துரோக நட்பு!




பள்ளியில் உடன் படிப்போரிலிருந்து ஆசிரியர்கள் வரை மரியாதை கொடுக்கும் அளவிற்க்கு படிப்பில் சிறந்து விளங்கினாள் கமலி. வீட்டிலும் எந்த நேரமும் புத்தகமும் கையுமாக உணவைப்பற்றிக்கவலைப்படாமல் அம்மா எது கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் வாங்கிப்பசி போக்கி, படிப்பில் முதலிடம் வந்து அனைவரின் பாராட்டைப்பெற்று, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் நிலையில் கணக்கு பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்றதால் ஆடிட்டிங் படிக்க அனைவரும் வற்புறுத்தியதாலும், வழிகாட்டியதாலும், பண உதவி செய்ய முன் வந்ததாலும் நகரத்தில் அதற்க்கான பயிர்ச்சி மையத்தில் சேர்ந்து பயின்றாள்.
தினமும் கிராமத்திலிருந்து நகரத்துக்கு செல்ல அதிகாலையிலேயே எழுந்து கடைமைகளை முடித்து, சைக்கிளில் அருகிலிருக்கும் நகரம் வந்து, அங்கிருந்து பேருந்தில் பெருநகரத்துக்கு சென்று, கொண்டு சென்ற காலை உணவை சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள மீத உணவை மதியம் உண்டு படித்து விட்டு இரவு வீடு திரும்புவாள்.
படிக்காத விவசாய கூலித்தொழிலாளியான தந்தைக்கும் ‘தன் பெண் இவ்வளவு சிரமம் எடுத்து படிக்க வேண்டுமா? அரசு கல்லூரியில் சாதாரண டிகிரி படிப்பு படிக்க வைத்து திருமணம் செய்து வைத்திருக்கலாமே…’ எனும் எண்ணம் தோன்றினாலும், ஆண்களுக்கு சமமாக நிற்க வேண்டும் எனும் லட்சியம் கொண்ட கமலியை அவளது விருப்பப்படியே விட்டு விட்டார்.

பயிற்ச்சி மையத்திலும் அவளது கற்றுக்கொள்ளும் திறனைப்பார்த்து வியந்தவர்களில் ஒருவனான மகத், அவளிடம் அடிக்கடி சந்தேகம் கேட்பது, உலக விசயங்களைப்பேசுவது என நண்பனாக மாறினான். சில நாட்களில் கமலி ஊருக்கு செல்லும் பேருந்து சென்று விட்டால் தனது பைக்கிலேயே அழைத்துச்சென்று அவளது சைக்கிள் நிற்கும் இடம் வரை விட்டு விட்டு வருவான். அவனது பழக்கம் படிப்பிலேயும், நடைமுறை விசயங்களிலேயும் கமலிக்கும் தேவையாகப்பட்டது. நட்பை மீறி அவனும் நடப்பதில்லை என்பதால் அவன் மீது அவளுக்கு நம்பிக்கை அதிகரித்தது.
மகத் மீதுள்ள நம்பிக்கையில் வீட்டில் சொல்லாமலேயே விடுமுறை நாட்களிலிலும் படிப்பிற்க்காக செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு அருகிலுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு மகத்தின் நண்பனான கிரணின் காரில் சென்று வருவர். இது போன்ற பணக்கார வாழ்க்கை தனக்கும் அமைய வேண்டுமென மனதில் எண்ணம் வந்தாலும் மகத் மீதோ, அவனது தொழில் நண்பன் கிரண் மீதோ காதல் ஏதும் வரவில்லை கமலிக்கு.
கிரண் மட்டும் சில சமயம் தன்னை முழுவதுமாக ஆராய்ந்து பார்ப்பதையறிந்து அவனை விட்டு ஒதுங்கியே இருப்பாள். அவனிடம் கோபத்தைத்தவிர்த்து அளவாக பல் தெரியாமல் சிரித்துவைப்பாள். ஒரு முறை கிரண் பைக்கில் அமர்ந்து சென்ற போது திடீர், திடீரென பிரேக் போட்டு அவன் மீது தன்னை மோத வைக்க முயற்ச்சிப்பதை அறிந்து முன்பக்கம் சாயாதவாறு பின்பக்கம் நன்றாகப்பிடித்துக்கொள்வாள்.
கிரணை முற்றிலும் ஒதுக்கினால் மகத் சங்கடப்படுவான். மகத்தின் நட்பு இருப்பதால் மற்ற ஆண்களின் தொந்தரவு இல்லாமல் இருந்ததாலும், சில சமயம் வெளியூர்களிலுள்ள கல்லூரிகளில் நடக்கும் பயிற்ச்சிகளுக்கு சென்று வர துணை தேவைப்பட்டதாலும் சிறு சங்கடங்களைப்பொறுத்துக்கொண்டாள்.
கமலிக்கு சிறுவயது முதல் படிப்பு, பள்ளிக்கூடம், புத்தகம் என ஓர் உலகத்தில் வாழ்ந்ததால் மனிதர்களைப்படிக்கவில்லை. பொதுவாக அனைவருமே நல்லவர்கள் என்பதே அவளது கருத்து.
இப்படியிருக்க ஒரு நாள் மகத் தன் நண்பருடன் சேர்ந்து பங்குவர்த்தகம் சம்மந்தப்பட்ட அலுவலகம் திறக்கப்போவதாகவும், அதற்கு நண்பர் கிரண் பத்து லட்சம் தரப்போவதாகவும், வரும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கு கமலிக்கு தருவதாகவும், அதற்க்கு அவள் பேரில் வங்கி கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் பங்குகளை வாங்கி விற்கலாம் என்றும், அதற்க்கு அவளுடைய முதலீடு ஒரு ரூபாய் கூடத்தேவையில்லையென்றும் கூறியதால் ஒத்துக்கொண்டாள்.
அடுத்த நாளே அவளது வங்கிக்கணக்கில் பத்து லட்சம் போடப்பட்டிருப்பதைப்பார்த்து அளவில்லாத மகிழ்ச்சியடைந்தாள்.
படிக்கும் காலம் முழுதும் முடித்திருக்காத நிலையில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட அழைத்த மகத் ” பத்து லட்சமும் தொழில்ல நஷ்டமாயிடுச்சு. உன்னோட அக்கவுண்ட் மூலமா பரிவர்த்தனை பண்ணினதால கடனை நீதான் கட்டணம். இன்னும் பத்து நாள்ல கட்டலேன்னா உன் மேல மோசடி கேஸ் போடப்போறதா கிரண் சொல்லறான்” என்ற போது தலையே சுற்றியது கமலிக்கு.
“எ..என்ன…சொல்ல….வர்றே…. நான் என்ன தப்பு பண்ணினேன்? என்னோட பேர்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணறதா நீதான் சொன்னே. உன்ற மேல உள்ள நம்பிக்கைல ஒத்துகிட்டேன். இந்த விசயம் என்னோட அப்பா, அம்மாவுக்கும் தெரியாது. இப்ப வந்து கடன், வழக்குன்னா நான் எங்க போயி கட்டுவேன். என்னைத்தான் பாடைல வெச்சுக்கட்டனும். ஒரு நண்பனைப்போல நடிச்சு ஏமாத்திட்டியே…? ” என அவள் சத்தமிட்டுக்கதறியதை அங்கிருந்த பலரும் பார்த்து முகம் சுழித்தனர்.
“ப்ளீஸ் …. ப்ளீஸ்…. சத்தம் போடாதே. நான் எப்படியாச்சும் பணத்துக்கு ஏற்பாடு பண்ணறேன். இப்ப நீ ரொம்பவே அப்செட் மூடுல இருக்கே. நாளைக்கு பேசலாம்” என ஆர்டர் கொடுத்த உணவை சாப்பிடாமலேயே பில் பணத்தைக்கொடுத்து விட்டு இருவரும் வெளியேறினர். மகத்தின் பைக்கில் ஏற மறுத்த கமலி நடந்து பயிற்ச்சி மையம் சென்றவள் தலை வலிப்பதாகக்கூறி உடனே ஊருக்கு கிளம்பி விட்டாள்.
வீட்டிற்கு வந்தவள் தனது அறைக்குச்சென்று தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதையறிந்து கதறியழுதாள். அம்மா பேச வந்த போது ‘வெளியே போ’ என கத்தினாள்.
மறுநாள் குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு மகத்தையும், அவனது நண்பன் கிரணையும் வரச்சொல்லி மெசேஜ் அனுப்பினாள். மகத் போனில் பல முறை தொடர்பு கொண்டும் பேசாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்.
அவள் சொன்ன இடத்திற்கு நண்பனுடன் மகத் வந்து காத்திருந்தான். மகத்தைப்பார்த்ததும் ஆவேசமாக அவனை மாறி, மாறி முகத்தில் அறைந்து விட்டு கதறி அழுதாள்.
“நம்பிக்கை துரோகி. டெய்லியும் பஸ்ல வர அம்மாகிட்ட பணம் வாங்கீட்டு வர்ற ஏழைக்குடும்பத்தச்சேர்ந்த நான் பத்து லட்சம் கடனாளியாகனமா? அதுல ஒரு ரூபாய கண்ணுல பார்த்திருப்பனா? எப்பப்பார்த்தாலும் ஓடிபி சொல்லு, ஓடிபி சொல்லுன்னு சொல்லிச்சொல்லியே என்னை ஒழிச்சிக்கட்டிட்டியேடா பாவி” எனக்கூறி மண்ணில் அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.
“இந்தப்பிரச்சினைய தீர்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு” என மகத் சொன்னதும் சட்டென எழுந்தவள் “சொல்லுடா…சொல்லு” என்றாள்.
“கிரணை….” என இழுத்தான் மகத்.
” கிரண் கூடப்படுக்கனுமா…?”
“ஐயையோ அப்படி சொல்லலை….”
“பின்னே எப்படி?”
“கல்யாணம்….”
“ஓ ஹோ.. இப்படி ஒரு திட்டம் போட்டுத்தான் என்னோட பேர்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணி, என்னோட பேர்லயே தொழில் செய்யறதா சொல்லி, நஷ்டக்கணக்கு காட்டி ரெண்டு பேருமா சேர்ந்து வழிக்கு கொண்டு வந்திருக்கீங்க இல்லே. டேய் கிரண் உன்னையும் ஒரு நல்ல நண்பனாத்தான் பார்த்தேன். ஆனா நீ வக்கிரப்பார்வை பார்த்தப்பக்கூட சகிச்சுகிட்டேன்” எனச்சொன்னபோது கிரண் தலை குனிந்தான்.
“ஒரு அப்பாவி பொண்ணுக்கு துரோகம் பண்ணீட்டு நீங்க நல்லா இருப்பீங்களா? என்னப்பெத்தவங்க கிட்ட நான் இத எப்படி சொல்லுவேன்….? ” எனக்கூறிய போது மயங்கியவளை கிரணின் காருக்குள் படுக்கவைத்து மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவள் திருமணத்துக்கு சம்மதம் என மகத்திற்கு மெசேஜ் அனுப்பினாள்.
நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமண வயதை சட்டப்படி தொட்டதால் பெற்றோரும் அழுதுவிட்டு அமைதியாயினர்.
முதலிரவு அறையில் கிரணை நெருங்க விடவில்லை கமலி. “என்னோட அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. அவங்க என்னைக்கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்காங்க. இப்ப பணக்கார மாப்பிள்ளையான உன் கிட்டிருந்து என்னை என்னாலயே பிரிக்க முடியாத போது அந்த ஏழை விவசாய கூலிகளால பிரிக்க முடியாது. வயசான காலத்துல அவங்க பிச்சையெடுக்காம வாழனம்னா அவங்களுக்கு என்னோட உதவி வேணும். அவங்க பேச்சை நான் கேட்காததால அவங்களை நான் இனி சந்திக்க வாய்ப்பில்லை. நான் அவங்களுக்கு பெத்து வளர்த்ததுக்கு ஏதாவது செய்யனம்.
என்னை நீ அவங்க கிட்டிருந்து விலை கொடுத்தே வாங்கின மாதிரி அவங்களுக்கு பணம் கொடுத்திடு. அதுக்கப்புறம் நான் உனக்கு அடிமையாவே இருந்திடறேன். அவங்களுக்கு பத்து லட்சம் கொடுத்திடு. அப்புறம் வந்து என்னை முழுசா எடுத்துக்கோ” என்றதும் சற்று அதிர்ச்சியடைந்தாலும், தன் மனைவியாகி விட்டவளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அடுத்த நாளே கமலியின் பெற்றோருக்கு பத்து லட்சத்தைக்கொடுத்தான் கிரண்.
இவ்வளவு எளிதாக கமலி தனக்கு மனைவியாவாள் என கனவிலும் நினைக்கவில்லை அவன். உண்மையிலேயே கமலி பேரில் தொடங்கிய தொழிலில் பத்து லட்சம் நஷ்டமாகவில்லை. லாபம் தான் வந்தது. அந்த லாபப்பணமான பத்து லட்சத்தைத்தான் கமலியின் பெற்றோருக்கு தற்போது கொடுத்துள்ளான். கமலியை அடைய வேண்டுமென்பதற்க்காக மகத்திற்கு மூன்று லட்சம் பணம் கொடுத்து பொய் சொல்ல வைத்துள்ளான்.
இன்று ஆசையுடன் அன்பு மனைவியைப்பார்க்க வீட்டிற்குள் வந்த போது கமலி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான்.
படுக்கை மேல் ஒரு கடிதம் இருந்தது.
‘தாலி கட்டினால் மட்டுமே ஒரு பெண்ணை மனைவியாக்கி விட முடியாது. அன்பாலும், நம்பிக்கையாலும் மட்டுமே ஒரு கயிறை தாலி எனும் மதிப்பைப்பெற வைக்க முடியும். இல்லையேல் அது வெறும் கயிறுதான். சினிமாவிலும், நாடகத்திலும் நடக்கும் கல்யாணம் போல் நடிப்புக்கல்யாணம் தான் நம் கல்யாணமும். அன்பும் நம்பிக்கையும் உன் கிட்ட ஒரு சதவீதமும் இல்லை. உனக்கு சேர வேண்டிய பத்து லட்சத்தையும் உனது வங்கிக்கணக்கில் என்னோட பெற்றோர் செலுத்திட்டாங்க.
உன்னோட போனிலிருந்த திருமண புகைப்படங்களை நேற்று நீ தூங்கும்போதே அழிச்சிட்டேன். என்னோட விருப்பத்துக்கு மாறாக நீ போட்ட சதித்திட்டத்தை இன்னைக்கு சிதைச்சிட்டேன். இப்போ நான் விழிச்சிட்டேன்’ என கமலி எழுதியிருந்த கடிதத்தைப்படித்ததும் கோபத்தில் கமலியைக் கசக்குவதாக எண்ணி கடிதத்தைக்கசக்கி வீசினான் கிரண்.
அப்போது டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் புலியின் வாயில் சிக்கிய புள்ளிமான் ஒன்று காட்டிற்குள் தப்பித்து ஓடி மறைந்த போது புலி ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பிச்சென்றது.