துப்பாக்கி சிரித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 929 
 
 

தனது காற்சட்டையின் பின் புறத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து ஒரு முறை திறந்து உருளையை. ஓட விட்டு பார்த்தான். அதில் மூன்று குண்டுகள் இருந்தது. ஒன்றே போதும் போர் நடந்த போது. எத்தனையோ பேரை சுட்டிருக்கிறோம். நம்மை நாமே சுட்டுக்கொள்ள ஒரு குண்டு போதும். இருந்தாலும் கை நடுக்கத்தில் ஒன்று தவறினாலும் இன்னொன்று தன் உயிரை பறித்துக்கொள்ளும்.

வறட்சியாய் சிரித்து கொண்டான். நான் இறந்த பின்னால் யார் வந்து முதலில் பார்ப்பார்கள்? யோசித்து பார்த்தவன் சிரித்தான். இருக்கும் வரை ஒருத்தரும் நம்மை அணுக மாட்டேனெங்கிறார்கள் செத்த பின்னால் யார் வந்து முதலில் பார்த்தால் என்ன?.

இந்த பிளாட்டிலேயே எத்தனை குடும்பங்கள் இருக்கிறது. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மூன்று வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இது வரை ஒருவர் கூட முகம் பார்த்து பேசவில்லை. என்னுடைய தோற்றம் இவர்களுக்கு பயமாய் இருப்பதாய் பேசிக்கொள்வது அவ்வப்பொழுது காதில் விழத்தான் செய்கிறது, அதற்கு நானா பொறுப்பு, என்னை பெற்றவர்கள்தானே.

இடையில் இராணுவத்தில் இருந்த போது ஒரு தீ விபத்து, அதில் முகத்தில் ஒரு பக்கம் கருகியது போல் ஆகிவிட்டது. அதனாலேயே என்னை ஓய்வு பெற வைத்து அனுப்பி விட்டார்கள். அங்கேயே இருந்திருந்தா கூட இந்த மக்கள் கூட்டத்துக்கு வராமலேயே இருந்திருக்கலாம்.

அப்படித்தான் வந்தவுடன் என்னை சொந்தக்காரங்கள் வரவேற்று விட்டார்களா?

முதல் மாசம் அங்கங்க இருக்கற சொந்தக்காரனுங்க எட்டி பார்த்துட்டு ஒதுங்கிட்டானுங்க. அவங்களுக்கு என் கருகின மூஞ்சிய எப்படி பார்த்து பேசிகிட்டிருக்க முடியும்? இருபத்தி ஐஞ்சு வருசம் இராணுவத்துலயே வேலை செஞ்சு இரண்டு தங்கச்சிகளை கரையேத்தி விட்டு நாற்பதை தாண்டி வந்தோமே.

என்னோட இளமையை அடகு வச்சு இராணுவத்துல வேலை செஞ்சு இவங்களுக்கு பணம் அனுப்பி நல்லபடியா அவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சோம். அம்மாவுக்கும் சரி இந்த தங்கச்சீகளுக்கும் இவ்னுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்கணு,ம்நு தோணவே இல்லையே? அம்மாவும் போய் சேர்ந்த பின்னாலே சுத்தமா என் வாழ்க்கையை நினைச்சுகூட பார்க்காம போயிட்டாங்க.

இப்ப இங்க குடி வந்த பின்னால எந்த தங்கச்சி என்னை பார்க்க வந்துச்சு? சம்பாதிக்கற வரைக்கும் என் தேவை அவங்களுக்கு இருந்திருக்கலாம். இப்ப பென்சன்தான் வருது. அதுவும் இந்த பிளாட்டுல வாடகைக்கும் சாப்பாட்டுக்கு சரியா போகுது.

சரி சொந்தங்கள்தான் அப்படீன்னு பார்த்தா பக்கத்து பக்கத்து வீட்டில இருக்கற இவங்க நம்மளை மனுசனா நினைச்சு கூட பார்க்கலை. ஒரு சிரிப்பு, புன்னகை எதுவும் இல்லை. ஆம்பளைங்களாகட்டும், பொம்பளைங்களாகட்டும், நான் அவங்களை தாண்டி போனா அப்படியே அமைதியாடறாங்க.

என்னை பார்த்து பயப்படறாங்களா? இல்லை அருவெறுப்போட ஒதுங்கறாங்களா, எனக்கு புரியலையே. இதுக்கும் காலையில ஒரு தடவை வாக்கிங் போறேன், சாயங்காலமா ஒருதடவை வாக்கிங் போறேன், தனியாத்தான் போய்க்கிட்டே இருக்கேன். வயசானவங்க கூட என் கிட்டே வந்து பேசறதில்லை. இந்த மூணு வருசமா தனியாத்தான் போயிட்டு தனியாத்தான் வந்து கிட்டிருக்கேன்.

இப்படி வாழறதுல என்ன பிரயோசன்ம், முடிவு பண்ணிட்டேன். ஒரு இராணுவ வீரனா இருந்தவன், வீரமாத்தான் முடிவ தேடிக்கணும், மத்தவங்க மாதிரி கோழைத்தனமான முடிவோட போக கூடாது.

இப்ப மணி என்ன இருக்கும், பத்து மணி ஆயிடுச்சா? எப்பவும் இந்நேரத்துக்கு தூங்க போயிருப்பேன். இன்னும் தூங்காம முழிச்சுகிட்டிருக்கேன்னா அதிசயம்தான், எதுக்கு தூக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா தூங்க போறவனுக்கு இப்ப எதுக்கு தூங்க அவசரப்படணும்?

வெளியே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது, “பலூனை அங்க கட்டு, இந்தா இங்கே பாரு” இதுல சொருகு, கசமுசான்னு சத்தமா இருக்கு. இந்நேரத்துக்கு இரண்டு பக்கத்து வீட்டுக்காரங்களும் சத்தம் காட்டாம தூங்கி போயிடுவாங்க, இன்னைக்கு என்ன அதிசயம்? புரியாமல் திகைத்தவன்

புரிஞ்சு என்ன பண்ணறது, இதுவரைக்கும் என்னன்னு ஒரு வார்த்தை கேட்டிருக்காங்களா? நடுவுல குடியிருக்கற ஆளாச்சேன்னு எப்பவாவது ஒரு வார்த்தை பேசியிருக்காங்களா? அப்புறம் என்ன இவங்க சத்தம் போட்டா என்ன போடாட்டி என்ன?

விரக்தியாய் சிரித்தவன் மீண்டும் மணி பார்த்தான். பதினொன்றில் நின்று கொண்டிருந்தது. சரியா பனிரெண்டுக்கு கரெக்டா நெத்தியில வச்சு சுட்டுடணும்,

காத்திருக்க ஆரம்பித்தான்.

கட்டிலின் ஒரத்தில் உட்கார்ந்தவன் மணியை பார்க்க கடிகார முள் சரியாக பனிரெண்டில் நின்ற பொழுது. கண்ணை மூடிக்கொண்டு துப்பாக்கியை நெற்றியில் வைத்து விசையை அழுத்த் போனவன்…க்ர்..க்ர்..க்ர்..சத்தம் காதை

பிளக்க..சடக்கென கண்ணை விழித்து கதவை பார்த்தான். தன் வீட்டு கதவில்தான் சத்தம் கேட்ட்து. இந்நேரத்துக்கு யார்? துப்பாக்கியை எடுத்து கட்டிலின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டு கதவை திறக்க விரைந்தான்.

கதவை திறந்தவனின் வயிற்றில் துப்பாக்கி ஒன்று அழுத்த பட்..பட்..பட்டென்ற வெடிச்சத்தம். ஒரு நிமிடம் திகைத்தவன் பொம்மை துப்பாக்கியுடன் நின்றிருந்த சிறுவன் ஏமாந்து விடுவான் என்று கருதி “ஐயோ” என்று கத்தி அப்படியே மடங்கி விழுந்தான்.

“ஹேய் மிலிட்டரி அங்கிளை சுட்டுட்டேன், சுட்டுட்டேன், அவர் செத்துட்டாரு”, மகிழ்ச்சியுடன் கூவினான் அந்த சிறுவன். “எந்திரிங்க சார்”, விழுந்தவனை கை கொடுத்து துக்கினான ஒரு இளைஞன். அந்த சிறுவனின் தகப்பனாயிருக்க வேண்டும். அருகில் பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய்.. இவனை சுற்றி நிற்க..

“சார் “ஹேப்பி நியூயியர் 2020” உங்களை ஆச்சர்யபடுத்தணும்னு மட்டும்தான்னு நினைச்சோம். ஆனா என் பையன் மட்டும் நீங்க இராணூவத்துல இருக்கும்போது வீரமா சண்டை போட்டு உங்க முகம் கருகினாலும் ஜெயிச்சு கொடுத்திருக்கீங்க. அதனால துப்பாக்கியிலதான் உங்களுக்கு பதில் சொல்வேன்னு அடம் பிடிச்சான். சாரி தப்பா நினைச்சுங்காதீங்க.

“ஐயோ குழந்தைங்க கிட்டே நான் எதுக்கு சார் தப்பா நினைக்கணும்”, இவன் மகிழ்ச்சியாய் சொன்னதை கேட்ட அங்குள்ளவர்கள், “சார்..நீங்க நல்லா பேசறீங்க, அப்புறம் ஏன் சார் நாங்க உங்க எப்ப பார்த்தாலும் முறைச்ச மாதியே போனீங்க. எங்களுக்கு பயமா இருக்கும், ஒரு வேளை உங்களோட பேசுனா சண்டைக்கு வந்திடுவீங்களோன்னு.”

அவர்கள் அப்பவியாய் இவனை சுற்றி நின்று கேட்கவும் இவனுக்கு அப்பொழுதுதான் உறைத்த்து “ஓ இத்தனை நாள் நாம்தான் அவர்களிடம் சரியாக பழக தெரியாமல் இருந்திருக்கோமா?”

அவனது துப்பாக்கி இப்பொழுது கட்டிலின் படுக்கைக்கு அடியில் இருந்து அவனை நோக்கி சிரிப்பது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *