தூண்டில் மீன்
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 65
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆண்டாளுக்கு நடுத்தர வயது. அவள் ஆசைக்கு ஒன்றல்ல இரண்டு இருந்தன! ஐந்து வயதிலும் மூன்று வயதிலும் பெயர் சொல்ல இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன.
ஆனால் ‘ஆஸ்திக்கு ஒன்றுகூட இல்லையே!’ என்ற கவலை. அப்படியொரு கவலை அவளுக்கு இருந்தாலும் சொத்துப் பத்து என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.
“திருப்பதி வேங்கடேசா, எனக்கு மகன் பிறக்கணும்! என் மகனை அழைத்துக் கொண்டு உன் வாசலுக்கு வருகிறேன்! திருமலை என்று பெயர் வைக்கிறேன்! முதல் முடியை உன் காலடியில் காணிக்கை யாக்குகிறேன்! இந்த ஏழை மேல் இரக்கம் காட்டுப்பா!” என்று நாளும் வேண்டிக் கொள்வதைப்போல் அன்றும் ஏழுமலையானை வேண்டிக் கொண்டே மணிவயிற்றைத் தடவிப் பார்த்தாள்.
ஐயிரு திங்களின் வளர்ச்சி அதன் அளவிலிருந்து தெரிந்தது! நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
‘என்னைத் திருமால் கைவிடமாட்டார்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது.
முடிந்த மட்டும் வீட்ட வேலைகளைச் செய்துவிட்டு வாசலுக்கு நேர் எதிரே தாழ்வாரத்தில் போய் காற்றாட நின்றாள்!
பிள்ளைகள் இரண்டும் அவள் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றன; புடவையை இழுத்து முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடின!
‘மூத்த மகளின் தலை அடிவயிற்றில் இடித்தாலும் இடித்துவிடும்’ என்று ஆண்டாளுக்கு அச்சமாக இருந்தது.
“வீட்டுக்குள் போய் விளையாடுங்களே!” என்று சொல்லியவாறு, மூத்த மகளின் கையைப் பிடித்து இழுத்தாள்.
இழுக்கும்போது வயிற்றைச் சுண்டி இழுத்தது. பிள்ளையின். கையை விட்டுவிட்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றாள்! மனம் பன்னீர் குடத்தில் இருந்தது. கர்ப்பப் பையில் குடியிருக்கும் அரும்பின் துள்ளலை அவளால் உணரவும் முடிந்தது. ‘சுட்டிப் பயலாக இருப்பான் போலிருக்கே! இப்போதே இந்தத் துள்ளல் துள்ளுகிறானே! இவனைக் கண்டித்துத்தான் வளர்க்கணும்!’ என்று நினைக்கும்போது அவள் நெஞ்சில் பன்னீர் சிந்தியது! மனம் குளிர்ந்தது!
மீண்டும் சுண்டி இழுத்தது. வலியும் எடுத்தது. ‘இந்த வலி சூட்டுவலியாகத்தான் இருக்கும்’ என மிதமாக எண்ணிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே நின்றாள். அந்த வலியைத் தாங்கிக் கொள்வதிலும் அவளுக்கு ஒரு தனி இன்பம்.
நேரம் செல்லச் செல்ல வலி கூடியது.
‘சூட்டு வலி இப்படி வலிக்காதே! பேறுகால வலியைப்போல் இருக்கே’ என்று அவள் பட்டறிவு சொல்லியது. இருக்கவே இருக்கு கைமருந்து! எதற்கும் கருக்குப் போட்டுக் குடிக்கலாம் எனும் எண்ணத்தில் அடுக்களைக்குள் சென்றாள்.
எரிவளி அடுப்பைப் பற்றவைத்தாள்; அடுப்பில் சூரியகாந்தி நெருப்புப் பூ! தீ எரிந்தது. இருப்புச் சட்டியை எடுத்து அடுப்பில் வைத்தாள். ஒரு பிடி வெந்தயத்தை அள்ளிச் ‘சரேள்’ என்று ஒலி கிளம்பச் சட்டியில் போட்டாள்.
சிறிது நேரத்தில் வெந்தயம் கருகி மூக்கில் நெடி ஏறியது! ஒரு குவளை நீரைப் பிடித்து ஆவி பறக்க அதில் ஊற்றினாள். கருக்குக் கொதிக்கும் வரை அவளால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை!.
இடுப்பைப் பிடித்துக் கொண்டு தரையில் மெல்ல அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அடுப்பில் போட்டிருந்த கருக்கு ‘தளதள’ வென்று கொதித்தது! ஒரு கையைத் தரையில் ஊன்றியபடி பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும் எழுந்தாள்; பிள்ளைகளும் எழுந்தன.
பூனைக் குட்டிகளைப்போல் அவள் காலைச் சுற்றிச்சுற்றி வந்தன.
அடுப்புக்கு அருகில் பிள்ளைகள் நிற்கின்றனரே’ எனும் எண்ணத்தில் அடுப்பை அணைத்த படி, ‘கொஞ்சம் தள்ளி நில்லுங்க!’ என்று எரிந்து விழுந்தாள். அடுப்புத் தீ அவிந்தது; அடுப்பை அடைத்துவிட்டுச் சட்டியை இறக்கினாள்.
பிடிதுணியில் சூடேறி அவள் கையிலும் சூடு தட்டியது. வயிற்று வலியும் சூட்டுவலியாகத் தெரியவில்லை. கடுமையாக இருந்தது.
அவளுக்குப் பயம் வந்துவிட்டது. ‘அவரும் வீட்டில் இல்லையே’ என்று வருந்தினாள்.
அவள் கணவன் பெருமாளுக்குச் ‘சைச்சி’யில் கார் கழுவும் வேலை. நாற்பது வண்டிகளைக் கழுவ இரண்டாயிரம் வெள்ளி முதலீடு செய்திருந்தார்!
அவர் காலையிலேயே கருக்கலில் நான்கு மணிக்கு எழுந்து விடுவார்! வீட்டுக்கு அருகில், வாடிக்கையாகக் கழுவ வேண்டிய வண்டிகளைக் கழுவிவிடுவார். வயிற்றில் உள்ள எரிபொருள் தீர்ந்ததும் வீட்டுக்கு வருவார். ‘உழைக்க வேண்டுமே! என்று வயிற்றுத் தீயை அணைக்க இட்டிலியோ தோசையோ வீட்டில் உள்ளதை மூக்குப் பிடிக்கப் பசியாறுவார். எட்டு மணிக் கெல்லாம் மீண்டும் வேலைக்குச் சென்று விடுவார்.
அன்றும் அப்படியே வேலைக்குச் சென்றிருந்தார். ஆண்டாளுக்குப் பயமாக இருந்தது.
‘உச்சி வெயில் உச்சந்தலையில் விழுந்து உரைக்கும் போதுதானே வீட்டுக்கு வருவார்! இடையில் வேலையைப் போட்டுவிட்டு வரமாட்டாரே! செய்யும் தொழிலே தெய்வம் என்று செய்து முடித்துவிட்டு வீட்டுக்கு வர மதியத்துக்கு மேல் ஆகிவிடுமே! வயிற்றை இப்படி வலிக்குதே! என்ன செய்வேன்! எப்படியாகிலும் மருத்துவமனைக்குப் போய்விட வேண்டியதுதான்!’ என்று அவள் முடிவுக்கு வந்தாள்.
ஒரு கையால் சட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு கையில் உள்ள துணியைச் சரிசெய்தவாறு ‘வேங்கடாசலபதி…’ என்றாள்.
அப்போது வாசலில் ஆள் வரும் அரவம் கேட்டது. பிடிதுணியைச் சரிசெய்துகொண்டே பக்கவாட்டில் பார்த்தாள்.
கணவன் விரைந்து வருவதைப் பார்த்ததும் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஆறுதல் அடைந்தாள். ஆனால் அதே நேரத்தில் ‘வண்டிகளைக் கழுவிவிட்டு வழக்கம்போல் பன்னிரண்டு மணிக்கு மேல்தானே வருவார்! இன்று இவ்வளவு வெள்ளென வந்துவிட்டாரே! ஒருவேளை வாயும் வயிறுமாக இருக்கிறேன் என்று பார்க்க வந்திருப்பாரோ! எல்லாம் அந்த அரங்கநாதரின் அருள்தான்! அவர்தான் அனுப்பி வைத்திருக்கிறார்’ என்று எண்ணப்படி அவரைப் பார்த்தாள்.
ஆனால் அவள் நினைத்தபடி பெருமாள் வரவில்லை. அவர் வயிறெரிந்துபோய் வந்தார். வந்தார். வந்த சுருக்கில் சப்பாத்துகளை உதறினார். அவை அவர் காலிலிருந்து விடுபட்டுத் திசைக்கொன்றாகக் கரணம் அடித்தன; தாறுமாறாகப் போய் விழுந்தன. அவர் விடுவிடு என்று வீட்டிற்குள் நுழைந்தார்.
அப்போது, “சுருக்கா ஓடியாங்களே!” என்று ஆண்டாளும் குரல் கொடுத்தாள்.
பெருமாள் பரபரப்போடு அடுப்படியை நோக்கி விரைந்தார். கையில் சட்டியைப் பிடித்துக்கொண்டு நெளியும் ஆண்டாளின் நிலையைப் பார்த்தார். வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்ட வந்தவரின் வயிற்றை அக்காட்சி கலக்கியது.
அள்ளிக் கொட்ட வேண்டியதை அப்படியே விழுங்கி விட்டு அவள் கையிலிருந்த சட்டியை வாங்கினார். அவர் கை ஆடியது. வியர்க்க விறுவிறுக்க வந்திருந்ததால் மூச்சு இரைத்தது. கருக்கைக் குவளையில் இறுத்தாற்போல் ஊற்றினார்.
அவர் மனம் வெந்து கொண்டிருந்தது! இருந்தாலும் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை.
“காலையில் நல்லாத்தானே இருந்தே!” என்றார்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதாங்க… ஆ… வலி தாங்க முடியலேயே!” என்று முகத்தைச் சுளித்தாள்.
பெருமாள் கருக்கை விரைந்து ஆற்றினார்.
அவர் மனம் ஆறவில்லை என்றாலும் கருக்கு ஆறியது. இளஞ் சூடாக அவளிடம் கொடுத்தார்.
அவள் வாங்கியபடி முகத்தைச் சுளித்தாள்! அதன் மணம் அப்படி இருந்தது.
கருக்கு அவள் தொண்டையை விட்டு இறங்க மறுத்தது. த்து…! ஒரே கசப்பு!
பெருமாள் அவள் நெஞ்சைத்தடவிக் கொடுத்தபடி, “குடிச்சிடு” என்றார்.
அவள் கண்களை மூடிக்கொண்டு கருக்கைத் தொண்டைக்குள் இறக்கினாள். கருக்கு தொண்டையை விட்டு இறங்கியது! ஆனால் கசப்பு இறங்க மறுத்தது. கணவன் முகத்தைப் பார்த்தாள்.
சொல்ல வந்த உண்மையை விழுங்கிவிட்ட அவர் முகமும் கருக்குக் குடித்த முகத்தைப் போல் இருந்தது!
“ஏன் என்னவோ போல் இருக்குறீங்க? கவலைப் படாதீங்க! உங்களுக்கு மகன்தான் பிறப்பான்; உங்களைப்போலவே இருப்பான்!” என்று சிரிப்பை வலிய வரவழைத்தாள். அது நொடிப் பொழுது அவள் முகத்தில் ஆட்சி புரிந்து விட்டு அடுத்த நொடியே மறைந்தது! அவள் உடம்பும் வியர்த்தது.
அவள் நெற்றியில் முத்திட்டிருந்த வியர்வையைத் துடைத்து விட்டபடி, “எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கிறேன்!” என்று அவர் உதடு பேசியது. அவர் முகத்தில் செயற்கையாகப் பூத்த பூவும் நொடிப் பொழுதில் உதிர்ந்து மறைந்தது.
“இடுப்பு வலி கண்டிடுச்சுங்க! மருத்துவமனைக்கு அழைச்சுக் கிட்டுப் போயிடுங்க!” என்று அவள்மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள்.
பெருமாளின் பட்டறிவுக்கும் அவள் சொல்வது சரியென்று பட்டது.
சிறிது நாளைக்கு முன்பு நிறை மாதக் கர்ப்பிணி ஒருத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், செல்லும் வழியிலேயே டாக்சி மகப்பேற்று மருத்துவமனையாக மாறியிருந்ததும் அவர் நினைவுக்கு வந்தது!
கூடவே பயமும் வந்துவிட்டது.
“நம் நேரங்காலம் சரியில்லை! உடனே போறதுதான் நல்லது!” என்றார்.
“ஆமாங்க! போய்விடுவோங்க!” என்றாள் ஆண்டாள்.
வலியால் துடிக்கும் மனைவியையும், கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளையும் பார்த்தார்.
மூத்தது கேவிக்கேவி அழுதது.
“அழாதேம்மா. அம்மாவுக்கு ஒண்ணுமில்லே!” என்றார். மூத்தது அழுகையை நிறுத்தவில்லை.
“சொன்னால் கேட்கணும். இல்லே கன்னம் வீங்கிப் போகும்” என்று அதட்டினார்.
அவர் வெருட்டியதும் பிள்ளைகள் அரண்டுவிட்டனர். ‘கப்சுப்” என்று வாயை மூடிக்கொண்டனர். பயத்தால் நடுநடுங்கினர்.
ஆண்டாளின் பித்து மனம் துடித்தது.
“அழாதீங்கம்மா! அம்மாவுக்கு ஒண்ணுமில்லை… உங்களுக்குத் தம்பிப் பாப்பா பிறக்கப் போகிறான்…. ஆ…” என்று இடுப்பைப் பிடித்தாள்.
பெருமாளும் சுதாரித்துக் கொண்டார். “ஆமாம் அழாதீங்க! உங்களுக்குத் தம்பிப் பாப்பா பிறக்கப் போகிறான்” என்று அமைதிப் படுத்தினார்.
பிள்ளைகள் அமைதி அடைந்தனர்.
அவர் ஆண்டாளைப் பார்த்தார்.
அவளுக்கு அவர் செய்கை வியப்பாக இருந்தது.
“ஒண்ணுமில்லே ஆண்டாள்! நீ வலியால் துடிக்கிற அதான்! சரி சரி புறப்படு!” என்றார்.
அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். இளையது அவர் மேல் தொற்றிக் கொண்டது. மூத்தது தாய் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தது.
அவர்கள் மூன்றாவது மாடியிலிருந்து மெதுவாக இறங்கி சாலையை அடையப் போதும் போதும் என்றாகிவிட்டது!
சாலையை அடைந்ததும் ஆண்டாளைப் பேருந்து நிறுத்த இருக்கையில் இருக்கச் செய்து விட்டு அவர் சாலையின் ஓரத்தில் நின்று இருபக்கமும் மாறி மாறிப் பார்த்தார். அவர் பார்வை சாலையின் இருபுறமும் இருந்தன. ஆனால் மனம் அவரிடம் இல்லை.
“ப்பீ… ப்பீ….”
டாக்சி ஹாரன் ஒலிதான்!
டாக்சி அவர்களைக் கடந்து சென்றது. பெருமாள் கை அசைத்து நிறுத்தவில்லை! அவர் தன்னை மறந்து நின்றார்.
வயிற்றுச் சுமையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டும், அந்தச் சுமையை இறக்கத் துடித்துக் கொண்டும் நின்ற ஆண்டாள் “என்னங்க பேசாமல் நிக்கிறீங்க? இப்போது போன டாக்சியில் ஆளே இல்லையே!” என்று சொல்லிய பிறகுதான் அவருக்கு உணர்வு பிறந்தது.
அடுத்த டாக்சி வந்தது! அதை அமர்த்திக் கொண்டு கண்டங் கெர்போவ் மருத்துவமனைக்கு விரைந்தனர்! மருத்துவமனையை அடைந்ததும் பதிவு அறைக்குச் சென்று பெயரைப் பதிவு செய்தார்! தாதியர் பறந்தனர், நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு இயங்கினர்.
பதிவெண் பொறித்த இரு சிறு துண்டுத் துணிகளை ஆண்டாளின் கைகளில் கட்டினர். ஒரு துணி பிள்ளை பிறந்ததும் அது கையில் கட்டுவதற்கு!.
இனிப் பயமில்லை! ஆண்டாளின் வயிற்றுச் சுமை இறங்கிவிடும்’ என்று பெருமாள் மனத்தில் ஓடியது.
அதே நேரத்தில் “நல்ல சமையத்தில் வந்திட்டாங்க! இன்னும் ஒரு மணிநேரத்தில் குழந்தை பிறந்துவிடும்” என்று தாதி சொல்லியதும் அவர் காதில் விழுந்தது! ஆனால் அவர் மகிழ்ச்சி அடையவில்லை, மனம் அழுததால்!
இரண்டு மூன்று நாள் ஓடியது. தாயும் சேயும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தனர்.
ஆண்டாள் முகத்தில் செம்பகப்பூ! மடியில் துயிலும் பத்தரை மாற்றுத் தங்கத்தைப் பார்த்தாள். “எல்லாம் அவன் அருள்” என்று மனம் சொல்லியது. பக்தி உணர்வு ததும்ப “சீனிவாசா” என்றாள்.
சொல்லும்போது அவள் வாய் மணத்தது. மெய் உருகியது. நெஞ்சில் பஞ்சாமிர்தம் சிந்தியது. புத்துணர்ச்சி பொங்கியது.
“திருமலை” என்று பூஞ்சிட்டின் உச்சியை மோந்தாள்! மகிழ்ச்சியால் தாய் மனம் குளிர்ந்தது – உள்ளம் துள்ளியது.
ஆனால் பெருமாள்? அவர் இடிந்துபோய் இருந்தார்!
அவர் முகத்தில் முன்பிருந்த களை இல்லை; களிப்பு இல்லை. கனிவான பேச்சும் இல்லை!
ஆண்டாள் அவரைப் பார்த்தாள்.
“எனக்கு மகன்தான் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான் என்று ஆசையாகப் பாடிக்கொண்டு இருந்தாரே! இப்போது ஏன் இப்படி இருக்கிறார்? என்ன காரணமாக இருக்கும்?” என்று அவள் மனம் கேட்டது.
அதே நேரத்தில் அவளை அறியாமலே ஏதோ ஒன்று அவள் உள் மனத்தை அழுத்தியது. அவள் மனம் சில நிகழ்ச்சிகளை மீண்டும் அசை போட்டுப் பார்த்தது.
வயிற்று வலியால் துடித்தபோது அவர் பரபரப்போடு வீட்டிற்குள் வந்ததும், கருக்குக் கொடுத்த போது அவர் கை நடுங்கியதும், பிள்ளைகளிடம் எப்போதும் இனிமையாகப் பேசுபவர் அன்று எரிந்து விழுந்ததும், மருத்துவமனைக்குச் சென்றபோது சாலையில் அவர் தன்னை மறந்து நின்றதும் அவள் மனத்திரையில் விரிந்தன! ‘இதற்கு ஏதோ காரணம் இருக்கு’ என்று அவளால் ஓர்ந்துணரவும் முடிந்தது.
‘ஏதோ காரணம் இருக்கு’ என்று முடிவுக்கு வந்ததும் அவள் மகழ்ச்சி பறந்தது. என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.
“ஏன் என்னவோ போல் இருக்கிறீங்க?” – அவள் குரலில் துக்கம் இழையோடியது.
“சொல்ல வேண்டாம்! சொன்னால் கவலைப்படுவாள்” என்று எண்ணிக்கொண்டிருந்த பெருமாள் பார்வை அவள் பக்கம் திரும்பியது. இரக்கத்தோடு அவளைப் பார்த்தார். தாயின் மடியில், கதகதப்பில் விழிமலரை மூடியபடி துயில் கொண்ட இளந்தளிரையும் பார்த்தார்! மனம் நெகிழ்ந்தது.
மகிழ்ச்சியடைய வேண்டிய நேரத்தில் அவர் மனம் அழுதது.
மனைவியின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முயன்றும் அவரால் முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
“மகிழ்ச்சியையும் மனக்கவலையையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிட்டானே!” என்று அவர் மனம் புழுங்கியது.
“மனம் சரியில்லை!” என்றார்.
“ஏன் கண் கலங்குறீங்க? என்னங்க நடந்தது? சொல்லுங்கங்க? வேங்கடாசலபதி நம்மைக் கைவிட மாட்டாருங்க!”
“கை விட்டுட்டாரே… கவலையென்றால் என்ன என்று தெரியாத என்னைக் கவலைப்பட வச்சிட்டாரே!”
“ஏன் சின்னப் பிள்ளையைப்போல் அழறீங்க?” கணவனின் கண்ணீர் அவள் மனத்தைக் கசக்கிப் பிழிந்தது.
“ஆண் குழந்தை பிறந்தால் திருப்பதிக்குப் போய் முதல் முடியை இறக்கணும் என்று வேண்டிக்கொண்டோமே! அது இனி நடக்காது! நாம் வேண்டிக் கொண்டபடி அதை நிறைவேற்ற அங்கே போக முடியாது!” என்றார்.
ஆண்டாள் பதறிப்போய்விட்டாள்! “ஏன் முடியாது? நமக்குத்தான் மகன் பிறந்திருக்கிறானே!” என்றாள்.
“அது ஏன் ஆணாகப் பிறந்தது என்று இப்போது கவலைப்படுகிறேன்! பெண்ணாகப் பிறந்திருந்தால் திருப்பதிக்குப் போகணுங்கிற கவலையே வந்திருக்காது!” என்றார்.
“ஏன்? என்னங்க நடந்தது சொல்லுங்கங்க!” என்று மன்றாடினாள்.
“அதை எப்படிச் சொல்லுறது ஆண்டாள்! உண்ணாமலும் உடுத்தாமலும் வாயை வயிற்றைக் கட்டி, திருப்பதிக்குப் போகணும் என்று ஆசையாகச் சேர்த்த பணம் போயிடுச்சு! கூட்டு முதலாளி முத்துக்கிட்டே மாதா மாதம் இருநூறு வெள்ளி ஏலக்கூட்டு போட்டோமே, அந்தப் பணம் எல்லாம் போயிடுச்சு ஆண்டாள்; போயிடுச்சு! எவனை நல்லவன், நாணயமானவன் என்று நினைத்துக்கொண்டு இருந்தேனோ அவன் நாணயம் காற்றில் பறந்து போயிடுச்சு ஆண்டாள்! கூட்டு கட்டினவங்க வாயிலேயும், அவனிடம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தவங்க வயிற்றிலேயும் மண்ணை அள்ளிப் போட்ட விட்டு அவன் தலைமறைவாகி விட்டான். கணிசமான தொகையைச் சுருட்டிக் கொண்டு முந்தாநேற்று இராத்திரியே கம்பி நீட்டிட்டான்!” என்று வெந்த உள்ளத்தோடு சொன்னார்.
ஆண்டாள் நெஞ்சில் தீயை அள்ளிக் கொட்டியதைப்போல் இருந்தது. மனம் துடிதுடித்தது.
“எல்லார் பணத்தையும் ஏப்பமிட்டுட்டானா….? பரந்தாமனைப் பார்க்க போகணும்! அவன் பாதத்தில் விழுந்து வணங்கணும் என்று ஆசையாகச் சேர்த்த பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுட்டானா? கோவிலுக்குப் போகத்தான் இந்தக்கூட்டைக் கட்டுகிறோம் என்று தெரிந்திருந்தும் எடுத்துக்கிட்டானே! இரத்த வியர்வை சிந்தி இராத்திரிப் பகலாக வெயில் என்றும் மழை என்றும் பனி என்றும் பாராமல் உழைத்த பணத்தை, எறும்பு போல் உழைத்துச் சேர்த்த பணத்தை ஏமாற்றிவிட்டானே…! அவனை அந்த ஏழுமலையான் சும்மா விடமாட்டாருங்க! அவன் கருவை அறுத்திடுவாருங்க!” என ஆற்றாமையால் அவளும் அழுதாள்.
“கூட்டு ஏலம் ஏறிப் போகும்போதே இப்படி போகுதேன்னு நினைத்தேன்! அப்போதாகிலும் கூட்டைத் தள்ளி எடுத்திருக்கக் கூடாதா? ம்… இவன் இப்படிக் கழுத்தறுப்பான்னு நான் கனவில் கூட நினைக்கலே! கூட்டுப் பிடிக்கும்போதே நீ சொன்னாயே அதைக் கேட்டிருந்தால் இப்போது இப்படி நடந்திருக்காது ஆண்டாள்! உதிரிக் காசுக்கு ஆசைப்பட்டுக் கூட்டுக் கட்ட வேண்டாங்க; அவனிடம் கட்டுறதுல ஒரு பிடிமானமு இல்லேங்க; கூட்டுப் பிடிக்கிறவனும் வாடகை வீட்டில் குடியிருக்கிறான்; வீட்டைக் காலி செய்துட்டுப் போனால் என்ன செய்வீங்க- என்று தலைப்பாடாய் அடித்துக் கொண்டாயே! கேட்டேனா? கேட்கலே! எல்லாம் நம்பிக்கை தான் என்றேன்! சேவிங் பேங்கில் போட்டு வைங்க என்று சொன்னாயே அதையாகிலும் செய்தேனா? அதையும் செய்யலே! கூட்டுக் கட்டினால் பணமும் சேரும், அதே நேரத்தில் அந்தப் பணத்துக்கு உதிறிக்காசும் கை நிறையக் கிடைக்கும் என்று நினைத்தேன். இப்போது என் நினைப்பில் மண் விழுந்திடுச்சு!” என்றார். உழைத்த உழைப்பை நினைத்துக் குருதிக் கண்ணீர் வடித்தார்.
“அணில்போல் சேர்த்த காசு! அவனுக்கு வாய்க்கரிசி போடணும்ன்னு இருந்திருக்கு! அவனுக்கிட்டே வாங்குறதுக்கு ஏதாகிலும் வழி இருக்குங்களா?” என்று ஆண்டாள் துன்பம் தோய்ந்த குரலில் கேட்டாள்.
“எப்படி வாங்க முடியும்? முதலை வாயில் சிக்கியதா திரும்பக் கிடைக்கப் போகுது? அவன்தான் தலைமறைவாகி விட்டானே? போனது போனதுதான். இனி அவனை எங்கே போய்ப் பார்க்க முடியும்? பார்த்தாலும் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்கிறது? ஆளுப்பேறு “வேறு வழியில்லை” என்றார்.
ஆண்டாள் வாய் அடைத்துக் கொண்டது. அவள் பார்வை மடியில் துயிலும் குலக்கொழுந்து பக்கம் திரும்பியது. அவள் கைவிரல்கள் தவக்கொழுந்தின் தலைமுடியில் தவழ்ந்து கொண்டிருந்தன.
‘முடியிறக்க வேண்டும், வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்’ என அவள் மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது.
மீண்டும் கணவனைப் பார்த்தாள். உழைத்துக் களைத்த உடம்பு கருத்துத் துரும்பாக இளைத்திருந்தது! முகத்தில் கவலை கப்பி இருந்தது. செய்வதறியாது சோர்ந்தபடி இருந்தார்.
“வெள்ளை உள்ளத்தை இந்த நிலைக்கு ஆளாக்கி இப்படி வேக வைத்திட்டானே” என்று அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. வேலையை விற்கவும் அவள் மனம் மறுத்தது.
அவள் நல்ல உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.
“நீங்க ஏன் கவலைப்படுறீங்க? இருக்கவே இருக்குங்க நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த, என் நகை” என்றாள்.
பெருமாளுக்கு நகையென்று ஒன்று இருப்பதே அவள் சொல்லிய பிறகுதான் நினைவுக்கு வந்தது. மன இறுக்கம் சிறிது தளர்ந்ததைப் போலவும் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நகையில் கை வைக்க அவர் மனம் ஒப்பவில்லை. ‘உருப்படியாக அதுதான் இருக்கிறது. பொருளாக இருக்கும் அதை அழித்துவிடக்கூடாது’ என்று எண்ணியபடி அவளைக் கூர்ந்து பார்த்தார்.
“என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க? நகைப் பைத்தியம் நகைப் பைத்தியம் என்று சொல்வீங்களே அந்தப் பைத்தியமா இப்படிச் சொல்கிறாள் என்று பார்க்கிறீர்களா? எனக்கு நகைப் பைத்தியம் இருக்கிறதாலேதான் ஏழுமலையான் என்னைச் சோதிக்கிறார் போலிருக்கு! நகையைப் பெருசா நினைக்கிறேனா, இல்லை வேண்டுதலை நிறைவேற்று கிறேனா என்று சோதித்துப் பார்க்கிறார்!” என்றாள்.
அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் மனம் பின்நோக்கிப் பார்த்தது.
“இப்போது எதுக்கு நகை? அதில் ஏன் பணத்தைக் கொண்டு போய் போட்டு முடக்கி வைக்கிறே! அந்தப் பணத்துக்கு ரெண்டு கூட்டுக் கட்டினால் உதிறிக் காசு கிடைக்கும் என்றேனே! நகையில் போட்ட பணத்தைக் கூட்டில் போட்டிருந்தால் அதுவும் போயிருக்குமே!” என்று எண்ணியது.
“என்னங்க பேசாமல் இருக்குறீங்க?” என்று ஆண்டாள் மீண்டும் கேட்டாள்.
“என்னை என்ன செய்யச் சொல்லுறே? கொஞ்சம் சும்மா இருக்கவிடே!” என்றார் பெருமாள்.
ஆண்டாள் பிள்ளையைக் குளிப்பாட்டினாள். தாய்ப் பால் கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு சமைத்தாள்.
பிள்ளை பெற்ற உடம்பு சமையல் அறையில் வெந்து கொண்டிருந்தது. அவள் மனமுந்தான்!
“பெண் குழந்தை ஒண்ணுக்கு ரெண்டு இருக்கு! பெண் வளர்த்தி பீர்க்கங்கொடியைப்போல என்று சொல்லுவார்கள்!” என்று அவர் சொல்லியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.
“அவர் சொல்வது சரிதான்! பெண்கள் விடுவிடுன்னு வளர்ந்திடுவாங்க! அவர்களுக்கு நாளைப் பின்னே நகை தேவைப் படும்! ஆனால் அதுக்காக வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கமுடியுமா? பரந்தாமனின் பாதத்தில் விழுந்து எழுந்தால் அது போதாதா? அவர் அருள் இருந்தால் கைகால் நலத்தோடு இருக்க மாட்டோமா? கைகால் நலத்தோடு இருந்தால் நாளைப் பின்னே நகை வாங்க முடியாதா? அவர் வரட்டும் எதற்கும் இன்னொரு முறை சொல்லி, ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!” என்று எண்ணியபடி வேலையில் ஈடுபட்டிருந்தாள்.
அப்போது பெருமாள் வருவது தெரிந்தது.
“இவருக்கு ஆயுள் கெட்டி! நினைத்ததும் வருகிறாரே! சும்மாவும் வரவில்லை! எத்தனையோ நாளைக்குப் பிறகு இன்றைக்குச் சிரித்த முகத்தோடு வருகிறாரே” என்று நினைக்கும்போது ஆண்டாள் மனத்தில் மகிழ்ச்சி அரும்பியது. அவர் மலர்ந்த முகத்தோடு வருவதைப் பார்த்ததும் “ஏதோ மகிழ்ச்சியான செய்திதான் கொண்டு வருகிறார்” என்று அவள் மனம் குளிர்ந்தது.
அவர் வீட்டிற்குள் வந்ததும் “ஆண்டாள், அவன்… அதான் கூட்டு முதலாளி முத்து இருக்கிறானே அவன் இருக்கும் இடம் தெரிஞ்சு போச்சு! சிராங்கூன் கார்டனில் இருக்கிறானாம்! எனக்குத் தெரிந்தவர் அவனைப் பார்த்துப் பேசியிருக்கிறார். பழைய பங்களா வீட்டை வாங்கிப் புதுப்பிக்கிறானாம்! சுணங்காமல் என்னைப்போய்ப் பார்க்கச் சொன்னார். எனக்கு அந்த இடம் அத்துபடி; நல்லாத் தெரியும். அங்கே பத்துப் பதினைந்து ஆண்டாகக் கொட்டை போட்டவனாச்சே எனக்குத் தெரியாதா? அந்தப் பகுதியில் என் கால் படாத இடமே இல்லை! எல்லார் வீட்டுக்கும் சென்று புல் வெட்டியிருக்கிறேன்!” என்று உள்ளக் கிளர்ச்சி மேலிடச் சிரித்தார். அவர் பேச்சில் தற்பெருமையும் இழையோடியது.
ஆண்டாள் நெஞ்சில் பன்னீர் சிந்தியது! பெருமாள் பெருமையாகப் பேசுவதைக் கேட்டு மட்டும் அவள் மகிழவில்லை. “இனி பணத்துக்கு ஒரு வழி பிறந்துவிடும்” என்ற நம்பிக்கையும் பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தாள்.
“அவன் இருக்கிற இடத்தை அந்த ஏழுமலையான்தான் காட்டி இருக்கிறார். போய்ப் பார்த்துப் பணத்தைக் கேட்போங்க!” என்றாள்.
அடுத்த நொடியே “எந்தப் பிடிமானத்தை வைத்துக் கொண்ட பணம் கேட்பது” என்ற கேள்வியும் அவள் மனத்தில் எழுந்தது. இரக்கத்தோடு கணவனைப் பார்த்தாள்.
பெருமாளுக்கு அவன் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் கைவிட்டுப் போன பணம் கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதைப் போல் இருந்தது.
“ம்… சூட்டோடு சூடாகப் போய் பார்க்க வேணும்! கூட்டுப்பணத்தைக் கேட்க வந்திடுவாங்க என்று அவன் மறுபடியும் அங்கிருந்து தலைமறைவானாலும் ஆகிவிடுவான். எதுக்கும் நாம் முந்திகக் கொள்வதுதான் நல்லது!” என்றார்.
“சரிங்க!” என்றாள் ஆண்டாள்.
மதிய உணவை முடித்துக் கொண்டு பேருந்தில் சிராங்கூன் கார்டனுக்குச் சென்றனர்.
கிராங்கூன் கார்டனில் உள்ள பழைய வீடுகளுள் பல புதுப்பிறவி எடுத்திருந்தன! புதுப்பித்து இரண்டு மாடி வீடுகளாகக் கட்டப்பட்டிருந்தன. பெருமாள் பாதம் பட்ட இடங்களுள் பல உருத் தெரியாமல் மாறி இருந்தன.
பெருமாள், “அடேயப்பா இந்த இடமெல்லாம் தலைகீழாக மாறிப்போச்சே!” என்று மூக்கில் விரலை வைத்தார்.
ஆண்டாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “உங்கள் கால் பட்ட இடமே மாறிப் போயிடுச்சு! ஆனால் நீங்கள் அப்படியேதானே இருக்குறீங்க!” என்று சிரித்தாள்.
“எனக்கும் காலம் வரும்!” என்றார்.
‘கனவு காண்கிறார்’ என்று ஆண்டாள் நினைத்துக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டே முத்து வாங்கியிருந்த வீட்டை அடைந்தனர்! அதுவும் மறுபிறவி எடுக்கவிருந்தது. வாசல் முன் மதில் எழுப்ப வானம் பறித்துப் போடப்பட்டிருந்தது. ஒரு பக்கம் மணலும், ஒரு பக்கம் சரளைக் கல்லும் குவிந்து கிடந்தன. செங்கலும், சிமிந்தியும் அடுக்கப்பட்டிருந்தன.
அவற்றைப் பார்த்தபடியே சென்றனர்.
வீட்டு வாசலை ஒட்டிய புல் திடலில் – சாய்வு நாற்காலியில் வெள்ளைத் தலை தெரிந்தது. அந்தத் தலைக்கு அருகில் மொட்டைத் தலையும் தெரிந்தது. மொட்டைத் தலையுடன் காட்சியளித்த ஆள் வேறு யாருமில்லை! கூட்டு முதலாளி முத்துவேதான்!
“மொட்டை அடித்திருக்கிறானே? பலருக்குக் கடுக்காய் கொடுத்துவிட்ட பாவத்தைப் போக்கப் பரிகாரம் தேடி இருக்கிறானோ? இருந்தாலும் இருக்கும்! மனச்சாட்சியென்று ஒன்று இருக்கே” என்று பெருமாள் எண்ணிக் கொண்டு சென்றார்.
அவரை, “வாங்க” என்று ஒருவர்கூட வரவேற்க வில்லை.
“ஒப்புக்குக்கூட வாங்க என்று சொல்லவில்லையே! மதியாதார் தலைவாசலை மிதிக்கக் கூடாதுதான்! ஆனால், தலையைக் கொடுத்து விட்டோமே” என்று எண்ணிக் கொண்டு முத்துவைப் பார்த்தார்.
அந்தப் பார்வை முத்து மனத்தைச் சுட்டது. அவன் மனம் கூசியது. அவருடைய முகத்தில் விழிக்க அவன் மனம் இடம் தர மறுத்தது. தலை குனிந்தான்.
“பார்க்க வெட்கப்படுகிறான் போலிருக்கு! தவறு செய்தவன் ஒரு நாள் தலை குனியத்தானே வேண்டும்” என்று பெருமாள் மனத்தில் ஓடியது. முதியவரைப் பார்த்தார்.
“உங்களுக்குத் தெரியாதா!” என்றார் முதியவர்.
முதியவர் இப்படிக் கேட்பார் என்று பெருமாள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர் குருதியில் சூடேறியது.
“யாரை தெரியாதான்னு கேட்கிறீங்க?” முத்துவையா?” என்றார்.
முதியவர் பதறாமல், ‘இவரைத் தெரியாதான்னு கேட்கலே! இங்கே நடந்தது உங்களுக்குத் தெரியாதா என்றுதான் கேட்டேன்!’ என்றார்.
பழுத்த பழத்தின் பேச்சில் கனிவு இருந்தது.
அவர் பணிவாகச் சொல்லியதும் சூடேறிய பெருமாள் இரத்தம் சிறிது குளிர்ந்தது. சினமும் தணிந்தது.
ஏதோ நடந்திருக்கு எனும் எண்ணத்தில், என்னங்க? என்றார்.
“அதை எப்படிங்க சொல்லுறது? சொல்ல மனம் வரலே! ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியலே! சொன்னால்தானே உங்களுக்கும், உங்களைப் போன்றவங்களுக்கும் புரியும்! ‘முத்துவுக்கு வேண்டுதல் இருந்தது. அதை நீண்ட நாளாக முத்து நிறைவேற்ற வில்லை. இனிமேல் நிறைவேற்றாமல் காலம் கடத்துவது நல்லது இல்லையென்று அதை நிறைவேற்ற அவர் திருப்பதிக்குப் போயிருந்தார். அதுவும் சும்மா போகவில்லை. போயிட்டு வந்து எல்லாருக்கும் கூட்டுப் பணத்தைப் பட்டுவாடா செய்யலாம் என்று அந்தப் பணத்தை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய் விட்டார். அதை எப்படியோ திருட்டுப் பயல்கள் மூக்கு மோப்பம் பிடித்து விட்டது! கழுகுக்கு மூக்கு வியர்த்து விட்டால் சும்மா இருக்குமா? திருட்டுப் பயல்கள் வீட்டில் பணம் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் சமையம் பார்த்து ஒரு நாள் இராத்திரி வைக்க வந்துட்டானுங்க! கூட்டுக் கட்டியவங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும், நகையையும் அவங்க அள்ளும் போது முத்தோட அப்பா பார்த்து விட்டார். வயதான காலத்தில் என்ன செய்ய முடியும்? மல்லுக்கு நிற்க முடியுமா? கூச்சல் போட்டிருக்கிறார். அவருடைய போதாத நேரம்… ஒருவன், “ஏண்டா கிழவா கத்துறே?” என்று அவர் வயிற்றில் கத்தியால் ஓங்கிக் குத்திட்டான்! நல்லவரோட உயிர் அந்த இடத்திலேயே போயிடுச்சுங்க! இப்போது முத்து தகப்பானரை இழந்துட்டுத் தனிமரமாக நிற்கிறார்!
கைப்பொருளும் போயிடுச்சு! நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லவும், உதவி செய்யவும் அவருக்கு யாரும் இல்லை! பட்ட கடனைக் கொடுக்கக் கையில் மடியில் எதுவும் இல்லை! உங்களைப் போன்றவங்கதான் முத்துவுக்கு உதவி செய்யணும்! செய்தீங்கனா விட்டதை மீட்டுவிடுவார்! பட்ட கடனையும் கொடுத்து விடுவார்!” என்றார் முதியவர்.
அவர் குரல் தழுதழுத்தது. முகத்தில் சோகம் படர்ந்தது. ஆண்டாளின் பெண் மனம் இளகியது. கண்களில் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டாள்.
“பணம் கொடுக்கலேன்னா நறுக்கென்று நாலு கேள்வி நாக்கைப் பிடுங்கிறாப்போல கேட்கணும்” என்று நினைத்துக் கொண்டு வந்திருந்த அவள் மனம், பணம் கேட்க வந்த இடத்தில் துக்கம் கேட்கும்படி ஆயிடுச்சே என்று வருந்தியது.
பெருமாள் பார்வை முதியவரின் நெஞ்சத்தை ஊடுருவியது. முதியவர் திறமையாகப் பேசியதையும் அவர் பேச்சில் உண்மை ஒளிந்து கொண்டிருப்பதையும் புரிந்துகொண்டார்.
“அதான் வீடு தேடி வந்தவங்களை வாங்க என்று கூட நீங்கள் அழைக்க வில்லையா?” என்று வினையமாகக் கேட்டார். முதியவர் தலை “ஆம்” என்பதைப்போல் ஆடியது! ஆனால் மனம் உறுத்தியது.
“மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறானே! ச்சே! இவனெல்லாம் ஒரு மனிதனா? தலையில் மிளகாய் அரைத்தது போதாதென்று மறுபடியும் அரைக்கப் பார்க்கிறானே! கொடுக்க வேண்டிய பணத்தைப் கேட்க வந்தவனிடமே விட்ட பணத்தைப் பணத்தைப் பிடிக்க உதவுங்கிறானே! இந்த முதலடிக்கிப் பயல்கள் முகத்தில் விழிப்பதே பாவம்!” என்று பெருமாள் மனம் குமுறியது.
முதியவரைப் பார்க்கவே அவருக்கு அருவருப்பாக இருந்தது. பார்வையை முத்துப் பக்கம் திருப்பினார்.
அவர் உள்ளம் வெந்தது. “கூட்டுக் கட்டியவர்களை மொட்டை அடித்தது போதாதென்று இப்போது உன் அப்பனின் இறுதிச்சடங்குக்கு மொட்டைஅடித்திருக்கிறாயாடா?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.
“கேட்டால் பணத்தைத் திரும்பக் கொடுக்கவா போகிறான்?” எனும் எண்ணத்தில் கேட்கத் துடித்த நாவை அடக்கிக் கொண்டார். ஆனால் உள்ளக் குமுறலை அவரால் அடக்க முடியவில்லை.
அந்த இடத்தில் நிற்பதற்கும் அவர் விரும்பவில்லை! மனைவி மக்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
“போயிட்டு வருகிறோம்!” என்று சொல்லவுமில்லை.
“இழவுகார வீட்டில் இருந்து போகும்போது போயிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது” எனும் எண்ணத்தில் அவர் சொல்லாமல் செல்லவில்லை. “துக்கப்பட வைத்து விட்டார்களே” என்று மனம் வெந்து சென்றார்.
கொஞ்சத் தொலைவு நடந்து சென்றதும் நடந்தபடியே அவர்களைத் திரும்பிப் பார்த்தார். முதியவர் முகத்திலும் முத்து முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவது தெரிந்தது. “இரக்கமற்றவர்கள் ஏமாற்றிவிட்டுக் கெக்கலிக்கிறார்களே!” என்று மனம் அழுதது.
முன் வாசலை அடைந்தபோது, வானம் பறித்துப் போட்டிருப்பதையும், சரளைக்கல் கொட்டிக் கிடப்பதையும், செங்கல் அடுக்கி இருப்பதையும், மணல் அடித்துப் போட்டிருப்பதையும் பார்த்தார். பாவங்களை ஒட்டு மொத்தமாகக் கொட்டிக் குவித்துப் போட்டிருப்பதைப் போல் இருந்தன.
ஆண்டாளுக்குத் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “பிணத்தைப் புதைக்கக் குழி வெட்டிக் கிடக்கு! கல்லறை எழுப்பக் கல்லும் சிமிந்தியும் இருக்கு! ஆனால் பிணம் மட்டும் வாய் திறந்து பேசிக்கிட்டிருக்கு!” என்றார்.
ஆண்டாளுக்குப் புரியவில்லை. கைப்பிள்ளையை மார்போடு அணைத்தபடி, “என்னங்க சொல்லுறீங்க? புரியும்படியாகச் சொல்லுங்கங்க” என்றாள்.
“இது கலியுகம் பாரு! கலியுகத்தில்தான் எல்லாம் நடக்கும் என்று சிலர் சொல்லுறாங்களே! அதான் இவ்வளவு நேரம் நாம் பிணத்திடம் பேசிக்கிட்டு இருந்திருக்கிறோம்! பிணமும் நம்மிடம் வாய் திறந்து பேசிக்கிட்டு இருந்திருக்கு!” என்றார்.
“நம்மிடம் பிணம் பேசியதா?” என்று ஆண்டாள் வாயைப் பிளந்தாள். அவளுக்கு வியப்பாக இருந்தது.
“ஆமா! அந்த வெள்ளைத்தலையன் வேறு யாருமில்லை! முத்துவோட அப்பாவேதான்! இரண்டு பேரும் சேர்ந்து பிடித்திருந்த படத்தை நான் பலதடவை இந்தக் கண்ணால் பார்த்திருக்கிறேன்; கூட்டுக் கட்டப் போன இடத்தில். படத்தில் என் பக்கத்தில் நிற்பவர் எங்கப்பா என்று முத்துவே என்னிடம் சொல்லியும் இருக்கிறான்! இப்போது இங்கே அவன் பேசாமல் நிற்கிறான். புரட்டுக்காரத் தகப்பனோ முழுப் பூசுணைக்காயைச் சோற்றில் மறைக்கிறான்! தான் செத்துப் போனதாகப் புளுகுகிறான்!” என்றார்.
“அட பாவிப் பயல்களா!” என்றாள் ஆண்டாள்.
“நயவஞ்சகமாகப் பேசி நம்மை ஏமாற்றி விட்டார்கள் பாவிகள்! இப்படிப்பட்ட தீயவர்களைப் பார்த்ததே பாவம்!. பழகியது அதைவிடப் பாவம்! இந்தப் பாவத்தைப் போக்கவாகிலும் நகையை வித்துட்டுத் திருப்பதிக்குப் போகத்தான் வேண்டும்! இவனுங்க விரித்த வலையில் விழுந்ததைப் போல், இனிமேல் யார் வலையிலும் விழாமல் இருக்க ஏழுமலையானை வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார் பெருமாள்.
“கூட்டுக் கட்டிய பணம்?” என்று ஆண்டாள் வெந்த உள்ளத்தோடு கேட்டாள்.
“இனிமேல் ஒரு காசுகூடக் கிடைக்காது. அதான் பட்டைநாமம் தீட்டிவிட்டார்களே!” என்று தன் நெற்றியில் மூன்று விரல்களை வைத்து இழுத்துக்கொண்டார். அவர் உள்ளம் வெந்து கொண்டிருந்தது.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026
