள்,
மனிதனை மனிதன் விரோதிக்கும் மனோபாவங்கள்,
இரத்தம், கண்ணீர், சுயநலம், பேராசை…
நரகத்தின் ‘பூஞ்சோலையாகப்’ பரிணமித்துள்ள பூமி. பரமபிதாவின் ஞான ஒளியில் விவரிக்கவொண்ணாச் ‘சோகம்’ சுடருகின்றது.
தெய்வ சாயலான மனிதர்கள் இந்தப் பூமியிலா வாழுகிறார்கள்?
பனி படர்ந்துள்ள கொடுங்குளிரில் யுக யுகாந்தரமான ஆண்டுகளுக்கு முந்திய ஒரு இரவு கழிய நகர்கிறது. மேல்வானத் திரையில் என்றும் தோன்றாத ஒரு புதிய நட்சத்திரம் ஒளிருகிறது. வையத்தில் நிகழவுள்ள புதுமையை உணர்த்துவதா அது…?
வயல்வெளிகளில் இயற்கையின் என்றுமில்லாச் சாந்தம் பொழியும் பேரமைதி நிறைகிறது.
மேய்ப்பர்கள் வயல்களின் மத்தியில், தொலைக்குத்தொலை தூரங்களில் தத்தம் மந்தைகளைக் காவல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
குளிர் நீக்க அவர்களினால் கொளுத்தப்படும் அனலின் சுடர் மின்னுகிறது.
தத்துவ சாத்திரிகள் பிரபஞ்ச உற்பாதங்களை எதிர் நோக்குவதில் நேரத்தைக் கழிக்கின்றனர்.
தெளிந்த ஞானிகள் உண்மைப் பொருளைத் தரிசிக்க அவாவி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
அஞ்ஞானம் மட்டும் சடமாய்த் துயில்கிறது. அதன் பெருங் குறட்டையில்……
பெருநகரத்ததும், சிற்றூரதும் உணவு விடுதிகள், தங்கும் இல்லங்கள், சத்திரங்கள், சாவடிகள் எங்கும் கும்மாளம் குதூகலிக்கின்றது. ‘விழிப்பிலி’ருப்பதாய்ப் பாவனை செய்கின்றன அவை.
ஒலிகிளப்பும் மதுக்கிண்ணங்கள்-
உலக இன்பத்தில் திளைக்கும் ஆடவர், மகளிர், இரவும் பகலும் ஒன்றையொன்று பிரியத் தெரியாமல் மயங்கும் ‘அற்புதம்’ நடக்கிறது!
அந்தப் பெண் உலகநாயகனையே தன் தலைமகனாகப் பெறப்போகின்றவள் வழி நடக்கின்றாள். நிறைமாசம்…பூரண கர்ப்பிணி….
அவள் நடப்பதில் அழகு, அமைதி, பெருமிதம் பொலிகின்றன.
அவள் முன்னே செல்ல அவள் துணைவன் பின்னே நடந்து வருகின்றான்.
கலிலேயா நாட்டின் நாசரேத்தூரிலிருந்து அவர்கள் பயணம் தொடங்கினர்.
சிற்றாறுகள், அருவிகள், குன்றுகள், வயல் நிலங்கள் கடந்து பயணம் நிகழ்கிறது.
என்னென்ன அனுபவங்களை, உணர்ச்சிகளை அவர்கள் அடைந்தனரோ…….!
மரியாள்…
யோசேப்பு…
வேதத்தின் முதல்வனை உலகிற்களிக்கப் புறப்பட்டவர்கள்.
யூதேயா நாட்டின் எல்லையை அடைந்து, ஊர்ப்புறத்தில் வருகின்றனர்.
பெத்தலேகேம் திருப்பதி வருகிறது. அதன் ஆரவாரம் மிக்க மாளிகைகள், விடுதிகள் எங்கும் சனக்கூட்டம் மிகுத்துள்ளது. பெருந் தனவந்தர்களும் தங்குதற்கு இடந்தேடும் வேளை.
அந்த இரவு …! மரியாளும், யோசேப்பும் தங்குவதற்கு இடந் தேடுகின்றனர்.
இடமாவது, கிடைப்பதாவது…சத்திரத்தின் உள்ளே பார்க்கவும் முடியாத நிலையில், படுக்கை வசதிகள் கிடைக்குமா…?
வேதனையின் ஆரம்பம்…
இயற்கையின் நியதி….
தெய்வமகனைப் பெறுவதென்றாலும் நியதிக்கு அப்பாலாய சலுகை கிடையாது.
மரியாள் மிகக் கஷ்டப்படுகிறாள். யோசேப்பின் முகத்தில் ஆயிரம் ரேகைகள்.
சத்திரத்தின் ஓரத்தில்-வெளிப்புறத்தில், ஒதுக்கமான இடத்தில் ஆனிரைகள் துயிலுந் தொழுவத்தில் ‘தற்காலிகமாக’ அந்தத் தாய் தங்குகிறாள்.
பிரசவம் நிகழ்கிறது.
பிள்ளையின் அழுகை ஒலி கேட்கிறது. அது ‘அழுகையா?’ தெய்வகானமா?
ஆங்கு கவனிப்பவர் யாவரோ… …?
மரியாளின் கண்களில் என்றுமில்லாத தெய்வீக ஒளி காலுகிறது.
யோசேப்பு புது மனிதனாக, அந்தக் குழந்தையை வைத்தகண் வாங்காமல் ஆதுரத்துடன் பார்க்கின்றான்.
விவரிக்கவொண்ணாத் தெய்வீக சாந்நியத்துவம்-அமைதி-நிலவும் வேளை.
கர்த்தரின் தூதன் தெய்வமகனின் அவதாரம் பற்றிச் சொல்லி மறைகிறான்.
பரம சேனையின் திரள் கர்த்தரைத் துதிக்கும் ஒலி மங்களகரமாக எல்லார் காதுகளிலும் ஒலிக்கிறது.
வானில் பவனிவந்த அந்தப் புதிய நட்சத்திரம், மரியாள்-யோசேப்பு அந்தக் குழந்தையின் பிறப்பிற்காக ஒதுங்கியிருந்த இடத்திற்கு நேரே தம்பித்து நிற்கிறது.
ஊருறங்கும் நள்ளிரவு. ஆனால்… மேய்ப்பர்களும், சாத்திரிகளும் அந்தப் பிள்ளையைக் காண வருகிறார்கள். அவர்கள் இதயங்களிலே புதுமலர்ச்சி, பயபக்தி, பிள்ளையைக் கண்டு பிரமிக்கிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். யோசேப்பிற்கும், மரியாளிற்குமே பேரதிசயமாகத்தானிருக்கிறது!
அதிசயம் !
பிரபஞ்சத்தில் உண்மைப் பொருளின் அவதாரமல்லவா நிகழ்ந்திருக்கிறது!
பரமபிதா தம் தெய்வமகனை மனித குலத்தின் இரட்சகராகவன்றோ, ஏழ்மையின் தலைவாசலில் தோன்றப் பணித்துவிட்டார்.
அத்தெய்வமகனின் திருவதனத்தில் அன்றலர்ந்த மலரின் அழகு, அமைதி…
அந்நீளிரவு மெல்லக் கழிகிறது.
பூமாதும் புனிதம் பெற்ற நிறைவில் மலர் நிறைத்துப் பொலிகிறாள். சீவராசிகளும் அப்பேருண்மையை உணர்ந்து கொண்டனவோ, என்னவோ, காலாகாலமாகக் காத்திருந்த தெய்வமகனை மண்ணுலகம் பெற்றேவிட்டது!
– நவம்பர் 1964.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |