துதி





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘இந்த ஆலயத்தைச் சூழ மதில் அமைத் துக் கொள்வதின் மூலம், இந்த மதி லுக்கு அப்பால் உலகளாவியதாகப் பரந்து கிடக்கும் எதுவுமே ஆலயத் திற்குத் தேவையில்லையென்றும் பிரகடனமாகின்றதல்லவா?’

அவருக்கு இவரைப் பிடிக்காது ; இவருக்கு அவரைப் பிடிக்காது.
அவர் பாதிரியார்; இவர் பொதுவுடைமைவாதி.
தேவாலயத் திருப்பணி வேலைகள் நிறைவுறும் நிறைவில், தேவாலயத்தைச் சுற்றிக் கட்டப்படும் மதிலை அவர் மேற் பார்வை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பொதுவுடைமைவாதி அங்கு வந்து சேர்ந்தார்.
‘பாதிரியாரே! ஏன் இந்த மதில்? நீர் வழிபடும் ஏசுநாதரின் உருவத்தை கொண்டு யாராவது திருடிக் போய்விடுவார்களென்ற அச்சமா? என இவர் ஏளனமாகக் கேட்டார்.
‘இது கோயிற் காணி. பயன் பல தரும் மரங்கள் இங்கே நாட்டப்பட்டிருக்கின்றன. அஞ்ஞானிகளுக்கும், விசுவாச மற்றவர்களுக்கும் அப்பயன் கிட்டுவது முறையோ? பரமபிதா அமைத்துள்ள பரலோக ராஜ்யத்திற்குக்கூட மதில்களும் நெடுங்கதவுகளும் உள் அஞ்ஞானிகளுக்கு அந்த இராஜ்யத்திற்குள் அனுமதி இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்று, நல்லோர் உழைப்பினை எடுத்துப் பொல் லார்க்கும் பங்கிட்டும், புரட்சியையும், பலாத்காரத்தையும் கட்டவிழ்த்து விடும் விரியன் பாம்புக் குட்டிகளுக்கும் நிச்சயமாக ஆண்டவன் ராஜ்யத்தில் இடம் கிடையாது.’ என்றார் அவர்.
‘ஆண்டவன் ராஜ்யத்தைப் பற்றிக் கவலையில்லை. நீங்கள் கூறும் சொர்க்கத்தை இப்பூவுலகத்தில் தோற்று விக்கலாம் என்று நம்புவன் நான். எல்லோருடைய கூட்டு உழைப்பில் விளையும் சம்பத்துக்கள் அவரவர் ஆற்றலுக்கும், தேவைக்கும் ஏற்பப் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இந்த ஆலயத்தைச் சூழ மதில் அமைத்துக் கொள்வதின் மூலம், இந்த மதிலுக்கு அப்பால் உலகளாவிய தாகப் பரந்து கிடக்கும் எதுவுமே ஆலயத்திற்குத் தேவை யில்லை யென்றும் பிரகடனமாகின்றதல்லவா? அந்த அளவிலாப் பயனை நல்லாயனின் மெய் விசுவாசிகளுக்கு மறுதலிக்கின்றீர் என்பதையாவது உணர முடிகிறதா?’ என்றார் இவர்.
பொதுவுடமைவாதி தன் விஞ்ஞான மார்க்ஸியத்தின் தத்துவ வித்துவ யுக்தியினால் தன்னை மடக்கிவிட்டதான தோல்வி உணர்வு பாதிரியாரின் மனத்திலே சடைக்கலாயிற்று.
பிறிதொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுடைய சந்திப்பு விவாதமாக மாறியது.
‘பாதிரியாரே! நீங்கள் ஏசுநாதர் செய்த தியாகம் மக தானது எனத் தினமும் நிதமும் புகழ்கின்றீர்களே! இறுதி நாளிலே சிலுவை சுமந்து சிந்திய சில துளி ரத்தங்களை இவ்வளவு பிரமாதப்படுத்துவதில் என்ன அர்த்தம்?…. தொழிலாளி தினமும் குடக்கணக்கான வியர்வை சிந்தி, இரத்தம் சுண்டப் பாடுபட்டுழைக்கிறான். பத்துச் சிலுவை களுக்கும் மேலான பாரத்தை முதுகிலே சுமந்தும், ஏசுவிலும் பார்க்க அளப்பரிய அவமானங்களைத் தாங்கியும் அவன் வாழ்கின்றான். அந்தப் புனிதர்களுடைய தியாகத்தை உங்கள் உதடுகள் பஜிக்காதது ஏனோ?’ எனப் பொதுவுடமைவாதி கேட்டார்.
‘ஒப்புக் கொள்ளுகிறேன்; ஏசுநாதரிலும் பார்க்க ஒருவன் பல மடங்கு கஷ்டங்களையும், அவமானங்களையும் ஏற்றுக் கொள்ளுகின்றான் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றேன். ஆனால் அத் தொழிலாளி அத்தனை பாடுகளையும் தன்னுடைய வயிற்றுக்காகவே செய்வதினால், எவ்வித மகத்துவமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவன் அப்பாடுகளிற் பாதியளவுதானும் ஆண்டவனுக் காகச் செய்வானேயாகில், அவனுடைய பாடுகளை ஏசுநாதரிலும் பார்க்க அதிகமாகத் துதிப்பேன்’ என்றார் அமைதியாக.
கார்ல் மார்க்ஸ் நூல்களில் இதற்கான எதிர்வாதம் ஏதாவது எழுதப்பட்டிருக்கின்றதா என்பது தனக்குத் தெரியவில்லையே என்ற தோல்வி உணர்வு இவரை அரிக்கலாயிற்று!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.